ஹைக்கூ
கவிதைகள்
தமிழ் இலக்கியம் காலந்தோறும்
பல்வேறு வகையான பாடுபொருளுக்கும் புதிய இலக்கிய வடிவங்களுக்கும் இடங்கொடுத்து
தன்னை வளப்படுத்திக் கொண்டுள்ளது. அவ்வரிசையில் குறிப்பிடத்தக்கது ஜப்பானிய கவிதை வடிவமான
ஹைக்கூ. கீழ்த்திசைப் பௌத்தச் சிந்தனையில் முகிழ்த்துச், சீனத்துப் பண்பாட்டில்
திளைத்து, ஜப்பானிய அழகுப்பார்வையில் மலர்ந்து கவிதை மணம் வீசும் ஹைகூ 15 ஆம்
நூற்றாண்டில் தோற்றம் பெற்றது.
இந்த ஜப்பானிய கவிதை வடிவத்திற்கென்று நீண்ட
வரலாறுண்டு இது வளர்ச்சிபெற்று வந்த காலகட்டத்தை பின்வருமாறு பிரிப்பர்.
ü நாராக் காலம்
(கி.பி. 700 முதல் 794 வரை)
ü ஹபாயன் காலம்
(கி.பி. 794 முதல் 1192 வரை)
ü கமெக்கூரா காலம்
(கி.பி. 1192 முதல் 1332 வரை)
ü நான்போக்குச்சாக்
காலம் (கி.பி. 1332 முதல் 1630 வரை)
ü எடோ காலம் (கி.பி.
1603 முதல் 1863 வரை)
ü டோக்கியோ காலம்
(கி.பி. 1863 க்கு அடுத்தது)
இவற்றுள் எடோ காலத்தில்தான்
5-7-5 என்ற அசை அமைப்பிலான சீன ஜப்பானிய
மொழிக் கலவையாக ஹைக்கூ கவிதை தோற்றம் பெற்றது.
ஹைக்கூ
பெயர்க்காரணம்.
தொடக்க காலத்தில் ஹைக்கூ கவிதை ‘ஹொக்கூ’
என்றழைக்கப்பட்டு பிறகு ‘ஹைகை’ என்றாகி கடைசியில் ‘ஹைக்கூ’
என்றானது.
“Haiku” என்ற சொல்லுக்கு இணையாகத்
தமிழில் ஹைகூ, ஹைக்கூ, ஹைய்கு, ஹொக்கு, அய்க்கூ, ஐக்கூ என்ற சொல்லாட்சிகளும், அதன்
வடிவத்தைச் சுட்டும் வண்ணம் துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா,
மின்பா, அகத்தியக் கவிதை, கடுகுக் கவிதை, குட்டைக் கவிதை, குறுங்கவிதை, நறுக்
கவிதை, மத்தாப்பூக் கவிதை, மின்மினிக் கவிதை, வாமனக் கவிதை முதலான பெயர்களாலும்
அடையாளப்படுத்தப்படுகிறது.
ஹைக்கூவின்
இலக்கணம்
எது ஹைகூ என்பதற்கு எத்தனையோ
விளக்கங்கள் சொல்லப்பட்டுவிட்டன; என்றாலும் இன்னும் எந்த விளக்கமும் ஹைகூவை
முழுமையாகத் தெரிவித்துவிட்டதாகக் கூறமுடியாது.
(ஈரோடு தமிழன்பன், ஜப்பானிய ஹைகூ 100, விழிகள் பதிப்பகம், சென்னை, 2011,
ப.9).
ரெங்கா,
டாங்கா போன்ற ஜப்பானிய மரபுக்கவிதை வடிவங்களின் இறுக்கமான இலக்கணக்
கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலைபெற விரும்பியபோதுதான் ஹைக்கூ பிறந்தது. இது 5-7-5 என்ற அசை அமைப்பையுடைய மூன்றடிகளால்
ஆனது. அசை என்பதற்கு ஜப்பானிய மொழியில் ‘ஓஞ்ஜி’ என்று பெயர். ஆரம்பகாலத்தில் 5-7-5 என்ற அசையமைப்பு முறையாக
பின்பற்றப்பட்டு பிறகு கைவிடப்பட்டது.
ஹைக்கூமொழி
ஹைக்கூவின் மொழியில் மிகைபடக் கூறுதல் இல்லை
அவசியமற்ற சொற்களைச் செதுக்கி அழகான
கட்டுக்கோப்புடன் சுருங்கிய வடிவத்தில் சொல்லப்படுவது. ‘ஹைகூவின்
மொழியாட்சி முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய அம்சமாகும், சொற்களைப்
பொறுத்தவகையில் ஹைகூ மிகச் சிக்கனமானது. வேண்டாத சொற்களைமட்டுமல்ல வாக்கிய
அமைப்புக்கு வேண்டிய இணைப்புச் சொற்களைக்கூட அது விலக்கிவிடுகிறது. அதாவது அதன்
சொல்லாட்சி தந்தி மொழியைப் போன்றது.’ (அப்துல் ரகுமான்
(முன்னுரை) தி. லீலாவதி, ஜப்பானிய ஹைகூ, அன்னம் (பி) லிட், சிவகங்கை, 1987.
ப.9. )ஆக ஹைக்கூவின் அடிப்படை சுருக்கம், தெளிவு, உணர்ச்சித் தூண்டல் என்பவையே.
ஹைக்கூ வாசகன்.
ஹைக்கூ
ஒரு காட்சியைக் காட்டுகிறது. அதைப்பற்றிச் சொல்வதில்லை. அதன் விளைவான
உணர்ச்சிகளையும் சொல்வதில்லை, படிப்பவரின் கற்பனைக்கே அவைகளை விட்டுவிடுகின்றது.
எழுதும்போது
கவிஞனுக்கும் கருப்பொருளுக்கும் ஒரு சிறு இடைவெளிகூட இல்லாமல் எண்ணங்களைக்
கலையவிடாமல் நேரடியாகச் சொல்லும்போது
கவிஞனின் உணர்வுக்கும், வாசகனின் மனதிற்கும்
கவிதை ஒரு பாலமாக அமைந்து நேரடித் தொடர்பை உண்டாக்கிவிடுகிறது .
கவிஞனின் எண்ணம் முழுவதையும்
ஹைக்கூ வெளிப்படுத்துவதில்லை, ஹைக்கூ கவிதைகளைப் புரிந்துகொள்வதில்
வாசகனுக்கு மிகப்பெரிய பங்குண்டு ‘ஹைக்கூ ஒரு பொருளை சுட்டிக் காட்டுவதோடு
நின்றுவிடும், வாசகனே அதில் மறைந்திருக்கும் உணர்ச்சிகளைத் தேடித் துருவிக்
கண்டுபிடித்து சுவைக்க வேண்டும்.
ஹைக்கூ வாசிப்பில் வாசகனின் நிலைபற்றி ‘ராபர்ட் ப்ளை’
என்ற அறிஞர் ‘படிப்பவனை ஒரு கழுகு தன் குஞ்சை மலை உச்சிக்கு அழைத்துச்செல்வதைப்போல கூட்டிச்
செல்லும் ஹைக்கூ , அங்கே அவனைத் திடீர் என்று போட்டுவிடும், கற்பனை உள்ளவன் பறக்கிறான்
இல்லாதவன் விழுந்து இறக்கிறான்’ என்று குறிப்பிடுகிறார்.
மேலும் ஈரோடு தமிழன்பன் அவர்கள் ‘அது
முழுமையானதாகவோ, தெளிவான கருத்துத் தெறிப்புடனோ இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம்
இல்லை. வாசகன் தனது கைவசம் கொஞ்சம் வார்த்தைகளை வைத்துக் கொண்டு ஹைய்குவைப் படிக்க
வேண்டும். அவை தேவைப்படலாம். அவன், தனது அனுபவங்களையும், அனுமானங்களையும்,
கற்பனைகளையும் எடுத்துக் கொண்டு சென்றால், தானும் படைப்பாளியோடு ஒரு
பங்குதாரராகிப் பயனை இதயக்களத்தில் வரவு வைக்கலாம். வாசகனும் கவிஞனோடு சேர்ந்து
ஹைய்குவை மணந்துகொண்டு அவனுக்கு ஒரு விதத்தில் சகலையாகி விடுவதைத் தவிர வேறு
வழியில்லை’ (தமிழன்பன், சூரியப் பிறைகள், நர்மதா பதிப்பகம், சென்னை, 1985, ப.
10.) என்று குறிப்பிடுவதிலிருந்தும் ஹைக்கூ கவிதையைப் புரிந்து பொருள்
கொள்வதில் வாசகன் எந்த அளவுக்கு இன்றியமையாதவனாக விளங்குகின்றான் என்பதை உணரலாம்.
ஜப்பானிய ஹைக்கூவும் பொருள்
புலப்பாடும்
ஹைகூவின் மிக முக்கியமான பண்பு அதன் ஜென் தத்துவப் பார்வை,
புத்த மதத்தின் ஒரு பிரிவாகிய ஜென்
தத்துவத்தின் அடிப்படையை ஓரளவுக்காவது புரிந்துகொண்டால்தான் ஹைகூவின் ஆழங்களைச்
சுவைக்கமுடியும். ஒருநாட்டின் மொழி, இலக்கியத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால்
அந்நாட்டின் பண்பாட்டை அறிந்துகொள்ளவேண்டிய தேவையுள்ளது. அவ்வகையில் ‘ஜப்பானிய நிலவியல், சமுதாயவியல், சமயவியல்,
பண்பாட்டு மரபியல் இவை எல்லாம் தெரியாமல் ஆழமும் நுட்பமும் உள்ள ஜப்பானிய ஹைகூ
கவிதைகளைப் புரிந்துகொள்ள இயலாது.’ (ஈரோடு தமிழன்பன், ஜப்பானிய ஹைகூ 100,
விழிகள் பதிப்பகம், சென்னை, 2011, ப.12.) என்றும் ‘சங்கப் பாடல்களில் இறைச்சி
உள்ளுறை உவமம் ஆகியவற்றை விளக்கத் தேவைப்பட்ட நச்சினார்க்கினியர்கள் - ஜப்பானியக்
கவிதைகளுக்கும் தேவை போலும்!’ (தமிழன்பன், சூரியப் பிறைகள், நர்மதா பதிப்பகம்,
சென்னை, 1985, ப.VI) என்றும் ஈரோடு
தமிழன்பன் கூறும் கருத்துக்கள் இங்கு ஜப்பானிய ஹைக்கூவுவின் பொருள் புலப்பாட்டுக்கு
பண்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்பதை விளக்குகிறது.
ஹைக்கூ வெளிப்பாடு
ஹைக்கூ கவிதை கருத்தை வெளிப்படுத்தும்
தன்மையைப் பற்றி ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துக்களை குறிப்பிடுகின்றனர்.
Ø கவிதையின் முதல்அடி சாட்டையைக் கையில் எடுக்கும் அமைதியுடனும் இரண்டாவது
அடி அதை ஓங்கும் நிதானத்துடனும் மூன்றாவது அடி அதை சுழற்றி வீசிய அடிக் கனத்தோடும், நெறிப்பதாக அமைய
வேண்டும். அதுவே உண்மையான ஹைக்கூவின் இலக்கணம்.
Ø
ஹைக்கூவின்
தனித்தன்மை அதன் மூன்றாவது வரியாகும்.
அந்த இறுதி வரியில் எப்போதும் எதிர்பாராத ஒரு திருப்பம் உண்டு.
Ø
முதல்
வரியில் கரு அல்லது காட்சியின் அறிமுகம்; இரண்டாவது வரியில் ஒரு வியப்பு
காத்திருக்கும்; மூன்றாவது வரியோ முழு வெளிப்பாடு தீடிரென நிகழ்வது போன்ற ஒரு
அதிர்ச்சியைத் தோற்றுவிக்கும்.
Ø பாறையின் பல
மேற்பரப்புகளை உளி செதுக்கித் தள்ளிவிட்டுச் சிற்பத்தை வெளிக்காட்டுவது போன்றது
ஹைக்கூ என்பார் ஆர். எச். பிளித்.
Ø கவிஞன்
இறங்கிக்கொள்ள வாசகன் அதன் மீது பயணம் தொடர்வான் அதுதான் – அதுதான் ஹைக்கூ.
புகழ்
மொழிகள்
v
உருவத்தில் ‘சுருக்’
– உணர்த்தும் முறையில் ‘சுரீர்’ – பார்வையில் ‘பளிச்’ – நடையில்
‘நச்’ – இதுதான் ஹைக்கூ ! (இரா.மோகன் (தொகுப்பு) தமிழ் ஹைகூ ஆயிரம், சாகித்திய அகாதெமி, 2012.)
v
அது
சின்னதாக இருக்கும் பெரிய அற்புதம், வடிவத்தைப் பார்த்தால் வாமனன் மாதிரி ஆனால்
தாரை வார்த்தாலோ விசுக்கென்று விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விசுவரூபமெடுத்து
மூவுலகையும் அளந்துவிடும் திரிவிக்கிரமன் மாதிரி. (அப்துல் ரகுமான்,
‘மின்மினிகள்’, ஜூனியர் விகடன், 18 ஜனவரி 1984, ப.18.)
v
ஒரு
மொழியின் கவிதைகள் மற்ற மொழிகளில் பெயர்க்கப்படுவது வியப்புக்குரியதல்ல. ஆனால் ஒரு
மொழியின் கவிதை வடிவம் உலக அளவில் புகழ் பெறுவதென்பது வியப்பானது. இத்தகைய
வியப்புக்குரியது ஜப்பானிய ஹைகூ. (அப்துல் ரகுமான், ‘அறிமுகம்’, தி. லீலாவதியின்
‘ஜப்பானிய ஹைகூ’, ப.3).
v
குத்தீட்டி
போலப் பாய்ந்து படிப்பவர் மனத்தில்
‘நறுக்’ கென்று தைக்கும் விதத்தில்
கருத்துக்களை விளங்க வைக்கப் பயன்படுத்தும் முறையே ‘ஹைக்கூ’ எனப்படுகிறது.
தமிழ் ஹைகூ கவிதைகளின்
உள்ளடக்கம்
ஹைகூ
கவிதைகளின் - ஒரு படைப்பாளன்
அவ்வக்கால சமூக சூழலுக்கு ஆட்பட்டவனாக விளங்குகிறான், எனவே அரசியல், பொருளாதாரம்,
பகுத்தறிவு, காதல், சாதியம், வறுமை என பாடப்படாத பொருளே இல்லை என்கின்ற அளவுக்குத் தற்கால ஹைகூ கவிதைகள்
விளங்குகின்றன.
வளர்ச்சி
நிலை
தமிழ்ச்சூழலில் ஹைகூ கவிதையானது பல்வேறு
நாளிதழ்கள் வாயிலாகவும், பருவ இதழ்கள் வாயிலாகவும், சிறு வெளியீடுகள்
வாயிலாகவும், கவியரங்குகள் வாயிலாகவும்
வளர்க்கப்பட்டு குறிப்பிடத்தக்க அளவில்
இன்றைக்கு சுமார் இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட ஹைகூ கவிதைத் தொகுதிகள்
வெளிவந்திருக்கின்றன.
ஹைக்கூ
முதல் முயற்சிகள்
Ø 1916 – ஆம் ஆண்டில்
‘ஹொக்கு’ என்ற பெயாரால் தமிழுக்கு முதன்முதலில் அறிமுகம் செய்தவர் பாரதியார்.
Ø 1968 – ஆம் ஆண்டில்
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை முதன்முதலில் மொழிபெயர்த்துத் தந்தவர் கவிஞர் சி. மணி.
Ø 1970 – ல் தமிழ்
மரபுப்படி தமிழ் ஹைக்கூ கவிதைகளை எழுது வெளியிட்டவர் அப்துல் ரகுமான்.
Ø 1984 – ஆம் ஆண்டில்
‘புள்ளிப் பூக்கள்’ என்ற முதல் தமிழ் ஹைக்கூ கவிதைத் தொகுதியை வெளியிட்டவர்
அமுதபாரதி.
ஜப்பானிய ஹைகூ கவிதையின்
பண்புகள்
ஹைக்கூ கவிதைகளைக் குறித்து ஆராய்ந்த
நிர்மலா சுரேஷ் என்பவரும் வேணு சீனுவாசன் என்பவரும் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள்
ஹைக்கூ கவிதையை புரிந்துகொள்ள பெரிதும் உதவும்.
v
ஹைக்கூ
கற்பனையை ஏற்காது.
v
ஹைக்கூ
உவமை, உருவகங்களைப் பயன்படுத்தாது.
v
ஹைக்கூ
உணர்ச்சியை வெளிப்படையாய்க் கூறாது.
v
ஹைக்கூ
தன்மைப் பாங்கினைத் தவிர்க்கும்.
v
ஹைக்கூ
கவிதைக்குள்ளே ஒரு சொல் மட்டும் குறியீடாய்ப் பயின்று வருதல் இல்லை.
v
ஹைக்கூ
இருண்மையை மேற்கொள்ளாது.
v
ஹைக்கூவில்
நுண்பொருண்மை இல்லை.
v
கவிஞன்
தன் கருத்தை ஏற்றிச் சொல்லாமை.
v
பிரச்சாரமின்மை.
v
எளிமையாகக்
கூறுவது.
v
சொல்லுவதைக்
காட்டிலும் சொல்லாமல் விடுவது.
v
சின்ன
உயிர்களையும் சிறப்பித்துப் பாடுவது.
v
மின்னல்
என வரும் ஈற்றடி அமைப்பினைக் கொண்டதாக இருப்பது.
v
மெல்லிய
நகைச்சுவையுணர்வு இழையோடியிருக்கும்படி அமைவது.
v
இயற்கையைப்
பாடுவதுடன் இயற்கையை மனித உணர்வுகளோடு இணைத்துப் பாடுவது.
v
ஆழ்மன
உணர்வுகளும் மெல்லிய சோகமும் இழையோடும்படி அமைவது.
v
பிற
உயிர்களைத் தனக்கு இணையாக மதித்துப் பாடுவது.
v
மூன்றடிகளால்
பாடுவது.
துணைநூற் பட்டியல்
1.
வேணு
சீனுவாசன், சங்கக் கவிதையும் ஜப்பானிய ஹைக்கூவும், அமராவதி பதிப்பகம், சென்னை,
2001.
2. ஈரோடு தமிழன்பன்,
ஜப்பானிய ஹைகூ 100, விழிகள் பதிப்பகம், சென்னை, 2011.
3. பரிமளம் சுந்தர்,
ஜப்பானிய- தமிழ் ஹைகூ கவிதைகள் - ஓர்
ஒப்பாய்வு, காரோன் – நீரோன் பதிப்பகம், சொக்கிகுளம், மதுரை, 2005.
4.நிர்மலா சுரேஷ்,
ஹைக்கூக் கவிதைகள், முனைவர்பட்ட ஆய்வேடு,
சென்னைப் பல்கலகைக்கழகம், சென்னை,
1993.
5. தி. லீலாவதி,
ஜப்பானிய ஹைகூ, அன்னம் (பி) லிட், சிவகங்கை, 1987.
6.
தமிழன்பன்,
சூரியப் பிறைகள், நர்மதா பதிப்பகம், சென்னை, 1985.