வியாழன், 19 நவம்பர், 2026

அசைவப்பூ |நூல் விமர்சனம் | மைத்ரி அன்பு





அசைவப்பூ : அசையும் காட்சிகளின் கவித்துவம்!

 

                நேற்று முன்தினம் புலனப் பக்கத்தில் ‘அசைவப்பூ’ என்றொரு நூல் வெளிவரவிருப்பதாகக் கவிஞர் ச. நீலமேகன் குறிப்பிட்டிருந்த செய்தி மகிழ்ச்சியளித்தது.

 

                நீலமேகன் தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர். நல்ல வாசிப்புப் பழக்கமும் பண்பும் கொண்ட இலக்கிய நண்பர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் நான் படித்த காலத்திலிருந்தே அவரைக் கவனித்து வருகிறேன். அவரது வாசிப்பும் வாழ்வும் இலக்கிய உலகில் அவருக்கான தனித்துவமான இடத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் எப்போதும் இருந்தது. காஞ்சிபுரம் வந்த பிறகு அவருடனான பழக்கமும் வாசிப்புப் பகிர்வும் அதிகரித்தன. நூல்கள் எழுதுவதிலும் வெளியிடுவதிலும் தயக்கம் காட்டிவந்த அவர், கடந்த ஆண்டு (2025) ‘மாய வாழ்க்கை’, ‘கொடியிலே காய்கிறது மழை’ என இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார். அவற்றில் முதலாவது புதுக்கவிதைத் தொகுப்பு; இரண்டாவது ஹைக்கூ தொகுப்பு. அதன் தொடர்ச்சியாக நவம்பர் 2026இல் மூன்றாவது நூலாக ‘அசைவப்பூ’வை ஹைக்கூ தொகுப்பாகக் கொண்டுவந்துள்ளார். பட்டாம்பூச்சியை ஓர் அழகான ‘அசைவப்பூ’வாகக் காணும் கவித்துவப் பார்வையே இத்தலைப்பின் தனித்துவம்.

 

                நிறைய வாசிப்பு அனுபவங்களையும் எண்ணங்களையும் கொண்டிருப்பவர்கள் படைப்புலகில் கவிதையையும், குறிப்பாக ஹைக்கூவையும் தங்களது வெளிப்பாட்டு வடிவமாகத் தேர்ந்தெடுப்பது ஓர் அழகியல் ஆச்சரியம். அப்படியானதொரு ஆச்சரியமே நீலமேகனின் ‘அசைவப்பூ’. அதை அவரே சுயவிமர்சனமாக,

“சுத்தக் கருமியாய் இருப்பானோ?

சிக்கனமாய் எழுதுகிறார்

ஹைக்கூ”

- எனப் பதிவு செய்திருப்பது வியப்பளிக்கிறது.

0

                எதிர்பாராத விதமாக இன்று மாலை எனது சில நூல்களுடன் ‘அசைவப்பூ’வையும் நீலமேகன் என் துணைவியாரிடம் கொடுத்தனுப்பியிருந்தார். அவற்றை எடுத்துவைத்த கையோடு நூலை வாசிக்கத் தொடங்கினேன். அந்த வாசிப்பு அனுபவத்தில் முதலில் கவனத்தை ஈர்த்த கவிதை,

“குடலை உருவி

மாலையாகப் போடுகிறது காகம்

செத்துவிட்டது எலி”

- எனும் காட்சிக் கவிதை.

 

                ஹைக்கூவின் அடிப்படையான காட்சிப்படுத்தல் திறனை இக்கவிதை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. ஜப்பானிய மரபிலிருந்து தமிழுக்கு அறிமுகமான ஹைக்கூ, மூன்று வரிகளுக்குள் செறிவான காட்சியையும் புதிய பொருள் திறப்பையும் உருவாக்கும் கவிதை வடிவம். தமிழ் ஹைக்கூ தனது மொழி, பண்பாடு, வாழ்வியல் சூழலுக்கு ஏற்பத் தனித்துவமான வெளிப்பாட்டு முறையையும் பெற்றுள்ளது. வாசித்த நொடியிலேயே மனக்கண்ணில் காட்சியை விரித்துவிடுவது அதன் முக்கியமான பண்பு. அந்த வகையில், செத்த எலியின் குடலைக் காகம் உருவி மாலையாகப் போடும் அதிர்ச்சியூட்டும் காட்சியைப் புலனுணர்வுப் படிமத்துடன் நம் கண்முன் நிறுத்தும் இக்கவிதை மிகச் சிறந்த ஹைக்கூவாகிறது.

அதேபோல,

“கைவிட்ட கவிஞன் யார்?

கிணற்றில் விழுந்த

நிலவு”

0

“மௌனமாய்ப் பிச்சைக்காரன்

பாத்திரத்தில் பேசுகின்றன

சில்லறைகள்”

0

“அந்தரத்தில் பறக்கிறது

கொக்கின் அலகில்

மீன்”

0

“அலையைக் கரைசேர்த்துவிட்டு

குளத்தில் மூழ்கிவிடுகிறது

கல்”

- எனும் கவிதைகள் இயற்கையின் இயக்கங்களையும் அழகியலையும் நுட்பமாக வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, கல் குறித்த கவிதையை,

“அலைகள் கரைசேர

குளத்தில் மூழ்கும்

கல்”

- என நிகழ்கால இயக்கத்தில் அமைத்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. இத்தகைய சொல் மாற்றங்கள் ஹைக்கூவின் காட்சித் தன்மையிலும் கால உணர்விலும் ஏற்படுத்தும் தாக்கம் கவனிக்கத்தக்கது.

0

                மொத்தம் 192 ஹைக்கூ கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் பாடுபொருள்களை இயற்கை, வாழ்வியல் கவனிப்புகள், பணிச்சூழல், அரசியல் அங்கதம், தனித்துவமான பார்வை எனப் பகுத்துப் பார்க்க முடிகிறது.

 

                வாழ்வியல் கவனிப்புகளுக்குச் சான்றாக,

“காணாமல்போன

ஏரியைக் கண்டுபிடித்தது

கனமழை”

0

“சோற்று வற்றல்

காக்கை விரட்டக் காவலிருக்கும்

கரித்துணி”

0

“நீண்டகழுத்து கண்ணாடிமேனி

அழகாய் இருந்தென்ன

மதுப்புட்டி”

- எனும் கவிதைகள் அமைந்துள்ளன. நாம் அன்றாடம் கடந்து செல்லும் காட்சிகளைக் கவிதையாக்குவதில் கவிஞரின் கூரிய கவனிப்புப் பார்வை வெளிப்படுகிறது. அதேபோல,

“அவசரம் எதுவானால் என்ன?

எப்போதும் ஒரே வேகம் தான்

கடிகாரம்”

0

“கன்னத்திலிருந்தும் கடிக்கிறது

இங்கிதம் தெரியாத

கொசு”

0

 

“கடன்கட்ட வழியில்லை

வீட்டில் வலை பின்னும்

பொறுப்பற்ற சிலந்தி”

- எனும் கவிதைகள் அன்றாட வாழ்வின் நகைச்சுவை, எரிச்சல், பொருளாதாரப் போராட்டம் ஆகியவற்றை முரண் உத்தியுடன் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, கடனைத் திருப்பிச் செலுத்த வழியின்றித் தவிக்கும் மனிதனின் மனநிலையை, தொடர்ந்து வலை பின்னும் சிலந்தியுடன் ஒப்பிடும் மூன்றாவது கவிதை தனித்துவமான அழகியல் கொண்டது. மேலும்,

“இரங்கல் கூட்டம்

செல்போன் ஒலிக்கிறது

என்ன சத்தமிந்த நேரம்”

- என்னும் கவிதை துக்கச் சூழலில்கூட நவீனத் தொழில்நுட்பம் குறுக்கிடும் சமகால மனித வாழ்வின் முரண்பாட்டை இயல்பாகப் பதிவு செய்கிறது.

0

                அடுத்ததாக, கவிஞரின் ஆசிரியர் பணிச்சூழல் அனுபவங்களும் சில கவிதைகளில் வெளிப்படுகின்றன.

“சுண்ணாம்புச் சத்தில்லையோ!

விழுந்ததும் உடைந்துவிட்டது

சாக்பீஸ்”

- என்ற கவிதை அவரது பணிச்சூழலையும்,

“முன்னும் பின்னும் கிழிந்தபத்து

பள்ளிப் புத்தகத்தில்

பதிற்றுப்பத்து”

- என்ற கவிதை அவரது தமிழாசிரியர் அடையாளத்தையும் வெளிப்படுத்துகின்றன. அதேபோல, இன்றைய கல்விச் சூழலில் மாணவர்களின் நிலைக் குறித்த கவலையை,

“கேள்வி கேட்ட ஆசிரியர்

விடை தேடுகிறார்

பரிட்சைப் பேப்பரில்”

- என்ற கவிதை வழியாக கவிஞர் வெளிப்படுத்துகிறார். கற்பித்தல், கற்றல் ஆகியவற்றின் முரண்பாடுகளைச் சிந்திக்கத் தூண்டும் பதிவு இது.

0

                கவிஞர் நீலமேகன் இந்நூலுக்கு அணிந்துரையைப் புதுவை சீனு.தமிழ்மணியிடம் பெற்றுள்ளார். துளிப்பாக்களின் வழியாக அடர்த்தியான அரசியல் அங்கதங்களைப் படைத்த தோழவர். அவ்வகையில், இத்தொகுப்பிலும் அரசியலை மையப்படுத்திய ஹைக்கூ கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

“தாலிக்குத் தங்கமிருக்கட்டும்

முதலில்

மாப்பிள்ளை?”

0

“வேட்டிக்கு மனு கொடுத்தால்

கோவணம்தான் கிடைக்கிறது

அரசுத் திட்டம்”

0

“ஒழுங்காக வேலை செய்திருக்கலாம்

கைநீட்டி வாங்குகிற

லஞ்சத்திற்காவது”

- எனும் கவிதைகள் குறிப்பிடத்தக்க அரசியல் அங்கதங்களாகின்றன. தாலி வாங்கித் தரவும் பல உறவுகள் முன்வரும் நிலையில், மணமக்களுக்கான பொருத்தமான இணையைத் தேடித்தர யாரும் முன்வருவதில்லை என்ற சமூக முரணை முதல் கவிதை சுட்டுகிறது.

 

                ஆட்சிகள் மாறினாலும் அரசுத் திட்டங்களின் அவலநிலை மாறுவதில்லை என்பதையும், லஞ்சம் வாங்கியும் பணிகளைச் செய்து முடிக்காத அரசு அலுவலகப் போக்கையும் மற்ற கவிதைகள் அங்கதத்துடன் விமர்சிக்கின்றன.

0

                பொதுவாக ஒவ்வொரு படைப்பாளியிடமும் ஒரு தனித்துவம் இருக்கும். அதைக் கண்டறிவதில்தான் வாசகனின் தேடலும் படைப்பாளியின் படைப்பாற்றலும் இணையும். அந்த வகையில்,

“உண்டு முடித்ததும்

கழுவிலேற்றினார்கள்

ஓட்டல் ரசீது”

0

“இருக்கும்போது பல்லிக்கு எறும்பு

இறந்தபிறகு எறும்புக்குப் பல்லி

இயற்கை ஒப்பந்தம்”

- எனும் கவிதைகளில் வரலாற்றுச் சான்றையும் தத்துவார்த்தக் கருத்தியலையும் கச்சிதமாகக் கவிதையாக்கியிருப்பது நீலமேகனின் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது.

 

         அதேவேளையில்,

“மூலதனம் இருந்தும்

முதலாளியாகவில்லை

கம்யூனிஸ்ட்”

- என்ற கவிதையில் பொருளாழம், அழகியல், அனுபவம் என விரிந்த கவித்துவம் சொல் விளையாட்டுக்குள் சுருங்கிவிட்டதோ என்ற எண்ணம் எழுகிறது. முரண் உத்தியைப் பல இடங்களில் சிறப்பாகக் கையாண்ட கவிஞர், இக்கவிதையில் முன்வைத்திருக்கும் முரண் உடன்பாடற்ற நிலையில் கருத்தாழத்தைக் காட்டிலும் சொல் விளையாட்டுக்கு முன்னிலைப்படுவதாகத் தோன்றுகிறது.

 

                அதேபோல, சில கவிதைகள் ஏற்கெனவே பலராலும் பாடப்பட்ட பொருள்களைச் சில சொற்கள் மாற்றியமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் முன்வைப்பதாகத் தெரிகிறது.

“தேர்வுத்தாளில்

விடைதேடும்

ஆசிரியன்”

0

“விளைநிலம் விற்று

வீட்டுமனை வாங்கினான்

அதே நிலம்தான்”

0

“இருளில் நான்மட்டும்

தனியே ரசிக்கிறேன்

சுடரின் நடனம்”

0

“இலக்கியக் கூட்டம்

நன்றியுரையாற்றினார்

நாற்காலிகளுக்கு”

- என்பன அவற்றில் சில. பொதுவான உணர்வுகள் பல படைப்பாளர்களிடமும் ஒரே மாதிரியான வெளிப்பாட்டை உருவாக்குவது இயல்புதான். இருப்பினும், பழக்கப்பட்ட கவிமொழியிலிருந்து விலகித் தனித்துவமான படிமங்களைக் கண்டடைவதில் படைப்பாளர் நீலமேகன் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளதையும் இதன்வழி தெரிவிக்க விரும்புகிறேன்.

0

                இந்நூலை கவிஞரின் நண்பர் பெ.சக்திவேல் ‘தூரிகை தீண்டாத ஓவியங்கள்’ என்னும் தலைப்பில் வாழ்த்தியுள்ளார். 64 பக்கங்களைக் கொண்ட இத்தொகுப்பு, வாசிப்பு அனுபவமும் இலக்கிய ஆர்வமும் கொண்ட படைப்பாளியாக நீலமேகனை மீண்டும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

 

                அட்டை வடிவமைப்பு, பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள், சுருக்கமான என்னுரை, கவிதைகளுக்கான வாசிப்பு இடைவெளியுடன் அமைந்த அச்சுக்கோப்பு என ‘வேணு’ பதிப்பகம் நூலை அழகுறப் பதிப்பித்திருப்பது சிறப்பு.

0

                எனக்குத் தெரிந்த மட்டும் ச.நீலமேகன் நல்ல கதை வாசிப்பும் கதை எழுதும் ஆற்றலும் மிக்கவர். அவரது வாசிப்பு அனுபவமும் சமூகக் கவனிப்பும் மொழியைக் கையாளும் திறனும் பல கவிதைகளில் வெளிப்படுகின்றன. எளிய காட்சிகளுக்குள் ஆழமான பொருளைத் தேடுவதும், வாழ்வின் முரண்பாடுகளைச் சொற்சிக்கனத்துடன் வெளிப்படுத்துவதும் அவரது படைப்புலகின் குறிப்பிடத்தக்க பண்புகள். அதேவேளையில், பழக்கப்பட்ட கவிமொழியையும் கருத்தாழமற்ற சொல் விளையாட்டையும் கடந்து இன்னும் புதிய படைப்புத் தேடல்களை அவர் முன்னெடுக்க வேண்டும்.

 

              அவரிடமிருந்து அடுத்தடுத்த காலங்களில் ஆழமான கவிதைகளுடன் சிறுகதைகளையும் எதிர்பார்க்கிறேன். அதற்காகத் தனது நேரத்தைப் படைப்பின் பக்கம் கூடுதலாகப் பகிர்ந்தளித்து, தொடர்ந்து எழுதவும் வெளிப்படவும் விரும்பும் ஓர் இலக்கிய வாசகனாக அவரை வாழ்த்துகிறேன்.

 

                ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைவில் மலரைக் காண்பதும், மலரின் அசைவில் பட்டாம்பூச்சியை உணர்வதும் கவிதையின் தனித்துவமான அனுபவம். அந்த அனுபவத்தைத் தனது ஹைக்கூ கவிதைகளின் வழியாக வாசகனுக்குக் கடத்த முயன்றிருக்கும் நீலமேகனின் ‘அசைவப்பூ’, அவரது படைப்புலகப் பயணத்தில் மற்றுமொரு முக்கியமான தடமாக அமைகிறது.

 

                வாசிப்பும் விமர்சனமும் தொடரட்டும்

                படைப்பின் அசைவில் இன்னும் பல பூக்கள் மலரட்டும்!

19-11-2026

என்றும் அன்புடன்,

மைத்திரி அன்பு,  காஞ்சிபுரம்.

 

 

 அசைவப்பூ

    - ச.நீலமேகன்

 

 வேணு பதிப்பகம்

 429, மேற்கு ராஜவீதி,

 நெடுங்குணம் – 606 807.

 பக்கங்கள் : 64

 விலை  : ரூ.60/-

 பேச : 94457 46308


 

வெள்ளி, 9 ஜனவரி, 2026

சொல்லலாமா!

சொல்லலாமா!

உலக உண்மைகளை எடுத்துச் சொல்ல துணிச்சல் வேண்டும். துணிவு எப்போது பிறக்கும்?. சொல்லுகின்றவர் உண்மையாக இருந்தால் துணிச்சல் பிறக்கும். காலந்தோறும் பூமியில் எத்தனையோ ஞானியர்களும், அறவாணர்களும் அவதரித்திருக்கிறார்கள். அவர்கள் நமக்கு எதற்கு என்று மௌனிகளாக இல்லை. மனம்திறந்தி பேசினார்கள், பாடினார்கள், எழுதினார்கள்.






அந்த ஞானியர்கள் இவ்வாறு பேசவும், பாடவும், எழுதவும் நேர்ந்த அவசியத்தை ஒரு எளிய உதாரணத்துடன் நாம் புரிந்துகொள்ளலாம்.

சாலையில் வாகனத்தில் செல்லும்போது உலகம் வகுத்துள்ள பொது விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றவர் அவ்விதிகளுக்கு ஏற்ப தன் வாகனத்தை ஓட்டிச்செல்லுகிறார். ஆனாலும் விபத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். நேர்ந்த விபத்துக்கு யார் பொறுப்பு? பொதுவிதிகளைப் பின்பற்றத் தவறியவர்தான் பொறுப்பு…

எனவே பொது விதிகளைப் பின்பற்றி நடப்பவர்களை காப்பாற்றுவதற்காகவாவது விதிமீறல்காரர்களைத் திருத்த வேண்டியிருக்கிறது. உண்மையை, அறத்தை, உலகியலைச் சொல்லவேண்டி இருக்கிறது. அந்த அடிப்படையில் தோன்றிய நூலாகத்தான் ‘சொல்லலாமா!’ என்ற நூலைக் கருதவேண்டியிருக்கிறது.

“தகுதியற்றவர் முன்னிலையில் மெய்ப்பொருள் பற்றிப் பேசுவது உயிர் காக்கும் மருந்தாகிய அமிழ்தத்தைத் தரையில் சிந்தியது போன்றது” என்பதே வள்ளுவரின் முடிபான கொள்கை எனக் கொண்டாலும். உலகைத் திருத்தும் முயற்சியில்  கொஞ்சம் அமுதம் சிந்தினாலும் தவறில்லை என்ற புறநடையை அமைத்துக்கொண்டு ‘அறிவுத் திறனும் கற்கும் வேட்கையும் முயற்சியும் உடையவர் முன்னே நுட்பமான கருத்துக்களைக் கூற வேண்டும்’ என்ற கொள்கையை மீறி பிரம்பின் நுனியில் பூவைச்சுற்றி தன் இளந்தலைமுறைக் குழந்தைகளுக்கு...

      • பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவோ நேர்மையாகப் பணி          செய்யவோ விரும்பாதவர்கள் பதவி மட்டும் வேண்டும் என்று        நினைப்பது சரியா?
      • முயன்று படிக்காமல் பட்டம்  மட்டும் பெற ஆசைப்படுவது            முறையா?
      • பதிவுத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள்                            கையூட்டு மையங்களாக மாறியிருப்பது விரும்பத்தக்கதா?
      • தேர்வுத்தாள் திருத்தும் மையங்கள் அற உணர்வற்று செயல்படுவதால் எதிர்கால சந்ததியரின் அறிவு மழுங்கடிக்கப்படுவது ஏற்புடையதா?

என்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து சிந்திக்க வைப்பதோடு, ‘ஆடம்பரமும் ஆடம்பரச் செலவுகளும் சமுதாயக் கொடுமைகள்’ என்ற ஆழமான உண்மையை எடுத்துக் கூறுகிறது இந்நூல்.

தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும், கடமைகளைச் செய்ய வேண்டும், நேர்மையாக வாழ வேண்டும். என்று கண்டிப்போடு ஆற்ற வேண்டிய கடமைகளையும் எடுத்துக் கூறுகிறது நூல்.

மனிதராகப் பிறந்து, மனிதராக வாழ்ந்து மனிதருக்கு உரிய கடமைகளை ஒழுங்காகச் செய்பவர்களே மெய்ப்பொருளை உணர முடியும். அத்தகைய  மெய்ஞ்ஞானத்தைப்பெற பணமே, பதவியோ, இன்ன பிறவோ முக்கியமல்ல, ஒருநிலைப்பட்ட மனம், சொல்வதைக் கேட்கும் காதுகளும் அவசியமானவை என்பதையும் இந்நூல் எடுத்துரைக்கிறது

தைரியம், தெளிவு, வாழும் முறை ஆகியவற்றைக் கற்றுத் தரும் மனச்செம்மையை உருவாக்கும் உண்மையான கல்வி முறையே இன்றைய தேவையாகும் என்பதையும் கடவுள் உருவாக்கம், கோயில் உருவாக்கம் ஆகியவற்றின் உண்மையான போக்கையும், “அறியாமை + அச்ச உணர்வு = மூடநம்பிக்கை” என்ற சூத்திரத்தையும் எடுத்துச்சொல்லி கடவுள் பெயரால் இன்று நடக்கும் மூடத்தனங்களைப் பட்டியலிட்டு, ‘சமுதாயத்திற்குத் தொண்டு செய்யும் வகையில் நடப்பதே உண்மையான கடவுள் பூசை’ என்ற மு.வ.வின் அறவுரையைக்கூறி ஆழமாகச் சிந்திக்கவைத்து பொருளற்ற சடங்குகளை புறந்தள்ளுகிறது சொல்லலாமா!.. என்ற இந்நூல்.

அறிவுடையோர் தத்தமது கடமைகளைச் செய்யாமல்  மௌன சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருப்பது தீமைகளுக்குத் துணைபோவது போன்றது. என்று குறிப்பிடும் நூலாசிரியர் பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் அவர்கள் மௌனம் கலைக்கிறார். தன் மனதில் பட்ட உலக உண்மைகளை நேர்மையோடு எடுத்துச் சொல்லுகிறார்.

உண்மையைச் சொன்னால் பலருக்குக் கோபம் வருவது தற்கால மனிதர்களின் சுபாவமாக மாறிவிட்டது. அதனால் எதையும் பக்குவமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்தப் பக்குவப்பட்ட அனுபவமும் சொல்லும் தகைமையையும் ஒருங்கே பெற்றிருக்கிற காரணத்தால்தான் பேராசியர் அரங்க. இராமலிங்கம் அவர்கள், உலக நாடுகளில் தான் செல்லும் இடமெங்கும் நிகழ்த்தும்  பொழிவுகளில், மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் பாடங்களில், எழுதும் நூல்களில் இயன்ற வகையிலெல்லாம் தேனோடு சேர்த்து நோய் தீர்க்கும் மருந்தையும் குழைத்து சாதுர்யமாகக் கொடுத்துவிடும் அன்னையைப் போல அறக்கருத்துக்களை, உலகியலை, சான்றோர் சிந்தனைகளை எடுத்துரைப்பதையே தன் வாழ்நாள் பணியாக அமைத்துக்கொண்டவர், அவரின் இந்த முயற்சியை இந்நூலின் போக்கில் சொல்ல வேண்டுமானால் ,

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

 

 உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு

இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு

இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து

அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து.

 

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா .

 

என்ற கண்ணதாசன் இயற்றிய திரைப்படப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

 “சொல்லலாமா!” என்ற இந்த நூல் பத்து தலைப்புகளில் உலகின் போக்கை எடுத்துக்காட்டி பகுத்தறிவோடு சிந்தித்து செயல்பட வேண்டியதின் அவசியத்தை மிக எளிமையாக விளக்குகிறது.

பகுத்தறிவு என்று சொன்னால் பெரியார்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வருவார். அந்த வகையில் இன்றைய வழிபாட்டில் பகுத்தறிவில்லாமல் செய்யப்படும் வழிபாட்டுச் சடங்குகளை, அறத்துக்குப் புறம்பான மனிதச் செயல்பாடுகளை எடுத்துரைத்து. சீரிய சிந்தைக்கு மருந்தாகவும் திகழும் இந்த நூலோடு சேர்த்து 55 நூல்களை ஆக்கியளித்த பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் அவர்களை ஆன்மிகப் பெரியார் என்று போற்றுதலும் தகும்.

இன்று கல்லூரிகளில் மதிப்பீட்டுக் கல்வி (Value Education) என்ற பாடத்தைப் பாடத்திட்டத்தில் வைத்திருக்கிறார்கள் ஆனால் சமூக விழுமியங்களை அவர்கள் கற்றார்களா? அல்லது கல்விக்கூடங்கள் கற்பிக்கின்றனவா? என்பது கேள்விக்குரிய ஒன்றாக இருந்துவரும் நிலையில் இதுபோன்ற நூல்கள் தன்னார்வத்தோடு தேடிப் படிப்பவர்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடும். என்ற நம்பிக்கையை இந்நூல் ஏற்படுத்துகிறது. சான்றோர் பெருமக்கள் இந்நூற்திறம் குறித்து மிகச்சிறத்த அணிந்துரை வழங்கியுள்ளனர். ஜோதி பதிப்பகத்தார் இந்நூலை மிகுந்த அக்கறையோடு வெளியிட்டிருக்கின்றனர். அவர்களின் பணியும் போற்றுதலுக்குரியது.

பொய் வீட்டு

வாழ்வில்

சூரியன் சுடும்

மழை நனைக்கும்

காற்று சூறையாடும்

அந்தரங்கம்

வேடிக்கைப் பொருளாகும்

முடிவில்

மெய் வீடு

கதவடைக்கும்.

 

                        வணக்கத்துடன்

 

- ச. நீலமேகன்

29.10.2025

வியாழன், 17 ஏப்ரல், 2025

அந்த நாளில்…

அந்த நாளில்…

 

வியர்வை நனைக்க

பிளந்த விறகை

எங்களைத் தவிர

எல்லாம் நுழையும்

வாசல்வழி மறுக்கப்பட்டதால்

புழக்கடைப்பக்கமாய்க்

கொண்டுசேர்ப்பேன்

 

அங்கே

கொழுக்கட்டைகளும்

வடைகளும் மிதக்கும்

மாட்டுத்தொழுவத்துத்

தொட்டியில்

உழவுமாடுகளும் பசுவும்

நாவினால் துழவிப்பிடித்து

மானத்தோடு தின்றுகொண்டிருக்கும்

 

முகம் கழுவி

திண்ணை அருகே

பசியோடு

நான் நிற்க

 

சிலநேரம்

பேக்கடைச் சொம்பில்

குடிக்கத் தருவாள்

கூழ்

 

சிலநேரம்

பாத்திரத்தின் பவித்திரம்

காக்கும்

அந்தவீட்டுப் பாட்டி

ஏந்தி நிற்கும்

என் கையில்

பழைய சோற்றை

உருட்டிப்போடுவாள்

 

பசி ஈர்ப்பு விசையால்

ஈர்க்கப்பட்டு

விழும் சோற்றை

 

பிறப்பிலேயே

ஆத்திரம் மறுக்கப்பட்ட நான்

லாவகமாய்ப் பிடித்து

உண்பேன்…

 

குடிக்க நீர் என்றால்

சொம்பிலிருந்து

அருவி கொட்டும்…

 

வேலை முடிந்து

வேலை செய்ய

உழவு மாட்டோடு

வயலுக்குக் கிளம்புகையில்

 

கொத்துமல்லி வாசம்

ஊசலில் ஊசலாட

பிளந்தால்

சிலந்திநூல் பாலம் கட்டும்

சிவராத்திரி வடைகளையும்

பிசுபிசுத்த கொழுக்கட்டைகளையும்

 

அக்கறையோடு

என் குழந்தைகளுக்குக்

கொடுத்தனுப்புவாள்

விறகு பிளந்த

கூலியாய் ……..

 

-          நீலமேகன்.

 


சனி, 15 மார்ச், 2025

அன்புள்ள தம்பிக்கு ...


அன்புள்ள

தம்பிக்கு ...


இங்கு

இரவு வேளைகளில்

சமீப காலமாக

சமைப்பதை

விட்டுவிட்ட

காரணத்தால்

இப்போதெல்லாம்

அம்மா அடிக்கடி

வருவதில்லை


என்ன செய்வது?

வீதிக்கடையிலாவது

சாப்பிட்டு உறங்கு


அப்போதுதான்

அங்காவது

அம்மா வருவாள்

கனவில் ...


அவளுக்கும்

நம்மைவிட்டால் 

வேறு யார் இருக்கிறார்கள்.

- ச. நீலமேகன்.

15-03-2025




திங்கள், 10 பிப்ரவரி, 2025

?

என்
மனவெளியில்
வேர்விட்ட
கொடியொன்று
ஒரு ஆதிக்கக்காரனின்
சாட்டைக்கோலில்
படர்ந்து குழைகையில்
பூத்துச் சிரிக்கையில்
இதயம் வேகிறது

பூ வாடுவதையோ !
கொடி 
வேரற்றுப் போவதையோ !
சுயநலமென்றா
சொல்வீர்கள்?

- ச. நீலமேகன்
10-02-2025


வியாழன், 7 டிசம்பர், 2023

அன்பு என்றுதான் பெயர்...

நீ
பணிமுடிந்து
உறங்கும் வேளையில்

வீரியமற்ற விஷயத்துக்காக
உரக்கப் பேசும்
அப்பா...

காதருகே
காரோட்டி
விளையாடும்
உன் பிள்ளை...

பக்கத்துக் குடியிருப்பில்
தொலைக்காட்சிப்
பெட்டியிலிருந்து
கசியும்
அரசியல் விவாத
அநாகரிகம்...

வேளையற்ற வேளையில்
இங்கிதமில்லாதவர்களின்
அழைப்புக்குச்
சத்தமிடும்
உன் செல்போன்...

நான்
தண்ணீர் குடிக்க
குவளை எடுக்கையில்
தவறிவிழுந்து
தாளம்போடும்
தட்டு...

இதில் எதையுமே
தடுக்க முடியாமல் தவித்து
அசதியில் உறங்கும்
உனக்குப் போர்வை
போர்த்திவிட்டுப் போகிறேன்...

நீ எழுந்தவுடன்
என்னை...
"எருமைமாடு எப்படி
தூங்குதுபார்" என்னும்
அதட்டலுக்கும்
அன்பு என்றுதான் பெயர்.

_ ச. நீலமேகன்.






புதன், 6 டிசம்பர், 2023

சாமியாடி

சாமியாடி...

இன்ப மழை
அதிகம் பெய்தல்
துன்ப வெள்ளம்
சூழ்ந்துகொள்ளும்
மூழ்கி முடிந்தபின்னே
பேதை மனம்
வடிகால் தேடும்
முன்னைச் செய்த வினை
வழி எங்கும் 
தடை அமைக்கும்
மனதைத் தூர்வாரி 
வைத்திருந்தால்
துன்பவெள்ளம்
சூழ்வதேது?
தோதான இடங்கிடைத்தால்
ஆசைக் குடிசையினை
அளவோடு அமைத்திடுவீர்
பேராசைப் பள்ளத்தில்
கோட்டைகளைக் கட்டுவதால்
போர் வெள்ள முற்றுகை
தீராத பகையாகும்

குளங்களைக் 
கொத்தித் தின்று
கால்வாய்களை
காவுகொடுத்து
ஏரிகளை ஏப்பம்
விட்டோம்

குளம்
குட்டை
கால்வாய்
ஏரி
என எதையும்
பலியிட மாட்டோம்
என நேர்த்திக்கடன்
செய்திட்டால்
இயற்கையன்னை
காத்திடுவாள்

அடுத்த மழைக்குள்ளே
கடனைக் கட்டிவிட
கங்கணத்தைக் கட்டிவிடு
மாறிவிட்டால்
மாரிவிடுவாள்
மாறாவிட்டால்
உருமாறி உருமாறி
மழைமாரி வருவாள்
துயரங்கள் தருவாள்.

ச. நீலமேகன்.
6.12.2023


வெள்ளி, 10 நவம்பர், 2023

அகழ்வைப்பகங்கள்

அகழ்வைப்பகங்கள்

தமிழ்நாடு அரசால் 1961-ஆம் ஆண்டு பழங்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் என்பதையும், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களில் அகழாய்வு மேற்கொள்வதையும் முதன்மையான நோக்கமாகக் கொண்டு தொல்லியல்துறை தொடங்கப்பட்டது. அதன் பின்னர் கல்வெட்டெழுத்துக்களைப் படியெடுத்து, படித்து, பதிப்பித்து அதனை ஆவணங்களாக்கி வெளியிடுதல் மற்றும் கலைப்பொருட்களை வேதியியல் முறையில் பராமரிப்பு செய்தல், பழங்காலக் கலைப் பொருட்களைப் பதிவு செய்தல் போன்ற பணிகளையும் தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டுவருகிறது.

அகழாய்வு

அகழாய்வு என்பது தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்படும் பணிகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதாவது மாநிலத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு மேற்கொள்வது தொல்லியல் துறையின் பெரும் பணிகளில் ஒன்றாகும். இதன் மூலம் பண்டைய எச்சங்களை மேற்பரப்பாய்வு மற்றும் அகழாய்வு மூலம் அறியலாம். இது வரலாறு, பண்பாடு மற்றும் அப்பகுதிகளின் தொன்மையினை நம்பத்தகுந்த தொல்லியல் சான்றுகளுடன் மறுகட்டமைப்பு செய்வதற்கு நமக்கு உதவுகிறது.

அகழ்வைப்பகம்

இதுவரை தொல்லியல் துறையால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட 34 இடங்களில் 33 இடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிக்கைகள் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. இவ்வகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற கலைப்பொருட்கள் இத்துறையின் கீழ் மாநிலத்தின் பல மாவட்டங்களில் செயல்படும் 14 அகழ்வைப்பகங்களில் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்காக பாதுகாக்கப்பட்டு, காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

தமிழக அரசு இதுவரை சமயம் சார்ந்த மற்றும் சமயம்சாரா 85 புராதன மற்றும் வரலாற்றுச் சின்னங்களை ‘பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக’ அறிவித்துள்ளது. தேசிய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் பழம்பொருட்களைப் பாதுகாத்து பராமரிக்கும் பொருட்டு, தேசிய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல் பொருட்கள் ஆவணப்படுத்தும் குழு ஒன்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாநில தொல்லியல், அருங்காட்சியகங்கள் மற்றும் இந்து சமய அறநிலையம் ஆகிய துறைகளால் தமிழகத்திலுள்ள புராதன கட்டடங்கள் மற்றும் தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

 

 

ü அழ்கடலாய்வு அகழ்வைப்பகம் – பூம்புகார்

ü ஆர்க்காடு இஸ்லாமிய அகழ்வைப்பகம் - வேலூர்

ü மராட்டியர் அரண்மனை அகழ்வைப்பகம் – தஞ்சாவூர்

ü சேர அகழ்வைப்பகம் – கரூர்

ü டேனிஷ் கோட்டை தள அருங்காட்சியகம் – தரங்கம்பாடி

ü தர்மபுரி அகழ்வைப்பகம் - தர்மபுரி

ü தொல்மந்தர் அகழ்வைப்பகம் – பூண்டி

ü இராஜராஜன் அகழ்வைப்பகம் - தஞ்சாவூர்

ü இராமலிங்க விலாசம் அரண்மனை - இராமநாதபுரம்

ü திருமலை நாயக்கர் அரண்மனை – மதுரை

ü குற்றால அகழ்வைப்பகம் - திருநெல்வேலி

ü கோவை அகழ்வைப்பகம் – கோயம்புத்தூர்

 

அழ்கடலாய்வு அகழ்வைப்பகம் – பூம்புகார்

            தமிழகத்தில் கிழக்குக் கடற்கரையை ஒட்டிய துறைமுகங்களில் ஒன்று பூம்புகார். பழங்காலத்தில் இத்துறைமுக நகரம் காவிரி பூம்பட்டினம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. கடலில் மூழ்கிவிட்டதாகக் கருதப்பட்ட இந்நகரத்தைக் குறித்து அறியும் பொருட்டு 1981 –ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை ஆழ்கடல் ஆய்வினை மேற்கொண்டது. அப்போது கிடைத்த ரோமானிய நாட்டு பானை ஓடுகள், சுடுமண்ணால் ஆன புத்தரின் தலைப்பகுதி, சுடுமண் புத்தபாதம், செங்கற்கள், மணிகள், சீனநாட்டுப் பானை ஓடுகள், உருவங்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் போன்ற பொருட்கள் கிடைத்தன  அவற்றைக் காட்சிக்கு வைப்பதற்கு, அங்கு ஆழ்கடலாய்வு அகழ்வைப்பகம் ஒன்று 1997-ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இது மயிலாடுதுறையிலிருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஆர்க்காடு இஸ்லாமிய அகழ்வைப்பகம் - வேலூர்

ஆர்க்காடு இஸ்லாமிய அகழ்வைப்பகம் 1982- ஆம் ஆண்டு இஸ்லாமிய கட்டடக்கலை, கலை மற்றும் பண்பாட்டுக் கூறுகளை எடுத்துக் கூறும் முகமாக இவ்வகழ்வைப்பகம் தொடங்கப்பட்டது. இது வேலூரிலிருந்து,  24 கி.மீ. தொலைவில் ஆர்க்காட்டில் அமைந்துள்ளது.

இங்கு கற்சிற்பங்கள், சுடுமண் உருவங்கள், காசுகள், இஸ்லாமிய கலைப்பொருட்கள், பீங்கான் பொருட்கள், இரும்புப் பொருட்கள், மரப்பொருட்கள் ஆகியவற்றுடன் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மராட்டியர் அரண்மனை அகழ்வைப்பகம் – தஞ்சாவூர்

தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் விஜய ராகவ நாயக்க (கி.பி. 1633-1674) மன்னரால் கட்டப்பட்டது. தஞ்சாவூர் அரண்மனை வளாகம், இங்குள்ள கோட்டை 530 ஏக்கர்ப பரப்பளவில் 15 அடி அகலமும் , 15 அடி ஆழழும் கொண்ட அகழி சூழ்ந்து காணப்படுகிறது. தஞ்சை நகரம் விரிவுபடுத்தப்பட்ட போது அகழி தூர்க்கப்பட்டு, சுவரும் இடிக்கப்பட்டதாக அறியமுடிகிறது.

இக்கோட்டையின் கிழக்குப் பகுதியில் இராஜகோபாலன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட பீரங்கி ஒன்று காணப்படுகிறது.  அரண்மனைப் பகுதிகளான ஆயுத கோபுரம், மணி மண்டபம் ஆகிய இடங்களைப் பாதுகாப்புச் சின்னமாக அறிவித்து தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பாதுகாத்து வருகின்றது.

இங்குள்ள தஞ்சை அரண்மனையின் கட்டடக்கலை, மராட்டியர் மற்றும் நாயக்கர் காலத்திய கலை, பண்பாட்டினைப் பிரதிபலிக்கின்றது. தர்பார் மண்டபத்தில் உள்ள ஓவியங்கள் இராமாயண, மகாபாரதக் காட்சிகளைச் சித்திரிப்பவையாகவும், சுவர்ப் பகுதிகளிலும் விதானத்திலும் உள்ள சுடுமண் உருவங்கள் கடவுளர்களின் உருவங்களைச் சித்தரிப்பவையாகவும் உள்ளன.

கற்சிற்பங்கள், பீங்கான் பொருட்கள், இரும்புப் பொருட்களான கத்தி, குறுங்கத்தி மற்றும் சிறுகத்தி போன்ற பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தஞ்சையின் மையப் பகுதியில் இயங்கும் இந்த அகழ்வைப்பகம் மராட்டா அகழ்வைப்பகம் எனவும்  அழைக்கப்படுகின்றது.

சேர அகழ்வைப்பகம் – கரூர்

அமராவதி ஆற்றின்  கரையில், திருச்சியிலிருந்து 78 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கரூரில் 1982-ஆம் ஆண்டு, கரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள தொல்லியல் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இவ்வகழ்வைப்பகம் அமைக்கப்பட்டது. இவ்வகழ்வைப்பகத்தில் கி.மு முதல் நூற்றாண்டு முதல் கி.பி 19- ஆம் நூற்றாண்டு வரையிலான தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானவை அமராவதி ஆற்றுப்படுகையில் கிடைத்த தங்கம், வெள்ளி ஆகியவற்றால் ஆன எழுத்துப் பொறிக்கப்பட்ட மோதிரங்களும், கி.மு 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்திரையிடப்பட்ட காசுகளும் ஆகும்.

தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை 1973, 1977-79 மற்றும் 1993 ஆகிய ஆண்டுகளில் கரூர், கரூருக்கு அருகில் உள்ள புகளூர், ஆத்தூர்  ஆகிய ஊர்களில் அகழாய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வில் பல முக்கியத் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், ரோமானிய காசுகள், விலைமதிப்பற்ற கற்கள் ரௌலெட்டட் பானை ஓடுகள், ஆம்போரா துண்டுகள், கருப்பு சிவப்புப் பானை ஓடுகள், செங்கற்துண்டுகள் மற்றும் இரும்புத் துண்டுகள் ஆகிய தொல்பொருட்கள் குறிப்பிடத்தக்கவைகளாகும்.செங்கற்கட்டடத்தின் பகுதி ஒன்றும் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்பரப்பு ஆய்விலும், அகழாய்விலும் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நடுகற்கள், ரோமானியக் காசுகள், சங்ககாலச் சேர, சோழ, பாண்டியர் காசுகள், பல்லவர் காலக் காசுகள், பிற்காலப் பாண்டியர் காசுகள், முதலல் இராஜராஜன் காசு, நாயக்க மன்னர் காசு, ஓலைச்சுவடிகள், மணிகள், செப்புப் பட்டயங்கள், சுடுமண் மாதிரிகள் ஆகியவை பிற காட்சிப் பொருட்களாகும்.

டேனிஷ் கோட்டை தள அருங்காட்சியகம் – தரங்கம்பாடி

இவ்வகழ்வைப்பகம் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டைக்குள் அமைந்துள்ளது.

இங்கு பீங்கான் பொருட்கள், டென்மார்க் நாட்டுக் கையெழுத்துப் பிரதிகள், கண்ணாடிப் பொருட்கள், சீனநாட்டுத் தேநீர்ச் சாடிகள், மாக்கல் விளக்குகள், அலங்கரிக்கப்பட்ட சுடுமண் பொருட்கள், விளக்குகள், கற்சிற்பங்கள், கத்தி, குறுவாள், ஈட்டி போன்ற இரும்பினால் ஆனப் பொருட்களும், சுதையினால் ஆன உருவங்கள், பெருங்கற்கால ஈமச் சின்னங்கள், மரத்தினால் ஆன பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தரங்கம்பாடியின் வரலாறு கி.பி முதல் நூற்றாண்டு முதல் தொடங்குகிறது. இத்தரங்கம்பாடி பண்டைய சங்க இலக்கியங்களான புறநானூறு, நற்றிணை மற்றும் அகநானூறு ஆகியவற்றில் பொறையாறு, முன்துறை என்ற துறைமுக நகராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதி கி.பி. 19-ஆம் நூற்றாண்டு வரை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகத் திகழ்ந்துள்ளது.

இத்துறைமுகப் பட்டினத்திற்கு பல வெளிநாட்டு வணிகர்கள் வந்து வாணிகம் செய்துள்ளனர். இத்துறைமுகம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் நாங்கூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான பகுதியில் உள்நாட்டு, வெளிநாட்டு வாணிகம் சிறப்பாக நடைபெற்றது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல ஐரோப்பிய நாடுகள் கிழக்கித்திய கம்பெனிகளை நிறுவி அதன் மூலம் இப்பகுதியில் வாணிகத் தொடர்பினை மேற்கொண்டனர்.

தர்மபுரி அகழ்வைப்பகம் - தர்மபுரி

1979-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அகழ்வைப்பகம் நடுகற்களின்(25 வீரக்கற்கள்) அகழ்வைப்பகமாகத் திகழ்கின்றது. மேலும் இவ்வகழ்வைப்பகத்தில் புதிய கற்காலக் கருவிகள், பெருங்கற்காலப் பொருட்கள். கத்தி, குறுவாள், ஈமத் தொட்டிகள், தாழிகள், மூன்று கால்கள் மற்றும் ஐந்து கால்களை உடைய சாடிகள், துர்க்கை மற்றும் சமண சமய, புத்த சமயச் சிற்பங்கள், சுடுமண்ணால் ஆன உருவங்கள், விளக்குகள் மற்றும் குழாய்கள், காசுகள், பதக்கங்கள், பீரங்கிகள், மரப்பொருட்கள், செப்புப் பொருட்கள், இரும்புப் பொருட்கள் மற்றும் ஓலைச்சுவடிகள்  போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தொல்மந்தர் அகழ்வைப்பகம் – பூண்டி

தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறை தொல்பழங்காலத்தைச் சார்ந்த தொல்பொருட்களுக்காக இக்காட்சியகத்தினை பூண்டியில் 1985-ஆம் ஆண்டு தொடங்கியது.

திருவள்ளூரிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் பூண்டி அகழ்வைப்பகம் அமைந்துள்ளது. இங்கு பழைய கற்காலக் கருவிகள், புதிய கற்காலக் கருவிகள், ஈமத் தொட்டிகள் பெருங்கற்கால ஈமத்தாழிகள், கிண்ணங்கள், மரம் மற்றும் நத்தையின் புதைப்படிவங்கள், மூன்று கால்களை உடைய தாழிகள், இரும்பு மண்வெட்டி, கோடரி மற்றும் இரும்பு உருக்கப் பயன்படும் சுடுமண் குழாய்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பூண்டி ஏரியின் அருகில் உள்ள பூண்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் உலக அளவில் தொல்லியல் மற்றும் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகத் திகழ்கின்றன. பழைய கற்கால மனிதன் வாழ்ந்த திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடியம் என்ற இடத்தில் அமைந்த குகை, பண்டைய மனிதன் வாழ்ந்திருந்ததற்கான அடையாளங்களுடன் காணப்படுகின்றன.

இராஜராஜன் அகழ்வைப்பகம் - தஞ்சாவூர்

இவ்வகழ்வைப்பகம் தஞ்சை, திருச்சி சாலையில் திருச்சியிலிருந்து 50 கி.மீ தொலைவில் இராஜராஜன் மணிமண்டபத்தில் அமைந்துள்ளது.

போர் வெற்றிகள், நிர்வாகத்திறன், பண்பாடு கலை மேம்பாடு போன்றவற்றிற்காப் போற்றப்படும் சோழ மன்னன் முதலாம் இராஜராஜனின் 1000-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இவ்வகழ்வைப்பகம் கி.பி. 1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு வைக்கப்பட்டுள்ள சிற்பங்களுள் யோக தட்சிணாமூர்த்தி, நடராஜர், ஜேஷ்டா, கஜலட்சுமி, விஷ்ணு, பிரம்மா, முருகர், பைரவர், விநாயகர், சூரியன், ரிஷி அகஸ்தியர் மற்றும் நந்தி ஆகிய கற்சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

இராமலிங்க விலாசம் அரண்மனை - இராமநாதபுரம்

இராமலிங்க விலாசம் எனப்படும் சேதுபதி மன்னர்களின் இராமநாதபுர அரண்மனையில் அமைக்கப்பட்டுள்ள  இவ்வகழ்வைப்பகம் இராமேஸ்வரத்திலிருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 

இங்கு இரும்பினால் ஆன வேல், கத்தி, குறுவாள், துப்பாக்கி மற்றும் வளரி போன்ற போர்க்கருவிகளும், அழகன்குளம் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களும் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

அகழ்வைப்பகமாக விளங்கும் அரண்மனைச் சுவர்களிலும் விதானங்களிலும் போர்க்காட்சிகள், கடவுளரின் உருவங்கள், இராமாயணம், பாகவதம் ஆகிய புராணக் காட்சிகள், இராமரின் பிறப்புக் குறித்த பாலகாண்ட காட்சிகள், நீர் விளையாட்டுகள் போன்ற தொல்லியல் சிறப்புமிக்க ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.

திருமலை நாயக்கர் அரண்மனை – மதுரை

கி.பி. 1636-ஆம் ஆண்டு, மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் (கி.பி. 1627-1659) என்ற மன்னரால் கட்டப்பட்டது. அழகிய மதச் சார்பற்ற இவ்வரண்மனைக் கட்டடம், இத்தாலிய நாட்டுக் கட்டடக்கலை, நிபுணரைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது உள்ள இவ்வரண்மனைக் கட்டடப் பகுதி, முன்பி இதனை அளவில் நான்கு மடங்கு பெரிதாக இருந்துள்ளது. சொர்க்க விலாசம் மற்றும் இரங்கவிலாசம் என்ற இரு பகுதிகளைக் கொண்ட இவ்வரண்மனையில், அரசர்களின் வாழ்விடங்கள், திரையுரங்கம், அரண்மனைக் கோயில், இராணிகள் தங்குமிடம், ஆயுதங்கள் சேகரித்து வைக்குமிடம் ஆகியவை இருந்துள்ளன.மேலும், உறவினர்கள், பணியாளர்கள் தங்குமிடங்கள், குளங்கள், தோட்டங்கள் ஆகியவையும் அமைந்திருக்கக்கூடும். ஏனெனில், பல எஞ்கிய கட்டடப் பகுதிகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இவ்வரண்மனைப் பகுதி முழுவதும் சுற்றுச் சுவரால் சூழப்பட்டிருக்கக் கூடும். கி.பி. 1980 ஆம் ஆண்டு இந்த அரண்மனை அகழ்வைப்பகம் தொடங்கப்பட்டது.காட்சிப் பொருட்கள்:மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சதுர வடிவச் செப்புக்காசு, விலை மதிப்பற்ற கற்கள், சங்கு வளையல் துண்டுகள், கோவலன்பொட்டலில் கிடைத்த எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சப்தமாதர் சிற்பத் தொகுதிகள், கொடுங்கை என்ற இடத்தில் கிடைத்த சுடுமண் பொம்மைகள் ஆகியவைகளாகும்.

குற்றால அகழ்வைப்பகம் - திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் தமிழ்நாட்டிலுள்ள முதன்மையான சுற்றுலாத் தலமாகக் திகழ்கின்றது.

பழங்குடியினரின் வாழ்க்கை நிலையைச் சித்தரிக்கவும், வேட்டையாடி வாழும் அவர்களது வாழ்க்கை முறையை அறியவும் இவ்வகழ்வைப்பகம் கி.பி. 1982-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வகழ்வைப்பகத்தில் நுண்கற்கருவிகள், புதிய கற்காலக் கருவிகள், பெருங்கற்காலக் கருப்பு சிவப்பு வண்ணப் பானைகள், இரும்புப் பொருட்கள், சிற்பங்கள், சுடுமண் உருவங்கள் மற்றும் மரப்புதைப் படிவங்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியை பண்டைய காலத்தில் பாண்டியர்களும் பின்னர் சோழர்களும் ஆட்சி செய்துள்ளனர். கி.பி எட்டாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட இங்குள்ள சிவன்கோயிலின்(குற்றாலநாதர்) சித்திரச் சபையில் காணப்படும் ஓவியங்கள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை.

கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குற்றாலக் குறவஞ்சி என்ற நூல். குற்றாலநாதரைச் சிறப்பித்துப் பாடியுள்ளதோடு குற்றால மலையில் வாழ்ந்த பழங்குடியினரின் வாழ்க்கை முறையையும் நன்கு சித்திரிக்கிறது.

கோவை அகழ்வைப்பகம் - கோயம்புத்தூர்

கோவையைச் சுற்றிப் பல தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை வெள்ளலூர். போளுவாம்பட்டி, பேரூர் மற்றும் வேட்டைக்காரன் மலை ஆகியவையாகும்.

வேட்டைக்காரன் மலையில் உள்ள குகை ஓவியங்களில் விலங்குகளும். வேட்டைக்காட்சிகளும், நடனக் காட்சிகளும் சித்திரிக்கப்பட்டுள்ளன.

வெள்ளலூரில், கி.மு முதல் நூற்றாண்டு முதல் கி.பி. நான்காம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த ரோமானிய காசுகள், தங்கம், வெள்ளி ஆகியவை புதையலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தொல்பொருட்களில் குறிப்பிடத்தக்கவை தங்கத்தினால் ஆன ரோமானிய உருவங்கள் பொறிக்கப்பட்ட ஆபரணங்களாகும்.

தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை 1980-ஆம் ஆண்டு போளுவாம்பட்டியில் அகழாய்வு மேற்கொண்டது. இவ்வகழாய்வில் சுடுமண் உருவங்கள், சுடுமண் முத்திரை, பெரிய அளவிலான செங்கற்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இச்சுடுமண் உருவங்களில் இயக்கன், இயக்கி, மைத்ரேயர், புத்தரின் தலைப்பகுதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

பேரூரின், தெற்கில் சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள சுண்டைக்காமுத்தூர் அருகில் கரடிப்பாறை என்ற கல்லில் வட்டெழுத்தும், தமிழ் எழுத்தும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு சோழ மன்னன் முதலாம் ஆதித்தனின் (கி.பி. 871-909) பெயரால் இராஜகேசரி பெருவழி என்ற ஒரு பெருவழி இருந்ததைக் குறிக்கிறது. இந்தப் பண்டைய பெருவழி பண்டைய சேர நாடான கேரளத்தை இணைக்கும் முகமாக பாலக்காட்டு கணவாய் வழியாகப் பேரூர், வெள்ளலூர், சூலூர், கத்தன்காணி, கொடுமணல் (பண்டைய கொடுமணம்) வழியாக அமராவதியில் உள்ள சேரர் நகரான கரூர் வரை செல்கின்றது. எனவே, இப்பகுதியின் தொல்லியல் முக்கியத்துவத்தையும் வணிகத் தொடர்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் இத்துறை 1981-ஆம் ஆண்டு அகழ்வைப்பகத்தைத் தொடங்கியது. இவ்வகழ்வைப்பகத்தில் சிற்பங்கள், தாழிகள், அவற்றில் காணப்படும் பானைகள், கொங்கு மன்னர்களின் கல்வெட்டுகள், வீரக்கற்கள்(நடுகற்கள்) போன்றன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

 

திங்கள், 30 அக்டோபர், 2023

சுவடியியல்


சுவடியியல்

அறிமுகம்

சுவடிகளைப் பற்றிய அறிவுப்புலம் சுவடியியல் எனப்படுகிறது. சுவடிகளைப்பற்றி அறிவது, சேகரிப்பது, பாதுகாப்பது, ஆராய்வது, படிப்பது பதிப்பிப்பது என்பன இதனுள் அடங்கும்.

சுவடிகளின் அமைப்பு, சுவடிகள் எதனால் அழிவுக்கு உள்ளாகிறது, அழிவிலிருந்து சுவடிகளை எவ்வாறு அழியாவண்ணம் பாதுகாக்கலாம், நாடெங்கும் உள்ள சுவடிகளை எவ்வாறு திரட்டலாம், திரட்டிய சுவடிகளை எவ்வாறு முறையாக வகைப்படுத்தலாம், அவற்றை எவ்வாறு பதிப்பிக்கலாம் என்பனபோன்ற வழிமுறைகளை சுவடியியல் மூலம் அறியலாம்.

உலகெங்கும் உள்ள சுவடிகளில் அச்சான சுவடிகள் எவை அச்சாகாத சுவடிகள் எவை என்பனவற்றையும், சுவடிகளை ஆய்வு செய்யும் முறை மற்றும் பதிப்பு நெறிமுறைகள் ஆகியவற்றையும் சுவடியியல் வாயிலாக தெரிந்துகொள்ள முடிகிறது.

‘சுவடி’ என்னும் சொல் கையால் ஓலையில் சுவடை உருவாக்கி எழுதப்படும் நூலை குறிப்பது. அதாவது எழுத்துக்கள் பதியுமாறு எழுதப்பட்ட ஏடுகளின் தொகுப்பு சுவடி என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது. 

இவ்வாறு எழுதப்பட்ட சுவடிகள் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், திருமுகம் என்னும் பெயர்களால் இலக்கியங்களில் சுட்டப்படுகின்றன.

சுவடிகளின் தோற்றம்

 

o   நம் தமிழ்ச் சமூகத்தில் கற்பித்தல் என்பது தொடக்க காலத்தில் வாய்மொழிப் பாடமாக இருந்தது.  எழுத்து பயிற்சி மணலிலும் நெல்லிலும் எழுதிப் பயிற்றுவிப்பதாக இருந்தது. பிறகே ஓலையில் எழுதும் பயிற்சி தொடங்கப்பட்டது.

 

o   பழங்காலத்தில் திண்ணைப்பள்ளி ஆசிரியர்களிடம் பாடம்கேட்ட நூல்களை மாணவர்கள் பிற்காலத் தேவைக்காக சுவடிகளில் எழுதி வைத்தார்கள்.

 

o    தொடக்கக் கல்வியை முடித்தவர்கள் மேலும் கற்க விரும்பிய போது சுவடிகளை ஆசிரியரிடமிருந்தோ அல்லது பிறரிடமிருந்தோ வாங்கி சுவடிகளில் எழுதி வைத்தார்கள்.

 

o   மனப்பாடம் செய்யப்பட்ட பாடல்கள் எழுத்து வடிவம் பெற்றதால் சுவடிகள் எண்ணிக்கையில் பெருகின.

 

o      எழுதப்பெற்ற சுவடிகள்  படிஎடுக்கப் பெற்றதால் மேலும் வளர்ச்சிபெற்றது.

 

o ஏற்கனவே எழுதப்பட்ட சுவடிகள் பழுதடைந்ததால் அவற்றைப் புதிய சுவடிகளில் படியெடுத்தனர்.

o   பல்வேறு இலக்கிய இலக்கண நூலுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களால் சுவடிகள் பெருகின. இறையுணர்வு காரணமாக சமயச் சுவடிகள் பெருகின.

 

o குறுநிலமன்னர்கள், வள்ளல்கள் காலத்தில் அவர்கள் அளித்த ஆதரவால் சிற்றிலக்கியங்கள் பெருகின.

 

o   மக்களின் தேவைக்காகவும் பல சுவடிகள்(இதிகாசக் கதைகள், மருத்துவச் சுவடி, ஜோதிட சுவடி, கணிதம், இசை, நாடகம் ) படியெடுக்கப் பெற்று வளர்ச்சியுற்றுள்ளன.

ஓலைகளில் ஏன் எழுதப்பட்டது?

இலை, மரப்பட்டை, களிமண்பலகை போல்வன விரைவில் அழியக் கூடியவையாக இருந்தன. மரப்பலகை, மூங்கில்பத்தை போன்றவற்றில்  அளவில் பெரிய நூல்களை எழுதிக் கையாள்வது மிகவும் கடினமானதாக இருந்தது. தோல், துணி, உலோகத் தகடு போல்வன மிகுந்த பொருட் செலவினை உண்டாக்கும். பிற உயிர்களைக் கொன்று அவற்றின் தோலில் நூல்களை எழுதுவது மனிதத்தன்மைக்கு முரண்பட்டதாகவும், அருவருக்கத் தக்கதாகவும் அமைகிறது. மேலும் அவற்றில் விரைவாக எழுதவும் முடியாது. கருங்கல் போன்ற பிறபொருள்கள் பிற இடங்களுக்கு எடுத்துச்செல்ல இயலாதவை. ஆனால் ஓலையோ ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் வரை அழியாத்தன்மை வாய்ந்ததாகவும் செலவு இல்லாததாகவும் இருப்பது.  தமிழகத்தில் கிராமப்புறங்கள் முதல் எல்லா இடங்களிலும் மிகுதியாகவும் எளிமையாகவும் கிடைக்கக் கூடியது; மிகப் பெரிய அளவுடைய நூல்களையும் ஒருசுவடிக்கட்டில் அடக்கக்கூடிய தன்மை வாய்ந்தது; பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லும் அளவு உடையது; பாதுகாக்க ஏற்றது. இக்காரணங்களால் ஓலைகளையே தமிழர் தேர்ந்தெடுத்து மிகுதியாகப் பயன்படுத்தினர்.

எழுது கருவிகள்

உலகின் பல பகுதிகளில் எழுதுவதற்கு பைப்ரஸ் என்னும் ஒரு வகைக் கோரைப் புல்லையும் விலங்குகளின் தோலையும் பயன்படுத்தினர்.  அவற்றில் நாணல் குச்சியைக் கொண்டு இலைச்சாறு, மிருகங்களின் ரத்தம் ஆகிவற்றைப் பயன்படுத்தி எழுதினார்கள். கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தியர்கள் இவ்வழக்கத்தைக் கொண்டிருந்தனர். கிரேக்கம், ரோம், எபிரேயம் போன்ற நாடுகளில் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை இத்தகைய பைப்ரஸ் புல்லையே எழுதுவதற்குப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அவை விரைந்து அழிந்துவிடும் தன்மையுடையனவாக இருந்ததால் விலங்குகளின் தோலையும் எழுதுவதற்குப் பயன்படுத்தினர். இலைச்சாறு, பூச்சாறு, மிருகங்களின் ரத்தம் ஆகியவற்றையும் எழுதுவதற்கு பயன்படுத்தினார்கள்.

நம் நாட்டில் களிமண்பலகை, கல், தோல், உலோகத்தகடு(பொன்தகடு, செப்பேடு, வெள்ளித்தகடு), இலை, மரப்பலகை, துணி, மூங்கில்பத்தை முதலான பொருட்களை எழுதப் பயன்படுத்தியிருந்தனர் என்றாலும் செய்திகளை எழுதி தூதுவர் மூலம் அனுப்பவும் இலக்கியங்களை எழுதிவைக்கவும் பனை ஓலைகளையே மிகுதியான அளவு பயன்படுத்தினர். 

சுவடி தயாரிப்பு

சுவடிகளைப் பூச்சி அரிப்பிலிருந்து பாதுகாக்க மஞ்சள் பூசினார்கள். ஓலைகளில் கீறி எழுதப்பட்ட எழுத்துக்கள் தெளிவாக தெரிவதற்காக விளக்கு மையினை பூசினார்கள். எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பனை ஓலை ‘கூந்தல்பனை’, ‘நொங்கு பனை’ என்ற இருவகையான பனை மரங்களிலிருந்து கிடைக்கக்கூடியதாக இருந்தது.

பனை ஓலைகளை நிழலில் உலர்த்தி பதப்படுத்தி ஒழுங்குபட நறுக்கி சுவடி தயாரித்தார்கள் அத்தகைய சுவடி நறுக்குகள் ‘ஏடு’ எனப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட எழுதப்படாத ஏடுகள் வெள்ளோலை எனப்பட்டது. இவ்வாறு ஓலை தயாரிக்கும் செயலுக்கு ஓலைவாருதல் என்று பெயர்.

பதப்படுத்தி நன்கு நறுக்கி உருவாக்கப்பட்ட ஓலைகளின் நடுவே துளையிட்டு சிறு நூல் கயிற்றில் அச்சுவடிகளைக் கோர்த்து சுவடிகள் ஒடியாமல் இருப்பதற்காக இரு பகுதியிலும் சிறு கட்டையினை(சட்டங்கள்) வைத்து பாதுகாத்து வந்தனர் 

ஓலை எழுதுவதற்குப் பதமாக உள்ளதா என்பதை சுழித்துப்(கீறி) பார்த்து பயன்படுத்தினர். இதுவே பிற்காலத்தில் பிள்ளையார்சுழி என அழைக்கப்பெறலாயிற்று. 

எழுத்தாணி

ஆணி, கூரியகல், தண்டு, நாணல், பறவைஇறகு, பன்றிமுள், விலங்குகளின் எலும்பு, மெல்லிய தூரிகை போன்ற பல பொருள்களை மக்கள் எழுதும் கருவிகளாகப் பயன்படுத்தினர். என்றாலும் ஓலைகளில் எழுதுவதற்கு எழுத்தாணிகளையே பயன்படுத்தினர்.

குண்டெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி என்பன எழுதுவதற்குரிய எழுத்தாணி வகைகள். தந்தமும் பொன்ஊசியும் கூட எழுதுவதற்குரிய எழுத்தாணிகளாகப் பயன்படுத்தப்பட்டன என்பதை இலக்கியச் சான்றுகளின் வாயிலாக அறியமுடிகிறது. பழங்காலத்தில் அரசர்களிடம் “ஓலை எழுதுவோர்” என்னும் பணியாளர் இருந்தனர்.



சுவடிகளைத் திரட்டுதல்

சுவடிகளைத் திரட்டும் பணி சங்க காலத்திலேயே தொடங்கிவிட்டது. மன்னர் பலர் புலவர்களை ஒருங்கிணைத்து இப்பணியை மேற்கொண்டார்கள். இதற்கு சங்கம் என்கிற அமைப்பும் அதில் தொகை செய்யப்பட்ட சங்க இலக்கியங்களும் சான்றாக அமைகின்றன. இடைக்காலத்தில் மடாலயங்கள் சுவடிகளைத் திரட்டி பாதுகாத்து வைத்தன. பிற்காலத்தில் காலின் மெக்கன்சி, லெய்டன், பிரௌன், எல்லிஸ், ஏரியல் போன்ற அயல்நாட்டவர்களாலும் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்,  பாண்டித்துரைத்தேவர், கனகசபைப்பிள்ளை, ரா. இராகவையங்கார் எனப் பலரும் ஓலைச் சுவடிகளைத் திரட்டித் தொகுத்தனர். 

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை, உ.வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஔவை சு. துரைசாமிப்பிள்ளை போன்றவர்கள் கற்பதற்காகவும் பதிப்பிப்பதற்காகவும்  ஓலைச்சுவடிகளைத் திரட்டினர்.

சுவடிகளின் வகைப்பாடு

அரசினர் கீர்த்திசைச் சுவடி நூலகம், உ.வே. சாமிநாதையர் நூலகம், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் ஆகியவற்றில் பின்பற்றப்பட்டுள்ள வகைப்பாட்டு முறையை  அடிப்படையாகக் கொண்டு பொருள் அடிப்படையில் சுவடிகளை அகராதி, அரிச்சுவடி, ரசவாதம் இலக்கணம், இலக்கியம், கணிதம், சமயம், ஜாலம், ஜோதிடம், தோத்திரம், நாடகம், புவியியல், மருத்துவம், மாந்திரீகம், வரலாறு, வானவியல் எனப் பலவாறு வகைப்பாடு செய்யலாம். 

சுவடிகளின் அழிவு 

இயற்கையாகவும் செயற்கையாகவும் பல்வேறு காரணங்களால் சுவடிகள் காலந்தோறும் அழிந்துபோயின. அந்த வகையில் மறைந்துபோன தமிழ்நூல்கள் ஏராளம். கிடைத்த சுவடிகளில் பல சிதிலமடைந்தே கிடைத்தன.

கரையான்களாலும், ராமபாணம் எனப்படுகின்ற ஒரு வகைப் பூச்சிகளாலும் பூஞ்சைகளாலும் சுவடிகள் இயற்கையாகவே அழிந்தன. மேலும் போர், அரசியல் மாற்றம், வெளிநாடுகளுக்குச் சுவடிகளை விற்பது,  தீயிலிட்டு எரிப்பது. ஆற்றிலும் குளத்திலும் கிணற்றிலும் போடுவது, கவனக்குறைவு ஆகியவற்றால் ஏடுகள் செயற்கையாக அழிக்கப்பட்டன. ஆடிப்பெருக்கில் ஆற்றில் விட்டால் பலன் கிடைக்கும் என்கிற மூடப்பழக்கத்தால் ஏராளமான சுவடிகள் ஆற்றில் விடப்பட்டு அழிக்கப்பட்டன .

சுவடிப் பாதுகாப்பு

    பழங்காலத்தில் ஓலையில் எழுதிய எழுத்து தெளிவாக தெரிவதற்காக சுவடிகளுக்கு மஞ்சள் பூசினர் கீறி எழுதிய இடங்களில் ஒரு வகை இலைச்சாறு அல்லது விளக்கின் மை என ஏதேனும் ஒன்றைப் பூசினர். இவைகளே ஒரு வகையில் சுவடிகளைப் பாதுகாக்கும் பூச்சிக்கொல்லிகளாக இருந்தது. வேப்பிலை, வசம்பு போன்ற பொருட்களைக்கொண்டும் சுவடிகளைப் பூச்சி அரிப்பிலிருந்து பாதுகாத்தனர்.

        அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள தற்காலத்தில் சுவடிகளை ஸ்கேனர்(வருடி) மூலம் படமாக எடுத்து எண்ணிம(டிஜிட்டல்) முறையில் சேமித்து பாதுகாக்கின்றனர். மூலச்சுவடிகளைப் பூச்சிகள் அரிக்கா வண்ணம் பாதுகாக்க அவற்றை முறையாகத் துடைத்து அவற்றின் மீது Lemon Grass Oil, Java Citranella Oil போன்றவற்றைப் பூசி பாதுகாக்கின்றனர்.

சுவடிப்பதிப்பு

கி.பி. 1812 இல் திருக்குறள் அறத்துப்பாலை F.W. எல்லீஸ் என்பார் பதிப்பித்தார் என்ற செய்தியை அடிப்படையாகக்கொண்டு சுவடிகளைப் பதிப்பிக்கும் பணி தொடங்கிய காலமாக கி.பி. 19 ஆம் நூற்றாண்டைக் குறிப்பிடலாம்.

தமிழ்ச்சுவடிகள் உள்ள இடங்கள்

1.       அரசினர் சுவடி நூலகம், சென்னை.

2.       உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

3.       கல்கத்தா தேசிய நூலகம், கல்கத்தா.

4.       சரசுவதி மகால் நூல் நிலையம், தஞ்சாவூர்.

5.       சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர்.

6.       சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம், சென்னை.

7.       டாக்டர் உ வே. சாமிநாதையர் நூலகம், திருவான்மியூர்.

8.       தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

9.       திருவனந்தபுரம் பல்கலைக்கழகச் சுவடி நூலகம், திருவனந்தபுரம்.

10.   பிரமஞானசபை நூல் நிலையம், அடையாறு.

11.   புதுவை பிரஞ்சு நிறுவனம், பாண்டிச்சேரி.

12.   வெங்கடேசுவரா கீழ்த்திசைமொழி ஆராய்ச்சி நிறுவன நூலகம், திருப்பதி

13.   ஆந்திரப் பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம்.

14.   உஸ்மானியா பல்கலைக்கழகம், ஐதராபாத்

15.   கலைமகள் கல்வி நிலையம், ஈரோடு.

16.   கள்ளிக்கோட்டைப் பல்கலைக்கழகம், கள்ளிக்கோட்டை.

17.   காசிமடம், திருப்பனந்தாள்.

18.   சங்கராச்சாரியார் சுவாமிகள் மடம், காஞ்சிபுரம்.

19.   தருமபுர ஆதீனமடம், மாயவரம்.

20.   திருவாவடுதுறை ஆதீனமடம், திருவாவடுதுறை.

21.   மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

22.   மதுரைத் தமிழ்ச்சங்கம், மதுரை.

23.   British Museum, London.

24.   The Library of the Royal Asiatic Society. London.

25.   The Library of Cambridge University.

மேலும் அறிய

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்

தமிழ் இணையக் கல்விக் கழகம்