அந்த நாளில்…
வியர்வை நனைக்க
பிளந்த விறகை
எங்களைத் தவிர
எல்லாம் நுழையும்
வாசல்வழி மறுக்கப்பட்டதால்
புழக்கடைப்பக்கமாய்க்
கொண்டுசேர்ப்பேன்
அங்கே
கொழுக்கட்டைகளும்
வடைகளும் மிதக்கும்
மாட்டுத்தொழுவத்துத்
தொட்டியில்
உழவுமாடுகளும் பசுவும்
நாவினால் துழவிப்பிடித்து
மானத்தோடு தின்றுகொண்டிருக்கும்
முகம் கழுவி
திண்ணை அருகே
பசியோடு
நான் நிற்க
சிலநேரம்
பேக்கடைச் சொம்பில்
குடிக்கத் தருவாள்
கூழ்
சிலநேரம்
பாத்திரத்தின் பவித்திரம்
காக்கும்
அந்தவீட்டுப் பாட்டி
ஏந்தி நிற்கும்
என் கையில்
பழைய சோற்றை
உருட்டிப்போடுவாள்
பசி ஈர்ப்பு விசையால்
ஈர்க்கப்பட்டு
விழும் சோற்றை
பிறப்பிலேயே
ஆத்திரம் மறுக்கப்பட்ட நான்
லாவகமாய்ப் பிடித்து
உண்பேன்…
குடிக்க நீர் என்றால்
சொம்பிலிருந்து
அருவி கொட்டும்…
வேலை முடிந்து
வேலை செய்ய
உழவு மாட்டோடு
வயலுக்குக் கிளம்புகையில்
கொத்துமல்லி வாசம்
ஊசலில் ஊசலாட
பிளந்தால்
சிலந்திநூல் பாலம் கட்டும்
சிவராத்திரி வடைகளையும்
பிசுபிசுத்த கொழுக்கட்டைகளையும்
அக்கறையோடு
என் குழந்தைகளுக்குக்
கொடுத்தனுப்புவாள்
விறகு பிளந்த
கூலியாய் ……..
- நீலமேகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக