வெள்ளி, 9 ஜனவரி, 2026

சொல்லலாமா!

சொல்லலாமா!

உலக உண்மைகளை எடுத்துச் சொல்ல துணிச்சல் வேண்டும். துணிவு எப்போது பிறக்கும்?. சொல்லுகின்றவர் உண்மையாக இருந்தால் துணிச்சல் பிறக்கும். காலந்தோறும் பூமியில் எத்தனையோ ஞானியர்களும், அறவாணர்களும் அவதரித்திருக்கிறார்கள். அவர்கள் நமக்கு எதற்கு என்று மௌனிகளாக இல்லை. மனம்திறந்தி பேசினார்கள், பாடினார்கள், எழுதினார்கள்.






அந்த ஞானியர்கள் இவ்வாறு பேசவும், பாடவும், எழுதவும் நேர்ந்த அவசியத்தை ஒரு எளிய உதாரணத்துடன் நாம் புரிந்துகொள்ளலாம்.

சாலையில் வாகனத்தில் செல்லும்போது உலகம் வகுத்துள்ள பொது விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றவர் அவ்விதிகளுக்கு ஏற்ப தன் வாகனத்தை ஓட்டிச்செல்லுகிறார். ஆனாலும் விபத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். நேர்ந்த விபத்துக்கு யார் பொறுப்பு? பொதுவிதிகளைப் பின்பற்றத் தவறியவர்தான் பொறுப்பு…

எனவே பொது விதிகளைப் பின்பற்றி நடப்பவர்களை காப்பாற்றுவதற்காகவாவது விதிமீறல்காரர்களைத் திருத்த வேண்டியிருக்கிறது. உண்மையை, அறத்தை, உலகியலைச் சொல்லவேண்டி இருக்கிறது. அந்த அடிப்படையில் தோன்றிய நூலாகத்தான் ‘சொல்லலாமா!’ என்ற நூலைக் கருதவேண்டியிருக்கிறது.

“தகுதியற்றவர் முன்னிலையில் மெய்ப்பொருள் பற்றிப் பேசுவது உயிர் காக்கும் மருந்தாகிய அமிழ்தத்தைத் தரையில் சிந்தியது போன்றது” என்பதே வள்ளுவரின் முடிபான கொள்கை எனக் கொண்டாலும். உலகைத் திருத்தும் முயற்சியில்  கொஞ்சம் அமுதம் சிந்தினாலும் தவறில்லை என்ற புறநடையை அமைத்துக்கொண்டு ‘அறிவுத் திறனும் கற்கும் வேட்கையும் முயற்சியும் உடையவர் முன்னே நுட்பமான கருத்துக்களைக் கூற வேண்டும்’ என்ற கொள்கையை மீறி பிரம்பின் நுனியில் பூவைச்சுற்றி தன் இளந்தலைமுறைக் குழந்தைகளுக்கு...

      • பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவோ நேர்மையாகப் பணி          செய்யவோ விரும்பாதவர்கள் பதவி மட்டும் வேண்டும் என்று        நினைப்பது சரியா?
      • முயன்று படிக்காமல் பட்டம்  மட்டும் பெற ஆசைப்படுவது            முறையா?
      • பதிவுத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள்                            கையூட்டு மையங்களாக மாறியிருப்பது விரும்பத்தக்கதா?
      • தேர்வுத்தாள் திருத்தும் மையங்கள் அற உணர்வற்று செயல்படுவதால் எதிர்கால சந்ததியரின் அறிவு மழுங்கடிக்கப்படுவது ஏற்புடையதா?

என்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து சிந்திக்க வைப்பதோடு, ‘ஆடம்பரமும் ஆடம்பரச் செலவுகளும் சமுதாயக் கொடுமைகள்’ என்ற ஆழமான உண்மையை எடுத்துக் கூறுகிறது இந்நூல்.

தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும், கடமைகளைச் செய்ய வேண்டும், நேர்மையாக வாழ வேண்டும். என்று கண்டிப்போடு ஆற்ற வேண்டிய கடமைகளையும் எடுத்துக் கூறுகிறது நூல்.

மனிதராகப் பிறந்து, மனிதராக வாழ்ந்து மனிதருக்கு உரிய கடமைகளை ஒழுங்காகச் செய்பவர்களே மெய்ப்பொருளை உணர முடியும். அத்தகைய  மெய்ஞ்ஞானத்தைப்பெற பணமே, பதவியோ, இன்ன பிறவோ முக்கியமல்ல, ஒருநிலைப்பட்ட மனம், சொல்வதைக் கேட்கும் காதுகளும் அவசியமானவை என்பதையும் இந்நூல் எடுத்துரைக்கிறது

தைரியம், தெளிவு, வாழும் முறை ஆகியவற்றைக் கற்றுத் தரும் மனச்செம்மையை உருவாக்கும் உண்மையான கல்வி முறையே இன்றைய தேவையாகும் என்பதையும் கடவுள் உருவாக்கம், கோயில் உருவாக்கம் ஆகியவற்றின் உண்மையான போக்கையும், “அறியாமை + அச்ச உணர்வு = மூடநம்பிக்கை” என்ற சூத்திரத்தையும் எடுத்துச்சொல்லி கடவுள் பெயரால் இன்று நடக்கும் மூடத்தனங்களைப் பட்டியலிட்டு, ‘சமுதாயத்திற்குத் தொண்டு செய்யும் வகையில் நடப்பதே உண்மையான கடவுள் பூசை’ என்ற மு.வ.வின் அறவுரையைக்கூறி ஆழமாகச் சிந்திக்கவைத்து பொருளற்ற சடங்குகளை புறந்தள்ளுகிறது சொல்லலாமா!.. என்ற இந்நூல்.

அறிவுடையோர் தத்தமது கடமைகளைச் செய்யாமல்  மௌன சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருப்பது தீமைகளுக்குத் துணைபோவது போன்றது. என்று குறிப்பிடும் நூலாசிரியர் பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் அவர்கள் மௌனம் கலைக்கிறார். தன் மனதில் பட்ட உலக உண்மைகளை நேர்மையோடு எடுத்துச் சொல்லுகிறார்.

உண்மையைச் சொன்னால் பலருக்குக் கோபம் வருவது தற்கால மனிதர்களின் சுபாவமாக மாறிவிட்டது. அதனால் எதையும் பக்குவமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்தப் பக்குவப்பட்ட அனுபவமும் சொல்லும் தகைமையையும் ஒருங்கே பெற்றிருக்கிற காரணத்தால்தான் பேராசியர் அரங்க. இராமலிங்கம் அவர்கள், உலக நாடுகளில் தான் செல்லும் இடமெங்கும் நிகழ்த்தும்  பொழிவுகளில், மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் பாடங்களில், எழுதும் நூல்களில் இயன்ற வகையிலெல்லாம் தேனோடு சேர்த்து நோய் தீர்க்கும் மருந்தையும் குழைத்து சாதுர்யமாகக் கொடுத்துவிடும் அன்னையைப் போல அறக்கருத்துக்களை, உலகியலை, சான்றோர் சிந்தனைகளை எடுத்துரைப்பதையே தன் வாழ்நாள் பணியாக அமைத்துக்கொண்டவர், அவரின் இந்த முயற்சியை இந்நூலின் போக்கில் சொல்ல வேண்டுமானால் ,

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

 

 உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு

இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு

இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து

அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து.

 

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா .

 

என்ற கண்ணதாசன் இயற்றிய திரைப்படப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

 “சொல்லலாமா!” என்ற இந்த நூல் பத்து தலைப்புகளில் உலகின் போக்கை எடுத்துக்காட்டி பகுத்தறிவோடு சிந்தித்து செயல்பட வேண்டியதின் அவசியத்தை மிக எளிமையாக விளக்குகிறது.

பகுத்தறிவு என்று சொன்னால் பெரியார்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வருவார். அந்த வகையில் இன்றைய வழிபாட்டில் பகுத்தறிவில்லாமல் செய்யப்படும் வழிபாட்டுச் சடங்குகளை, அறத்துக்குப் புறம்பான மனிதச் செயல்பாடுகளை எடுத்துரைத்து. சீரிய சிந்தைக்கு மருந்தாகவும் திகழும் இந்த நூலோடு சேர்த்து 55 நூல்களை ஆக்கியளித்த பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் அவர்களை ஆன்மிகப் பெரியார் என்று போற்றுதலும் தகும்.

இன்று கல்லூரிகளில் மதிப்பீட்டுக் கல்வி (Value Education) என்ற பாடத்தைப் பாடத்திட்டத்தில் வைத்திருக்கிறார்கள் ஆனால் சமூக விழுமியங்களை அவர்கள் கற்றார்களா? அல்லது கல்விக்கூடங்கள் கற்பிக்கின்றனவா? என்பது கேள்விக்குரிய ஒன்றாக இருந்துவரும் நிலையில் இதுபோன்ற நூல்கள் தன்னார்வத்தோடு தேடிப் படிப்பவர்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடும். என்ற நம்பிக்கையை இந்நூல் ஏற்படுத்துகிறது. சான்றோர் பெருமக்கள் இந்நூற்திறம் குறித்து மிகச்சிறத்த அணிந்துரை வழங்கியுள்ளனர். ஜோதி பதிப்பகத்தார் இந்நூலை மிகுந்த அக்கறையோடு வெளியிட்டிருக்கின்றனர். அவர்களின் பணியும் போற்றுதலுக்குரியது.

பொய் வீட்டு

வாழ்வில்

சூரியன் சுடும்

மழை நனைக்கும்

காற்று சூறையாடும்

அந்தரங்கம்

வேடிக்கைப் பொருளாகும்

முடிவில்

மெய் வீடு

கதவடைக்கும்.

 

                        வணக்கத்துடன்

 

- ச. நீலமேகன்

29.10.2025

கருத்துகள் இல்லை: