வியாழன், 7 டிசம்பர், 2023

அன்பு என்றுதான் பெயர்...

நீ
பணிமுடிந்து
உறங்கும் வேளையில்

வீரியமற்ற விஷயத்துக்காக
உரக்கப் பேசும்
அப்பா...

காதருகே
காரோட்டி
விளையாடும்
உன் பிள்ளை...

பக்கத்துக் குடியிருப்பில்
தொலைக்காட்சிப்
பெட்டியிலிருந்து
கசியும்
அரசியல் விவாத
அநாகரிகம்...

வேளையற்ற வேளையில்
இங்கிதமில்லாதவர்களின்
அழைப்புக்குச்
சத்தமிடும்
உன் செல்போன்...

நான்
தண்ணீர் குடிக்க
குவளை எடுக்கையில்
தவறிவிழுந்து
தாளம்போடும்
தட்டு...

இதில் எதையுமே
தடுக்க முடியாமல் தவித்து
அசதியில் உறங்கும்
உனக்குப் போர்வை
போர்த்திவிட்டுப் போகிறேன்...

நீ எழுந்தவுடன்
என்னை...
"எருமைமாடு எப்படி
தூங்குதுபார்" என்னும்
அதட்டலுக்கும்
அன்பு என்றுதான் பெயர்.

_ ச. நீலமேகன்.






கருத்துகள் இல்லை: