பல்லாயிரம் முறை
ஸ்ரீ ராமஜெயம் எழுதியிருப்பாள்
திருப்பதியில் வரிசையில்
காத்திருந்து
முடி காணிக்கை தந்தாள்
தெருமுனையைக் கடக்கும்போதெல்லாம்
சிவசிவா எனக்
கன்னத்தில் போட்டுக்கொண்டு
இறைஞ்சி வேண்டினாள்
போதாக்குறைக்கு
அவன் பிள்ளை
முருகனிடமும்
கோரிக்கை வைத்தாள்
மாரியம்மனுக்கு
வேப்பஞ்சாலை சுற்றி
அபயமளிப்பாள்
அவளெனக் காத்திருந்தாள்
தெய்வ குத்தமாயிருக்குமோ
எனப் பயந்து
குலதெய்வத்திற்குப்
பொங்கல் வைத்தாள்
தேவாலயத்தைக் கடக்கும்போது
ஏசப்பா என மனம் உருகி
அழைத்தாள்
மசூதியைக் கடக்கும்போதுகூட
கன்னத்தில் போட்டுக்கொண்டாள்
காத்திருந்து காத்திருந்து
கடைசியில்
அவளே கடவுளானாள்
ஆதியில் கடவுளர்கள் புதைக்கப்பட்ட
அதே இடத்தில்
அவளையும் புதைத்தேன்
அவள் கருப்பையில்
வளர்ந்த புற்றுக்குப் பாலூற்றினேன்.
- ச. நீலமேகன்