திங்கள், 22 நவம்பர், 2021

கடித இலக்கியம்


தம்பிக்கு.....

16.10.2021

சாரல்நாடு

 

அன்புள்ள தம்பிக்கு…

 

 அண்ணன் எழுதியது. என் நலன் பற்றி விசாரித்ததோடு வீட்டுக்குக்கூரையின் நலன் பற்றியும் விசாரித்திருந்தாய், மந்தை மந்தையாக குரங்குகள் கூரையின்மீது நடந்துசெல்வதாலும் சில நேரங்களில் குரங்குகளுக்கிடையில் கூரைமீது வாலி சுக்ரீவன் சண்டை நடப்பதாலும் மேற்கூரையின் ஓடுகள் சரிந்தும் உடைந்தும் கிடக்கின்றன. கூரை ஓட்டைகளில் வெயில் நேரத்தில் சூரியன் சிரிப்பதைப் பார்க்கமுடிகிறது. அந்த ஏளனச் சிரிப்பைக்கூட என்னால் தாங்கிக்கொள்ள முடிகிறது. மழை பெய்யும்போது கூரை அழுது தொலைப்பதைத்தான் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

 

கூரை ஒழுகுகிறதென்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தால் சரியாகிவிடுமா? ஒழுங்குபடுத்த வேண்டாமா? குரங்குகளைக்கூப்பிட்டு நஷ்டஈடா கேட்கமுடிம்? என்று நீ கேட்ட கேள்வி என்னைப் புண்படுத்தவில்லை. பிரச்சனைக்குத் தீர்வு வெறும் பேச்சல்ல செயல் என்ற உன் சிந்தனை என்னைப் பெருமிதப்படவைத்தது.

 

இரண்டுநாட்களுக்கு முன்புகூட குழாய் இணைப்பில் தண்ணீர் சரியாக வரவில்லை, தண்ணீர் வரவில்லையே என்று நான் புலம்பிக்கொண்டிருக்கவில்லை யாரை அழைப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கவில்லை. நான் கருவிகளை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வமுள்ளவன் என்பது உனக்குத்தெரியும்.

 

அது மனிதர்களைப்போல இதைச் செய்வதால் நமக்கென்ன லாபம் என்று எண்ணுவதில்லை. அது எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்குத் துணைநிற்கும். எனவே நம்மிடமிருந்த கருவிகளைப் பயன்படுத்தி அந்தக் குழாயைக் கழற்றிப்பார்த்ததில் காய்ந்த பாசிப்படலம் அடைத்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். அதை எடுத்துப்போட்டுவிட்டு குழாயைப் பழையபடி பொருத்திவிட்டேன். தற்போது தண்ணீர் தடையின்றி வருகிறது.

 

இதை எதற்குச் சொல்கிறேனென்றால் வீட்டுக்கூரையைச் சரிசெய்ய நான் முயற்சிக்கும்போதெல்லாம் நம் தந்தை தடைசெய்துகொண்டே இருக்கிறார். என் முயற்சிகளையோ எண்ணங்களையோ சிறிதும் மதிப்பதில்லை. போனமுறை பழுதுபார்த்தபோது கூரையினிடையே வெளிச்சத்திற்காக வைத்திருந்த கண்ணாடியின் சிமெண்ட் பூச்சு பெயர்த்துக்கொண்டது அதை முழுவதுமாக நீக்கிவிட்டு மீண்டும் பூசவேண்டும் என்று எவ்வளவோ மன்றாடினேன். ஆனால் நம் தந்தை மனமிரங்கவில்லை அதன் விளைவு மழை பெய்யும்போதெல்லாம் அந்தக் கண்ணாடி வழியாக தண்ணீர் இறங்குகிறது.  

 

நான் அரும்பாடுபட்டு சேகரித்த என் பழைய புத்தகங்கள் நனைந்து பூஞ்சை பூக்கிறது. உனக்கு புத்தகங்களின்மீது பற்றில்லாமல் இருக்கலாம் ஆனால் எனக்கு அப்படியல்ல அவற்றை நான் பாடிக்கிற காலத்தில் உணவைப்பற்றிக் கவலைப்படாமல் இலக்கியத்தின் இனிமை கருதியும் அதிலுள்ள கருத்துக்களைப்படித்து நாலுபேருக்குச் சொன்னால் நன்மை விளையுமே என்றும் கருதி வயிற்றுக்குச் சமாதானம் சொல்லிவிட்டு வாங்கியவை அவை. அவையெல்லாம் நைந்து கிழிந்துபோன நிலையில் இருந்தாலும் மதிக்கத்தக்கவை. நீ சிறுவதில் பள்ளிக்கூடத்தில் படித்திருப்பாயே “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே” என்று அதைப்போலத்தான் அந்த கிழிந்து நைந்துபோன புத்தகங்கள். எனவே மழைபெய்யும்போதெல்லாம் மழைநீர் கசியும் இடத்திற்கு நேராக பாத்திரம்வைத்துப் பிடிப்பது எனக்கு வாடிக்கையாகிவிட்டது.

 

செயலூக்கமற்றவர்களிடையே பதவியும் அதிகாரமும் கிடைக்கும்போது கூடவே நான் என்னும் அகந்தையும் சேர்ந்துகொள்ளும்போது அவர்களை நாடி வாழவேண்டியவர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாகிவிடுகிறது. நான் ஏதோ நம் தந்தையை கடிந்துபேசுவதாக தவறாக எண்ணிவிடாதே நான் உலகத்து இயல்பைச் சொன்னேன்.

அதுமட்டுமல்ல ஊருக்கு நடுவே உத்தமர்களாகவும், திரை மறைவில் பேராசையும் நல்லெண்ணமும் அற்றவர்களாக வாழ்கின்ற மனிதர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் புற்றுநோய்க்கு நிகரானவர்கள் அப்படிப்பட்ட மனிதர்களை இனங்கண்டு அறவே ஒதுங்கிவிடவேண்டும். அவர்கள் நச்சுப்பாம்பைப் போன்றவர்கள். அவர்களை இனங்கண்டு எச்சரிக்கையாய் இருந்து பிழைத்துக்கொள்.

 

தவிர நம் அக்கா வீட்டுக்கூரையைப்பற்றி நீ கேட்டதைப்போல வீட்டுக்கு வெள்ளையடிப்பதைப்பற்றி என்னிடம் அடிக்கடி இப்படித்தான் கேட்கிறாள். “வெள்ளையடித்து எத்தனை ஆண்டுகளாகின்றன துப்புகெட்டவனே” என்று. ஆனால், மேற்கூரையைச் சரிசெய்யாமல் வீட்டுக்கு வெள்ளையடிப்பது என்பது அடுப்பை அப்புறம் பற்றவைத்துக்கொள்ளலாம் உலையில் அரிசியைப்போடு என்று சொல்வதைப்போல இருக்கிறது.

 

தானாக எதுவும் மாறாது என்பதை நான் அறிவேன். நிலைமையை மாற்ற உன் துணை அவசியம் தேவை. அதுவரை இவற்றை எல்லாம் நினைத்தபடி தனிமையில் இருக்கும் எனக்கு அம்மா வாழ்ந்த காலத்தில் நூலிழைத்த கணக்கை குறித்துவைத்த சுண்ணாம்புபோன சுவரும்,  கரிக்கோடுகளும் துணையாகும்.

 

செய்கின்ற தொழிலில் திறமையும் புதிய தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ளும் ஆர்வமும் உடையவன் என்பதை அறிவேன். அதுதான் நீ பணிசெய்யும் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கும் சமூகத்திற்கும் பயன்படும். 

 

உனக்குச் சொல்லைவிட செயல்தான் பிடிக்கும் அதனால் நான் அதிகம் எழுத விரும்பவில்லை. உன்னைப்பார்த்து நீண்டநாளாகிவிட்டது ஒருமுறை ஊருக்கு வந்துவிட்டுப்போ. வேளைக்குச் சாப்பிடு என்று அம்மாவின் சார்பில் உன்னைக் கேட்டுக்கொள்கிறேன். வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.

 

இப்படிக்கு,

 

உன் அன்பில் உயிர்த்திருக்கும்

 

சாரல்நாடன்

16-10-2021

ஒரு பேட்டி...