திங்கள், 21 பிப்ரவரி, 2022

இன்று வாழ்ந்தால் என்ன?

    ன்றைக் கேட்டால்
நாளை என்கிறாய்
நாளைக்கு
இன்று நேற்றாகிவிடாதா?
அப்புறம்
நேற்றைக்குப்போய்
எப்படி இன்றைத் தேடுவது?
 
இன்றைக்கு
நாளை கிடைக்குமா?
அப்புறம்
நாளைக்குமட்டும்
எப்படி இன்று கிடைக்கும்
சொல்வதற்கென்ன...
     நேற்றைக்குக்கூட
இன்று கிடைக்கவில்லை
 
இன்று இன்றாகவே இருக்கட்டும்
நேற்றைப்பற்றி
இன்றுக்குத் தெரியும்
இன்றைப்பற்றி
நாளைக்குத் தெரியும்
நாளையைப்பற்றி
யாருக்குத் தெரியும்?

நேற்றும் நாளையும்
இப்படி இருக்கையில்
இன்றுவாழ்ந்தால் என்ன?
 
-          நீலமேகன்

சனி, 12 பிப்ரவரி, 2022

ஹைக்கூ

பணக்காரன் வீட்டில் மட்டுமே
குட்டிபோடுகிறது
வட்டி

- நீலமேகன்

ஹைக்கூ

வழக்கம்போல தாய்வீட்டுக்கு
அழுதுகொண்டே வந்தது
மழை

- நீலமேகன்.

ஹைக்கூ

கைதட்டிய உற்சாகமோ!
காதருகே பாடுகிறது மீண்டும்
கொசு

- நீலமேகன்.

ஹைக்கூ

அகப்பட்ட கொலுசுக்குள்
துடிக்கிறது
இழந்தவள் இதயம்

- நீலமேகன்

ஹைக்கூ

எரியும் முள்
எப்படி எடுக்கட்டும்?
சேலையை

- நீலமேகன்.

எப்போது சுமப்பாள்?



ஆலங்கன்றை 
இடுப்பில் சுமக்கும் 
பனை பார்க்கிறேன்
தன் பிள்ளையை 
எப்போது சுமப்பாள் 
அக்கா....?!

- நீலமேகன்.

நினைவு மாடுகள்


ஸ்தம்பித்துப்போன வாழ்க்கை
அசைபோடும் 
நினைவு மாடுகள்

- நீலமேகன்

வியாழன், 10 பிப்ரவரி, 2022

படையல்

அன்புத் தம்பிக்கு...
இன்று மாலை
அம்மா இறந்துவிட்டாள்
பதற்றமில்லாமல் வா
படையல்போட
இன்று
பத்தாவது
நினைவுநாள்.

- நீலமேகன்