ஞாயிறு, 15 ஜனவரி, 2017

தனிமை

எல்லோரும் சொல்கிறார்கள்
நான் தனியாகக் கிடக்கிறேன்
என்று.

கொத்திப் பிடுங்கும்
கொசுக்கள்

ஈ என்று இரக்காமல்
தானாக உண்ணும் ஈக்கள்

சுற்றித் திரிந்தாலும்
வரிசையாய் செல்லும்
சிற்றெறும்புகள்

புத்தகம் சுவைக்கும்
பூச்சிகள்

எல்லா மூலையிலும்
எட்டுக்கால் பூச்சிகள்

படுக்கையில் உலவும்
பாசிகள்

சுவற்றில்
ஊரும் பல்லிகள்

கூடுகட்டும்
குளவிகள்

எப்போதாவது வந்துபோகும்
தேன்சிட்டு

இன்னும்
எனக்கே தெரியாமல்
என்னோடு வாழ்வது
எத்தனையோ?

ஒன்று தெரியுமா
உங்களுக்கு?

தலைமுறை பல
கண்டவன் நான்!

குட்டிபல்லியாய் இருந்ததெல்லாம்
இப்போது குட்டி போட்டுவிட்டன

எட்டுக்கால் பூச்சிக்குப்
பிள்ளைகள் ஏராளம்

கொசுக்களுக்கு ஏது?
குழந்தைக்கு பஞ்சம்

எறும்புகள் மட்டும் என்ன
ஏமாந்ததா?
எங்கு பார்த்தாலும்
அவர்கள் பிள்ளைகள்தான்

குளவிகள் பிரசவித்துப்போனதை
கூடுகள் காட்டும்

யாராவது சொல்லுங்கள்
தனியாக வாழ முடியுமா?

என்வீட்டில் எல்லா நாளும்
பொங்கல்தான்
பொங்கித்தானே ஆகவேண்டும்
கூட்டாஞ்சோற்றை.

1 கருத்து:

முனைவர் ச.இரமேஷ் சொன்னது…

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே அது உண்டாம்.என்பதற்கோர் காட்டு இக்கவிதை.புலம்பே தனிமை என்கிறது தொல்காப்பியம்.தனிமையில் இருப்பவன்தான் தரணியை உற்றுக்கவணிக்கிறான்.உற்றுக்கவணிப்பவன்தான் உன்னதக்கவிதைகளை எழுதுகிறான்.மனிதனோடு மனிதன் இருந்தால்தான் துணை என்கிறது உலகம்.மனிதவுயிரோடு பிற உயிர்கள் இருந்தால் அது எப்படி தனிமையாகும்?எனக்கேட்கிறது இக்கவிதை!ஆன்ம ஒருமைப்பாடு இதுதானே?எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணுகிற எழுத்து இது!வள்ளலாரை வாசித்தவன் வேறெப்படி எழுதமுடியும்?இக்கவிதை உலகத்தில் தனிமையில் உள்ளவருக்கெல்லாம் பொருந்தும்.இதுமாத்திரம் இங்கிலீஷில் இருந்திருந்தால் எடுத்துச்சொல்ல நாலுபேர் இருந்தால் உலகத்தரமானது என உலகம் போற்றியிருக்கும் என உளமாற எண்ணுகிறேன்.தனிமையில் இருக்கிறாய் என்று அடிக்கடி கடிப்பவர்களைக் கொசுக்கள் என்கிறாரோ அல்லது அறையில் உள்ள கொசுக்களைத்தான் கூறுகிறாரோ?படைத்தவனே அறிவான்.மனித சீவியத்திற்குச் சற்றும் குறையாதது பிற உயிர்களின் சீவியம்.அவை கலவி செய்கின்றன என்றாலும் கவிதை செய்வதில்லை!தனித்திருப்பவனின் அகக்கண்கள் விழித்திருக்கின்றன போலும்!இன்னும் இரண்டு நாளைக்கு அசைபோட ஒரு கவிதைஙகிடைத்துவிட்டது எனக்கு!