நீட்
விதிகள் வகுக்கப்படுவதே
மனிதன் வாழ்வதற்காகத்தான்...
வீழ்வதற்காக ஒரு விதி
வகுக்கப்படுமானால்
அது விதியல்ல
வீணர்கள் செய்யும் சதி
விடை சொல்லிவிடக்கூடாது
என்பதற்காகவே
கேட்கப்படும்
வினாக்களால் என்ன லாபம்?
இந்த தேசத்தில்
வித்தையைக் கற்றுத்தராமலேயே?
ஆண்டுக்கொருதரம்
அரங்கேற்றம் மட்டுமே
நடந்தப்படுகிறது.
தப்பித்தவறி
ஏகலைவர்கள் சிலராவதுவந்தால்
கட்டை விரலை
காவுதரச் சொல்லுவது
என்ன கொடுமை?
இந்த அரங்கேற்று காதையே
அர்சுனர்களுக்குத்தான் என்றால்?
அதை அந்தப்புரத்தில்
வைத்துக்கொள்ளுங்கள்
பொதுவெளியில்
கர்ணர்களை காயப்படுத்துவது
என்ன கண்ணியம்?
இங்கு விதைக்கிறோம்
என்ற பெயரில்
அளவுக்குமீறி
ஆழப் புதைக்கப்பட்ட
விதைகள்
அடையாளம் தெரியாமல்
அடக்கம் செய்யப்படுகின்றன.
பாலைவனத்தில்
போராடி வளர்ந்த விதைகளிடம்
சோலைவனத்தின்
சுகங்களைப்பற்றி
விரிவான விடைஎழுதச்சொல்வது
என்ன நியாயம்?
சமபந்தி விருந்து
நம் தேசத்தில்
சாத்தியப்படாமல்
இருக்கும்போது
சத்தான பிள்ளைகளோடு
சவலைப் பிள்ளைகளை
மோதவிடுவது
என்ன தர்மம்?
மனித அறிவை
மதிப்பெண்கள்தான்
தீர்மானிக்கும் என்றால்
முதலில் அந்தத் தேர்வை
அரசியல் வாதிகளுக்கு
நடத்துங்கள்