திங்கள், 30 செப்டம்பர், 2019

ஆயுதம்

என்னைப் பொறுத்தவரையில் எழுதுவது என்பது பொழுதுபோக்கல்ல மனதை ஒருநிலைப் படுத்தும் ஒரு வித தியானம் என்றே கருதுகிறேன்.

இக்கதை என் கல்லூரி காலங்களில் 15 ஆண்டுகளுக்கு முன் படைப்பிலக்கியப் பாடவேளைக்காக எழுதி நண்பர்களோடு பகிர்ந்துகொண்டது.

வீசி எறிய மனமில்லாமல் நான் சேர்த்துவைத்த காகிதங்களைப் புரட்டும்போது அகப்பட்டது இந்த ஒருபக்கக் கதை….

 

ஒருபக்கக் கதை

ஆயுதம்

-         ச. நீலமேகன்

 

இந்த சமுதாயம் இருக்கிறதே அது வாழ வழியற்றவர்களை; வலுவற்றவர்களைக் காயப்படுத்திப் பார்ப்பதில்தான் எவ்வளவு சந்தோஷம் காண்கிறது. ஆனால் அக்கிரமம் செய்பவன் வலுத்தவனாக இருந்தால் தட்டிக்கேட்கத் துப்பில்லாமல் நமக்கேன் வம்பென்று ஒளிந்துகொள்கிறது.

இந்தச் சமூகத்தில் தன்னோட வாழ்க்கையை ரசிக்கத் தெரியாதவர்கள் தான் அடுத்தவர் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுப் பார்க்கத் துடியாய்த் துடிக்கின்றனர். இவர்களுக்குத் தன் வாழ்க்கையை வாழ நேரமிருந்திருந்தால் அடுத்தவர் வாழ்க்கையை விமர்சிக்க நேரமேது.

புருஷன் மணல் லாரியில அடிபட்டு செத்துட்டா அதுக்கு இந்த பார்வதி என்ன செய்வாள் பாவம். 

ஆனா அவ மாமியார் “இவள கட்டியாந்த நேரந்தான் எம் புள்ளைய எமங்கொண்டுபோயிட்டான்” என எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பாள்.

பார்வதியோட புருஷன் செத்தவுடனேயே ஊரு உறவு எல்லாமா சேந்து அவளுக்கு ஏதோ பெரிய உபகாரம் செய்யறதா நெனச்சிக்கிட்டு தாலிய அறுத்து, பூவு பொட்டெல்லாம் அழிச்சி கேவலப்படுத்தி ஒன்னுகூடி சோறுதின்னுட்டு போச்சே தவிர, யாராவது அவ ரெண்டு பொண் குழந்தைகள வெச்சுகிட்டு எப்படி கஷ்டப்படப் போறாளோன்னு நெனச்சி வாழ வழிசொல்லிட்டா போச்சி.

கணவனை இழந்த இந்த ஓராண்டு கால வாழ்வில் பார்வதி, தான் வீதியில் நடந்துபோவதை எதிர்ல வரவங்க சகுனத்தடையா நெனக்கிறதையும், சிலபேர் தன்னைப் பார்க்கிற பார்வையே சரியில்லங்கிறதையும், புருஷனை இழந்த பொண்ணுக்கு இந்த சமூகம் தர மதிப்பு என்னங்கிறதையும் ரொம்ப நல்லாவே உணர்ந்திருந்தாள்.

நீண்ட யோசனைக்குப்பிறகு ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தாள். அவளுக்கு இதுதான்… இது ஒன்றுதான் சரி என்று பட்டது.

“தன்னை ஒரு பொருட்டாக நினைக்காத சமூகத்தை நாம் ஏன் எண்ணி பயப்பட வேண்டும். இந்த சமுகம் என்ன சந்தனக் காடா? எல்லா இடங்களிலும் மணம் வீச. எத்தனை சாக்கடைகள் சந்தன வாசத்தில் ஓடித்திரிகின்றன.

நம்மை நாமே ஏன் காட்டிக் கொடுத்துக்கணும். நானொரு விதவை எனக்குப் பாதுகாப்புக்கு யாருமே இல்லைன்னு!, அதனாலத்தானே மனித உருவெடுத்த மிருகங்கள் இவ தனக்கு எப்ப இரையாவான்னு காத்துக்கிடக்கு.

இந்த சமுதாயத்துக்கிட்ட இருந்து நம்மைப் பாதுகாத்துக்க சில அடையாளங்கள் ஆயுதமா பயன்படும்னா அத ஏன் இந்த ஊருக்காக பயத்துக்கிட்டு அத பூட்டி வைக்கணும்.

ஆமா ஒரு பொண்ணுக்கு இவ யாருமில்லாதவன்னு காட்டிக்கொடுக்கிறது இந்த பொட்டு, பூ, தாலி, மெட்டி இதெல்லாந்தான்னா இத ஏன் நாம உதரித்தள்ளணும், ஒளிச்சு வைக்கணும்?...” என ஆழ்ந்த யோசனையில் இருந்தாள்.

சீதையைச் சிதையில் இறக்கிப் பார்த்த சமூகம். சிந்தையில் திருந்த இன்னும் பல யுகங்கள் ஆகாதா என்ன?. அதற்காக இவள் தினந்தினம் தீக்குளிக்கத் தயாராயில்லை, ஊர் ஆயிரம் சொல்லட்டுமே… பார்வதி வெளியூருக்கு வேலைக்குப் போய் வருகிறாள் தாலி, பொட்டு, மெட்டி, வளையல், பூ என்ற ஆயுதங்களைத் தரித்துக்கொண்டுதான்.

வீதியில் நடந்துபோகிறாள்.

“கட்டுக்கழுத்தி எதிரில் வருகிறாள் நல்ல சகுனம்” எனக் கூறியபடி புது மணத் தம்பதிகளைக் காரில் ஏற்றி வழியனுப்புகிறாள், நதி மூலம் ரிஷி மூலம் தெரியாத ஒரு பழைய பஞ்சாங்கம்.  

இப்போதெல்லாம் இரைதேடி அலையும் கண்களுக்கு அவள் இறையாகத் தோன்றுகிறாள்.

இன்று அவள் கம்பெனியில் ஏதோ விஷேஷம் போல இருக்கு குத்துவிளக்கு ஏற்றுகிறாள் பார்வதி, அந்த விளக்குதான் எவ்வளவு பிரகாசமாய் எரிகிறது.

பக்கத்தில் நின்ற பெண்ணொருத்தி அவளைப் பார்த்து உலகம் கேட்கும் வழக்கமான கேள்வியை கேட்கிறாள்… “உங்க வீட்டுக்காரர் எங்க வேலை செய்யறார்”.

சற்றும் யோசிக்காமல் பதில் சொல்கிறாள் பார்வதி “ராணுவத்தில்”.

 

 

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

பாரதி பாட்டு

ஒரு பக்கக் கதை

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் மார்க்ஸிய, பெரியாரியக் கருத்துக்களை நண்பர்களோடு சேர்ந்து ஆர்வத்தோடு வாசிப்போம் அதன் தாக்கத்தால், எங்களுக்குப் பாடமாக இருந்த படைப்பிலக்கியப் பாடத்திற்காக எழுதிய ஒரு குட்டிக்கதை….

பாரதி பாட்டு

“எனக்கு பொழுதுபோற நேரத்துல இந்த ராமுவ தேடுறதே வேலையா போச்சு… பொழுதோட அவன புடிச்சு சங்கிலில கட்டிப்போடுங்கன்னு சொன்னா அத யாராவது கேட்டாத்தானே….. இப்ப நாந்தான் தெருத்தெருவாக அலையவேண்டி இருக்கு…

எப்பவும் இந்தத் தெருக்கோடியிலதான் சுத்திக்கிட்டு இருப்பான் இன்னைக்கு இவ்வளவு நேரம் தேடியும் அவன காணலயே!.

யாராவது புதுசா கேர்ள் ஃப்ரெண்ட் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கானா!?

ஏன் அவன் சுத்தக்கூடாதா!? சுத்தனாத்தான் என்ன தப்பு?! நாங்கபோட்ட சோத்த தின்னுட்டு எங்க வீட்டு வாசலையே சுத்திசுத்தி வந்தாலும் அவனுக்குன்னு உணர்ச்சிகளே இருக்காதா என்ன?!....... இவன் என்ன ஊர் ஒலகத்துக்காக வேஷம் போட்டு திரியற மனிஷ ஜென்மமா என்ன?

அட இந்த ராமுவ பாத்தியா!…. தனியா இருக்கற அந்த  ஒத்த வீட்டுக் கந்தசாமி வாத்தியார் வீட்டுத் திண்ணையில காலதூக்கி ஒன்னுக்கு அடிச்சிட்டு, அங்க என்ன சுத்திசுத்தி வந்து மோந்து பாத்துக்கிட்டு இருக்கான்.

டேய் ராமு இங்க என்ன பண்ணிகிட்டு…. தெனமும் உன்னைத் தேடுறதே வேலையா போச்சு” என மனசுக்குள் புலம்பிக்கொண்டே, சுற்றி அலைந்ததில் கால் வலியெடுக்கவே கந்தசாமி நாயுடு வீட்டுத் திண்ணையில்  போய் உட்கார்ந்தேன். ராமு வாலை பலமாக ஆட்டிக்கொண்டு முன்னங்காலை தூக்கிக்கொண்டு மேலே உரசிக்கொண்டு வந்தது.

வீட்டுக்குள் பெண்ணின் அலரல் சத்தம்….

“என்ன தைரியம் இருந்தா எங்கிட்டயே பயமில்லாமல் சொல்லுவ….”.

“அவளை விட்டுடுங்க அடிக்காதீங்க……”

“எல்லாம் நீ கொடுத்த செல்லந்தான்டி… எவ்வளவு திமிர் இருந்தா அந்த முதலியார் பையனைக் காதலிக்கிறேன்னு எங்கிட்டயே சொல்லுவா! மொளச்சு மூனு எல விடல, இதுக்கெல்லாம் காதல் கேக்குது!...”

“முடிய விடுங்க அவள அடிக்காதீங்க..”

“இவ சொல்ற மாதிரி இவ இஷ்டத்துக்குக் கல்யாணம் பண்ணி வெச்சா என்னால ஊர்ல தலைகாட்ட முடியாது. ஜாதி விட்டு ஜாதி இவளுக்குக் காதல் கேக்குது…. அந்த முதலியார் வீட்டுப் பையன் ரொம்ப நல்லவனாம் அன்பா பாத்துக்குவானாம். வெக்கங்கெட்ட கழுத… படிச்ச பையனா வேலைக்கு போறவனா மட்டும் இருந்துட்டா போதுமா?! குலம் கோத்திரம் ஒன்னும் பாக்க வேணாம்?!. இந்த ஊர் என்ன சொல்லும்?! என்ன எவனாவது மதிப்பானா? இங்க பாரு இன்னொருதடவ அவனைப் பத்தி பேசினையோ உன்ன வெட்டி பொதச்சிடுவேன் ஞாபகம் இருக்கட்டும்”

இந்த கந்தசாமிநாயுடு வாத்தியார் பொண்ணு முருகேச முதலியார் பையன லவ் பண்றா போல இருக்கு!

சரி நாம வீட்டுக்கு கிளம்புவோம் அப்புறம் என்னத் தேடி யாராவது சுத்த ஆரம்பிச்சிடப் போறாங்க….

“ஏய் ராமு…. வா!”

காலையில பத்து மணி இருக்கும் அந்தப் பள்ளிக்கூடம் பக்கமா போறேன்……

“சாதிகள் இல்லையடி பாப்பா

குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” எங்க எல்லாரும் திருப்பி சொல்லுங்க..

 

மரத்தடியில் பாடங்கேட்டுக்கொண்டிருந்த பிள்ளைகள் திருப்பிச் சொல்லின..

“சாதிகள் இல்லையடி பாப்பா

குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்று.

 

பாடம் நடத்திக்கொண்டிருப்பது யார் என்று கவனித்தேன்….அட  கந்தசாமி நாயுடு!

பாரதியார் பாட்டு பாடம்நடத்துறதுக்கு மட்டும்தான் போல இருக்கு. இந்த பாரதியார் பாட்டு இந்த வாத்தியாருக்கே விளங்கல…அந்த குழந்தைகளுக்கு எங்க விளங்கிட போவுது என மனசுக்குள் நினைத்துக்கொண்டே திரும்பிப் பார்க்கிறேன்..

இந்த ராமு… மேரி விட்டு ரோஸி நாயோடு விளையாடிக்கொண்டிருந்தது.

 

-          ச. நீலமேகன்.