திங்கள், 10 பிப்ரவரி, 2020

ஆதலால்……

ஆதலால்……

கொஞ்சநேரம்
உன் குழந்தையை
நான் தூக்கிவைத்து
கொஞ்சி விளையாடிக்கொள்கிறேன்

நிச்சயம்
என்னால் உன் குழந்தையோ
உன் குழந்தையால் நானோ
மகிழக்கூடும்

எதிர்பாராமல் சிலபேர்
உன் குழந்தையை
என் குழந்தையா
என
உசாவக்கூடும்

அப்போதெல்லாம்
உன் பெயரை
உற்சாகமாய் சொல்லுவேன்

ஓடி விளையாடி
ஓய்ந்தபின்
சொந்தக் குழந்தையை
சிருஷ்டிப்பதைக் குறித்து
நானும் எண்ணுவேன்

நிச்சயம்
நீயும் ஒருநாள்
என் குழந்தையைத் தூக்கிக்
கொஞ்சக்கூடும்

விளையாடத் துணையின்றி
ஏங்கி நிற்காமல்
அவைகள்
அப்போது
எக்காளமிட்டோடும்
பூமிப்பந்தைப் புரட்டி 
விளையாடும்

ஆதலால்…

கொஞ்சநேரம்
படிக்கத்தாயேன்...!
உன் கவிதைப் புத்தகத்தை…!

-          ச. நீலமேகன்.

1 கருத்து:

முனைவர் ச.இரமேஷ் சொன்னது…

குழந்தையைக் கவிதைப்புத்தகம் என்றது அற்புதம்!விளையாடத்துணையின்றி குழந்தை ஏங்குமென்றா குழந்தையைச் சிருஷ்டிக்க விரும்புகிறீர்கள்? (நகை) உங்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் நிச்சயம் பூமிப்பந்தைப் புரட்டும்!