வியாழன், 7 டிசம்பர், 2023

அன்பு என்றுதான் பெயர்...

நீ
பணிமுடிந்து
உறங்கும் வேளையில்

வீரியமற்ற விஷயத்துக்காக
உரக்கப் பேசும்
அப்பா...

காதருகே
காரோட்டி
விளையாடும்
உன் பிள்ளை...

பக்கத்துக் குடியிருப்பில்
தொலைக்காட்சிப்
பெட்டியிலிருந்து
கசியும்
அரசியல் விவாத
அநாகரிகம்...

வேளையற்ற வேளையில்
இங்கிதமில்லாதவர்களின்
அழைப்புக்குச்
சத்தமிடும்
உன் செல்போன்...

நான்
தண்ணீர் குடிக்க
குவளை எடுக்கையில்
தவறிவிழுந்து
தாளம்போடும்
தட்டு...

இதில் எதையுமே
தடுக்க முடியாமல் தவித்து
அசதியில் உறங்கும்
உனக்குப் போர்வை
போர்த்திவிட்டுப் போகிறேன்...

நீ எழுந்தவுடன்
என்னை...
"எருமைமாடு எப்படி
தூங்குதுபார்" என்னும்
அதட்டலுக்கும்
அன்பு என்றுதான் பெயர்.

_ ச. நீலமேகன்.






புதன், 6 டிசம்பர், 2023

சாமியாடி

சாமியாடி...

இன்ப மழை
அதிகம் பெய்தல்
துன்ப வெள்ளம்
சூழ்ந்துகொள்ளும்
மூழ்கி முடிந்தபின்னே
பேதை மனம்
வடிகால் தேடும்
முன்னைச் செய்த வினை
வழி எங்கும் 
தடை அமைக்கும்
மனதைத் தூர்வாரி 
வைத்திருந்தால்
துன்பவெள்ளம்
சூழ்வதேது?
தோதான இடங்கிடைத்தால்
ஆசைக் குடிசையினை
அளவோடு அமைத்திடுவீர்
பேராசைப் பள்ளத்தில்
கோட்டைகளைக் கட்டுவதால்
போர் வெள்ள முற்றுகை
தீராத பகையாகும்

குளங்களைக் 
கொத்தித் தின்று
கால்வாய்களை
காவுகொடுத்து
ஏரிகளை ஏப்பம்
விட்டோம்

குளம்
குட்டை
கால்வாய்
ஏரி
என எதையும்
பலியிட மாட்டோம்
என நேர்த்திக்கடன்
செய்திட்டால்
இயற்கையன்னை
காத்திடுவாள்

அடுத்த மழைக்குள்ளே
கடனைக் கட்டிவிட
கங்கணத்தைக் கட்டிவிடு
மாறிவிட்டால்
மாரிவிடுவாள்
மாறாவிட்டால்
உருமாறி உருமாறி
மழைமாரி வருவாள்
துயரங்கள் தருவாள்.

ச. நீலமேகன்.
6.12.2023