திங்கள், 22 ஏப்ரல், 2013

புதுக்கவிதை வடிவங்கள்


சென்ரியு கவிதைகள்
ஹைக்கூ கவிதைகளுக்குச் சொல்லப்பட்ட இலக்கணங்களுள் ஒன்றைத் தவிர மற்றவை அனைத்தும் சென்ரியு கவிதைகளுக்கும் பொருந்தும். சென்ரியு கவிதைக்கான இலக்கணமாக கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்ஹைக்கூ இயற்கையைப் பாடும். சென்ரியு மனிதனைப் பாடும்.’  எனக் குறிப்பிடுகின்றார்.
புரட்சி மாநாடு
வாருங்கள் வாருங்கள்....
கோழி பிரியாணி

தேர்வு பயம்
இரவு முழுக்கப் படித்தான்....
கந்த சஷ்டி கவசம்

பூவா? தலையா?
பூ கேட்கிறாள்....
விதவை

அன்னையும் பிதாவும்
படித்துக்கொண்டிருக்கிறது.....
அனாதைக்குழந்தை
லிமரைக்கூ
ஹைக்கூ, சென்ரியுவின் இணைப்புதான் லிமரைக்கூ. ஆங்கிலத்தின் வேடிக்கை, வினோதம், நகைச்சுவை முதலிய உணர்வோடு 5 அடிகளில் அமையும் கவிதை வடிவமான லிமரிக்வடிவத்தையும்/உள்ளடக்கத்தையும், ஜப்பானிய ஹைக்கூவின் வடிவத்தையும் இணைத்து 3 அடிகள் கொண்டு லிமரைக்கூஎன்ற புதிய தமிழ்க் கவிதை வடிவத்தைத் தமிழில் ஆரம்பித்து வைத்தவர் ஈரோடு தமிழன்பன் அவர்கள். இவ்வடிவமே தமிழின் லிமரைக்கூ வடிவமாக அமைந்து விட்டது.(லிமரிக்கில் பயின்று வரும் இயைபுத் தொடையை 1 (முதல்) 3 (இறுதி) அடிகளில் இணைத்து)
தேன் நிரம்பி வழிந்தது
வண்ணத்துப்பூச்சி பறந்து சென்றது
பூ தலைக் கவிழ்ந்தது.
ஹைபுன்

ஹைபுன் என்பது கவித்துவமான ஒரு சிறிய கட்டுரை,  இது ஒரு கதையை அல்லது பின்னால் எழுதப்போகும் மூன்று வரிக்கவிதைக்கான கருவை முன்னால் உரைநடையில் விவரிக்கிறது. கட்டுரையின் இறுதியில் முத்திரை பதிக்கும் ஹைக்கூ ஒன்றும் அமையும். இக்கவிதை வடிவம்தான் தான் ஹைபுன் என்றழைக்கப்படுகிறது.

இன்றும் தாமதம் ஆகிவிட்டது. மணி பன்னிரண்டை தொட்டு விட்டது. தூக்கம் கண்களை மூடச் சொல்லி கெஞ்சின. ஆனால் கோடை கடைசியாக ஒருமுறை கம்பைல் செய்து பார்த்துவிட்டு க்லைன்ட்டுக்கு அனுப்பிவிட்டு தான் கிளம்ப முடியும. இன்று மட்டுமா ஒரு மாதமாக இதே கதைதான். காலையில் அவசர அவசரமாக எழுந்து, குளித்து, அயர்ன் செய்து வைத்த சட்டை பேன்ட்டுக்குள் நுழைந்து கொண்டு, வண்டியை ஸ்டாட் செய்து வெய்யில், வியர்வை, புகைக்கு நடுவே ட்டிராபிக்கில் பல சாகசங்கள் செய்து ஆஃபிஸ் வந்து சேரவேண்டும. அன்று செய்ய வேண்டிய வேலைப் பட்டியலில் இருந்து ஒவ்வொரு வேலையாக முடிக்க (நடிவில் பைசா பிரயோஜனம் இல்லாத மீட்டிங் வேறு) இரவு ஆகிவிடுகிறது. கிளம்பும் நேரத்தில் கிலைன்ட்டி டமிருந்து நல்ல சேதி வரும் அனுப்பிய சாஃப்ட்வேரில் பழுது என்று. என்ன பிழை என்று கண்டு பிடித்து சரிசெய்து அனுப்ப இரவு ஆகிவிடுகிறது. வாழ்க்கையே இயந்திரத்தனமாக ஆகிக்கொண்டு இருக்கிறது. ஒரு நல்ல சினிமா பார்த்து எவ்வளவு நாள் ஆகிறது ? அக்கா பிறந்த நாள் பரிசாக அனுப்பிய அந்த கவிதைப் புத்தகம் இன்னும் பிரித்து கூட பார்க்கவில்லை.
. . .
ஒருவழியாக இன்று வேலை முடிந்தது. வெளியே வந்து வண்டியை ஸ்டாட் செய்து கிளம்பினேன். தாமதமாக வீட்டுக்குப் போவதில் ஒரு சந்தோசம் போக்குவரத்து நெரிசல் இருக்காது. வேகமாகக் கடந்து செல்லும் ஒன்றிரண்டு லாரிகளைத்தவிர இன்று வேறெதும் வாகனங்கள் இல்லை. என் வண்டியின் ஓசை தவிர சாலை நிசப்தமாக இருந்தது. பனிக்காற்றில் உடல் லேசாக நடுங்கியது. சட்டென்று ஒரு மழைத்துளி என் நெற்றியை முத்தமிட்டது. வண்டியை நிறுத்தலாமா என்று யோசிப்பதற்குள் மழை அதிகமாகி என் உடல் முழுவதும் நனைந்துவிட்டது. இயந்திரத்தனமான வாழ்க்கையில் இந்த மழை கொஞ்சம் கவிதை கொண்டுவந்து சேர்ப்பது போல் இருந்தது. நான் வண்டியை நிறுத்துவதில்லை என்று முடிவுசெய்தேன்.

என் பைக் விளக்கின்
வட்ட வெளிச்சத்துக்குள்
அடர்ந்த மழை
-எம். சுரேஷ்குமார்
கஸல் கவிதைகள்
கஸல்அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம். கஸல்என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள். கஸல் பெரும்பாலும் காதலையே பாடும்; அதுவும் காதலின் சோகத்தையே பாடும். சிறுபான்மை ஆன்மீகத்தையும் பாடும். கஸல் இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கண்ணிகளை இணைக்க வேண்டி இயைபுத் தொடை, யாப்புச் சந்தம் மேற்கண்ட மொழிகளில் பின்பற்றப்படும். இம்முறை தமிழ் கஸல் கவிதைகளில் பின்பற்றப்படுவதில்லை. பின்பற்றவும் வேண்டியதில்லை. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ போன்ற மேற்கத்திய வடிவங்களைத் தமிழ்மொழிக்கேற்ப மாற்றங்களைச் செய்து கொண்டது கஸலுக்கும் பொருந்தும். பேச்சு சந்தத்திற்காகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் அம்முறை தமிழில் தவிர்க்கப்படுகிறது. எனவே தமிழ் கஸல் புதுக்கவிதை வடிவில் காணப்படுவதால் புதுக்கவிதை ஆகி விடாது. தமிழில் முதலிரண்டு (மின்மினிகளால் ஒரு கடிதம், ரகசியப் பூ) கஸல் கவிதைத் தொகுதிகளைக் கவிக்கோ அப்துல் ரகுமான் படைத்துள்ளார்.
காதல் கவிதைகளைக்
கிறுக்கியவன் இறைவன்
அதன் அர்த்தம் புரியாததால்
கல்லறையில்
காதலர்கள்.
குறட்கூ
குறள் போல் காணப்படுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்களை எடுத்துரைக்கிறது. குறட்கூ இரண்டு அடிகளில் மொத்தம் நான்கே சீர்களில் (முதலடியில் இரண்டு சீர்கள் இரண்டாம் அடியில் இரண்டு சீர்கள்) கருத்துக்களை எடுத்துரைக்கிறது. இக் குறட்கூவும் பரிசோதனை முயற்சிகளில் ஒன்று. கவிஞர் தனிகைச்செல்வன்தான் தமிழின் முதல் குறட்கூவை ஆரம்பித்து வைத்தவராகக் கூறப்படுகிறார்.

சாதி ஒழிப்பு

வெவ்வேறு குவளை
ஒரே கல்லாப் பெட்டி

காவிரி கடக்க

ஓடம் தேவையில்லை
ஒட்டகம் போதும்.
சீர்க்கூக் கவிதைகள்
ஒன்றிரண்டு சீர்களில் கவிதை முடிந்துவிடுவதால் சீர்க்கூ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒன்றிரண்டு சீர்களில் கவிதை இயற்றுவதென்பது அவ்வளவு எளிதல்ல. வடிவத்திற்கேற்ப உள்ளடக்கத்தில் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கவிஞனின் கடமையாகிறது. கவிதையின் வடிவ சுருக்கத்தால் இருண்மை / கூடார்த்தம் ஒரு உத்தியாகி விட்டது. கவிதையின் தலைப்புக்கேற்பவே உள்ளடக்கத்தின் பொருளை வாசகர்கள் விரித்துரைத்துக் கொண்டால் இருண்மையைத் தவிர்க்க முடியும். கால வேகத்துக்கு இந்த வடிவத்தை நவீனக் கவிதை உலகம் வரவேற்கும் என நம்பலாம்.

விபச்சாரம்
தினமொரு கற்பு
கல்வி
முதலீடு
இலவசங்கள்
அரசியல்வாதிக்கு லாபம் 

கருத்துகள் இல்லை: