திங்கள், 28 செப்டம்பர், 2015

மரபுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்


மரபுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்


மரபுக் கவிதையின் வளர்ச்சியை வடிவம், பாடுபொருள் என்ற இரு நிலைகளில் பகுத்துக்காணலாம்.
உலகமொழிகளுள் காலந்தோறும் ஏராளமான இலக்கிய இலக்கண நூல்கள்  தோன்றி சிறந்து விளங்கிய தமிழ்மொழியில் அரிய நூல்கள் பல கடற்சீற்றத்தாலும், போற்றிப் பாதுகாப்பார் இன்மையானும், சமையச் சண்டைகளாலும், ஆற்றிலும், தீயிலும் இட்டுக் கொளுத்திய மூடத்தனத்தாலும் அழிந்தவை போக எஞ்சி நிலைத்தவை சில. அவற்றுள் முதன்மையானதாகவும், தொன்மையானதாகவும் விளங்குவது ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல்.
தொன்மையான இலக்கிய வடிவம்
இத்தொல்காப்பியத்தில் செய்யுள் தொடர்பான எழுத்து, சொல் பற்றியும், அகம்-புறம் என்னும் பாடுபொருள் குறித்தும், யாப்பு, அணி பற்றிய வரையறைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளதை எண்ணிப் பார்க்கும்போது செய்யுள் என்னும் (மரபுக்கவிதை) கவிதை வடிவம் எத்துணைத் தொன்மையுடையது என்பதை உணரலாம்.
மரபுக்கவிதையின் தொன்மையும் மறைந்துபோன தமிழ் நூல்களும்
ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல்,வெண்பா ஆகிய பா வகைகளைக் குறித்த இலக்கணங்களைத் தொல்காப்பியம் எடுத்துரைக்கின்றது. மேலும் முதுகுருகு, முதுநாரை, களரியாவிரை, கலி, குருகு, வியாழமாலை, வெண்டாளி, சிற்றிசை, பேரிசை முதலிய சங்கமிருந்தகாலத்து மறைந்து போன தமிழ்நூல்களும் மரபுக்கவிதையின் தொன்மையை எடுத்துரைக்கின்றன.
செய்யுளின் உறுப்புக்கள்
மரபுஎன்னும் சொல் தொன்று தொட்டு வரும் முறைமையை உணர்த்தி நிற்கின்றது. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என செய்யுளின் உறுப்புக்கள் அமையப்பெற்று, ஓசை நயம் அமைந்த பாடல்களை இலக்கண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பாவடிவங்களில் அவற்றின் மரபு மாறாமல் காலந்தோறும் கவிதைகள் இயற்றப்பட்டு வந்துள்ளன.
இவ்வாறு பாவகைகளை அடுத்துப் பாவினங்களும், அவற்றையடுத்துக் கும்மி, சிந்து போன்றனவும் தோன்றி ஒரு பாடல் இவ்வாறுதான் பாடப்படவேண்டும் என்னும் வரையறைப்படி பாதுகாக்கப் பெற்றுக் காலந்தோறும் இம்முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
சங்க இலக்கியம், நீதி நூல்கள், பக்தி இலக்கியம், காப்பியங்கள், சிற்றிலக்கியம், தனிப்பாடல்கள் என்னும் யாவும் மரபுக் கவிதைகளால் ஆனவையே ஆகும்.
பாடுபொருள்
மரபுக்கவிதை, சங்க காலத்தில் மன்னர்களோடு தொடர்புடையதாக இருந்தது. மன்னர்களின் வீரம், வெற்றி, கொடை, ஆட்சிச் சிறப்பு ஆகியவற்றைப் புகழ்வதாகவும், துணிச்சலுடன் புலவர்கள் அறிவுறுத்துவதாகவும் அமைந்தன. அரசவையிலோ, சங்கம் போன்ற தமிழ் அவைகளிலோ ஒன்று குழுமிய புலவர்கள் அகப்பொருள் பாடி இன்புறுத்துவதாகவும் அறிவுறுத்துவதாகவும் அமைந்தன. பிற்காலத்தில் பக்தி இலக்கிய மறுமலர்ச்சியின் காரணமாகப் பாடுபொருள் இறைவனைப் பற்றியதாகவும், திருத்தலங்களின் சிறப்பை உணர்த்துவதாகவும் அமைந்தது.
சித்தர் இலக்கியம், தத்துவம், மருத்துவம், அரசர்களையும் குறுநில மன்னர்களையும் மகிழ்வுறுத்தும் சிற்றிலக்கியங்கள் என அடுத்தடுத்த காலங்களில் பாடுபொருள்கள் அமைந்தன.
கவியரங்கம், வரையறுக்கப்பட்ட தலைப்பு, இயற்கை, சமூக அவலம் என இன்றைய நிலையில் மரபுக்கவிதையின் பயன்பாடு அமைகின்றது.
சங்க இலக்கியத்தில் அகவலும், நீதி இலக்கியத்தில் வெண்பாவும், பிற்காலக் காப்பியங்களில் விருத்தமும், குறவஞ்சி, பள்ளு முதலியவற்றில் சிந்துப் பாடலுமாக மரபுக்கவிதை வடிவம் சிறந்து வந்துள்ளது.
இலக்கிய இதழ்களில் வல்லமை படைத்த மரபுக் கவிஞர்களின் படைப்புகளும், போட்டிக் கவிதைகள் பலவும் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கவியரங்குகளில் மரபுக் கவிதைகள் சிறப்பிடம் பெறுகின்றன.
பாரதியார் பிள்ளைத் தமிழ், காமராசர் பிள்ளைத் தமிழ், சிவாஜிகணேசன் பிள்ளைத் தமிழ் என்பன போன்ற மரபுவழி இலக்கியங்கள் இன்றும் படைக்கப் பெற்று வருகின்றன.
19 ஆம் நூற்றாண்டில் மரபுக்கவிதையில் அமைந்த படைப்புகள் சில.
ü பாரதியார் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு
ü கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - ஆசியசோதி, மருமக்கள்வழி மான்மியம்
ü நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - தமிழன் இதயம்,கவிதாஞ்சலி
ü பாரதிதாசன் - பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, குடும்பவிளக்கு, அழகின் சிரிப்பு
ü கண்ணதாசன் - இயேசு காவியம், மாங்கனி, ஆட்டனத்தி ஆதிமந்தி
ü சுத்தானந்த பாரதியார் - பாரதசக்தி மகாகாவியம், தமிழ்த் திருப்பாவை
ü சுரதா - சிரிப்பின் நிழல், தேன்மழை, துறைமுகம்
ü அழ.வள்ளியப்பா - மலரும் உள்ளம், பாட்டிலே காந்தி
ü வாணிதாசன் - கொடி முல்லை
ü வைரமுத்து - வைகறை மேகங்கள்
இலக்கியம் என்றாலே அது மரபுக்கவிதைதான் என்று விளங்கிய கால கட்டங்களைப் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் காண முடிகின்றது.
முற்கால யாப்பிலக்கண நூல்கள்
யாப்பிலக்கணம் குறித்து அகத்தியம், அவிநயம், காக்கைபாடினியம், சங்க யாப்பு, பல்காயம், மயேச்சுரர் யாப்பு, யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், சுவாமிநாதம், முத்துவீரியம், அறுவகை இலக்கணம் என்னும் நூல்களும் யாப்பிலக்கணம் உரைப்பனவாய் அமைந்துள்ளன.
இருபதாம் நூற்றாண்டிலும் யாப்பிலக்கண நூல்கள்
இருபதாம் நூற்றாண்டிலும் யாப்பிலக்கண வழிகாட்டி நூல்கள் பல தோன்றியுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கன:
ü புலவர் குழந்தை - யாப்பதிகாரம், தொடையதிகாரம் (உரை)
ü .கி.பரந்தாமனார் - கவிஞராக (உரைநடை)
ü கி.வா.ஜகந்நாதன் - கவி பாடலாம் (உரைநடை)
ü .சரவணத் தமிழன் - யாப்பு நூல் (நூற்பா)
ü .பாலசுந்தரம் - தென்னூல் (நூற்பா)
ü இரா.திருமுருகன் - சிந்துப் பாவியல் (நூற்பா)
ü மருதூர் அரங்கராசனின் யாப்பறிந்து பாப்புனைய என்னும் நூல் இன்றைய நிலையில் மரபுக்கவிதை படைப்பவர்க்கு ஏற்ற வகையில் இயற்றப் பெற்றுள்ளது.
qqqqq

6 கருத்துகள்:

Logarraj Morgan சொன்னது…

வணக்கம் ஐயா. மிக அருமையான பதிவு. ஒரே ஒரு கருத்து தெரிவிக்க விரும்புகிறேன். மரபு கவிதை வலிமிகாமல் எழுத வேண்டும். இதன் காரணம் , அது உயிர்த்தொடர் குற்றியலுகரமாகும். உயிர்த்தொடர் குற்றியலுகரம் எந்த நிலையிலும் வலிமிகாது. நன்றி ஐயா .

Unknown சொன்னது…

Super sir I am very useful sir

Unknown சொன்னது…

nandri aaya nan ungalin katturaiein mulamaga niraiya kathru konden aaya nandri vanakam aaya

Rk flowers garden சொன்னது…

Tq sir useful sir

Unknown சொன்னது…

Full points

Eighthly சொன்னது…

Eighthly.blogspot.com