நாவல் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
புனையப் பெறும் கதைவடிவம் புனைகதை ஆகிறது. இது
புதினம், சிறுகதை என்னும் இரு
இலக்கிய வகைகளையும் குறிக்கும். ஒரு பொதுச் சொல்லாகும். தெனாலிராமன் கதைகள்,
மரியாதை ராமன் கதைகள் போன்ற பாரம்பரிய
வழிவரும் கதைகளிலிருந்து வேறுபட்டவை புனைகதைகள்.
புதினம்
நாவல் (Novel) என்னும் சொல் ‘புதுமை' என்னும் பொருளைத் தருவது. ‘Novella' என்னும் ..இத்தாலி மொழிச் சொல்லிலிருந்தே இது பிறந்தது என்பர். புதுமை என்னும்
பொருளிலேயே நாவலைக் குறிக்கத் தமிழ் மொழியில் புதினம் என்றனர். உரைநடையில்
கதைகூறும்பாங்கில் அமைந்த மனித வாழ்க்கையின் விளக்கமே புதினம்.
புதினத்தின் தோற்றம்
புதினம் முதன் முதலில் இத்தாலி நாட்டில் தோன்றியது.
அது பெரும்பாலும் காதல் நிகழ்ச்சிகளையே சித்தரிப்பதாய் இருந்தது. எனவே ‘நாவல்' எனும் சொல் ஆதியில் Romance என்னும் பொருளிலேயே வழங்கப்பட்டது. பின்னரே, மனித வாழ்க்கையைச் சுவைபடக் கூறும்
வடிவமாயிற்று எனலாம்.
சாமுவேல் ரிச்சட்சன் என்பவர் 1741-ஆம் ஆண்டு ‘பமிலா' என்ற புதினத்தை எழுதினார். இதுவே உலகின் முதல் புதினமாகக் கருதப்படுகிறது.
புதின அமைப்பு
விழுது விட்டு நிற்கும் ஆலமரம் போலப் பல கிளை
விட்டுக் கதையை வளர்த்துக் கூறுவது புதினம். பல மணிநேரம் படிக்கக் கூடியது.
புதினம் தனக்கென்றே அமைந்த ஒரு பெரிய களம் உடையது.
சுருங்கக் கூறினால், புதினம்
ஒரு பெரிய கதையையும், கதைமாந்தர்
பலரையும் கொண்டது. தனிமனிதன் அல்லது சமுதாய வாழ்க்கையின் பல பகுதிகளையும்
சித்திரித்துக் காட்டுவது.
புதினங்களில் கருப்பொருள்கள்
மனித வாழ்க்கையில் நிகழ்ந்த ஏதேனும் ஒரு பெரிய
நிகழ்ச்சி, வரலாற்றுத்
தொடர்புடைய சில உண்மைகள், அன்றாடப்
பொதுவாழ்க்கையில் நிகழும் சில நிகழ்ச்சிகள், உளவியல் தொடர்புடைய சில சிக்கல்கள் ஆகியன
நாவலுக்குரிய கதைப்பொருளாக அமையலாம்.
“மனிதருள்ளும், மனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையேயும் தோன்றும்
மோதலை அடிநிலையாகக் கொண்டதே நாவல் இலக்கியம்” என்பார் கைலாசபதி.
தி.
ஜானகிராமனின் புதினங்களில் பொதுவாக இழையோடும் பிரச்சினை ஆண் - பெண் உறவுகள்
பற்றியதாகும்.
சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளை
எதிர்த்துப் போராடுவதைக் கருப்பொருளாகக் கொண்டவை ஐசக் அருமைராசனின் கீறல்கள், கு.சின்னப்பபாரதியின் தாகம், பொன்னீலனின் கரிசல் போன்ற புதினங்கள்.
க. நா. சுப்பிரமணியம்,
இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன் ஆகியோர் புதினங்களில் தனிமனிதக்
கோட்பாடுகள் வலியுறுத்தப்படுகின்றன.
தமிழ்ப்
புதினத்தின் தோற்றம்
மேனாட்டாரின் வருகைக்குப் பின்னர் பத்தொன்பதாம்
நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழில் புதினம் பிறந்தது. ஆங்கிலக் கல்வியைக் கற்று,
ஆங்கிலப் புதினங்களைக் கற்றவர்களே
முதல் புதினங்களைப் படைத்தனர். ஆங்கிலக் கல்வி கற்று, நீதிபதியாகப் பணியாற்றிய மாயூரம். ச.வேதநாயகம்
பிள்ளை அவர்களே 1889-இல்
பிரதாப முதலியார் சரித்திரம் எனும் நாவலை எழுதினார். புதினத்திற்கு எழுதிய ஆங்கில
முன்னுரையில், ‘தமிழில் இம்மாதிரி உரைநடை நவீனம், பொதுமக்களுக்கு இதுவரை அளிக்கப்படவில்லை.
ஆகையால் இந்நூல் வாசகர்களுக்கு ரசமாகவும், போதனை நிறைந்ததாகவும் இருக்கலாம் எனப் பெருமை கொள்கிறேன்' - என்று குறிப்பிடுகின்றார்.
வளர்ச்சிக் காலக் கட்டங்கள்
தமிழ் மொழியின் புதின வரலாற்றை மூன்று காலக்
கட்டங்களாகப் பகுப்பர். அவை பின்வருமாறு.
முதற் காலக் கட்டம் (1910க்கு முன்)
மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ். எம். நடேச சாஸ்திரி, பி. ஆர். ராஜமையர், சு.வை. குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ் நாவல்
படைப்பாளிகள் ஆவர்.
இரண்டாம் காலக் கட்டம் (1910-1940)
இக்காலக் கட்டத்தில் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்,
ஆரணி குப்புசாமி முதலியார், ஜே.ஆர். ரங்கராஜு, எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு, வை.மு. கோதைநாயகி அம்மாள் முதலியோர் நாவல்கள் படைத்தனர்.
மூன்றாம் காலக் கட்டம் (1940 முதல் இன்று வரை)
இக்காலக் கட்டம் கல்கியிலிருந்து தொடங்குகிறது.
அகிலன், க. நா. சுப்பிரமணியம்,
தி. ஜானகிராமன், டாக்டர். மு.வ., அறிஞர் அண்ணா, நா.பார்த்தசாரதி, சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், கு.ராஜவேலு, லக்ஷ்மி,
கலைஞர் கருணாநிதி, விக்கிரமன், இந்திரா பார்த்தசாரதி, நீல. பத்மநாபன், பாலகுமாரன், குமுதினி, அநுத்தமா,
ராஜம் கிருஷ்ணன், வாஸந்தி, விமலாரமணி, சிவசங்கரி, இந்துமதி,
கிருத்திகா, பாமா, அநுராதா ரமணன், சாண்டில்யன்,
கோவை. மணிசேகரன் முதலியோர் இக்காலக்
கட்ட நாவலாசிரியர்கள் சிலர் ஆவர்.
முன்னோடிகள்
மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை இவர் முதல் தமிழ்
நாவலை எழுதிய பெருமைக்குரியவர் ஆவார். இவர் தமிழ் நாவலின் தந்தை என
அழைக்கப்படுபவர். இவர் தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும்,
சுகுண சுந்தரி கதையையும் படைத்தவர்.
இவரின் முதல் நாவல் சமூக நாவலுக்கு வித்திட்டது என்றால், இவரின் அடுத்த நாவலான சுகுண சுந்தரி கதை வரலாற்று
நாவலுக்கு அடிகோலியது எனலாம்.
1.
பண்டித
எஸ்.எம். நடேச சாஸ்திரி
இவர், தானவன், தீனதயாளு, மதிகெட்ட மனைவி, திக்கற்ற இரு குழந்தைகள், மாமி கொலுவிருக்கை, தலையணை மந்திரோபதேசம் போன்ற நாவல்களைப்
படைத்துள்ளார். இவரை மர்ம நாவலின் முன்னோடி எனலாம்.
2.
பி.ஆர்.
இராஜம் ஐயர்
1896-ஆம் ஆண்டு இராஜம் ஐயர் கமலாம்பாள்
சரித்திரத்தை வெளியிட்டார். இதுவே தமிழில் தோன்றிய முதல் தொடர் கதை. மதுரை
மாவட்டம் சிறுகுளத்தில் வாழ்ந்த முத்துசாமி ஐயர் - கமலாம்பாள் தம்பதிகளின் வாழ்வை
இது சித்திரிக்கிறது.
3. மாதவையா
இவரது பத்மாவதி சரித்திரத்தில் பத்மாவதியின் மேல்
அவளுடைய கணவனுக்கு ஏற்படும் ஐயமே நீண்ட சிக்கலாய் வளர்ந்து முடிகிறது.
முத்து மீனாட்சி என்னும் நாவல் அவற்றைவிடப் புதுமை
மிகுந்தது; புரட்சியானது. இளம்
விதவை ஒருத்தி படும் துன்பங்களை அவளே எடுத்துரைக்கும் முறையில் இந்த நாவல்
அமைந்துள்ளது.
இவர் கதைக் கருவிலும், கட்டமைப்பிலும் புரட்சி செய்தவர். இவரைக் கைலாசபதி
தமிழ்நாட்டின் தாக்கரே எனப் பாராட்டுவார். (தாக்கரே - என்பவர் ஆங்கில நாவல் படைப்பாளர்களுள்
குறிப்பிடத்தக்கவர்.)
புதின வகைகள்
1. துப்பறியும் புதினங்கள்,
2. சமூகப் புதினங்கள்,
3. வரலாற்றுப் புதினங்கள்,
4. அறிவியல் புதினங்கள்,
5. வட்டாரப் புதினங்கள்,
6. மொழி பெயர்ப்புப் புதினங்கள்
7. தழுவல் புதினங்கள்
என வகைப்படுத்தலாம்.
துப்பறியும்
புதினங்கள்
துப்பறியும் புதினங்கள் - ஏதேனும் நிகழ்ந்த ஒரு மர்ம சம்பவம் குறித்து மக்கள்
கொள்ளும் மேலோட்டமான கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே படைக்கப் பெற்றுள்ளன. மேலும்
இன்றியமையாத நிலையில், கதையில்
மர்மங்களே அதிக இடத்தைப் பெறும்.
முன்னோடிகள்
தொடக்க காலம் முதல் துப்பறியும் புதினங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இத்துப்பறியும் புதினங்கள் பெரும்பாலும் மேனாட்டுத் துப்பறியும் கதைகளின்
தழுவல்களாகவேவிளங்கின. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆரணிகுப்புசாமி
முதலியார், வடுவூர் துரைசாமி
ஐயங்கார், ஜே. ஆர். ரங்கராஜு
முதலியோர் எண்ணற்ற துப்பறியும் புதினங்களை எழுதிக் குவித்தனர்.
தற்காலத்
துப்பறியும் புதின ஆசிரியர்கள்
தேவன் எழுதிய ஜஸ்டிஸ்
ஜகந்நாதன் சிறந்த துப்பறியும் நாவல். இவரது துப்பறியும் சாம்பு நகைச்சுவை
ததும்பும் துப்பறியும் புதினமாகும். தமிழ்வாணன் படைத்த துப்பறியும்
நிபுணரானசங்கர்லால் என்ற பாத்திரம் வாசகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது.
தமிழ்நாட்டின் ஜேம்ஸ் ஹட்லி சேஸ் என்று பாராட்டப் படுகின்ற சுஜாதா -
மக்களின் மனங்கவர்ந்த துப்பறியும் எழுத்தாளர்களுள் ஒருவராவார். துப்புத்
துலக்குவதில் புதிய பாணிகளைக் கையாண்டு பாராட்டுப் பெற்றவர். புதினங்களில் சிறந்து
விளங்குபவை கொலையுதிர் காலம், கரையெல்லாம் செண்பகப்பூ, நைலான்
கயிறு, காயத்ரி ஆகியவை.
ராஜேஷ் குமார்
புதினங்களில் ஆங்கில மொழிச்சொற்களின் கலப்பு மிகுதி. இவர் படைத்தவை ஓடும் வரை ஓடு,
ஏழாவது டெஸ்ட் டியூப், டிசம்பர் இரவுகள் முதலிய நூற்றுக்கும்
மேற்பட்ட புதினங்கள் ஆகும். பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேந்திரகுமார், இந்திரா
சவுந்திர ராஜன் முதலியோரும் தற்கால மர்மக் கதை எழுத்தாளர்களுள் புகழ் பெற்றவர்கள்.
சமூகப்
புதினங்கள்
சமுதாயத்தில் நிலவும் அன்றாடப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றைக்
களையும் நல்ல நோக்கத்தோடு எழுதப்படுபவை சமூகப் புதினங்கள் ஆகும். சமுதாயச்
சிக்கல்கள், பிரச்சாரங்கள்,
சீர்திருத்தங்கள் என்னும் போக்குகளில் இவ்வகைப் புதினங்கள் அமையும்.
நாரண துரைக்கண்ணன், வ.ரா.
விந்தன், வேங்கட ரமணி, கல்கி, கொத்தமங்கலம் சுப்பு, ஜெயகாந்தன், கோவி.மணிசேகரன், நா.பார்த்தசாரதி, மு.வ. அநுத்தமா, இந்துமதி, ராஜம்
கிருஷ்ணன், லக்ஷ்மி, வாஸந்தி சிவசங்கரி,
அனுராதா ரமணன், கு. ராஜவேலு, நீலபத்மநாபன், வாசவன் முதலியோர் சிறந்த சமூகப் புதின
ஆசிரியர்கள் ஆவர்.
கே. எஸ். வேங்கடரமணி என்பார் மக்கள் மனதில் தேசபக்திக் கனலை மூட்டுவதற்காக, தேசபக்தன் கந்தன் என்ற நாவலை 1933-இல் எழுதி வெளியிட்டார். கல்கி, காந்திய வழியில்
சிறந்த நாவல்களைப் படைத்தார். இவர் சாதிக் கொடுமை, விடுதலை
வேட்கை, பொருந்தா மணம், விதவையின்
வேதனை ஆகியவற்றைத் தம் கதைகளுக்குக் கருவாக்கிக் கொண்டவர். இந்திய சுதந்திரப்
போராட்டப் பின்னணியில் அவர் எழுதிய நாவலே அலையோசைஆகும்.
அகிலனின் புதுவெள்ளம், எங்கே போகிறோம், வாசவனின் அக்கினிக்குஞ்சு, புதுயுகம்
பிறக்கிறது, வாழ்வின் ராகங்கள் போன்ற புதினங்கள்
குறிப்பிடத்தக்கன.
சித்திரப்பாவை புதினம் பணப் பேராசையால் நேரும் சீரழிவைக் காட்டுகிறது.
ரகுநாதனின் பஞ்சும் பசியும் கைத்தறி
நெசவாளர் பட்ட கொடுமைகளை எதார்த்த முறையில் சித்திரிக்கும் நாவல்.
மு.வரதராசனாரின்நெஞ்சில் ஒருமுள் என்ற
நாவல் வறுமைக்காகத் தன் உடலை ஒரு பெண் விற்பதாகக் காட்டுகிறது.
நா. பார்த்தசாரதியின் பொன்விலங்கு நிறைவேறாத காதலைச் சித்திரிக்கிறது.
அறிஞர் அண்ணாவின் பார்வதி பி.ஏ., ரங்கோன்ராதா ஆகிய நாவல்கள் சமுதாயச் சீர்திருத்த நாவல்கள் என்ற வரிசையில்
சிறப்பிடம் பெறத்தக்கவை.
அநுத்தமா மணல்வீடு, ஒரே
வார்த்தை, கேட்டவரம் போன்றபுதினங்களை எழுதியுள்ளார்.
லக்ஷ்மி, சூடாமணி,
சிவசங்கரி, இந்துமதி முதலியோர் குடும்ப
நாவல்களை எழுதியுள்ளனர். கூட்டுக்குடும்ப முறையின் சிக்கல்களை உணர்த்தி இவை
அகன்றால் நல்லது என்பது போன்ற எண்ணத்தை நாவலாசிரியர்கள் பலர் வெளியிட்டுள்ளனர்.
ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாரிசுக்குப் போ’ ஆகியனவும், சமுதாயத்தில் காணப்படும்
ஏற்றத்தாழ்வுகளுக்காகப் போராடுவதை நோக்கமாகக்கொண்டு கு. சின்னப்ப பாரதியின் தாகம், ஐசக் அருமைராசன் எழுதிய கீறல்கள், பொன்னீலன்
எழுதியது கரிசல் ஆகியனவும் எழுதப்பட்டுள்ளன.
வரலாற்றுப்
புதினங்கள்
வரலாற்றுப் புதினம் என்பது வரலாற்றில் காணப்பெறும் மாந்தர்களையும், நிகழ்ச்சிகளையும், அதன் பின் புலத்தையும் பயன்படுத்தி ஓரளவு கற்பனை கலந்து படைக்கப்படும்
புதின வகையாகும். மேலை நாட்டார் படைத்த வரலாற்று நாவல்களில் வால்டர் ஸ்காட்டு
எழுதிய நாவல்களையே பலரும் முன்னோடியாகக் கொள்கின்றனர்.
கற்பனைப் படைப்பின் தாக்கம் மிகமிக வரலாற்றுக் கற்பனை நாவல்களே மிகுந்த அளவில்
தோன்றியுள்ளன. வரலாற்று நாவல்கள் என்பன நடப்பு நிலையைத் தவிர்ப்பதில்லை. பழங்கால
நிகழ்ச்சிகள் தற்கால நிகழ்ச்சிகளுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்புடையனவாக
இருக்கும். வரலாற்றுப் புதினங்களில் புனைநிலை மாந்தரே சிறப்பான இடம் பெறுவர்.
முன்னோடிகளும்
பிறரும்
வரலாற்று நாவல்களில் மக்களுக்கு ஒரு பற்றை ஏற்படுத்தியவர் கல்கி.
வரலாற்று நாவல்களைச் சிறப்பாக எழுதிப் பிற்காலச் சந்ததியினருக்கு முன்னோடியாகத்
திகழ்ந்த இவரை வரலாற்று நாவல் துறையின் தந்தை எனலாம். பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் என்பன இவரது படைப்புகள்.
சாண்டில்யன் குமுதம்
பத்திரிகை மூலம் பல புதினங்கள் எழுதி எண்ணற்ற வாசகர்களையும் பெற்றார். இவரது
மலைவாசல், ராஜமுத்திரை,
யவனராணி, கடல் புறா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இவரின் ராபர்ட்கிளைவ் பற்றிக் கூறும் ராஜபேரிகை என்ற புதினம் வங்க மாநிலப் பரிசு
பெற்றது.
கலைஞர் மு.கருணாநிதியின் ரோமாபுரிப்பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம் இரண்டும் குறிப்பிடத்தக்கவை.
மேத்தாவின் சோழநிலா, பூவண்ணனின் காந்தளூர்ச்சாலை, கொல்லிமலைச் செல்வி அரு.ராமநாதனின்
வீரபாண்டியன் மனைவி, நா.பார்த்தசாரதியின் பாண்டிமாதேவி,
மணி பல்லவம் ஆகியவை சிறப்பு வாய்ந்த தரமான புதினங்களாகும்.
அறிவியல்
புதினங்கள்
அறிவியல் கருத்துகளை அடியொற்றிய புதினங்கள் கற்பவர்க்குப் புதுமையும், அறிவியல் அறிவும் ஊட்டுபவை.
சுஜாதாவின் அறிவியல் நாவல்கள் குறிப்பிடத்தக்கன.
வட்டாரப்
புதினங்கள்
வட்டாரப் புதினங்கள் அந்தந்த வட்டார நிலவியல், மக்களின் வாழ்க்கை முறைகள், பழக்க
வழக்கங்கள், பேச்சு வழக்குகள் ஆகியவற்றை இயல்பாக
வெளிப்படுத்துவனவாக அமைகின்றன. இவ்வகையில் கதை ஒரு குறிப்பிட்ட வட்டாரம் சார்ந்த சிற்றூரிலோ
அல்லது சின்னஞ் சிறிய நகரத்திலோ நடப்பதாகக் காட்டப்படும். இதனுள் ஒரு சமூகத்தின்
முழு வாழ்வையும் அதன் இருண்டதும், ஒளி மிக்கதுமான எல்லாப்
பகுதிகளையும் படைப்பாளர்கள் தீட்டிக் காட்டுவார்கள்.
வட்டார நாவல்களில் முன்னோடிகளாக கே.எஸ்.வேங்கடரமணி, ஆர்.சண்முக சுந்தரம், சங்கரராம் முதலியோரைக் குறிப்பிடலாம்.
சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் மதுரை மாவட்டத்து மறவர்கள்வாழ்வின்
சிறுபகுதியையும், ராஜம்
கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன் நீலகிரி படகர்களின் முழு வாழ்வையும், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு ஒரு குமரி மாவட்டக் கிறித்துவக்
குடும்பத்தின் வாழ்வையும் எடுத்துக் காட்டுகின்றன.
கரிசல் இலக்கியத் தந்தை என்று போற்றப்படும் கி.ராஜநாராயணன் எழுதிய கிடை என்ற
சிறுபுதினம் (குறுநாவல்) வட்டார நாவல்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவரது
கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து
மக்கள் என்பனவும் மிகச் சிறந்த படைப்புகளாகும். பூமணியின் - பிறகு, வயிறுகள் சிறந்த கரிசல் வட்டாரப் படைப்புகள் ஆகும்.
தோப்பில் முகமது மீரானின் முதல் புதினமான ஒரு கடலோரக் கிராமத்தின் கதை, சாய்வு
நாற்காலி என்னும் புதினங்களும், நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள், சதுரங்கக் குதிரை ஆகிய புதினங்களும்
குறிப்பிடத்தக்கவை.
மொழி
பெயர்ப்புப் புதினங்கள்
காண்டேகரின் மராத்தி நாவல்களை கா.ஸ்ரீ.ஸ்ரீ. சிறப்புற மொழி பெயர்த்து
அளித்துள்ளார். எரி நட்சத்திரம், கிரௌஞ்ச வதம், சுகம் எங்கே? முதலியன
இவரது சிறந்த மொழி பெயர்ப்புகளாகும்.
த.நா.குமாரசாமியும், த.நா.சேனாதிபதியும் தாகூர் படைத்த வங்காள நாவல்களை மொழிபெயர்த்துள்ளனர்.
துளசி ஜெயராமன், சரசுவதி
ராம்நாத் இருவரும் வங்காளம், இந்தி, குஜராத்திப்
புதினங்களையும்,
வீழிநாதன் - இந்திப் புதினங்களையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளனர்.
ஒரியா மொழிக் கதையைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காகத் தமிழ்நாடன் சாகித்திய
அக்காதமி விருது பெற்றுள்ளார்.
மாக்ஸிம் கார்க்கியின் தாய், டால்ஸ்டாயின் போரும் அமைதியும், ஹெமிங்வேயின் கடலும்
கிழவனும், வால்டர் ஸ்காட்டின் ஐவன் ஹோ முதலியன சிறந்த மொழி பெயர்ப்புப்
புதினங்களாகும். தாகூர், பங்கிம் சந்திரர், சரத்சந்திரர் ஆகியோரின் வங்க நாவல்களும், தகழி
சிவசங்கர பிள்ளையின் செம்மீன் என்ற மலையாள நாவலும் தமிழில் மொழி
பெயர்க்கப்பட்டுள்ளன.
தழுவல்
புதினங்கள்
இவ்வகையில் முதன் முதலில் ஆரணி குப்புசாமி முதலியார் முயற்சியால் ரெயினால்ட்ஸ்
(Reynolds) எழுதிய
புதினங்கள் தமிழ் உருவம் கொண்டன. இவரைத் தொடர்ந்து வடுவூர் துரைசாமி ஐயங்காரும்
மேனகா, திகம்பர சாமியார் அல்லது கும்பகோணம் வக்கீல் ஆகிய
இரண்டு புதினங்களைப் படைத்தார். இவை பின்னர் திரைப்படங்கள் ஆக்கப்பட்டும் புகழ்
பெற்றன.
டால்ஸ்டாயின் அன்னாகரினீனாவைத் தழுவி, நாரண துரைக்கண்ணன் சீமாட்டி கார்த்தியாயினி என்ற நாவலை
உருவாக்கினார். டிக்கன்ஸின் ஆலிவர் டுவிஸ்டைத் தழுவி எஸ். மாரிசாமி அனாதை ஆனந்தன்
என்ற புதினத்தை உருவாக்கினார். ரெயினால்ட்ஸ் புதினத்தைத் தழுவி மறைமலை அடிகளார்
குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி என்ற புதினத்தை எழுதினார்.
@@@@
நன்றி: தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
4 கருத்துகள்:
ஆண்டு தவறு 1876
Thank, this is usefull for me
மிக்க நன்று.
மிக்க பயனுள்ள குறிப்பு நன்றி
கருத்துரையிடுக