வியாழன், 14 டிசம்பர், 2017

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

கனவு இனிது

கனவு இனிது
இப்போதும் பேசிவிட்டுப் போகிறாள்
எப்போதோ மரணித்த தாய்.

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

பசி

ஏகாந்த இரவில் கொடும்பசி
வெந்திருந்தால் தின்றிருப்பேன்
பௌர்ணமி தோசை

செவ்வாய், 28 நவம்பர், 2017

மரணமும் மனித வாழ்க்கையும்

விடை சொல்லியாகிவிட்டது
இனி கொஞ்ச காலத்திற்கு
விளக்கம் தேடி                                      அலைய வேண்டியதுதான்......

ஞாயிறு, 26 நவம்பர், 2017

கருத்துச் சுதந்திரம்

அவன் சுரண்டுகிறான்
இவன் சுரண்டுகிறான்
என்று பேசும் நிலைபோய்
என்றைக்கு
நீ சுரண்டுகிறாய்
என்று பேசும்
தைரியத்தைத் தரும் சார்பற்ற நிலை
உருவாகிறதோ அதுதான்
உண்மையான
கருத்துச்சுதந்திரம்.

வெள்ளி, 24 நவம்பர், 2017

புதன், 22 நவம்பர், 2017

?

இந்த குளத்தில்
எந்த மீன்
குளிக்காதது ?

கவிதை

வயிற்றுக்கு இரைதேடும் வினாக்குறிகள்
வயல்வெளியில் விடைதேடும்
கொக்குகள் 

செவ்வாய், 21 நவம்பர், 2017

ஞாயிறு, 19 நவம்பர், 2017

வெள்ளி, 17 நவம்பர், 2017

அறமும் - கடவுளும்

நடுச்சாலையில்
நசுங்கிச் சாகின்றன
காலம் மாறிவிட்டது
தெரியாமல்
இன்னும்
பழைய வேகத்திலேயே
சாலையைக் கடக்கும்
நத்தைகள்...

பழைய ஞாபகத்தில்
நியாயம் கேட்கப்போன
மனுநீதிச் சோழனின்
கன்னத்தில்
யாரோ அறைந்த
சப்தம்

ஆற்றாமையில்
அழுதுகொண்டே
அறங்களை வாரியெடுத்த
மனுச் சோழன்
மாரடைப்பால்
மரணித்தான்

மீண்டும்
உயிர்ப்பிக்க
நினைத்த கடவுள்
பூமிக்கு வந்தால்
சுவாசக் கோளாறு
ஏற்பட்டுவிடுமோ
என்ற பயத்தில்
பதுங்கிக் கொண்டார்.

வியாழன், 16 நவம்பர், 2017

கவிதை

முரண்

எவ்வளவு
திருத்தியும்
திருந்தாத ஆசிரியர்
இன்னும்
பேப்பரை மட்டுமே
திருத்திக்கொண்டிருக்கிறார்.

சனி, 11 நவம்பர், 2017

வியாழன், 9 நவம்பர், 2017

திங்கள், 16 ஜனவரி, 2017

நிரபராதி

தூக்கு தண்டனைக்கு
நேரம் குறிக்கப்பட்ட
கைதியைப்போல
வகுப்பறைக்குள்
நுழைகிறேன்

தூக்கிலிடப்படுவதற்கு
முந்தைய கடைசி
நேர உன்னதப் பொழுதாய்
ஒவ்வொரு நொடியும்
மதிப்புமிக்கதாய்
வகுப்பறையில்
பாடம் நடந்துகொண்டிருக்கிறது

ஆசை இருந்தும்
வாழ  வயதிருந்தும்
வாய்ப்பு மறுக்கப்பட்டவனின்
மிச்சமிருக்கிற
வாழ்க்கையைப் போல
பாடம்
பாதியில் நிற்கிறது.

நான் சாவை
மறந்திருந்த நேரத்தில்
என் கழுத்தில் மாட்டப்படும்
தூக்குக் கயிறாய்
மணி ஒலிக்கிறது

என் அனுமதியைப்பற்றி
கவலைப்படாமல்
மாணவர்கள்
புத்தகங்களை மூடிப்
பைக்குள் செருகும்போது
நான்
துடிதுடித்துச் சாகிறேன்.

கவிதை

வழியில் கிடக்கிறது
தாயின் அன்பு
ஒருமுழம் பூ

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

தனிமை

எல்லோரும் சொல்கிறார்கள்
நான் தனியாகக் கிடக்கிறேன்
என்று.

கொத்திப் பிடுங்கும்
கொசுக்கள்

ஈ என்று இரக்காமல்
தானாக உண்ணும் ஈக்கள்

சுற்றித் திரிந்தாலும்
வரிசையாய் செல்லும்
சிற்றெறும்புகள்

புத்தகம் சுவைக்கும்
பூச்சிகள்

எல்லா மூலையிலும்
எட்டுக்கால் பூச்சிகள்

படுக்கையில் உலவும்
பாசிகள்

சுவற்றில்
ஊரும் பல்லிகள்

கூடுகட்டும்
குளவிகள்

எப்போதாவது வந்துபோகும்
தேன்சிட்டு

இன்னும்
எனக்கே தெரியாமல்
என்னோடு வாழ்வது
எத்தனையோ?

ஒன்று தெரியுமா
உங்களுக்கு?

தலைமுறை பல
கண்டவன் நான்!

குட்டிபல்லியாய் இருந்ததெல்லாம்
இப்போது குட்டி போட்டுவிட்டன

எட்டுக்கால் பூச்சிக்குப்
பிள்ளைகள் ஏராளம்

கொசுக்களுக்கு ஏது?
குழந்தைக்கு பஞ்சம்

எறும்புகள் மட்டும் என்ன
ஏமாந்ததா?
எங்கு பார்த்தாலும்
அவர்கள் பிள்ளைகள்தான்

குளவிகள் பிரசவித்துப்போனதை
கூடுகள் காட்டும்

யாராவது சொல்லுங்கள்
தனியாக வாழ முடியுமா?

என்வீட்டில் எல்லா நாளும்
பொங்கல்தான்
பொங்கித்தானே ஆகவேண்டும்
கூட்டாஞ்சோற்றை.

கவிதை

குப்பைகள் குவிந்தால்
குழிதோண்டி புதையுங்கள்
மண்ணுக்கு உரமாகும்
கொள்ளிவைத்து கொளுத்தாதீர்கள்
இயற்கை அன்னை
இறவாமல் வாழட்டும்