திங்கள், 16 ஜனவரி, 2017

நிரபராதி

தூக்கு தண்டனைக்கு
நேரம் குறிக்கப்பட்ட
கைதியைப்போல
வகுப்பறைக்குள்
நுழைகிறேன்

தூக்கிலிடப்படுவதற்கு
முந்தைய கடைசி
நேர உன்னதப் பொழுதாய்
ஒவ்வொரு நொடியும்
மதிப்புமிக்கதாய்
வகுப்பறையில்
பாடம் நடந்துகொண்டிருக்கிறது

ஆசை இருந்தும்
வாழ  வயதிருந்தும்
வாய்ப்பு மறுக்கப்பட்டவனின்
மிச்சமிருக்கிற
வாழ்க்கையைப் போல
பாடம்
பாதியில் நிற்கிறது.

நான் சாவை
மறந்திருந்த நேரத்தில்
என் கழுத்தில் மாட்டப்படும்
தூக்குக் கயிறாய்
மணி ஒலிக்கிறது

என் அனுமதியைப்பற்றி
கவலைப்படாமல்
மாணவர்கள்
புத்தகங்களை மூடிப்
பைக்குள் செருகும்போது
நான்
துடிதுடித்துச் சாகிறேன்.

3 கருத்துகள்:

paalveli-athirvugal சொன்னது…

ஆசிரியரின் நேரப் போதமை, மாணவரின் அவசர கதி, இடையீடான பாடத்தின் குறைபாடு என கவிதை மரணித்து வரும் வகுப்பறையை காட்சிப்படுத்துவதாக இக் கவிதையை நான் புரிந்து கொள்கிறேன். சிறப்பு. நன்றியும் - வாழ்த்துக்களும்

Unknown சொன்னது…

இன்றைய ஆசிரியர்,மாணவர் உறவை அம்பலப்படுத்தும் கவிதை சிறப்பு.

ச. நீலமேகன் சொன்னது…

நன்றி