ஞாயிறு, 5 ஜனவரி, 2020

அற இலக்கிய வரலாறு

அற இலக்கிய வரலாறு
மனித சமூகத்தில் நாகரிகம் என்று முகிழ்த்ததோ அன்றே அறம் குறித்த சிந்தனையும் தோற்றம் பெற்றுவிட்டது. அதுமுதற்கொண்டு சமூகத்தில் எண்ணற்ற அறங்கள் சான்றோர்களால் உரைக்கப்பெற்று நடைமுறை வாழ்க்கையில் மக்களால் பின்பற்றப்பட்டு வரலாயின. இந்தகைய அறக்கருத்துக்கள் புலவர்களாலும் அறவாணர்களாலும் தாங்கள் இயற்றிய இலக்கியங்களிலும் அறநூல்களிலும் காலந்தோறும் எடுத்துரைக்கப்பெற்று வந்துள்ளன. அந்தவகையில் தமிழ் இலக்கியத்தின் மிகத்தொன்மையான இலக்கியமான பாட்டும் தொகையும் எனக் குறிப்பிடப்படும் சங்க இலக்கியத் தொகை நூல்களிலேயே ஏராளமான அறக்கருத்துக்கள் புலவர்களால் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன எனினும் கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் அறம் வலியுறுத்துவதை மட்டுமே நோக்கமாகக்கொண்ட நீதி நூல்கள் பல்கிப் பெருகின. இத்தகைய காலத்தையே நீதிநூற்காலம் எனக் குறிப்பிடுகின்றனர். இக்கால கட்டத்தில் தோற்றம் பெற்ற 18 நூல்களை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் சங்கம் மருவியகால நூல்கள் என்றும் குறிப்பிடுவர்.
காதலையும் வீரத்தையுமே அடிப்படையாகக் கொண்ட திணை இலக்கிய மரபில் சமூகத்தில் நேர்ந்த மாற்றத்தால் பாடுபொருளிலும் யாப்பு அடிப்படையிலும் ஒரு பொரும் மாற்றம் ஏற்படக் காரணமாக அமைந்தது. ஆனால் இலக்கிய மரபு திடுமென மாறிவிடுவதில்லை அதன் நீட்சி இருக்கவே செய்யும் அந்த அடிப்படையில் சங்க இலக்கியங்களுக்குப்பிறகு நீதி இலக்கியங்கள் பெருமளவிற்கு தோற்றம் பெற்றாலும் பழைய திணை மரபை முற்றிலும் புறக்கணிக்காத இலக்கியப் போக்கு காணப்பட்டதை பதினெண் கீழ்க்கணக்கில் ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மாலை நூற்றைம்பது, கார் நாற்பது, களவழிநாற்பது போன்ற அக, புற இலக்கியங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
இக்காலத்தில் தமிழரல்லாத களப்பிரர் எனப்பட்ட வேற்று மரபைச் சார்ந்தவர்கள் தமிழ் நிலப்பரப்பை ஆண்டுவந்தனர். இவர்கள் வேற்று மொழியினர், வேற்றுச் சமயத்தவர்  என்றும், இவர்கள் காலத்தில் பாலியும், பிராகிருத மொழியும் செல்வாக்குப் பெற்று புத்த, சமணக் கொள்கைகள் தழைக்கத் தொடங்கின.
வரலாற்றாசிரியர்கள் சிலர் அக்கால வரலாற்றை அறிந்துகொள்வதற்குரிய போதிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்காததால் இக்காலத்தை இருண்டகாலம் எனக் குறிப்பிட்டுள்ளனர். இங்கு குறிப்பிடப்பட்டும் இருண்ட காலத்தை வரலாற்றின் இருண்டகாலம் எனக் கொள்ளலாமேயன்றி தமிழ்ச் சமூகத்தின் இருண்டகாலம் எனக் கொள்ளலாகாது. ஏனெனில் இக்காலத்தில் ஏராளமான சமண இலக்கிய இலக்கண நூல்கள் தோன்றி தமிழ் மொழிக்கு வளம் சேர்த்துள்ளதை நாம் மனங்கொள்ள வேண்டும்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
இரண்டடி முதல் எட்டு அடி வரையிலும் உள்ள குறைந்த அடிகளையுடைய வெண்பா யாப்பில் அமைந்த நூல்களாதலின் இவை கீழ்க்கணக்கு நூல்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள் திணைமொழி ஐம்பதுஐந்திணை ஐம்பது, கைந்நிலை (ஐந்திணை அறுபது) ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கார்நாற்பது என்னும் ஆறு நூல்கள் அகப்பொருள் பற்றியவை. இவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து நிலங்களின் இயல்புகளையும், அந்நிலத்திலே நடைபெறும் காதலர்களின் ஒழுக்க நடவடிக்கைகளைப் பற்றி உரைப்பன. இவற்றில் சங்க இலக்கிய அகமரபின் தொடர்ச்சியை நாம் காணலாம்.
களவழி நாற்பது என்ற ஒரு நூல் மட்டும் புறநூலாகத் திகழ்கின்றது. மீதமுள்ள திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, ஆசாரக் கோவை, முதுமொழிக் காஞ்சி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, நான்மணிக்கடிகை, திரிகடுகம் சிறுபஞ்சமூலம், ஏலாதி என்ற பதினொரு நூல்களும் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களைப் பற்றி எடுத்துரைக்கின்றன. கீழ்க்கணக்கு நூல்கள் இன்னின்னவை என்பதைப் பின்வரும் பழம்பாடல் வரிசைப்படுத்தி உரைக்கின்றது.
நாலடி, நான்மணி, நால்நாற்பது, ஐந்திணைமுப்
                         பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம்,
                         இன்னிலைய காஞ்சியோடு, ஏலாதி என்பவே
                         கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு

I.அகநூல்கள்
திணைமொழி ஐம்பது
திணைக்குப் பத்து வெண்பாக்களாக ஐம்பது வெண்பாக்களால் சங்கத் திணைப்பாடல் மரபைப் பின்பற்றி கண்ணன் சேந்தனார் என்ற புலவரால் பாடப்பட்டது திணைமொழி ஐம்பது.
ஐந்திணை ஐம்பது
முல்லைத் திணை, குறிஞ்சித் திணை, மருதத் திணை, பாலைத் திணை, நெய்தல் திணை என்ற வரிசையில் திணைக்குப் பத்துப் பாடல்களாக 50 பாடல்களால் மாறன்பொறையன் என்பவரால் பாடப்பட்டது இந்நூல்.
கைந்நிலை
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசையில் ஐந்து திணை ஒழுக்கங்களைப் பற்றிக் கூறும் அறுபது பாடல்கள் அடங்கியது. இந்நூலை ஐந்திணை அறுபது என்றும் கூறுவர். இந்நூலில் இப்பொழுது முழு உருவில் 43 வெண்பாக்களே உள்ளன. இந்நூலினை புல்லங்காடனார் என்பவர் இயற்றியுள்ளார்.
ஐந்திணை எழுபது
மூவாதியார் என்பவரால் இயற்றப்பட்டு திணைக்குப் பதினான்கு பாடல்கள் வீதம் ஐந்திணைக்குமாக மொத்தம் எழுபது வெண்பாக்கள் பாடப்பட்டது இந்நூல்
திணைமாலை நூற்றைம்பது
திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் ஐந்திணைக்கும் 150 வெண்பாக்களால் பாடப்பட்டது இந்நூல். ஆனால் இன்று 153 பாடல்கள் உள்ளன. மிகுதியான  3 பாடல்கள் இடைச்செருகல் எனக் கொள்ளலாம். ஏலாதி என்ற அறநூலை எழுதிய கணிமேதாவியாரே இதன் ஆசிரியருமாவார்.
கார் நாற்பது
முல்லைத் திணைக்குரிய இருந்தல் என்னும் உரிப்பொருள் அமைய போர்கருதிப் பிரிந்த     தலைமகன் திரும்பி வருவதை எதிர்நோக்கியிருக்கும் தலைவி, அவளை ஆற்றுவிக்கும் தோழி, கூறியபடி திரும்பி வரும் தலைமகன், அவனுக்கு உதவும் பாகன் போன்றோர் கூற்றில் கார்காலப் பின்னணியில் அமைந்த 40 வெண்பாக்களால் மதுரைக் கண்ணங்கூத்தனார் என்பவரால் இயற்றப்பட்டது இந்நூல்.
II. புறநூல்
களவழி நாற்பது
சேரமான் கணைக்காலிரும்பொறையைச் சிறைமீட்கப் பொய்கையார் என்ற புலவரால்  புறப்பொருளில் பாடப்பட்ட 40 வெண்பாக்களால் ஆனது இந்நூல். களவழி ஏர்க்களம் பாடுதல், போர்க்களம் பாடுதல் என இரண்டாகும். இவற்றுள் இரண்டாவது வகையைச் சார்ந்த இந்நூலில் யானைப்போர் பற்றி சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது. இந்நூலே பரணி போன்ற பிற்கால இலக்கியங்கள் தோன்ற துணை நின்றன.
III. அறநூல்கள்
திருக்குறள்
தமிழில் தோன்றிய நீதி நூல்களுக்கெல்லாம் மகுடமாகத் திகழ்வதும் உலக இலக்கியமாக விளங்குவதும் திருக்குறளாகும். 2000 ஆண்டுகாலப் பழமையுடை இந்நூலைத் திருவள்ளுவர் இயற்றினார். அனைத்து சமயத்தவர்களாலும் போற்றப்படும் இந்நூல் உலகமொழிகள்     பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
குறள் வெண்பாக்களால் இயற்றப்பட்டுள்ளமையின் இந்நூல் யாப்பு அடிப்படையில் திரு என்னும் அடைமொழியைச் சேர்த்து திருக்குறள் என்ற பெயர்பெற்றுள்ளது. இந்நூல் அறத்துப்பால் 38 அதிகாரங்கள், பொருட்பால் 70 அதிகாரங்கள், இன்பத்துப்பால் 25 அதிகாரங்கள் என்னும் முப்பெரும் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 133 அதிகாரங்களுக்கு 1330 குறட்பாக்களைக் கொண்டு விளங்குகிறது. இந்நூலைச் சிறப்பித்து பல புலவர்கள் பாடியுள்ளனர் அந்நூல் திருவள்ளுவமாலை என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றது. இந்நூலுக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றுள் பரிமேலழகர் உரை சிறந்ததாகப் போற்றப்படுகிறது.
நாலடியார்
     பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்ததாகப் போற்றப்படுவது நாலடியார். நான்கடி கொண்ட வெண்பாக்களால் ஆன நூலாதலின் இந்நூல் நாலடியார் எனப் பெயர்பெற்றது. ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’, “பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்” என்ற பழமொழிகள் இதன் பெருமையை உணர்த்தும். சமண முனிவர்கள் பலரால் பாடப்பட்ட இந்நூலைப் பதுமனார் என்பவர் தொகுத்ததாக அறியமுடிகிறது. திருக்குறளைப் போன்றே இதுவும் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பெரும் பிரிவுகளை உடையது. ஜி.யூ.போப் இந்நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
பழமொழி நானூறு
ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழியை வைத்து, அதனோடு தொடர்புடைய நிகழ்ச்சியைச் சுட்டி அறத்தை வற்புறுத்தும் தன்மையில் அமைந்துள்ள இந்நூல் 400 வெண்பாக்களையுடையது. இந்நூலை இயற்றியவர் முன்றுறையரையனார். இந்நூலில் நுணலும் தன் வாயாற் கெடும்’, ‘நிறைகுடம் நீர் தளும்பல் இல்’, ‘முதலிலார்க்கு ஊதியம் இல்’ என்பன போன்ற மக்கள் வழக்கிலுள்ள பழமொழிகள் இலக்கியப் போக்கிற்கு ஏற்ப பயின்று வருகின்றன. இந்நூல்வழி பழந்தமிழ் மக்களின் புராணக் கதைகள், அரிய நிகழ்ச்சிகள் பலவற்றை அறிந்துகொள்ள முடிகிறது.
முதுமொழிக் காஞ்சி
நிலையாமை பற்றிய காஞ்சித்திணையில் முதுமொழிக்காஞ்சி என்பது ஒரு துறையாகும். இது உலக நிலையாமையை எடுத்துக்காட்டும் சான்றோரின் அனுபவ மொழியாதலின் முதுமொழிக்காஞ்சி என்ற பெயர்பெற்றது. மதுரைக் கூடலூர்கிழார் எழுதிய இந்நூல், பத்து அதிகாரங்களையும் அதிகாரத்திற்குப் பத்துக் குறட்டாழிசைகளாக 100 செய்யுட்களையும் உடையது.
ஆசாரக்கோவை
     ஆசாரம் என்ற சொல்லுக்கு ஒழுக்கம் என்பது பொருள். ஆசாரங்களின் தொகுப்பாக அமைந்த நூலாதலின் இந்நூல் ஆசாரக்கோவை என்பெயர் பெற்றது. பெருவாயின் முள்ளியார் என்பவரால் பல்வேறு வகையான வெண்பா வகையால் இயற்றப்பட்ட இந்நூல் 101 பாடல்களைக் கொண்டது. இந்நூலின் அறங்கூறும் முறை வடநூல் மரபைத் தழுவியது என்பர். இந்நூல் செய்யவேண்டியவை இவை விலக்கவேண்டியவை இவை என்று எடுத்துரைக்கின்றது. மேலும் இந்நூல் நீராடல், உண்ணல், வழிபடல், துயிலுதல் போன்ற தனிமனித ஆசாரங்களையும் எடுத்துரைக்கின்றது. வடமொழி ரிஷிகள் கூறியுள்ள ஆசாரங்களைத் தொகுத்து தமிழில் இயற்றப்பட்டிருப்பதாக இதன் சிறப்புப்பாயிரச் செய்யுள் கூறுகிறது.
நான்மணிக்கடிகை
நான்கு மணிகள் பதித்த ஆபரணத்திற்கு நான்மணிக்கடிகை என்று பெயர். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு அணிகலன், அவ்வணிகலன்களிலே பதிக்கப்பட்ட நான்கு நான்கு இரத்தினங்களாக நான்குநான்கு கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. என்ற அடிப்படையில் இந்நூலுக்கு நான்மணிக்கடிகை என்ற பெயர் வழங்குவதாயிற்று.104 வெண்பாக்களாலான இந்நூலை விளம்பிநாகனார் இயற்றினார்.
இன்னா நாற்பது
வெண்பா யாப்பில் 40 பாடல்களில் அமைந்த இந்நூல் மக்களுக்குத் துன்பந்தருவன இவை இவை என்று என்று எடுத்துரைக்கின்றது. இதனாலேயே இந்நூல் இன்னா நாற்பது என்று பெயர் பெற்றது. இந்நூலின் ஆசிரியர் கபிலர்.
இனியவை நாற்பது
வெண்பா யாப்பில் அமைந்த 40 பாடல்களைக் கொண்ட இந்நூல், ‘ஒப்பமுடிந்தால் மணவாழ்க்கை முன்னினிது’, ‘மானமழிந்தபின்     வாழாமை முன்னினிது’,‘வருவாயறிந்து வழங்கல் முன்னினிது’, ‘குழவி தளர்நடை காண்டலினிது’ என நல்லவை இவையிவை  என்று எடுத்துரைக்கின்றன. ஆகையால் இந்நூலுக்கு இனியவை நாற்பது என்று பெயர். இந்நூலை இயற்றியவர் பூதஞ்சேந்தனார்.
சிறுபஞ்சமூலம்
கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், நெருஞ்சி வேர் என்ற மூலிகைகளால் அமைந்த மருந்து போல ஒவ்வொரு பாட்டிலும் ஐந்து ஐந்து கருத்துகள் சொல்லப்பட்டுள்ளதால் இந்நூல் சிறுபஞ்ச மூலம் என்ற பெயர்பெற்றது. இந்நூலின் ஆசிரியர் காரியாசான். இந்நூலிலே 100வெண்பாக்கள் உள்ளன.
ஏலாதி
ஏலம், இலவங்கம், சிறுநாவல்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு என்ற ஆறு பொருட்களைச் சேர்த்துச் செய்த மருந்துக்கு ஏலாதி என்றுபெயர். இது உடல் நோயைத் தீர்க்கவல்லது இம்மருந்தைப் போலவே இந்நூலின் ஒவ்வொரு பாட்டிலும் சொல்லப்பட்ட ஆறு கருத்துக்கள் உளநோயைத் தீர்க்க வழிகாட்ட வல்லது என்பர்.எனவே மருத்தின் பெயரே இந்நூலுக்கும் பெயராயிற்று. திணைமாலை நூற்றைம்பது எழுதிய கணிமேதாவியாரே இந்நூலையும் எழுதியுள்ளார். இந்நூலில் 80 வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன.
திரிகடுகம்
சுக்கு, மிளகு, திப்பிலி என்ற இம்மூன்றும் சேர்ந்த மருந்திற்குத் திரிகடுகம் என்று பெயர். அது உடல்நலனைக் காக்க உதவுவதுபோல, ஒவ்வொரு பாடலிலும் சொல்லப்பட்ட கருத்துக்கள் மக்களுக்கு நலம் பயக்கும் மூன்று உறுதிப்பொருள்களைக் கூறுகின்றமையால் இந்நூல் திரிகடுகம் என்ற பெயர் பெற்றது. 100 வெண்பாக்களால் ஆன இந்நூலை நல்லாதனார் என்னும் புலவர் இயற்றியுள்ளார்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
அக நூல்கள்
வ. எண்
நூல்
இயற்றிய புலவர்
பாடல் எண்ணிக்கை
1
ஐந்திணை ஐம்பது
மாறன் பொறையனார்
5X10=50
2
ஐந்திணை எழுபது
மூவாதியார்
5X14=70
3
திணைமொழி ஐம்பது
கண்ணன் சேந்தனார்
5X10=50
4
திணைமாலை நூற்றைம்பது
கணிமேதாவியார்
5X30=150
5
கார் நாற்பது
மதுரைக் கண்ணன் கூத்தனார்
40
6
கைந்நிலை
(ஐந்திணை அறுபது என்றும் கூறுவர்)
புல்லங்காடனார்
5X12=60
புற நூல்
7
களவழி நாற்பது
பொய்கையார்
40
அற நூல்கள்
8
திருக்குறள்
திருவள்ளுவர்
1330
9
நாலடியார்
சமண முனிவர்கள்
400
10
இன்னா நாற்பது
கபிலர்
40
11
இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார்
40
12
திரிகடுகம்
நல்லாதனார்
100
13
ஏலாதி
கணிமேதாவியார்
80
14
சிறுபஞ்சமூலம்
காரியாசான்
100
15
ஆசாரக் கோவை
பெருவாயின் முள்ளியார்
100
16
நான்மணிக் கடிகை
விளம்பிநாகனார்
104
17
முதுமொழிக் காஞ்சி
கூடலூர் கிழார்
100
18
பழமொழி நானூறு
முன்றுறை அரையனார்
400

2 கருத்துகள்:

Shivani சொன்னது…

அருமை

hhh சொன்னது…

அருமையான விளக்கம், நன்றி