சங்க
இலக்கிய வரலாறு
உலகில் மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்றாகத் திகழும் தமிழ் மொழி மிகப் பழமையான
இலக்கண இலக்கியங்களைக் கொண்டு விளங்குகிறது. இத்தமிழ் மொழியில் பன்நெடுங்காலமாக வழக்கில்
இருந்து கால ஓட்டத்தில் மறைந்துபோன தமிழ் நூல்கள் ஏராளமானவை அவ்வாறு அழிந்தவைபோக கிடைத்தவற்றுள்
மிகத் தொன்மையானதாக விளங்குவது இலக்கணத்தில் தொல்காப்பியமும் இலக்கியத்தில் பாட்டும்
தொகையும் எனக் குறிப்பிடப்படும் சங்க இலக்கியங்களுமாகும். இவ்விலக்கியங்களே தமிழ் இலக்கியத்தில்
கொடுமுடியாக நின்று உலக அரங்கில் தமிழ்மொழியின் பெருமையையும், பண்பாட்டையும் பறைசாற்றுகின்றன.
பாண்டிய மன்னர்கள் தாங்கள் ஆண்ட தலைநகரங்களில் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி
அவற்றின் வழி திறம் வாய்ந்த தமிழ் அறிஞர்களைக் கொண்டு செய்யுள் இயற்றுதலும், இயற்றப்பட்ட
செய்யுட்களின் தரத்தை ஆராய்தலும் என்ற நிலைகளில் தமிழ் வளர்க்கும் பணியை மேற்கொண்டுவந்தனர்.
அந்த வகையில் தென்மதுரையைத் தலைமை இடமாகக்கொண்டு முதற்சங்கமும், கபாடபுரத்தைத் தலைமை
இடமாகக்கொண்டு இடைச் சங்கமும் தற்போதைய மதுரையைத் தலைமை இடமாகக்கொண்டு கடைச் சங்கமும்
நடைபெற்று வந்தன. இச்சங்கங்களுள் முதல் மற்றும் இடைச் சங்கங்கள் கடல்கோளின் காரணமாக
அழிந்துபோயின. கடைச்சங்கம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுவரை நடைபெற்றுவந்தது. இவ்வாறு சங்கமிருந்த
காலத்து தோன்றிய இலக்கியமாதலின் இவை சங்க இலக்கியங்கள் என அழைக்கப்பட்டன.
இத்தகைய சங்க இலக்கியங்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு காலங்களில் பல்வேறு
புலவர்களால் பாடப்பட்டவை. இப்பாடல்களைப் பாடிய புலவர்களும் அரசர் வணிகர் எனப் பல நிலைப்
பட்டவர்களாக இருந்தனர். இவர்களுள் பெண்பாற் புலவர்களும் அடங்குவர்.
நாட்டுப்புற மரபில் உதித்து பாணர்களால் வளர்க்கப்பட்டு கற்றறிந்த புலவர்களால்
செய்யுளாக இயற்றப்பட்டு வளர்க்கப்பட்ட இச்சங்கப் பாடல்கள் அரசர்களின் முயற்சியிலும்
ஆதரவிலும் தேடித் திரட்டி பாடுபொருள் அடிப்படையில் அகம் புறம் எனப் பகுக்கப்பட்டு அடிவரையறையின் அடிப்படையில் தனித்தனித் தொகுதிகளாக தொகுக்கப்பெற்றன. இவற்றை பதினெண் மேற்கணக்கு நூல்கள்
என்றும் குறிப்பிடுவர்.
எட்டுத்தொகை
புலவர் பலரால்
பல்வேறு காலகட்டத்தில் பாடப்பட்டு தனித்தனியே உதிரிகளாகக் கிடந்தவற்றைத் தேடித் திரட்டி
பாடலின் பொருண்மை அடிப்படையிலும், அடியளவு நோக்கியும் எட்டு தொகைநூல்களாக தொகுக்கப்பட்டன
அவற்றை,
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை.
எனப் பழம்பாடலொன்று
குறிப்பிடுகின்றது. இவற்றுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை என்ற ஐந்து தொகைநூல்களும் அகப்பாடல்களின்
தொகுப்பாகவும், பதிற்றுப்பத்து, பரிபாடல் ஆகிய இரண்டும் புறப்பாடல்களின் தொகுப்பாகவும்
பரிபாடல் அகமும் புறமும் கலந்த தொகுப்பாகவும் விளங்குகின்றது.
நற்றிணை
எட்டுத்தொகையில் அகத்திணையில்
அமைந்த நூல்களுள் ஒன்று நற்றிணை. ‘நல்’ என்ற அடைமொழி பெற்ற இந்நூலை நற்றிணை நானூறு
என்றும் கூறுவர். இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டது.
இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை. தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன்
மாறன் வழுதி" ஆவான். இந்நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் பின்னத்தூர் அ.நாராயணசாமி
ஐயங்கார் ஆவார்.
குறுந்தொகை
4அடி முதல் 8அடி வரை என்ற குறைந்த
அடிகள் கொண்ட 400 பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இந்நூல் குறுந்தொகை எனப் பெயர் பெற்றது.
பூரிக்கோ என்பவரால் தொகுக்கப்பட்ட இக் குறுந்தொகைப் பாடல்களை உரையாசிரியர்கள் பலரும்
அதிகமாக மேற்கோள் காட்டியுள்ளனர். இந்நூலில் ஆசிரியர் பெயர் தெரியாத புலவர்களுக்கு
அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அத்தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து 'அனிலாடு முன்றிலார்',
'செம்புலப்பெயல் நீரார்', 'குப்பைக் கோழியார்', 'காக்கைப்பாடினியார்' என உவமைச் சிறப்பால்
பெயர் பெற்ற ஆசிரியர்கள் 18 பேர் குறிப்பிடப்படுகின்றனர். திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கன்
முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டார்.
ஐங்குறுநூறு
3 அடி முதல் 6 அடி வரை என்ற அடியளவைக் கொண்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,
பாலை என ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் வீதம் 500 பாடல்களைக்கொண்டு விளங்குகிறது.
இப்பாடல்கள் அனைத்தும் ஆசிரியப்பாவால் ஆனவை.
ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள
பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன.
இதனை,
மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருதும் குறிஞ்சி கபிலர் - கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு
என்ற வெண்பா காட்டும். இதனை டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1903ஆம் ஆண்டு
முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.
அகநானூறு
எட்டுத்தொகை நூல்களுள் தொகுப்பு முறையில் தனித்து விளங்குவது அகநானூறு.
இத்தொகைநூல் அகப்பொருளில் அமைந்த 400 பாடல்களைக்கொண்டு விளங்குவதால் அகநானூறு என்ற
பெயர் பெற்றது. மேலும் எட்டுத்தொகையுள் 13-31 என்ற அடியளவுடைய
நீண்ட பாடல்களைக் கொண்டமையால்
இதனை 'நெடுந்தொகை' என்றும் குறிப்பிடுவர்
இத்தொகை நூலிலுள்ள 1 முதல் 120 வரையுள்ள பாடல்கள் களிற்றியானை நிரை என்றும், 121 முதல் 300 வரையுள்ள பாடல்கள் மணி மிடை பவளம் என்றும், 301 முதல் 400 வரையுள்ள பாடல்கள் நித்திலக் கோவை என்றும் மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாமல் இந்நூல் தொகுப்பில்
1,3,5,7 … என ஒற்றைப்படை எண்ணாலான பாடல்கள் பாலைத் திணையைச் சேர்ந்தவையாகவும், 2,8 எனும் எண்களைக்கொண்டு வருவன
குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், 4, 14 என 4 எனும் எண்ணைப் பெற்று வருவன முல்லைத் திணைப் பாடல்களாகவும்,6,16,26
என 6 எனும் எண்ணைப் பெற்று வருவன
மருதத்திணைப் பாடல்களாகவும், 10, 20, 30 என வரும் பாடல்கள் நெய்தல் திணைப் பாடல்களாகவும் தொகுக்கப்பட்டுள்ள முறைமை கவனிக்கத்தக்கது. இந்நூலினைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார்
மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.
கலித்தொகை
அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக
கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. அதன்படி கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்களைக் கொண்ட நூலாதலின்
கலித்தொகை என பாவகையால் பெயர்பெற்ற நூலாகத் திகழ்கின்றது. கலித்தொகைப் பாடல்களில் நல்லந்துவனார் பாடிய
கடவுள் வாழ்த்துப்பாடல் தவிர்த்து 149 பாடல்களுள், பாலைக்கலியில் 35 பாடல்களும்,
குறிஞ்சிக்கலியில் 29 பாடல்களும், மருதக்கலியில் 35 பாடல்களும், முல்லைக்கலியில் 17 பாடல்களும், நெய்தற்கலியில் 33 பாடல்களும், இடம்பெற்றுள்ளன.
இதனை முறையே பாலைபாடிய பெருங்கடுங்கோ, கபிலர், மருதன் இளநாகன், சோழன் நல்லுருத்திரன், நல்லந்துவனார் எனக் குறிப்பிடப்படும் ஐந்து புலவர்களும்
பாடியுள்ளனர்.
பதிற்றுப்பத்து
எட்டுத்தொகை நூல்களுள் புற நூலாக விளங்கும் இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப்
புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் தற்போது கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன.
இந்த எண்பது பாடல்கள் உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களைப் பற்றியும், அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்களான மூவரைப் பற்றியும் என இரண்டு
சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.
புறநானூறு
புறத்திணை சார்ந்த 400 பாடல்களைக் கொண்ட தொகை நூலாதலின் இது புறநானூறு எனப் பெயர்பெற்றது.
இத்தொகை நூல் சங்ககாலத்தில்
ஆண்ட அரசர்களைப் பற்றியும், மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் அறிந்துகொள்ள பெரிதும் துணை நிற்கின்றது.
பரிபாடல்
பல்வகைப் பாக்களும், பலவாய அடிகளும் பரிந்துவரும் பாட்டாதலால் பரிபாடல்
என்ற பெயரைப் பெற்றது. இது அகமும் புறமும் இணைந்த நூல். தொடக்கத்தில் 70 பாடல்களின்
தொகுப்பாக விளங்கிய இந்நூலில் தற்போது திருமால், முருகன், வையை ஆகியன பற்றி முறையே
6,8,8 என்ற அளவில் 22 பாடல்கள் மட்டுமே கிடைந்துள்ளன. இவற்றைப் பாடிய புலவர்கள் மொத்தம்
13 பேர். இதனைத் தொகுத்தவர் குறித்து அறிய இயலவில்லை.
எட்டுத்தொகை
வ.எண்
|
தொகை நூல்
|
அடி வரையறை
|
பாடல் எண்ணிக்கை
|
திணை
|
தொகுத்தவர்
|
தொகுப்பித்தவர்
|
1
|
நற்றிணை
|
9-12
|
400
|
அகம்
|
தெரியவில்லை
|
பன்னாடு
தந்த பாண்டியன் மாறன் வழுதி
|
2
|
குறுந்தொகை
|
4-8
|
400
|
அகம்
|
|
பூரிக்கோ
|
3
|
ஐங்குறுநூறு
|
3-6
|
500
|
அகம்
|
புலத்துறை
முற்றிய கூடலூர் கிழார்
|
யானைகட்சேய்
மாந்தரஞ் சேரல் இரும்பொறை
|
4
|
அகநானூறு
|
13-31
|
400
|
அகம்
|
மதுரை
உப்புரி குடிகிழான் மகன் உருத்திர சன்மன்
|
பாண்டியன்
உக்கிரப்பெருவழுதி
|
5
|
கலித்தொகை
|
|
150
|
அகம்
|
நல்லந்துவனார்
|
தெரியவில்லை
|
6
|
பரிபாடல்
|
|
22
|
அகம்
புறம்
|
தெரியவில்லை
|
தெரியவில்லை
|
7
|
பதிற்றுப்பத்து
|
|
100
|
புறம்
|
தெரியவில்லை
|
தெரியவில்லை
|
8
|
புறநானூறு
|
4-40
|
400
|
புறம்
|
தெரியவில்லை
|
தெரியவில்லை
|
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை தொடங்கி மலைபடுகடாம் முடிய உள்ள
பத்து நீண்ட பாடல்களின்
தொகுப்பே பத்துப்பாட்டு எனக்
குறிப்பிடப்படுகின்றது. இதனைப் பின்வரும் பழைய வெண்பா
ஒன்று தெளிவுபடுத்துகின்றது.
முருகு பொருநாறு
பாண் இரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருஇனிய
கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
இவற்றுள்
திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை,
மலைபடுகடாம் ஆகிய ஐந்தும் ஆற்றுப்படை என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தவை. இதனுடன் மதுரைக்
காஞ்சி என்ற நூலைச் சேர்த்து ஆறு புறநூல்கள் பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ளன.
இவைதவிர முல்லைப் பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை
என்ற மூன்றும் அக நூல்களாகும். எஞ்சிய நெடுநல்வாடை அகமா? புறமா? என்ற ஆய்வுக்குரிய
நூலாக விளங்குகிறது
திருமுருகாற்றுப் படை
முருகன் அருள் பெற்ற ஒருவன், அதைப் பெற விரும்பும் இன்னொருவனை முருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துவதாக
அமைந்த இந்நூலை இயற்றியவர் நக்கீரர். இவரும்
நெடுநல்வாடையைப் பாடியவரும் ஒருவரே என்றும் வெவ்வேறானவர் என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன.
ஆற்றுப்படுத்தப் படுவோன் பெயர்
நூலுக்கு அமைவது ஏனைய ஆற்றுப்படைகளின் பண்பு. ஆனால் அதற்கு மாறாக, பாட்டுடைத் தலைவன் பெயரால் அமைந்தது திருமுருகாற்றுப்படை. 317 அடிகளில்
அகவற்பாவால் பாடப்பட்ட இந்நூலுக்குப் புலவராற்றுப் படை என்ற பெயரும் உண்டு.
இதில் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆறுபடை
வீடுகள் பற்றியும், ஆங்காங்கு நடக்கும் வழிபாடுகள் பற்றியும்
கூறப்பட்டுள்ளன. இந்நூல் சைவத் திருமுறைகளுள் பதினோராம் திருமுறையிலும் இடம்பெற்றுள்ளது.
பொருநராற்றுப் படை
போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் (கூத்தன்)
தனக்குப் பரிசளித்த கரிகாலனிடம் இன்னொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்டது
இது. சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத்
தலைவனாகக் கொண்டு முடத்தாமக் கண்ணியார் இயற்றிய இப்பாட்டு 248 அடிகள் கொண்டது.
சிறுபாணாற்றுப் படை
ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடனைப்
புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது இப்பாட்டு. இது 269 அடிகளில் அகவற்பாவால் பாடப்பட்டது. சிறிய யாழை வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம்
ஆற்றுப்படுத்துவதாகப் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது.
பெரும்பாணாற்றுப் படை
இது கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர், காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையனைப் புகழ்ந்து பாடிய
500 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும். பேரியாழை வாசிக்கும்
பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத் தனக்குப் பரிசளித்த
வள்ளலான இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டதாதலால்
பெரும்பாணாற்றுப் படையாயிற்று.
மலைபடுகடாம்
வேளிர்குடியைச் சேர்ந்த நன்னன் சேய் நன்னன் என்பானை
இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார் பாடிய 583 அடிகள் கொண்ட அகவற்பாட்டு இது. பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம்
ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது. மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச்
சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.
முல்லைப்பாட்டு
பத்துப்பாட்டுள் அடியளவில் மிகச்
சிறியது முல்லைப்பாட்டு. இந்நூலைப் பாடியவர் நப்பூதனார். கார்ப்பருவம் வருவதற்குமுன் திரும்புவதாக வாக்குறுதி
தந்து போர்க்கடமை ஆற்றச் சென்ற தலைவன் திரும்பிவரும் வரையில், பிரிவுத் துயரைத்
தாங்கி, இல்லறம் காக்கும் மனைவியின் ஒழுக்கம் பற்றிப் பேசுவதே முல்லைத்திணை. முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப்
பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்தது.
பட்டினப்பாலை
காவிரிப் பூம்பட்டினத்தின் வளத்தைப் பாராட்டிப் பாடிய பாலைத் திணைப் பாட்டாதலின்
இதற்கு பட்டினப்பாலை என்ற பெயராயிற்று. 301 அடிகள் கொண்ட இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்றும் குறிப்பிடுவர். இதன்
தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான். இதனை இயற்றியவர் கடியலூர்
உருத்திரங்கண்ணனார். பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியரும் இவரே.
பொருள்தேடச் செல்ல விரும்பிய தலைவன் தன் மனைவியைப்
பிரிய மனமின்றித் தன் செலவினைக் கைவிட்ட நிலையில் பாடப்பட்டது இது. அகப்பொருள் இலக்கணம் இதனைச் ‘செலவழுங்குதல்’ என்று கூறும்.
குறிஞ்சிப் பாட்டு
261 அடிகள் கொண்ட இவ்வகப்பாட்டு களவொழுக்கத்தைச் சிறப்பித்துக் கூறுவது. குறிஞ்சிக்குரிய இயற்கைப் புணர்ச்சியும் அதற்குரிய
நிமித்தங்களும் இதில் காணப்பட்டமையால் குறிஞ்சிப்பாட்டாயிற்று. பெருங்குறிஞ்சி
என்ற பெயரும் இதற்கு உண்டு. இது அறத்தொடுநிற்றல் என்ற அகத்துறைக்கு அழகான
எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. 99 மலர்களைப் பறித்து பெண்கள் பாறையில் குவித்து அருவியில் நீராடி மகிழ்ந்தமை
பற்றிய செய்தி குறிப்பிடத்தக்கது. ஆரிய அரசன் பிரகத்தன் என்பானுக்குத் தமிழ் அகத்திணைச் சிறப்பைக் கூறும்
நோக்கத்தில் கபிலரால் இயற்றப்பட்டது இச்செய்யுள்.
மதுரைக் காஞ்சி
பத்துப்பாட்டுள் மிகவும் நீண்ட பாட்டான இது 782 அடிகளைக் கொண்டது. இது, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு, நிலையாமையை எடுத்துக்கூறி, வாழ்நாளை நன்முறையில் வாழுமாறு அறிவுறுத்தும் வகையில்
மாங்குடி மருதனார் இயற்றப்பட்டது மதுரைக்காஞ்சியாகும்.
இந்நூல் கூறும் நிலையாமை உலக வாழ்க்கையை இகழ்ந்து
ஒதுக்குவதை நோக்கமாகக்
கொள்ளாமல், உலகம் நிலையானது.
இதில் நிலைத்த புகழை நிலைநிறுத்த வேண்டும் என அறிவுறுத்துகிறது.
நெடுநல்வாடை
188 அடிகளில் இந்நூலை இயற்றியவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
இவரும் திருமுருகாற்றுப்படை ஆசிரியரும் வெவ்வேறு புலவர்கள் என்றும், இருவரும் ஒருவரே என்றும் இருவேறு கருத்துக்கள் கூறப்படுகிறது.
காதலன் பகைவர்மேல் படையெடுத்துச் சென்று பாசறையில்
இருக்கிறான். காதலி பிரிவுத் துயரால் வாடிக்கிடக்கிறாள். காதலியின் துயரைப் போக்க
முடியா அரண்மனைப் பெண்டிர், தலைவன் விரைவில் திரும்பி வருமாறு கொற்றவையை வழிபாடு செய்கின்றனர். இதுவே இதன் மையக் கருத்து.
எல்லோருக்கும் பொதுவான வாடைக்காற்று பிரிவுத் துயரால் வருந்தும் காதலிக்கு
நெடியதாகத் தோன்றுகிறது. அதாவது, ஒரு பொழுது ஓர் ஊழி போல் தோன்றுகிறது. ஆனால் பாசறையில் தங்கி
போர்ச் செயலில் சிந்தையைச் செலுத்தும் தலைவனுக்கு இவ்வாடை நல்வாடையாக விளங்குகிறது.
என்பதே இப்பாட்டின் பெயர்ப்
பொருத்தம்.
இவ்வகப்பாட்டின் எந்த இடத்திலும் யாருடைய
பெயரும் சுட்டிக் கூறப்படவில்லை எனினும், ‘வேம்பு தலை யாத்த நோன்காழ் எஃகம்’ என்ற பாடலடி
பாண்டியனுக்குரிய வேப்பம் பூவைச் சுட்டுவதால் இதனைப் புறப்பாட்டு என்றும் குறிப்பிடுவர்.
பத்துப்பாட்டு
வ.எண்
|
நூல்
|
அடியளவு
|
திணை
|
பாடிய புலவர்
|
பாடப்பட்டவர்
|
1
|
திருமுருகாற்றுப்படை
(புலவராற்றுப்படை)
|
317
|
புறம்
|
நக்கீரர்
|
முருகன்
|
2
|
பொருநராற்றுப்படை
|
248
|
புறம்
|
முடத்தாமக்
கண்ணியார்
|
கரிகால்
சோழன்
|
3
|
சிறுபாணாற்றுப்படை
|
269
|
புறம்
|
நல்லூர்
நத்தத்தனார்
|
ஓய்மாநாட்டு
நல்லியக்கோடன்
|
4
|
பெரும்பாணாற்றுப்படை
|
500
|
புறம்
|
கடியலூர்
உருத்திரங்கண்ணனார்
|
தொண்டைமான்
இளந்திரையன்
|
5
|
மலைபடுகடாம்
(கூத்தராற்றுப்படை)
|
583
|
புறம்
|
பெருங்கௌசிகனார்
|
நன்னன்
சேய் நன்னன்
|
6
|
முல்லைப்பாட்டு
|
103
|
அகம்
|
நப்பூதனார்
|
-
|
7
|
பட்டினப்பாலை
|
301
|
அகம்
|
கடியலூர்
உருத்திரங் கண்ணனார்
|
கரிகால்
சோழன்
|
8
|
குறிஞ்சிப்பாட்டு
|
261
|
அகம்
|
கபிலர்
|
-
|
9
|
மதுரைக்காஞ்சி
|
782
|
புறம்
|
மாங்குடி
மருதனார்
|
பாண்டியன் நெடுஞ்செழியன்
|
10
|
நெடுநல்வாடை
|
188
|
அகம்
புறம்
|
நக்கீரர்
|
-
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக