நேர்த்திக்கடன்
கொழுப்பெடுத்து அலைகிறது
கொரோனா வைரஸ்
தனித்திருந்து அதற்குத்
தண்ணி காட்டுங்கள்
அடிக்கடி உங்கள்
கைகளுக்குச் சோப்பு போடுங்கள்
அதுவும்கூட சோப்புக்குத்தான்
மயங்குகிறதாம்
மாய்கிறதாம்
இருமலோ
தும்மலோ
இப்போதைக்கு
யார் வந்தாலும்
காட்டிக்கொடுக்காது
அதற்கு
உங்கள் கைக்குட்டையில்
அடைக்கலம் தாருங்கள்
இப்போதைக்கு
பக்தியோடு
கந்தசஷ்டி கவசம்
பாடினால் மட்டும் போதாது
உயிர்க்காக்க
முகக்கவசமும் தேவை
என்பதை உணருங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு
ஓடிப்பிடித்து
விளையாடுவதற்குப் பதிலாய்
கொஞ்ச நாள்
ஒளிந்து விளையாட
அறிவுறுத்துங்கள்
தொடர்ந்துவா
தொட்டுவிடாதே!
முன்னேறிப்போ
முத்தமிடாதே!
உனக்கும் எனக்கும்
பத்து மீட்டர்
இடைவெளி கட்டாயம் தேவை!
இப்படி வாகனங்களில்
எழுதப்பட்ட
எச்சரிக்கை வாசகங்கள்
இப்போது மனிதனுக்கும்
பொருந்துவதைக் கவனி!
எந்த வேடத்திலும்
வரலாம்
கொரோனா வைரஸ்
என்பதால்
அரசாங்கம் போட்ட
லஷ்மண ரேகையைத்
தாண்டாதே!
அவசியத் தேவைக்கன்றி
ஊர் எல்லையை மட்டுமில்லை
உன் வீட்டு
வாசற்படியைக்கூடத்
தாண்டக்கூடாதென
உனக்கு நீயே
காப்புக் கட்டிக்கொள்
உன்னைப் பார்க்கப்போய்
ஊருக்கே நோய்
என்ற அவப்பெயர்
தங்களுக்கு
வேண்டாமென்றுதான்
தெய்வங்களும்
கோயிலுக்கு வரவேண்டாமென
பக்தர்களுக்குக்
கோரிக்கை வைத்திருக்கின்றன
என்பதை அறிந்துகொள்
நாட்டில்
தந்தி சேவை
நிறுத்தப்பட்டதென்னவோ உண்மைதான்
அதற்கு பதிலாய்
வாட்ஸ்அப்பில்
நீங்கள் தொடங்கியிருக்கும்
வதந்தி சேவை
தேவைதானா? என்பதை யோசி!
சங்கிலி பறிப்பு
தவறுதான்
கூடாதென்பீர்கள்..
ஆனால்
கொரோனா என்ற
வைரஸ் சங்கிலியை மக்கள்
கூடாமலிருந்து பறிப்பதுதான்
இன்றைய யுத்த தர்மம்
என்ற உண்மையை
ஊருக்கு உபதேசம் செய்
காற்று
மரத்திடம்
சலவைக்குப்போய்
வந்திருக்கிறது
அதை விரைவில்
அழுக்காக்க
ஆசைப்படாதீர்கள்
வெடிச்சத்தமும்
வாகன இரைச்சலும் இல்லாததால்
பறவைகளில் பாடல்
சீரான அலைவரிசையில்
கேட்கத் துவங்கியிருக்கிறது
அதைச் சிதைத்துவிடாதீர்கள்
இந்தக் கொள்ளை நோய் ஒழிந்தால்
ஊர் எல்லையில் இருக்கும்
உங்கள்
குலதெய்வத்திற்கு
குடும்பத்தோடு
மரக்கன்றுநட்டு
நேர்த்திக்கடன் செய்வதாய்
வேண்டிக்கொள்ளுங்கள்
ஆம்
இனியும் இயற்கையைப்
பாழ்படுத்தமாட்டோமென்று
நேர்ந்துகொள்ளுங்கள்
எதிர்காலத்தில் தெய்வகுத்தம்
நேராமல் பார்த்துக்கொள்ளுங்கள்
வீதிகளில் நடமாடாமல்
வீடுகளில் இருங்கள்
விதிமீது பழிபோடாமல்
விதிப்படி நடந்திடுங்கள்
தனித்திருந்தால் ஞானம் பிறக்கும்
புது ஞாலம் பிறக்கும்.
- ச.நீலமேகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக