புதன், 17 ஜூன், 2020

பாட்டிமார்கள்...

காலநேரக் கணக்கற்ற
உன் அழுகைக்கு
அவள் மட்டுமே
புரிந்துகொண்ட
அகராதியில் தொகுக்கப்படாத
அர்த்தங்கள்...

தவறி விழுந்தபோதெல்லாம்
வாசற்படியோடும்
தெருவில்
இடரி விழச்செய்த
பருக்கைக் கல்லோடும்
அவள் செய்துவைத்த
சமரசங்கள்....

முழுதாய்
மொழி அறியாத வயதில்
நீ கண்ணுறங்க
அவள் சொல்லித் தீர்த்த
கணக்கற்ற
கதைகள்...

காலம் மறந்து
விளையாடி
வீடுதிரும்புகையில்
உன் வருகை
எதிர்பார்த்து
ஏங்கிக்கிடந்த பார்வைகள்...

உன் பசி தீராமல்
தன் பசி அடங்காதவள்

வலிகளை...
துன்பங்களை...
வாழ்நாளை...
மாற்றிக்கொள்ள
வகைசெய்து
இயற்கை படைத்திருந்தால்

இன்று உனக்குப்
பாரமாய்
இருந்திருக்கமாட்டாள்
மூத்துத் தளர்ந்த
தாய்.

- ச. நீலமேகன்.
17-06-2020
10.30 PM.

கருத்துகள் இல்லை: