வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

பாத்திரக்கடை

பாத்திரக்கடை

 

தான்பட்ட துயரத்தை அடுத்தவன் படக்கூடாது என்று நினைக்கிற மனிதர்கள் வரவர சமூகத்தில் குறைந்துபோய்விட்டார்கள். போகிற வழியில் பள்ளம் இருக்கிறது என்பதை நாம் ஏன் சொல்லவேண்டும். அப்படிச் சொல்வதால் நமக்கு என்ன லாபம், நான் விழுவதற்குமுன் எவனாவது எனக்குச் சொன்னானா என்ன? நான் அதில்விழுந்து எப்படியெல்லாம் துடித்தேன் அதை அவனும் விழுந்து அனுபவிக்கட்டுமே என்று நினைக்கிற மனநோயாளிகள் சமூகத்தில் நிறையபேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அது கும்பகோணம் பாத்திரக்கடை, கும்பகோணம் பாத்திரக்கடை என்றால் அது கும்பகோணத்தில் இருக்கிற பாத்திரக்கடை என்று பலரும் நினைப்பது இயற்கைதான். அது முழுதாய் எதையும் ஆராயாமல் அவசரத்தில் எடுக்கிற முடிவைப்போல தப்பாய்ப்போய் முடியும் அது போலத்தான் இதுவும்.

கும்பகோணம்  டிகிரி காப்பி  என்று சாலையோரத்தில் போர்டு வைத்துவிட்டு சாலை ஓரங்களில் தேநீர் கடைகள் நடத்துவதை பேருந்துப் பயணத்தில் கவனித்திருப்பீர்கள். அந்த தேநீர்கடையில் விற்கப்படும் காபி கும்பகோணத்திலிருந்து கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறதா என்ன? அது போலத்தான் அந்த கும்பகோணப் பாத்திரக்கடையும், அது சம்பந்தம் வசிக்கிற கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள நகரமான பல்லாவரத்தில் இருக்கிறது.

அதற்குப் பாத்திரக்கடை என்று பெயர் இருக்கிறதே ஒழிய அங்கு வந்து பாத்திரங்களை  வாங்கிச் செல்பவர்களைவிட பாத்திரங்களை வைத்துச் செல்பவர்கள்தான் அதிகம். விவசாயிகளும் அன்றாடங்காய்ச்சிகளும் குடிகாரர்களும்  அடகுவைக்கும் அந்தஸ்தைப் பெற்றுவிட்ட பித்தளைப் பாத்திரங்களை கொண்டுவந்து அந்தப் பாத்திரக்கடையில் அடகுவைத்துவிட்டு பாத்திரக்கடைக்காரன் கொடுக்கிற பணத்தை வாங்கிக்கொண்டு செல்வார்கள்.

அந்தப் பாத்திரக்கடை முதலாளியின் பேச்சும் உருவமும் சினிமாவில் வருகின்ற காமெடியன் போல இருந்தாலும் நிஜத்தில் படுகெட்டிக்காரன். பணம் வந்துவிட்டால் கெட்டிக்காரத்தனமும் கூடவே வந்துவிடும் என்பார்களே அதற்கு அவன்தான் உதாரணமோ என்னவோ?

அந்தப் பாத்திரக்கடை முதலாளிக்கு ஒருமகன் வயது ஒரு இருபது இருக்கலாம் ஆனால் அவனது உருவத்தை ஒரு மாமிசமலை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அந்த முதலாளி ஒருமுறை சம்பந்தத்திடம், “சம்பந்தம் இவன் எப்படி இருக்கிறான் பாரு வெட்டிப்போட்டா நாலு தெருவுக்குக் கறியாகும்” என்று சொல்லி அவனை பரிகாசம் செய்தபோது சம்பந்தம் சிரித்துவிட்டார். சம்பந்தம் சிரித்ததைப் பார்த்து அந்த முதலாளி மகனுக்கு அப்போது கோபங்கோபமாய் வந்தது. அது இந்திரப்பிரஸ்தத்தில் பாண்டவர் கட்டிய மாய மாளிகையில் தண்ணீர் என்று அறியாமல் தடுமாறி அதில் விழுந்துவிட்ட துரியோதனனைப் பார்த்து பாஞ்சாலி சிரித்த கதையாகப் போய்விட்டது. சம்பந்தம் சிரித்தபோது பாத்திரக்கடைக்காரன் மகனின் முகத்தில் அந்த துரியோதனக் கோபம் வெளிப்பட்டது. அதன் விளைவுகளை சம்பந்தம் பலநாள் அனுபவித்துவிட்டான். சம்பந்தத்தின் முகத்தில் இனி சிரிப்பே வரக்கூடாது என்று அந்த பாத்திரக்கடைக்கார முதலாளியின் மகன் நினைத்தானோ என்னவோ, அந்த சம்பவத்திற்குப்பிறகு சம்பந்தத்திற்கு நிமிரமுடியாமல் வேலை வைத்துக்கொண்டே இருந்தான்.

அந்தக் காலத்தில் பெண்ணின் கல்யாணச் சீர்வரிசையில் பித்தளைப் பொருட்களைக் கொடுத்தனுப்புவதின் நோக்கம் இதுதானோ என்னவோ. அடகு வைக்கப் பொன்நகையோ வெள்ளிநகையோ இல்லாத வீடுகளில் அதற்கடுத்து அந்தஸ்தைப் பெற்ற உலோகம் செப்பும், பித்தளையும்தான் என்பது அனுபவப்பட்டவர்களுக்குத் தெரியும்.

அந்தப் பாத்திரக்கடலில்… மன்னிக்கவேண்டும் அந்தக்கடையின் விளம்பர போர்டில் அப்படித்தான் எழுதியிருந்தது. அதனால் அப்படிச் சொல்வதில் தவறேதுமில்லை. அந்தப் பாத்திரக்கடலில் அடகுவைத்து மீட்கமுடியாமல் மூழ்கிப்போன பித்தளைத் தவலைகளும், செப்புத் தவலைகளும் அண்டாக்களும் ஏராளம். சில நேரங்களில் குடும்பக் குத்துவிளக்கு எரிய, வீட்டில் எரிந்துகொண்டிருந்த குத்துவிளக்குகளும் கூட அந்தப் பாத்திரக்கடைக்கு அடைக்கலம்தேடி வரும்.

ஒரு வகையில் அதைப் பாத்திரக்கடல் என்று சொல்வதும் பொருத்தம்தான், வறுமைக் கடலில் தத்தளிக்கிறவன் கரைசேர அவன்வீட்டுப் பித்தளைப் பாத்திரம் ஒரு படகு, அந்தப் படகு பலநேரங்களில் கடலிலேயேதான் கிடக்கவேண்டியிருக்கும். அதைப் போலத்தான் அடகு வைத்த பாத்திரமும். பல நேரங்களில் அதன் ஆயுள் அங்கேயே முடிந்துவிடுவதும் உண்டு.

அடகு வைத்துவிட்டுப்போனவன் வீட்டைவிட்டு தரித்திரம் போனால்தானே அவன் அதைத்திரும்ப மீட்க வருவான். அப்படி அவர்கள் வீடுகளிலிருந்து அதுவும் போகாது தரித்திரத்தை விரட்டப்  பணபலம் என்ற அடியாள் வேண்டும். அதற்கு அவன் எங்கே போவது. அதனால் தரித்திரத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் பாத்திரத்தை மீட்க வருவதே இல்லை.

அடகுவைத்த பாத்திரத்தின் மதிப்பைவிட வட்டி அதிகமாகிவிட்டால் அதை வந்து மீட்பதற்கு அடகுவைத்தவர்கள் ஒன்றும் மடையர்கள் இல்லை. ரொம்ப கெட்டிக்காரத்தனமாக யோசித்து அதன்மீது வைத்திருந்த பற்றை அறவே நீக்கிவிடுவார்கள் அவ்வளவுதான். பொருள் இன்றைக்கு வரும் நாளைக்குப் போகும் ஆனால் உயிர் போனால் திரும்புமா என்பது அவர்களின் அறிவார்ந்த சிந்தனை.

அந்தப் பாத்திரங்களைத் தாய்வீட்டிலிருந்து சீதனமாய் கொண்டுவந்த மனைவி மட்டும் அடுத்தபொருளை அடகுவைக்க கணவன் எடுக்கும்போது போனமுறை கொண்டுபோன தவலையைப்பற்றியோ அண்டாவைப்பற்றியோ கேள்வி எழுப்புவாள். கணக்கு வழக்குத் தெரியாத அவளுக்கு அப்போதுதான் அண்டா கடலில் மூழ்கிப்போன கதை தெரியவரும். புளியைப்போட்டு பளபளவென்று தவலையைத் தேய்த்துத்தேய்த்து தெருக்குழாயில் தண்ணீர் பிடித்ததெல்லாம் நினைவுக்கு வரும். அதில் முதல்முதலாக தன் அம்மா தீபாவளிப்பலகாரம் கொண்டுவந்ததும் நினைவுக்குவந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போகும்.

அந்த நேரத்தில் தன் கணவனைப் போல பாத்திரங்களை அடகுவைக்காத ஒரு மாப்பிள்ளையைத் தேடி தன் மகளுக்கு எப்பாடுபட்டாவது கட்டிவைத்துவிட வேண்டும் என்ற எதிர்காலக் கனவும் பாத்திரங்களைத் தொலைத்த பெண்களுக்கு வந்துபோகும். வேறென்ன செய்யமுடியும் அவர்களால். நாட்டின் பொருளாதாரம் அவர்களை அப்படித்தான் வாழச்சொல்லிப் பழக்கியிருக்கிறது.

சம்பந்தத்திற்கும் அந்தப் பாத்திரக்கடைக்கும் ஒரு சம்பந்தம் இருந்தது. அவரும்கூட ஒருமுறை அந்தப் பாத்திரக்கடலில் தன்வீட்டு அண்டாவை அடகுவைத்திருக்கிறார். ஆனால் நல்ல வேளையாக அண்டாவை மூழ்கவிடாமல் கரைசேர்த்துவிட்டார். சொந்தமாய் உழைக்கத் திராணியற்று அந்தப் பாத்திரக்கடைக்கு தினக்கூலி வேலைக்குப் போனார் சம்பந்தம். முப்பத்தைந்து வயது, ஒரு மனைவி மூன்று பிள்ளைகள். மூன்று பிள்ளைகளைப் பெற்று சாதனை படைத்துவிட்டதால் உழைப்பதிலிருந்து ஓய்வெடுத்துக்கொள்ள நினைத்தது தேகம். அதனால்தான்  சம்பந்தத்தின் மனம் செய்கிற வேலையை விட்டுவிட்டு இந்த பாத்திரக்கடைக்குத் தாவியது. அங்கு போனபிறகுதான் இந்த சனியனுக்கு அந்த சனியனே மேல் என்று சம்பந்தத்தை நினைக்கும்படிச் செய்துவிட்டது அந்தப் பாத்திரக்கடை உத்தியோகம்.

சம்பந்தம் வேலைக்கு வருவதாய்ச் சொன்னவுடனேயே அந்தப் பாத்திரக்கடைக்கார முதலாளி உடனே வரச்சொன்னதற்கு ஒரே காரணம், அந்தக்கடையில் அதிகநாள் யாரும் தாக்குப்பிடித்து வேலை செய்தது கிடையாது, வேலை செய்யவும் முடியாது. வேலை செய்ய வந்தவனை முதலாளி, எந்திரம் என நினைத்து வேலை வாங்கினால் எப்படி?

காலை எட்டு மணிக்கு பாத்திரக்கடையைத் திறந்ததும் இரவு எடுத்துவைத்த பாத்திரங்களை மீண்டும் ஒவ்வொன்றாகத் துடைத்து  வெளியில் ஜனங்களின் பார்வையில் படுகிறபடி எடுத்து மாட்டவேண்டும். அப்புறம் யாராவது பாத்திரம் வாங்க வந்தால் எடுத்துக்கொடுக்கவேண்டும். அவர்கள் வாங்கிச்சென்ற அடுத்த நொடியில் அடகு வைக்கவோ அல்லது அடகுவைத்த பொருளை மீட்கவோ யாராவது வருவார்கள். அவர்களிடமிருந்து ரசீதை வாங்கிப் பார்த்துவிட்டு நெம்பரை சீட்டில் எழுதிக்கொடுத்து மாடியின்மேலேபோய் தேடி எடுத்துவரச்சொல்லுவார். அப்போது அடகு வைத்து மூழ்கிப்போன பாத்திரங்களின் கணக்கு முதலாளியின் கண்ணில்படும். அடகு வைக்க வந்தவனோ அல்லது மீட்க வந்தவனோ போனபிறகு ரசீதுப் புத்தகத்தைப்பார்த்து மூழ்கிப்போய்விட்ட பாத்திரத்தின் அடையாள எண்ணை சீட்டில் குறித்துக்கொடுத்து அதையும் தேடி எடுத்துவரச் சொல்லுவார்.

மீட்க வந்தால் தேடி எடுத்துவந்த பாத்திரத்தை கொடுத்துவிட வேண்டும். மூழ்கிப்போனால் அதை சம்மட்டியால் அடித்து ஒடுக்கவேண்டும். அதுதான் சம்பந்தத்திற்கு சவலான வேலை.

தேடிச்சென்ற பாத்திரம் தவலையாக இருந்தால் ஓரளவுக்குப் பிழைத்துக்கொள்ளலாம். தேட வேண்டியது அண்டா என்றால் அவ்வளவுதான் தேடுகிறவன்பாடு.  தவலை தேடுவது ஓரளவுக்குச் சுலபம்தான்.  ஆனால், அண்டாவைத் தேடுவது திருப்பதியில் மொட்டைத் தலையைத் தேடுவதைப்போல. அது அவ்வளவு சுலபமில்லை. அதற்கு ஒரே காரணந்தான் சிறிய தவலையாக இருந்தாலும் தவலைக்குள் தவலையைப் போடமுடியாது அது பிறந்த அம்சம் அப்படி, ஆனால் அண்டாக்களின் பிறப்பு அப்படியல்ல பெரிய அண்டாக்கள் சிறிய அண்டாக்கள் வந்து புகுந்துகொள்ள பெருந்தன்மையாக இடம் தரும்.

ஜெயிலுக்குள் வரும் கைதிக்கு ஒரு எண் கொடுப்பார்களே அப்படித்தான் அடகுக்கடைக்கு வந்த பாத்திரத்திற்கும் ஒவ்வொரு எண் மெழுகு சாக்பீஸால் எழுதப்பட்டு கொடுக்கப்படும். அதைக்கொண்டுபோய் மாடியில் தவலைமேல் தவலையாக அடுக்கி வைக்க வேண்டும். எவனாது மீட்பதற்காக வந்தால் அந்த எண்ணைக்கொண்டுதான் அந்த பாத்திரத்தை அடையாளம் காணமுடியும்.

பணத்தைக்கொடுத்து மீட்டுவிட்டால் அதற்கு மீண்டும் மறுவாழ்வு இல்லாவிட்டால் தேடிப்பிடித்து சம்மட்டியால் அடித்து அதன் வாழ்வை முடித்துப் பாத்திரத்தை எடைக்குப் போட்டுவிடுவார்கள்.

பொருளற்றவர்களை உலகம் நசுக்குவதைப்போல எவ்வளவு நசுக்கமுடியுமோ அவ்வளவு நசுக்கவேண்டும். இந்த நசுக்குகிற வேலையும் சம்பந்தம் வகிக்கும் உத்தியோகத்திற்குரிய வேலைதான். அதனால் அவனுக்கு ஓய்வு தரக்கூடாது என்பதில் குறியாக இருக்கும் அந்த முதலாளிக்கோ அல்லது அந்த முதலாளியின் வளர்ப்பில் வந்த பிள்ளைக்கோ தோன்றினால் அடகுவைத்து மூழ்கிப்போன பாத்திரங்களை இனங்கண்டு அதைத்தேடிக்கொண்டுவந்து சம்மட்டியால் அடித்து நசுக்கச்சொல்லுவார்கள்.

எல்லாவற்றையும் நசுக்கிமுடித்துவிட்டு அவன் கொஞ்சநேரம் உட்கார நினைக்கிறான் என்பது அவர்களுக்கு எப்படித்தான் தெரியுமோ. அதற்குச் சற்றும் இடங்கொடுக்காமல் ஏற்கனவே துடைத்துப் பளபளப்பாக இருக்கும் பாத்திரமாக இருந்தாலும் அதைத் திரும்பவும் துடைத்துப் பாலித்தீன் கவரில்போட்டு அடுக்கிவைக்கச் சொல்லுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை வேலை செய்கிறவனுக்கு நாம் கூலி கொடுக்கிறோம் அப்புறம் எதற்கு ஓய்வுகொடுக்க வேண்டும் என்பது அவர்களின் தர்மம்.

சம்பந்தம் தன்னை அடகுப்பாத்திரம் தேடிப்போன இடத்தில் கொஞ்சம் ஆஸ்வாசப்படுத்திக்கொண்டால் உண்டு. இல்லாவிட்டால் அவன் நிலை இனாமாய் கிடைத்த மாட்டை நிலாவில் கட்டி ஓட்டுகிற கதையாகப் போய்விடும். பாத்திரங்களை எடுக்கிறபோது கவனமாக எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் சரிந்து எடுக்கிறவன்மீதே விழும். முதன் முதலாக வேலைக்குச் சேர்ந்த புதிதில் அப்படி ஒரு அண்டாவை எடுக்கப்போனபோது மேலிருந்து உருண்டு வந்து தன் மண்டையைப் பதம்பார்த்த அனுபவத்தை அவனால் மறக்கமுடியாது. கோழிமுட்டை அளவுக்கு வீங்கிவிட்டது. சில நேரங்களில் அடகுப்பாத்திரம் அப்படி விழும்போது ஒடுக்காகவோ சொட்டையாகவோ போய்விடும் ஆனால் அதைப்பற்றி அவன் கவலைப்பட்டதில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால் பாத்திரத்தில் ஏற்படும் சொட்டைகளுக்கு தான் ஜவாப்தாரியல்ல என்று முன்கூட்டியே ரசீதில் அச்சடித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பலமுறை பார்த்ததால்  வந்த எண்ணம் அது.

அந்த நான்கைந்துநிமிட ஓய்வெடுக்கும் வாய்ப்பு அடகுப்பாத்திரம் தேடும் இடைவேளையில் கிடைக்காதபோது அந்த வாய்ப்பை மூத்திரம் கழிக்கப் போகும் நேரத்தில் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதற்கு அவன் கொஞ்சதூரம் நடந்து ரிஜிஸ்த்தார் ஆபீஸ் சந்துக்குப் போகவேண்டும். அதற்காக அடிக்கடி மூத்திரம் போக முடியுமா என்ன? இவனுக்கே செய்கிற வேலையில் அது மறந்துபோய்விடும். மூளை சற்று விழிப்படைந்து தூண்டினால்தான் உண்டு.

பசி எடுக்கிறது என்றால் அவனாகப் போய்ச் சாப்பிட்டால்தான் உண்டு. பாத்திரக்கடைக்காரன் போய் சாப்பிட்டுவிட்டுவா என்று சொல்லுவான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தால் அப்படியே கிடக்க வேண்டியதுதான். முதலாளியின் சிந்தைமுழுக்க தான் கொடுக்கும் நாற்பது ரூபாய் கூலிக்கு  எவ்வளவு வேலை வாங்கலாம் என்பதிலேயே இருக்கும்.

காலையில் வந்ததிலிருந்து உட்கார நேரமின்றி வேலை செய்துகொண்டே இருப்பதால் சம்பந்தத்திற்கு நேரம் போவதே தெரியாது. காலையில் எடுத்துமாட்டிய பாத்திரங்கள் அனைத்தையும் எடுத்துவைக்க இரவு பத்துமணியாகிவிடும். கடையைப் பூட்டுவதற்குமுன் பாத்திரக்கடைக்காரன் தான் அமர்ந்திருக்கும் இடத்திற்கு இடப்பக்கச் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் வெங்கடாஜலபதி படத்தைப்பார்த்து கும்பிட்டுவிட்டு கதவைச் சாத்தி கற்பூரம் ஏற்றிவிட்டுக் கிளம்பும்போது நாற்பது ரூபாய் கொடுப்பான். அதை வாங்கிக்கொண்டு சைக்கிளை மிதித்து வீடுவந்து சேர இரவு 11 மணியாகிவிடும்.

இந்த எந்திர வாழ்க்கை சம்பந்தத்திற்கு நீண்டநாள் நீடிக்கவில்லை. நீடிக்கவில்லை என்றால் அந்தப் பாத்திரக்கடைக்காரன் சம்பந்தம் வேலைசெய்வது போதுமானதாக இல்லை என்று கருதி அவரை வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டதாக நினைத்துக்கொள்ளக்கூடாது. தான் எவ்வளவு வேலை செய்தாலும் அந்தப் பாத்திரக்கடைக்காரனுக்குப் பத்தாது என்பதால் இவர் நின்றுவிட்டார்.

ஆனாலும் பரிட்சை முடிந்து விடப்பட்ட விடுமுறைநாளில் உலகப் பாடம் படித்து கரைசேரட்டுமே என  நினைத்து அந்தப் பாத்திரக்கடலுக்குள் தன் மகனை தள்ளிவிட்டாரோ என்னமோ தெரியவில்லை. சம்பந்தத்தின் மகன் பார்த்தசாரதி பாத்திரக்கடலில் மூழ்கிப்போன தவலைகளைத் தேடிக்கொண்டிருந்தான்.

 

-ச. நீலமேகன்

13-08-2021

 

4 கருத்துகள்:

jeykumar சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அருண்குமார். சே சொன்னது…

பொருள்வாங்க செல்லும் கடையில் பணிபுரியும் பணியாளர்களும் சக மனிதர்கள் தான் என உணரவேண்டும்........சிறப்பான சிறுகதை

ச. நீலமேகன் சொன்னது…

நன்றி தோழர்களே

முனைவர் ச.இரமேஷ் சொன்னது…

இந்த ஒரு சிறுகதையே போதும் உலகப்பாடம் அறிய!