வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

நெடுங்குன்றம் தீர்க்காசல ஈஸ்வரர் ஆலயம் - தல வரலாறு

கட்டுரை: ச. நீலமேகன்






நெடுங்குன்றம் தீர்க்காசல ஈஸ்வரர் ஆலயம்

 

உள்ளத்தை எந்நாளும் உற்ற நெடுங்குன்றம்

வள்ளல்நம் ஈசன்மேல் வைத்துவாழ்ந்தால் – தெள்ளிய

ஞானமும்நற் செல்வமும் நானிலத்தே பெற்றென்றும்

வானவரும் போற்றவாழ் வாய்

                -          நெடுங்குன்றம் சிவபெருமான் துதி

 

குன்றுகளில் தெய்வம் உறைவதான நம்பிக்கையும் மலை உச்சிகளில் கோயில் அமைத்து வழிபடுவதும் மிகத்தொன்மை வாய்ந்த காலந்தொட்டே தமிழர் பண்பாட்டில் பெருவழக்காக இருந்து வருகிறது. இதற்கு ஒப்பவே மிக உயர்ந்த நீண்ட நெடிய குன்றின் அடிவாரத்தில் மிகப்பழமை வாய்ந்த ஊரான நெடுங்குன்றம் என்ற கிராமத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு தீர்க்காசல ஈஸ்வரர் என்று பெயர்.  இச்சிவபெருமானே இவ்வூரிலுள்ள மலையின் அம்சமாக விளங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது. இம்மலைக்கு வடமொழியில் தீர்க்காசலம் என்று பெயர். தீர்க்க என்ற சொல்லுக்கு நெடிய என்றும் அசலம் என்ற சொல்லுக்கு குன்று, மலை என்றும் பொருள் எனவே, இவ்வூருக்கு  சிவபெருமானின்(தீர்க்காசலஈஸ்வரர்)பெயரால் நெடுங்குன்றம் என்ற பெயர் அமைந்தது. இப்போது அது திரிந்து நெடுங்குணம் என வழங்கப்பட்டு வருகிறது.

அமைவிடம்

இத்திருத்தலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட சேத்துப்பட்டு வட்டத்தில், வந்தவாசியிலிருந்து போளூர் செல்லும் நெடுஞ்சாலையில் வந்தவாசியிலிருந்து இருபத்தைந்தாவது கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் வழியாகவே கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய சைவ சமய குரவரான திருஞானசம்பந்தர் திருவண்ணாமலையிலிருந்த திருவோத்தூர் சென்றடைந்ததாக குறிப்பிடப்படுகிறது.

குன்று

இவ்வூருக்குக் கிழக்கே வானளாவிய குன்று உள்ளது. இக்குன்றே சிவபெருமான் அம்சமாக விளங்குவதாக மக்கள் நம்புகின்றனர். இம்மலைத்தொடர் குன்று ஒன்றில்தான் சுகர்ரிஷி தவம் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும் சிவபெருமான் சுகர்ரிஷிக்கு வேதத்தை ஓதி உணர்த்தியதால், அம்மலையின் ஒரு பகுதிக்குச் சுகர்பிரம்மரிஷி பர்வதம் என்ற பெயரும் உண்டு.

இம்மலையின் பாதி உயரத்தில் “கந்த பாறை சுனை” என்ற இடத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. அப்பாறைக்குக் கீழே சுப்பிரமணியர் ஆலயம் ஒன்று முற்றுப்பெறாத நிலையில் உள்ளது. அதில் வள்ளி, தெய்வயானை, முருகன் என மூன்று கற்றிருமேனி சிலைகள் அஷ்டபந்தனமின்றி உள்ளன. இம்மலையின் அடிவாரத்தில்தான் ஊருக்கு ஈசான்ய மூலையில் ஆகம விதிப்படி “தீர்க்காசலேசுவரர்” கோயில்கொண்டு எழுந்தருளியுள்ளார்.

தலபுராணம்

பராசரர் என்ற முனிவருக்கும் மச்சகந்திக்கும் பிறந்தவர் வேதவியாசர். இவர் புத்திரப்பேறு வேண்டி சிவபெருமானை நோக்கி யாகம் செய்வதற்குத் தீக்கடை கோல்கொண்டு கடைந்தார். அப்பொழுது தேவர் உலகத்தில் உள்ள அப்சரசு  என்று கூறும் 12 வேசிப் பெண்களில் ஒருவரான கிருதாசி என்பவள் வந்து  சுகம் என்னும் கிளி உருவம் கொண்டு வியாசரைக் காமத்தில்  மூழ்குவித்தாள்.

காமவயப்பட்ட வியாசரின் வீரியம் கடைந்து கொண்டிருந்த ஆரணியில் விழுந்தது அதிலிருந்து சுகர் பிறந்தார். கிளி உருவம்கொண்ட கிருதாசிக்குப் பிறந்தவராதலால், கிளியின் முகம்கொண்டு விளங்கினார். எனவே கிளி(சுகம்) என்னும் பொருளுடைய சுகர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.

பிறவியிலேயே ஞானியாக விளங்கிய இவரை அணுகி நாரதர் மேலும் ஞானம் பெறுவதற்குரிய வழியைக் கூறினார். அதனால் அறிவுத் தெளிவு பெற்று உலகமே மாயை என்பதை உணர்ந்தார். தந்தையான வியாசரை விட்டுப் பிரிய எண்ணி, எங்கே போகிறோம் என்று தனக்கே புரியாமல் போய்க்கொண்டிருக்கும்போது வழியில் அப்சரசுகள் என்று சொல்லப்படும் கிருதஸ்தலை, புஞ்சிதஸ்தலை, மேனகை, சகசநியை, பிரமலோசை, அனுமிலோசா, கிருதாசி, விசுவாசி, ஊர்வசி, பூர்வசித்தி, திலோத்தமை, அரம்பை என்று 12 தேவருலகப் பெண்களெல்லாம் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தனர்.

சுகர் அவ்வழியே நடந்து வருவதைக் கண்டும் அப்பெண்கள் எந்தவிதமான உணர்வும் இல்லாமல் நீராடுவதிலேயே கவனமாக இருந்தார்கள். ஆனால் தன் பிள்ளையைத் தேடி பின்தொடர்ந்து வரும் வியாசரைக் கண்ட அப்சரசுகள் அனைவரும் அவசர அவசரமாக எழுந்துசென்று சேலையை உடுத்தினார்கள்.

சுகர் வரும்போது எந்தவிதமான சலனமும் இல்லாத பெண்கள், வியாசர் வரும்போது பரபரப்படைந்து ஆடைகளை உடுத்தியதால், சுகர் வியாசரைக் காட்டிலும் உயர்ந்தவர், உலகப் பற்றற்றவர் என்பதை நாம் அறியலாம். அப்படிப்பட்ட சுகர் சிவபெருமானே நெடுங்குன்றாக உயர்ந்து விளங்கும் மலைச்சாரலை வந்தடைந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்தார். நெடுங்குன்றே வடிவமாக விளங்கும் சிவபெருமான் சுகர் முன் தோன்றி காட்சிதந்தார்.

 சுகர் சிவபெருமான் திருவடிகளில் விழுந்து பணிந்து எழுந்தார். ஆனந்தப் பரவசம் கொண்டார். “எப்பிறவியில் என்ன பாவம் செய்தேனோ? தங்களின் திருவடி நிழலை நீங்கி இப்பிறவி எடுத்துவிட்டேன். எனக்கு முத்திப்பேறு அளித்தருளவேண்டும்” என வேண்டினார். 

சுகரிஷியின் வார்த்தையைக் கேட்ட சிவபெருமான் “இந்த உலகம் உய்யும் பொருட்டும், தத்துவ ஞானமுடைய முனிவர்களும் தேவர்களும் மகிழ்ச்சியில் ஆரவாரிக்கவும், சிறந்த தருமதேவதை பெருமைப்படவும் திருமாலானவர் தசரத சக்கரவர்த்தியின் மூத்த மனைவி கௌசல்யா தேவியின் மணிவயிற்றில் ஸ்ரீ ராமனாக அவதாரம் செய்துள்ளார்.

அடுத்து ஏற்கனவே தேவர்களுக்கு திருமால் அளித்த வாக்குறுதியின்படி சக்கரத்தின் அம்சமாக கைகேயி பரதனைப் பெற்றுள்ளார். இதுபோன்று சுமித்திரை ஆதிசேஷன் அம்சமாக இலட்சுமணன் என்னும் இளையபெருமாளைப் பெற்றுள்ளார். ஓமத் தீயினின்றும் எழுந்துவந்த பூதம்தந்த அமிர்தத்திற்கு ஒப்பான பாயசத்தை சுமித்திரை அருந்தமீண்டும் சத்துருக்கனன் என்னும் புதல்வனை சுமித்திரை பெற்றுள்ளாள்.

இவர்கள் நால்வரும் உலகத்தில் சகோதர பாசத்தை விளக்கவும் அக்கிரமக்காரர்களை அழிக்கவும் அவதாரம் செய்துள்ளார்கள். இவர்களில் ஸ்ரீ ராமச்சந்திரப் பெருமானும் இலட்சுமணனும், இலங்கைக்குச் சீதையைக் கவர்ந்துசென்ற இராவணனை அழித்து, சீதையைச் சிறைமீட்டுக்கொண்டு இவ்வழியாக வருவார்கள். அந்த சமயத்தில் மலைவடிவம் தரித்துள்ள என்னைச் சேவிப்பார்கள். இங்கே தங்கியுள்ள உம்மையும் தரிசிப்பார்கள். அச்சமயம்நான் கொடுக்கும் இந்த வேதச்சுவடியை ஸ்ரீராமபிரானிடம் கொடுப்பாயாக’! பிறகு சனகரிடம் சென்று ஞான உபதேசம் பெற்றுக் கடைசியில் ஆகாய மார்க்கமாக சூரிய மண்டலத்தை அடைந்து, தேகத்தைத் தகித்து முக்திப்பேறு அடைவாய்” என்று கூறி வேதச்சுவடியைச் சுகரிடம் கொடுத்தார்.

சுகர் இறைவனைப் பணிந்து சுவடியையேற்றுக் கொண்டார். மனம் மகிழ்ந்த சிவபெருமான், “இந்த மலையில் தங்கி, நீ தவம் செய்த பகுதி சுகப்பிரம்ம ரிஷி பர்வதம் என விளங்கும்” என்றார். இதனைக் கேட்ட சுகர் சிவபெருமான் திருவடியில் விழுந்து வணங்கி எழுந்து “பெருமானே! அடியேன் செய்த தவத்தின் பயனால் இம்மலையில் யான் தங்கி தவம்செய்த இடத்தை என் பெயரால் மக்கள் குறிப்பிட்டழைக்க ஆசீர்வதித்தீர்கள். தீர்க்க - நெடு, அசலம்-குன்றம் என்ற பொருளின்படி நெடுங்குன்றாய் எழுந்தருளியுள்ள தாங்கள், தீர்க்காசல ஈஸ்வரர் என்ற திருப்பெயரோடு இங்கே கோயில் கொண்டு எழுந்தருள வேண்டும் உமது சந்நிதானம் வந்து வழிபடும் மக்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ அருள் பாலிக்க வேண்டும்”  என்றார்.

சிவபெருமானும் “உம் விருப்பப்படியே ஆகட்டும்” என்று கூறி தீர்க்காசல ஈஸ்வரர் என்ற திருப்பெயரோடு சிவலிங்க வடிவில் காட்சிதந்தார். சுகர் அக்காட்சியைக்கண்டு வணங்கி பின் சிவபெருமான் கட்டளையை நிறைவேற்ற ஸ்ரீராமன் வரவை எதிர்பார்த்து மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார்.

அவ்வாறே இராமன் சில காலத்திற்குப்பின் இராவணனை அழித்து சீதையைச் சிறைமீட்டுக்கொண்டு அயோத்திக்குச் செல்லும்போது நெடுங்குன்றத்தே கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள தீர்க்காசல ஈஸ்வரரை வணங்கினார். பின் தன் வரவை எதிர்பார்த்து மலையில் தவம் செய்துகொண்டிருந்த சுகரின் ஆசிரமத்திற்குச் சென்று  அவரின் திருவடிகளைப் போற்றி வழிபட்டார்.  சுகரும் இராமனுக்கு ஆசிவழங்கி சிவன் தந்த வேதச்சுவடியை கொடுத்தார். பின் சுகர் இராமபிரானிடம் வேண்ட இராமனும் நெடுங்குன்றத்தில் கோயில்கொண்டு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாய் சீதை, இலட்சுமணன் மற்றும் அனுமனுடன் எழுந்தருளினார். சுகரும் சிவன் கூறியபடியே சென்று முக்தியடைந்தார். என்பது இத்தலம் குறித்து குறிப்பிடப்படும் புராணச் செய்தியாகும்.

மன்னர்கள் செய்த திருப்பணிகள்

            இவ்வாலயத்திற்கு நாயக்க மன்னர்களின் வழியினரான, திரிபுவனச் சக்கரவர்த்தி, சுந்தரபாண்டியன் அச்சுத விசய ராகவ நாயக்கர், கிருஷ்ண தேவராயர், வீரவேங்கடபதி முதலிய மன்னர்களின் காலங்களில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இக்கோயிலில் அன்றாடத் திருப்பணிக்கு கொடை கொடுத்தவர்கள் பற்றிய கல்வெட்டுக்கள் சிலவும் காணப்படுகின்றன.

காட்சிதரும் தெய்வங்கள்

            இக்கோயிலின் நுழைவாயிலின் வலப்புறம் விக்கினங்களைத்(இடையூறு) தீர்க்கும் விக்கினேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இடப்புறம் வள்ளி தெய்வயானையுடன் ஆறுமுகப் பெருமான் காட்சி தருகிறார். மேலும் விநாயகப் பெருமான், ஐயப்பன், வெங்கடேசப் பெருமாள், ஆறுமுகப்பெருமான், வில்வமரத்தின் கீழ் உமையவளோடு கூடிய சிவபெருமான் ஆகிய சந்நிதிகள் சமீப காலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. வடக்குப்புற மதில் சுவரின் மாடத்தில் துர்க்கை தேவியும் அதற்கு எதிரில் சண்டிகேஸ்வர நாயனாரும் வீற்றுள்ளனர்.

விழாக்கள்

இக்கோவிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரிவிழா வெகு சிறப்பாகப் கொண்டாடப்படுகிறது. ஆடிக் கிருத்திகையின்போது முருகப் பெருமானுக்குப் பெரிய அளவில் திருவிழா நடக்கிறது. அத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் முதுகில் மாட்டிக்கொண்டு கொக்கித்தேர் இழுத்தும். அலகு குத்திக்கொண்டும்,  காவடி எடுத்தும் எலுமிச்சைப் பழங்களை உடலெங்கும் குத்திக்கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

அதைபோல் இவ்வூரில் எழுந்தருளியுள்ள  வைணவக் கடவுளான  ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் திருக்கோயில் உற்சவத்தின் பத்தாம் நாள் திருவிழாவில் தீர்க்காசல ஈஸ்வரர் இந்திர விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இவ்விறைவனைப் போற்றி நெ.ப. சுந்தரேசன் என்பவர் பல்வேறு பதிகங்களையும், இரட்டை மணிமாலை, திருத்தாண்டகம், நெடுங்குன்றம் சிவவெண்பா முதலான பல்வேறு பாமாலைகளைப் பாடியுள்ளார். இவற்றை ஒன்றுதிரட்டி நெடுங்குன்றம் தலவரலாறும் திருப்பதிகமும் என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார்.

நற்கதி பெற்றுமே நானிலத்தில் எல்லாரும்

பொற்புடன் வாழப் புவியினிலே – அற்புதஞ்சேர்

நீள்நெடுங்குன் றசிவனே நீங்கா திருந்துநின்

தாள்பணிந்தார் வாழ்வார் தழைத்து.

 

***

துணைநின்ற நூல்:

நெ.ப.சுந்தரேசன், நெடுங்குன்றம் தலவரலாறும் திருப்பதிகமும், விமலன் பதிப்பகம், செய்யாறு, 2010.




கருத்துகள் இல்லை: