வேடிக்கை பார்த்தவன்
-
சிறுகதை
கோட்டை
மூலையிலேயே இறங்கிவிட்டால் அடுத்து ஏறவேண்டிய பேருந்தில் உட்கார சீட் பிடித்துவிடலாம்
என்ற கணக்கு பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது போட்ட கணக்கைப்போலவே தப்பாகத்தான் போய்விட்டது.
ரொம்பநேரமாய்
காத்திருந்தும் வந்த இரண்டு பேருந்துகளுமே ஏறமுடியாதபடிக்குக் கூட்டமாக இருந்ததால்
நிறுத்தத்தில் நிற்காமல் கடந்துபோனது. உட்காருவதற்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை நிற்பதற்கே
இடமில்லை என்ற நிலையில் பள்ளிமாணவர்களும் கல்லூரி மாணவர்களும் பேருந்தின் படிக்கட்டில்
தொங்கியவாறு இரண்டு பேருந்துகளுமே வலப்பக்கமாய் சாய்ந்தபடி வந்ததால்
‘இனியும் இங்கே நின்றுகொண்டிருப்பது மடத்தனம்’ என்ற மூளையின் ஆலோசனையை ஏற்று கிருஷ்ணனின்
கால்கள் பழைய பேருந்துநிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கின.
பேருந்து
நிலையத்தை அடைந்தபோது பொன்னூருக்குப் போக ஒரு பேருந்துகூட இல்லை. கிருஷ்ணனுக்கு ஏமாற்றமே
மிஞ்சியது. திரும்பவும் கோட்டை மூலைக்குப் போவதைவிட ஐந்துகண் பாலத்துக்குப்போய்விட்டால் புதிய பேருந்து
நிலையத்திலிருந்து வரும் பேருந்தைப் பிடித்துவிடலாம் என்று மனம் சொன்ன ஆலோசனைக்கு மதிப்பளித்து
நீண்டதூரம் நடந்து கிருஷ்ணன் பாலத்தருகே வந்து நின்றபோது மக்கள் கூட்டம் மந்தையாய்
நின்றுகொண்டிருந்தது.
நின்ற
இடத்திற்கு நேர் எதிரே காஞ்சிபுரத்திலிருந்தும், சென்னையிலிருந்தும் வந்து நின்ற பேருந்துகள்
மக்களைக் கொட்டிவிட்டுப் போய்க்கொண்டிருந்ததே ஒழிய நின்றிருந்த பயணிகள் யாரும் அந்த
பேருந்துகளில் ஏறிச்சென்றதாகத் தெரியவில்லை.
பேருந்துக்காகக்
காத்துக்கிடத்தவர்கள் தூரத்தில் வரும் பேருந்தைப் பார்த்ததும், அது தங்கள் ஊருக்குப்போகும்
பேருந்துதானோ என நினைத்து, காளை மாட்டை அடக்க நினைக்கும் மாடுபிடி வீரனின் கவனத்தோடு
வைத்திருக்கும் கைப்பைகளை எல்லாம் தூக்கிப் பிடித்துக்கொண்டு தயாராக நின்றுகொண்டார்கள்.
சிலர் உயரதிகாரி ஜீப் வருவதைப் பார்த்து சாலையோரமாய் பாதுகாப்புப்பணிக்கு நிற்கும்
கான்ஸ்டபில் அட்டேங்ஷனில் நின்று சல்யூட் அடிக்கத் தயாராவதைப்போல இருந்தது.
சில வேளைகளில்
எதிர்பார்த்த உயரதிகாரி காரில் இல்லாமல் இருப்பதை கவனித்து அடித்த சல்யூட் வீணாகப்போய்விட்டதை
எண்ணி வெட்கப்படும் அந்த போலீஸ்காரரைப்போல வருகிற பேருந்து தனக்கானதாக இல்லாமல் ஏமாற்றத்தைத்
தந்தபோது பயணிகள் விரக்தியானார்கள்.
புதிய
பேருந்து நிலையத்திலிருந்து வரும் பேருந்து அத்தனையும் சென்னைக்குப் போகிற பேருந்தாகவே
வந்ததால் நிற்பவர்கள் நிலையைச் சொல்ல வேண்டுமா என்ன? எல்லோரும் உச்சுக்கொட்டினார்கள்.
சிலர் அவசரப்பட்டு ஓடிப்போய் ஏறிக்கொண்டு பேருந்து வேறுபக்கம் திரும்பியவுடன் தைரியமுள்ள
ஆட்கள் படியிலிருந்து குதித்து இறங்கிக்கொண்டார்கள். குதிக்கமுடியாத புடவைகட்டிய பெண்கள்
நிறுத்தச்சொல்லி கூச்சல் போட்டார்கள். பேருந்து நடத்துனர் கடுப்பாகி திட்டினார். படிக்கத்தெரியாத
வயதான மூதாட்டிகள் சிலர் சாலையோரமாய்த் தவித்து நின்றார்கள்.
கல்லூரிப்
பேருந்துகளிலிருந்தும் கம்பெனி பேருந்துகளிலிருந்தும் வந்திறங்கியவர்களால் நிமிடத்திற்கு
நிமிடம் கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருந்தது.
அந்த நேரத்தில்
கிருஷ்ணனுக்கு கல்யாணத்திற்கு எதிர்பார்த்தவர்களைவிட அதிகமான கூட்டம் வந்துவிட்டால்
கல்யாணவீட்டுக்காரனுக்கு ஒரு பதற்றத்தை ஏற்படுத்துமே அதைப்போல இருந்தது.
நின்றுகொண்டிருந்த
மக்கள் கூட்டத்திற்கு இடையே ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகள் புகுந்து பள்ளிக்கூட
மாணவிகளை மிரட்டிக்கொண்டிருந்தது. அவர்கள் அச்சப்பட்டு விலகி நின்றார்கள்.
இவ்வளவு
மக்கள் கூட்டமிருந்தும் கடையில் எதுவுமே வாங்காத விரக்தியோ என்னமோ கடைக்காரன் கடைக்கு
எதிரே பிளாட்பாரத்தில் நின்றிருந்த மக்களை ஒதுங்கி நிற்கும்படி விரட்டினான்.
அந்த சொல்லுக்கு
மதிப்பளித்து அங்கே ரொம்பநேரமாய் பேருந்தை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்த கிழவி நகர்வதைப்போல
பாவனை செய்துவிட்டு மீண்டும் பழையபடி உட்கார்ந்துகொண்டது. அந்தக்கிழவி நொடிக்கொருதரம்
“ஆராசூருக்குப்போகும் பஸ் எப்போது வரும்” என்று நின்றுகொண்டிருந்தவர்களைக் கேட்டு நச்சரிக்க
ஆரம்பித்துவிட்டது.
பொறுமை
இழந்துவிட்ட கிழவி திடீர் என கூட்டமாய் வந்துகொண்டிருந்த பேருந்தை மடக்கிப்பிடித்து
ஏறும் தோரணையோடு பேருந்தை மடக்கப்போனது. ஆனால் ஏறமுடியாமல் திரும்பிய கிழவியை, “என்ன
அவசரம் குமரிப்பொண்ணாட்டம் ஓடிப்போய் பஸ்ஸைப் பிடிக்க ஓடுற, கீழ விழுந்தா மூலையில முடங்கிக்
கெடக்க வேண்டியதுதான்” என ஏறமுடியாது என்ற உறுதியோடு விலகி நின்றவர்கள் அக்கறையோடு
அதட்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் கிழவியின் செயலைப்பார்த்து பரிகாசமாகச் சிரித்தார்கள்.
பேருந்துக்காக
நின்றிருந்தவர்கள் கூட்டம் குறைவதாய் இல்லை. கூட்டத்திற்கு நடுவில் பருவப்பெண்ணுக்கான
லட்சணங்கள் பொருந்த ஒரு பெண்மட்டும் தனியே தெரிந்தாள். அதற்குக் காரணம் அவள் முகத்தில்
இருந்த புன்னகைதான். மாநிறம் அதற்கு ஏற்றாற்போல அவள் அணிந்திருந்த சுடிதார் நிறம் ரொம்ப
எடுப்பாய் இருந்தது. காதிலும் கழுத்திலும் கவரிங்நகை, ஆனாலும் அவள் தோற்றப்பொலிவு அதன்
மதிப்பைக்கூட்டியது. அவளின் அடர்ந்த கூந்தலுக்கு நடுவே ஆங்காங்கே நரைத்த முடிகள். ஆனாலும்,
அவளுக்கு அது குறையில்லை என்று கிருஷ்ணன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.
ரொம்ப
நேரமாய் நின்றிருந்தும் அவள் முகத்தில் சோர்வு இல்லை. அவள் யாரையோ மனதில் நினைத்து
புன்னகைத்துக்கொண்டிருக்கிறாள் என்பதை மட்டும் அவனால் ஊகிக்க முடிந்தது.
அவள் தன்
அருகில் நின்றிருந்த அம்மாவை அழைத்தபோது அந்தக் குரல் அவள் தோற்றத்துக்கு அவ்வளவு பொருத்தமாக
இல்லை என்று கிருஷ்ணனுக்குத் தோன்றியது. அது பிரபல திரைப்பட நடிகை பண்டிகை காலத்தில்
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொந்தக் குரலில் பேட்டி கொடுப்பதை நினைவுபடுத்தியது. ஆனாலும்
அவள் முகத்தோற்றத்தை அது பாதித்துவிடவில்லை.
எதிர்ப்புறத்தில்
வந்த பேருந்தில் ஏற முயன்று அவள் தூரமாய்ப் போய் நின்றுவிட்டாலும். சுமாரான அழகுள்ள
துணை நடிகைகளோடு எடுப்பாகத் தோன்றும் கதாநாயகியைப்போலத் தெரிந்தாள்.
தலையில்
சூடியிருந்த பூக்களைப்போலவே பள்ளிச் சிறுமிகளின்
முகங்களும் வாடியிருந்தன. புத்தக மூட்டைகளை சுமந்துகொண்டு பேருந்துக்காக நிற்கும் மாணவிகளில்
ஒருத்தி “இந்த நோட்டுப்புத்தகங்களை அன்றாடம் சுமந்துவரச்சொல்லும் வாத்தியார் விபத்தில்
சாகவேண்டும்” என்று சபித்த வார்த்தைகளும் கிருஷ்ணனின்
காதில் விழாமல் இல்லை.
பேச்சின்
ஊடே லாலிபாப் தின்றுகொண்டே பதில்சொல்லிக்கொண்டிருந்த மாணவியின் வாயிலிருந்து சொல்லுக்குப்
பதிலாய் லாலிபாப் கிழே விழுந்துவிட்டது. அவள் அதற்காக வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
மண்ணில் விழுந்த லாலிபாப்பின் மீது ஈக்கள் வந்து மொய்த்துக்கொண்டன. மொய்க்கின்ற ஈக்கள்
எத்தனை என்பதை எண்ணி முடிக்கும் முன் ஒட்டுமொத்த ஈக்களும் ஏககாலத்தில் பறந்து மீண்டும்
ஒவ்வொன்றாய் வந்து அமரத்தொடங்கின. மீண்டும் ஈக்களை எண்ணுவதில் மனம் லயிக்காததால் திரும்பவும்
பேருந்து வருகிறதா என்று எதிர்பார்க்கும் கண்களோடு சேர்ந்துகொண்டது, பேருந்து ஏதும்
வரவில்லை. பொறுமை இழந்த பள்ளி மாணவர்கள் மெதுமெதுவாய் நகர்ந்து நடு ரோட்டில் நின்றுகொண்டிருந்தார்கள்.
பைக் வைத்திருக்கும்
பள்ளி மாணவன் ஒருவன் வேகமாய் வந்து வீலிங்செய்து பருவப்பெண்கள் கவனத்தை ஈர்க்க வித்தை
காட்டிவிட்டுப் பறந்துபோனான்.
நின்றுகொண்டிருந்த
இடத்திற்கு அருகிலிருந்த பூக்கடையில் கட்டப்பட்ட மாலைகள் பாலித்தீன் கவர்களால் போர்த்தப்பட்டு
தொங்கிக் கிடந்தன. பூக்கள் வாடாமல் இருக்க ஒரு பையன் அதன்மீது தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தான்.
மண மாலையும் பிண மாலையும் அருகருகே தொங்கிக்கொண்டிருந்தன. வாழ்வை எதிர்பார்க்கலாம்,
ஆனால் சாவை எதிர்பார்த்தும் மனிதப் பிழைப்பு இருப்பதை எண்ணிப் பார்த்தபோது விந்தையாக
இருந்தது கிருஷ்ணனுக்கு.
கைக்குழந்தையை
வைத்துக்கொண்டு வருகிற கூட்டமாக வரும் பேருந்தில் எப்படி ஏறப்போகிறோமோ என்று உடன்வந்த
பெண்ணுடன் கைப்பிள்ளைக்காரி புலம்பிக்கொண்டிருந்தாள்.
திரும்பி
நின்றபோது ரோட்டோரமாய் சைக்கிளில் டீ விற்றுக்கொண்டிருந்தவனிடம் எதிர்ப்புறத்திலுள்ள
அரசு மருத்துவமனையிலிருந்து பிளாஸ்கோடு டீ வாங்கவந்த பெண்மணி டீ விற்பவனிடம் “ இரண்டுகப்
பால் வேணும் பிளாஸ்கை அலச கொஞ்சம் சுடுதண்ணி இருக்குமா?” எனக் கேட்டவுடன் அவன் கொஞ்சமும்
தாமதிக்காமல் டீக்கேனிலிருந்து கொஞ்சம் டீயை பிளாஸ்கில் பிடித்து அதை மூடி ரெண்டு குலுக்கு
குலுக்கி மூடியைத் திறந்து டீயை கீழை ஊற்றிவிட்டு அந்தப்பெண் கேட்ட இரண்டுகப் டீயை
அதே பிளாஸ்கில் பிடித்துக்கொடுத்துவிட்டு, “இந்தாம்மா இருபதுரூபா கொடு” என்று அதிகம்
பேசாமல் காசை வாங்கி சட்டைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.
அவள் மனதில்
நினைப்பது முகத்தில் வெளிப்பட்டதே ஒழிய வார்த்தையில் வெளிப்படவில்லை. அவள் போய்விட்டாள்.
அதை அவள் யாருக்காக வாங்கிக்கொண்டுபோனாளோ அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்திருப்பாளா?
கீழே ஊற்றியிருப்பாளா? என்று மனதிற்குள் கேள்வி எழுந்தது.
அதற்குள்
திருநங்கை ஒருத்தி நின்றுகொண்டிருந்தவர்களின் தலையில் கைவைத்து காசுகேட்டாள். சிலர்
தந்தார்கள் தராதவர்களை அவள் கோபித்துக்கொள்ளவில்லை. கிடைத்தவரை வாங்கிக்கொண்டு எதிர்ப்புறப்
உள்ள ரோட்டைக்கடந்து கடைகளில் கைதட்டி காசுகேட்டுக்கொண்டே போனாள்.
அன்றாடப்
பயணம் என்பதால் அவனைப்போலவே அன்றாடம் பேருந்துகளில் வந்துசெல்லும் அல்லது பேருந்துக்காகக்
காத்திருக்கும் இடங்களில் பரிட்சையமான முகங்கள் அடிக்கடி கண்ணில் படும். அன்றாடம் வேலைக்குப்
போகிறவர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என எப்படியோ கண்ணில்பட்ட உருவங்கள்
அத்தனையையும் படம்பிடித்து மூளையில் சேமித்து வைத்துக்கொள்ளும். இப்படி காத்திருக்கும்
காலங்களில் மூளை சும்மா இருக்குமா என்ன? அது பார்த்த உருவங்களை புலனாய்வு செய்ய ஆரம்பித்துவிடும்.
இந்த மாணவர்கள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள், இந்த சீறுடை அணியும் பெண்கள் எந்த கல்லூரியில்
படிக்கிறார்கள், பஞ்சத்தில் அடிபட்டவர்களைப்போலக் கிடக்கும் அந்தத் தனியார் பாலிடெக்னிக்
கல்லூரி ஆசிரியைகளுக்கு என்ன சம்பளம் கிடைக்கும். அவர்கள் எதிர்காலக் கனவு என்னவாக
இருக்கவும். இப்படி எல்லாம் கிருஷ்ணன் உலக உயிர்களின் ஆசாபாசங்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தான்.
அன்றைக்கு
அவன் கண்ணில் பட்ட உருவங்களில் ஒன்று முன்பே பார்த்த முகமாக இருந்தது. ஆனால் ஒரு வித்தியாசம்
அன்றைக்கு அந்த முகம் அழுத கோலத்தில் இருந்தது. இன்றைக்கு அப்படி இல்லை. அன்றைக்கு
அவள் தான் பேருந்தில் இருக்கிறோம் என்பதையே மறந்துபோயிருந்தாள். பக்கத்தில் அமர்ந்திருந்த
பையனின் தழுவலுக்கு அவள் எந்த எதிர்ப்புமின்றி
தன்னை மறந்து கிடந்தாள். பார்த்தவர்கள் கூச்சப்பட்டார்கள். கண்டும் காணாமல் ரொம்பவும்
நாகரிகமாகத் திரும்பிக்கொண்டார்கள். அவள் வயதொத்த சக மாணவிகள் அவர்களை திருட்டுத்தனமாக
கண்காணித்துக்கொண்டிருந்தார்கள். அவள் கையில்
அடுத்தநாள் வீட்டிலேயே எழுதி கல்லூரியில் சமர்ப்பிக்கும் அறிவுப்பூர்வமான தேர்வுக்கான விடைத்தாள் கையிலிருந்தது.
ஊன்றுகோலை வைத்துக்கொண்டு கூன் வளைந்த கிழவியொருத்தி தட்டுத்தடுமாறி ஏற முயன்றதைப்பார்த்து
டிக்கட் போட்டுக்கொண்டிருந்த கண்டக்டர் “எறங்குறையா? இல்லையா?” எனக்கேட்டு படிக்கட்டில்
வைத்த துணிப்பையை கீழே வீசியெறிந்தான். அந்த சத்தம் இவர்களுக்கு இடைஞ்சலாகப் போய்விட்டதோ
என்னவோ? பேருந்து அவன் இறங்கிப் போய்விட்டான். அன்றைக்குப் பார்த்த அந்தப்பெண்தான்
அவள். கிருஷ்ணன் இதையெல்லாம் அசைபோட்டு முடிப்பதற்குள் பேருந்தின் ஹாரன் சப்தம் அவன்
கவனத்தைத் திசை திருப்பியது.
வந்து
நின்று ஒன்றரை மணிநேரமாகிவிட்டது. கூட்டம் குறைந்த பேருந்து ஒன்றும் வருவதாய் இல்லை.
பாலத்தின் அடியில் சாக்கடைத் தண்ணீர் ஓடும் கால்வாயில் யாரோ ஒருவன் வலையைக் கட்டி மீன்பிடித்துக்கொண்டிருந்தான்.
அவன் மீன் பிடிக்க சேற்று நீரில் இறங்கி கலக்கியதில் காற்றில் சாக்கடை நாற்றம் மணக்க
ஆரம்பித்துவிட்டது.
பாலத்தின்
ஓரத்திலிருந்த மதகின் திட்டுக்கரையில் இருபத்தைந்து வயது மதிக்கத்த ஒருவன் பார்க்க
வித்தியாசமாக ஒன்றன்மேல் ஒன்றாக சுமார் பதினைந்து சட்டைகளைப் போட்டிருந்தான் கலர்கலராய்க்
கண்ணில்பட்ட காலரின் தோராயக் கணக்குதான் அது. லுங்கியும் ஒன்றன்மீது ஒன்றாக இரண்டு
லுங்கிகளை அணிந்திருந்தான். துணிப் பையை முதுகுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு கால்மீது
கால் போட்டுக்கொண்டு வெள்ளை நோட்டில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தான். எழுதுவது எதுவும்
புரியவில்லை. ஆனால் கையெழுத்து ரொம்ப அழகாய் இருந்தது. பார்ப்பதற்கு ஜாவா புரோகிராம்
எழுதுவதைப்போல ஓப்பன் பிராக்கெட்டும் குளோசிங் பிராக்கெட்டும், அம்புக்குறிகளும் போட்டு
எதையோ எழுதிக்கொண்டிருந்தான். அவனுக்கு வலப்பக்கமாக கம்பியால் கட்டப்பட்ட வலப்பக்கக் கண்ணாடி
உடைந்து இடப்பக்கக் கண்ணாடி மட்டுமே உள்ள மூக்குக்கண்ணாடி மதகுத்திட்டில்
அவன் உட்கார்ந்த இடத்துக்குப் பக்கத்தில் இருந்தது. அதை எடுத்து மாட்டிக்கொண்டு தூரத்தில்
எதையோ பார்ப்பதும் சிரிப்பதும் எழுதுவதுமாக மாறிமாறி எதையாவது செய்துகொண்டிருந்தான்
கைவிரல்களை மடக்கிமடக்கி ஏதோ செய்துகொண்டிருந்தான். முகத்தில் சோர்வு இல்லை புன்னகை
பூத்த முகம் ஆனால் அவன் சராசரி மனிதனில்லை. எதனால் இவன் இப்படியாகிவிட்டான் என்பதைப்பற்றியெல்லாம் ஆராய்ந்து பார்க்க அவசர உலகம்
விடுகிறதா என்ன? அப்படி ஆராய்ந்து பார்க்கிறவனை பைத்தியம் என்றல்லவா நினைக்கிறது.
நல்ல வேளையாய்
கிருஷ்ணனைப் பைத்தியமாக்கும் அந்த ஆராய்ச்சிக்கு இடம்கொடுக்காமல் தூரத்தில் பேருந்திலிருந்து
ஹாரன் சத்தம் கேட்டது. பேருந்து காலியாகத்தான் வந்தது. எல்லோரும் தாவிப்பிடித்து ஏறி
சீட்டைப் பிடிக்க தயாரானார்கள். சிலர் ஜன்னல் வழியாக கைக்குட்டையையும், பையையும் போட்டு
இடம் பிடித்தார்கள். படிக்கட்டு வழியாக ஏறிவந்தவனுக்கு உட்கார இடம் இல்லை. சிலர் ஏறிவந்து
தன் குடும்பத்துக்கே சீட்டுப்பிடித்து வைத்துக்கொண்டிருந்தான். உட்கார இடம் கிடைக்காதவன்
அவனுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தான். அதற்குள் சூளையில் செங்கல் அடுக்குவதைப்போல
அனைவரையும் நெறுக்கி மக்கள் மூச்சுவிடாதபடிக்கு பஸ்காரன் எல்லோரையும் ஏற்றிக்கொண்டிருந்தான்.
இந்த கூட்டத்தில் ஏறலாமா வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்துத் திரும்பும்போது ஜன்னலோர
சீட்டில் பேருந்துக்காக அலைந்து ஓய்ந்துபோன அந்தக் கிழவி உட்கார்ந்துகொண்டிருந்தாள்.
அடித்துப்பிடித்து நின்றுகொண்டிருந்த பலரும் ஏறிவிட்டார்கள் படிக்கட்டில் கால் வைத்துத்
தொங்கக்கூட இடமில்லை. கிருஷ்ணன் ஏறமுயற்சிக்கவில்லை.
பேருந்து
நகர்ந்து போய்க்கொண்டிருந்தது. மீண்டும் பேருந்துக்காக
நின்ற காத்திருப்பினூடே சாலையைக் கடக்கும் கரும்பை ஏற்றிச்செல்லும் டிராக்டரிலிருந்து
“காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி, பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி”
என்ற பாடல் காற்றில் மிதந்துவந்து கிருஷ்ணனின் காதில் கரைந்தது. ஏதோ நினைவுவந்து ஒரு
கணம் காலத்தின் அருமை அறியாது நாள் கடத்திக்கொண்டிருக்கும் அந்த அதிகாரியை நினைத்தபோது
கிருஷ்ணன் தன் பல்லை இறுகக் கடித்தான் தாடை வலித்தது. அப்போது அந்த மனநோயாளி மதகுத்
திட்டின் மேல் அமர்ந்தவாறு எதையோ பார்த்து
சிரித்துக்கொண்டிருந்தான்.
ஓய்வுதான் ஒரு மனிதனை என்னவெல்லாம்
சிந்திக்க வைக்கிறது. அதனால்தான் இருப்பவன் இல்லாதவனுக்கு ஓய்வுகொடுக்காமல் பார்த்துக்கொள்ளுகிறானோ
என்னமோ!.
- 27.03.2022
2 கருத்துகள்:
வாழ்த்துக்கள் ஐயா.
ஒரு படைப்பாளனின் வெற்றி அவனைச் சுற்றியுள்ள இயல்பான செயல்களை பதிவிடுவதே.இக்கதை அதையே செய்துள்ளது.
கருத்துரையிடுக