திங்கள், 30 அக்டோபர், 2023

சுவடியியல்


சுவடியியல்

அறிமுகம்

சுவடிகளைப் பற்றிய அறிவுப்புலம் சுவடியியல் எனப்படுகிறது. சுவடிகளைப்பற்றி அறிவது, சேகரிப்பது, பாதுகாப்பது, ஆராய்வது, படிப்பது பதிப்பிப்பது என்பன இதனுள் அடங்கும்.

சுவடிகளின் அமைப்பு, சுவடிகள் எதனால் அழிவுக்கு உள்ளாகிறது, அழிவிலிருந்து சுவடிகளை எவ்வாறு அழியாவண்ணம் பாதுகாக்கலாம், நாடெங்கும் உள்ள சுவடிகளை எவ்வாறு திரட்டலாம், திரட்டிய சுவடிகளை எவ்வாறு முறையாக வகைப்படுத்தலாம், அவற்றை எவ்வாறு பதிப்பிக்கலாம் என்பனபோன்ற வழிமுறைகளை சுவடியியல் மூலம் அறியலாம்.

உலகெங்கும் உள்ள சுவடிகளில் அச்சான சுவடிகள் எவை அச்சாகாத சுவடிகள் எவை என்பனவற்றையும், சுவடிகளை ஆய்வு செய்யும் முறை மற்றும் பதிப்பு நெறிமுறைகள் ஆகியவற்றையும் சுவடியியல் வாயிலாக தெரிந்துகொள்ள முடிகிறது.

‘சுவடி’ என்னும் சொல் கையால் ஓலையில் சுவடை உருவாக்கி எழுதப்படும் நூலை குறிப்பது. அதாவது எழுத்துக்கள் பதியுமாறு எழுதப்பட்ட ஏடுகளின் தொகுப்பு சுவடி என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது. 

இவ்வாறு எழுதப்பட்ட சுவடிகள் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், திருமுகம் என்னும் பெயர்களால் இலக்கியங்களில் சுட்டப்படுகின்றன.

சுவடிகளின் தோற்றம்

 

o   நம் தமிழ்ச் சமூகத்தில் கற்பித்தல் என்பது தொடக்க காலத்தில் வாய்மொழிப் பாடமாக இருந்தது.  எழுத்து பயிற்சி மணலிலும் நெல்லிலும் எழுதிப் பயிற்றுவிப்பதாக இருந்தது. பிறகே ஓலையில் எழுதும் பயிற்சி தொடங்கப்பட்டது.

 

o   பழங்காலத்தில் திண்ணைப்பள்ளி ஆசிரியர்களிடம் பாடம்கேட்ட நூல்களை மாணவர்கள் பிற்காலத் தேவைக்காக சுவடிகளில் எழுதி வைத்தார்கள்.

 

o    தொடக்கக் கல்வியை முடித்தவர்கள் மேலும் கற்க விரும்பிய போது சுவடிகளை ஆசிரியரிடமிருந்தோ அல்லது பிறரிடமிருந்தோ வாங்கி சுவடிகளில் எழுதி வைத்தார்கள்.

 

o   மனப்பாடம் செய்யப்பட்ட பாடல்கள் எழுத்து வடிவம் பெற்றதால் சுவடிகள் எண்ணிக்கையில் பெருகின.

 

o      எழுதப்பெற்ற சுவடிகள்  படிஎடுக்கப் பெற்றதால் மேலும் வளர்ச்சிபெற்றது.

 

o ஏற்கனவே எழுதப்பட்ட சுவடிகள் பழுதடைந்ததால் அவற்றைப் புதிய சுவடிகளில் படியெடுத்தனர்.

o   பல்வேறு இலக்கிய இலக்கண நூலுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களால் சுவடிகள் பெருகின. இறையுணர்வு காரணமாக சமயச் சுவடிகள் பெருகின.

 

o குறுநிலமன்னர்கள், வள்ளல்கள் காலத்தில் அவர்கள் அளித்த ஆதரவால் சிற்றிலக்கியங்கள் பெருகின.

 

o   மக்களின் தேவைக்காகவும் பல சுவடிகள்(இதிகாசக் கதைகள், மருத்துவச் சுவடி, ஜோதிட சுவடி, கணிதம், இசை, நாடகம் ) படியெடுக்கப் பெற்று வளர்ச்சியுற்றுள்ளன.

ஓலைகளில் ஏன் எழுதப்பட்டது?

இலை, மரப்பட்டை, களிமண்பலகை போல்வன விரைவில் அழியக் கூடியவையாக இருந்தன. மரப்பலகை, மூங்கில்பத்தை போன்றவற்றில்  அளவில் பெரிய நூல்களை எழுதிக் கையாள்வது மிகவும் கடினமானதாக இருந்தது. தோல், துணி, உலோகத் தகடு போல்வன மிகுந்த பொருட் செலவினை உண்டாக்கும். பிற உயிர்களைக் கொன்று அவற்றின் தோலில் நூல்களை எழுதுவது மனிதத்தன்மைக்கு முரண்பட்டதாகவும், அருவருக்கத் தக்கதாகவும் அமைகிறது. மேலும் அவற்றில் விரைவாக எழுதவும் முடியாது. கருங்கல் போன்ற பிறபொருள்கள் பிற இடங்களுக்கு எடுத்துச்செல்ல இயலாதவை. ஆனால் ஓலையோ ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் வரை அழியாத்தன்மை வாய்ந்ததாகவும் செலவு இல்லாததாகவும் இருப்பது.  தமிழகத்தில் கிராமப்புறங்கள் முதல் எல்லா இடங்களிலும் மிகுதியாகவும் எளிமையாகவும் கிடைக்கக் கூடியது; மிகப் பெரிய அளவுடைய நூல்களையும் ஒருசுவடிக்கட்டில் அடக்கக்கூடிய தன்மை வாய்ந்தது; பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லும் அளவு உடையது; பாதுகாக்க ஏற்றது. இக்காரணங்களால் ஓலைகளையே தமிழர் தேர்ந்தெடுத்து மிகுதியாகப் பயன்படுத்தினர்.

எழுது கருவிகள்

உலகின் பல பகுதிகளில் எழுதுவதற்கு பைப்ரஸ் என்னும் ஒரு வகைக் கோரைப் புல்லையும் விலங்குகளின் தோலையும் பயன்படுத்தினர்.  அவற்றில் நாணல் குச்சியைக் கொண்டு இலைச்சாறு, மிருகங்களின் ரத்தம் ஆகிவற்றைப் பயன்படுத்தி எழுதினார்கள். கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தியர்கள் இவ்வழக்கத்தைக் கொண்டிருந்தனர். கிரேக்கம், ரோம், எபிரேயம் போன்ற நாடுகளில் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை இத்தகைய பைப்ரஸ் புல்லையே எழுதுவதற்குப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அவை விரைந்து அழிந்துவிடும் தன்மையுடையனவாக இருந்ததால் விலங்குகளின் தோலையும் எழுதுவதற்குப் பயன்படுத்தினர். இலைச்சாறு, பூச்சாறு, மிருகங்களின் ரத்தம் ஆகியவற்றையும் எழுதுவதற்கு பயன்படுத்தினார்கள்.

நம் நாட்டில் களிமண்பலகை, கல், தோல், உலோகத்தகடு(பொன்தகடு, செப்பேடு, வெள்ளித்தகடு), இலை, மரப்பலகை, துணி, மூங்கில்பத்தை முதலான பொருட்களை எழுதப் பயன்படுத்தியிருந்தனர் என்றாலும் செய்திகளை எழுதி தூதுவர் மூலம் அனுப்பவும் இலக்கியங்களை எழுதிவைக்கவும் பனை ஓலைகளையே மிகுதியான அளவு பயன்படுத்தினர். 

சுவடி தயாரிப்பு

சுவடிகளைப் பூச்சி அரிப்பிலிருந்து பாதுகாக்க மஞ்சள் பூசினார்கள். ஓலைகளில் கீறி எழுதப்பட்ட எழுத்துக்கள் தெளிவாக தெரிவதற்காக விளக்கு மையினை பூசினார்கள். எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பனை ஓலை ‘கூந்தல்பனை’, ‘நொங்கு பனை’ என்ற இருவகையான பனை மரங்களிலிருந்து கிடைக்கக்கூடியதாக இருந்தது.

பனை ஓலைகளை நிழலில் உலர்த்தி பதப்படுத்தி ஒழுங்குபட நறுக்கி சுவடி தயாரித்தார்கள் அத்தகைய சுவடி நறுக்குகள் ‘ஏடு’ எனப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட எழுதப்படாத ஏடுகள் வெள்ளோலை எனப்பட்டது. இவ்வாறு ஓலை தயாரிக்கும் செயலுக்கு ஓலைவாருதல் என்று பெயர்.

பதப்படுத்தி நன்கு நறுக்கி உருவாக்கப்பட்ட ஓலைகளின் நடுவே துளையிட்டு சிறு நூல் கயிற்றில் அச்சுவடிகளைக் கோர்த்து சுவடிகள் ஒடியாமல் இருப்பதற்காக இரு பகுதியிலும் சிறு கட்டையினை(சட்டங்கள்) வைத்து பாதுகாத்து வந்தனர் 

ஓலை எழுதுவதற்குப் பதமாக உள்ளதா என்பதை சுழித்துப்(கீறி) பார்த்து பயன்படுத்தினர். இதுவே பிற்காலத்தில் பிள்ளையார்சுழி என அழைக்கப்பெறலாயிற்று. 

எழுத்தாணி

ஆணி, கூரியகல், தண்டு, நாணல், பறவைஇறகு, பன்றிமுள், விலங்குகளின் எலும்பு, மெல்லிய தூரிகை போன்ற பல பொருள்களை மக்கள் எழுதும் கருவிகளாகப் பயன்படுத்தினர். என்றாலும் ஓலைகளில் எழுதுவதற்கு எழுத்தாணிகளையே பயன்படுத்தினர்.

குண்டெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி என்பன எழுதுவதற்குரிய எழுத்தாணி வகைகள். தந்தமும் பொன்ஊசியும் கூட எழுதுவதற்குரிய எழுத்தாணிகளாகப் பயன்படுத்தப்பட்டன என்பதை இலக்கியச் சான்றுகளின் வாயிலாக அறியமுடிகிறது. பழங்காலத்தில் அரசர்களிடம் “ஓலை எழுதுவோர்” என்னும் பணியாளர் இருந்தனர்.



சுவடிகளைத் திரட்டுதல்

சுவடிகளைத் திரட்டும் பணி சங்க காலத்திலேயே தொடங்கிவிட்டது. மன்னர் பலர் புலவர்களை ஒருங்கிணைத்து இப்பணியை மேற்கொண்டார்கள். இதற்கு சங்கம் என்கிற அமைப்பும் அதில் தொகை செய்யப்பட்ட சங்க இலக்கியங்களும் சான்றாக அமைகின்றன. இடைக்காலத்தில் மடாலயங்கள் சுவடிகளைத் திரட்டி பாதுகாத்து வைத்தன. பிற்காலத்தில் காலின் மெக்கன்சி, லெய்டன், பிரௌன், எல்லிஸ், ஏரியல் போன்ற அயல்நாட்டவர்களாலும் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்,  பாண்டித்துரைத்தேவர், கனகசபைப்பிள்ளை, ரா. இராகவையங்கார் எனப் பலரும் ஓலைச் சுவடிகளைத் திரட்டித் தொகுத்தனர். 

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை, உ.வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஔவை சு. துரைசாமிப்பிள்ளை போன்றவர்கள் கற்பதற்காகவும் பதிப்பிப்பதற்காகவும்  ஓலைச்சுவடிகளைத் திரட்டினர்.

சுவடிகளின் வகைப்பாடு

அரசினர் கீர்த்திசைச் சுவடி நூலகம், உ.வே. சாமிநாதையர் நூலகம், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் ஆகியவற்றில் பின்பற்றப்பட்டுள்ள வகைப்பாட்டு முறையை  அடிப்படையாகக் கொண்டு பொருள் அடிப்படையில் சுவடிகளை அகராதி, அரிச்சுவடி, ரசவாதம் இலக்கணம், இலக்கியம், கணிதம், சமயம், ஜாலம், ஜோதிடம், தோத்திரம், நாடகம், புவியியல், மருத்துவம், மாந்திரீகம், வரலாறு, வானவியல் எனப் பலவாறு வகைப்பாடு செய்யலாம். 

சுவடிகளின் அழிவு 

இயற்கையாகவும் செயற்கையாகவும் பல்வேறு காரணங்களால் சுவடிகள் காலந்தோறும் அழிந்துபோயின. அந்த வகையில் மறைந்துபோன தமிழ்நூல்கள் ஏராளம். கிடைத்த சுவடிகளில் பல சிதிலமடைந்தே கிடைத்தன.

கரையான்களாலும், ராமபாணம் எனப்படுகின்ற ஒரு வகைப் பூச்சிகளாலும் பூஞ்சைகளாலும் சுவடிகள் இயற்கையாகவே அழிந்தன. மேலும் போர், அரசியல் மாற்றம், வெளிநாடுகளுக்குச் சுவடிகளை விற்பது,  தீயிலிட்டு எரிப்பது. ஆற்றிலும் குளத்திலும் கிணற்றிலும் போடுவது, கவனக்குறைவு ஆகியவற்றால் ஏடுகள் செயற்கையாக அழிக்கப்பட்டன. ஆடிப்பெருக்கில் ஆற்றில் விட்டால் பலன் கிடைக்கும் என்கிற மூடப்பழக்கத்தால் ஏராளமான சுவடிகள் ஆற்றில் விடப்பட்டு அழிக்கப்பட்டன .

சுவடிப் பாதுகாப்பு

    பழங்காலத்தில் ஓலையில் எழுதிய எழுத்து தெளிவாக தெரிவதற்காக சுவடிகளுக்கு மஞ்சள் பூசினர் கீறி எழுதிய இடங்களில் ஒரு வகை இலைச்சாறு அல்லது விளக்கின் மை என ஏதேனும் ஒன்றைப் பூசினர். இவைகளே ஒரு வகையில் சுவடிகளைப் பாதுகாக்கும் பூச்சிக்கொல்லிகளாக இருந்தது. வேப்பிலை, வசம்பு போன்ற பொருட்களைக்கொண்டும் சுவடிகளைப் பூச்சி அரிப்பிலிருந்து பாதுகாத்தனர்.

        அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள தற்காலத்தில் சுவடிகளை ஸ்கேனர்(வருடி) மூலம் படமாக எடுத்து எண்ணிம(டிஜிட்டல்) முறையில் சேமித்து பாதுகாக்கின்றனர். மூலச்சுவடிகளைப் பூச்சிகள் அரிக்கா வண்ணம் பாதுகாக்க அவற்றை முறையாகத் துடைத்து அவற்றின் மீது Lemon Grass Oil, Java Citranella Oil போன்றவற்றைப் பூசி பாதுகாக்கின்றனர்.

சுவடிப்பதிப்பு

கி.பி. 1812 இல் திருக்குறள் அறத்துப்பாலை F.W. எல்லீஸ் என்பார் பதிப்பித்தார் என்ற செய்தியை அடிப்படையாகக்கொண்டு சுவடிகளைப் பதிப்பிக்கும் பணி தொடங்கிய காலமாக கி.பி. 19 ஆம் நூற்றாண்டைக் குறிப்பிடலாம்.

தமிழ்ச்சுவடிகள் உள்ள இடங்கள்

1.       அரசினர் சுவடி நூலகம், சென்னை.

2.       உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

3.       கல்கத்தா தேசிய நூலகம், கல்கத்தா.

4.       சரசுவதி மகால் நூல் நிலையம், தஞ்சாவூர்.

5.       சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர்.

6.       சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம், சென்னை.

7.       டாக்டர் உ வே. சாமிநாதையர் நூலகம், திருவான்மியூர்.

8.       தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

9.       திருவனந்தபுரம் பல்கலைக்கழகச் சுவடி நூலகம், திருவனந்தபுரம்.

10.   பிரமஞானசபை நூல் நிலையம், அடையாறு.

11.   புதுவை பிரஞ்சு நிறுவனம், பாண்டிச்சேரி.

12.   வெங்கடேசுவரா கீழ்த்திசைமொழி ஆராய்ச்சி நிறுவன நூலகம், திருப்பதி

13.   ஆந்திரப் பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம்.

14.   உஸ்மானியா பல்கலைக்கழகம், ஐதராபாத்

15.   கலைமகள் கல்வி நிலையம், ஈரோடு.

16.   கள்ளிக்கோட்டைப் பல்கலைக்கழகம், கள்ளிக்கோட்டை.

17.   காசிமடம், திருப்பனந்தாள்.

18.   சங்கராச்சாரியார் சுவாமிகள் மடம், காஞ்சிபுரம்.

19.   தருமபுர ஆதீனமடம், மாயவரம்.

20.   திருவாவடுதுறை ஆதீனமடம், திருவாவடுதுறை.

21.   மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

22.   மதுரைத் தமிழ்ச்சங்கம், மதுரை.

23.   British Museum, London.

24.   The Library of the Royal Asiatic Society. London.

25.   The Library of Cambridge University.

மேலும் அறிய

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்

தமிழ் இணையக் கல்விக் கழகம்




புதன், 18 அக்டோபர், 2023

ASI - Archaeological Survey of India

அகராதி – கலைக்களஞ்சியம் வேறுபாடு.

அகராதி என்பது அகரவரிசைப்படி சொற்கள் தொகுக்கப்பட்டு அச்சொற்களுக்கான பொருளையோ அல்லது அச்சொல் தொடர்பான வேறுபல விவரங்களையோ விளக்கும் ஒரு கருவி நூல் ஆகும்.

கலைக்களஞ்சியம் என்பது ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக்கொண்டு அதைப்பற்றிய முழுமையான விளக்கம், தனிச்சிறப்பு, பயன்பாட்டு எல்லைகள், பரந்த அறிவுத் துறையில் அச்சொல் எத்தகைய தொடர்புகளைக் கொண்டுள்ளது போன்ற ஆழமான தகவல்களைத் திரட்டித் தரும் அகர வரிசையில் அமைந்த தொகுப்பு நூலாகும்.

விக்கிமீடியா அறக்கட்டளை

அமெரிக்கர்களான ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரின் கூட்டு முயற்சியால் விக்கிமீடியா அறக்கட்டளை நிறுவப்பட்டது.

ASI - Archaeological Survey of India

ASI - Archaeological Survey of India இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் ( ASI ) என்பது இந்திய அரசு நிறுவனமாகும், இது இந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் கலாச்சார வரலாற்று நினைவுச்சின்னங்களை பாதுகாத்தல் ஆகியவற்றிற்கு முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிறுவனம் 1861 ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்பவரால் நிறுவப்பட்டது.

இந்திய நாணயவியல் ஆய்வு நிறுவனம்

இந்திய நாணயவியல் ஆய்வு நிறுவனம் (Indian Institute of Research in Numismatic Studies) இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் 1980 ஆம் ஆண்டில் நாணயவியல் நிபுணர் பரமேஸ்வரி லால் குப்தா மற்றும் தொழிலதிபர் கே.கே. மகேஸ்வரி ஆகியோரின் முயற்சியால் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் நாணயவியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு பயிற்சி மற்றும் ஆதரவு தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அரிக்கமேடு

தொல்பொருளாய்வு சார்ந்த இடமான அரிக்கமேடு புதுவை மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் வழி தென்னிந்தியர்கள் ரோம் நகருடன்  கொண்டிருந்த வாணிபத் தொடர்பை அறிந்துகொள்ள முடிகிறது.

அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்

அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின்  7-ஆம் தளத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, உருது உள்ளிட்ட பல மொழியில் கிடைந்த ஓலைச் சுவடிகளும், காகிதச் சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு வருவதோடு பதிப்பிக்கப்பெற்று நூலாக வெளியிடப்பட்டும் வருகிறது.

உலகிலேயே அதிகமான தமிழ்ச் சுவடிகள் இந்த நூலகத்தில்தான் உள்ளன. இங்கு, 72,748 சுவடிக் கட்டுகளும், 25,373 ஆய்வு நூல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

இந் நூலகம் உருவாவதற்கு காலின் மெக்கன்சி (1754-1821), லேடன் (Dr.LeYdan), சி.பி.பிரௌன் (Mr.C.P.Brown) ஆகிய மூவரின் தொகுப்பு முயற்சிகளே காரணமாக அமைந்தது.

ஆவணக் காப்பகம்

தமிழ்நாடு மாநில வரலாற்று ஆய்வு ஆவணக்காப்பகம் அல்லது சென்னை ஆவணக் காப்பகம் (Madras Record Office) என்பது தமிழ்நாட்டில், சென்னையில் எழும்பூர் ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ளது.

சரஸ்வதி மகால் நூலகம்

சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது. இது ஆசியாவின் மிகப்பழமையான நூலகங்களுள் ஒன்றாகும்.

இங்குத் தமிழ், தெலுங்கு, சமற்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், இலத்தீன், கிரேக்கம் முதலிய பலமொழிகளிலுள்ள ஓலைச்சுவடிகளும், கையெழுத்துப்பிரதிகளும், அச்சுப்பிரதிகளும் உள்ளன.

இங்கு வரலாறு, மருத்துவம், அறிவியல், இசை, நாட்டியம், சிற்பம் உள்ளிட்ட பல்துறை நூல்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வியாழன், 12 அக்டோபர், 2023

விக்சனரி

விக்சனரி



விக்சனரி என்பது இணையவழி பயன்பாட்டிலிருந்துவரும் ஒரு கட்டற்ற மின்னகராதியாகும்(Online Dictionary). அச்சிலுள்ள தமிழ் அகராதிகள் பல இணையத்தில் மின் அகராதிகளாக மாற்றப்பட்டு அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில், உலகெங்கும் உள்ள தன்னார்வலர்கள் பலரது முயற்சியால் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்டதுதான் “விக்சனரி” என்ற மின்னகராதி.

பிற மின்னகராதிகள் சொற்களுக்குப் பொருள் தருதல் என்ற அளவில் மட்டும் இருக்க, சொல்லுக்குரிய ஒலிப்புமுறை, படங்கள், தொடர்புடைய பிறமொழிச் சொற்கள் என்ற கூடுதல் வசதிகளைப் பெற்றதாக விக்சனரி விளங்கி வருகிறது.

2002 ஆம் ஆண்டில் ஆங்கில மொழியில்தான் விக்சனரி உருவாக்கப்பட்டது. தமிழில் இம்முயற்சி 2004 இல் தொடங்கப்பட்டது.



இது தமிழ் – தமிழ் – ஆங்கிலம் என்ற அமைப்பிலும், ஆங்கிலம் – தமிழ் என்ற அமைப்பிலும் சொற்களுக்குப் பொருள் தருகிறது. மேலும் முன்பே குறிப்பிட்டதைப்போல் நாம் தேடும் தமிழ்ச் சொற்களுக்கு நிகரான பிறமொழிச் சொற்களையும்(ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு, ஜெர்மன்) இதன்வழி அறிய முடிகிறது.

தமிழ் விக்சனரியில் தற்போது(11.10.2023 அன்று உள்ளபடி) 4,07,875 சொற்கள் இடம்பெற்றுள்ளன.

இதிலுள்ள சொற்கள் ஏற்கனவே உள்ள அகராதிகள் பலவற்றிலிருந்து திரட்டப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள நிலையில் புதிய சொற்களைச் சேர்க்க விரும்புவோர்  தாம் சேர்க்க விரும்பும் சொல் முன்பே அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை தேடிப்பார்த்து அச்சொல் இல்லாதா நிலையில் முறையாக Log in செய்து அத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி புதிய சொற்களைச் சேர்க்கலாம்.

ஏற்கனவே தொகுக்கப்பட்டுள்ள சொற்களில் திருத்தம் செய்ய விரும்பினாலும் திருத்தம் செய்யலாம்.




வெள்ளி, 6 அக்டோபர், 2023

அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, நந்திவரம் - நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம்.


செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் ஏழாம் நாள் நிகழ்வில் "பெரியாரும் பெண் கல்வியும்" என்ற பொருண்மையில் சிறப்புரையாற்றச் சென்றிருந்தேன். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுடன் சேர்ந்து சுமார் 200 மாணவிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர். தந்தை பெரியார் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டு குறித்தும் அதிலும் குறிப்பாக பெண்விடுதலைக்கு எத்தகைய முன்னெடுப்புகளை மேற்கொண்டார் என்பதைப் பற்றியும் உரையாற்றினேன்.