புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்
தோற்றம்
கவிதை காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொள்வதை
நமது மரபு எதிர்க்கவில்லை. தொல்காப்பியம் இத்தகைய புத்திலக்கிய வடிவத்தை
‘விருந்து’ எனக்குறிப்பிடக் காணலாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கிய வடிவம்
என்பது செய்யுள் வடிவமாகவே இருந்தது.
இந்நூற்றாண்டில் மேலைநாட்டில் பழைய யாப்பு உருவத்திலிருந்து விலகி, இயைபுத் தொடை (Rhyme) முதலியன இன்றி
உரைநடைச் சாயலில் புதிய கவிஞர்கள் கவிதை படைக்கத் தொடங்கினர்.
1892இல் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் புல்லின்
இலைகள் என்ற தலைப்பில் வெளியிட்ட பன்னிரண்டு கவிதைகளைக் கொண்ட தொகுப்பு, யாப்பு மரபைப்
புறக்கணித்து ஃப்ரீவெர்ஸ் (Free
verse) என்னும் வசன கவிதையாக அமைந்தது.
அவர்தம் பாடுபொருளும் பிறர்
இதுவரையில் பேசாப் பொருளாக அமைந்தது. இவரை அடியொற்றி
எண்ணற்ற கவிஞர்கள் வசன கவிதை படைக்கலாயினர்.
அமெரிக்காவைத் தொடர்ந்து பிரெஞ்சு இத்தாலி, ஸ்பானிஷ், செர்மன், ருஷ்ய
மொழிகளின் இலக்கண மரபுகளிலும் நெகிழ்ச்சியும் மாற்றமும் ஏற்படத் தொடங்கின.
புதுக்கவிதை – பெயர்க்காரணம்
Verse Libre என்னும் பெயரில் பிரான்சு
நாட்டிலும், New Poetry என ஆங்கில நாட்டிலும் உருவாகிய முயற்சிகள் உலகின்
பிற பகுதிகளிலும் பரவின. Free Verse என்ற கவிதை அமைப்பும் ஆங்கிலத்தில் இருந்தது. பிரான்சின் போதலேர்,
ரிம்போ, மல்லார்மே, ஜெர்மனியின் ரில்கே, அமெரிக்காவின் வால்ட் விட்மன், இங்கிலாந்தின் எஸ்ரா பவுண்டு, T.S. எலியட் போன்றோரின் முயற்சிகளால் புதுக்கவிதை
பிறந்தது. தமிழில் இம்முயற்சிகள் தொடங்கப்பட்ட போது முதலில் ‘வசன கவிதை’ என்றும் பின்னர் ‘சுயேச்சா கவிதை’ , ‘லகு கவிதை’ , ‘விடுநிலைப்பா’ என்றும், அதன் பின்னர்ப் புதுக்கவிதை என்றும் வழங்கப்பட்டன. 1959இல் புதுக்கவிதை என முதலில் பெயர்
வழங்கியவர் தமிழின் சிறந்த திறனாய்வாளரும், புதினப் படைப்பாளியும் ஆகிய
க.நா.சுப்பிரமணியம் ஆவார்.
பழக்கத்தில் உள்ள நிலையிலிருந்து சிறிதளவோ
முற்றிலுமோ மாறுபட்டுத் தோன்றுவது புதுமை எனப்படும். வழிவழியாக மரபு கெடாது யாப்பிலக்கணத்தோடு பொருந்தி
வரும் கவிதைகளிலிருந்து மாறுபடும் கவிதைப் படைப்புதான் புதுக்கவிதை ஆகும். புதுக்கவிதைகள்
உருவத்தால் மட்டுமன்றி,
உள்ளடக்கம்,
உத்திமுறைகள் ஆகியவற்றாலும் புதுமையுடையனவாகும்.
“இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவையெதுவும் இல்லாத
கருத்துக்கள் தம்மைத்தாமே
ஆளக் கற்றுக்கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக்கவிதை” (ஊர்வலம்)
என மேத்தா கூறும் புதுக்கவிதை,
புதுக்கவிதையின் இலக்கணத்தையும் இயல்பையும் புலப்படுத்தும்.
புதுக்கவிதை முன்னோடிகள்
பாரதியார்
தமிழில் புதுக்கவிதையின் தோற்றத்துக்கு
வித்திட்டவராகப் பாரதியைத்தான் குறிப்பிட வேண்டும். மூட நம்பிக்கைகளையும், சாதி சமய வேறுபாடுகளையும் வன்மையாக எதிர்த்த
வகையில் பாரதியின் கவிதை இன்றுவரை புதுமை மங்காதது. ‘புதியன விரும்பு’ , ‘தேசத்தைக் காத்தல் செய்’ , ‘தையலை உயர்வுசெய்’, ‘கொடுமையை
எதிர்த்து நில்’, ‘கற்பை இரு பாலார்க்கும் பொதுவில் வைப்போம்’ என்றெல்லாம்
வெடிப்புறப் பேசிய பாரதியின் கவிதைதான் உள்ளடக்க அளவிலும், வடிவ அடிப்படையிலும் புதுக்கவிதைக்கு
வித்திட்டது. மேலும் பாரதியே முதன் முதலாக காட்சி, சக்தி,
காற்று, கடல் என்ற தலைப்புகளில் வசன கவிதைகளை சோதனை செய்து
பார்த்தவர்.
ந. பிச்சமூர்த்தி
பாரதிக்கு அடுத்துப் புதுக்கவிதை முயற்சியில்
முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர் ந. பிச்சமூர்த்தி. ‘மணிக்கொடி’ இதழில் 1934இல்
பிச்சமூர்த்தி எழுதத் தொடங்கினார். செறிவாகவும் தெளிவாகவும் அறிவு பூர்வமான
பார்வையில் கருத்துகளை அலசவும் சிந்தனைகளைச் சீர்தூக்கிப் பார்க்கவும்
அவருக்கிருந்த இயல்பான அறிவுத் திறம் அவர் கவிதையில் பளிச்சிட்டது.
கு.ப.ரா., க.நா.சு உள்ளிட்ட பிறர்
பிச்சமூர்த்தியைத் தொடர்ந்து அவருடைய நண்பர் கு.ப.ராஜகோபாலனும், க.நா.சுப்ரமண்யமும்
புதுக்கவிதை எழுதத் தொடங்கினர். பின்னர்
வல்லிக்கண்ணனும் புதுமைப்பித்தனும் இவ்வரிசையில் இணைந்தனர். இவர்களது படைப்புத்
தொடங்கிய காலம் 1937க்கும் 1944க்கும்
இடைப்பட்ட காலம் ஆகும்.
புதுக்கவிதையின் பாடுபொருள்
தனிமனித உணர்வுகளைப் பாடுவதும், நாட்டுப்பற்று, மொழியுணர்வு, பொதுவுடைமை, அநீதியை
எதிர்த்தல், பெண்ணுரிமை, தலித்தியம், பகுத்தறிவு
என்பனவற்றைப் பாடுதலும் இன்றைய புதுக்கவிதைகளின் நோக்கங்களாக உள்ளன.
குறிப்பிடத்தக்க புதுக்கவிதைப் படைப்புக்கள்
பாரதியார் தொடங்கி இன்று வரை பல கவிஞர்கள் புதுக்கவிதைகளைப்
படைத்து வருகின்றனர். அவற்றுள்
Ø பாரதியார் - வசன கவிதை
Ø ந.பிச்சமூர்த்தி - காட்டு வாத்து, வழித்துணை
Ø அப்துல் ரகுமான் -
பால்வீதி, சுட்டுவிரல்
Ø வாலி - அவதார புருஷன், பாண்டவர் பூமி
Ø மீரா - கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
Ø நா.காமராசன் - கறுப்பு மலர்கள், நாவல்பழம்
Ø மேத்தா - கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம்
Ø வைரமுத்து -
இன்னொரு தேசிய
கீதம், திருத்தி எழுதிய
தீர்ப்புகள், கொடிமரத்தின் வேர்கள்
Ø சிற்பி - சர்ப்ப யாகம்
Ø அறிவுமதி - நட்புக்காலம்
Ø
என்பவற்றைக் குறிப்பிடத்தக்க படைப்புகளில் சிலவாக குறிப்பிடலாம்.
புதுக்கவிதையின் வளர்ச்சி வரலாறு
புதுக்கவிதையின் வளர்ச்சி காலகட்டங்களை ஆய்வாளர்கள்
பல நிலைகளாகப் பகுத்துப் பார்க்கின்றனர்.
Ø மணிக்கொடிக்
காலம் (1930 – 1945)
Ø எழுத்து
காலகட்டம் (1950 – 1970)
Ø வானம்பாடிக் காலம்
(1970 க்குப் பிறகான சில ஆண்டுகள்)
Ø தற்காலம்
மணிக்கொடிக் காலம்
கி.பி.1930-1945 காலகட்டத்தில்
மணிக்கொடிக் குழுவினர்,
பாரதியாரை அடுத்துப் புதுக்கவிதை இயற்றியவர்களாவர். அவர்களுள் கு.ப.இராசகோபாலன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன்
ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மணிக்கொடி இதழின் காலகட்டத்திலேயே ஜெயபாரதி, சூறாவளி, கிராம ஊழியன், கலாமோகினி போன்ற இதழ்களிலும் புதுக்கவிதைகள் பல
இடம் பெற்றன.
எழுத்து காலகட்டம்
கி.பி.1950-1970 ஆண்டுகளில்
இரண்டாம் நிலை வளர்ச்சி அமைந்தது என்பார் ந.சுப்புரெட்டியார். எழுத்து, இலக்கிய வட்டம், நடை போன்ற இதழ்களில் புதுக்கவிதைகள் வெளிவந்தன. எழுபதுகளில்
தாமரை, கசடதபற, வானம்பாடி
போன்ற இதழ்களில் புதுக்கவிதைகள் வெளியிடப் பெற்றுச் சிறப்புற்றன.
புள்ளி,
வெள்ளம்,
உதயம்,
கதம்பம்,
ரசிகன்,
நீ, அலைகள், ஐ என்னும்
புதுக்கவிதைச் சிறு தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. புதுக்கவிதை நூல்கள் பலவும் எழுபதுகள் தொடங்கி
வெளிவரலாயின.
வானம்பாடிக் காலம்
எழுத்து இதழுக்குப் பின்னர் க.நா.சு.வின் ‘இலக்கிய
வட்டம்’, சேலத்திலிருந்து
வெளிவந்த ‘நடை’, ‘கணையாழி’ இலங்கை இதழ் ‘மல்லிகை’ போன்றவை
புதுக்கவிதை வளர உதவியவை. 1970இல் தோன்றிய ‘கசடதபற’
இதழ் புதுக்கவிதை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது. இடதுசாரிக்
கருத்துகள் கொண்ட கவிதைகளுக்குத் ‘தாமரை’ இடமளித்தது. இடதுசாரிக் கண்ணோட்டத்தைக் கவிதைக் கோட்பாடாகக் கொண்டு ‘வானம்பாடி’ எனும்
விலையிலாக் கவிமடல் 1971இல் தோன்றியது;
இயக்கமாகவே வளர்ந்தது. மேலும் ‘ஞானரதம்’, ‘அஃ’, ‘சதங்கை’, ‘தெறிகள்’ போன்ற பல
இதழ்கள் மூலம் புதுக்கவிஞர்கள் பலர் ஊக்கம் பெற்று எழுதினர். ஞானக்கூத்தன், கலாப்ரியா, நா. காமராசன், சிற்பி, இன்குலாப், மேத்தா, புவியரசு, தமிழன்பன், மீரா போன்ற பலப்பல கவிஞர்களின் கவிதைகளால் தமிழ்ப்
புதுக்கவிதை உலகம் விரிவுகண்டது. இதழ் அல்லது இயக்கம் சாராத அப்துல் ரகுமான், அபி
போன்றவர்களின் கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்தன.
1980களுக்குப் பின்னர் ‘மீட்சி’,
‘கனவு’, ‘விருட்சம்’, ‘காலச்சுவடு’, ‘உயிர்மை’ போன்ற பல
இதழ்கள் புதுக்கவிதை வளர்ச்சியில் பெரும்பங்காற்றின. கவிஞர்கள், எண்ணிக்கையும்
கவிதைத் தொகுப்புகளின் எண்ணிக்கையும் பெருகின. ஆத்மாநாம், தேவதேவன், சுகந்தி
சுப்ரமணியன், பிரம்மராஜன்,
பழமலை,
சுகுமாரன்,
எம்.யுவன்,
யூமாவாசுகி,
குட்டிரேவதி,
மனுஷ்யபுத்திரன்,
மாலதி மைத்ரி போன்ற தனித்தன்மை மிக்க கவிதைப் படைப்பாளிகள் பலர் தமிழ்ப்
புதுக்கவிதையை வளப்படுத்தியவர்கள் ஆவர்.
தற்காலம்
மாணவர்கள்; பெண்ணியம், தலித்தியம், பொதுவுடைமை, பெரியாரியம் என்பன போன்ற
கொள்கைவாதிகள்; மற்றும் சமுதாயத்தின் பல்வேறு தரப்பினர்; என புதுக்கவிதைகளை
எழுதி வருகின்றனர். ஆயிரக்கணக்கான புதுக்கவிதைத் தொகுப்புகள் நூல்களாக வெளிவந்த
வண்ணம் உள்ளன.
திறனாய்வும் புதுக்கவிதை வளர்ச்சியும்
புதுக்கவிதை குறித்த செய்திகளையும் தெளிவினையும்
புலப்படுத்தி வரன்முறைப் படுத்திய பெருமை திறனாய்வு நூல்களுக்கு உண்டு. அவற்றுள்
v வல்லிக்கண்ணன்
எழுதிய - “புதுக்கவிதையின் தோற்றமும்
வளர்ச்சியும்”
v ந.சுப்புரெட்டியார்
எழுதிய - “புதுக்கவிதை போக்கும் நோக்கும்”
v கவிஞர் பாலாவின்
– “புதுக்கவிதை -
ஒரு புதுப்பார்வை”
என்பன குறிப்பிடத்தக்கன.
சமூக உணர்வுக் கவிதைகள்
சமூகச் சிக்கல்கள், அவற்றுக்கான தீர்வுகள், அரசியல் பண்பாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றைக் கவிதைப்
பொருளாகக் கொண்டு பொருளாதார அடிப்படையில் தாழ்நிலையில் உள்ள ஏழைகள், தொழிலாளர்கள், நடுத்தர
மக்கள் ஆகியோரின் வாழ்நிலைகளைச் சொல்வனவாக அமைந்தன இவை பெரும்பாலும் மார்க்சியத்
தத்துவத்தில் கால் கொண்டவை. வானம்பாடிக்
கவிதைகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
தனிமனித உணர்வுக் கவிதைகள்
தனிமனித உணர்வு சார்ந்த கவிதைகளை S. வைத்தீஸ்வரன், தி.சொ.வேணுகோபாலன், நகுலன், பசுவய்யா, பிரமிள், அபி, தேவதேவன், அப்துல்
ரகுமான், ஆனந்த், தேவதச்சன்
எனத் தொடரும் ஒரு நீண்ட பட்டியலில் இத்தகைய கவிதைப் படைப்பாளிகளைக் காணலாம்.
தலித்தியக் கவிதை
ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்வு, உரிமைகள், அவர்களின்
சிறப்பான கலைகள் ஆகியவற்றை உரத்து எடுத்துச் சொல்லும் இலக்கிய வகைமையைத் தலித்
இலக்கியம் என்பர். தலித் கவிதைகள் பெரும்பாலும் தலித் கவிஞர்களாலும் சிறுபான்மை
வேறு இனம் சார்ந்த கவிஞர்களாலும் படைக்கப்படுபவை. பாரதியின் "ஆடுவோமே பள்ளு
பாடுவோமே, ஆனந்த
சுதந்திரம் அடைந்து விட்டோமென்று" எனத் தொடங்கும் கவிதை தமிழ்ப்
புதுக்கவிதையில் தலித்தியத்துக்கு மூலமுத்தான கவிதை எனலாம். "மனுஷங்கடா -
நாங்க மனுஷங்கடா" என்று இன்குலாப் பாடிய உணர்ச்சி நிரம்பிய பாடல்
தலித்மேடைகள் பலவற்றில் பாடப்பட்டது.
பெண்ணியக்
கவிதை
ஒடுக்கப்படும் ஏழைப் பெண், குடும்ப
பாரத்துள் அழுத்தப்படும் நடுத்தர வர்க்கப் பெண் ஆகியோரது வாழ்வுரிமை, பாலியல்
ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், கற்பு என்பதைப் பெண்ணின் சிறையாக வடிவப்படுத்திய
ஆணாதிக்கத்திற்கு எதிரான குரல்,
பெண்ணின் உடலியல் சார்ந்த இயல்பான வேட்கைகள் போன்றவை மனத்தடையின்றி சல்மா, மாலதி மைத்ரி, சுகிர்தராணி, லீனா மணிமேகலை, கனிமொழி
போன்றோர் கவிதைகளில் வெளிப்படுகின்றன.
இக்கவிதைகளின் கூற்றுமுறையைப் ‘பெண் மொழி’ என்று கூறுகின்றனர்.
புதுக்கவிதை வளர்ச்சியில் இதழ்கள்
சிற்றிதழ்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், பல்வேறு மாத
இதழ்கள், காலாண்டிதழ்கள்
எனப் பல வகை இதழ்களிலும், இணைய ஊடகத்தில் பல்வேறு வலைத்தளங்களிலும்,
வலைப்பூக்களிலும் புதுக்கவிதைகள் சிறப்பிடம் பெறக் காண்கிறோம்.
வளர்ந்து வரும் புதுக்கவிதை வடிவங்கள்
ஹைக்கூ (துளிப்பா), சென்ரியு (நகைத் துளிப்பா), லிமரைக்கூ (இயைபுத் துளிப்பா), ஹைபுன், குறட்கூ, சீர்க்கூ, கஸல் என்னும்
வகைகளும் புதுக்கவிதையின் சாராம்சமாய் நாளும் தழைத்து வருகின்றன.
சில கவிதைகள்
பூனை செத்துவிட்டது
எந்த மனிதன்
குறுக்கே சென்றானோ?
தேர்வு முடிந்த
கடைசி நாளில் நினைவேட்டில்
கையொப்பம் வாங்குகிற
எவருக்கும் தெரிவதில்லை
அது ஒரு நட்பு முறிவிற்கான
சம்மத உடன்படிக்கைஎன்று (அறிவுமதி)
தோழர்களே!
அந்தக் குழாயை மூடுங்கள்
ஏழையின் உணவு
வீணாகிக்கொண்டிருக்கிறது (ச. நீலமேகன்)
புரட்சி மாநாடு
வாருங்கள் வாருங்கள்....
கோழி பிரியாணி (ஈரோடு தமிழன்பன்)
தேர்வு பயம்
இரவுமுழுக்கப்
படித்தான்....
கந்தசஷ்டி கவசம் (ஈரோடு தமிழன்பன்)
பூவா? தலையா?
பூ கேட்கிறாள்....
விதவை (ஈரோடு தமிழன்பன்)
குறட்கூ கவிதைகள்
சாதி ஒழிப்பு
வெவ்வேறு குவளை
ஒரே கல்லாப்பெட்டி
காவிரி கடக்க
ஓடம் தேவையில்லை
ஒட்டகம் போதும்.
சீர்க்கூக்கவிதைகள்
கல்வி
முதலீடு
இலவசங்கள்
அரசியல்வாதிக்கு லாபம்
5 கருத்துகள்:
பயனடைந்தேன்
பயனடைந்தேன்
எனக்கு மீண்டும் ஒரு ஆரம்பம்...
மிக்க நன்றி நண்பரே
Payanadaindhen
கருத்துரையிடுக