திங்கள், 30 செப்டம்பர், 2019

ஆயுதம்

என்னைப் பொறுத்தவரையில் எழுதுவது என்பது பொழுதுபோக்கல்ல மனதை ஒருநிலைப் படுத்தும் ஒரு வித தியானம் என்றே கருதுகிறேன்.

இக்கதை என் கல்லூரி காலங்களில் 15 ஆண்டுகளுக்கு முன் படைப்பிலக்கியப் பாடவேளைக்காக எழுதி நண்பர்களோடு பகிர்ந்துகொண்டது.

வீசி எறிய மனமில்லாமல் நான் சேர்த்துவைத்த காகிதங்களைப் புரட்டும்போது அகப்பட்டது இந்த ஒருபக்கக் கதை….

 

ஒருபக்கக் கதை

ஆயுதம்

-         ச. நீலமேகன்

 

இந்த சமுதாயம் இருக்கிறதே அது வாழ வழியற்றவர்களை; வலுவற்றவர்களைக் காயப்படுத்திப் பார்ப்பதில்தான் எவ்வளவு சந்தோஷம் காண்கிறது. ஆனால் அக்கிரமம் செய்பவன் வலுத்தவனாக இருந்தால் தட்டிக்கேட்கத் துப்பில்லாமல் நமக்கேன் வம்பென்று ஒளிந்துகொள்கிறது.

இந்தச் சமூகத்தில் தன்னோட வாழ்க்கையை ரசிக்கத் தெரியாதவர்கள் தான் அடுத்தவர் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுப் பார்க்கத் துடியாய்த் துடிக்கின்றனர். இவர்களுக்குத் தன் வாழ்க்கையை வாழ நேரமிருந்திருந்தால் அடுத்தவர் வாழ்க்கையை விமர்சிக்க நேரமேது.

புருஷன் மணல் லாரியில அடிபட்டு செத்துட்டா அதுக்கு இந்த பார்வதி என்ன செய்வாள் பாவம். 

ஆனா அவ மாமியார் “இவள கட்டியாந்த நேரந்தான் எம் புள்ளைய எமங்கொண்டுபோயிட்டான்” என எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பாள்.

பார்வதியோட புருஷன் செத்தவுடனேயே ஊரு உறவு எல்லாமா சேந்து அவளுக்கு ஏதோ பெரிய உபகாரம் செய்யறதா நெனச்சிக்கிட்டு தாலிய அறுத்து, பூவு பொட்டெல்லாம் அழிச்சி கேவலப்படுத்தி ஒன்னுகூடி சோறுதின்னுட்டு போச்சே தவிர, யாராவது அவ ரெண்டு பொண் குழந்தைகள வெச்சுகிட்டு எப்படி கஷ்டப்படப் போறாளோன்னு நெனச்சி வாழ வழிசொல்லிட்டா போச்சி.

கணவனை இழந்த இந்த ஓராண்டு கால வாழ்வில் பார்வதி, தான் வீதியில் நடந்துபோவதை எதிர்ல வரவங்க சகுனத்தடையா நெனக்கிறதையும், சிலபேர் தன்னைப் பார்க்கிற பார்வையே சரியில்லங்கிறதையும், புருஷனை இழந்த பொண்ணுக்கு இந்த சமூகம் தர மதிப்பு என்னங்கிறதையும் ரொம்ப நல்லாவே உணர்ந்திருந்தாள்.

நீண்ட யோசனைக்குப்பிறகு ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தாள். அவளுக்கு இதுதான்… இது ஒன்றுதான் சரி என்று பட்டது.

“தன்னை ஒரு பொருட்டாக நினைக்காத சமூகத்தை நாம் ஏன் எண்ணி பயப்பட வேண்டும். இந்த சமுகம் என்ன சந்தனக் காடா? எல்லா இடங்களிலும் மணம் வீச. எத்தனை சாக்கடைகள் சந்தன வாசத்தில் ஓடித்திரிகின்றன.

நம்மை நாமே ஏன் காட்டிக் கொடுத்துக்கணும். நானொரு விதவை எனக்குப் பாதுகாப்புக்கு யாருமே இல்லைன்னு!, அதனாலத்தானே மனித உருவெடுத்த மிருகங்கள் இவ தனக்கு எப்ப இரையாவான்னு காத்துக்கிடக்கு.

இந்த சமுதாயத்துக்கிட்ட இருந்து நம்மைப் பாதுகாத்துக்க சில அடையாளங்கள் ஆயுதமா பயன்படும்னா அத ஏன் இந்த ஊருக்காக பயத்துக்கிட்டு அத பூட்டி வைக்கணும்.

ஆமா ஒரு பொண்ணுக்கு இவ யாருமில்லாதவன்னு காட்டிக்கொடுக்கிறது இந்த பொட்டு, பூ, தாலி, மெட்டி இதெல்லாந்தான்னா இத ஏன் நாம உதரித்தள்ளணும், ஒளிச்சு வைக்கணும்?...” என ஆழ்ந்த யோசனையில் இருந்தாள்.

சீதையைச் சிதையில் இறக்கிப் பார்த்த சமூகம். சிந்தையில் திருந்த இன்னும் பல யுகங்கள் ஆகாதா என்ன?. அதற்காக இவள் தினந்தினம் தீக்குளிக்கத் தயாராயில்லை, ஊர் ஆயிரம் சொல்லட்டுமே… பார்வதி வெளியூருக்கு வேலைக்குப் போய் வருகிறாள் தாலி, பொட்டு, மெட்டி, வளையல், பூ என்ற ஆயுதங்களைத் தரித்துக்கொண்டுதான்.

வீதியில் நடந்துபோகிறாள்.

“கட்டுக்கழுத்தி எதிரில் வருகிறாள் நல்ல சகுனம்” எனக் கூறியபடி புது மணத் தம்பதிகளைக் காரில் ஏற்றி வழியனுப்புகிறாள், நதி மூலம் ரிஷி மூலம் தெரியாத ஒரு பழைய பஞ்சாங்கம்.  

இப்போதெல்லாம் இரைதேடி அலையும் கண்களுக்கு அவள் இறையாகத் தோன்றுகிறாள்.

இன்று அவள் கம்பெனியில் ஏதோ விஷேஷம் போல இருக்கு குத்துவிளக்கு ஏற்றுகிறாள் பார்வதி, அந்த விளக்குதான் எவ்வளவு பிரகாசமாய் எரிகிறது.

பக்கத்தில் நின்ற பெண்ணொருத்தி அவளைப் பார்த்து உலகம் கேட்கும் வழக்கமான கேள்வியை கேட்கிறாள்… “உங்க வீட்டுக்காரர் எங்க வேலை செய்யறார்”.

சற்றும் யோசிக்காமல் பதில் சொல்கிறாள் பார்வதி “ராணுவத்தில்”.

 

 

1 கருத்து:

Unknown சொன்னது…

(இப்போதெல்லாம் இரை தேடி அலையும் கண்களுக்கு இறையாக தெரிகிறாள்.) அருமையான வரிகள்.