செய்தி இடைவேளை
யாருமற்ற தனியறையில் இணையத்தில் படம் பார்த்துக்கொண்டிருந்த
வேணுவிற்கு படத்தில் வந்த கறுப்புவெள்ளை சாலிடர் டிவியும் அதில் வந்த சோபனாரவி செய்திவாசிப்பதாக
வந்த காட்சியும் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது.
அப்போதெல்லாம் இன்றைக்கு இருப்பதைப்போல
வீட்டுக்குவீடு டிவியோ கேபிள் இணைப்போ, ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாக வைத்துக்கொள்ளும்
DTH குடைகளோ கிடையாது. அதுமட்டுமல்ல இன்றைக்கு நாம் பார்க்கும் ஆயிரக்கணக்கான சேனல்களோ
அதில் வரும் 24 மணிநேர நிகழ்ச்சிகளோ அப்போதெல்லாம் இல்லவே இல்லை. தூர்தர்ஷன் என்ற அரசாங்க தொலைக்காட்சியும் அதில் ஒளிபரப்பாகும் வரையறைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளும்தான் அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களுக்குக் கிடைத்த ஒரே பொழுதுபோக்கு.
அதிலும் இன்றைக்கு இருப்பதைப்போல டிஜிட்டல்
தொழில்நுட்ப ஒளிபரப்பு ஒன்றும் கிடையாது, தொலைக்காட்சியில் தெரியும் படம் தெளிவில்லாமல்
பொரிபொரியாகவோ குறுக்கே கோடுகோடாகவோ சில சமயங்களில் அலையலையாகவோதான் வரும். டிவியைவிட பிரமாண்டம் அந்த டிவிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஆண்டனா கம்பம்தான்.
ஊரில் யார்யார் பணவசதி உள்ளவர்கள், யார்யார்
வீட்டில் டிவி இருக்கிறது என்ற புள்ளிவிவரத்தைச் சேகரிக்க வேண்டுமானால் வீடுவீடாகச்
சென்று கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதில்லை; உயர்ந்து நிற்கும் ஆண்டனாக்களைப் பார்த்தாலே
போதும். அதற்காக டிவியும் ஆண்டனாவும் இல்லாத வீடுகளில் உள்ளவர்கள் எல்லாம் பரம ஏழைகள்
என்றோ, டிவி வைத்திருப்பவர்கள் எல்லோரும் வசதி
படைத்தவர்கள் என்றோ சொல்லிவிடவும் முடியாது. காரணம் பணம் இருந்தாலும் பலருக்கு வாங்க
மனம் வருவது கிடையாதே.
டிவியில் தெரியும் படத்தின் தரம் ஒவ்வொரு
வீட்டிலும் வைத்திருக்கும் ஆண்டனாவின் உயரத்தைப்பொறுத்தும் அது சரியான திசையில் திருப்பி
வைத்திருப்பதைப்பொறுத்தும்தான் அமையும் அதனால் சில வீடுகளில் ஆண்டனா கம்பத்தை மிக உயரமாக
அமைத்திருப்பார்கள்.
டிவியில் தெரியும் காட்சி ரொம்பவும் பொரிப்பொரியாக
இல்லாமல் சற்று தெளிவாய்த்தெரிவது ஆண்டனாவின் உயரத்தினால் மட்டும் அமைந்துவிடுவதில்லை,
அது காக்கைகளில் ஒத்துழைப்பிலும் அடங்கியிருக்கிறது என்பதை அனுபவப்பட்டவர்கள் நன்கு
அறிவார்கள். காரணம் காக்கைகள் கூட்டமாக படுக்கைவாட்டில் அலுமினியக் கம்பிகள் பொருத்தப்பட்டு கோபுரவடிவில்
இருக்கும் ஆண்டனாவில் உட்கார்ந்து பல சமயங்களில் அந்த அலுமினியக்கம்பிகளை வளைத்துவிட்டுப்போய்விடும்.
அதனால் அவற்றை விரட்டுவதற்காக சிலர் ஆண்டனாவிற்குமேல் காற்றடித்தால் சுழலுகின்ற வகையில்
காற்றாலை ரெக்கையை மல்லாக்காகப் பொருத்தியதைப்போலப் பொருத்தி காக்கைகளை விரட்ட வழிசெய்து
வைத்திருப்பார்கள் ஆனால் அந்த முயற்சியெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான், அப்புறம் அந்த
காற்றாடி சுற்றாமல் சிக்கி அப்படியே கிடக்கும், பிறகு மீண்டும் காக்கைகள் வழக்கம்போல
அமரத்துவங்கிவிடும்.
காக்கைகள் மட்டுமல்லாது சிலநேரங்களில்
பலமான காற்றுவந்து ஆண்டனாவை திசைதிருப்பிவிட்டுப் போய்விடுவதும் உண்டு. அப்படிப்பட்ட
நேரங்களில் டிவிக்கு சரியான சிக்னல் கிடைக்காததால் படம் வராது. இதுபோன்ற இக்கட்டான
நேரத்தில் டிவியில் படம் வருகிறதா என்பதை ஒருவர் பார்த்துச் சொல்ல, ஒருவரோ இருவரோ ஆண்டனாவை
சரியான திசைக்குத் திருப்பவேண்டும் அப்போதுதான் எல்லோரும் அன்றைக்குப் படம் பார்க்கமுடியும்.
எப்படியிருந்தாலும் டிவியில் ஓரளவுக்குத் தெளிவான காட்சியைப் பார்ப்பதென்பது
அவரவர்கள் அதிஷ்டத்தைப்பொறுத்துத்தான் அமையும். இந்த ஆண்டனா கம்பம் இருக்கிறதே அது
வெறும் ஆண்டனா கம்பம் மட்டுமல்ல, அது அந்த
வீட்டின் கௌரவத்தின் அடையாளமாகவும் இருந்தது. அந்த கௌரவத்திற்கு உரியவர்களாக எல்லோரும்
இருந்துவிடுவதில்லை. அந்த கௌரவம் ஊரில் வசதிபடைத்த சிலருக்கும், கடன்வாங்கியாவது அந்த டிவியை வாங்கி அதை கண்டுபிடித்தவனுக்கும்
அதை உற்பத்திசெய்தவனுக்கும் பெருமை தேடித்தர நினைக்கும் மனம்படைத்தவர்களுக்கும்தான்
கிடைத்தது.
அப்படிப் பார்க்கப்போனால் ஊரில் பத்துப்
பன்னிரண்டு வீடுகளில்தான் அந்தக் கௌரவக் கொடி பறந்துகொண்டிருந்தது. அப்படி அந்தப் பத்துப்
பன்னிரண்டு வீட்டுக்காரர்களும் ஏதாவது அரசாங்க உத்தியோகத்தில் நிரந்தர வருமானம் உள்ளவர்களாகவோ,
பரம்பரைப் பணக்காரர்களாகவோ, ஊரில் பெருந்தலையாகவோ, பிள்ளைகள் நன்குபடித்து பட்டணத்தில்
வேலை செய்பவர்களாகவோ அல்லது புதியன விரும்பும் வேட்கை கொண்டவர்களாகவோதான் பெரும்பாலும்
இருப்பார்கள்.
இப்படி டிவிப்பெட்டி வைத்திருப்பவர்கள்
எல்லோரும் பெருந்தன்மை உள்ளவர்களாக இருப்பார்கள் என்று சொல்லிவிடமுடியாது. சிலர் யாரையும்
வீட்டுக்குள் சேர்க்க மாட்டார்கள்; சிலர் வேண்டா வெறுப்பாய் பார்த்துவிட்டுப்போகட்டுமே
என்று நினைத்து அனுமதிப்பார்கள்; இன்னும் சிலர் தங்கள் வீட்டில் பலரும் வந்து படம்பார்த்துவிட்டுப்போவதை
பெரும் கௌரவமாக நினைப்பார்கள். இப்படிப் பல ரக மனிதர்கள் அந்த டிவிப் பெட்டிக்குச்
சொந்தக்காரர்களாக இருந்தார்கள்.
இந்த பலதரப்பட்ட மனிதமனம் கொண்டவர்கள்
வீடுகளில்தான் இல்லாதவர்கள் சென்று படம்பார்க்க வேண்டிய நிலையில் இருந்தார்கள். அதற்காக
எல்லாரும் எல்லாவீடுகளுக்கும் சென்றுவிடுவதில்லை.
பக்கத்துவீட்டிலேயே டிவி இருந்தாலும் சண்டைக் காரர்கள் வீட்டுக்குள் யாரும் நுழைவதில்லை
அவர்கள் வேறு வீடுகளுக்குத்தான் செல்வர்கள்.
அப்படிச்செல்லும் வீடுகளிலும் சில விச்சித்திரங்கள்
நடப்பதுண்டு. டிவி பார்க்க வருபவர்களை வீட்டிலுள்ள பெருந்தலைகள் அனுமதித்தாலும், அந்த
வீட்டிலுள்ள பேரனோ பேத்தியோ ரொம்பவும் பிகுபண்ணிக்கொள்வார்கள் அல்லது சிறியவர்கள் பெருந்தன்மையோடு
நடந்துகொள்ள அந்த வீட்டிலுள்ள உலகியல் அறியாத பாட்டிகள் “எந்த தெருவுல இருந்து இங்கவந்து
டிவி பார்க்க வர்றது” என்று சொல்லி தெருவெல்லை தாண்டிவரும் சிறுபிள்ளைகளை விரட்டிவிடுவதும்
உண்டு.
சில நேரங்களில் பள்ளிக்கூடத்தில் டிவி இருக்கும் வீட்டுப் பிள்ளைகளுடன் ஏதாவது சண்டை
ஏற்பட்டுவிடும்போது டிவி இருக்கும் வீட்டுப் பிள்ளைகள் தங்களை எதிர்த்துச் சண்டை போட்டவர்கள்
தங்கள் வீட்டுக்கு வாடிக்கையாக டிவி பார்க்கவரும்
பையனாகவோ பெண்ணாகவோ இருந்துவிட்டால் “ஏய் எங்க வீட்டுக்கு டிவி பார்க்க வருவ இல்ல அப்ப
பார்த்துக்கிறேன் ஒன்ன” என்று மிரட்டல் விடுவதும் நடக்கும் அதனால் சில பிள்ளைகள் அப்படிப்பட்ட
அம்சத்தைப் பெற்றுவிட்ட பிள்ளைகளிடம் எதிர்ப்புகாட்டாமல் அடங்கிப் போய்விடுவதும் உண்டு.
அந்த அளவுக்கு டிவிக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு ஒரு தனி மரியாதை இருந்தது.
இந்தச் சம்பவங்கள் எல்லாம் நினைவு வந்தபோது,
வர்க்க பேதங்களின் வித்து எப்படியெல்லாம் சமூகத்தில் ஊன்றப்பட்டிருந்தது என்பதை எண்ணிப்
பார்த்தபோது வேணுவுக்கு விந்தையாகத்தான் இருந்தது.
இன்றைக்கு எல்ஈடி, எல்சிடி என்று சிறிய
வடிவத்தில் உயர் தொழில் நுட்பத்தில் இருந்த இடத்திலிருந்தே ரிமோட் மூலம் இயக்குவதை
எண்ணிப் பார்த்தபோது வேணுவுக்கு நடராஜவாத்தியார் வீட்டுப் பெரிய சைஸ் கருப்புவெள்ளை
சாலிடர் டிவிதான் நினைவுக்கு வந்தது. அந்த டிவிக்கு இரண்டு பக்கம் இழுத்துப் பூட்டும்
மரத்தாலான ஒருவித ஷட்டரும் அதைப் பூட்டி வைப்பதற்கு ஒரு சாவியும்கூட இருந்தது. அதை
நடராஜ வாத்தியார் பையன் பாலாஜி பூட்டும்போது பார்த்ததை வேணு நினைத்துப் பார்த்து நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தான். அப்போது அந்த
டிவி டியூனரைத் திருப்பும்போது கேட்கும் ‘டக்டக்’கென்ற சத்தம் அவன் நினைவில் வந்துபோகத்
தவறவில்லை.
டிவியில் வயலும் வாழ்வும் , ஒளியும் ஒலியும்,
மகாபாரதத் தொடர், சிறுவர்கள் ரசிக்கும் சக்திமான் தொடர், ஞாயிற்றுக்கிழமை மாலைகளில்
ஒளிபரப்பாகும் திரைப்படம் என அட்டவணைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கமுடியும் அவற்றில் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பாகும் ஒளியும் ஒலியும்
நிகழ்ச்சியையும் ஞாயிறு மாலையில் ஒளிபரப்பாகும் திரைப்படத்தையும் பார்க்கவே நிறைய பேர்
வருவார்கள். ஊரில் பெருந்தன்மையானவர்கள் வீடு
எது என்பதை அந்த வீட்டில் உட்கார்ந்து டிவி பார்க்கும் நபர்களின் எண்ணிக்கையையும்,
பார்க்கவந்தவர்களின் நிலையையும் பார்த்தாலே தெரிந்துவிடும்.
ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் திரைப்படத்திற்கு
இடையில் வரும் செய்தி இடைவேளைதான் டிவி பார்க்கவரும் பிள்ளைகளுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்திவிடும் அந்த துன்பத்தை
சிறுவயதில் வேணுவும் பலமுறை அனுபவித்திருக்கிறார்.
உலகநடப்பைப் பற்றி அறியாத, அதை அறிந்துகொள்ள விருப்பமில்லாத சிறுபிள்ளைகளுக்கு
செய்தி இடைவேளை எட்டிக்காயாகக் கசக்கும். செய்தி வாசித்து முடித்து “இத்துடன் இன்றைய
செய்திகள் நிறைவடைந்தன மீண்டும் செய்திகள் இரவு பத்துமணிக்கு, வணக்கம்” என்று செய்தி
வாசிக்கும் பெண்மணி சொல்லிமுடித்ததும். படம் பார்க்கும் ஆர்வத்திலிருந்த பிள்ளைகள் ஏதோ படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது தானாகவே
இடையில் வந்து செய்தி வாசிக்கும் பெண் எதைஎதையோ பேசி நேரத்தை வீணடிப்பதாக நினைத்துக்கொண்டு
முகத்தைச் சுளித்துக்கொண்டு “வணக்கம்… வணக்கம்… போதும் போய்வா…” என்று சொல்லிவிட்டு
திரைப்படம் தொடர்கிறது… என்று எப்போது வரும் என்பதை எதிர்பார்த்து ஆர்வத்தோடு காத்துக்கிடக்கும்
சில நேரங்களில் டிவி பார்க்கவந்த இடத்தில்
வீட்டிலுள்ளவர்கள் சாப்பிடுகிற நேரமாகவும் அந்த செய்தி இடைவேளை அமைந்துவிடும் இதை உணர்ந்த பெரியவர்கள் இங்கிதம்
கருதி எழுந்துபோய்விடுவார்கள். அந்த சூழலில் டிவிவீட்டுக்காரர்களும் பெரியவர்கள் இல்லாத
பட்சத்தில் உட்கார்ந்துகொண்டிருக்கும் சிறுவர்களிடம் செய்தி இடைவேளையை உணவு இடைவேளையாக்கி
“ எல்லோரும் வீட்டுக்குப்போய் சாப்பிட்டுவிட்டு வாங்க” என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள்.
திரும்பிவரும்போது கதவு திறந்திருக்கும் என்று சொல்லமுடியாது. கதவு சாத்தப்பட்டிருந்தால்
கதவைத் தட்ட கூச்சப்பட்டு திரும்பிப்போய்விடுவதும் உண்டு. இந்த சம்பவம்தான் டிவி பார்க்கவரும் சிறுபிள்ளைகளுக்கு செய்தி இடைவேளையின்மீது
இந்த அளவுக்கு வெறுப்பு ஏற்படக் காரணம்.
அப்படி கதவு சாத்தப்பட்டதால் திரைப்படத்தின்
கிளைமேக்ஸ் எப்படி முடிந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முடியாமல் போன எத்தனையோ திரைப்படங்கள்
உண்டு. இது போன்ற எதிர்பாராத வேளைகளில் திரைப்படத்தின் முடிவை எப்படியாவது பார்த்துவிடவேண்டும்
என்ற ஆர்வத்தில் ஓட்டம்பிடித்து வேறு ஒரு வீட்டிற்குச் சென்று பார்த்ததும் வேணுவுக்கு நினைவுக்கு வந்தது.
இந்த வலியும் செய்தி இடைவேளையின்மீது வெறுப்பு தோன்ற முக்கிய காரணியாக இருந்தது.
இப்படி ஒருநாள் நடராஜவாத்தியார் வீட்டில்
படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது வாத்தியார் பையன் பாலாஜி செய்ததை வேணுவால் இன்னும்
மறக்கமுடியவில்லை. அன்றொரு ஞாயிற்றுக்கிழமையில் எம்ஜிஆர் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது வழக்கம்போல
செய்தி இடைவேளை வந்ததும் எல்லோரும் எழுந்துபோய்விட்டார்கள். வேணு எங்கே எழுந்து வெளியே
போனால் கதவைச் சாத்திவிடுவார்களோ என நினைத்து எல்லோரும் போய்விட்டதை அறியாதவன்போல செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது. வேணுமட்டும்
இன்னும் போகாமல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்த பாலாஜி, “டேய் ஊரிலிருந்து உங்க மாமா
வந்திருக்கிறாராம். உங்க அம்மா உன்னை வரச் சொன்னாங்களாம்” என்று சொல்லி வேணுவை அனுப்பிவிட்டான்.
வேணு வீட்டுக்கு ஓடிப்போய் பார்த்தபோது மாமா வரவில்லை. அம்மாதான் தலைவலியோடு படுத்துக்கொண்டிருந்தாள்.
வேணுவுக்கோ ஏமாற்றத்தின் வலி..
ஞாபகக் குளத்தில் நீந்திக்கொண்டிருந்த வேணுவை, வீட்டில் இன்டர்நெட் வசதி இல்லாததால் தன்
வீட்டுக்கு வந்திருந்த சதீஷோடு ஆன்லைன் கிளாசில் படித்துக்கொண்டிருந்த அவன் மகள் ஆர்த்தி,
வகுப்பு முடிந்து அப்பாவை சாப்பிடக் கூட்பிட்டபோது வேணு அந்த ஞாபகக்
குளத்திலிருந்து கரையேற வேண்டித்தான் இருந்தது.
வேணு சாப்பிட எழுந்தபோது யாரோ இரும்புகேட்டை தட்டி கூப்பிடும் சத்தம், யார் என்று போய் பார்த்தபோது அவன்தான் தன் பையனை
அழைத்துப்போக வந்திருந்தான். வந்தவன் வேணுவைப் பார்த்து “எப்பதான் இந்த பள்ளிக்கூடத்த
தொறப்பாங்களோ பெரிய தொல்லையாப்போச்சு” என்று சொல்லிவிட்டு தன் பிள்ளையை சைக்கிளின்
பின்னால் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிட்டான். கேட்டை சாத்திவிட்டு திரும்பியபோது எதிரே
வந்த ஆர்த்தி கேட்டாள் “யாருப்பா பாலாஜி அங்கிளா?” என்று.
-
ச.
நீலமேகன்
21-07-2021