ஞாயிறு, 4 ஜூலை, 2021

பழி

பழி

-         சிறுகதை

 

 விலங்கியல் ஆசிரியை சரோஜாதேவி அன்று வழக்கத்துக்குமாறாக ஆய்வுக்கூடத்துக்குச் சென்று  விலங்கு மாதிரிகளை எடுத்துவர பாலகிருஷ்ணனை அழைத்தபோது அவன் ஒரு கணம் திகைத்துத்தான் போனான்.

அவர் வகுப்பிலும் சரி ஆய்வுக்கூடத்திலும் சரி எந்தவேலையாக இருந்தாலும் மாணவி என்றால், எப்போதும் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கும் விமலா,  ஜெயபாரதி அல்லது பிரேமலதா.  மாணவன் என்றால், பாஸ்கரன் அல்லது கருணாகரன் இவர்களைத்தான் அழைப்பார். ஆனால் அன்று வழக்கத்துக்கு மாறாக பாலகிருஷ்ணனை அழைத்ததும் அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை பெருமிதமாகவும் இருந்தது. அதுமட்டுமல்ல குருவின் பார்வை தன்மீது பட்டதில் அவனுக்கு உள்ளூர பெரும் மகிழ்ச்சி, ஆசிரியர்களால் தானும் கவனிக்கப்படுகிறோம் என்பதை எண்ணி பார்த்ததால் வந்த பூரிப்பு அது என்று கூடச் சொல்லலாம்.

இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று மற்றவர்கள் நினைக்கலாம் காரணம் பாலகிருஷ்ணன்  மதிப்பெண்களை வாரிக்குவிக்கிற முதன்மையான மாணவர்களில் ஒருவனும் அல்ல, தோற்றத்தில் மற்றவர்களின் கவனத்தைத் திருப்புகிற தோற்றப்பொலிவுடையவனும் அல்ல அடையாளம் தெரியாத மாணவச் சமுத்திரத்தில் அவனும் ஒரு துளி.

மட்டரகமான தைத்ததிலிருந்தே ஒரு முறைகூட இஸ்திரி செய்யப்படாத சாயம்போன காக்கிபேண்ட், காலர் நைந்து கிழிந்தும், அக்குள் பகுதியில் தையல் போனதால் ஊசியில் கையால் தைக்கப்பட்டும், பின்பக்கம் சுருண்டு கிடக்கும் வெள்ளை சர்ட். இதுதான் அவனது அன்றாட ஒற்றைச் சீருடை. அவனை மற்ற மாணவர்களிடமிருந்து தனித்துவமாகக் காட்டுவதற்கு இதுகூடக் காரணமாக இருக்கலாம். ஒருவேளை இந்த தனித்துவம்தான் அன்று விலங்கியல் ஆசிரியை சரோஜாதேவி அவனை அழைத்ததற்கு காரணமோ என்னவோ தெரியவில்லை.

 அந்த  விலங்கியல் ஆய்வுக்கூடத்தின் ஒரு மூலையிலுள்ள அறைக்குள் கண்ணாடி சாடிகளுக்குள் திரவத்திற்குள் மூழ்கிய நிலையில் பதப்படுத்தப்பட்ட பாம்பு, ஆமை, நண்டு, தவளை, கடல்குதிரை, நத்தை, தேள் இப்படி எத்தனையோ உயிரின மாதிரிகள் கண்ணாடிக் கதவுகள் கொண்ட மர பீரோவில் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். அவற்றை அவன் தன் செய்முறை நோட்டில் கையொப்பம் வாங்கச் செல்கிறபோது தூரத்திலிருந்து பார்த்ததுண்டு.

ஒவ்வொரு மாதிரியின் அடியிலும் அதன் விலங்கியல் பெயர்கள் எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். அந்த பெயர்களில் அவனை ரொம்பவும் ஈர்த்தது அல்லது மறக்கமுடியாதபடி செய்தது என்றால் அது பாம்பின் விலங்கியல் பெயரான நாஜா நாஜா என்பதுதான்.

அவன் அந்த பெயரை மறக்காமல் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வதற்கு ஒரு காரணம் இருந்தது.  ஒரு முறை வகுப்பில் அந்த பெயரைச் சொன்னபோது இளங்குமரன் சிரித்துவிட்டான் உடனே அவனை எழுப்பி “எதுக்குடா சிரிச்ச நான் என்ன பூஜா பூஜான்னா சொன்னேன்” என்று சரோஜாதேவி மேடம் சொன்னபோது வகுப்பில் எல்லோரும் வயிறுகுலுங்க சிரித்தார்கள் என்பதுதான் அது.

அப்படிப்பட்ட அந்த மாதிரிகளை தன் கைகளால் எடுத்துவரப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் சரோஜாதேவி மேடத்தின் பின்னால்  செருப்பில்லாத அவன் பாதங்களை ஒரு பூனை தன் பாதங்களை வைத்து நடப்பதைப்போல ஓசையில்லாமல் ரொம்பவும் பவ்யமா நடந்து போய்க் கொண்டிருந்தான்.

ஆய்வுக்கூடத்தில் எப்போதும் கெமிஸ்ட்ரி வாத்தியாரோடு உட்கார்ந்து பள்ளி முடிந்து மாலையில்  தாங்கள் இருவரும் சேர்ந்து நடத்தும் டியூசன் பற்றியும் அதன் வரவுசெலவு பற்றியும் பேசிவிட்டுப் போவதுண்டு. அன்று அப்படித்தான் ஏதோ வேலையாக கெமிஸ்ட்ரி வாத்தியாரோடு பேசிக்கொண்டிருந்தார்  கணக்கு வாத்தியார் மோசஸ்.

அப்படிப் பேசிக்கொண்டிருந்தவர் தூரத்தில் லேப்புக்குள் சரோஜாதேவி மேடத்தின் பின்னால் நடந்துவந்துகொண்டிருக்கும் பாலகிருஷ்ணனைப் பார்த்ததும் கோபத்தோடு அழைத்தார்.  அவர் அழைத்ததும் ஆசிரியையின் பின்னால் நடந்து போய்க் கொண்டிருந்த பாலகிருஷ்ணன்  அவர் அழைப்புக்கு செவிசாய்த்து ஆசிரியர் என்ற முறையில் அவர்மீது கொண்ட மரியாதையின் காரணமாக தன் நடையில் விரைவுகாட்டி தனக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த சரோஜாதேவி மேடத்தைக் கடந்து அவர் முன்னால் போய் நின்றான். அவன் தன்னைக் கடந்துபோவதை விலங்கியல் ஆசிரியை சரோஜாதேவி கூட   ஒரு கணம் திரும்பிப்பார்த்தார்.

தன் எதிரே வந்து நின்ற பாலகிருஷ்ணனைப் பார்த்து கணக்குவாத்தியார் மோசஸ், “டேய் மொதல்ல எப்படி நடந்துவந்த, இப்ப எப்படி நடந்துவர்ற?” என்று மிரட்டல் தொனி வெளிப்பட அவனைக் கேட்டபோது, அவன் ஒரு நொடி இயக்கமற்று ஸ்தம்பித்துத்தான் போனான்.  அவர் எதற்காக இப்படி மிரட்டுகிறார் என்பது அவனுக்கு விளங்கவே இல்லை.

“தப்பை ஒத்துக்கொள்” என்று சொல்லிக்கொண்டே மோசஸ் வாத்தியார் தன் அருகே வந்துவிட்ட சரோஜாதேவி மேடத்திடம் இவன் உங்களைப் போலவே நடந்து ஜாடை செய்து உங்கள் பின்னால் நடந்து வந்தான் மேடம்; நான் கூப்பிட்டதும் மாற்றிவிட்டான் எவ்வளவு திமிர் பாருங்க இந்த பையனுக்கு” என்று சொன்னபோது பாலகிருஷ்ணனுக்கு எங்கிருந்துதான் அந்தக் கோபம் வந்தது என்று அவனுக்கே தெரியவில்லை. அடுத்த கணமே அவரின் ஆசிரியர் பிம்பம் அவன் கண் முன் சுக்குநூறாய் உடைந்தது.

நிரபராதி ஒருவன் தன் மீது சுமத்தப்பட்ட பொய்க்குற்றச்சாட்டை பொறுத்துக்கொள்ள முடியாமல் நெஞ்சம் கலங்குவானே அதைப்போலவே தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து “என் மீது பழி போடாதீங்க சார் உங்கள் பார்வையும் கண்ணோட்டமும் தான் தவறு, அவர் நடந்து போனதை நீங்கள்தான் வேறு கோணத்தில் பார்த்து இருக்கிறீர்கள் உங்கள் கண்ணோட்டம்தான் தவறானது அப்படி எந்த பார்வையும் எனக்கு இல்லை என்று பாலகிருஷ்ணன் சொல்லி கண்கலங்க நின்றபோது, மோசஸ் வாத்தியாருக்கு இன்னும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

அருகே நின்றுகொண்டிருந்த சரோஜாதேவி மேடத்திடம் “நான் ஒன்றுமறியாதவன் என்னை நம்புங்கள் மேடம்” என்று சொன்னபோது  பாலகிருஷ்ணன் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துவிட்டது

தன் மீதே இப்படி ஒரு குற்றச்சாட்டு வரும் என்பதை மோசஸ் வாத்தியார் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பாலகிருஷ்ணன் அழுதுகொண்டே “உங்கள் கண்ணோட்டம் சரியில்லை சார்” என்று சொன்னபோது பக்கத்திலிருந்த கெமிஸ்டரி வாத்தியார்வேறு பலமாக சிரித்துவிட்டார் அது இன்னும் அவன்மீதான கோபத்தை அதிகரிக்கக் காரணமாய்ப் போய்விட்டது.

பாலகிருஷ்ணன் அங்கு நின்று அழுதுகொண்டிருந்ததை லேப்பிலிருந்த மாணவர்கள்  எல்லோரும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தன் மீது சுமத்தப்பட்ட பழியையும் தாண்டி அவன் வருந்துவதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று தன்மீது அந்த ஆசிரியருக்கு தோன்றக்கூடிய நல்ல அபிப்பிராயத்தை இழந்துவிடுவோமோ என்பதும், இரண்டாவது தன்மீது அந்த சூழலில் தோன்றிய  வெறுப்பால் வர இருக்கின்ற செய்முறைத் தேர்வில் மதிப்பெண்களைக் குறைத்துவிடுவார்களோ என்பதும்தான்.

அதற்கு ஏற்றார் போல “நீ இப்படிப்பட்டவனா” என்று கேட்பதைப்போல சரோஜாதேவி மேடம் அவனை ஏறஇறங்கப் பார்த்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் போய்விட்டார். இந்தப் பழியிலிருந்து தான் குற்றமற்றவன் என்பதை எவ்வாறு நிரூபிப்பது என்ற சிந்தனையோடே கிடுகிடுவென நடந்து யாருமற்ற வகுப்பறைக்குள் வந்து கதவுகளைச் சாத்திக்கொண்டு பெஞ்ச்சின்மீது உட்கார்ந்து மேசைமீது தலையை வைத்து குனிந்தவாறு அழுதுகொண்டிருந்தான்.

லேப்பிலிருந்து கோபமாக வெளியே வந்துகொண்டிருந்த பாலகிருஷ்ணனை சமாதானப்படுத்த வகுப்பில் அவன் பக்கத்தில் உட்காரும் முருகையன் கூட தடுத்துப் பார்த்தான். ஆனால் அவன் கையை பாலகிருஷ்ணன் உதறிவிட்டு ஓடியதில் முருகையன் கைக்கடிகாரம் கழன்று கீழே விழுந்ததோடு பாலகிருஷ்ணனின் நகம் அவன் கையில் காயத்தை ஏற்படுத்தி விட்டது.

அந்த முருகையன்தான் ஓடிப்போய் பாலகிருஷ்ணன் வகுப்பறைக்குச் சென்று கதவைச் சாத்திக்கொண்ட விஷயத்தை மோசஸ் வாத்தியாரிடம் சொன்னான்.  அவர் பதறிப் போய் ஓடி வந்து கதவைத் திறந்துகொண்டு பாலகிருஷ்ணனின் அருகே நின்றபோது அங்கிருந்த மேசையின் மீது தன் கையால் ஓங்கி படார் படார் என்று அடித்துக் கொண்டு அழுதவாறே “என் மீது வீண் பழி சொல்ல உங்களுக்கு எப்படி சார் மனசு வந்தது. இனி என்னைப் பார்க்கும்போதெல்லாம் மேடம் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள். நீங்களாகவே ஒரு ஊகத்தை ஏற்படுத்திக்கொண்டு இப்படி பழிசுமத்தலாமா?” என்று கேட்டபோது மோசஸ் வாத்தியாருக்கு தான் தவறு செய்து விட்டோமோ என்று தோன்றியது.

பாலகிருஷ்ணனுக்கு எவ்வளவு சமாதானம் சொல்லியும் அவன் அழுகையை நிறுத்தாததால்  கடைசியில் தன்னை மன்னித்து விடும்படி அவனிடம் செல்லிவிட்டு அங்கிருந்து வெளியே வந்த மோசஸ் வாத்தியார், “நாம் அவனைத் தவறாகச் சந்தேகப் பட்டதைப் போல  “உங்கள் கண்ணோட்டம்தான் தவறானது” என்று இவன் சொன்னதைக்கேட்டு அந்த மேடம் நம்மைத் தவறாக நினைத்திருந்தால்?” என்பதை நினைத்துப்பார்த்தபோது நடந்துபோய்க்கொண்டிருந்த அவருக்கும்கூட உடல் கூசியது.

அவர் லேப்புக்குள் நுழைந்தபோது வேலிப்பக்கமாக இருந்து நுழைந்துவிட்ட பாம்பை அது கொடிய விஷமுடையதா? இல்லையா? அது யாரையாவது கடிக்க வந்ததா? அல்லது தன் பசிக்காக இரைதேட வந்ததா? என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல். பாம்பென்றால் கொடியது அது நஞ்சுடையது. அது கடித்தால் நாம் செத்துவிடுவோம். எனவே அதைக் கண்டால் அடித்துவிடவேண்டும் என்று சமூகம் தவறாகக் கற்பித்த பாடத்தை அப்படியே ஆராயாமல் ஏற்றுக்கொண்ட மாணவர்கள்  அதை ஆரவாரத்தோடு அடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் ஒருவன் "இன்னும் உயிர் இருக்கு வால் ஆடுதுபாரு" என்று செத்த பாம்பை அடிக்க ஓடினான்.

- ச. நீலமேகன்

    (04-07-2021)

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

நடைமுறை உண்மை

ச. நீலமேகன் சொன்னது…

நன்றி.

AJ சொன்னது…

Correct observation of the human nature.
Sorry for the remarks in English. I am not able to get Tamil in WhatsApp in this phone.
I am okay(?) with severe pain in my left knee and right ankle.
How are you? Are you coming to college?

jeykumar சொன்னது…

அருமையான கதை "பழி" செய்யாத தவறுக்கு யாரும் பொறுப்பு ஏற்க முடியாது.
நானும் சில இடங்களில் செய்யாத தவறுக்கு தண்டனை பெறும் போது நிறைய கோபப்படுவோன்.
நம் வாழ்க்கையின் எதார்த்தை உணர்த்துகிறது.
அருமையான கதை மிகவும் பிடித்திருந்தது. நன்றி🙏

Shivani சொன்னது…

அருமையான முன்னிலை போக்காண கதை அருமை சார்

Arunkumar.A சொன்னது…

வாழ்த்துக்கள் ஐயா