புதன், 28 ஜூலை, 2021

ஒரு கனவு

ஒரு கனவு

வாழ்க்கையில் பெரிதாக ஒன்றும் சாதிக்காவிட்டாலும் இந்த மூர்த்திக்கு கனவு காண்பதில் மட்டும் எந்த குறையும் இருக்காது. கனவு என்றால் பேய்களோடு பேசுவதோ அல்லது திரைப்படத்தில் காட்டுவதைப்போல காதலியோடு டூயட் பாடுவதாகவோதான் இருக்கும் என்று யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம்.

மூர்த்தி கனவு காண்பதில்கூட ரொம்பச் சிக்கனமான மனிதன்தான். “ஏன் அவருக்கு பிரமாண்ட கனவுகள் தோன்றாதா?” என்று யாரும் கேட்டுவிடக் கூடாது.

 பொதுவாக கனவுகளைப் பற்றி  உளவியல் நிபுணர்கள் “நிறைவேறாத ஆசைகள்தான் கனவுகளாக வெளிப்படுகின்றன” என்று எங்கோ கேட்ட ஞாபகமோ, படித்த ஞாபகமோ  அது எனக்குத் தற்போதைக்கு ஞாபகத்தில் இல்லை. அப்படிப் பார்க்கப்போனால் எதிலும் எளிமையை விரும்புகிற மூர்த்திக்கு பிரமாண்டமான கனவு வந்திருக்க வாய்ப்பில்லை என்று நாமே ஒரு முடிவுகட்டிக்கொள்வதில் தவறில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது; உங்களுக்கு எப்படியோ அது எனக்குத் தெரியாது.

“அது என்ன, சாதித்தவனுக்கு மட்டும்தான் கனவு வருமா?” என்றோ, அல்லது “எது சாதனை” என்றோ,  என்னால் பதில் சொல்லமுடியாத கேள்விகளையும் யாரும் கேட்டுவிடக்கூடாது. நான் என் பார்வையில் அப்படிச் சொல்லவில்லை அவரைப்பற்றி மற்றவர்கள் சொன்ன மதிப்பீட்டின் அடிப்படையில் அப்படிச் சொல்லிவிட்டேன். அதுகூட பெரும் தவறுதான் அதற்காக நீங்கள் என்னைப் பொறுத்தருள வேண்டும்.

“கனவில் இப்படிக்கூட நடக்குமா?” என்றும் கேள்விகேட்கக்கூடாது. அப்படி யாராவது கேட்டால் “அதுதான் கனவாயிற்றே அது எப்படியாவது இருந்துவிட்டுப் போகிறது உங்களுக்கென்ன வந்தது” என்றுதான் நான் பதில் சொல்லுவேன் யாரும் கோபித்துக்கொள்ளக்கூடாது.

மூர்த்தி எழுதிய பாட்டைக் கொண்டுபோய் அவன் அம்மா, யாரிடமோ பேசிக்கொண்டிருக்கும் கண்ணதாசனிடம் காண்பிக்கிறார்.

பாடலை வாங்கிப் படித்துப் பார்த்த கண்ணதாசன்  சில நொடிகளில் பாடலைக் கொண்டுவந்த மூர்த்தியின் அம்மாவிடம், “இந்த சரணத்தில் இருக்கிற ஒரு வரியை பல்லவிக்கு  மாற்றினால் நன்றாக இருக்கும்” என்று பேனாவை எடுத்து சரணத்தில் இருந்த ஒரு வரியை அடித்துவிட்டு பல்லவியில் எழுதித்தருகிறார்.

கவிஞர் கண்ணதாசனிடம் காட்டி திருத்தம் செய்த பாட்டை தன் மகன் மூர்த்தியிடம் அவன் அம்மா காட்டியபோது, “சரணத்திலிருந்த வரியை பல்லவிக்கு மாற்றியது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், சந்தம் சரியாக இல்லை  மேலே உள்ள வரியில் ‘காலை’ என்று முடிந்திருக்கிறது. இந்த இடத்தில் ‘உன்னைச் சந்தித்த நேரம்’ என்ற அடுத்த அடியின் வரியை ‘உன்னைப் பார்த்த வேளை என்று மாற்றினால்தான், காலை-வேளை என்று ஓசை ஒழுங்காக வரும் என்று தோன்றுகிறது” என்று மூர்த்தி கூறியதும் அவன் அம்மா அவனது தலையில் செல்லமாக தட்டிவிட்டுப் போய்விட்டாள்.

அன்று தன்னைமீறி அதிகநேரம் தூங்கிவிட்டதால் அவசர அவசரமாக கல்லூரிக்குக் கிளம்பிப்போன பேராசிரியர் மூர்த்தி முதல் பாடவேளையில் ஆங்கில வகுப்பில்  நுழைந்தபோது சலசலவென ஒரே சத்தம். முகுந்தன் பக்கத்தில் இருக்கும் பையனிடம் ஏதோ பேசி அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறான். கொடிமுல்லை குழந்தைத்தனமாய் அங்குமிங்கும் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறாள். மீனாட்சியும் உஷாவும் மட்டும்தான் முதலில் பேராசிரியர் மூர்த்தி வகுப்பினுள் வருவதை உணர்ந்து அமைதியானார்கள்.

மேசையின் மேலிருந்த டஸ்டரை எடுத்து அதில் இரண்டு தட்டுதட்டி “எல்லோரும் அமைதியாக இருங்கள் சத்தம் போடாதீர்கள்” என்று கூறிய பிறகுதான் எல்லோரும் அமைதியானார்கள்.

சாக்பீசை எடுத்து கரும்பலகையில் சங்க இலக்கியம் என மூர்த்தி எழுதியபோது, கரும்பலகை கிரீச்சிடுகிறது. கரும்பலகையில் பெயின்ட் தேய்ந்து கிரானைட் தரைபோல வழுவழுப்பாக இருந்ததால் எழுதிய எழுத்தே தெரியாமல் இருந்தது.

எழுதிவிட்டு திரும்பி நின்று மாணவர்களைப் பார்த்த மூர்த்தி “போன வகுப்பில் சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையைப் பற்றி பார்த்தோமல்லவா? இன்றைக்குப் பத்துப்பாட்டைப்பற்றிப் பார்ப்போம்” என்று சொல்லிக்கொண்டே மணிக்கட்டைப் பார்க்கிறார். மணிக்கட்டில் வாட்சைக் காணோம்.

மூர்த்திக்கு மனம் பதைத்தது. அவசர அவசரமாக கிளம்பிவந்ததில் எங்கேயாவது கழன்று விழுந்துவிட்டதா? அல்லது வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டோமா? அது திரும்ப நம் கைக்குக் கிடைக்காதா?  அம்மாவுக்குப் போன் செய்து வழக்கமாக வைக்கும் டேபிள்மீது இருக்கிறதா என்று பார்க்கச்சொல்வோமா? என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தவர். திடீரென்று படுக்கையிலிருந்து  போர்வையை விலக்கி எழுந்து நின்று பார்க்கிறார், மேசைமேல் வாட்ச். அவரது மனம் அமைதிப் பெருமூச்சுவிட்டது.

வாட்சில் நேரம் அதிகாலை 4.00 மணி, அப்படியே நிமிர்ந்து பார்க்கிறார். ஆறு வருடத்திற்கு முன் இறந்துபோன அவர் அம்மாவின் புகைப்படம் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அதன் பக்கத்தில் எப்போதோ நின்றுபோய் ஓடாமல் கிடந்தது சுவர் கடிகாரம். அதிகாலைக் கனவு பலிக்குமா என்ன?

 

ச. நீலமேகன்

21-12-2016

1 கருத்து:

முனைவர் ச.இரமேஷ் சொன்னது…

எப்போதும் பாடத்திலும் வேலையிலும் மூழ்கிப்போய் தன் முன்னேற்றம் பற்றிச்சிறிதும் கவலை இன்றி தன் வேலையே பெரிது என நினைக்கும் மனிதனுக்கு இப்படித்தான் கனவு வரும்!