வியாழன், 17 ஏப்ரல், 2025

அந்த நாளில்…

அந்த நாளில்…

 

வியர்வை நனைக்க

பிளந்த விறகை

எங்களைத் தவிர

எல்லாம் நுழையும்

வாசல்வழி மறுக்கப்பட்டதால்

புழக்கடைப்பக்கமாய்க்

கொண்டுசேர்ப்பேன்

 

அங்கே

கொழுக்கட்டைகளும்

வடைகளும் மிதக்கும்

மாட்டுத்தொழுவத்துத்

தொட்டியில்

உழவுமாடுகளும் பசுவும்

நாவினால் துழவிப்பிடித்து

மானத்தோடு தின்றுகொண்டிருக்கும்

 

முகம் கழுவி

திண்ணை அருகே

பசியோடு

நான் நிற்க

 

சிலநேரம்

பேக்கடைச் சொம்பில்

குடிக்கத் தருவாள்

கூழ்

 

சிலநேரம்

பாத்திரத்தின் பவித்திரம்

காக்கும்

அந்தவீட்டுப் பாட்டி

ஏந்தி நிற்கும்

என் கையில்

பழைய சோற்றை

உருட்டிப்போடுவாள்

 

பசி ஈர்ப்பு விசையால்

ஈர்க்கப்பட்டு

விழும் சோற்றை

 

பிறப்பிலேயே

ஆத்திரம் மறுக்கப்பட்ட நான்

லாவகமாய்ப் பிடித்து

உண்பேன்…

 

குடிக்க நீர் என்றால்

சொம்பிலிருந்து

அருவி கொட்டும்…

 

வேலை முடிந்து

வேலை செய்ய

உழவு மாட்டோடு

வயலுக்குக் கிளம்புகையில்

 

கொத்துமல்லி வாசம்

ஊசலில் ஊசலாட

பிளந்தால்

சிலந்திநூல் பாலம் கட்டும்

சிவராத்திரி வடைகளையும்

பிசுபிசுத்த கொழுக்கட்டைகளையும்

 

அக்கறையோடு

என் குழந்தைகளுக்குக்

கொடுத்தனுப்புவாள்

விறகு பிளந்த

கூலியாய் ……..

 

-          நீலமேகன்.

 


சனி, 15 மார்ச், 2025

அன்புள்ள தம்பிக்கு ...


அன்புள்ள

தம்பிக்கு ...


இங்கு

இரவு வேளைகளில்

சமீப காலமாக

சமைப்பதை

விட்டுவிட்ட

காரணத்தால்

இப்போதெல்லாம்

அம்மா அடிக்கடி

வருவதில்லை


என்ன செய்வது?

வீதிக்கடையிலாவது

சாப்பிட்டு உறங்கு


அப்போதுதான்

அங்காவது

அம்மா வருவாள்

கனவில் ...


அவளுக்கும்

நம்மைவிட்டால் 

வேறு யார் இருக்கிறார்கள்.

- ச. நீலமேகன்.

15-03-2025




சனி, 15 பிப்ரவரி, 2025

ஏனிந்த யாசகம்

யாரென்றே தெரியாமல்
ஏனிந்த யாசகம்
கேட்டதெல்லாம்
கிடைத்துவிடப்போகிறா?
ஒரு வேளை
தருவதெல்லாம்
எண்ணப்படி
நேர்ந்திடுமா?..

ஒரு முறை 
காதலைச் சொல்லும்
தற்கொலைக்கு 
முயற்சி செய்வோம்
உயிர் பிழைத்தால்

உன்னை நானும்
என்னை நீயும்
தின்று பசியாறலாம்.

- ச. நீலமேகன்.

திங்கள், 10 பிப்ரவரி, 2025

?

என்
மனவெளியில்
வேர்விட்ட
கொடியொன்று
ஒரு ஆதிக்கக்காரனின்
சாட்டைக்கோலில்
படர்ந்து குழைகையில்
பூத்துச் சிரிக்கையில்
இதயம் வேகிறது

பூ வாடுவதையோ !
கொடி 
வேரற்றுப் போவதையோ !
சுயநலமென்றா
சொல்வீர்கள்?

- ச. நீலமேகன்
10-02-2025