செவ்வாய், 25 மே, 2010

இந்தி எதிர்ப்புப் போராட்டம்

ராஜாஜி 1938 ல் இந்தியை கட்டாயமாக்கியபோதே, (1965 அவரே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்தார் என்பது வரலாறு.) பெரியார், அண்ணா ஆகியோர் தலைமையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக பக்தவச்சலம் அவர்கள், பதவியில் இருந்தபோது ‘1965 ஜனவர் 26 ந்தேதி முதல் இந்தி ஆட்சிமொழியாகும்’ என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
1965 ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மாணவர்களே தலைமையேற்று நடத்தினர். போராட்டத்தை மாணவத் தலைவர்களான பெ. சீனிவாசன், ரவிச்சந்திரன், ராஜா முகமது, துரை முருகன்(தற்போது சட்டத்துறை அமைச்சராக இருப்பவர்), ம.நடராசன், துரைசாமி, எம். எம். ராமன், நாவளவன், எல். கணேசன், காளிமுத்து, நா. காமராசன், வை. கோபால்சாமி(ம.தி.மு.க., தலைவர்), ஆகியோர் போராட்டத்தை முன்னின்று நடத்தினர். அண்ணா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட போது போராட்டம் தீவிரமானது.
தீக்குளிப்புச் சம்பவங்கள்
இந்தியை எதிர்த்து தமிழகத்தில் முதன் முதலில் சின்னசாமி என்ற ஆசிரியர் 1964 ம் ஆண்டு ஜனவர் 25 ந்தேதி திருச்சி ரயில் நிலையம் அருகே ‘தமிழ் வாழ்க ! இந்தி ஒழிக !’ என்று முழக்கமிட்டபடி தீக்குளித்து உயிரிழந்தார். 1965, 26 ந்தேதி தே.மு. சிவலிங்கம் என்பவரும், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அரங்கநாதன் என்பவரும். தீங்குளித்து உயிரிழந்தனர்.
விஷம் குடித்து இறந்தவர்கள்.
இந்தித் திணிப்பை கண்டித்து திருச்சி மாவட்டம் கீரனூரைச் சார்ந்த முத்து என்பவரும், விராலிமலையைச் சார்ந்த சண்முகம் என்பவரும் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் மாணவர் பலி
சிதம்பரத்தில் மாணவர் ஊர்வலத்தில் போலீசார் மாணவர் மீது தடியடி நடத்தினர். அதனால் மாணவர்கள் போலீசாரைத் தாக்கினர். இதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராஜேந்திரன் என்ற மாணவர் பலியானர். தபால் நிலையங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.(அரசு பதிவின்படி 921 பேர்) பல ஊர்களில் நடந்த தூப்பாக்கிச் சூட்டில் 25 பேர் பலியானார்கள்.
உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட போலீசார்
இதன் எதிர் விளைவாக என்.கே. வெங்கடேசன்(திருப்பூர் உதவி ஆய்வாளர்), எம். ராமசாமி ஆகியோரின் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் அவர்களை உயிரோடு எரித்துக் கொள்ளப்பட்டனர்.
அமைச்சர்கள் ராஜினாமா
11-2-1965 ல் மத்திய அமைச்சர்கள் சி. சுப்பிரமணியம், ஓ.வி. அழகேசன் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு
திருச்சியில் வீரப்பன் என்ற ஆசிரியர் தீக்குளித்தார், ரயிலுக்குத் தீவைக்கப்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் மாண்டனர்.12 விமானங்களில் ராணுவம் குவிக்கப்பட்டு நடத்த துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் பலியாயினர். மதுரையிலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் பலியானர்கள். அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தை நிறுத்தக்கூறியும், மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.
ஆதரவளித்தவர்கள் கைது
மாணவர்களுக்கு ஆதரவளித்த குன்றக்குடி அடிகளார், கி.ஆ.பெ. விசுவநாதம், இலக்குவனார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அன்றைய காங்கிரஸ் எம்.பி., பொள்ளாச்சி மகாலிங்கம் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதமிருந்தார்.
எரிக்கப்பட்ட பிணங்கள்
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த தூப்பாக்கிச் சூட்டில் ஏராளமானவர்கள் பலியானார்கள். இறந்தவர் பிணங்களைக்கூட உறவினர்கள் பார்க்க ராணுவம் அனுமதி அளிக்காமல், லாரிகளில் ஏற்றிச் சென்று எரித்தனர்.
முடிவுக்கு வந்தது
போராட்டம் எல்லைமீறிப்போன நிலையில் மத்திய அரசு பணிந்து ‘இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் நீடிக்கும். இது குறித்து இந்தி பேசாத மக்களுக்கு நேரு அளித்த உறுதிமொழி சட்டமாக்கப்படும்’ என்று அறிவித்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.

கருத்துகள் இல்லை: