திங்கள், 19 ஜூலை, 2021

கூரை

கூரை

-          சிறுகதை

 

ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தவன் தன் முகத்தில் தண்ணீர் சொட்டு சொட்டாய்  விழுந்ததில்  திடுக்கிட்டு எழுந்தபோது மழை சோவென்று பெய்துகொண்டிருந்தது. மின்சாரம் நின்றுபோயிருந்ததால், மண்ணெண்ணெய் விளக்கையும் தீப்பெட்டியையும் தேடி இருட்டில் தடுமாறிக்கொண்டிருந்தார் நடேசன்.

ஒருவழியாகத் தட்டுத்தடுமாறி தீப்பெட்டியைக் கண்டுபிடித்து எடுத்தபோது தீப்பெட்டிக்குள் தீக்குச்சிகளே இல்லாமல் வெத்துப்பெட்டியாக காலியாக இருப்பதாகத்தான் தோன்றியது அவருக்கு. அந்த வட்டாரத்தில் தீப்பெட்டியை வெத்துப்பெட்டி என்றுதான் சொல்லுவார்கள். அந்த பெயருக்கு ஏற்றார்போலத்தான் வெத்துப்பெட்டி காலியாக இருந்தது. வெத்துப்பெட்டியை கிலுகிலுப்பை ஆட்டுவதைப்போல் ஆட்டிப்பார்த்தபோதுதான் உள்ளே ஒன்றிரண்டு குச்சிகள் இருப்பதை நடேசனால் உணரமுடிந்தது.

தீக்குச்சியை எடுக்க விரலால் அழுத்தியபோது வெத்துப்பெட்டியின் முனைப்பகுதி முறிந்துபோய்விட்டது. விரலில் தட்டுப்பட்ட ஒரு குச்சியை எடுத்து வெத்துப்பெட்டியின் பக்கவாட்டில் உரசியபோது மழையின் ஈரப்பதத்தில் பெட்டி நமுத்துப்போயிருந்ததால் எத்தனையோமுறை உரசியும் தீப்பொறி வந்ததே தவிர  குச்சி தீப்பற்றவில்லை. தீப்பெட்டியின் பக்கவாட்டை உள்ளங்கையில் தேய்த்து சூடேற்றி மீண்டும் நான்கைந்து முறை உரசியதில் குச்சி பற்றிக்கெண்டது. அந்த வெளிச்சத்தில் அடுப்படிக்கு அருகில் மாடத்திலிருந்த மண்ணெண்ணெய் விளக்கை எரிகின்ற குச்சி அணைவதற்குள் பற்றவைத்துவிட்டார்.

பாட்டில் விளக்கில் மண்ணெண்ணெய் கொஞ்சமாகத்தான் இருந்தது திரிக்கு எட்டவில்லை. ஏற்றிய விளக்கு அணைந்துவிடும்போல இருந்தது. வெளிச்சத்தில் கையிலிருந்த வெத்துப்பெட்டியைப் பார்த்தபோது அஸ்திரங்கள் தீர்ந்த அம்புத் தூணியைப்போல ஒரே ஒரு தீக்குச்சிமட்டுமே மீதமிருந்தது. விளக்கு நின்றுவிட்டால் தீக்குச்சிக்கு எங்கேபோவது என்று அவசரகால நடவடிக்கையில் இறங்கிய நடேசன் விளக்கை சாய்த்து திரியை எண்ணெயால் நனைக்க முயன்றபோது பக்கென்று பாட்டில் விளக்கின் முன்பகுதி நனைந்து,  அதன் தலைப்பகுதி பிரகாசமாக எரிய ஆரம்பித்தது.

அதற்குள் தன் பிள்ளைகளின் அருகில் உறங்கிக்கொண்டிருந்த நடேசனின் மனைவி விசாலமும் நடேசனின் விளக்கேற்றும் வேள்வியில் கலந்துகொண்டார். பிள்ளைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் தன் தந்தையின் இந்த வித்தைகளை எல்லாம் அவர்கள் பார்க்க கொடுத்துவைக்கவில்லை.

அந்த பாட்டில் விளக்கின் திரி கடையில் வாங்கிவந்த ஒன்றல்ல அது அவரே தயாரித்த உள்நாட்டுத் தயாரிப்பு. கடையில் விற்கும் விளக்குத் திரியை வாங்காததற்கு அது அந்நியப்பொருள் என்று அவர் விட்டுவிட்டதாக யாரும் நினைக்கவேண்டியதில்லை. அதை வாங்க அவர் கையில் போதிய வருவாய் இல்லை என்பதுதான் உண்மை. எனவேதான் சுதேசித் தயாரிப்பாக மனைவியின் கிழிந்த நூல்புடவையை ஓரத்தில் கொஞ்சமாகக் கிழித்து அதைத் திரியாகத் திரித்து விளக்குத்திரியாகப் பயன்படுத்துவார். இப்படிப்பயன்படுத்துவது நேற்றோ இன்றோ வந்த புதுப்பழக்கமல்ல அது ரொம்பகாலத்துக்கு முன்பிருந்தே  வந்த வழக்கம்.

விளக்குத்திரிமட்டுமல்ல அந்த மண்ணெண்ணெய் விளக்கும்கூட அவரது சொந்த தயாரிப்புதான். யாராவது குடித்துவிட்டு வீசிவிட்டுப்போன பிராந்திபாட்டிலைக் கொண்டுவந்து அதன் மூடியில் ஆணியால் துளையிட்டு அதில் புடவைத்துணியை திரியாக நுழைத்து அந்த விளக்கை அவர் தயாரித்து வைத்திருந்தார்.  ஒரு முறை தன் தந்தை பிராந்தி பாட்டிலில் விளக்கு தயாரிப்பதைப் பார்த்த அவரது மூத்தபையன் சுந்தரம் பழைய இங்க் பாட்டிலில் சைக்கிள் டியூப்பின் பித்தளை வாய்ப்பகுதியை பாட்டில் மூடியில் பொருத்தி சற்று நவீனப்படுத்தி தானும்கூட ஒரு விளக்கை தயாரித்திருந்தான். அதை அவனும் அவன் தம்பியும் இரவில் படிக்கின்ற நேரத்தில் மின்சாரம் நின்றுவிடுகிறபோது பயன்படுத்திக்கொள்வதுண்டு.

இப்படிப்பட்ட இக்கட்டான நேரங்களில் தீப்பெட்டிச் சண்டைகூட கணவன்மீதான விசாலத்தின் ஊடலுக்குக் காரணமாவதுண்டு. பல நேரங்களில் கணவனோடு சண்டைபோட வலுவற்று, அக்கம்பக்கத்தில் தீக்குச்சி கடன்வாங்கிய நிகழ்வுகளும் அவர்கள் இல்லற வரலாற்றில் எத்தனையோமுறை நடந்திருக்கிறது.

விளக்கிலும் மண்ணெண்ணெய் இல்லை, மண்ணெண்ணெய் ஊற்றிவைக்கும் சாராய சீசாவிலும் மண்ணெண்ணெய் தீர்ந்துபோயிருந்தது. விளக்கு அணைவதற்குள் விசாலம் மாடத்திலிருந்த அகல்விளக்கில் தாளிக்கும் எண்ணெயை ஊற்றி அதில் ஏற்கனவே இருந்த திரியை நனைத்து  விளக்கை ஏற்றிவிட்டாள். அந்த வெளிச்சத்தில் நடேசனின் துன்பம் நிறைந்த வாழ்க்கைக்குத் துணையாக நிற்கும் விசாலத்தின் முகம் அவனுக்கு விளக்கின் வெளிச்சத்தைவிட கூடுதலான வெளிச்சத்தைத் தருவதாகத் தோன்றியது.

அந்த நள்ளிரவில் இடிமின்னலோடு சேர்ந்து மழை விடாமல் பெய்துகொண்டிருந்தது. கூரையிலிருந்து ஒழுகும் மழைநீர் தரையில் விழுந்து நனையாமல் இருக்க ஒழுகும் இடத்திற்கு நேராகப் பாத்திரங்களை வைப்பது அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்றாக இருந்ததால் அதற்காக கழுவிக் கவிழ்த்துவைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை எடுத்துவந்து ஒழுகும் இடத்திற்கு நேராக வைத்தபோது அலுமினியப் பாத்திரத்தில் சொட்டும் மழை நீர் ‘டொக் டொக்’கென்று விழுந்து சோகராகத்தை வாசித்துக்கொண்டிருந்தது.

மழைக்காலமானால் இந்த போராட்டம் நடேசனின் வீட்டில் ஆரம்பமாகிவிடும். கூரை ஒழுகும்போதெல்லாம், குரங்குகளை நினைத்து ரொம்பவும் குறைபட்டுக்கொள்வான், அன்றாடம் சாரைசாரையாய் குரங்குகள் வீட்டுக் கூரைகளின்மீது அணிவகுப்பு நடத்தும் பெட்டைக் குரங்குகள் தங்கள் குட்டிகள் வயிற்றைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ள அங்குமிங்குமாக நடந்துபோய்க்கொண்டிருக்கும். அந்தக் குரங்குகளுள் சில திடீரென்று இராமாயணத்தில் வரும் வாலியும் சுக்கிரீவனையும் போல வீட்டுக்கூரைமேல் ஒன்றையொன்று தாக்கி சண்டைபோட்டுக்கொள்ளும்போது ஓடுகள் உடைந்து கலைத்துப் போட்டுவிடும்போது சூரிய ஒளி அம்புபாய்வதைப் போல் வீட்டிற்குள் நுழையும். உச்சி வெய்யில் நேரத்தில் சிறிதும்பெரிதுமாக வட்டவட்டமாக சூரிய ஒளி சுவற்றில் தெரியும். அதைப் பூகோளம் படித்தவர்கள் பார்த்தால்  அவர்களுக்கு வானத்தில் சுற்றித்திரியும் கோள்கள்தான் நினைவுக்குவரும்.

மேலும் வீட்டுக் கூரையின் ஓட்டைத் திருப்பி ரொம்ப வருஷங்களாகிவிட்டிருந்தபடியால் மூங்கில் கழிகளும் ஒடிந்து அவனுக்கு எதிராக மழைக்காலத்தில் ஒத்துழையாமை இயக்கம் நடத்த ஆராம்பித்துவிடும். பிறகு அதை சமாதானப்படுத்துவதுதான் நடேசனுக்கு ஒரே வழி. அந்த சமாதான முயற்சி கூரையில் ஒழுகும் இடம் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தால் அடிஓட்டை அசைத்து தண்ணீர் ஒழுகுவதை நிறுத்த முயல்வதாக இருக்கும். உடனே ஆறுதல் சொன்னால் அழுகையை நிறுத்திவிடுகிற குழந்தையைப் போல கூரை ஒழுகுவது நின்றுவிடும்.

 பல நேரங்களில் எவ்வளவு சொல்லியும் அடங்காமல் அழுதுகொண்டே இருக்கும் அடங்காத குழந்தையைப் போல அந்த முயற்சி பலிக்காமல் போய்விடுவதும் உண்டு. அப்படிப்பட்ட சூழலில் பாத்திரங்களைத் தான் கேடயமாக்கி  அந்த இக்கட்டான சூழலிலிருந்து தப்பிக்க வேண்டும்.

நனைந்துகிடக்கும் வீட்டுத் தரையின் ஈரத்திற்கு தேரைகள்வேறு வந்துவிடும் அது எங்காவது ஜன்னல் கதவின் மீதோ அல்லது பாத்திரங்களின்மீதோ உட்கார்ந்துகொள்ளும். அதைக் கவனிக்காமல் பாத்திரத்தை எடுக்கவோ, அல்லது ஜன்னலை சாத்தவோ போனால் திடீரென்று மேலே தாவிக் குதிக்கும். அப்படிக் குதிக்கும்போது அதன் குளிந்த தேகம் விசாலத்திற்கு ஒருவிதமான அருவருப்பை ஏற்படுத்தும்.  சில நேரங்களில் குடிப்பதற்காக தவலையில் பிடித்து வைத்திருக்கும் தண்ணீரில் கூட நீந்திக் கிடப்பதை விசாலம் பார்த்ததுண்டு.

மழையின் வேகம் குறைந்து பிசுபிசுவென்று தூறல் போட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த நடேசனும் விசாலமும் வெகு நேரத்திற்குப்பின் போர்வைக்குள் புகுந்து கண்ணயர்ந்து போனார்கள்.

பொழுது விடிந்து வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்த விசாலம் உறங்கிக்கொண்டிருந்த பிள்ளைகள் இருவரையும் எழுப்பிவிட்டு தேநீர் கொடுத்து படிக்கச் சொல்லிவிட்டு அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப அடுப்பில் உலைவைத்து சோறாக்கிக் கொண்டிருந்தாள்.

வெந்நீரை இறக்கிவைத்துவிட்டு குளிப்பதற்கு கூப்பிட வந்தபோது இளையவன் கையெழுத்துப் பயிற்சிக்கான இரட்டைவரி நோட்டில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தான்.  மூத்தவன் ஓவிய நோட்டில் தான் வரைந்த வீட்டின் கூரைக்கு வண்ணம் தீட்டிக்கொண்டிருந்தான். விசாலத்திற்கு எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வந்தது.

அந்த நம்பிக்கை பொய்த்துப்போய்விடவில்லை. இருபது ஆண்டுகள் கழித்து மூத்தவன் புதுவீடுகட்டி குடிபுகுந்த இரவன்று பலத்தமழை எல்லோரும் உறங்கிவிட்டார்கள் விசாலத்திற்கு அந்த மழைநாட்களின் நினைவு ஊசலாடிக்கொண்டிருந்ததால்  உறக்கம்வரவில்லை. மகன்கட்டிய ஒழுகாத காங்கிரீட் கூரையின்கீழ்  ஒருநாள்கூட வாழ்ந்துபார்க்க அவர் இல்லையே என நினைத்தபோது கண்களில் ஒழுகும் கூரையாய் கண்ணீர் சொட்டியது. பேரனை தன் மடியில் போட்டு தூங்கவைத்துக்கொண்டிருந்த பாட்டி விசாலம் அதை தன் புடவையின் முந்தானையால் துடைத்துக்கொண்டாள். மழை விடாமல் பெய்துகொண்டிருந்தது.

 -          ச. நீலமேகன்

                          17-07-2021

 

5 கருத்துகள்:

Shivani சொன்னது…

அருமையான சிறுகதை சார் ஓட்டுக்குப் பதில் கூரை வீடு படம் இருந்தால் மேலும் அற்புதமாக இருக்கும் சார்💐💐💐💐💐

அருண்குமார். சே சொன்னது…

கற்பனையாக பார்பதைவிட கண்டு வரும் பாதை.......மிகவும் சிறப்பாக உள்ளது. வட்டாரவழக்கும், வார்த்தை அழகும் சிறப்புற கூரையாக கதைக்கு அமைந்துள்ளது.

Arunkumar.A சொன்னது…

ஆழமான கதை கரு ஐயா

Unknown சொன்னது…

தெளிவுமிக்க கதைக்கரு நிறைந்துள்ளது தோழரே

Unknown சொன்னது…

அருமை சார்... மனதை தொட்டது... மகன் கட்டிய ஒருகாலப் கான்கிரீட் கூரையின் ஒருநாள் கூட வாழ்ந்து பார்க்க அவர் இல்லையே.... என்கிற துன்பம் விழிவழி வழிய... தன் பெயரனை இழுத்து மடியில் கிடத்தி ஆதரவாய் பற்றிக் கொள்கிறாள் அவனை👌🏼👌🏼👏👏👏👏