செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

பஞ்சம்




பஞ்சம்

தனிமனிதப் பிரச்சனையாக இருந்தால் ஒதுங்கிக்கொள்ள நினைக்கிற மனிதர்கள், அதுவே எல்லோருக்குமானதாக இருக்கிறபோது எல்லா வேறுபாடுகளையும் மறந்து ஒன்று கூடிவிடுவார்கள். பிரச்சனை தீர்ந்தபிறகு பெரும்பாலும் நாய்வாலை நிமிர்த்த முடியாது என்ற கதைதான். இதுதான் சமூகத்தின் இயல்பு. புரட்சிகளின் வரலாற்றையும் போராட்டங்களின் பின்னணியையும் புரட்டிப்பார்த்தால் இது புரியும்.

அந்த வருடம் வானத்திற்கு பூமிமீது என்ன கோபமோ தெரியவில்லை. ஒரு துளி மழை கூட பெய்யக்கூடாது எனக் கங்கணம் கட்டிக்கொண்டது.  சுயநலச் சாக்கடையின் நறுமணத்தில் மயங்கி உறங்கிக்கொண்டிருப்பவர்களை எழுப்ப வேண்டும் என்பதற்காகவும், இருக்கிற கிணறுகளை தூர்வார வேண்டும் என்பதற்காகவும் வானம் துணிந்து இந்த முடிவை எடுத்ததோ என்னமோ ஒன்றும் புரியவில்லை. ஏரி, குளம், குட்டை, கிணறு என அனைத்திலும் அந்த வருடம்  நீரின்றி வறண்டு கிடந்தது. ஆடு மாடுகளைப் போல மனிதர்களும் தண்ணீருக்காக அலைந்து திரிந்தார்கள்.

தெருக் குழாய்களில் ரொம்பநாளாகத் தண்ணீர் வரவில்லை. எங்கும் தண்ணீர்ப் பஞ்சம்.  ஊரில் இருக்கிற கிணறுகளில் எல்லாம் இருக்கிறவன் இல்லாதவன், ஆனவன் ஆகாதவன் என்று அத்தனை பேரும் ஒன்றுகூடி அந்தந்தப் பகுதிகளில் இருந்த கிணறுகளைத் தூர்வாரி சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள்.

பல ஆண்டுகளாக தூர்வாராமல்கிடந்த கிணற்றிலிருந்து தூர்வாரிக் கொட்டியபோது சேறும் சகதியும் மலையாய்க் குவிந்தது. கூடவே பல ஆண்டுகளுக்குமுன் பல்வேறு சமயங்களில் கிணற்றில் தவறி விழுந்து எடுக்கமுடியாமல்போன பித்தளைத்வலை, எவர்சில்வர் குடம், ராட்டினம், அலுமினியக் குண்டான், தாம்புக்கயிறு அறுந்து கிணற்றில் விழுந்துவிட்ட தோண்டிகள், இப்படி இவை மட்டுமில்லாமல் செருப்பு, கண்ணாடி பாட்டில்கள் எனப் பலவும் கிடைத்தன. பல ஆண்டுகள் அவை தண்ணீரிலும் மண்ணிலும் மூழ்கிக்கிடந்ததால் பலவும் அரித்துப்போய்க் கிடந்தன.

சமீபகாலத்தில் விழுந்து பழுதாகாமல் கிடைத்த தோண்டிகளும் தவலைகளும் கிடைத்தபோது அதன் அங்கஅடையாளங்களைச் சரியாகச்சொல்லி உரிமைகோரி வந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தோண்டியில் வேணுகவுண்டர்  என்ற தன் மாமனாரின் அப்பா பெயர் இருந்தும் பரிமளம் வீட்டுத்தோண்டியை செங்கத்தாள் தூக்கிக்கொண்டு போய்விட்டாள் அவள் வீட்டுக்கு எத்தனையோமுறை போய் கேட்டும் இல்லவே இல்லை என்று சாதித்து மழுப்பிவிட்டாள்.

நான்கு வருடத்திற்கு முன் பரிமளத்தின் மகள் தெருக்கிணற்றில் தண்ணீர் சேந்தும்போது தாம்புக்கயிற்றின் முடிச்சு அவிழ்ந்ததால் விழுந்த தோண்டி அது. மூன்றாவதாகப் பிறந்தவன் கைக்குழந்தையாக இருந்தபோது  பரிமளம் அவளைத் தண்ணீர் சேந்த அனுப்பியபோது தோண்டியைக் கிணற்றில் தவறவிட்டு அழுதுகொண்டேவந்து சொன்னதும், சின்னப்பிள்ளையை அடிக்க மனமில்லாமல் ஆசாரி வீட்டிலிருந்து பாதாளக்கொலுசுபோட்டு துழவிப் பார்த்தும் அகப்படாமல்போன தோண்டி அது அதற்கப்புறம் நான்கு வருடங்கள் கழித்து இந்த பஞ்சத்தில் தூர்வாரியபோது துருப்பிடிக்காமல் கிடைத்த அதைப் பார்த்துவிட்டு பரிமளத்தின் மூத்தமகன் சந்திரன்தான் ஓடிப்போய் அம்மாவை அழைத்துவந்தான். அதெல்லாம் முடிந்துபோன பழைய கதை.

இப்படி தூர்வாரி முடித்த கிணறுகளில் தவலைகள் வரிசையாகத் தண்ணீருக்காகத் தவம் கிடந்தன. கிணற்றில் நீர் ஊற ஊற அவரவர் முறை வரும்போது  பக்கவாட்டில் அறுத்து துளையிட்ட பிளாஸ்டிக்கேனைக் கட்டி கிணற்றில்விட்டு கொஞ்சகொஞ்சமாய் மொண்டுகொள்ள வேண்டும்.

அதற்காக பழங்காலத்தில் வீட்டுக்கு ஒரு ஆண்மகன் போருக்குப் போவதாய்ச் சொல்வார்களே அதைப்போல, தண்ணீர் சேந்தி எடுத்துவர தங்கள் முறை எப்போது வரும் என்பதை அறிய வீட்டுக்கு ஒருவர் கிணற்றடிக்குப் போகவேண்டும். இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால் போருக்கு ஆற்றல் வாய்ந்த வீரர்கள் செல்வார்கள். ஆனால், கிணற்றடிக்கு கருத்துதெரிந்த குழந்தையோ தலைநரைத்த கிழவியோகூட போதும், அவர்கள் தங்கள் முறை எப்போது வருகிறது என்பதைப் பார்த்து வீட்டில் வேறு வேலையாகக் கிடக்கும் அப்பாவையோ, அம்மாவையோ, அல்லது மகனையோ மருமகளையோ அழைத்துவர வேண்டும்.

கிணற்றிலிருந்து மட்டுமல்லாமல் நெடுந்தொலைவில் பக்கத்து ஊர்களில் இருந்த போர்களில் இருந்தும்கூட தண்ணீர் எடுத்துவர சைக்கிளில் பிளாஸ்டிக் குடத்தைக் கட்டிக்கொண்டு இளந்தாரி ஆண்கள் கிளம்பிவிடுவார்கள். தண்ணீர்ப் பிரச்சனையைப் போக்க நீர் வற்றிக் கிடக்கும் குத்துக்கு நடுவிலும்,  ஏரியின் நடுவிலும் புதிதாக போர்போட்டு கைப்பம்பை மாட்டிவிட்டிருந்தார்கள். அதில் தண்ணீர் பிடிப்பதற்காக அந்தக் கைப்பம்பிலுள்ள இரும்புத் தண்டை மேலும் கீழும் அசைத்து ஆட்டும்போது அது மேலும் கீழும் இடிக்கும் சத்தம் ‘டங்குடங்கென்று’  இரவும் பகலும் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தது.

ஆண்களில் பலர்  ராத்திரி வேளையில் திறந்தவெளியில்  குளத்துக்கு நடுவே இருக்கும் போரில் தண்ணீரை அடித்து தூரமாய்க் கொண்டுபோய் வியர்வை நாற்றம்போக குளித்துக்கொள்வார்கள். அப்படியே அழுக்குத் துணிகளையும் துவைத்துக்கொள்வார்கள். இதனால் அல்லும் பகலும் அந்த வறண்ட பெரிய குளத்தில் ஜன நடமாட்டம் இருந்துகொண்டே  இருக்கும்.

ஊரில் பஞ்சம் ஏற்பட்டு உயிர்வாழ தண்ணீர் அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டதும் இது மேல்சாதிக்காரன் கிணறு இது கீழ்ச்சாதிக்காரன் கிணறு என்று சாதி மயிரைப் பிடித்துக்கொண்டு தொங்கிக் கிடந்தவனெல்லாம்  அடையாளம் தெரியாமல் போனான். சேரிப் பகுதியிலிருந்து ஊர்ப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தண்ணீர் கொண்டு போனார்கள். சில நேரங்களில் சேரிமக்கள் ஊர்ப்புறத்திலிருந்து வந்தவர்களுக்கு தண்ணீர் சேந்திக்கொடுத்து உதவினார்கள்.

வானம் பொய்த்துப்போய்விட்டதால் பயிர்பச்சைகளைக் கண்ணால் பார்ப்பதே அரிதாகப் போய்விட்டது. எட்டும்தூரம்வரை எங்கும் வட்சியே கண்ணில்பட்டது. அதிலும் ஆடுமாடு வைத்திருப்பவர்கள் பாடுதான் பெரும்பாடாகப் போய்விட்டது. பசும்புல் ஒன்றும் தலைகாட்டாது போகவே மாடுகள் புற்களைத்தேடி அலைந்தன.  வசதியுள்ளவர்கள் வெளியூர்களிலிருந்து வைக்கோலை விலைகொடுத்து வாங்கி வண்டிகளில் ஏற்றிவந்து தங்கள் வீடுகளிலிருக்கும் மாடுகன்றுகளுக்குப் போட்டார்கள். மேய்ச்சல் நிலத்தையே நம்பிக்கிடந்தவர்களின் வீட்டு ஆடுமாடுகள் தீனி கிடைக்காமல் அலைந்தன.

அவர்கள் புற்களுக்குப் பதிலாய் மாடுகன்றுகளுக்கு மரத்திலிருந்து இலை தழைகளைக் கழித்துக் கொண்டுவந்துபோட்டார்கள்.  வேப்பந்தழை, ஆலயிலை, அரச இலை, புங்கந்தழை, மாங்கொத்து, தென்னங்கீற்று இப்படி வாய்ப்புள்ள அனைத்தும் கால்நடைகளுக்கு உணவானது.

இந்த பஞ்சகாலத்திற்குச் சமீபத்தில்தான் ஒரு பசுமாட்டை வாங்கிவிட்டால் குடும்பச் செலவுகளை எப்படியாவது சமாளித்துக்கொள்ளலாம் என்ற நப்பாசையில் கூட்டுறவு வங்கியில் விவசாயக் கடன் வாங்கி ரொக்கமாகக் கிடைத்த நாலாயிரத்தையும் உரத்தை விற்றுக் கிடைத்த மூவாயிரத்தையும் கொண்டு ஏழாயிரம் ரூபாயில் தனக்குத் தெரிந்த மாட்டுத்தரகு பார்க்கும் உறவினர் மூலமாக ஒரு பசுமாட்டை வாங்கினாள்  அந்தத் தோண்டிகேட்டுத் தோற்றுப்போன குபேரகவுண்டரின் மனைவி பரிமளம்.

வாங்கிவந்த பசு பார்க்க உருவத்தில் பெரிதாக இருந்தது. ஆனால் அதன் மடி  அந்த பெரிய உருவத்துக்கு பொருத்தமானதாக இல்லை. கலப்பினப் பசுவைப்போலவும் இல்லை பார்க்க நாட்டுப் பசுமாடாகவும் தோன்றவில்லை. எது எப்படியோ கன்று கிடாரிக்கன்றாக இருந்தில் பரிமளத்துக்கு மன நிறைவாகத்தான் இருந்தது. வாங்கிவந்த புதிதில் காலையில் 5 லிட்டரும் மாலையில் நான்கு லிட்டரும் பால் கறந்தது.

 பசுமாடு வந்ததிலிருந்து குபேரன் வழக்கமாகப் போகும்  கூலி வேலைக்கு ஒழுங்காகப் போவதில்லை. பரிமளம்தான் மாட்டை ஓட்டிக்கொண்டுபோய் காடு கரம்புகளில் மேய்ப்பாள். மாலையில் வரும்போது வயல் வரப்புகளிலிருந்து அன்றாடம் புல் அறுத்து பழைய கித்தானில் கட்டி தலையில் தூக்கிவருவாள். பள்ளி விடுமுறை நாட்களில் பசுவை மேய்ப்பது சந்திரன் பொறுப்பு. அந்தப் பசுவிற்கு மட்டுமா அல்லது எல்லா மடுகளுக்கும் அப்படித்தானா என்று தெரியவில்லை. வருஷமெல்லாம் விட்டுவிட்டு முழு ஆண்டுப் பரிட்சைக்கு கடைசி நேரத்தில் விழுந்துவிழுந்து படிக்கிற பிள்ளைகளைப்போல பொழுதுபோன நேரத்தில்தான் மாய்ந்துமாய்ந்து மேயும். ஆனாலும் அதன் வயிறு வீங்க மேய்ப்பதில் சந்திரனுக்கு ஒரு மனநிறைவு கறவல் நின்றுபோன அந்த நாட்களில் நன்றாக இருட்டிய பிறகுதான் பசுவை வீட்டுக்கு ஓட்டிச்செல்வான்.

பசுவிற்குத் தினந்தோறும்  நான்கு வீடுகளிலிருந்து கொண்டுவந்த கழுநீர்த்தண்ணீரில் கடலைப்புண்ணாக்கை ஊறவைத்து ஊற்றி தண்ணீர் காட்டவேண்டும். இல்லாவிட்டால் சரியாகப் பால் கறக்காது. கடையிலிருந்து வாங்கிவரும் கடலைப் புண்ணாக்கை சட்டியில்  ஊறவைத்து களைந்து மாட்டுக்கு ஊற்றும்போது மண்ணும் கல்லும் அடியில் தேங்கி நிற்கும் லாபம் சம்பாதிக்க விற்பவன் செய்கின்ற கலப்படக் கலை அது.

பால் வியாபாரி எட்டு ரூபாய் லிட்டருக்கு வீட்டுக்கே வந்து பாலை வாங்கி தெருவில் பத்துரூபாய்க்குச் சில்லரையாகப் பால் வாங்குபவர்களுக்கு விற்பார்.

பால் கறக்கும் கறவைக்காரனுக்கு கறவைக்கூலி மாட்டுக்காரர்தான் கொடுக்கவேண்டும். அதை வாராவாரம் பால்பட்டுவாடா செய்யும்போது பால்வியாபாரி பிடித்தம் செய்துகொண்டு கொடுப்பார். அப்படி வாராவாரம் கொடுக்கும் கறவல் பணத்தை ஒரு முறைகூட  பரிமளத்தை வாங்கவிட்டதில்லை குபேரன். தான் ஆண் என்பதிலுள்ள ஆணவம் அது. “பொம்பளகிட்ட என்ன துட்டு வேண்டிக்கிடக்கு” என்பது குபேரனின் எண்ணம்.

இரண்டு மாதம் கழிந்த பிறகு பசு காலையில் மூன்று லிட்டரும் மாலையில் இரண்டுலிட்டரும்தான் கறந்தது. பால் கறப்பது குறைந்துபோகவே குபேரன் புண்ணாக்கு போட்டு கட்டுப்படியாகாது என்று  குருட்டுக்கணக்குப்போட்டு மாட்டுக்குப் புண்ணாக்குப் போடுவதை விட்டுவிட்டான்.  புண்ணாக்கு போடாததால் சுரந்து கட்டுப்படியாகாது என்று பசு விட்டுவிட்டதோ என்னமோ? தெரியவில்லை. காலையில் இரண்டு லிட்டர் மாலையில் ஒன்று  அல்லது ஒன்றரை லிட்டர் எனப் பால் கறப்பது முற்றிலும் குறைந்து விட்டது.

தரகுக்காரன் உன்நல்லா ஏமாத்திட்டான் மாடு வேணாவேணான்னு சொன்னேன் கேட்டியா?” என்று  குபேரன் பரிமளத்திடம் அன்றாடம் சண்டை போடுவதும், “சொல்லச் சொல்ல மதிக்காம பேங்கில் லோன் வாங்கி என்னைக் கடனாளி ஆக்கிட்டயேடி”  எனப் புலம்புவதும் அவனுக்கு வாடிக்கையாகிவிட்டது.

காட்டுக்குப் புல் அறுக்கப் போகும்போதெல்லாம் தன் எண்ணம் ஈடேறாமல் போய் விட்டதை எண்ணி வருந்திக் கொண்டே புல்லுக்கட்டை கொண்டுவந்து சேர்ப்பாள்.  மாடு சினைப் பருவத்துக்கு வந்ததும் பால் கறப்பது அறவே நின்றுவிட்டது.

மழை பெய்யாமல் வானம் பொய்த்துப்போகவே அன்றாடம் ஓட்டிக்கொண்டுபோய் கம்பில் கட்டிவிட்டு வருவதும்  தொடர்ந்து பயனற்றதாகப் போய்விட்டது. தொடர்ந்து கரம்புகளில் தரையோடு தரையாகக் கிடக்கும் காய்ந்த புற்களைப் பசு நுனிப்பல்லால் தடவிக்கொண்டிருந்தது. தண்ணீர் இல்லாமல் விவசாயம் நின்றுபோனதால் வைக்கோலும் கடலைக்கொடியும் மாடுகளுக்குக் கிடைக்காமல் போய்விட்டது.

ஊரிலுள்ளவர்கள் எல்லோரும் செய்வதைப் போல  பரிமளத்தின் மூத்த மகன் சந்திரனும் தன் தாய் படும் கஷ்டத்தை தாங்காது ஆலமரத்தில் ஏறி ஆலம் இலைகளைக் கொத்துகொத்தாக வெட்டிக் கொண்டுவந்து பசுவுக்கும் கன்றுக்கும் போட்டான். சில நேரங்களில் வேப்பந் தழைகளையும் மாங்கொத்துக்களையும் ஒடித்துக்கொண்டுவந்து போடுவதும் உண்டு. பரிமளம் மாலை நேரத்தில் ரேஷன் அரிசியில் கஞ்சி காய்ச்சி மாட்டுக்கு ஊற்றுவாள். அன்னக்கூடையில் ஊற்றிய கஞ்சை பசு குடிக்கும்போது கன்றும் வாய்வைக்கும் ஆனால் பசுவோடு போட்டிபோட முடியாது அதனால்  கன்றுக்கு தனியே கஞ்சியை வைப்பாள்.

உச்சி வெயில் காயும் மத்தியான நேரத்தில்  மாட்டை  அவிழ்த்து தண்ணீர் காட்ட போகும்போது எதிரே வரும் பரிமளத்தையோ சந்திரனையோ ஆவலோடு தலையைத் தூக்கிப் பார்க்கும் அந்த காட்சி பார்ப்பதற்கு ஊரிலிருந்து வரும் தாயை ஆசையோடு எதிர்நோக்கும் குழந்தையின் எதிர்பார்ப்பைப்போன்று சந்திரனுக்குத் தோன்றும்.

அப்படி கரம்பில் கட்டியிருந்த பசுவை அன்றைக்கு மாலை அவிழ்க்கப் போனபோது அந்தச் சினைப்பசு கன்று ஈனப் பார்த்துக்கொண்டிருந்தது. அதை சந்திரன் அருகே போனபோதுதான் கவனித்தான். சூதகத்திலிருந்து கன்றின் இரண்டு கால்கள் வெளியில் தெரிந்தது. என்னசெய்வதென்று தெரியாமல் அதை மெதுவாக அப்படியே வீடுவரை ஓட்டிக் கொண்டு வந்துவிட்டான். பசு நடந்துவரும்போது கன்றின் கால்கள் உள்ளே போயிருந்தது.

கொட்டகையில் கொண்டுவந்து கட்டியதும் பசு மீண்டும் கன்றை ஈன முயன்றது. வயிற்றில் ஒன்றும் இல்லாததால் பசுவால் கன்றை ஈனமுடியவில்லை. பரிமளம் அதைப்பார்த்து அழுதே போய்விட்டாள். மூன்று பிள்ளைகளைப் பெற்ற பெண்ணல்லவா பிரசவத்தின் வலி தெரியாதா என்ன? வாயில்லா ஜீவனாச்சே இந்த வறுமைப்பட்ட வீட்டில் வந்து இப்படி துன்பப்படுகிறதே என்று பதைத்தாள். குபேரன் எதற்கும் அசைவதாய் இல்லை. குபேரன் என்று பெயர் வைத்துக்கொண்டு வைக்கோல் கடன் கேட்டால் பொருத்தமாக இருக்காது என்று நினைத்தாரோ என்னவோ!. பிடித்துவைத்த பிள்ளையாரைப்போல இருந்த இடத்தைவிட்டு அசையாமல் கிடந்தார்.

கொஞ்சம் வயிற்றுக்கு ஏதாவது ஊற்றினால் பசு கன்றை ஈன்றுவிடும். உடனே பழங்கலத்திலிருந்த ரேஷன் அரிசியை எடுத்து அலுமினியக் குண்டானில் ஊற வைத்துவிட்டு, கண்ணாயிரம் அண்ணன் வீட்டுக்கு ஓடிப்போய் “அண்ணா பசு தீனி இல்லாம ஈன முடியாமத் தவிக்குது ஒரு பிணை வெக்கில் குடுண்ணா” என கெஞ்சினாள். பரிமளத்தின் தவிப்பைப்பார்த்து கண்ணாயிரத்தின் மனைவி போரிலிருந்து கொஞ்சம் வைக்கோலை பிடிங்கிக் கட்டிக்கொடுத்தாள். கொண்டுவந்த வைக்கோலை மாட்டுக்குப் போட்டுவிட்டு ஊற வைத்துவிட்டுப்போன ரேஷன் அரிசிக்கு உலை வைத்து கஞ்சிகாய்ச்சி ஊற்றினாள்.

குடித்து முடித்த அரைமணி நேரத்தில் பசு பின்னங்காலை நன்கு ஊன்றி முதுகை வளைத்துக்கொண்டு கன்றை மெதுவாக வெளித்தள்ளியது. முன்னங்காலும் தலையும் வெளியேவந்து தொங்கிய சில நொடிக்குள் கன்று முழுதாய் தொப்பென்று மண்ணில் வழுக்கிக்கொண்டு விழுந்தது.

பனிக்குடத்திலிருந்து வெளிவந்த நீர் கன்றுபோட்ட இடத்தில் தரையில் தேங்கிக்கிடத்தது. தொப்புள்கொடி இன்னும் அறுபடவில்லை. கன்றின் அருகே போனால் பசு முட்ட வந்தது. அது தன் நாவினால் நக்கி கன்றின்மேல் இருந்த வழுவழுப்பை சுத்தம் செய்தது. கொஞ்ச நேரத்தில் குழந்தையைத் தாய் குளிப்பாட்டி தலைதுவட்டி விடுவாளே அதுபோல தன் கன்றைப் பசு நாவினாலேயே நக்கி குளிப்பாட்டிவிட்டது. கிடாரிக்கன்று பசுவைப்போலவே செவலை நிறம் கன்றின் நெற்றியில் வெள்ளைமுடி  பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.

பசுவின் சூதகத்திலிருந்து உடுப்பு முழுதாக விழாமல் தொங்கிக்கொண்டிருந்தது. பசு அதைத் தின்றுவிடாமல் பார்த்துக்கொள்ள சந்திரன் காவல் இருந்தான். அந்த உடுப்பை பழைய கிழிந்த கோணியில் வைத்து சுற்றிக்கட்டி  அதை எடுத்துப்போய் பால்மரத்தில் கட்டினால் நன்றாகப் பால் கறக்கும் என்பது நம்பிக்கை. ஒரு மணி நேரத்துக்குப்பிறகு உடுப்பு விழுந்துவிட்டது. அதை மாடு தின்னாமல் கோலினால் தள்ளி கோணிக்கித்தானில் சுருட்டி கயிற்றினால் கட்டி காக்கைகள் கொத்தாமல் பத்திரப்படுத்தி வைத்துவிட்டான்.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் தன் இளம் கால்களை ஊன்றி எழுந்து நின்ற கன்று பால் குடிக்க பசுவின் மடிதேடியது.  நாவினால் நக்கி பசு தன் கன்றுக்குப் பால்கொடுத்தது. மடி தேடி பால் குடிக்கும் அறிவை இயற்கை உயிர்களிடத்தில் எப்படித்தான் படைத்ததோ என்று சந்திரன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

மூன்று பிள்ளைகளைப் பெற்ற பரிமளத்துக்கு தன் வாழ்நாளெல்லாம் கன்று ஈனுவதையும் பால் தருவதையுமே பிறவிக் கடனாகக் கொண்டுவிட்ட  பசுவின் வலி தெரியாமலா இருக்கும். தீனி இல்லாமல் பசு துன்பப்படுவதை பரிமளத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வறட்சி காலத்தின் கோலமாக இருந்தாலும், தான் ஏதோ செய்யக்கூடாத பாவத்தைச் செய்துவிட்டதாக மனம் துடித்தாள்.

இந்த வறட்சி காலத்தில் உள்ளூரில் மாட்டை விற்க முடியாது. அப்படியே யாராவது வாங்க வருவதாக இருந்தாலும் வலிந்து வாங்கிக்கொள்ளும்படிச் சொன்னால் அடிமாட்டு விலைக்குத்தான் கேட்பார்கள் என்ன செய்வதென்று யோசித்த பரிமளம். பழங்கலத்தில் மீதமிருந்த நொய்யரிசியில் பசுவுக்கு கஞ்சி காய்ச்சி வைத்துவிட்டு, தன் தாய்வீட்டுக்குக் காலை 5 மணி வண்டிக்கே புறப்பட்டுப்போய்விட்டாள். அது ஆற்றங்கரையோரம் உள்ள ஊர். அங்கு தண்ணீருக்குப் பஞ்சமில்லை நெல்லும் கரும்பும் விளைகின்ற பூமி. யார் யாரிடமோ பேசி பக்கத்து ஊரான பாலூரில் இருக்கும் வெல்லவியாபாரி கிருஷ்ணமூர்த்திக்கு றாயிரம் ரூபாய்க்கு விற்றுவிட முடிவு செய்தாகிவிட்டது.

மத்தியானம் ஊரிலிருந்து திரும்பி வந்த பரிமளம் தகவலைச் சொன்னாள். உடுப்பைக் கொண்டுபோய் சுடுகாட்டில் உள்ள ஆலமரத்தில் கட்டிவிட்டுவந்திருந்த சந்திரனுக்கு அவன் அம்மா சொன்ன செய்தி வருத்தத்தைத் தந்தது. ஆனால் குபேரனுக்கோ  பசுவை வாங்கிய விலைக்கும் குறைவாய் நஷ்டத்திற்கு விற்கிறோமே என்பதை நினைத்துப் பரிமளத்தின்மீது வெறுப்பை உமிழ்ந்தான். மேலும்மேலும் திட்டித்தீர்க்க வார்த்தைகள் கிடைக்காமல் அமைதியானான்.

ஆனால் பரிமளத்தைப் பொறுத்தவரை அவள் கண்முன் நின்றது பசுவின் பசி. மாட்டுக்கு நான்கு வயிறு இருப்பதாக அவள் பாட்டி சொன்னது அவளுக்கு அடிக்கடி நினைவுக்கு வந்தது. ஒரு வயிறு இருக்கிற நமக்கே இத்தனை பசி என்றால் நான்கு வயிறு இருக்கும் மாட்டுக்கு எந்த அளவுக்கு பசி இருக்கும் என்பதை நினைத்துப்பார்த்தே  அதன் பசியை எப்படியாவது போக்கிவிடவேண்டும் என்பதில் ஒரே குறியாக இருந்தாள். அது தீனி இல்லாமல் பசியோடு இருக்கும் ஒவ்வொரு கணமும் அவளுக்கு நெருப்பில் நிற்பதைப் போல இருந்தது. அதனால்தான் அவள் இந்த அவசர முடிவுக்கு வந்தாள். எப்படியாவது உழைத்துப் பிழைக்கவேண்டும் என ஆசைப்பட்ட அவளைக் காலம் ஏமாற்றிவிட்டது.

 மாலை ஆறு மணிக்கெல்லாம் பசுவை ஏற்றிச் செல்ல வேன் வந்துவிட்டது. அப்போதான் அரிசிக் கஞ்சியை குடித்துமுடித்து தன் கன்றுக்கு மடியில் சுரந்த பாலை ஊட்டக் கொடுத்தது பசு.

கன்று குடித்துமுடித்து மடியில் சுரந்த சீம்பாலை சந்திரன் கறந்துகொண்டிருந்தான் ஒரு சொம்பு பால் இருக்கும் கறந்து முடிக்கும்போது குபேரன் குறுக்கே வரவே மிரண்டு போன மாடு எட்டி உதைத்தது. மாட்டின் கால் பட்டு குண்டுசெம்பில் இருந்த சீம்பால் மண்ணில் ஊற்றிக் கொண்டது. குபேரன் சந்திரனைப் பார்த்து “துப்புகெட்ட பயலே ஒரு சொம்பு பால  புடிக்க துப்பில்லையா” என்று திட்டிக்கொண்டே வெறுப்பில் வெளியே போய்விட்டார்.

பசுவையும் கன்றையும் வேனில் ஏற்றும்போது மணமாகி புகுந்தவீட்டுக்குப் போகும் பெண்ணைப் பார்த்துத் தாய் அழுவாளே  அந்த மனநிலையில் இருந்தாள் பரிமளம்.

போகும்போது தீனிக்கு அலைந்த பசுவுக்கு வேனை நிறுத்தி சாலையோரம் கிடந்த வைக்கோல் போரிலிருந்து கொஞ்சம் வைக்கோலைப் பிடுங்கிவந்து  போட்டுவிட்டு  வேனைக் கிளப்பி பாலூர் போய் சேரும் போது இரவு எட்டு மணியாகிவிட்டிருந்தது. மாட்டையும் கன்றையும் வேனிலிருந்து இறக்கிய பிறகு கிருஷ்ணமூர்த்தி கன்றைத் தூக்கிக்கொண்டு முன்னே போக பசு பின்னால்  கன்றைத் தொடர்ந்து இருட்டில் மிரண்டு ஓடியது.

 மாடு இழுத்துக்கொண்டு இருட்டில் ஓடிய ஓட்டத்தில் சந்திரன் வரப்பில் தடுக்கி விழுந்துவிட்டான். பசு கயிற்றை உருவிக்கொண்டு கன்றின் பின்னால் பெருமூச்சுவிட்டுக்கொண்டே ஓடியது.  

கரும்புத் தோட்டம் நடுவே உள்ள ஒரு மாட்டுக்கொட்டகையில் போய் கன்றை இறக்கிவிட்டு பசுவை முளைக்குச்சியில் கட்டியபோது  இரவு பத்து மணி இருக்கும். கிருஷ்ணமூர்த்தி பசுவுக்கு கரும்பு சோகையும், வைக்கோலும் கொண்டுவந்து போட்டார். “கன்றின் புனிற்று வாடைக்கு குள்ளநரி வந்தாலும் வரும் வீட்டுக்கு இன்றைக்கு ஓட்டிச் செல்ல முடியாது நாள் சரியில்லை நாளைக்கு தான் வீட்டுக்கு ஓட்டிக் கொண்டு செல்ல முடியும்” என்று சொல்லிவிட்டு “இங்கேயே கிடக்கட்டும் வா போகலாம்” என்று சொன்னபோது. சந்திரனுக்கு மனம் வரவில்லை. சொன்னதைப்போல் புனிற்று வாடைக்கு குள்ளநரி வந்து கன்றைக் கடித்துவிட்டால் என்ன செய்வது என்று மனம் பதைத்தது.

இந்த இரவுப் பொழுது கன்றுக்குக் காவலாய்ச் சந்திரன், தான் இந்த மாட்டுக்கொட்டகையிலேயே இருப்பதாகச் சொல்லிவிட்டு இருட்டில் தனியே கன்றுக்கும் பசுவுக்கும் காவலாய் எப்போது விடியும் எனக் காத்திருந்தான்.  இரவில் நரி ஊலையிடும் ஓசை தூரத்திலிருந்து காதில் விழுந்தது.

பழக்கமில்லாத புது இடத்தில் போர்வை கூட இல்லாமல் இரவின் வாடையில் கிடந்தான். பொழுது புலர்ந்தது ஆசைஆசையாய் குடும்பத்தில் ஒன்றாய் இருந்துவந்த பசுவைப் பிரியப்போவதை நினைத்தபோது மனசு கனத்தது. காலை 8 மணி டவுன் பஸ்சுக்கு வண்டியேற்ற கிருஷ்ணமூர்த்தியும் வந்துவிட்டார். புறப்படும் முன் கடைசியாய் கன்றையும் பசுவையும் கைகளால் தடவிவிட்டு கண்களால் படமெடுத்து உருவத்தை மனதிற்குள் நிரப்பிக்கொண்டு வரப்பில் நடந்து போய்க்கொண்டிருந்தான். ம்மா…. என்ற அழைப்பொலி கேட்டுத் திரும்பினான் பசு ஏக்கத்தோடு சந்திரன் போவதைப் பார்த்துக்கொண்டு நின்றது.


- ச. நீலமேகன்

03-08-2021

5 கருத்துகள்:

அருண்குமார். சே சொன்னது…

மனிதனை விட சிறந்த அன்புடையவை விலங்குகள்.......வாழ்த்துக்கள் ஐயா💐

Unknown சொன்னது…

அருமையான பதிவு ஐயா, பசுவின் அறிவியலும் மனிதனின் அறிவியலும் கூறியது சிறப்பு ஐயா, மேலும் இந்த கதை எதார்த்த வாழ்க்கையை படம் பிடித்து காட்டியது நான் இதில் பயணப்படும் படி அமைந்து, நன்றி ஐயா.

ச. நீலமேகன் சொன்னது…

நன்றி

Rajagopal சொன்னது…

மகிழ்ச்சி! இயல்பான கிராமத்துச் சமூக வலியும் கிராமத்துச் சொற்களால் வெளிப்பட்டுள்ளது.கிராமத்தில் மகிழ்வான நிகழ்வுகளையும் படம் பிடித்து எழுதுங்கள்.

முனைவர் ச.இரமேஷ் சொன்னது…

பசியில் தவிக்கும் பிள்ளைகளைத் தத்துக் கொடுக்கும் தாய்போல இருக்கிறாள் அந்த தாய் பசு மட்டுமா ? அவளும் ஒரு தாயல்லவா?உயிர் இரக்கம்!அன்பின் வழியது உயிர்நிலை-திருக்குறள்!