சனி, 15 பிப்ரவரி, 2025
ஏனிந்த யாசகம்
திங்கள், 10 பிப்ரவரி, 2025
?
வியாழன், 7 டிசம்பர், 2023
அன்பு என்றுதான் பெயர்...
நீ
பணிமுடிந்து
உறங்கும் வேளையில்
வீரியமற்ற விஷயத்துக்காக
உரக்கப் பேசும்
அப்பா...
காதருகே
காரோட்டி
விளையாடும்
உன் பிள்ளை...
பக்கத்துக் குடியிருப்பில்
தொலைக்காட்சிப்
பெட்டியிலிருந்து
கசியும்
அரசியல் விவாத
அநாகரிகம்...
வேளையற்ற வேளையில்
இங்கிதமில்லாதவர்களின்
அழைப்புக்குச்
சத்தமிடும்
உன் செல்போன்...
நான்
தண்ணீர் குடிக்க
குவளை எடுக்கையில்
தவறிவிழுந்து
தாளம்போடும்
தட்டு...
இதில் எதையுமே
தடுக்க முடியாமல் தவித்து
அசதியில் உறங்கும்
உனக்குப் போர்வை
போர்த்திவிட்டுப் போகிறேன்...
நீ எழுந்தவுடன்
என்னை...
"எருமைமாடு எப்படி
தூங்குதுபார்" என்னும்
அதட்டலுக்கும்
அன்பு என்றுதான் பெயர்.
_ ச. நீலமேகன்.
புதன், 6 டிசம்பர், 2023
சாமியாடி
வெள்ளி, 10 நவம்பர், 2023
அகழ்வைப்பகங்கள்
அகழ்வைப்பகங்கள்
தமிழ்நாடு அரசால் 1961-ஆம் ஆண்டு பழங்கால நினைவுச்
சின்னங்களைப் பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் என்பதையும், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களில் அகழாய்வு
மேற்கொள்வதையும் முதன்மையான நோக்கமாகக் கொண்டு தொல்லியல்துறை தொடங்கப்பட்டது. அதன்
பின்னர் கல்வெட்டெழுத்துக்களைப் படியெடுத்து,
படித்து, பதிப்பித்து அதனை ஆவணங்களாக்கி வெளியிடுதல் மற்றும்
கலைப்பொருட்களை வேதியியல் முறையில் பராமரிப்பு செய்தல்,
பழங்காலக் கலைப்
பொருட்களைப் பதிவு செய்தல் போன்ற பணிகளையும் தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டுவருகிறது.
அகழாய்வு
அகழாய்வு என்பது தொல்லியல் துறையால்
மேற்கொள்ளப்படும் பணிகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதாவது மாநிலத்தில் உள்ள
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு மேற்கொள்வது தொல்லியல் துறையின் பெரும் பணிகளில் ஒன்றாகும். இதன் மூலம்
பண்டைய எச்சங்களை மேற்பரப்பாய்வு மற்றும் அகழாய்வு மூலம் அறியலாம். இது வரலாறு, பண்பாடு மற்றும் அப்பகுதிகளின் தொன்மையினை நம்பத்தகுந்த
தொல்லியல் சான்றுகளுடன் மறுகட்டமைப்பு செய்வதற்கு நமக்கு உதவுகிறது.
அகழ்வைப்பகம்
இதுவரை தொல்லியல் துறையால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட 34 இடங்களில் 33
இடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளின்
அறிக்கைகள் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. இவ்வகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற கலைப்பொருட்கள் இத்துறையின் கீழ் மாநிலத்தின் பல
மாவட்டங்களில் செயல்படும் 14 அகழ்வைப்பகங்களில் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்காக
பாதுகாக்கப்பட்டு, காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
தமிழக அரசு இதுவரை சமயம் சார்ந்த மற்றும் சமயம்சாரா
85 புராதன மற்றும் வரலாற்றுச் சின்னங்களை ‘பாதுகாக்கப்பட்ட
சின்னங்களாக’ அறிவித்துள்ளது. தேசிய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல்
பழம்பொருட்களைப் பாதுகாத்து பராமரிக்கும்
பொருட்டு, தேசிய நினைவுச் சின்னங்கள்
மற்றும் தொல் பொருட்கள் ஆவணப்படுத்தும்
குழு ஒன்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாநில தொல்லியல், அருங்காட்சியகங்கள் மற்றும் இந்து சமய அறநிலையம் ஆகிய
துறைகளால் தமிழகத்திலுள்ள புராதன கட்டடங்கள்
மற்றும் தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ü அழ்கடலாய்வு அகழ்வைப்பகம் – பூம்புகார்
ü ஆர்க்காடு இஸ்லாமிய அகழ்வைப்பகம் - வேலூர்
ü மராட்டியர் அரண்மனை அகழ்வைப்பகம் – தஞ்சாவூர்
ü சேர அகழ்வைப்பகம் – கரூர்
ü டேனிஷ் கோட்டை தள அருங்காட்சியகம் – தரங்கம்பாடி
ü தர்மபுரி அகழ்வைப்பகம் - தர்மபுரி
ü தொல்மந்தர் அகழ்வைப்பகம் – பூண்டி
ü இராஜராஜன் அகழ்வைப்பகம் - தஞ்சாவூர்
ü இராமலிங்க விலாசம் அரண்மனை - இராமநாதபுரம்
ü திருமலை நாயக்கர் அரண்மனை – மதுரை
ü குற்றால அகழ்வைப்பகம் - திருநெல்வேலி
ü கோவை அகழ்வைப்பகம் – கோயம்புத்தூர்
அழ்கடலாய்வு
அகழ்வைப்பகம் – பூம்புகார்
தமிழகத்தில் கிழக்குக் கடற்கரையை
ஒட்டிய துறைமுகங்களில் ஒன்று பூம்புகார். பழங்காலத்தில் இத்துறைமுக நகரம் காவிரி பூம்பட்டினம்
என்ற பெயரால் அழைக்கப்பட்டது. கடலில் மூழ்கிவிட்டதாகக் கருதப்பட்ட இந்நகரத்தைக் குறித்து
அறியும் பொருட்டு 1981 –ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை ஆழ்கடல் ஆய்வினை
மேற்கொண்டது. அப்போது கிடைத்த ரோமானிய நாட்டு பானை ஓடுகள், சுடுமண்ணால் ஆன புத்தரின்
தலைப்பகுதி, சுடுமண் புத்தபாதம், செங்கற்கள், மணிகள், சீனநாட்டுப் பானை ஓடுகள், உருவங்கள்
பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் போன்ற பொருட்கள் கிடைத்தன அவற்றைக் காட்சிக்கு வைப்பதற்கு,
அங்கு ஆழ்கடலாய்வு அகழ்வைப்பகம் ஒன்று 1997-ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டது.
இது மயிலாடுதுறையிலிருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
ஆர்க்காடு
இஸ்லாமிய அகழ்வைப்பகம் - வேலூர்
ஆர்க்காடு இஸ்லாமிய
அகழ்வைப்பகம் 1982- ஆம் ஆண்டு இஸ்லாமிய கட்டடக்கலை, கலை மற்றும் பண்பாட்டுக் கூறுகளை
எடுத்துக் கூறும் முகமாக இவ்வகழ்வைப்பகம் தொடங்கப்பட்டது. இது வேலூரிலிருந்து, 24 கி.மீ. தொலைவில் ஆர்க்காட்டில் அமைந்துள்ளது.
இங்கு கற்சிற்பங்கள்,
சுடுமண் உருவங்கள், காசுகள், இஸ்லாமிய கலைப்பொருட்கள், பீங்கான் பொருட்கள், இரும்புப்
பொருட்கள், மரப்பொருட்கள் ஆகியவற்றுடன் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களும் காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ளன.
மராட்டியர்
அரண்மனை அகழ்வைப்பகம் – தஞ்சாவூர்
தஞ்சையை ஆண்ட
கடைசி நாயக்க மன்னன் விஜய ராகவ நாயக்க (கி.பி. 1633-1674) மன்னரால் கட்டப்பட்டது. தஞ்சாவூர்
அரண்மனை வளாகம், இங்குள்ள கோட்டை 530 ஏக்கர்ப பரப்பளவில் 15 அடி அகலமும் , 15 அடி ஆழழும்
கொண்ட அகழி சூழ்ந்து காணப்படுகிறது. தஞ்சை நகரம் விரிவுபடுத்தப்பட்ட போது அகழி தூர்க்கப்பட்டு,
சுவரும் இடிக்கப்பட்டதாக அறியமுடிகிறது.
இக்கோட்டையின்
கிழக்குப் பகுதியில் இராஜகோபாலன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட பீரங்கி ஒன்று காணப்படுகிறது.
அரண்மனைப் பகுதிகளான ஆயுத கோபுரம், மணி மண்டபம்
ஆகிய இடங்களைப் பாதுகாப்புச் சின்னமாக அறிவித்து தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பாதுகாத்து
வருகின்றது.
இங்குள்ள தஞ்சை
அரண்மனையின் கட்டடக்கலை, மராட்டியர் மற்றும் நாயக்கர் காலத்திய கலை, பண்பாட்டினைப்
பிரதிபலிக்கின்றது. தர்பார் மண்டபத்தில் உள்ள ஓவியங்கள் இராமாயண, மகாபாரதக் காட்சிகளைச்
சித்திரிப்பவையாகவும், சுவர்ப் பகுதிகளிலும் விதானத்திலும் உள்ள சுடுமண் உருவங்கள்
கடவுளர்களின் உருவங்களைச் சித்தரிப்பவையாகவும் உள்ளன.
கற்சிற்பங்கள்,
பீங்கான் பொருட்கள், இரும்புப் பொருட்களான கத்தி, குறுங்கத்தி மற்றும் சிறுகத்தி போன்ற
பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தஞ்சையின் மையப் பகுதியில் இயங்கும் இந்த அகழ்வைப்பகம்
மராட்டா அகழ்வைப்பகம் எனவும் அழைக்கப்படுகின்றது.
சேர
அகழ்வைப்பகம் – கரூர்
அமராவதி ஆற்றின்
கரையில், திருச்சியிலிருந்து 78 கி.மீ. தொலைவில்
அமைந்துள்ள கரூரில் 1982-ஆம் ஆண்டு, கரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள
தொல்லியல் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இவ்வகழ்வைப்பகம் அமைக்கப்பட்டது. இவ்வகழ்வைப்பகத்தில்
கி.மு முதல் நூற்றாண்டு முதல் கி.பி 19- ஆம் நூற்றாண்டு வரையிலான தொல்பொருட்கள் காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானவை அமராவதி ஆற்றுப்படுகையில் கிடைத்த தங்கம்,
வெள்ளி ஆகியவற்றால் ஆன எழுத்துப் பொறிக்கப்பட்ட மோதிரங்களும், கி.மு 5-ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்த முத்திரையிடப்பட்ட காசுகளும் ஆகும்.
தமிழ்நாடு அரசு
தொல்லியல்துறை 1973, 1977-79 மற்றும் 1993 ஆகிய ஆண்டுகளில் கரூர், கரூருக்கு அருகில்
உள்ள புகளூர், ஆத்தூர் ஆகிய ஊர்களில் அகழாய்வு
மேற்கொண்டது.
இந்த ஆய்வில்
பல முக்கியத் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், ரோமானிய காசுகள், விலைமதிப்பற்ற
கற்கள் ரௌலெட்டட் பானை ஓடுகள், ஆம்போரா துண்டுகள், கருப்பு சிவப்புப் பானை ஓடுகள்,
செங்கற்துண்டுகள் மற்றும் இரும்புத் துண்டுகள் ஆகிய தொல்பொருட்கள் குறிப்பிடத்தக்கவைகளாகும்.செங்கற்கட்டடத்தின்
பகுதி ஒன்றும் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்பரப்பு
ஆய்விலும், அகழாய்விலும் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
நடுகற்கள், ரோமானியக் காசுகள், சங்ககாலச் சேர, சோழ, பாண்டியர் காசுகள், பல்லவர் காலக்
காசுகள், பிற்காலப் பாண்டியர் காசுகள், முதலல் இராஜராஜன் காசு, நாயக்க மன்னர் காசு,
ஓலைச்சுவடிகள், மணிகள், செப்புப் பட்டயங்கள், சுடுமண் மாதிரிகள் ஆகியவை பிற காட்சிப்
பொருட்களாகும்.
டேனிஷ்
கோட்டை தள அருங்காட்சியகம் – தரங்கம்பாடி
இவ்வகழ்வைப்பகம்
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் தரங்கம்பாடியில்
உள்ள டேனிஷ் கோட்டைக்குள் அமைந்துள்ளது.
இங்கு பீங்கான்
பொருட்கள், டென்மார்க் நாட்டுக் கையெழுத்துப் பிரதிகள், கண்ணாடிப் பொருட்கள், சீனநாட்டுத்
தேநீர்ச் சாடிகள், மாக்கல் விளக்குகள், அலங்கரிக்கப்பட்ட சுடுமண் பொருட்கள், விளக்குகள்,
கற்சிற்பங்கள், கத்தி, குறுவாள், ஈட்டி போன்ற இரும்பினால் ஆனப் பொருட்களும், சுதையினால்
ஆன உருவங்கள், பெருங்கற்கால ஈமச் சின்னங்கள், மரத்தினால் ஆன பொருட்களும் காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ளன.
தரங்கம்பாடியின்
வரலாறு கி.பி முதல் நூற்றாண்டு முதல் தொடங்குகிறது. இத்தரங்கம்பாடி பண்டைய சங்க இலக்கியங்களான
புறநானூறு, நற்றிணை மற்றும் அகநானூறு ஆகியவற்றில் பொறையாறு, முன்துறை என்ற துறைமுக
நகராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதி கி.பி. 19-ஆம் நூற்றாண்டு வரை வரலாற்றுச்
சிறப்பு மிக்க இடமாகத் திகழ்ந்துள்ளது.
இத்துறைமுகப்
பட்டினத்திற்கு பல வெளிநாட்டு வணிகர்கள் வந்து வாணிகம் செய்துள்ளனர். இத்துறைமுகம்
கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் நாங்கூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான பகுதியில் உள்நாட்டு,
வெளிநாட்டு வாணிகம் சிறப்பாக நடைபெற்றது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
பல ஐரோப்பிய நாடுகள் கிழக்கித்திய கம்பெனிகளை நிறுவி அதன் மூலம் இப்பகுதியில் வாணிகத்
தொடர்பினை மேற்கொண்டனர்.
தர்மபுரி
அகழ்வைப்பகம் - தர்மபுரி
1979-ஆம் ஆண்டு
தொடங்கப்பட்ட இந்த அகழ்வைப்பகம் நடுகற்களின்(25 வீரக்கற்கள்) அகழ்வைப்பகமாகத் திகழ்கின்றது.
மேலும் இவ்வகழ்வைப்பகத்தில் புதிய கற்காலக் கருவிகள், பெருங்கற்காலப் பொருட்கள். கத்தி,
குறுவாள், ஈமத் தொட்டிகள், தாழிகள், மூன்று கால்கள் மற்றும் ஐந்து கால்களை உடைய சாடிகள்,
துர்க்கை மற்றும் சமண சமய, புத்த சமயச் சிற்பங்கள், சுடுமண்ணால் ஆன உருவங்கள், விளக்குகள்
மற்றும் குழாய்கள், காசுகள், பதக்கங்கள், பீரங்கிகள், மரப்பொருட்கள், செப்புப் பொருட்கள்,
இரும்புப் பொருட்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தொல்மந்தர்
அகழ்வைப்பகம் – பூண்டி
தமிழ்நாடு அரசு,
தொல்லியல் துறை தொல்பழங்காலத்தைச் சார்ந்த தொல்பொருட்களுக்காக இக்காட்சியகத்தினை பூண்டியில்
1985-ஆம் ஆண்டு தொடங்கியது.
திருவள்ளூரிலிருந்து
சுமார் 13 கி.மீ. தொலைவில் பூண்டி அகழ்வைப்பகம் அமைந்துள்ளது. இங்கு பழைய கற்காலக்
கருவிகள், புதிய கற்காலக் கருவிகள், ஈமத் தொட்டிகள் பெருங்கற்கால ஈமத்தாழிகள், கிண்ணங்கள்,
மரம் மற்றும் நத்தையின் புதைப்படிவங்கள், மூன்று கால்களை உடைய தாழிகள், இரும்பு மண்வெட்டி,
கோடரி மற்றும் இரும்பு உருக்கப் பயன்படும் சுடுமண் குழாய்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பூண்டி ஏரியின்
அருகில் உள்ள பூண்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் உலக அளவில் தொல்லியல் மற்றும்
புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகத் திகழ்கின்றன. பழைய கற்கால மனிதன் வாழ்ந்த
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடியம் என்ற இடத்தில் அமைந்த குகை, பண்டைய மனிதன் வாழ்ந்திருந்ததற்கான
அடையாளங்களுடன் காணப்படுகின்றன.
இராஜராஜன்
அகழ்வைப்பகம் - தஞ்சாவூர்
இவ்வகழ்வைப்பகம்
தஞ்சை, திருச்சி சாலையில் திருச்சியிலிருந்து 50 கி.மீ தொலைவில் இராஜராஜன் மணிமண்டபத்தில்
அமைந்துள்ளது.
போர் வெற்றிகள்,
நிர்வாகத்திறன், பண்பாடு கலை மேம்பாடு போன்றவற்றிற்காப் போற்றப்படும் சோழ மன்னன் முதலாம்
இராஜராஜனின் 1000-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இவ்வகழ்வைப்பகம் கி.பி.
1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு வைக்கப்பட்டுள்ள சிற்பங்களுள் யோக தட்சிணாமூர்த்தி,
நடராஜர், ஜேஷ்டா, கஜலட்சுமி, விஷ்ணு, பிரம்மா, முருகர், பைரவர், விநாயகர், சூரியன்,
ரிஷி அகஸ்தியர் மற்றும் நந்தி ஆகிய கற்சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
இராமலிங்க
விலாசம் அரண்மனை - இராமநாதபுரம்
இராமலிங்க விலாசம்
எனப்படும் சேதுபதி மன்னர்களின் இராமநாதபுர அரண்மனையில் அமைக்கப்பட்டுள்ள இவ்வகழ்வைப்பகம் இராமேஸ்வரத்திலிருந்து 55 கி.மீ.
தொலைவில் அமைந்துள்ளது.
இங்கு இரும்பினால்
ஆன வேல், கத்தி, குறுவாள், துப்பாக்கி மற்றும் வளரி போன்ற போர்க்கருவிகளும், அழகன்குளம்
அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களும் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
அகழ்வைப்பகமாக
விளங்கும் அரண்மனைச் சுவர்களிலும் விதானங்களிலும் போர்க்காட்சிகள், கடவுளரின் உருவங்கள்,
இராமாயணம், பாகவதம் ஆகிய புராணக் காட்சிகள், இராமரின் பிறப்புக் குறித்த பாலகாண்ட காட்சிகள்,
நீர் விளையாட்டுகள் போன்ற தொல்லியல் சிறப்புமிக்க ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.
திருமலை
நாயக்கர் அரண்மனை – மதுரை
கி.பி. 1636-ஆம் ஆண்டு, மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் (கி.பி. 1627-1659) என்ற
மன்னரால் கட்டப்பட்டது. அழகிய மதச் சார்பற்ற இவ்வரண்மனைக் கட்டடம், இத்தாலிய நாட்டுக்
கட்டடக்கலை, நிபுணரைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது உள்ள இவ்வரண்மனைக்
கட்டடப் பகுதி, முன்பி இதனை அளவில் நான்கு மடங்கு பெரிதாக இருந்துள்ளது. சொர்க்க விலாசம்
மற்றும் இரங்கவிலாசம் என்ற இரு பகுதிகளைக் கொண்ட இவ்வரண்மனையில், அரசர்களின் வாழ்விடங்கள்,
திரையுரங்கம், அரண்மனைக் கோயில், இராணிகள் தங்குமிடம், ஆயுதங்கள் சேகரித்து வைக்குமிடம்
ஆகியவை இருந்துள்ளன.மேலும், உறவினர்கள், பணியாளர்கள் தங்குமிடங்கள், குளங்கள், தோட்டங்கள்
ஆகியவையும் அமைந்திருக்கக்கூடும். ஏனெனில், பல எஞ்கிய கட்டடப் பகுதிகள் ஆங்காங்கே காணப்படுகின்றன.
இவ்வரண்மனைப் பகுதி முழுவதும் சுற்றுச் சுவரால் சூழப்பட்டிருக்கக் கூடும். கி.பி.
1980 ஆம் ஆண்டு இந்த அரண்மனை அகழ்வைப்பகம் தொடங்கப்பட்டது.காட்சிப் பொருட்கள்:மீன்
சின்னம் பொறிக்கப்பட்ட சதுர வடிவச் செப்புக்காசு, விலை மதிப்பற்ற கற்கள், சங்கு வளையல்
துண்டுகள், கோவலன்பொட்டலில் கிடைத்த எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சப்தமாதர்
சிற்பத் தொகுதிகள், கொடுங்கை என்ற இடத்தில் கிடைத்த சுடுமண் பொம்மைகள் ஆகியவைகளாகும்.
குற்றால அகழ்வைப்பகம் - திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் தமிழ்நாட்டிலுள்ள
முதன்மையான சுற்றுலாத் தலமாகக் திகழ்கின்றது.
பழங்குடியினரின் வாழ்க்கை நிலையைச் சித்தரிக்கவும், வேட்டையாடி வாழும் அவர்களது வாழ்க்கை முறையை அறியவும்
இவ்வகழ்வைப்பகம் கி.பி. 1982-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வகழ்வைப்பகத்தில் நுண்கற்கருவிகள், புதிய கற்காலக் கருவிகள்,
பெருங்கற்காலக்
கருப்பு சிவப்பு வண்ணப் பானைகள், இரும்புப் பொருட்கள், சிற்பங்கள்,
சுடுமண்
உருவங்கள் மற்றும் மரப்புதைப் படிவங்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியை பண்டைய காலத்தில் பாண்டியர்களும் பின்னர்
சோழர்களும் ஆட்சி செய்துள்ளனர். கி.பி எட்டாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரால்
பாடப்பட்ட இங்குள்ள சிவன்கோயிலின்(குற்றாலநாதர்) சித்திரச் சபையில் காணப்படும்
ஓவியங்கள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை.
கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குற்றாலக்
குறவஞ்சி என்ற நூல். குற்றாலநாதரைச் சிறப்பித்துப் பாடியுள்ளதோடு குற்றால மலையில்
வாழ்ந்த பழங்குடியினரின் வாழ்க்கை முறையையும் நன்கு சித்திரிக்கிறது.
கோவை அகழ்வைப்பகம் - கோயம்புத்தூர்
கோவையைச் சுற்றிப் பல தொல்லியல் மற்றும் வரலாற்றுச்
சிறப்புமிக்க இடங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை வெள்ளலூர். போளுவாம்பட்டி, பேரூர் மற்றும் வேட்டைக்காரன் மலை ஆகியவையாகும்.
வேட்டைக்காரன் மலையில் உள்ள குகை ஓவியங்களில்
விலங்குகளும். வேட்டைக்காட்சிகளும், நடனக் காட்சிகளும்
சித்திரிக்கப்பட்டுள்ளன.
வெள்ளலூரில்,
கி.மு முதல்
நூற்றாண்டு முதல் கி.பி. நான்காம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த
ரோமானிய காசுகள், தங்கம், வெள்ளி ஆகியவை புதையலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இத்தொல்பொருட்களில் குறிப்பிடத்தக்கவை தங்கத்தினால் ஆன ரோமானிய உருவங்கள்
பொறிக்கப்பட்ட ஆபரணங்களாகும்.
தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை 1980-ஆம் ஆண்டு போளுவாம்பட்டியில் அகழாய்வு மேற்கொண்டது.
இவ்வகழாய்வில் சுடுமண் உருவங்கள், சுடுமண் முத்திரை, பெரிய அளவிலான செங்கற்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
இச்சுடுமண் உருவங்களில் இயக்கன், இயக்கி, மைத்ரேயர், புத்தரின் தலைப்பகுதி ஆகியவை
குறிப்பிடத்தக்கவை.
பேரூரின்,
தெற்கில் சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள சுண்டைக்காமுத்தூர் அருகில்
கரடிப்பாறை என்ற கல்லில் வட்டெழுத்தும்,
தமிழ் எழுத்தும்
பொறிக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு சோழ மன்னன் முதலாம் ஆதித்தனின்
(கி.பி. 871-909) பெயரால் இராஜகேசரி பெருவழி என்ற
ஒரு பெருவழி இருந்ததைக் குறிக்கிறது. இந்தப் பண்டைய பெருவழி பண்டைய சேர நாடான
கேரளத்தை இணைக்கும் முகமாக பாலக்காட்டு கணவாய் வழியாகப் பேரூர், வெள்ளலூர், சூலூர், கத்தன்காணி,
கொடுமணல் (பண்டைய
கொடுமணம்) வழியாக அமராவதியில் உள்ள சேரர் நகரான கரூர் வரை செல்கின்றது. எனவே, இப்பகுதியின் தொல்லியல் முக்கியத்துவத்தையும் வணிகத்
தொடர்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் இத்துறை 1981-ஆம் ஆண்டு அகழ்வைப்பகத்தைத்
தொடங்கியது. இவ்வகழ்வைப்பகத்தில் சிற்பங்கள்,
தாழிகள், அவற்றில் காணப்படும் பானைகள், கொங்கு மன்னர்களின் கல்வெட்டுகள், வீரக்கற்கள்(நடுகற்கள்) போன்றன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
திங்கள், 30 அக்டோபர், 2023
சுவடியியல்
சுவடியியல்
அறிமுகம்
சுவடிகளைப் பற்றிய அறிவுப்புலம் சுவடியியல் எனப்படுகிறது. சுவடிகளைப்பற்றி அறிவது, சேகரிப்பது, பாதுகாப்பது, ஆராய்வது, படிப்பது பதிப்பிப்பது என்பன இதனுள் அடங்கும்.
சுவடிகளின் அமைப்பு, சுவடிகள் எதனால் அழிவுக்கு உள்ளாகிறது, அழிவிலிருந்து சுவடிகளை எவ்வாறு அழியாவண்ணம் பாதுகாக்கலாம், நாடெங்கும் உள்ள சுவடிகளை எவ்வாறு திரட்டலாம், திரட்டிய சுவடிகளை எவ்வாறு முறையாக வகைப்படுத்தலாம், அவற்றை எவ்வாறு பதிப்பிக்கலாம் என்பனபோன்ற வழிமுறைகளை சுவடியியல் மூலம் அறியலாம்.
உலகெங்கும் உள்ள சுவடிகளில் அச்சான சுவடிகள் எவை அச்சாகாத சுவடிகள் எவை என்பனவற்றையும், சுவடிகளை ஆய்வு செய்யும் முறை மற்றும் பதிப்பு நெறிமுறைகள் ஆகியவற்றையும் சுவடியியல் வாயிலாக தெரிந்துகொள்ள முடிகிறது.
‘சுவடி’ என்னும் சொல் கையால் ஓலையில் சுவடை உருவாக்கி எழுதப்படும் நூலை குறிப்பது. அதாவது எழுத்துக்கள் பதியுமாறு எழுதப்பட்ட ஏடுகளின் தொகுப்பு சுவடி என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறு எழுதப்பட்ட சுவடிகள் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், திருமுகம் என்னும் பெயர்களால் இலக்கியங்களில் சுட்டப்படுகின்றன.
சுவடிகளின்
தோற்றம்
o
நம் தமிழ்ச் சமூகத்தில் கற்பித்தல் என்பது தொடக்க காலத்தில்
வாய்மொழிப் பாடமாக இருந்தது. எழுத்து
பயிற்சி மணலிலும் நெல்லிலும் எழுதிப் பயிற்றுவிப்பதாக இருந்தது. பிறகே ஓலையில்
எழுதும் பயிற்சி தொடங்கப்பட்டது.
o
பழங்காலத்தில் திண்ணைப்பள்ளி ஆசிரியர்களிடம் பாடம்கேட்ட
நூல்களை மாணவர்கள் பிற்காலத் தேவைக்காக சுவடிகளில் எழுதி வைத்தார்கள்.
o தொடக்கக் கல்வியை முடித்தவர்கள் மேலும் கற்க விரும்பிய போது
சுவடிகளை ஆசிரியரிடமிருந்தோ அல்லது பிறரிடமிருந்தோ வாங்கி சுவடிகளில் எழுதி
வைத்தார்கள்.
o
மனப்பாடம் செய்யப்பட்ட பாடல்கள் எழுத்து வடிவம் பெற்றதால்
சுவடிகள் எண்ணிக்கையில் பெருகின.
o எழுதப்பெற்ற சுவடிகள் படிஎடுக்கப் பெற்றதால் மேலும் வளர்ச்சிபெற்றது.
o ஏற்கனவே எழுதப்பட்ட சுவடிகள் பழுதடைந்ததால் அவற்றைப் புதிய
சுவடிகளில் படியெடுத்தனர்.
o
பல்வேறு இலக்கிய இலக்கண நூலுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களால்
சுவடிகள் பெருகின. இறையுணர்வு காரணமாக சமயச் சுவடிகள் பெருகின.
o குறுநிலமன்னர்கள், வள்ளல்கள் காலத்தில் அவர்கள் அளித்த ஆதரவால்
சிற்றிலக்கியங்கள் பெருகின.
o மக்களின் தேவைக்காகவும் பல சுவடிகள்(இதிகாசக் கதைகள், மருத்துவச் சுவடி, ஜோதிட சுவடி, கணிதம், இசை, நாடகம் ) படியெடுக்கப் பெற்று வளர்ச்சியுற்றுள்ளன.
ஓலைகளில் ஏன் எழுதப்பட்டது?
இலை, மரப்பட்டை, களிமண்பலகை போல்வன விரைவில் அழியக் கூடியவையாக இருந்தன. மரப்பலகை, மூங்கில்பத்தை போன்றவற்றில் அளவில் பெரிய நூல்களை எழுதிக் கையாள்வது மிகவும் கடினமானதாக இருந்தது. தோல், துணி, உலோகத் தகடு போல்வன மிகுந்த பொருட் செலவினை உண்டாக்கும். பிற உயிர்களைக் கொன்று அவற்றின் தோலில் நூல்களை எழுதுவது மனிதத்தன்மைக்கு முரண்பட்டதாகவும், அருவருக்கத் தக்கதாகவும் அமைகிறது. மேலும் அவற்றில் விரைவாக எழுதவும் முடியாது. கருங்கல் போன்ற பிறபொருள்கள் பிற இடங்களுக்கு எடுத்துச்செல்ல இயலாதவை. ஆனால் ஓலையோ ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் வரை அழியாத்தன்மை வாய்ந்ததாகவும் செலவு இல்லாததாகவும் இருப்பது. தமிழகத்தில் கிராமப்புறங்கள் முதல் எல்லா இடங்களிலும் மிகுதியாகவும் எளிமையாகவும் கிடைக்கக் கூடியது; மிகப் பெரிய அளவுடைய நூல்களையும் ஒருசுவடிக்கட்டில் அடக்கக்கூடிய தன்மை வாய்ந்தது; பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லும் அளவு உடையது; பாதுகாக்க ஏற்றது. இக்காரணங்களால் ஓலைகளையே தமிழர் தேர்ந்தெடுத்து மிகுதியாகப் பயன்படுத்தினர்.
எழுது கருவிகள்
உலகின் பல பகுதிகளில் எழுதுவதற்கு பைப்ரஸ் என்னும் ஒரு வகைக் கோரைப் புல்லையும் விலங்குகளின் தோலையும் பயன்படுத்தினர். அவற்றில் நாணல் குச்சியைக் கொண்டு இலைச்சாறு, மிருகங்களின் ரத்தம் ஆகிவற்றைப் பயன்படுத்தி எழுதினார்கள். கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தியர்கள் இவ்வழக்கத்தைக் கொண்டிருந்தனர். கிரேக்கம், ரோம், எபிரேயம் போன்ற நாடுகளில் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை இத்தகைய பைப்ரஸ் புல்லையே எழுதுவதற்குப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அவை விரைந்து அழிந்துவிடும் தன்மையுடையனவாக இருந்ததால் விலங்குகளின் தோலையும் எழுதுவதற்குப் பயன்படுத்தினர். இலைச்சாறு, பூச்சாறு, மிருகங்களின் ரத்தம் ஆகியவற்றையும் எழுதுவதற்கு பயன்படுத்தினார்கள்.
நம் நாட்டில் களிமண்பலகை, கல், தோல், உலோகத்தகடு(பொன்தகடு, செப்பேடு, வெள்ளித்தகடு), இலை, மரப்பலகை, துணி, மூங்கில்பத்தை முதலான பொருட்களை எழுதப் பயன்படுத்தியிருந்தனர் என்றாலும் செய்திகளை எழுதி தூதுவர் மூலம் அனுப்பவும் இலக்கியங்களை எழுதிவைக்கவும் பனை ஓலைகளையே மிகுதியான அளவு பயன்படுத்தினர்.
சுவடி தயாரிப்பு
சுவடிகளைப் பூச்சி அரிப்பிலிருந்து பாதுகாக்க மஞ்சள் பூசினார்கள். ஓலைகளில் கீறி எழுதப்பட்ட எழுத்துக்கள் தெளிவாக தெரிவதற்காக விளக்கு மையினை பூசினார்கள். எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பனை ஓலை ‘கூந்தல்பனை’, ‘நொங்கு பனை’ என்ற இருவகையான பனை மரங்களிலிருந்து கிடைக்கக்கூடியதாக இருந்தது.
பனை ஓலைகளை நிழலில் உலர்த்தி பதப்படுத்தி ஒழுங்குபட நறுக்கி சுவடி தயாரித்தார்கள் அத்தகைய சுவடி நறுக்குகள் ‘ஏடு’ எனப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட எழுதப்படாத ஏடுகள் வெள்ளோலை எனப்பட்டது. இவ்வாறு ஓலை தயாரிக்கும் செயலுக்கு ஓலைவாருதல் என்று பெயர்.
பதப்படுத்தி நன்கு நறுக்கி உருவாக்கப்பட்ட ஓலைகளின் நடுவே துளையிட்டு சிறு நூல் கயிற்றில் அச்சுவடிகளைக் கோர்த்து சுவடிகள் ஒடியாமல் இருப்பதற்காக இரு பகுதியிலும் சிறு கட்டையினை(சட்டங்கள்) வைத்து பாதுகாத்து வந்தனர்
ஓலை எழுதுவதற்குப் பதமாக உள்ளதா என்பதை சுழித்துப்(கீறி) பார்த்து பயன்படுத்தினர். இதுவே பிற்காலத்தில் பிள்ளையார்சுழி என அழைக்கப்பெறலாயிற்று.
எழுத்தாணி
ஆணி, கூரியகல், தண்டு, நாணல், பறவைஇறகு, பன்றிமுள், விலங்குகளின் எலும்பு, மெல்லிய தூரிகை போன்ற பல பொருள்களை மக்கள் எழுதும் கருவிகளாகப் பயன்படுத்தினர். என்றாலும் ஓலைகளில் எழுதுவதற்கு எழுத்தாணிகளையே பயன்படுத்தினர்.
குண்டெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி என்பன எழுதுவதற்குரிய எழுத்தாணி வகைகள். தந்தமும் பொன்ஊசியும் கூட எழுதுவதற்குரிய எழுத்தாணிகளாகப் பயன்படுத்தப்பட்டன என்பதை இலக்கியச் சான்றுகளின் வாயிலாக அறியமுடிகிறது. பழங்காலத்தில் அரசர்களிடம் “ஓலை எழுதுவோர்” என்னும் பணியாளர் இருந்தனர்.
சுவடிகளைத் திரட்டுதல்
சுவடிகளைத் திரட்டும் பணி சங்க காலத்திலேயே தொடங்கிவிட்டது. மன்னர் பலர் புலவர்களை ஒருங்கிணைத்து இப்பணியை மேற்கொண்டார்கள். இதற்கு சங்கம் என்கிற அமைப்பும் அதில் தொகை செய்யப்பட்ட சங்க இலக்கியங்களும் சான்றாக அமைகின்றன. இடைக்காலத்தில் மடாலயங்கள் சுவடிகளைத் திரட்டி பாதுகாத்து வைத்தன. பிற்காலத்தில் காலின் மெக்கன்சி, லெய்டன், பிரௌன், எல்லிஸ், ஏரியல் போன்ற அயல்நாட்டவர்களாலும் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர், பாண்டித்துரைத்தேவர், கனகசபைப்பிள்ளை, ரா. இராகவையங்கார் எனப் பலரும் ஓலைச் சுவடிகளைத் திரட்டித் தொகுத்தனர்.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை, உ.வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஔவை சு. துரைசாமிப்பிள்ளை போன்றவர்கள் கற்பதற்காகவும் பதிப்பிப்பதற்காகவும் ஓலைச்சுவடிகளைத் திரட்டினர்.
சுவடிகளின் வகைப்பாடு
அரசினர் கீர்த்திசைச் சுவடி நூலகம், உ.வே. சாமிநாதையர் நூலகம், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் ஆகியவற்றில் பின்பற்றப்பட்டுள்ள வகைப்பாட்டு முறையை அடிப்படையாகக் கொண்டு பொருள் அடிப்படையில் சுவடிகளை அகராதி, அரிச்சுவடி, ரசவாதம் இலக்கணம், இலக்கியம், கணிதம், சமயம், ஜாலம், ஜோதிடம், தோத்திரம், நாடகம், புவியியல், மருத்துவம், மாந்திரீகம், வரலாறு, வானவியல் எனப் பலவாறு வகைப்பாடு செய்யலாம்.
சுவடிகளின் அழிவு
இயற்கையாகவும் செயற்கையாகவும் பல்வேறு காரணங்களால் சுவடிகள் காலந்தோறும் அழிந்துபோயின. அந்த வகையில் மறைந்துபோன தமிழ்நூல்கள் ஏராளம். கிடைத்த சுவடிகளில் பல சிதிலமடைந்தே கிடைத்தன.
கரையான்களாலும், ராமபாணம் எனப்படுகின்ற ஒரு வகைப் பூச்சிகளாலும் பூஞ்சைகளாலும் சுவடிகள் இயற்கையாகவே அழிந்தன. மேலும் போர், அரசியல் மாற்றம், வெளிநாடுகளுக்குச் சுவடிகளை விற்பது, தீயிலிட்டு எரிப்பது. ஆற்றிலும் குளத்திலும் கிணற்றிலும் போடுவது, கவனக்குறைவு ஆகியவற்றால் ஏடுகள் செயற்கையாக அழிக்கப்பட்டன. ஆடிப்பெருக்கில் ஆற்றில் விட்டால் பலன் கிடைக்கும் என்கிற மூடப்பழக்கத்தால் ஏராளமான சுவடிகள் ஆற்றில் விடப்பட்டு அழிக்கப்பட்டன .
சுவடிப் பாதுகாப்பு
பழங்காலத்தில் ஓலையில் எழுதிய எழுத்து தெளிவாக தெரிவதற்காக சுவடிகளுக்கு மஞ்சள் பூசினர் கீறி எழுதிய இடங்களில் ஒரு வகை இலைச்சாறு அல்லது விளக்கின் மை என ஏதேனும் ஒன்றைப் பூசினர். இவைகளே ஒரு வகையில் சுவடிகளைப் பாதுகாக்கும் பூச்சிக்கொல்லிகளாக இருந்தது. வேப்பிலை, வசம்பு போன்ற பொருட்களைக்கொண்டும் சுவடிகளைப் பூச்சி அரிப்பிலிருந்து பாதுகாத்தனர்.
அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள தற்காலத்தில் சுவடிகளை ஸ்கேனர்(வருடி) மூலம் படமாக எடுத்து எண்ணிம(டிஜிட்டல்) முறையில் சேமித்து பாதுகாக்கின்றனர். மூலச்சுவடிகளைப் பூச்சிகள் அரிக்கா வண்ணம் பாதுகாக்க அவற்றை முறையாகத் துடைத்து அவற்றின் மீது Lemon Grass Oil, Java Citranella Oil போன்றவற்றைப் பூசி பாதுகாக்கின்றனர்.
சுவடிப்பதிப்பு
கி.பி. 1812 இல் திருக்குறள் அறத்துப்பாலை F.W. எல்லீஸ் என்பார் பதிப்பித்தார் என்ற செய்தியை அடிப்படையாகக்கொண்டு சுவடிகளைப் பதிப்பிக்கும் பணி தொடங்கிய காலமாக கி.பி. 19 ஆம் நூற்றாண்டைக் குறிப்பிடலாம்.
தமிழ்ச்சுவடிகள் உள்ள இடங்கள்
1. அரசினர் சுவடி நூலகம், சென்னை.
2. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
3. கல்கத்தா தேசிய நூலகம், கல்கத்தா.
4. சரசுவதி மகால் நூல் நிலையம், தஞ்சாவூர்.
5. சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர்.
6. சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம், சென்னை.
7. டாக்டர் உ வே. சாமிநாதையர் நூலகம், திருவான்மியூர்.
8. தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
9. திருவனந்தபுரம் பல்கலைக்கழகச் சுவடி
நூலகம், திருவனந்தபுரம்.
10. பிரமஞானசபை நூல் நிலையம், அடையாறு.
11. புதுவை பிரஞ்சு நிறுவனம், பாண்டிச்சேரி.
12. வெங்கடேசுவரா கீழ்த்திசைமொழி ஆராய்ச்சி
நிறுவன நூலகம், திருப்பதி
13. ஆந்திரப் பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம்.
14. உஸ்மானியா பல்கலைக்கழகம், ஐதராபாத்
15. கலைமகள் கல்வி நிலையம், ஈரோடு.
16. கள்ளிக்கோட்டைப் பல்கலைக்கழகம், கள்ளிக்கோட்டை.
17. காசிமடம், திருப்பனந்தாள்.
18. சங்கராச்சாரியார் சுவாமிகள் மடம், காஞ்சிபுரம்.
19. தருமபுர ஆதீனமடம், மாயவரம்.
20. திருவாவடுதுறை ஆதீனமடம், திருவாவடுதுறை.
21. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.
22.
மதுரைத் தமிழ்ச்சங்கம், மதுரை.
23.
British
Museum, London.
24.
The
Library of the Royal Asiatic Society. London.
25. The Library of Cambridge University.
மேலும் அறிய
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்