என் புன்னகையைத்
திருடிவிட்டு
சிரிக்கிறான்
உண்மைதான்
மனிதன்
சிரிக்கத் தெரிந்த
மிருகம் என்பது...
என் புன்னகையைத்
திருடிவிட்டு
சிரிக்கிறான்
உண்மைதான்
மனிதன்
சிரிக்கத் தெரிந்த
மிருகம் என்பது...
நேற்று இரவு
சொற்களைத் தந்துவிட்டு
நீ உறங்கிவிட்டாய்
என்
எண்ணச் சுயம்வரத்தில்
ஆசை மீதூர
உன்னைக்
கண்டுபிடிக்க முடியாத
குழப்பத்தில்
மதிமயங்கி
எல்லோர் கழுத்திலும்
மாலையிட்டேன்
சுய நினைவு வந்து
சுற்றிப் பார்க்கையில்
அவை எங்கும்
சுய உருக்காட்டி
சிரித்து நிற்கும்
போலி நளன்கள்
ஆசை வளர்த்த
அன்னத்தின் கழுத்தறுத்து
தூதுவிட்டேன்
காற்றெங்கும்
ரத்த வாடை
திணை: கைக்கிளை
- ச. நீலமேகன்.
தம்பிக்கு.....
16.10.2021
சாரல்நாடு
அன்புள்ள தம்பிக்கு…
அண்ணன் எழுதியது. என் நலன் பற்றி விசாரித்ததோடு வீட்டுக்குக்கூரையின்
நலன் பற்றியும் விசாரித்திருந்தாய், மந்தை மந்தையாக குரங்குகள் கூரையின்மீது நடந்துசெல்வதாலும்
சில நேரங்களில் குரங்குகளுக்கிடையில் கூரைமீது வாலி சுக்ரீவன் சண்டை நடப்பதாலும் மேற்கூரையின்
ஓடுகள் சரிந்தும் உடைந்தும் கிடக்கின்றன. கூரை ஓட்டைகளில் வெயில் நேரத்தில் சூரியன்
சிரிப்பதைப் பார்க்கமுடிகிறது. அந்த ஏளனச் சிரிப்பைக்கூட என்னால் தாங்கிக்கொள்ள முடிகிறது.
மழை பெய்யும்போது கூரை அழுது தொலைப்பதைத்தான் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
கூரை
ஒழுகுகிறதென்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தால் சரியாகிவிடுமா? ஒழுங்குபடுத்த வேண்டாமா?
குரங்குகளைக்கூப்பிட்டு நஷ்டஈடா கேட்கமுடிம்? என்று நீ கேட்ட கேள்வி என்னைப் புண்படுத்தவில்லை.
பிரச்சனைக்குத் தீர்வு வெறும் பேச்சல்ல செயல் என்ற உன் சிந்தனை என்னைப் பெருமிதப்படவைத்தது.
இரண்டுநாட்களுக்கு
முன்புகூட குழாய் இணைப்பில் தண்ணீர் சரியாக வரவில்லை, தண்ணீர் வரவில்லையே என்று நான்
புலம்பிக்கொண்டிருக்கவில்லை யாரை அழைப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கவில்லை. நான்
கருவிகளை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வமுள்ளவன் என்பது உனக்குத்தெரியும்.
அது
மனிதர்களைப்போல இதைச் செய்வதால் நமக்கென்ன லாபம் என்று எண்ணுவதில்லை. அது எதற்காக உருவாக்கப்பட்டதோ
அதற்குத் துணைநிற்கும். எனவே நம்மிடமிருந்த கருவிகளைப் பயன்படுத்தி அந்தக் குழாயைக்
கழற்றிப்பார்த்ததில் காய்ந்த பாசிப்படலம் அடைத்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். அதை எடுத்துப்போட்டுவிட்டு
குழாயைப் பழையபடி பொருத்திவிட்டேன். தற்போது தண்ணீர் தடையின்றி வருகிறது.
இதை
எதற்குச் சொல்கிறேனென்றால் வீட்டுக்கூரையைச் சரிசெய்ய நான் முயற்சிக்கும்போதெல்லாம்
நம் தந்தை தடைசெய்துகொண்டே இருக்கிறார். என் முயற்சிகளையோ எண்ணங்களையோ சிறிதும் மதிப்பதில்லை.
போனமுறை பழுதுபார்த்தபோது கூரையினிடையே வெளிச்சத்திற்காக வைத்திருந்த கண்ணாடியின் சிமெண்ட்
பூச்சு பெயர்த்துக்கொண்டது அதை முழுவதுமாக நீக்கிவிட்டு மீண்டும் பூசவேண்டும் என்று
எவ்வளவோ மன்றாடினேன். ஆனால் நம் தந்தை மனமிரங்கவில்லை அதன் விளைவு மழை பெய்யும்போதெல்லாம் அந்தக் கண்ணாடி
வழியாக தண்ணீர் இறங்குகிறது.
நான்
அரும்பாடுபட்டு சேகரித்த என் பழைய புத்தகங்கள் நனைந்து பூஞ்சை பூக்கிறது. உனக்கு புத்தகங்களின்மீது
பற்றில்லாமல் இருக்கலாம் ஆனால் எனக்கு அப்படியல்ல அவற்றை நான் பாடிக்கிற காலத்தில்
உணவைப்பற்றிக் கவலைப்படாமல் இலக்கியத்தின் இனிமை கருதியும் அதிலுள்ள கருத்துக்களைப்படித்து
நாலுபேருக்குச் சொன்னால் நன்மை விளையுமே என்றும் கருதி வயிற்றுக்குச் சமாதானம் சொல்லிவிட்டு
வாங்கியவை அவை. அவையெல்லாம் நைந்து கிழிந்துபோன நிலையில் இருந்தாலும் மதிக்கத்தக்கவை.
நீ சிறுவதில் பள்ளிக்கூடத்தில் படித்திருப்பாயே “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே”
என்று அதைப்போலத்தான் அந்த கிழிந்து நைந்துபோன புத்தகங்கள். எனவே மழைபெய்யும்போதெல்லாம்
மழைநீர் கசியும் இடத்திற்கு நேராக பாத்திரம்வைத்துப் பிடிப்பது எனக்கு வாடிக்கையாகிவிட்டது.
செயலூக்கமற்றவர்களிடையே
பதவியும் அதிகாரமும் கிடைக்கும்போது கூடவே நான் என்னும் அகந்தையும் சேர்ந்துகொள்ளும்போது
அவர்களை நாடி வாழவேண்டியவர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாகிவிடுகிறது. நான் ஏதோ நம்
தந்தையை கடிந்துபேசுவதாக தவறாக எண்ணிவிடாதே நான் உலகத்து இயல்பைச் சொன்னேன்.
அதுமட்டுமல்ல
ஊருக்கு நடுவே உத்தமர்களாகவும், திரை மறைவில் பேராசையும் நல்லெண்ணமும் அற்றவர்களாக
வாழ்கின்ற மனிதர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் புற்றுநோய்க்கு நிகரானவர்கள்
அப்படிப்பட்ட மனிதர்களை இனங்கண்டு அறவே ஒதுங்கிவிடவேண்டும். அவர்கள் நச்சுப்பாம்பைப்
போன்றவர்கள். அவர்களை இனங்கண்டு எச்சரிக்கையாய் இருந்து பிழைத்துக்கொள்.
தவிர
நம் அக்கா வீட்டுக்கூரையைப்பற்றி நீ கேட்டதைப்போல வீட்டுக்கு வெள்ளையடிப்பதைப்பற்றி
என்னிடம் அடிக்கடி இப்படித்தான் கேட்கிறாள். “வெள்ளையடித்து எத்தனை ஆண்டுகளாகின்றன
துப்புகெட்டவனே” என்று. ஆனால், மேற்கூரையைச் சரிசெய்யாமல் வீட்டுக்கு வெள்ளையடிப்பது
என்பது அடுப்பை அப்புறம் பற்றவைத்துக்கொள்ளலாம் உலையில் அரிசியைப்போடு என்று சொல்வதைப்போல
இருக்கிறது.
தானாக
எதுவும் மாறாது என்பதை நான் அறிவேன். நிலைமையை மாற்ற உன் துணை அவசியம் தேவை. அதுவரை
இவற்றை எல்லாம் நினைத்தபடி தனிமையில் இருக்கும் எனக்கு அம்மா வாழ்ந்த காலத்தில் நூலிழைத்த
கணக்கை குறித்துவைத்த சுண்ணாம்புபோன சுவரும், கரிக்கோடுகளும் துணையாகும்.
செய்கின்ற
தொழிலில் திறமையும் புதிய தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ளும் ஆர்வமும் உடையவன் என்பதை
அறிவேன். அதுதான் நீ பணிசெய்யும் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கும் சமூகத்திற்கும்
பயன்படும்.
உனக்குச்
சொல்லைவிட செயல்தான் பிடிக்கும் அதனால் நான் அதிகம் எழுத விரும்பவில்லை. உன்னைப்பார்த்து
நீண்டநாளாகிவிட்டது ஒருமுறை ஊருக்கு வந்துவிட்டுப்போ. வேளைக்குச் சாப்பிடு என்று அம்மாவின்
சார்பில் உன்னைக் கேட்டுக்கொள்கிறேன். வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.
இப்படிக்கு,
உன் அன்பில் உயிர்த்திருக்கும்
சாரல்நாடன்
16-10-2021
பாத்திரக்கடை
தான்பட்ட
துயரத்தை அடுத்தவன் படக்கூடாது என்று நினைக்கிற மனிதர்கள் வரவர சமூகத்தில்
குறைந்துபோய்விட்டார்கள். போகிற வழியில் பள்ளம் இருக்கிறது என்பதை நாம் ஏன்
சொல்லவேண்டும். அப்படிச் சொல்வதால் நமக்கு என்ன லாபம், நான் விழுவதற்குமுன்
எவனாவது எனக்குச் சொன்னானா என்ன? நான் அதில்விழுந்து எப்படியெல்லாம் துடித்தேன் அதை அவனும் விழுந்து அனுபவிக்கட்டுமே
என்று நினைக்கிற மனநோயாளிகள் சமூகத்தில் நிறையபேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அது கும்பகோணம் பாத்திரக்கடை, கும்பகோணம்
பாத்திரக்கடை என்றால் அது கும்பகோணத்தில் இருக்கிற பாத்திரக்கடை என்று பலரும் நினைப்பது
இயற்கைதான். அது முழுதாய் எதையும் ஆராயாமல் அவசரத்தில் எடுக்கிற முடிவைப்போல தப்பாய்ப்போய்
முடியும் அது போலத்தான் இதுவும்.
கும்பகோணம் டிகிரி காப்பி என்று சாலையோரத்தில் போர்டு வைத்துவிட்டு சாலை ஓரங்களில்
தேநீர் கடைகள் நடத்துவதை பேருந்துப் பயணத்தில் கவனித்திருப்பீர்கள். அந்த தேநீர்கடையில்
விற்கப்படும் காபி கும்பகோணத்திலிருந்து கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறதா என்ன? அது
போலத்தான் அந்த கும்பகோணப் பாத்திரக்கடையும், அது சம்பந்தம் வசிக்கிற கிராமத்திலிருந்து
மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள நகரமான பல்லாவரத்தில் இருக்கிறது.
அதற்குப் பாத்திரக்கடை என்று பெயர் இருக்கிறதே
ஒழிய அங்கு வந்து பாத்திரங்களை வாங்கிச் செல்பவர்களைவிட
பாத்திரங்களை வைத்துச் செல்பவர்கள்தான் அதிகம். விவசாயிகளும் அன்றாடங்காய்ச்சிகளும்
குடிகாரர்களும் அடகுவைக்கும் அந்தஸ்தைப் பெற்றுவிட்ட
பித்தளைப் பாத்திரங்களை கொண்டுவந்து அந்தப் பாத்திரக்கடையில் அடகுவைத்துவிட்டு பாத்திரக்கடைக்காரன்
கொடுக்கிற பணத்தை வாங்கிக்கொண்டு செல்வார்கள்.
அந்தப் பாத்திரக்கடை முதலாளியின் பேச்சும்
உருவமும் சினிமாவில் வருகின்ற காமெடியன் போல இருந்தாலும் நிஜத்தில் படுகெட்டிக்காரன்.
பணம் வந்துவிட்டால் கெட்டிக்காரத்தனமும் கூடவே வந்துவிடும் என்பார்களே அதற்கு அவன்தான்
உதாரணமோ என்னவோ?
அந்தப் பாத்திரக்கடை முதலாளிக்கு ஒருமகன்
வயது ஒரு இருபது இருக்கலாம் ஆனால் அவனது உருவத்தை ஒரு மாமிசமலை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அந்த முதலாளி ஒருமுறை சம்பந்தத்திடம், “சம்பந்தம் இவன் எப்படி இருக்கிறான்
பாரு வெட்டிப்போட்டா நாலு தெருவுக்குக் கறியாகும்” என்று சொல்லி அவனை பரிகாசம் செய்தபோது
சம்பந்தம் சிரித்துவிட்டார். சம்பந்தம் சிரித்ததைப் பார்த்து அந்த முதலாளி மகனுக்கு
அப்போது கோபங்கோபமாய் வந்தது. அது இந்திரப்பிரஸ்தத்தில் பாண்டவர் கட்டிய மாய மாளிகையில்
தண்ணீர் என்று அறியாமல் தடுமாறி அதில் விழுந்துவிட்ட துரியோதனனைப் பார்த்து பாஞ்சாலி
சிரித்த கதையாகப் போய்விட்டது. சம்பந்தம் சிரித்தபோது பாத்திரக்கடைக்காரன் மகனின் முகத்தில்
அந்த துரியோதனக் கோபம் வெளிப்பட்டது. அதன் விளைவுகளை சம்பந்தம் பலநாள் அனுபவித்துவிட்டான்.
சம்பந்தத்தின் முகத்தில் இனி சிரிப்பே வரக்கூடாது என்று அந்த பாத்திரக்கடைக்கார முதலாளியின்
மகன் நினைத்தானோ என்னவோ, அந்த சம்பவத்திற்குப்பிறகு சம்பந்தத்திற்கு நிமிரமுடியாமல்
வேலை வைத்துக்கொண்டே இருந்தான்.
அந்தக் காலத்தில் பெண்ணின் கல்யாணச் சீர்வரிசையில்
பித்தளைப் பொருட்களைக் கொடுத்தனுப்புவதின் நோக்கம் இதுதானோ என்னவோ. அடகு வைக்கப் பொன்நகையோ
வெள்ளிநகையோ இல்லாத வீடுகளில் அதற்கடுத்து அந்தஸ்தைப் பெற்ற உலோகம் செப்பும், பித்தளையும்தான்
என்பது அனுபவப்பட்டவர்களுக்குத் தெரியும்.
அந்தப் பாத்திரக்கடலில்… மன்னிக்கவேண்டும்
அந்தக்கடையின் விளம்பர போர்டில் அப்படித்தான் எழுதியிருந்தது. அதனால் அப்படிச் சொல்வதில்
தவறேதுமில்லை. அந்தப் பாத்திரக்கடலில் அடகுவைத்து மீட்கமுடியாமல் மூழ்கிப்போன பித்தளைத்
தவலைகளும், செப்புத் தவலைகளும் அண்டாக்களும் ஏராளம். சில நேரங்களில் குடும்பக் குத்துவிளக்கு
எரிய, வீட்டில் எரிந்துகொண்டிருந்த குத்துவிளக்குகளும் கூட அந்தப் பாத்திரக்கடைக்கு
அடைக்கலம்தேடி வரும்.
ஒரு வகையில் அதைப் பாத்திரக்கடல் என்று
சொல்வதும் பொருத்தம்தான், வறுமைக் கடலில் தத்தளிக்கிறவன் கரைசேர அவன்வீட்டுப் பித்தளைப்
பாத்திரம் ஒரு படகு, அந்தப் படகு பலநேரங்களில் கடலிலேயேதான் கிடக்கவேண்டியிருக்கும்.
அதைப் போலத்தான் அடகு வைத்த பாத்திரமும். பல நேரங்களில் அதன் ஆயுள் அங்கேயே முடிந்துவிடுவதும்
உண்டு.
அடகு வைத்துவிட்டுப்போனவன் வீட்டைவிட்டு
தரித்திரம் போனால்தானே அவன் அதைத்திரும்ப மீட்க வருவான். அப்படி அவர்கள் வீடுகளிலிருந்து
அதுவும் போகாது தரித்திரத்தை விரட்டப் பணபலம்
என்ற அடியாள் வேண்டும். அதற்கு அவன் எங்கே போவது. அதனால் தரித்திரத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்கள்
பாத்திரத்தை மீட்க வருவதே இல்லை.
அடகுவைத்த பாத்திரத்தின் மதிப்பைவிட வட்டி
அதிகமாகிவிட்டால் அதை வந்து மீட்பதற்கு அடகுவைத்தவர்கள் ஒன்றும் மடையர்கள் இல்லை. ரொம்ப
கெட்டிக்காரத்தனமாக யோசித்து அதன்மீது வைத்திருந்த பற்றை அறவே நீக்கிவிடுவார்கள் அவ்வளவுதான்.
பொருள் இன்றைக்கு வரும் நாளைக்குப் போகும் ஆனால் உயிர் போனால் திரும்புமா என்பது அவர்களின்
அறிவார்ந்த சிந்தனை.
அந்தப் பாத்திரங்களைத் தாய்வீட்டிலிருந்து
சீதனமாய் கொண்டுவந்த மனைவி மட்டும் அடுத்தபொருளை அடகுவைக்க கணவன் எடுக்கும்போது போனமுறை
கொண்டுபோன தவலையைப்பற்றியோ அண்டாவைப்பற்றியோ கேள்வி எழுப்புவாள். கணக்கு வழக்குத் தெரியாத
அவளுக்கு அப்போதுதான் அண்டா கடலில் மூழ்கிப்போன கதை தெரியவரும். புளியைப்போட்டு பளபளவென்று
தவலையைத் தேய்த்துத்தேய்த்து தெருக்குழாயில் தண்ணீர் பிடித்ததெல்லாம் நினைவுக்கு வரும்.
அதில் முதல்முதலாக தன் அம்மா தீபாவளிப்பலகாரம் கொண்டுவந்ததும் நினைவுக்குவந்து எட்டிப்பார்த்துவிட்டுப்
போகும்.
அந்த நேரத்தில் தன் கணவனைப் போல பாத்திரங்களை
அடகுவைக்காத ஒரு மாப்பிள்ளையைத் தேடி தன் மகளுக்கு எப்பாடுபட்டாவது கட்டிவைத்துவிட
வேண்டும் என்ற எதிர்காலக் கனவும் பாத்திரங்களைத் தொலைத்த பெண்களுக்கு வந்துபோகும்.
வேறென்ன செய்யமுடியும் அவர்களால். நாட்டின் பொருளாதாரம் அவர்களை அப்படித்தான் வாழச்சொல்லிப்
பழக்கியிருக்கிறது.
சம்பந்தத்திற்கும் அந்தப் பாத்திரக்கடைக்கும்
ஒரு சம்பந்தம் இருந்தது. அவரும்கூட ஒருமுறை அந்தப் பாத்திரக்கடலில் தன்வீட்டு அண்டாவை
அடகுவைத்திருக்கிறார். ஆனால் நல்ல வேளையாக அண்டாவை மூழ்கவிடாமல் கரைசேர்த்துவிட்டார்.
சொந்தமாய் உழைக்கத் திராணியற்று அந்தப் பாத்திரக்கடைக்கு தினக்கூலி வேலைக்குப் போனார்
சம்பந்தம். முப்பத்தைந்து வயது, ஒரு மனைவி மூன்று பிள்ளைகள். மூன்று பிள்ளைகளைப் பெற்று
சாதனை படைத்துவிட்டதால் உழைப்பதிலிருந்து ஓய்வெடுத்துக்கொள்ள நினைத்தது தேகம். அதனால்தான்
சம்பந்தத்தின் மனம் செய்கிற வேலையை விட்டுவிட்டு
இந்த பாத்திரக்கடைக்குத் தாவியது. அங்கு போனபிறகுதான் இந்த சனியனுக்கு அந்த சனியனே
மேல் என்று சம்பந்தத்தை நினைக்கும்படிச் செய்துவிட்டது அந்தப் பாத்திரக்கடை உத்தியோகம்.
சம்பந்தம் வேலைக்கு வருவதாய்ச் சொன்னவுடனேயே
அந்தப் பாத்திரக்கடைக்கார முதலாளி உடனே வரச்சொன்னதற்கு ஒரே காரணம், அந்தக்கடையில் அதிகநாள்
யாரும் தாக்குப்பிடித்து வேலை செய்தது கிடையாது, வேலை செய்யவும் முடியாது. வேலை செய்ய
வந்தவனை முதலாளி, எந்திரம் என நினைத்து வேலை வாங்கினால் எப்படி?
காலை எட்டு மணிக்கு பாத்திரக்கடையைத் திறந்ததும்
இரவு எடுத்துவைத்த பாத்திரங்களை மீண்டும் ஒவ்வொன்றாகத் துடைத்து வெளியில் ஜனங்களின் பார்வையில் படுகிறபடி எடுத்து
மாட்டவேண்டும். அப்புறம் யாராவது பாத்திரம் வாங்க வந்தால் எடுத்துக்கொடுக்கவேண்டும்.
அவர்கள் வாங்கிச்சென்ற அடுத்த நொடியில் அடகு வைக்கவோ அல்லது அடகுவைத்த பொருளை மீட்கவோ
யாராவது வருவார்கள். அவர்களிடமிருந்து ரசீதை வாங்கிப் பார்த்துவிட்டு நெம்பரை சீட்டில்
எழுதிக்கொடுத்து மாடியின்மேலேபோய் தேடி எடுத்துவரச்சொல்லுவார். அப்போது அடகு வைத்து
மூழ்கிப்போன பாத்திரங்களின் கணக்கு முதலாளியின் கண்ணில்படும். அடகு வைக்க வந்தவனோ அல்லது
மீட்க வந்தவனோ போனபிறகு ரசீதுப் புத்தகத்தைப்பார்த்து மூழ்கிப்போய்விட்ட பாத்திரத்தின்
அடையாள எண்ணை சீட்டில் குறித்துக்கொடுத்து அதையும் தேடி எடுத்துவரச் சொல்லுவார்.
மீட்க வந்தால் தேடி எடுத்துவந்த பாத்திரத்தை
கொடுத்துவிட வேண்டும். மூழ்கிப்போனால் அதை சம்மட்டியால் அடித்து ஒடுக்கவேண்டும். அதுதான்
சம்பந்தத்திற்கு சவலான வேலை.
தேடிச்சென்ற பாத்திரம் தவலையாக இருந்தால்
ஓரளவுக்குப் பிழைத்துக்கொள்ளலாம். தேட வேண்டியது அண்டா என்றால் அவ்வளவுதான் தேடுகிறவன்பாடு.
தவலை தேடுவது ஓரளவுக்குச் சுலபம்தான். ஆனால், அண்டாவைத் தேடுவது திருப்பதியில் மொட்டைத்
தலையைத் தேடுவதைப்போல. அது அவ்வளவு சுலபமில்லை. அதற்கு ஒரே காரணந்தான் சிறிய தவலையாக
இருந்தாலும் தவலைக்குள் தவலையைப் போடமுடியாது அது பிறந்த அம்சம் அப்படி, ஆனால் அண்டாக்களின்
பிறப்பு அப்படியல்ல பெரிய அண்டாக்கள் சிறிய அண்டாக்கள் வந்து புகுந்துகொள்ள பெருந்தன்மையாக
இடம் தரும்.
ஜெயிலுக்குள் வரும் கைதிக்கு ஒரு எண் கொடுப்பார்களே
அப்படித்தான் அடகுக்கடைக்கு வந்த பாத்திரத்திற்கும் ஒவ்வொரு எண் மெழுகு சாக்பீஸால்
எழுதப்பட்டு கொடுக்கப்படும். அதைக்கொண்டுபோய் மாடியில் தவலைமேல் தவலையாக அடுக்கி வைக்க
வேண்டும். எவனாது மீட்பதற்காக வந்தால் அந்த எண்ணைக்கொண்டுதான் அந்த பாத்திரத்தை அடையாளம்
காணமுடியும்.
பணத்தைக்கொடுத்து மீட்டுவிட்டால் அதற்கு
மீண்டும் மறுவாழ்வு இல்லாவிட்டால் தேடிப்பிடித்து சம்மட்டியால் அடித்து அதன் வாழ்வை
முடித்துப் பாத்திரத்தை எடைக்குப் போட்டுவிடுவார்கள்.
பொருளற்றவர்களை உலகம் நசுக்குவதைப்போல
எவ்வளவு நசுக்கமுடியுமோ அவ்வளவு நசுக்கவேண்டும். இந்த நசுக்குகிற வேலையும் சம்பந்தம்
வகிக்கும் உத்தியோகத்திற்குரிய வேலைதான். அதனால் அவனுக்கு ஓய்வு தரக்கூடாது என்பதில்
குறியாக இருக்கும் அந்த முதலாளிக்கோ அல்லது அந்த முதலாளியின் வளர்ப்பில் வந்த பிள்ளைக்கோ
தோன்றினால் அடகுவைத்து மூழ்கிப்போன பாத்திரங்களை இனங்கண்டு அதைத்தேடிக்கொண்டுவந்து
சம்மட்டியால் அடித்து நசுக்கச்சொல்லுவார்கள்.
எல்லாவற்றையும் நசுக்கிமுடித்துவிட்டு
அவன் கொஞ்சநேரம் உட்கார நினைக்கிறான் என்பது அவர்களுக்கு எப்படித்தான் தெரியுமோ. அதற்குச்
சற்றும் இடங்கொடுக்காமல் ஏற்கனவே துடைத்துப் பளபளப்பாக இருக்கும் பாத்திரமாக இருந்தாலும்
அதைத் திரும்பவும் துடைத்துப் பாலித்தீன் கவரில்போட்டு அடுக்கிவைக்கச் சொல்லுவார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை வேலை செய்கிறவனுக்கு நாம் கூலி கொடுக்கிறோம் அப்புறம் எதற்கு
ஓய்வுகொடுக்க வேண்டும் என்பது அவர்களின் தர்மம்.
சம்பந்தம் தன்னை அடகுப்பாத்திரம் தேடிப்போன
இடத்தில் கொஞ்சம் ஆஸ்வாசப்படுத்திக்கொண்டால் உண்டு. இல்லாவிட்டால் அவன் நிலை இனாமாய்
கிடைத்த மாட்டை நிலாவில் கட்டி ஓட்டுகிற கதையாகப் போய்விடும். பாத்திரங்களை எடுக்கிறபோது
கவனமாக எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் சரிந்து எடுக்கிறவன்மீதே விழும். முதன் முதலாக
வேலைக்குச் சேர்ந்த புதிதில் அப்படி ஒரு அண்டாவை எடுக்கப்போனபோது மேலிருந்து உருண்டு
வந்து தன் மண்டையைப் பதம்பார்த்த அனுபவத்தை அவனால் மறக்கமுடியாது. கோழிமுட்டை அளவுக்கு
வீங்கிவிட்டது. சில நேரங்களில் அடகுப்பாத்திரம் அப்படி விழும்போது ஒடுக்காகவோ சொட்டையாகவோ
போய்விடும் ஆனால் அதைப்பற்றி அவன் கவலைப்பட்டதில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால்
பாத்திரத்தில் ஏற்படும் சொட்டைகளுக்கு தான் ஜவாப்தாரியல்ல என்று முன்கூட்டியே ரசீதில்
அச்சடித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பலமுறை பார்த்ததால் வந்த எண்ணம் அது.
அந்த நான்கைந்துநிமிட ஓய்வெடுக்கும் வாய்ப்பு
அடகுப்பாத்திரம் தேடும் இடைவேளையில் கிடைக்காதபோது அந்த வாய்ப்பை மூத்திரம் கழிக்கப்
போகும் நேரத்தில் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதற்கு அவன் கொஞ்சதூரம் நடந்து ரிஜிஸ்த்தார்
ஆபீஸ் சந்துக்குப் போகவேண்டும். அதற்காக அடிக்கடி மூத்திரம் போக முடியுமா என்ன? இவனுக்கே
செய்கிற வேலையில் அது மறந்துபோய்விடும். மூளை சற்று விழிப்படைந்து தூண்டினால்தான் உண்டு.
பசி எடுக்கிறது என்றால் அவனாகப் போய்ச்
சாப்பிட்டால்தான் உண்டு. பாத்திரக்கடைக்காரன் போய் சாப்பிட்டுவிட்டுவா என்று சொல்லுவான்
என்று எதிர்பார்த்துக் காத்திருந்தால் அப்படியே கிடக்க வேண்டியதுதான். முதலாளியின்
சிந்தைமுழுக்க தான் கொடுக்கும் நாற்பது ரூபாய் கூலிக்கு எவ்வளவு வேலை வாங்கலாம் என்பதிலேயே இருக்கும்.
காலையில் வந்ததிலிருந்து உட்கார நேரமின்றி
வேலை செய்துகொண்டே இருப்பதால் சம்பந்தத்திற்கு நேரம் போவதே தெரியாது. காலையில் எடுத்துமாட்டிய
பாத்திரங்கள் அனைத்தையும் எடுத்துவைக்க இரவு பத்துமணியாகிவிடும். கடையைப் பூட்டுவதற்குமுன்
பாத்திரக்கடைக்காரன் தான் அமர்ந்திருக்கும் இடத்திற்கு இடப்பக்கச் சுவரில் மாட்டப்பட்டிருக்கும்
வெங்கடாஜலபதி படத்தைப்பார்த்து கும்பிட்டுவிட்டு கதவைச் சாத்தி கற்பூரம் ஏற்றிவிட்டுக்
கிளம்பும்போது நாற்பது ரூபாய் கொடுப்பான். அதை வாங்கிக்கொண்டு சைக்கிளை மிதித்து வீடுவந்து
சேர இரவு 11 மணியாகிவிடும்.
இந்த எந்திர வாழ்க்கை சம்பந்தத்திற்கு
நீண்டநாள் நீடிக்கவில்லை. நீடிக்கவில்லை என்றால் அந்தப் பாத்திரக்கடைக்காரன் சம்பந்தம்
வேலைசெய்வது போதுமானதாக இல்லை என்று கருதி அவரை வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டதாக
நினைத்துக்கொள்ளக்கூடாது. தான் எவ்வளவு வேலை செய்தாலும் அந்தப் பாத்திரக்கடைக்காரனுக்குப்
பத்தாது என்பதால் இவர் நின்றுவிட்டார்.
ஆனாலும் பரிட்சை முடிந்து விடப்பட்ட விடுமுறைநாளில்
உலகப் பாடம் படித்து கரைசேரட்டுமே என நினைத்து
அந்தப் பாத்திரக்கடலுக்குள் தன் மகனை தள்ளிவிட்டாரோ என்னமோ தெரியவில்லை. சம்பந்தத்தின்
மகன் பார்த்தசாரதி பாத்திரக்கடலில் மூழ்கிப்போன தவலைகளைத் தேடிக்கொண்டிருந்தான்.
-ச. நீலமேகன்
13-08-2021
கட்டுரை: ச. நீலமேகன்
நெடுங்குன்றம் தீர்க்காசல ஈஸ்வரர் ஆலயம்
உள்ளத்தை எந்நாளும் உற்ற நெடுங்குன்றம்
வள்ளல்நம் ஈசன்மேல் வைத்துவாழ்ந்தால் – தெள்ளிய
ஞானமும்நற் செல்வமும் நானிலத்தே பெற்றென்றும்
வானவரும் போற்றவாழ் வாய்
- நெடுங்குன்றம் சிவபெருமான் துதி
குன்றுகளில் தெய்வம் உறைவதான நம்பிக்கையும் மலை உச்சிகளில் கோயில் அமைத்து வழிபடுவதும்
மிகத்தொன்மை வாய்ந்த காலந்தொட்டே தமிழர் பண்பாட்டில் பெருவழக்காக இருந்து வருகிறது.
இதற்கு ஒப்பவே மிக உயர்ந்த
நீண்ட நெடிய குன்றின் அடிவாரத்தில் மிகப்பழமை வாய்ந்த ஊரான நெடுங்குன்றம் என்ற கிராமத்தில்
எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு தீர்க்காசல ஈஸ்வரர் என்று பெயர். இச்சிவபெருமானே இவ்வூரிலுள்ள மலையின் அம்சமாக விளங்குவதாகக்
குறிப்பிடப்படுகிறது. இம்மலைக்கு வடமொழியில் தீர்க்காசலம் என்று பெயர். தீர்க்க என்ற
சொல்லுக்கு நெடிய என்றும் அசலம் என்ற சொல்லுக்கு குன்று, மலை என்றும் பொருள் எனவே,
இவ்வூருக்கு சிவபெருமானின்(தீர்க்காசலஈஸ்வரர்)பெயரால்
நெடுங்குன்றம் என்ற பெயர் அமைந்தது. இப்போது அது திரிந்து நெடுங்குணம் என வழங்கப்பட்டு
வருகிறது.
அமைவிடம்
இத்திருத்தலம் திருவண்ணாமலை மாவட்டத்தில்
தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட சேத்துப்பட்டு வட்டத்தில், வந்தவாசியிலிருந்து போளூர்
செல்லும் நெடுஞ்சாலையில் வந்தவாசியிலிருந்து இருபத்தைந்தாவது கிலோமீட்டர் தூரத்தில்
அமைந்துள்ளது. இத்திருத்தலம் வழியாகவே கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய சைவ சமய குரவரான
திருஞானசம்பந்தர் திருவண்ணாமலையிலிருந்த திருவோத்தூர் சென்றடைந்ததாக குறிப்பிடப்படுகிறது.
குன்று
இவ்வூருக்குக் கிழக்கே வானளாவிய குன்று
உள்ளது. இக்குன்றே சிவபெருமான் அம்சமாக விளங்குவதாக மக்கள் நம்புகின்றனர். இம்மலைத்தொடர்
குன்று ஒன்றில்தான் சுகர்ரிஷி தவம் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும் சிவபெருமான்
சுகர்ரிஷிக்கு வேதத்தை ஓதி உணர்த்தியதால், அம்மலையின் ஒரு பகுதிக்குச் சுகர்பிரம்மரிஷி
பர்வதம் என்ற பெயரும் உண்டு.
இம்மலையின் பாதி உயரத்தில் “கந்த பாறை
சுனை” என்ற இடத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. அப்பாறைக்குக் கீழே சுப்பிரமணியர் ஆலயம்
ஒன்று முற்றுப்பெறாத நிலையில் உள்ளது. அதில் வள்ளி, தெய்வயானை, முருகன் என மூன்று கற்றிருமேனி
சிலைகள் அஷ்டபந்தனமின்றி உள்ளன. இம்மலையின் அடிவாரத்தில்தான் ஊருக்கு ஈசான்ய மூலையில்
ஆகம விதிப்படி “தீர்க்காசலேசுவரர்” கோயில்கொண்டு எழுந்தருளியுள்ளார்.
தலபுராணம்
பராசரர்
என்ற முனிவருக்கும் மச்சகந்திக்கும் பிறந்தவர் வேதவியாசர். இவர் புத்திரப்பேறு
வேண்டி சிவபெருமானை நோக்கி யாகம் செய்வதற்குத் தீக்கடை கோல்கொண்டு கடைந்தார்.
அப்பொழுது தேவர் உலகத்தில் உள்ள அப்சரசு
என்று கூறும் 12
வேசிப் பெண்களில் ஒருவரான கிருதாசி என்பவள் வந்து
சுகம் என்னும் கிளி உருவம் கொண்டு வியாசரைக் காமத்தில் மூழ்குவித்தாள்.
காமவயப்பட்ட
வியாசரின் வீரியம் கடைந்து கொண்டிருந்த ஆரணியில் விழுந்தது அதிலிருந்து சுகர்
பிறந்தார். கிளி உருவம்கொண்ட கிருதாசிக்குப் பிறந்தவராதலால், கிளியின் முகம்கொண்டு விளங்கினார். எனவே
கிளி(சுகம்) என்னும் பொருளுடைய சுகர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.
பிறவியிலேயே
ஞானியாக விளங்கிய இவரை அணுகி நாரதர் மேலும் ஞானம் பெறுவதற்குரிய வழியைக் கூறினார்.
அதனால் அறிவுத் தெளிவு
பெற்று உலகமே மாயை என்பதை உணர்ந்தார். தந்தையான வியாசரை விட்டுப் பிரிய எண்ணி, எங்கே போகிறோம் என்று தனக்கே புரியாமல்
போய்க்கொண்டிருக்கும்போது வழியில் அப்சரசுகள் என்று சொல்லப்படும் கிருதஸ்தலை, புஞ்சிதஸ்தலை, மேனகை, சகசநியை, பிரமலோசை, அனுமிலோசா, கிருதாசி, விசுவாசி, ஊர்வசி, பூர்வசித்தி, திலோத்தமை, அரம்பை என்று 12
தேவருலகப் பெண்களெல்லாம் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தனர்.
சுகர்
அவ்வழியே நடந்து வருவதைக் கண்டும் அப்பெண்கள் எந்தவிதமான உணர்வும் இல்லாமல்
நீராடுவதிலேயே கவனமாக இருந்தார்கள். ஆனால் தன் பிள்ளையைத் தேடி பின்தொடர்ந்து
வரும் வியாசரைக் கண்ட அப்சரசுகள் அனைவரும் அவசர அவசரமாக எழுந்துசென்று சேலையை உடுத்தினார்கள்.
சுகர்
வரும்போது எந்தவிதமான சலனமும் இல்லாத பெண்கள், வியாசர் வரும்போது பரபரப்படைந்து ஆடைகளை உடுத்தியதால், சுகர் வியாசரைக் காட்டிலும் உயர்ந்தவர், உலகப் பற்றற்றவர் என்பதை நாம் அறியலாம். அப்படிப்பட்ட
சுகர் சிவபெருமானே நெடுங்குன்றாக உயர்ந்து விளங்கும் மலைச்சாரலை வந்தடைந்து
சிவபெருமானை நோக்கி தவம் செய்தார். நெடுங்குன்றே வடிவமாக விளங்கும் சிவபெருமான்
சுகர் முன் தோன்றி காட்சிதந்தார்.
சுகர் சிவபெருமான் திருவடிகளில் விழுந்து
பணிந்து எழுந்தார்.
ஆனந்தப் பரவசம் கொண்டார். “எப்பிறவியில் என்ன
பாவம் செய்தேனோ? தங்களின்
திருவடி நிழலை நீங்கி இப்பிறவி எடுத்துவிட்டேன். எனக்கு முத்திப்பேறு
அளித்தருளவேண்டும்” என வேண்டினார்.
சுகரிஷியின்
வார்த்தையைக் கேட்ட சிவபெருமான் “இந்த உலகம் உய்யும் பொருட்டும், தத்துவ ஞானமுடைய முனிவர்களும் தேவர்களும்
மகிழ்ச்சியில் ஆரவாரிக்கவும், சிறந்த
தருமதேவதை பெருமைப்படவும் திருமாலானவர் தசரத சக்கரவர்த்தியின் மூத்த மனைவி கௌசல்யா
தேவியின் மணிவயிற்றில் ஸ்ரீ ராமனாக அவதாரம் செய்துள்ளார்.
அடுத்து
ஏற்கனவே தேவர்களுக்கு திருமால் அளித்த வாக்குறுதியின்படி சக்கரத்தின் அம்சமாக
கைகேயி பரதனைப் பெற்றுள்ளார்.
இதுபோன்று சுமித்திரை ஆதிசேஷன் அம்சமாக இலட்சுமணன் என்னும் இளையபெருமாளைப்
பெற்றுள்ளார். ஓமத் தீயினின்றும் எழுந்துவந்த பூதம்தந்த அமிர்தத்திற்கு ஒப்பான
பாயசத்தை சுமித்திரை அருந்த, மீண்டும் சத்துருக்கனன் என்னும்
புதல்வனை சுமித்திரை பெற்றுள்ளாள்.
இவர்கள்
நால்வரும் உலகத்தில் சகோதர பாசத்தை விளக்கவும் அக்கிரமக்காரர்களை அழிக்கவும்
அவதாரம் செய்துள்ளார்கள். இவர்களில் ஸ்ரீ ராமச்சந்திரப் பெருமானும் இலட்சுமணனும், இலங்கைக்குச் சீதையைக் கவர்ந்துசென்ற இராவணனை
அழித்து, சீதையைச் சிறைமீட்டுக்கொண்டு
இவ்வழியாக வருவார்கள். அந்த சமயத்தில் மலைவடிவம் தரித்துள்ள என்னைச்
சேவிப்பார்கள். இங்கே தங்கியுள்ள உம்மையும் தரிசிப்பார்கள். அச்சமயம், நான்
கொடுக்கும் இந்த வேதச்சுவடியை ஸ்ரீராமபிரானிடம் கொடுப்பாயாக’! பிறகு சனகரிடம்
சென்று ஞான உபதேசம் பெற்றுக் கடைசியில் ஆகாய மார்க்கமாக சூரிய மண்டலத்தை அடைந்து, தேகத்தைத் தகித்து முக்திப்பேறு அடைவாய்” என்று
கூறி வேதச்சுவடியைச் சுகரிடம் கொடுத்தார்.
சுகர்
இறைவனைப் பணிந்து சுவடியையேற்றுக் கொண்டார். மனம் மகிழ்ந்த சிவபெருமான், “இந்த மலையில் தங்கி, நீ தவம் செய்த பகுதி சுகப்பிரம்ம ரிஷி பர்வதம் என விளங்கும்” என்றார்.
இதனைக் கேட்ட சுகர் சிவபெருமான் திருவடியில் விழுந்து வணங்கி எழுந்து “பெருமானே!
அடியேன் செய்த தவத்தின் பயனால் இம்மலையில் யான் தங்கி தவம்செய்த இடத்தை என்
பெயரால் மக்கள் குறிப்பிட்டழைக்க ஆசீர்வதித்தீர்கள். தீர்க்க - நெடு, அசலம்-குன்றம் என்ற பொருளின்படி நெடுங்குன்றாய்
எழுந்தருளியுள்ள தாங்கள், தீர்க்காசல
ஈஸ்வரர் என்ற திருப்பெயரோடு இங்கே கோயில் கொண்டு எழுந்தருள வேண்டும் உமது
சந்நிதானம் வந்து வழிபடும் மக்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ அருள் பாலிக்க
வேண்டும்” என்றார்.
சிவபெருமானும்
“உம் விருப்பப்படியே ஆகட்டும்” என்று கூறி தீர்க்காசல ஈஸ்வரர் என்ற திருப்பெயரோடு
சிவலிங்க வடிவில் காட்சிதந்தார். சுகர் அக்காட்சியைக்கண்டு வணங்கி பின்
சிவபெருமான் கட்டளையை நிறைவேற்ற ஸ்ரீராமன் வரவை எதிர்பார்த்து மீண்டும் தவத்தில்
ஆழ்ந்தார்.
அவ்வாறே
இராமன் சில காலத்திற்குப்பின் இராவணனை அழித்து சீதையைச் சிறைமீட்டுக்கொண்டு
அயோத்திக்குச் செல்லும்போது நெடுங்குன்றத்தே கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள
தீர்க்காசல ஈஸ்வரரை வணங்கினார். பின் தன் வரவை எதிர்பார்த்து மலையில் தவம்
செய்துகொண்டிருந்த சுகரின் ஆசிரமத்திற்குச் சென்று அவரின் திருவடிகளைப் போற்றி வழிபட்டார். சுகரும் இராமனுக்கு ஆசிவழங்கி சிவன் தந்த
வேதச்சுவடியை கொடுத்தார். பின் சுகர் இராமபிரானிடம் வேண்ட இராமனும்
நெடுங்குன்றத்தில் கோயில்கொண்டு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாய் சீதை, இலட்சுமணன் மற்றும் அனுமனுடன் எழுந்தருளினார். சுகரும் சிவன் கூறியபடியே சென்று முக்தியடைந்தார். என்பது இத்தலம் குறித்து
குறிப்பிடப்படும் புராணச் செய்தியாகும்.
மன்னர்கள்
செய்த திருப்பணிகள்
இவ்வாலயத்திற்கு நாயக்க மன்னர்களின் வழியினரான,
திரிபுவனச் சக்கரவர்த்தி, சுந்தரபாண்டியன் அச்சுத விசய ராகவ நாயக்கர், கிருஷ்ண தேவராயர்,
வீரவேங்கடபதி முதலிய மன்னர்களின் காலங்களில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இக்கோயிலில் அன்றாடத் திருப்பணிக்கு கொடை கொடுத்தவர்கள் பற்றிய கல்வெட்டுக்கள்
சிலவும் காணப்படுகின்றன.
காட்சிதரும்
தெய்வங்கள்
இக்கோயிலின் நுழைவாயிலின் வலப்புறம் விக்கினங்களைத்(இடையூறு)
தீர்க்கும் விக்கினேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இடப்புறம் வள்ளி தெய்வயானையுடன் ஆறுமுகப்
பெருமான் காட்சி தருகிறார். மேலும் விநாயகப் பெருமான், ஐயப்பன், வெங்கடேசப் பெருமாள்,
ஆறுமுகப்பெருமான், வில்வமரத்தின் கீழ் உமையவளோடு கூடிய சிவபெருமான் ஆகிய சந்நிதிகள்
சமீப காலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. வடக்குப்புற மதில் சுவரின் மாடத்தில் துர்க்கை தேவியும்
அதற்கு எதிரில் சண்டிகேஸ்வர நாயனாரும் வீற்றுள்ளனர்.
விழாக்கள்
இக்கோவிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரிவிழா வெகு சிறப்பாகப் கொண்டாடப்படுகிறது.
ஆடிக் கிருத்திகையின்போது முருகப் பெருமானுக்குப் பெரிய அளவில் திருவிழா நடக்கிறது.
அத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் முதுகில் மாட்டிக்கொண்டு கொக்கித்தேர் இழுத்தும்.
அலகு குத்திக்கொண்டும், காவடி எடுத்தும் எலுமிச்சைப்
பழங்களை உடலெங்கும் குத்திக்கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அதைபோல் இவ்வூரில் எழுந்தருளியுள்ள
வைணவக் கடவுளான ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள்
திருக்கோயில் உற்சவத்தின் பத்தாம் நாள் திருவிழாவில் தீர்க்காசல ஈஸ்வரர் இந்திர விமானத்தில்
எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இவ்விறைவனைப் போற்றி நெ.ப. சுந்தரேசன் என்பவர் பல்வேறு பதிகங்களையும், இரட்டை
மணிமாலை, திருத்தாண்டகம், நெடுங்குன்றம் சிவவெண்பா முதலான பல்வேறு பாமாலைகளைப் பாடியுள்ளார்.
இவற்றை ஒன்றுதிரட்டி நெடுங்குன்றம் தலவரலாறும் திருப்பதிகமும் என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார்.
நற்கதி பெற்றுமே
நானிலத்தில் எல்லாரும்
பொற்புடன் வாழப்
புவியினிலே – அற்புதஞ்சேர்
நீள்நெடுங்குன்
றசிவனே நீங்கா திருந்துநின்
தாள்பணிந்தார்
வாழ்வார் தழைத்து.
***
துணைநின்ற நூல்:
நெ.ப.சுந்தரேசன், நெடுங்குன்றம் தலவரலாறும்
திருப்பதிகமும், விமலன் பதிப்பகம், செய்யாறு, 2010.
பஞ்சம்
தனிமனிதப்
பிரச்சனையாக இருந்தால் ஒதுங்கிக்கொள்ள நினைக்கிற மனிதர்கள், அதுவே எல்லோருக்குமானதாக
இருக்கிறபோது எல்லா வேறுபாடுகளையும் மறந்து ஒன்று கூடிவிடுவார்கள். பிரச்சனை
தீர்ந்தபிறகு பெரும்பாலும் நாய்வாலை நிமிர்த்த முடியாது என்ற கதைதான். இதுதான்
சமூகத்தின் இயல்பு. புரட்சிகளின் வரலாற்றையும் போராட்டங்களின் பின்னணியையும்
புரட்டிப்பார்த்தால் இது புரியும்.
அந்த
வருடம் வானத்திற்கு பூமிமீது என்ன கோபமோ தெரியவில்லை. ஒரு துளி மழை கூட பெய்யக்கூடாது
எனக் கங்கணம் கட்டிக்கொண்டது. சுயநலச் சாக்கடையின் நறுமணத்தில் மயங்கி உறங்கிக்கொண்டிருப்பவர்களை
எழுப்ப வேண்டும் என்பதற்காகவும், இருக்கிற கிணறுகளை தூர்வார
வேண்டும் என்பதற்காகவும் வானம் துணிந்து இந்த முடிவை எடுத்ததோ என்னமோ ஒன்றும்
புரியவில்லை. ஏரி, குளம், குட்டை, கிணறு என அனைத்திலும் அந்த வருடம் நீரின்றி வறண்டு கிடந்தது. ஆடு மாடுகளைப் போல
மனிதர்களும் தண்ணீருக்காக அலைந்து திரிந்தார்கள்.
தெருக்
குழாய்களில் ரொம்பநாளாகத் தண்ணீர் வரவில்லை. எங்கும் தண்ணீர்ப் பஞ்சம். ஊரில் இருக்கிற கிணறுகளில் எல்லாம்
இருக்கிறவன் இல்லாதவன், ஆனவன் ஆகாதவன் என்று அத்தனை பேரும் ஒன்றுகூடி அந்தந்தப்
பகுதிகளில் இருந்த கிணறுகளைத் தூர்வாரி சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள்.
பல
ஆண்டுகளாக தூர்வாராமல்கிடந்த கிணற்றிலிருந்து தூர்வாரிக் கொட்டியபோது சேறும்
சகதியும் மலையாய்க் குவிந்தது. கூடவே பல ஆண்டுகளுக்குமுன் பல்வேறு சமயங்களில் கிணற்றில் தவறி விழுந்து எடுக்கமுடியாமல்போன பித்தளைத் தவலை, எவர்சில்வர் குடம், ராட்டினம், அலுமினியக் குண்டான், தாம்புக்கயிறு அறுந்து கிணற்றில் விழுந்துவிட்ட
தோண்டிகள், இப்படி இவை மட்டுமில்லாமல் செருப்பு, கண்ணாடி பாட்டில்கள் எனப் பலவும் கிடைத்தன. பல
ஆண்டுகள் அவை தண்ணீரிலும் மண்ணிலும் மூழ்கிக்கிடந்ததால் பலவும் அரித்துப்போய்க் கிடந்தன.
சமீபகாலத்தில்
விழுந்து பழுதாகாமல் கிடைத்த தோண்டிகளும் தவலைகளும் கிடைத்தபோது
அதன் அங்கஅடையாளங்களைச் சரியாகச்சொல்லி உரிமைகோரி வந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தோண்டியில் வேணுகவுண்டர் என்ற தன் மாமனாரின் அப்பா பெயர் இருந்தும்
பரிமளம் வீட்டுத்தோண்டியை செங்கத்தாள் தூக்கிக்கொண்டு போய்விட்டாள் அவள்
வீட்டுக்கு எத்தனையோமுறை போய் கேட்டும் இல்லவே இல்லை என்று சாதித்து
மழுப்பிவிட்டாள்.
நான்கு
வருடத்திற்கு முன் பரிமளத்தின் மகள் தெருக்கிணற்றில் தண்ணீர் சேந்தும்போது தாம்புக்கயிற்றின் முடிச்சு அவிழ்ந்ததால் விழுந்த தோண்டி அது. மூன்றாவதாகப்
பிறந்தவன் கைக்குழந்தையாக இருந்தபோது
பரிமளம் அவளைத் தண்ணீர் சேந்த அனுப்பியபோது
தோண்டியைக் கிணற்றில் தவறவிட்டு அழுதுகொண்டேவந்து சொன்னதும், சின்னப்பிள்ளையை அடிக்க மனமில்லாமல் ஆசாரி வீட்டிலிருந்து
பாதாளக்கொலுசுபோட்டு துழவிப் பார்த்தும் அகப்படாமல்போன தோண்டி அது அதற்கப்புறம்
நான்கு வருடங்கள் கழித்து இந்த பஞ்சத்தில் தூர்வாரியபோது
துருப்பிடிக்காமல் கிடைத்த அதைப் பார்த்துவிட்டு பரிமளத்தின் மூத்தமகன் சந்திரன்தான் ஓடிப்போய் அம்மாவை அழைத்துவந்தான். அதெல்லாம் முடிந்துபோன பழைய
கதை.
இப்படி
தூர்வாரி முடித்த கிணறுகளில் தவலைகள்
வரிசையாகத் தண்ணீருக்காகத் தவம் கிடந்தன. கிணற்றில் நீர் ஊற
ஊற அவரவர் முறை வரும்போது பக்கவாட்டில் அறுத்து துளையிட்ட பிளாஸ்டிக்கேனைக் கட்டி கிணற்றில்விட்டு கொஞ்சகொஞ்சமாய் மொண்டுகொள்ள வேண்டும்.
அதற்காக பழங்காலத்தில் வீட்டுக்கு ஒரு ஆண்மகன் போருக்குப் போவதாய்ச் சொல்வார்களே அதைப்போல, தண்ணீர் சேந்தி எடுத்துவர தங்கள் முறை எப்போது
வரும் என்பதை அறிய வீட்டுக்கு ஒருவர் கிணற்றடிக்குப் போகவேண்டும். இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால் போருக்கு ஆற்றல் வாய்ந்த வீரர்கள் செல்வார்கள். ஆனால், கிணற்றடிக்கு
கருத்துதெரிந்த குழந்தையோ தலைநரைத்த கிழவியோகூட போதும், அவர்கள்
தங்கள் முறை எப்போது வருகிறது என்பதைப் பார்த்து வீட்டில் வேறு
வேலையாகக் கிடக்கும் அப்பாவையோ, அம்மாவையோ, அல்லது மகனையோ மருமகளையோ அழைத்துவர வேண்டும்.
கிணற்றிலிருந்து
மட்டுமல்லாமல் நெடுந்தொலைவில் பக்கத்து ஊர்களில் இருந்த போர்களில் இருந்தும்கூட தண்ணீர் எடுத்துவர சைக்கிளில்
பிளாஸ்டிக் குடத்தைக் கட்டிக்கொண்டு இளந்தாரி ஆண்கள் கிளம்பிவிடுவார்கள். தண்ணீர்ப் பிரச்சனையைப் போக்க நீர் வற்றிக் கிடக்கும் குளத்துக்கு நடுவிலும், ஏரியின் நடுவிலும் புதிதாக
போர்போட்டு கைப்பம்பை மாட்டிவிட்டிருந்தார்கள்.
அதில் தண்ணீர் பிடிப்பதற்காக அந்தக் கைப்பம்பிலுள்ள
இரும்புத் தண்டை மேலும் கீழும் அசைத்து ஆட்டும்போது அது மேலும்
கீழும் இடிக்கும் சத்தம் ‘டங்குடங்கென்று’ இரவும் பகலும் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தது.
ஆண்களில்
பலர் ராத்திரி வேளையில் திறந்தவெளியில் குளத்துக்கு நடுவே இருக்கும்
போரில் தண்ணீரை அடித்து தூரமாய்க் கொண்டுபோய் வியர்வை
நாற்றம்போக குளித்துக்கொள்வார்கள். அப்படியே அழுக்குத் துணிகளையும் துவைத்துக்கொள்வார்கள். இதனால் அல்லும் பகலும் அந்த
வறண்ட பெரிய குளத்தில் ஜன நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும்.
ஊரில் பஞ்சம் ஏற்பட்டு
உயிர்வாழ தண்ணீர் அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டதும்
இது மேல்சாதிக்காரன் கிணறு இது கீழ்ச்சாதிக்காரன் கிணறு என்று சாதி மயிரைப்
பிடித்துக்கொண்டு தொங்கிக் கிடந்தவனெல்லாம் அடையாளம் தெரியாமல் போனான்.
சேரிப் பகுதியிலிருந்து ஊர்ப்பகுதியில்
வாழ்ந்த மக்கள் தண்ணீர் கொண்டு போனார்கள். சில நேரங்களில் சேரிமக்கள்
ஊர்ப்புறத்திலிருந்து வந்தவர்களுக்கு தண்ணீர் சேந்திக்கொடுத்து உதவினார்கள்.
வானம்
பொய்த்துப்போய்விட்டதால் பயிர்பச்சைகளைக் கண்ணால் பார்ப்பதே அரிதாகப் போய்விட்டது. எட்டும்தூரம்வரை எங்கும் வறட்சியே கண்ணில்பட்டது. அதிலும் ஆடுமாடு வைத்திருப்பவர்கள்
பாடுதான் பெரும்பாடாகப் போய்விட்டது. பசும்புல் ஒன்றும்
தலைகாட்டாது போகவே மாடுகள் புற்களைத்தேடி அலைந்தன. வசதியுள்ளவர்கள் வெளியூர்களிலிருந்து வைக்கோலை விலைகொடுத்து வாங்கி
வண்டிகளில் ஏற்றிவந்து தங்கள் வீடுகளிலிருக்கும் மாடுகன்றுகளுக்குப் போட்டார்கள். மேய்ச்சல் நிலத்தையே நம்பிக்கிடந்தவர்களின் வீட்டு
ஆடுமாடுகள் தீனி கிடைக்காமல் அலைந்தன.
அவர்கள் புற்களுக்குப்
பதிலாய் மாடுகன்றுகளுக்கு மரத்திலிருந்து இலை தழைகளைக் கழித்துக் கொண்டுவந்துபோட்டார்கள். வேப்பந்தழை, ஆலயிலை,
அரச இலை, புங்கந்தழை, மாங்கொத்து, தென்னங்கீற்று இப்படி வாய்ப்புள்ள அனைத்தும் கால்நடைகளுக்கு உணவானது.
இந்த பஞ்சகாலத்திற்குச்
சமீபத்தில்தான் ஒரு பசுமாட்டை வாங்கிவிட்டால் குடும்பச் செலவுகளை எப்படியாவது சமாளித்துக்கொள்ளலாம்
என்ற நப்பாசையில் கூட்டுறவு வங்கியில் விவசாயக் கடன் வாங்கி ரொக்கமாகக் கிடைத்த நாலாயிரத்தையும்
உரத்தை விற்றுக் கிடைத்த மூவாயிரத்தையும் கொண்டு ஏழாயிரம் ரூபாயில்
தனக்குத் தெரிந்த மாட்டுத்தரகு பார்க்கும் உறவினர் மூலமாக ஒரு
பசுமாட்டை வாங்கினாள் அந்தத்
தோண்டிகேட்டுத் தோற்றுப்போன குபேரகவுண்டரின் மனைவி பரிமளம்.
வாங்கிவந்த
பசு பார்க்க உருவத்தில் பெரிதாக இருந்தது. ஆனால் அதன் மடி அந்த பெரிய உருவத்துக்கு பொருத்தமானதாக இல்லை. கலப்பினப் பசுவைப்போலவும் இல்லை
பார்க்க நாட்டுப் பசுமாடாகவும் தோன்றவில்லை. எது எப்படியோ கன்று கிடாரிக்கன்றாக இருந்ததில்
பரிமளத்துக்கு மன நிறைவாகத்தான் இருந்தது.
வாங்கிவந்த புதிதில் காலையில் 5 லிட்டரும்
மாலையில் நான்கு லிட்டரும் பால் கறந்தது.
பசுமாடு வந்ததிலிருந்து குபேரன்
வழக்கமாகப் போகும் கூலி வேலைக்கு ஒழுங்காகப் போவதில்லை. பரிமளம்தான் மாட்டை ஓட்டிக்கொண்டுபோய் காடு கரம்புகளில் மேய்ப்பாள். மாலையில் வரும்போது
வயல் வரப்புகளிலிருந்து அன்றாடம் புல் அறுத்து பழைய கித்தானில் கட்டி தலையில் தூக்கிவருவாள். பள்ளி விடுமுறை நாட்களில்
பசுவை மேய்ப்பது சந்திரன் பொறுப்பு. அந்தப் பசுவிற்கு மட்டுமா அல்லது எல்லா
மடுகளுக்கும் அப்படித்தானா என்று தெரியவில்லை. வருஷமெல்லாம் விட்டுவிட்டு முழு
ஆண்டுப் பரிட்சைக்கு கடைசி நேரத்தில் விழுந்துவிழுந்து படிக்கிற பிள்ளைகளைப்போல பொழுதுபோன
நேரத்தில்தான் மாய்ந்துமாய்ந்து மேயும். ஆனாலும் அதன் வயிறு வீங்க மேய்ப்பதில்
சந்திரனுக்கு ஒரு மனநிறைவு கறவல் நின்றுபோன அந்த நாட்களில் நன்றாக இருட்டிய
பிறகுதான் பசுவை வீட்டுக்கு ஓட்டிச்செல்வான்.
பசுவிற்குத் தினந்தோறும் நான்கு வீடுகளிலிருந்து
கொண்டுவந்த கழுநீர்த்தண்ணீரில் கடலைப்புண்ணாக்கை ஊறவைத்து ஊற்றி தண்ணீர்
காட்டவேண்டும். இல்லாவிட்டால் சரியாகப் பால் கறக்காது.
கடையிலிருந்து வாங்கிவரும் கடலைப் புண்ணாக்கை சட்டியில் ஊறவைத்து களைந்து மாட்டுக்கு ஊற்றும்போது
மண்ணும் கல்லும் அடியில் தேங்கி நிற்கும் லாபம் சம்பாதிக்க விற்பவன் செய்கின்ற
கலப்படக் கலை அது.
பால்
வியாபாரி எட்டு ரூபாய் லிட்டருக்கு வீட்டுக்கே வந்து பாலை வாங்கி தெருவில் பத்துரூபாய்க்குச் சில்லரையாகப் பால் வாங்குபவர்களுக்கு விற்பார்.
பால்
கறக்கும் கறவைக்காரனுக்கு கறவைக்கூலி மாட்டுக்காரர்தான் கொடுக்கவேண்டும். அதை
வாராவாரம் பால்பட்டுவாடா செய்யும்போது பால்வியாபாரி பிடித்தம் செய்துகொண்டு
கொடுப்பார். அப்படி வாராவாரம் கொடுக்கும் கறவல் பணத்தை ஒரு முறைகூட பரிமளத்தை வாங்கவிட்டதில்லை குபேரன். தான் ஆண்
என்பதிலுள்ள ஆணவம் அது. “பொம்பளகிட்ட என்ன துட்டு வேண்டிக்கிடக்கு” என்பது
குபேரனின் எண்ணம்.
இரண்டு
மாதம் கழிந்த பிறகு பசு காலையில் மூன்று லிட்டரும் மாலையில் இரண்டுலிட்டரும்தான்
கறந்தது. பால் கறப்பது குறைந்துபோகவே குபேரன் புண்ணாக்கு போட்டு கட்டுப்படியாகாது
என்று குருட்டுக்கணக்குப்போட்டு மாட்டுக்குப்
புண்ணாக்குப் போடுவதை விட்டுவிட்டான். புண்ணாக்கு போடாததால் சுரந்து கட்டுப்படியாகாது
என்று பசு விட்டுவிட்டதோ என்னமோ? தெரியவில்லை. காலையில் இரண்டு லிட்டர் மாலையில் ஒன்று
அல்லது ஒன்றரை லிட்டர் எனப் பால் கறப்பது முற்றிலும்
குறைந்து விட்டது.
“தரகுக்காரன் உன்ன நல்லா ஏமாத்திட்டான்
மாடு வேணாவேணான்னு சொன்னேன் கேட்டியா?” என்று குபேரன் பரிமளத்திடம் அன்றாடம் சண்டை போடுவதும்,
“சொல்லச் சொல்ல மதிக்காம பேங்கில் லோன் வாங்கி என்னைக் கடனாளி ஆக்கிட்டயேடி” எனப் புலம்புவதும்
அவனுக்கு வாடிக்கையாகிவிட்டது.
காட்டுக்குப்
புல் அறுக்கப் போகும்போதெல்லாம் தன் எண்ணம் ஈடேறாமல் போய் விட்டதை எண்ணி வருந்திக்
கொண்டே புல்லுக்கட்டை கொண்டுவந்து சேர்ப்பாள். மாடு சினைப் பருவத்துக்கு வந்ததும் பால் கறப்பது
அறவே நின்றுவிட்டது.
மழை
பெய்யாமல் வானம் பொய்த்துப்போகவே அன்றாடம் ஓட்டிக்கொண்டுபோய் கரம்பில் கட்டிவிட்டு வருவதும்
தொடர்ந்து பயனற்றதாகப் போய்விட்டது. தொடர்ந்து
கரம்புகளில் தரையோடு தரையாகக் கிடக்கும் காய்ந்த புற்களைப் பசு நுனிப்பல்லால் தடவிக்கொண்டிருந்தது.
தண்ணீர் இல்லாமல் விவசாயம் நின்றுபோனதால் வைக்கோலும் கடலைக்கொடியும் மாடுகளுக்குக்
கிடைக்காமல் போய்விட்டது.
ஊரிலுள்ளவர்கள்
எல்லோரும் செய்வதைப் போல பரிமளத்தின்
மூத்த மகன் சந்திரனும் தன் தாய் படும் கஷ்டத்தை தாங்காது ஆலமரத்தில் ஏறி ஆலம்
இலைகளைக் கொத்துகொத்தாக வெட்டிக் கொண்டுவந்து பசுவுக்கும் கன்றுக்கும் போட்டான்.
சில நேரங்களில் வேப்பந் தழைகளையும் மாங்கொத்துக்களையும் ஒடித்துக்கொண்டுவந்து போடுவதும்
உண்டு. பரிமளம் மாலை நேரத்தில் ரேஷன் அரிசியில் கஞ்சி காய்ச்சி மாட்டுக்கு ஊற்றுவாள்.
அன்னக்கூடையில் ஊற்றிய கஞ்சை பசு குடிக்கும்போது கன்றும் வாய்வைக்கும் ஆனால்
பசுவோடு போட்டிபோட முடியாது அதனால்
கன்றுக்கு தனியே கஞ்சியை வைப்பாள்.
உச்சி
வெயில் காயும் மத்தியான நேரத்தில்
மாட்டை அவிழ்த்து தண்ணீர் காட்ட
போகும்போது எதிரே வரும் பரிமளத்தையோ சந்திரனையோ ஆவலோடு தலையைத் தூக்கிப்
பார்க்கும் அந்த காட்சி பார்ப்பதற்கு ஊரிலிருந்து வரும் தாயை ஆசையோடு
எதிர்நோக்கும் குழந்தையின் எதிர்பார்ப்பைப்போன்று சந்திரனுக்குத் தோன்றும்.
அப்படி
கரம்பில் கட்டியிருந்த பசுவை அன்றைக்கு மாலை அவிழ்க்கப் போனபோது அந்தச் சினைப்பசு கன்று ஈனப்
பார்த்துக்கொண்டிருந்தது. அதை சந்திரன் அருகே போனபோதுதான் கவனித்தான். சூதகத்திலிருந்து கன்றின் இரண்டு கால்கள் வெளியில் தெரிந்தது. என்னசெய்வதென்று தெரியாமல் அதை மெதுவாக அப்படியே வீடுவரை ஓட்டிக் கொண்டு வந்துவிட்டான்.
பசு நடந்துவரும்போது கன்றின் கால்கள் உள்ளே போயிருந்தது.
கொட்டகையில்
கொண்டுவந்து கட்டியதும் பசு மீண்டும் கன்றை ஈன முயன்றது. வயிற்றில் ஒன்றும்
இல்லாததால் பசுவால் கன்றை ஈனமுடியவில்லை. பரிமளம் அதைப்பார்த்து அழுதே போய்விட்டாள்.
மூன்று பிள்ளைகளைப் பெற்ற பெண்ணல்லவா பிரசவத்தின் வலி தெரியாதா என்ன? வாயில்லா
ஜீவனாச்சே இந்த வறுமைப்பட்ட வீட்டில் வந்து இப்படி துன்பப்படுகிறதே என்று பதைத்தாள்.
குபேரன் எதற்கும் அசைவதாய் இல்லை. குபேரன் என்று பெயர் வைத்துக்கொண்டு வைக்கோல் கடன்
கேட்டால் பொருத்தமாக இருக்காது என்று நினைத்தாரோ என்னவோ!. பிடித்துவைத்த பிள்ளையாரைப்போல
இருந்த இடத்தைவிட்டு அசையாமல் கிடந்தார்.
கொஞ்சம் வயிற்றுக்கு ஏதாவது ஊற்றினால் பசு கன்றை ஈன்றுவிடும்.
உடனே பழங்கலத்திலிருந்த ரேஷன் அரிசியை எடுத்து அலுமினியக் குண்டானில் ஊற வைத்துவிட்டு,
கண்ணாயிரம் அண்ணன் வீட்டுக்கு ஓடிப்போய் “அண்ணா பசு தீனி
இல்லாம ஈன முடியாமத் தவிக்குது ஒரு பிணை வெக்கில் குடுண்ணா” என கெஞ்சினாள். பரிமளத்தின்
தவிப்பைப்பார்த்து கண்ணாயிரத்தின் மனைவி போரிலிருந்து கொஞ்சம் வைக்கோலை பிடிங்கிக்
கட்டிக்கொடுத்தாள். கொண்டுவந்த வைக்கோலை மாட்டுக்குப் போட்டுவிட்டு ஊற வைத்துவிட்டுப்போன
ரேஷன் அரிசிக்கு உலை வைத்து கஞ்சிகாய்ச்சி ஊற்றினாள்.
குடித்து
முடித்த அரைமணி நேரத்தில் பசு பின்னங்காலை நன்கு ஊன்றி முதுகை வளைத்துக்கொண்டு கன்றை
மெதுவாக வெளித்தள்ளியது. முன்னங்காலும் தலையும் வெளியேவந்து தொங்கிய சில நொடிக்குள்
கன்று முழுதாய் தொப்பென்று மண்ணில் வழுக்கிக்கொண்டு விழுந்தது.
பனிக்குடத்திலிருந்து
வெளிவந்த நீர் கன்றுபோட்ட இடத்தில் தரையில் தேங்கிக்கிடத்தது. தொப்புள்கொடி இன்னும்
அறுபடவில்லை. கன்றின் அருகே போனால் பசு முட்ட வந்தது. அது தன் நாவினால் நக்கி கன்றின்மேல்
இருந்த வழுவழுப்பை சுத்தம் செய்தது. கொஞ்ச நேரத்தில் குழந்தையைத் தாய் குளிப்பாட்டி
தலைதுவட்டி விடுவாளே அதுபோல தன் கன்றைப் பசு நாவினாலேயே நக்கி குளிப்பாட்டிவிட்டது. கிடாரிக்கன்று
பசுவைப்போலவே செவலை நிறம் கன்றின் நெற்றியில் வெள்ளைமுடி பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.
பசுவின்
சூதகத்திலிருந்து உடுப்பு முழுதாக விழாமல் தொங்கிக்கொண்டிருந்தது. பசு அதைத் தின்றுவிடாமல்
பார்த்துக்கொள்ள சந்திரன் காவல் இருந்தான். அந்த உடுப்பை பழைய கிழிந்த கோணியில் வைத்து
சுற்றிக்கட்டி அதை எடுத்துப்போய் பால்மரத்தில்
கட்டினால் நன்றாகப் பால் கறக்கும் என்பது நம்பிக்கை. ஒரு மணி நேரத்துக்குப்பிறகு உடுப்பு விழுந்துவிட்டது.
அதை மாடு தின்னாமல் கோலினால் தள்ளி கோணிக்கித்தானில் சுருட்டி கயிற்றினால் கட்டி காக்கைகள்
கொத்தாமல் பத்திரப்படுத்தி வைத்துவிட்டான்.
கொஞ்ச
நேரத்துக்கெல்லாம் தன் இளம் கால்களை ஊன்றி எழுந்து நின்ற கன்று பால் குடிக்க பசுவின்
மடிதேடியது. நாவினால் நக்கி பசு தன் கன்றுக்குப்
பால்கொடுத்தது. மடி தேடி பால் குடிக்கும் அறிவை இயற்கை உயிர்களிடத்தில் எப்படித்தான்
படைத்ததோ என்று சந்திரன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.
மூன்று
பிள்ளைகளைப் பெற்ற பரிமளத்துக்கு தன் வாழ்நாளெல்லாம் கன்று ஈனுவதையும் பால்
தருவதையுமே பிறவிக் கடனாகக் கொண்டுவிட்ட
பசுவின் வலி தெரியாமலா இருக்கும். தீனி இல்லாமல் பசு துன்பப்படுவதை பரிமளத்தால்
பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வறட்சி காலத்தின் கோலமாக இருந்தாலும், தான் ஏதோ
செய்யக்கூடாத பாவத்தைச் செய்துவிட்டதாக மனம் துடித்தாள்.
இந்த
வறட்சி காலத்தில் உள்ளூரில் மாட்டை விற்க முடியாது. அப்படியே யாராவது வாங்க வருவதாக
இருந்தாலும் வலிந்து வாங்கிக்கொள்ளும்படிச்
சொன்னால் அடிமாட்டு விலைக்குத்தான் கேட்பார்கள் என்ன செய்வதென்று யோசித்த பரிமளம்.
பழங்கலத்தில் மீதமிருந்த நொய்யரிசியில் பசுவுக்கு கஞ்சி காய்ச்சி வைத்துவிட்டு, தன்
தாய்வீட்டுக்குக் காலை 5 மணி வண்டிக்கே புறப்பட்டுப்போய்விட்டாள். அது ஆற்றங்கரையோரம்
உள்ள ஊர். அங்கு தண்ணீருக்குப் பஞ்சமில்லை நெல்லும் கரும்பும் விளைகின்ற பூமி. யார் யாரிடமோ பேசி பக்கத்து ஊரான பாலூரில் இருக்கும் வெல்லவியாபாரி கிருஷ்ணமூர்த்திக்கு ஆறாயிரம் ரூபாய்க்கு விற்றுவிட முடிவு
செய்தாகிவிட்டது.
மத்தியானம்
ஊரிலிருந்து திரும்பி வந்த பரிமளம் தகவலைச் சொன்னாள். உடுப்பைக் கொண்டுபோய் சுடுகாட்டில் உள்ள ஆலமரத்தில் கட்டிவிட்டுவந்திருந்த சந்திரனுக்கு
அவன் அம்மா சொன்ன செய்தி வருத்தத்தைத் தந்தது. ஆனால்
குபேரனுக்கோ பசுவை வாங்கிய விலைக்கும்
குறைவாய் நஷ்டத்திற்கு விற்கிறோமே என்பதை நினைத்துப் பரிமளத்தின்மீது வெறுப்பை
உமிழ்ந்தான். மேலும்மேலும் திட்டித்தீர்க்க வார்த்தைகள் கிடைக்காமல்
அமைதியானான்.
ஆனால்
பரிமளத்தைப் பொறுத்தவரை அவள் கண்முன் நின்றது பசுவின் பசி. மாட்டுக்கு நான்கு
வயிறு இருப்பதாக அவள் பாட்டி சொன்னது அவளுக்கு அடிக்கடி நினைவுக்கு வந்தது. ஒரு வயிறு
இருக்கிற நமக்கே இத்தனை பசி என்றால் நான்கு வயிறு இருக்கும் மாட்டுக்கு எந்த அளவுக்கு பசி இருக்கும் என்பதை
நினைத்துப்பார்த்தே அதன்
பசியை எப்படியாவது போக்கிவிடவேண்டும் என்பதில் ஒரே குறியாக இருந்தாள். அது தீனி இல்லாமல்
பசியோடு இருக்கும் ஒவ்வொரு கணமும் அவளுக்கு நெருப்பில் நிற்பதைப்
போல இருந்தது. அதனால்தான் அவள் இந்த அவசர முடிவுக்கு வந்தாள். எப்படியாவது உழைத்துப்
பிழைக்கவேண்டும் என ஆசைப்பட்ட அவளைக் காலம் ஏமாற்றிவிட்டது.
மாலை ஆறு மணிக்கெல்லாம்
பசுவை ஏற்றிச் செல்ல வேன் வந்துவிட்டது. அப்போதான் அரிசிக் கஞ்சியை குடித்துமுடித்து
தன் கன்றுக்கு மடியில் சுரந்த பாலை ஊட்டக் கொடுத்தது பசு.
கன்று
குடித்துமுடித்து மடியில் சுரந்த சீம்பாலை சந்திரன் கறந்துகொண்டிருந்தான் ஒரு
சொம்பு பால் இருக்கும் கறந்து முடிக்கும்போது குபேரன் குறுக்கே வரவே மிரண்டு போன
மாடு எட்டி உதைத்தது. மாட்டின் கால் பட்டு குண்டுசெம்பில் இருந்த சீம்பால் மண்ணில்
ஊற்றிக் கொண்டது. குபேரன் சந்திரனைப் பார்த்து “துப்புகெட்ட பயலே ஒரு சொம்பு
பால புடிக்க துப்பில்லையா” என்று
திட்டிக்கொண்டே வெறுப்பில் வெளியே போய்விட்டார்.
பசுவையும்
கன்றையும் வேனில் ஏற்றும்போது மணமாகி புகுந்தவீட்டுக்குப் போகும் பெண்ணைப்
பார்த்துத் தாய் அழுவாளே அந்த மனநிலையில்
இருந்தாள் பரிமளம்.
போகும்போது
தீனிக்கு அலைந்த பசுவுக்கு வேனை நிறுத்தி சாலையோரம் கிடந்த வைக்கோல் போரிலிருந்து
கொஞ்சம் வைக்கோலைப் பிடுங்கிவந்து போட்டுவிட்டு
வேனைக் கிளப்பி பாலூர் போய் சேரும் போது
இரவு எட்டு மணியாகிவிட்டிருந்தது. மாட்டையும் கன்றையும் வேனிலிருந்து இறக்கிய
பிறகு கிருஷ்ணமூர்த்தி கன்றைத் தூக்கிக்கொண்டு முன்னே போக பசு பின்னால் கன்றைத் தொடர்ந்து இருட்டில் மிரண்டு ஓடியது.
மாடு இழுத்துக்கொண்டு இருட்டில் ஓடிய ஓட்டத்தில்
சந்திரன் வரப்பில் தடுக்கி விழுந்துவிட்டான். பசு கயிற்றை உருவிக்கொண்டு கன்றின்
பின்னால் பெருமூச்சுவிட்டுக்கொண்டே ஓடியது.
கரும்புத்
தோட்டம் நடுவே உள்ள ஒரு மாட்டுக்கொட்டகையில் போய் கன்றை இறக்கிவிட்டு பசுவை
முளைக்குச்சியில் கட்டியபோது இரவு பத்து
மணி இருக்கும். கிருஷ்ணமூர்த்தி பசுவுக்கு கரும்பு சோகையும், வைக்கோலும் கொண்டுவந்து
போட்டார். “கன்றின் புனிற்று வாடைக்கு குள்ளநரி வந்தாலும் வரும் வீட்டுக்கு
இன்றைக்கு ஓட்டிச் செல்ல முடியாது நாள் சரியில்லை நாளைக்கு தான் வீட்டுக்கு
ஓட்டிக் கொண்டு செல்ல முடியும்” என்று சொல்லிவிட்டு “இங்கேயே கிடக்கட்டும் வா
போகலாம்” என்று சொன்னபோது. சந்திரனுக்கு மனம் வரவில்லை. சொன்னதைப்போல் புனிற்று
வாடைக்கு குள்ளநரி வந்து கன்றைக் கடித்துவிட்டால் என்ன செய்வது என்று மனம்
பதைத்தது.
இந்த இரவுப் பொழுது கன்றுக்குக் காவலாய்ச் சந்திரன், தான் இந்த மாட்டுக்கொட்டகையிலேயே இருப்பதாகச் சொல்லிவிட்டு இருட்டில் தனியே கன்றுக்கும் பசுவுக்கும் காவலாய் எப்போது விடியும் எனக் காத்திருந்தான். இரவில் நரி ஊலையிடும் ஓசை தூரத்திலிருந்து காதில் விழுந்தது.
பழக்கமில்லாத புது இடத்தில் போர்வை கூட இல்லாமல் இரவின் வாடையில் கிடந்தான்.
பொழுது புலர்ந்தது ஆசைஆசையாய் குடும்பத்தில் ஒன்றாய் இருந்துவந்த பசுவைப் பிரியப்போவதை
நினைத்தபோது மனசு கனத்தது. காலை 8 மணி டவுன் பஸ்சுக்கு வண்டியேற்ற கிருஷ்ணமூர்த்தியும்
வந்துவிட்டார். புறப்படும் முன் கடைசியாய் கன்றையும் பசுவையும் கைகளால் தடவிவிட்டு
கண்களால் படமெடுத்து உருவத்தை மனதிற்குள் நிரப்பிக்கொண்டு வரப்பில் நடந்து போய்க்கொண்டிருந்தான்.
அம்மா…. என்ற அழைப்பொலி கேட்டுத் திரும்பினான்
பசு ஏக்கத்தோடு சந்திரன் போவதைப் பார்த்துக்கொண்டு நின்றது.
- ச. நீலமேகன்
03-08-2021
ஒரு கனவு
வாழ்க்கையில் பெரிதாக ஒன்றும் சாதிக்காவிட்டாலும்
இந்த மூர்த்திக்கு கனவு காண்பதில் மட்டும் எந்த குறையும் இருக்காது. கனவு என்றால் பேய்களோடு பேசுவதோ அல்லது திரைப்படத்தில் காட்டுவதைப்போல காதலியோடு
டூயட் பாடுவதாகவோதான் இருக்கும் என்று யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம்.
மூர்த்தி கனவு காண்பதில்கூட ரொம்பச் சிக்கனமான
மனிதன்தான். “ஏன் அவருக்கு பிரமாண்ட கனவுகள் தோன்றாதா?” என்று யாரும் கேட்டுவிடக் கூடாது.
பொதுவாக கனவுகளைப் பற்றி உளவியல் நிபுணர்கள் “நிறைவேறாத ஆசைகள்தான் கனவுகளாக வெளிப்படுகின்றன” என்று எங்கோ கேட்ட ஞாபகமோ, படித்த ஞாபகமோ அது எனக்குத் தற்போதைக்கு ஞாபகத்தில் இல்லை. அப்படிப் பார்க்கப்போனால் எதிலும் எளிமையை விரும்புகிற மூர்த்திக்கு பிரமாண்டமான கனவு வந்திருக்க வாய்ப்பில்லை என்று நாமே ஒரு முடிவுகட்டிக்கொள்வதில் தவறில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது; உங்களுக்கு எப்படியோ அது எனக்குத் தெரியாது.
“அது என்ன, சாதித்தவனுக்கு மட்டும்தான் கனவு வருமா?” என்றோ, அல்லது “எது சாதனை” என்றோ, என்னால் பதில் சொல்லமுடியாத கேள்விகளையும் யாரும் கேட்டுவிடக்கூடாது. நான் என் பார்வையில் அப்படிச் சொல்லவில்லை அவரைப்பற்றி மற்றவர்கள் சொன்ன மதிப்பீட்டின் அடிப்படையில் அப்படிச் சொல்லிவிட்டேன். அதுகூட பெரும் தவறுதான் அதற்காக நீங்கள் என்னைப் பொறுத்தருள வேண்டும்.
“கனவில் இப்படிக்கூட நடக்குமா?” என்றும்
கேள்விகேட்கக்கூடாது. அப்படி யாராவது கேட்டால் “அதுதான் கனவாயிற்றே அது எப்படியாவது
இருந்துவிட்டுப் போகிறது உங்களுக்கென்ன வந்தது” என்றுதான் நான் பதில் சொல்லுவேன் யாரும்
கோபித்துக்கொள்ளக்கூடாது.
மூர்த்தி எழுதிய பாட்டைக் கொண்டுபோய் அவன்
அம்மா, யாரிடமோ பேசிக்கொண்டிருக்கும் கண்ணதாசனிடம் காண்பிக்கிறார்.
பாடலை வாங்கிப் படித்துப் பார்த்த கண்ணதாசன் சில நொடிகளில் பாடலைக் கொண்டுவந்த மூர்த்தியின் அம்மாவிடம்,
“இந்த சரணத்தில் இருக்கிற ஒரு வரியை பல்லவிக்கு
மாற்றினால் நன்றாக இருக்கும்” என்று பேனாவை எடுத்து சரணத்தில் இருந்த ஒரு வரியை
அடித்துவிட்டு பல்லவியில் எழுதித்தருகிறார்.
கவிஞர் கண்ணதாசனிடம் காட்டி திருத்தம்
செய்த பாட்டை தன் மகன் மூர்த்தியிடம் அவன் அம்மா காட்டியபோது, “சரணத்திலிருந்த வரியை பல்லவிக்கு
மாற்றியது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், சந்தம் சரியாக இல்லை மேலே உள்ள வரியில் ‘காலை’ என்று முடிந்திருக்கிறது.
இந்த இடத்தில் ‘உன்னைச் சந்தித்த நேரம்’ என்ற அடுத்த அடியின் வரியை ‘உன்னைப் பார்த்த
வேளை என்று மாற்றினால்தான், காலை-வேளை என்று ஓசை ஒழுங்காக வரும் என்று தோன்றுகிறது”
என்று மூர்த்தி கூறியதும் அவன் அம்மா அவனது தலையில் செல்லமாக தட்டிவிட்டுப் போய்விட்டாள்.
அன்று தன்னைமீறி அதிகநேரம் தூங்கிவிட்டதால்
அவசர அவசரமாக கல்லூரிக்குக் கிளம்பிப்போன பேராசிரியர் மூர்த்தி முதல் பாடவேளையில் ஆங்கில வகுப்பில் நுழைந்தபோது சலசலவென ஒரே சத்தம்.
முகுந்தன் பக்கத்தில் இருக்கும் பையனிடம் ஏதோ பேசி அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறான்.
கொடிமுல்லை குழந்தைத்தனமாய் அங்குமிங்கும் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறாள்.
மீனாட்சியும் உஷாவும் மட்டும்தான் முதலில் பேராசிரியர் மூர்த்தி வகுப்பினுள் வருவதை உணர்ந்து அமைதியானார்கள்.
மேசையின் மேலிருந்த டஸ்டரை எடுத்து அதில்
இரண்டு தட்டுதட்டி “எல்லோரும் அமைதியாக இருங்கள் சத்தம் போடாதீர்கள்” என்று கூறிய பிறகுதான்
எல்லோரும் அமைதியானார்கள்.
சாக்பீசை எடுத்து கரும்பலகையில் சங்க இலக்கியம்
என மூர்த்தி எழுதியபோது, கரும்பலகை கிரீச்சிடுகிறது. கரும்பலகையில் பெயின்ட் தேய்ந்து
கிரானைட் தரைபோல வழுவழுப்பாக இருந்ததால் எழுதிய எழுத்தே தெரியாமல் இருந்தது.
எழுதிவிட்டு திரும்பி நின்று மாணவர்களைப்
பார்த்த மூர்த்தி “போன வகுப்பில் சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையைப் பற்றி பார்த்தோமல்லவா? இன்றைக்குப் பத்துப்பாட்டைப்பற்றிப் பார்ப்போம்”
என்று சொல்லிக்கொண்டே மணிக்கட்டைப் பார்க்கிறார். மணிக்கட்டில் வாட்சைக் காணோம்.
மூர்த்திக்கு மனம் பதைத்தது. அவசர அவசரமாக
கிளம்பிவந்ததில் எங்கேயாவது கழன்று விழுந்துவிட்டதா? அல்லது வீட்டிலேயே விட்டுவிட்டு
வந்துவிட்டோமா? அது திரும்ப நம் கைக்குக் கிடைக்காதா? அம்மாவுக்குப் போன் செய்து வழக்கமாக வைக்கும் டேபிள்மீது இருக்கிறதா என்று பார்க்கச்சொல்வோமா? என்றெல்லாம்
எண்ணிக்கொண்டிருந்தவர். திடீரென்று படுக்கையிலிருந்து போர்வையை விலக்கி எழுந்து நின்று பார்க்கிறார், மேசைமேல் வாட்ச். அவரது மனம் அமைதிப் பெருமூச்சுவிட்டது.
வாட்சில் நேரம் அதிகாலை
4.00 மணி, அப்படியே நிமிர்ந்து பார்க்கிறார். ஆறு வருடத்திற்கு முன் இறந்துபோன அவர் அம்மாவின் புகைப்படம் சுவரில் மாட்டப்பட்டிருந்தது.
அதன் பக்கத்தில் எப்போதோ நின்றுபோய் ஓடாமல் கிடந்தது சுவர் கடிகாரம். அதிகாலைக் கனவு பலிக்குமா என்ன?
ச. நீலமேகன்
21-12-2016