திங்கள், 28 ஜூன், 2021

செருப்பு

செருப்பு

-          சிறுகதை

 

அன்று பள்ளிக்கூடம் விட்டு திரும்பிவந்து பார்த்தபோது முருங்கை மரத்தின் அடியில் கிடந்த அப்பாவின் அறுந்துபோன  செருப்பை எடுத்து முருங்கை மரத்தின் கிளையில் மாட்டிவைத்திருந்தாள் ரமணனின்  அம்மா. வீட்டைவிட்டு வெளியே போகும்போதெல்லாம் அந்த அறுந்த செருப்பு ரமணனின் பார்வையில் விழத்தவறியதில்லை. 

அது அறுந்துபோவதற்கு முன்பு, தெருவில் திண்ணைக்கு அருகேதான் எப்போதும் விடப்பட்டுக் கிடக்கும். திண்ணையில் உட்காரும்போதெல்லாம் ரமணன் அதைக் கவனிக்கத்தவறியதில்லை. 

அந்த ரப்பர் செருப்பின் அடிப்பகுதி எந்த அளவுக்குத் தேய்ந்துபோயிருக்கிறதோ அந்த அளவுக்கு செருப்பின் மேல்பகுதியும் மூன்றில் ஒரு பகுதியளவு தேய்ந்து மேலுள்ள வெண்மைநிறமான பகுதியில் அடிப்பகுதியின் நீலநிறம் தெரியும். அதைப் பார்க்கும்போது அவனுக்கு உலக வரைபடம்தான் நினைவுக்கு வரும். மேற்பகுதி தேய்ந்த நிலையில் தெரியும் நீலநிற அடிப்பகுதிகாட்டும் ரப்பரின் உருவம் நாளுக்குநாள் தேயத்தேய வெவ்வேறு வடிவங்களில் அவன் கண்களுக்குத் தெரிந்தது. அது பார்ப்பதற்கு வட அமெரிக்கா மாதிரி இருக்கிறதா அல்லது தென் அமெரிக்கா மாதிரி இருக்கிறதா அல்லது ஆஸ்திரேலியா மாதிரி இருக்கிறதா என்று ரமணன் சிந்தித்துப் பார்ப்பதுண்டு.

செருப்பின் தேய்மானத்தில் தேசங்களைத் தேடுவது விசித்திரமாக இருந்தது, அவனுக்கு. சிலநேரங்களில் தேசத்தில் வாழ்கின்ற சாமான்யமக்களின் வறுமைநிலை இதுதான் என்பதற்கு சாட்சியாக ந்த தேய்ந்த செருப்பு அவனுக்குத் தோன்றும்.

அந்தச் செருப்பு அறுந்துபோனபிறகு நெடுநாளாய் காலில் செருப்பு இல்லாமல்தான் நடந்துகொண்டிருந்தார் ரமணனின் அப்பா. அவருக்கு நெசவுத்தொழில்தான் வாழ்வாதாரம். அதற்கு அவர்மட்டுமல்ல அவர் குடும்பமே சேர்ந்து உழைக்க வேண்டும். அதில் வரும் வருமானத்தைக்கொண்டுதான் அந்த குடும்பத்திலுள்ளவர்கள் உயிரைப் பிடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

செருப்பு போட்டுக்கொள்ள ஆசைப்படுவது அந்த குடும்பத்தைப் பொறுத்தவரை ஆடம்பரம். அந்த ஆடம்பரத்தை குடும்பத்தலைவர் என்ற தகுதியின் அடிப்படையில் அவர்மட்டுமே அனுபவித்துவந்தார்.  சமீபத்தில் அது அறுந்துபோனதால் பிறக்கும்போதே செருப்போடு பிறந்தோமா என்ற சமாதானத்தை மனதுக்குச் சொல்லிவிட்டு கால்களை செருப்பில்லாமல் நடக்கப்பழக்கிக்கொண்டிருந்தார் ரமணனின் அப்பா மாணிக்கம்.

இதையெல்லாம் உணர்ந்துதான் ரமணன் தன் அப்பாவுக்கு எந்த சிரமமும் தரக்கூடாது என்ற உறுதியோடு செருப்புகேட்டு அடம்பிடிப்பதில்லை என்ற கொள்கைமுடிவை எடுத்து வெறும்காலோடு நடக்கப்பழகிவிட்டான். அவன் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கெல்லாம் அது ஒரு குறையாகவே தெரிவதில்லை.

அன்று மாலை பள்ளிக்கூடம்விட்டு வீட்டுக்கு வந்தபோது வீட்டுவாசலில் வெள்ளைநிறப் புதுச்செருப்பு அவன் கண்ணில்பட்டது. செருப்பின் அளவையும் அது விடப்பட்டிருக்கும் இடத்தையும் பார்த்தவுடனேயே அது அப்பாவின் செருப்பாகத்தான் இருக்கும் என்று அவனால் ஊகிக்கமுடிந்தது. அந்தச் செருப்பு அன்றுதான் வாங்கிவரப்பட்டது என்பதால் பார்க்க பளிச்சென்று இருந்தது. கையில் எடுத்துப்பார்த்தபோது புதுச்செருப்பின் ரப்பர்வாடை மூக்கில் நுழைந்தது.

மாலை ஏழுமணிக்கு ரமணனின் அப்பா தன் சிநேகிதர் மேலண்டைத் தெரு பரந்தாமன் மகள் திருமண விழாவுக்குப் போகும்போது அந்த புதுச்செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பியபோது ரமணனும் அவர்கூட ஒட்டிக்கொண்டான். போகிறவழியில் தன் அப்பாவிடம் செருப்பு என்ன விலை? என்று ரமணன் கேட்டான்.  முப்பத்தைந்து ரூபாய்”  என்று பதில் சொன்னார் மாணிக்கம் மேலெதுவும் பேசவில்லை ரமணனும் அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை.

கிராமப்புறங்களில் திருமண மண்டபத்துக்குள் செருப்புப்போட்டுக்கொண்டு செல்லும் நகரத்து வழக்கம் இன்னும் நுழையவில்லையென்பதால் மண்டபத்து வாசலில் செருப்பை கழற்றிவிட்டுவிட்டு உள்ளே செல்ல முயன்றபோது, ரமணன் தன் அப்பாவிடம்..அப்பா இந்த புதுச்செருப்பை இங்கே விட்டுவிட்டுப்போனால் யாராவது போட்டுக்கொண்டு போய்விடமாட்டார்களா? என்று கேட்டான்.

அதற்கு ரமணனின் அப்பா, “அதெல்லாம் ஒன்றும் ஆகாதுஎன்று சொல்லியும் ரமணன், “இல்லை அப்பா, இங்கே விட்டால் புதுச்செருப்பை யாராவது போட்டுக்கொண்டுபோய்விடுவார்கள், இதைக்கொண்டுபோய் எதிர் வாடையில் இருக்கும் பெரியாயா வீட்டு வாசலில் விட்டுவிட்டு வருகிறேன்என்று சொல்லி செருப்பைக் காலில் மாட்டிக்கொண்டு அவன் பெரியாயாவின் வீட்டில் விட்டுவிட்டுவரப் போனான். அப்போது அங்கே யாரோ இரண்டுமூன்றுபேர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். தெருவாசல் விளக்கு எரியாததால் அவர்கள் முகத்தை ரமணனால் கண்டுகொள்ள முடியவில்லை.

தெருவாசல் வராண்டாவில் இருந்த ராட்டிணத்திற்கு பக்கத்தில் புதுச்செருப்பை விட்டுவிட்டு, யார் கண்ணிலாவது பட்டால் திருடிக்கொண்டு போய்விடுவார்களோ என்ற அச்சத்தில் அங்கிருந்த கிழிந்த கோணியை அதன்மீது போட்டுவிட்டு, மண்டபத்திற்குச் சென்று பார்த்தபோது பெண்ணழைப்பு ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தது. 

அங்கே யாருடனோ பேசிக்கொண்டிருந்த ரமணனின் அப்பா, அவரோடு பேசிக்கொண்டே நடந்து பந்திநடக்கும் பகுதிக்குச் சென்று அமர்ந்ததை ரமணனும் பார்த்துவிட்டதால் அவனும்  தன் அப்பாவின் பக்கத்தில் சென்று உட்கார்ந்தபோது, "இந்தப்பொடியன் உன் பையனா" என்று ரமணனின் அப்பாவோடு பேசிக்கொண்டிருந்தவர் கேட்டவுடன், “ஆமாம் என் பையன்தான் எட்டாவது படிக்கிறான்” என்று அடுத்தகேள்விக்கு இடம்வைக்காமல் முன்கூட்டியே பதில் சொல்லி முடித்தபோது பந்தியில்  இலைபோட்டு சாப்பாடு போட ஆரம்பித்திருந்தார்கள். உண்டுமுடித்து வெளியே வந்ததும் எதிர்ப்பட்ட யாருடனோ ரமணனின் அப்பா மாணிக்கம் பேசிக்கெண்டிருந்த சமயத்தில் ரமணன் தன் அப்பாவின் செருப்பை வைத்த இடத்திலிருந்து எடுத்துவர ஓடினான். அங்கே முன்பு செருப்பை விடும்போது உட்கார்ந்துகொண்டிருந்தவர்கள் யாரையும் பார்க்கமுடியவில்லை.

செருப்பை எடுக்கலாம் என்று கோணிப்பையை விலக்கியபோது அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வைத்த இடத்தில் செருப்பு இல்லை. மறுகணம் இதயம் படபடக்க ஆரம்பித்துவிட்டது. வேறு எங்காவது யாராவது எடுத்துவைத்துவிட்டார்களா? என்றெல்லாம் யோசித்தான். தேடிப்பார்க்கலாமென்று பார்த்தால் வாசலில் போதிய வெளிச்சமில்லை.

கதவைத்தட்டி தன் ஆயாவை அழைத்து  “இந்த மண்டபத்தில் நடக்கிற கல்யாணத்திற்கு நானும் அப்பாவும் வந்தோம் ஆயா, அப்பாவின் செருப்பை இங்கே ஜாக்கிரதையாக இருக்கட்டுமென்று விட்டுவிட்டுப்போனேன் விட்ட இடத்தில் காணோம். யாராவது எங்காவது எடுத்து வைத்துவிட்டார்களா என்று தெரியவில்லை தெருவாசல் விளக்கைப் போடேன்” என்று  தன் ஆயாவிடம் சொன்னான்.

அவன் ஆயா உட்பக்கமாக இருந்த சுவிட்சை அழுத்தித் தெருவிளக்கைப் போட்டுவிட்டுஇங்க ஏன்டா விட்ட, உள்ள வைத்துவிட்டுப் போகக்கூடாதா! என் தூக்கிக்கொண்டு போனானோ என்று சொல்லி முடிப்பதற்குள் கண் நாளாபக்கமும் பசிகொண்ட விலங்கு இரை தேடுவதைப்போல் செருப்பைத் தேடியது. செருப்பு கண்ணுக்கு அகப்படவில்லை. செருப்பை விடும்போது பார்த்துக்கொண்டிருந்த அங்கிருந்த எவனோ ஒருவன்தான் எடுத்துக்கொண்டுபோயிருக்க வேண்டும் என்று அவன் மனம் சந்தேகித்தது.

அங்கிருந்து நடந்து வந்துகொண்டிருந்த அப்பாவிடம்  ஓடிப்போய் செருப்பை காணோம்ப்பாஎன்று சொன்னபோது, அவர் எதுவும் பேசாமல் நின்ற இடத்திலிருந்து அமைதியாக நடந்துபோய்க் கொண்டிருந்தார். செருப்பு காணாமல் போனதில் அவருக்கும் உள்ளூர வருத்தம்தான் என்றாலும் அதற்காக ரமணனைப்போல் அழவாமுடியும். அவர் ரொம்பதூரம் நடந்துபோய்விட்டார்.

அழுதுகொண்டிருந்த ரமணனின் பார்வை போவோர் வருவோர் கால்களையே கவனித்துக்கொண்டிருந்தது. அதில் வெள்ளைநிறப் புதுச்செருப்பு எந்த காலிலாவது தெம்படுகிறதா என்று வெகுநேரமாய்ப் பார்த்துப்பார்த்து கண்கள் பூத்துப்போனது. எவ்வளவு நேரம் அவன் இப்படித் தேடிக்கொண்டிருக்கமுடியும் நேரம் கடந்து தெருக்களில் கூட்டம் அடங்கிவிட்டிருந்தது. இனி அவன் தேட கால்கள் இல்லாததால் வீடுநோக்கி நடக்கலானான் நடக்கிறபோது கால்களில் தெம்பில்லை.

நடந்தவாறே இந்த செருப்பை வாங்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதை நினைக்கும்போதெல்லாம் அவன் செவிகளில்  தறியில் இழைகளுக்கு இடையில் ஓடும் நாடாவின் சத்தமும் இழைக்கொரு வெட்டுவெட்டும் தறியின் சத்தமும் விழுந்துகொண்டே இருந்தது. 

அப்பாவின் உழைப்பைத் தொலைத்துவிட்ட குற்ற உணர்ச்சியில் இரண்டுமூன்றுநாட்களாய் சரியாய் சாப்பிடாமல்கூடக் கிடந்தான். அது தன் தவறுக்கு தானே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்று நினைத்தானோ என்னவோ, அதற்கப்புறமும் எத்தனையோ நாட்கள் கடந்தும் பள்ளிக்கூடம் போகும்போதெல்லாம்  வழியெங்கும் எதிர்ப்படும் கால்களில் அவன் கண்கள் அனிச்சையாகவே அதைத் தேடிக்கொண்டுதான் இருந்தன.

 

 -. ச. நீலமேகன்

28-06-2021

செவ்வாய், 22 ஜூன், 2021

சிக்னல்

சிக்னல்

-          சிறுகதை

இரவு 8 மணி இருக்கும். எவ்வளவு நேரம்தான் சிக்னல் இல்லாத செல்போனை கையில் வைத்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருப்பது.  செல்போனை எடுத்து சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டு சுடுகாட்டுப் பக்கமாய்  போனால் நேற்றைப் போலவே சிக்னல் கிடைத்தாலும் கிடைக்கும் என்ற தீர்மானத்துக்கு வந்தார் நீலகண்டர். காலம் போவதைப் பற்றிக் கவலைப்படாமல் எதையும் ஒழுங்காகச் செய்யவேண்டும் என்ற பித்துப்பிடித்த பிரம்மச்சாரி அவர்.

வயது நாற்பதை நெருங்கிவிட்டபிறகும் தனக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக தன் உழைப்பின்மேல் நம்பிக்கை வைத்து தானுண்டு தன் வேலையுண்டு எனக் கல்லூரிக்குப்போவதும் வருவதும், புத்தகமும் கையுமாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் ஒரு எந்திரமாகவே மாறிப்போயிருந்தார் தமிழ்ப்பேராசிரியர் நீலகண்டர். தனக்கு முனைவர்பட்டம் கிடைத்துவிட்டால் எப்படியும் விடியல் வந்துவிடும் என்பது அவரது இருண்டவாழ்வின் ஒரே நம்பிக்கை.

ஆனால் அதுவோ பஞ்சபாண்டவர்கள் வனவாசம் போன கதைபோல 12ஆண்டுகள் வனவாசமும் ஓராண்டு அஞ்ஞாத வாசமும் சேர்த்து 13 வருடங்கள் ஆகிவிட்டது எத்தனையோ பேரிடம் தன் நிலையைச் சொல்லிவிட்டார் இன்னும் யாருடைய மனமும் கனியாததால்,  தன்னைக் கல்லாக்கிக்கொண்டு என்றாவது தீர்வு கிடைக்கும் என மனதைச் சமாதானப் படுத்திக்கொண்டு தனக்கென்று இருக்கிற தகப்பனாருக்கு உபத்திரவமாய் காலந்தள்ளிக்கொண்டிருக்கிறவர். தனக்கு நியாயம் கேட்க ஒரு கிருஷ்ணபரமாத்மா வரமாட்டாரா என ஏங்கிக்கிடப்பவர்.

நாற்பது வயதாகியும் தனக்குப் பாரமாய் இருக்கும் நீலகண்டரை அவரது தகப்பனார் சாகச்சொல்லிக்கூடப் பார்த்துவிட்டார். ஆனால் இவருக்கோ படிப்பே வாழ்வின் ஆதாரம் என நம்பி தன் வாழ்நாளின் உன்னதமான இளமைக்காலத்தை இரையாக்கிவிட்டு முனைவர்பட்டத்தை வாங்காமல் செத்துப்போவதா? என்ற எண்ணத்தில் உயிரைக் கெட்டியாய் பிடித்துக்கொண்டு நடமாடிக்கொண்டிருக்கிறார்.

 வயிற்றுப்பாட்டுக்கும் பார்க்கிறவர் கண்ணுக்கு சற்று மதிப்பாய்த் தெரியவும் தனியார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த அளவுக்கு இப்போதைக்கு அவரைப்பற்றி உங்களுக்குத் தெரிந்தால் போதும். வேதனைகளைப் பங்குபோட்டுக்கொள்ள யார்தான் விரும்புவார்கள் அதனால்தான் அவரைப்பற்றி அதிகம் பேசாமல் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

மின்னஞ்சல் ஒன்றை அனுப்பவேண்டும் அதற்காக சிக்னல் வரக்கூடிய இடத்தைத்தேடித்தேடி அலுத்துவிட்டதால் சுடுகாட்டுக்கே போய்விடுவதென்று தீர்மானம் செய்துகொண்டார்.

முந்தாநாள் காலை 11 மணிக்கு  அவர் வேலைசெய்யும் கல்லூரியின் துறைக்குழுக்கூட்டம் கூகுள்மீட் வழியாக நடந்தபோதுகூட சுடுகாட்டுப்பக்கமாய் போனபோதுதான் சிக்னல் கிடைத்தது. அங்கிருந்த நடுகல் மீது உட்கார்ந்தவாரே மீட்டிங்கை முடித்த நம்பிக்கையில்தான் இப்போதும் சுடுகாட்டுப்பக்கமாய் போவதென சைக்கிளில் கிளம்பினார் நீலகண்டர்.

ரொம்பவும் இருட்டு வேளையாக இருந்ததால் சுடுகாட்டுக்குப்போகும் வழியில் பெரியகுளத்தருகே நின்று டவர்கிடைக்கிறதா என்று பார்த்தபோது அவர் செல்போனில் ஒரு பாயின்ட்கூட சிக்னல் இல்லை.

வாட்சப்பைத் திறந்து பார்த்ததில் லச்சுவுக்கு(லட்சுமிகாந்தன் என்பதை சுருக்கமாகவும் செல்லமாகவும் எல்லோரும் அப்படித்தான் சொல்லுவார்கள்)  மாலை நான்கு மணிக்கு“இங்கு சிக்னல் கிடைக்கவில்லை” என்று டைப்செய்த வாட்சப் தகவலும், சிக்கல் கிடைக்கவில்லை என்ற உண்மையை நிரூபிப்பதற்காக எடுத்து இணைத்திருந்த ஸ்கிரீன் ஷாட்டும் அப்லோடாகாமல் பச்சைவட்டம் சுற்றிக்கொண்டே இருந்ததில் நீலகண்டத்திற்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது.

எத்தனை முறை புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்றாலும் ஆற்றாமையை கொட்டித்தீர்க்க வேறு வழியில்லாததால் குளக்கரை படிக்கட்டுப்பக்கமாய் சைக்கிளை நிறுத்திவிட்டு வாடிக்கையார் சேவை மையத்துக்குப் போன் போட்டு காதில் வைத்ததில் அது சொல்லுவதற்கு ஏற்ப எண்களை ஒவ்வொன்றாக அழுத்திக்கொண்டே போனதில் ஒருவழியாய் கஸ்டமர்கேர் இணைப்பு கிடைத்து எதிர்முனையில் “வணக்கம் தங்களுக்கு எவ்வாறு உதவலாம்”  என்ற ஒரு பெண்குரல் கேட்டது.

சுயவிவரங்கள் எல்லாவற்றையும் சொல்லிமுடித்தபின் வழக்கமாக சொல்லும் புளித்துப்போன பழைய பதிலையே சொன்னதில் நீலகண்டர் பொறுக்கமுடியாமல் ஆத்திரம்கலந்த தொனியில் “நிலைமை புரியாமல் சொன்னதையே ஒப்புக்குச் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள் உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்” என்று சொல்லி எல்லாவற்றையும் கொட்டித்தீர்த்த பிறகும் ரொம்ப சாதாரணமாக கஸ்டமர்கேர் இணைப்பில் பேசிக்கொண்டிருந்த பெண் “இவ்வளவெல்லாம் நீங்கள் பேசவேண்டியதில்லை சார். எங்க சைடுல என்ன ப்ராப்ளம்ன்னு பார்க்கிறோம். இதைத்தவிர வேறு தகவல் ஏதும் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கா” என்ற அலுவல் முறை கேள்விக்கு நீலகண்டர் “வேற ஒன்னுமில்லை” என்ற விரக்தி கலந்த தொனியில் பதில் சொல்லி முடித்ததும்.

“இந்தநாள் இனியநாளாக அமைய வாழ்த்துக்கள் KSNL ஐ அழைத்தமைக்கு நன்றி” எனக்கூறி  உரையாடலை முடித்துவிட்டாள்.

பெருமூச்சுவிட்டுக்கொண்டே சுடுகாட்டுப்பக்கமாய் போனால்தான் சிக்னல் கிடைக்கும்போலிருக்கிறது என்ற தீர்மானத்திற்கு வந்த நீலகண்டர் குளத்தின் படிக்கட்டருகே நிறுத்தியிருந்த சைக்கிளைத் தள்ளிக்கொண்டே தார்ச்சாலையில் சுடுகாட்டுப்பக்கம் நடந்தார்.

சாலையெங்கும் மாலையாக இருந்தது. ரோட்டில் பஸ் போவதும் வருவதுமான வழக்கமான சூழலாக இருந்திருந்தால் அந்த மாலைகளெல்லாம் நசுங்கி சாலையோடு சாலையாக இருந்தஇடம் தெரியாமல் போயிருக்கும். கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ்கள் ஓடாததால் அந்த மாலைகளெல்லாம் ரோட்டின் குறுக்கே வேகத்தடைபோலக் கிடந்தன.

இருட்டில் அதன்மீது கால்பட்டதும் பாம்பை மிதிப்பதைப் போன்று சற்று கூச்சமாக இருந்தது. அதோடு அந்த மாலைகளின்மீது சைக்கிள் சக்கரம் ஏறி இறங்கும்போதெல்லாம் “தடக் தடக்…கென்று சத்தம்போட்டுக்கொண்டே மெல்ல மெல்ல சுடுகாடுபோய் சேர்ந்தது.

கடந்த ஒருமாத காலமாகவே ஊரில் கொரோனா தொற்றாலும் வயோதிகத்தாலும் தொடர்ந்து சாவுகள் விழுந்துகொண்டே இருந்ததால் சுடுகாட்டுக்கு பிணங்களின் வரத்து சற்று அதிகமாகவே இருந்தது.

அரிச்சந்திரன் கோயில் அருகே சைக்கிளை நிறுத்திவிட்டு கிழக்கே திரும்பிப் பார்த்ததில் இருட்டில் எரிமேடையில் பிணம் எரிந்துகொண்டிருப்பதை நீலகண்டர் கொஞ்சநேரம் வந்த வேலையை விட்டுவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

            பிறகு செல்போனை எடுத்துப் பார்த்ததில் அவருக்கு இந்தமுறையும் ஏமாற்றமே மிஞ்சியது சுடுகாடு வந்தும் சிக்னல் இல்லை.

            “நேற்று இருப்பார் இன்றில்லை” என்பது செல்போன் சிக்னலுக்கும் பொருந்துமோ என்னவோ.. நேற்று கிடைத்த சிக்னல் இன்று இல்லை. சுடுகாட்டில் நின்றுகொண்டிருக்கும்போது இப்படியொரு நினைப்பு நீலகண்டத்திற்கு வந்ததில் வியப்பொன்றுமில்லை எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழப் பழகியவர்தான் அவர்.

 சைக்கிளை மிதித்துக்கொண்டு வீடுவந்து சேர்ந்தபோது மணி 9.30 ஆகியிருந்தது. வெய்யிலில் வீட்டுக்கூரையை பழுதுபார்த்த அசதியில் நீலகண்டரின் அப்பா பரமசிவம் உறங்கிப்போயிருந்தார்.

8 மணிக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு சுடுகாட்டுக்குப் புறப்படும்போதே “சோறாக்க என்னால் முடியாது வேணும்னா ஆக்கி சாப்டுக்க” என்று தன் அப்பா பரமசிவம் சொன்னது வீடு திரும்பிய பிறகுதான் நீலகண்டருக்கு நினைவுக்கு வந்தது.

இனிமேல் எங்கே சமைப்பது எனத் தயங்கியவர் வழக்கம்போலவே சாப்பாடு வாய்க்காததால் அப்படியே படுத்துவிட்டார். செல்போனைப் பார்த்தார் சிக்னல் இல்லை. அந்நேரம்பார்த்து கரண்ட்வேறு போய்விட்டது. காதருகே கொசுக்கள் கூடி கூச்சல்போட்டது. அங்கங்கே ஊசிபோட்டுக்கொண்டிருந்தது. வலியில் வெறுத்துப்போய் அடித்ததில் கையில் ரத்தம் பிசுபிசுத்தது.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் போன கரண்ட் வந்தாலும் நீலகண்டருக்கு தூக்கம்வரவில்லை. என்னசெய்வதென்று புரியாமல் பக்கத்தில் அடுக்கிவைத்திருந்த புத்தகத்தில் ஒன்றை எடுத்து தோராயமாக விரித்ததில், பெரியபுராணத்தில் பக்திச்சுவை என்ற தலைப்பில் யாரோ எழுதிய கட்டுரை கண்ணில்பட்டது.

ஐந்தாறு பக்கங்கள் வாசித்ததில் பசியோடுவந்த சிவனடியாருக்கு இளையான் குடிமாற நாயனார் வயலில் விதைத்திருந்த நெல்லைக் கொண்டுவந்து சமைத்துப்போட்ட வரலாற்றையும், கண்ணப்ப நாயனார் வரலாற்றையும் படித்து முடித்தபோது மணி 12 ஆகிவிட்டிருந்ததை மாதாகோயில் மணியோசை சொல்லியது.

ஆனாலும் அவருக்குத் தூக்கம் வந்தபாடில்லை, காலில் கடிக்கும் கொசுக்களைப் பிடிக்க பல்லிகள் காலின்மீது பாய்வது குளத்தில் குளிக்கும்போது மீன்கள் கொத்துவது போல கூச்சமாக இருந்தது.  

இந்த இரவின் அமைதி காலையிலிருந்து எங்கே போனதோ தெரியவில்லை, அரைமணி நேரம் செல்போனில் ஒலிப்பதிவு செய்யவேண்டும்.  அது கல்லூரியில் அவருக்குத் தரப்பட்ட பணி ஆனால் எங்கும் அமைதியில்லை, அமைதிக்கு எங்கே போவது. வெட்டவெளியில் பேசினால் காற்றின் ஓசை ஒலிப்பதிவில் கலந்துவிடும். தெருப்பக்கமாய் வந்தால் ஆட்களின் நடமாட்டம் அதிகம். வெடிச்சத்தம், வாகனச்சத்தம், கொரோனாவால் செத்துப்போனவர் வீட்டிலிருந்து கேட்கும் பறையொலி என எத்தனையோ இரைச்சல் கேட்டுக்கொண்டே இருந்தது.

வீட்டுக்குள் வந்தால் தங்கையின் குழந்தை டோராபுஜ்ஜி பார்த்துக்கொண்டிருந்தது. குழந்தை தூங்கினால் டி.வியை நிறுத்திவிட்டு ஒலிப்பதிவு செய்துவிடலாம். ஆனால் தூங்கினால்தானே.

வீட்டின் பின்புறம் போனால் குழாயில் நீர் வருவதற்கு அறிகுறியாய் கொடகொடவென சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. கதவுகள் திறக்கும் சத்தம், மூடும் சத்தம், பக்கத்துவீட்டு மாட்டுக்கொட்டகையிலிருந்து மாடுகள் கத்தும் சத்தம் எங்கும் இரைச்சல்மயமாகவே இருந்தது.

எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு தோட்டத்து வாசற்படிக்காய் உட்கார்ந்து சிறுகதை ஒன்றை வாசித்து ஒலிப்பதிவு செய்து கொண்டிருந்த போது ஏதோ காலருகே வருவதாய் ஒரு உணர்வு எச்சரித்தது. அதைக் கவனித்தால் வாசிப்பு தடைபடும் என மனம் அதட்டியது. அந்த அதட்டலை மீறி ஏதோ ஒரு உணர்வு அதைப் பார்க்கவேண்டிய காட்டாயத்தை உணர்த்தியபோது, காலடிக்கு மிக அருகில் பாம்பு, அதிர்ந்துபோய் காலை இழுத்துக்கொண்டு நகர்ந்தபோது அது புதருக்குள் ஓடி மறைந்துவிட்டது. இன்னும் வாசித்து ஒலிப்பதிவை முடிக்க  ஒருபக்கம் மீதமிருந்தது.

அசௌகர்யமாக இருந்தாலும் “வாசித்து ஒலிப்பதிவு செய்” என்று மூளை கட்டளையிட்ட பிறகு மனதால் மறுப்புச்சொல்ல முடியவில்லை எப்படியோ ஒலிப்பதிவு செய்தாகி விட்டது. அந்த ஒலிக்கோப்பை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பத்தான் இந்த சுடுகாடு வரையிலான சிக்னல் போராட்டம்.

அப்பூதியடிகள் புராணத்தில் மூத்த திருநாவுக்கரசை பாம்பு தீண்டியது குறித்து படித்துக்கொண்டிருந்தபோது மதியவேளையில் ஒலிப்பதிவின்போது பாம்பு காலடிக்கு அருகே வந்துசென்றது நீலகண்டருக்கு நினைவுக்கு வந்தது.

மலையில் இருக்கும் குடுமித்தேவரை(சிவன்) கண்டதும் திண்ணப்பர் “தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்” என்ற நிலையில் இறைவனைப் பிரிய மனமின்றி கண்ணீர் மல்கி நின்றாராம். இதைப் படிக்கும்போது பாம்பு வருவதுகூடத் தெரியாது தன்னை மறந்து சிறுகதை படித்துக்கொண்டிருந்தால் பிணமாகி நாமம் கெட்டுத்தான் போயிருப்போம் என்று கூட நினைக்கத் தோன்றியது அவருக்கு. அப்புறம் போன உயிரை மீட்க திருநாவுக்கரசரை எங்கே தேடுவது, அப்படி அன்புகாட்டுகிற திருநாவுக்கரசர்கள் இந்த பூமியில் மீண்டும் பிறந்திருக்கிறார்களா என்ன?என்றெல்லாம் எண்ண அலைகள் சுற்றித்திரிந்துகொண்டிருந்தன நீலகண்டருக்கு

புரண்டுபுரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை, பெரிய புராணம் படிக்கிறார் என்பதற்காகவோ அவருடைய பெயர் நீலகண்டன் என்பதற்காகவோ வயிற்றுக்குள் பட்டினிப் போராட்டம் ஓந்துவிடவில்லை. வயிற்றுகுள்ளிருந்து பசி என்ற சிக்னல் மிகத் தீவிரமாகவே வந்துகொண்டிருந்தது. அதைக் கண்டுகொள்ளாமல் பெரியபுராணத்தில் மெய்மறந்தாலும் அது நீலகண்டரைத் தூங்கவிடவில்லை. வயிறு நிரம்ப தண்ணீரைக் குடித்துவிட்டுவந்து படுத்ததில் எப்படியோ தூங்கிப்போயிருந்தார்.

கவலைகளை மறந்திருக்க மனிதனுக்குக் கிடைக்கிற ஒரே வழி தன்னை மறந்த உறக்கம்தான் அந்த தூக்கத்தை வரவழைக்கத்தான் மனிதன் எத்துணை போராடவேண்டியிருக்கிறது. அந்த உறக்கத்திலும் நீலகண்டரின் கனவில் எந்த துக்கம்வந்து துரத்திக்கொண்டிருக்கிறதோ யாருக்குத் தெரியப்போகிறது.

 

 

 

 

வெள்ளி, 18 ஜூன், 2021

அறமும் அறங்கூறும் முறையும்

  

அறமும் அறங்கூறும் முறையும்

சமூக இயக்கத்தில் தடை எற்பட்ட போதெல்லாம் அவ்வப்போது அறவாணர்கள் தோன்றி தம் கருத்துக்களின் வாயிலாக சீரமைக்க முயன்றிருக்கிறார்கள். அத்தகையோரின் எண்ணக் கருவூலத்தை அறஇலக்கியங்கள் என நாம் அடையாளப் படுத்துகிறோம். அவ்வாறு அவர்கள் கூறிச்சென்ற அறக்கருத்துக்களும், அவர்களின் அறம் குறித்தான மதிப்பீடுகளும் ஒரே மாதிரியானவையாக இல்லாமல் மாறுபட்டும், காலத்தின் தேவைக்கேற்பப் புதிய அறக்கருத்துக்கள் தோற்றம் பெற்றும் வந்துள்ளதை அறநூல்களினூடாகவே அறிந்துகொள்ள முடிகிறது.

தமிழ் சமூகத்தில் அறம் என்னும் கோட்பாடானது நெடுங்காலத்துக்கு முன்பே தோற்றம் பெற்றுவிட்டது. அது மனித வாழ்வில் கால நேர வர்த்தமானங்களுக்கு ஏற்பவும் சமூக வளர்ச்சிக்கேற்பவும் தானும் வளர்ந்து பல்வேறு பரிமாணங்களைப் பெற்று, மனித நாகரிகத்துக்கும் உலக இயக்கத்துக்கும் பெரும் பங்காற்றி வருகின்றன. அத்தகைய அறங்களை எடுத்துரைக்கும் நூல்களில் பழமையானதும் உலக மக்கள் அனைவராலும் பின்பற்றப்பட்டும் போற்றப்பட்டும் வரும் திருக்குறளில் அறக்கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ள முறைமை குறித்து ஆய்வதை இக்கட்டுரை நோக்கமாகக்கொள்கிறது. 

அறங்கள் குறித்த விமர்சனம்

அறங்கள், எதார்த்தத்தில் குறிப்பிட்டவிதமான சமூக ஒழுங்கை, உடைமை நாகரிகத்தின் ஆதிக்க ஒழுங்கைப் பேணிப் பராமரிக்க ஏற்பட்டவை என்பது முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அறங்கள் எல்லாம் ஆதிக்கத்திலிலுள்ள சக்திகளின் பச்சையான நலன்களை நிலைக்கச் செய்பவை, இவை எப்போதும் ஒடுக்குமுறைக்கான கருத்தியல் கருவிகளாகவே செயல்பட்டு வந்துள்ளன. (ராஜ்கௌதமன்: ப. 9) என அறம் குறித்து விமர்சனம் செய்வோரும் உண்டு. இக்கருத்து கால இட சூழலைப் பொருத்து பொருத்தப்பாடுடையதாக இருக்குமேயன்றி எல்லாச் சூழல்களிலும் பொருந்தி வருமா? என்பது ஆயத்தக்கது.

ஏனெனில், அறநூல்கள் பல இடங்களில் உடைமையாளர்களை இடித்துக் கூறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதை, ‘சாவைக் காட்டிலும் துக்கமுண்டாக்கக் கூடிய செய்தி இல்லை எனினும், செத்தவன் ஈகைக் குணமில்லாதவன் என்கிறபோது கேட்பவர்க்கு அச்செய்தி இன்பத்தைத் தரும்’(230) என்கிறது வள்ளுவம். அவ்வையாரரும்,

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்

காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார்

பாவிகள் அந்தப் பணம்.(நல்வழி:22)

எனப் பணம் இருந்தும் கொடுக்க மனமில்லாதவனைப் பாவிகள் என்று இழித்துப் பேசுகிறார்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’, ‘இன்னா செய்தவர்க்கும் இனியவையே செய்தல் வேண்டும்’ என்றெல்லாம் கூறப்பட்ட பொதுமை அறங்கள் இன்று நடைமுறை முரண்பாடுகளால் போற்றுவாரின்றி அதன் உயிர்ப்புத்தன்மை குன்றி வருவதைக் காணமுடிகிறது. ஆயினும் இவ்வறங்களெல்லாம் உடைமையாளர்களின் நலம் பேணுபவை ஆகவே சாத்தியமற்றவை எனப் புறந்தள்ளிவிட முடியாதவை. ஏனெனில் இவ்வறங்களே பல்வேறு சூழல்களால் துண்டாடப்பட்டுக் கிடக்கும் மானிட இனத்தை மீண்டும் ஒன்றிணைத்துப் புத்துயிர் பெற ஊக்கமளிப்பவையாக இருந்து வருகின்றன.

இலக்கியமும் அறமும்

    ஒரு நூல் அறத்தை எடுத்துரைக்க வேண்டுமானால் அது ஒரு அறநூலாகத்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. பண்டை இலக்கியம் தொடங்கி இன்றுவரை இயற்றப்பட்டுள்ள அனைத்து வகையான இலக்கியங்களிலும் அதன் ஆசிரியர்களால் ‘அறம்’ என்னும் கூறு, எல்லாக் காலங்களிலும் எடுத்துரைக்கப்பட்டு வந்துள்ளதை அந்நூல்களை நுண்ணிதின் உணர்ந்தோர் அறிவர்.

ஒரு இலக்கிய நூலின் பாடுபொருளில் அறம் கட்டாயமாகப் பேசப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுவதை, ‘அறம் முதலிய உறுதிப்பொருள்கள் நான்கினையும் பயக்கும் நடையுடைத்தாய் அமைதல் வேண்டும்’ எனக் பெருங்காப்பியத்திற்கான இலக்கணம் குறித்துப் பேசும் தண்டியலங்காரம் குறிப்பிடுகிறது. இது ஒரு நூல் இயற்றப்பட்டுவதின் பயனும் சமூக நோக்கும் அறம் கூறுவதாக இருந்ததைக் காட்டுகிறது. ஒவ்வொரு காலத்திற்கும் அக்காலத்தின் தேவைக்கேற்ப புதிய அறங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். அதற்கு எல்லை என்பது இல்லை.

அறம் – விளக்கம்

‘அறம்’ என்ற சொல்லுக்கு அகராதிகள், தருமம்; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம் தீப்பயன் உண்டாக்கும் சொல் என்று பொருள் கூறுகின்றன. பரிமேலழகர் அறம் என்ற சொல்லுக்கு, “அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்” என விளக்குகிறார்.

பௌத்த காப்பியமான மணிமேகலை மனிதனின் அடிப்படைத் தேவையாக விளங்கும் உணவு, உடை, தங்குமிடம் ஆகியவற்றை அளிப்பதையே அறம் எனக் குறிப்பிடுகிறது.

 

“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்

மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்டதில்”  (மணிமேகலை 25:228-231)

அறம் என்னும் பண்பு மனித நடைத்தைகளால் உருப்பெருகிறது. அதற்கு அடிப்படைக் கலமாக அமைவது மனம். அத்தகைய மனத்தில் மாசில்லாது ஒழுக்க நெறிப்பட்டவர்களால் தான் அறம் செய்ய முடியும் என்பதை உணர்ந்த வள்ளுவர்,


மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற 34

 

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம் 35

 

மனத்தில் மாசினை நீங்கி; பொறாமை, பேராசை, கொடுங்கோபம், பிறரைப் புண்படுத்தும் செயல் ஆகிய நான்கும் இல்லாதிருப்பதே அறம் என வரையறுக்கிறார்.

மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே - முழுநிறை வடிவமே அறம் என்று கூறுவர்.( க. த. திருநாவுக்கரசு, 1971:பக். 23) ஒரு மனிதக்குழு தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் நெறிகள். இறுதியாக வகுத்துக்கொண்ட நடத்தைகள். செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை, செய்தே ஆகவேண்டியவை அடங்கிய ஒரு வழிகாட்டித்தொகை.(ஜெயமோகன்) எனப் பிற்கால அறிஞர்களும், அறம் குறித்தும் அறநூல் குறித்தும் விளக்கமளிக்கின்றனர்.

அறமதிப்பீடுகள்

அறநூல்கள் உயிர்களைக் கொல்வது அறமன்று என்கிறன. ஆனால் காந்தியடிகள், நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்றுக் குட்டியை அது கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார். ஆனால், மனுச்சோழன் கன்றுக் குட்டியைத் தவறுதலாகத் தேரில் ஏற்றிக் கொன்றதற்காகத் தன் மகனைத் தேர்காலில் ஏற்றிக் கொன்று அதுவே அறமாகும் என நீதிவழங்கி புகழின் உச்சிக்கே சென்றுவிடுகிறான். ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வதையே அறம் எனக் குறிப்பிடுகின்றன நீதிநூல்கள். அதற்கு உதாரணமாக இராம காதையைக் குறிப்பிடுவர். ஆனால், ஆண்பெண் விகிதாச்சாரத்தில் ஆணைவிட பெண் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் சமூகத்தில் ஒரு ஆண் பல பெண்களை மணப்பது என்பதே அறம் எனக் கருதப்படுகிறது. இங்கு காலம், இடம், சூழல் என்பவற்றைப் பொறுத்தே அறம் என்பதின் உயிர்ப்புத் தன்மை அமைவது நோக்கத்தக்கது. எனவே அறம் என்ற சொல்லுக்கு ஒற்றைப் பரிமாணத்தைத் தந்துவிட முடியாது என்பது விளங்கும்.

அறம் செய்யும் காலம்

உலகம் உடைமைச் சமூகமாக மாறி ஏற்றத்தாழ்வுகள் என்றைக்குத் தோன்றிவிட்டதோ அன்றே அறத்தின் தேவையும் தோன்றிவிட்டது. ஒருவன் உதவினால்தான் மற்றொருவன் வாழமுடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்ட பிறகு அறச்செயல் ஒவ்வொரு காலத்திலும் அது ‘காலத்தின் இன்றியமையாத் தேவையாக’ இருந்துவருகிறது. ஒவ்வொரு நொடிப்பொழுதும் உதவியை எதிர்ப்பார்த்து ஏங்குவோர் பலர் இருக்க அவர்கள் தேவையை நிறைவேற்ற நாளும் கிழமையும் தேவையில்லை இதனை உணர்ந்தே, நீதி நூல்கள் அறம் செய்வதற்கு ஏற்ற காலம்நேரம் என்று எதையும் குறிப்பிடவில்லை. எல்லா நேரங்களிலும் இன்றபோதெல்லாம் அறம்செய்க என்றே வலியுறுத்துகின்றன. “அன்றறிவா மென்னா தறஞ்செய்க”(குறள் 36) என்கிறது திருக்குறள். இக்கருத்தினையே நாலடியாரும், ‘அறத்தைப் பிற்காலத்தில் செய்யலாம் எனத் தள்ளிப்போடாது உடனே செய்யவேண்டும். இறப்பு ஒருவனுக்கு எப்போது வேண்டுமானாலும் நேரலாம் ஆகையால் இளமையிலேயே நினைத்த மாத்திரத்திலேயே  அறத்தைச் செய்த்து முடிக்க’ (நாலடி. 9) என்கிறது. கூற்றுவன் வரும்முன் அறம் செய்க(நன்னெறி 30) இறப்பு வந்தே தீரும் ஆதலால் அறம் செய்க.(பழமொழி நானூறு. 137), மூதாதையர்கள் தாம் பாடுபட்டுச் சேர்த்த பொருளை இறந்தபின் கொண்டுபோவதில்லை என்பதை உணர்ந்து காலங்கடத்தாது அறம் செய்க.(பழ. 303) மேலும் மனமானது உடனுக்குடன் மாறும் தன்மை கொண்டது என்பதை உணர்ந்த அறநூல்கள் ‘உடலும் உள்ளமும் ஒன்றி இருக்கும்போதே செய்ய நினைத்த அறங்களைச் செய்து முடிக்க’(பழ. 261)என அறிவுறுத்துகின்றன.

அறத்தின் பயன்

அறம் மகிழ்வைத் தரும்; அறம் பழிவராது தடுக்கும்; அறமே அழிவிலிருந்து காக்கும்; அறமே ஆக்கம் தரும்; அறத்தான் வருவதே இன்பம்; அறம் செய்தால் தேவர் உலகம் கிட்டும் ; அறம் செய்தால் புகழ் பெறலாம் (பழ. 302)

 அறம் கூறும் முறைமை

அறநூல்கள் அன்பு, அறம், ஈகை, இரக்கம், விருந்து, நன்றி, அடக்கமுடைமை, புறங்கூறாமை, ஒழுக்கம், அழுக்காறாமை, அருளுடைமை, கொல்லாமை, வாய்மை, இன்னாசெய்யாமை, வெகுளாமை, நிலையாமை, நடுவுநிலைமை, பொறை உடைமை எனப் பல்வேறு அறங்களை வலியுறுத்துவதோடு மட்டும் அமையாமல் மனிதனை அறம் செய்வதற்குப் பக்குவப் படுத்துகின்ற வகையில் மேற்குறித்தவாறு கூறப்படும் அறங்களைப்  போற்றுவதால் பெறும் பயன், அதை பின்பற்றாமல் போனால் ஏற்படும் தீங்கு, அதை எவ்வாறெல்லாம் நிறைவேற்ற வேண்டும், தவிர்க்க வேண்டியவை எவை, தவறாமல் செய்யவேண்டியவை எவை, நல்லவை எவை, தீயவை எவை, செய்யவேண்டிய கடமைகள் யாவை, மனிதனின் இயல்புகள் எப்படிப்பட்டவை, சூழலுக்கேற்ப எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பன போன்ற பல்வேறு வழிகாட்டுதல்களையும் அறநூல்கள் எடுத்துரைப்பனவாக கட்டமைக்கப்பட்டுள்ளன.

            மேற்குறித்தவாறு அறநூல்கள் அறங்களை எடுத்துரைக்கும் தன்மைக்கு எடுத்துக்காட்டாக திருக்குறளின் அறந்துப்பாலில் அமைந்த குறட்பாக்கள் சிலவற்றை உதாரணமாகக் காணலாம். கட்டுரையின் புரிதல் கருதி வகைமாதிரியாக சிலவற்றை மட்டும் சுட்டிக்காட்டும் தன்மையில் கீழ்வருவன அமைந்துள்ளன. அறநூல்கள் முழுமையையும் இத்தகைய கண்ணோட்டத்தில் அனுகினால் இன்னும் பலவாறாகப் பகுத்து நுண்ணிதின் உணரலாம்.

அறம் கூறுதல்


ஒருவனை ஏமாற்றத் தூண்டுவது ஆசை. எனவே அதற்கு அஞ்சி நடப்பது அறம்.(366)

 

மனித வாழ்க்கையின் தலை சிறந்த அறம், பிற உயிரைக் கொல்லாதிருப்பதும், பொய் சொல்லாதிருப்பதுமே ஆகும்.(323)

பண்பும் பயனும் எடுத்துரைத்தல்


மாசற்ற நிலைமை என்பது ஆசையற்ற தன்மையினால் வருவது. அந்த உண்மையை விரும்பிக் கடைப்பிடித்தா மற்றவை கைகூடும். (364)

 

சிறிதேனும் எண்ணிப் பார்க்காமல் இன்னொருவனுடைய மனைவியின்மேல் காமங்கொண்டு அவனுடைய வீட்டுக்குள் நுழைகிறவன் வேறு என்ன சிறப்புடையவனானாலும் என்ன பயன்?

வரையறுத்தல்


இல்லாதவர்களுக்குக் கொடுப்பதுதான் ஈகை. மற்ற எல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையுள்ளவை.(221)

 

மனத்தில் ஆசைப்படுவதை ஒழித்தவர்களே பற்றற்ற துறவிகளாவார்கள்; மற்றவர்கள் அப்படியாகத் துறந்துவிட்டது ஒன்றுமில்லை.(365)

         

வாய்மை என்பது என்னவென்றால், யாருக்கும் எந்த விதமான தீமையும் உண்டாக்காத வார்த்தைகளைப் பேசுவது. (291) 

பெருமை உணர்த்தல்


எதிலும் ஆசை வைக்காதிருப்பதைப் போன்ற குறைவற்ற செல்வம் இந்த உலகத்தில் இல்லை. வேறு எந்த உலகத்திலும் அதற்கிணையான செல்வம் இருக்க முடியாது.(363)

 

புலாலுக்காகக் கொல்லாதிருப்பவனும் பிறன் கொன்று விற்கின்ற புலாலை உண்ணாதிருப்பவனும் எல்லாச் சீவராசிகளாலும் வணங்கத்தக்கவன்.(260)

 

தன்னிடம் யாசிப்பவனுக்கு இல்லை என்னும் துன்பந் தரக்கூடிய வார்த்தையைச் சொல்லாமலிருப்பதும், தன்னால் கொடுக்கக் கூடியதை உடனே கொடுப்பதும் நல்ல இனத்தைச் சேர்ந்தவனிடத்தில் தான் உண்டு.(223)

அறிவுறுத்துதல்


பிறர் புகழும்படி நடந்து கொள்ளத் தெரியாதவர் தம்மைத் தாமே நொந்நுகொள்ள வேண்டுமேயன்றித் தம்மை இகழ்வாரை நொந்துகொள்வதில் என்ன பயன்? (237)

 

ஒருவன் பற்றுக்களை எல்லாம் விட்டொழிக்க விரும்பினால் ஐந்து இந்திரியங்களோடும் போராட வேண்டும். அவை விரும்புகிற எல்லா இன்பங்களையும் விட்டொழிக்க வேண்டும்.(343)

 

உன்னுடைய பொருளாதாரத்தின் அளவை அறிந்து அதற்குத் தக்கபடி கொடு; அதுதான் செல்வத்தைப் பாதுகாத்துப் பயன்படுத்திக்கொள்ளும் வழி.(477)

சிறப்புரைத்தல்


அவிர்ப் பாகங்களைக் கொட்டி ஆயிரம் யாகங்களைச் செய்வதைவிட உண்பதற்கென்று ஓர் உயிரைக் கொல்லாதிருப்பது மேல். (259)

 

ஒருவன் அறம் என்பதையே அறியாதவனாக அறம் அல்லாத காரியங்களைச் செய்கிறவனாக இருந்தாலும் அவன் கோள் சொல்ல மாட்டான் என்பது சிறப்புடையது.(131)

விளைவுகளை எடுத்துரைத்தல்


புகழ் பெறவேண்டும் என்ற உணர்ச்சி இல்லாத வெறும் உடல்களான மக்கள் மிகுந்துள்ள ஒரு நாட்டில் குற்றமற்ற செல்வ வளமும் அதன் பயன்களும் குன்றியதாகத்தான் இருக்கும். (239)

 

பிறருக்குச் சொந்தமான பொருளைத் திருடிக்கொள்ளலாமென்று மனத்தில் நினைப்பதுங் கூடத் தீமை உண்டாக்கும். (282)

 

தன் மனச்சாட்சி சரியென்று அறிந்ததைப் பொய்யாக்கி விடக்கூடிய எதையும் சொல்லக்கூடாது. மனச்சாட்சியைப் பொய்யாக்கி விட்டால் பிறகு தன் மனச் சாட்சியே இடுத்துத் தன்னை வருத்தப் படுத்தும்.(293)

காரணகாரியத் தொடர்புரைத்தல்


பற்றுக்களை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறவர்களைப் பிறவித் துன்பங்களும் விடாமல் பற்றிக்கொண்டே இருக்கும். 347

 

பொறாமை என்ற பாவம் செல்வத்தையும் அழித்து, பல தீமைகளிலும் தள்ளிவிடும்.(168)

விளையும் பயனை எடுத்துரைத்தல்


ஆசைகளை முற்றிலும் விட்டொழித்தால் துன்பமற்ற நிலையான பிறவாமை வர வேண்டிய முறையில் தானாகவே வந்துசேரும்.(367)

 

சந்தேகம் இல்லாமல் மெய்ப்பொருளைத் தெளிவாக அறிந்துவிட்டவர்களுக்குப் பிறவிக்கு இடமாகிய வையகத்தை விடப் பிறவாமைக்கு இடமாகிய வானகமே எளிதிற் கிடைப்பதாகும்.(353)

 

பொய் சொல்லாதிருப்பதை விடப் பெருமை தரக் கூடியது வேறொன்றுமில்லை. அது வேறெந்த முயற்சியும் இல்லாமலே மற்றெல்லாத் தர்மங்களையும் செய்யும் பயன் உண்டாக்கும்.(296)

 

நல்ல எண்ணத்தோடு நல்ல சொற்களையே பேசினால் பாவங்கள் குறைந்து புண்ணியம் அதிகமாகும். (96)

உலகியலை எடுத்துரைத்தல்


அருளில்லாதவன் நடத்துகின்ற துறவறம் புத்தி தெளிவில்லாத பைத்தியக்காரன் மெய்ஞ்ஞானத்தை விளக்கிச் சொல்லுவதற்கு ஒப்பாகும்.

 

தம்முடைய சக்தியை அளந்து அறிந்துகொள்ளாமல் வெறும் ஆவேசத்தில் ஒரு காரியத்தை ஆரம்பித்து அதை முடிக்க முடியாமல் இடையில் விட்டுவிட்டுக் கெட்டுப்போனவர்கள் உலகத்தில் பலர் உண்டு.(473)

விளைவுகளைக்கூறி எச்சரித்தல்


எந்த ஒரு பொருளையும் உடைமையாக வைத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் துறவறத்தின் முறை; உடைமை என்பது இருந்தால், அது துறவறத்தைக் கெடுத்து, விட்டுவிட்ட பற்றுக்களில் மீண்டும் ஈடுபடுவதாக நம்மை ஆக்கிவிடும்.(344)

 

பற்றுக்களை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறவர்களைப் பிறவித் துன்பங்களும் விடாமல் பற்றிக்கொண்டே இருக்கும்.(347)

 

ஒரு மரத்தின் நுனிக்கொம்பின் உச்சிக்குப் போய்விட்டவன் அதற்கு மேலும் ஏற முயன்றால் உயிருக்கே முடிவு வந்துவிடும்.(476)


நன்மை தீமைகளை எடுத்துரைத்தல்


ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இருக்காது. ஆசை இருந்தால் துன்பங்கள் அடிக்கடி வந்துகொண்டே இருக்கும்.(368)

இதனினும் இது சிறந்தது


தர்மநெறி தவறாமல் மனைவி மக்களோடு இல்வாழ்க்கை நடத்தினால் ஒருவன் துறவறத்துக்குப் போய் அடையக்கூடிய நன்மை என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை(46)

 

நாம் அடைய வேண்டுமென்று விரும்புகிற செல்வங்களுக்குள் நல்லறிவுடைய குழந்தைகளைப் பெறுவதைக்காட்டிலும் சிறந்தது வேறு இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. (61) 

ஆற்றுப்படுத்துதல்


நல்வினைப் பயனாக நன்மை வருகிறபோது இன்பமடைகிற மனிதன். தீவினைப் பயனாகத் தீமை வருகிறபோது ஏன் துன்பப்பட வேண்டும் (379)

 

பழவினையைவிட வல்லமையுள்ளது என்ன இருக்கிறது? அதை விலக்கிவிட என்ன உபாயங்களைச் செய்தாலும் அதுதான் முன்னால் வந்து நிற்கும்.380

இதைச் செய்தால் இதை அடையலாம்


எவ்வளவு கிடைத்தாலும் அடங்காத தன்மையுள்ளது ஆசை; அதை அடக்கிவிட்டால் அப்போதே பிறப்பில்லாத பேரின்ப நிலை வந்துவிடும்.(370)

 

நான், என்னுடையது என்ற மயக்கங்களை விட்டவனே தேவர்களுக்கும் மேலான வீட்டின்பத்தை அடைவான்.(346) 

வேண்டப்படுவது வேண்டாதது

 

ஒருவன் தன் வாழ்நாளில் செய்யவேண்டும் என்பது அறச்செயல்தான். செய்யாமல் விலக்கிவிட வேண்டும் என்பது பழி பாவச் செயல்களேயாம்.(40)

 

பயனுள்ள வார்த்தைகளையே, ஆராய்ந்து பொறுக்கியெடுத்துப் பேசவேண்டும். வீண் வார்த்தைகளை ஆராய்ந்து பொறுக்கியெடுத்து விலக்க வேண்டும்.(200)

 

தீர ஆராய்ந்து அறிந்துகொண்ட பின்புதான் காரியத்தை ஆரம்பிக்கவேண்டும். ஆரம்பித்துவிட்டுப் பிறகு ஆராய்ந்துகொள்ளலாம் என்பது குற்றம்.(467)

முடிவுரை

மனித மனத்தில் அற உணர்வை எவராலும் கட்டாயப்படுத்தி ஏற்படுத்திவிட முடியாது. அது தான் வாழும் சமூகத்தின்பால், அதில் வாழும் சக உயிர்களின்பால் தானாகவே சுரக்கும் கருணை ஊற்று; காலந்தவறாதும் கைம்மாறு கருதாதும் கடமையாற்றும் கார்கால மழை; அதனால் தான் பிற்காலத்தே அறம் கூற வந்த  அவ்வையாரும்  ‘அறம் செய விரும்பு’ என உரைத்தார் போலும்.

திருவள்ளுவர் அறம் என்பதைப்பற்றி மட்டும் எடுத்துச் சொல்லாமல் அதைக் கடைப்பிடிப்பதால் பெறும் ஏற்றத்தையும், கடைப்பிடிக்காமல் போனால் எற்படும் விளைவுகளையும், எடுத்துக்கூறி உலகியல் உணர்த்தி சான்று காட்டி அதனை எடுத்துரைக்கிறார். அதனால் தான் இந்நூலின் ஒவ்வொரு அறக்கருத்தும் ஒரு பொருள்மேல் பத்தடுக்கியவையாக இயற்றப்பட்டுள்ளது.  மனித வாழ்வில் தோன்றும் சிக்கல்களை ஆராய்ந்து அதற்கு தீர்வு கூறுவதாகவும் வழிகாட்டுவதாகவும் திருக்குறள் அமைந்துள்ளதை மேற்குறித்த எடுத்துரைப்பு முறைகளிலிருந்து உணர முடிகிறது.

அறநூல்கள் குற்றங்களுக்குத் தண்டனை வழுங்கும் சட்ட நூல்கள் அல்ல. அவை மனிதர்கள் பிறர்க்குத் தீங்கு செய்யாமலும், பிறர் செய்யும் தீங்கிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் பயன்படும் அரண் நூல்களாகத் திகழ்கின்றன என்பதும் அறநூல்களை நன்கு உணர்ந்தோர்க்குப் போதரும்.


துணை நின்ற நூல்கள்

1.    திருக்குறள், நாமக்கல் வெ. ராமலிங்கம்பிள்ளை (உ. ஆ.), பாரதி பதிப்பகம், சென்னை, 1990.

2. க. த. திருநாவுக்கரசு, திருக்குறள் நீதி இலக்கியம், சென்னைப் பல்கலைக் கழகம், 1971

3. க. ப. அறவாணன், அற இலக்கியக் களஞ்சியம், தமிழ்க்கோட்டம், சென்னை, 2011.

4.   ராஜ் கௌதமன், தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், விடியல் பதிப்பகம், கோவை, 2008.

5. மணிமேகலை, ந.மு. வேங்கடசாமி நாட்டார்(உ.ஆ.),  சாரதா பதிப்பகம், சென்னை, 2009.

6.       www.agarathi.com

7.       http://www.jeyamohan.in/26673#.Way1fTXhXIU.


ச. நீலமேகன்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஏனாத்தூர் – காஞ்சிபுரம், 631 561

 

  

அற இலக்கியங்களில் ஈகை



அற இலக்கியங்களில் ஈகை

தமிழின் மிகத் தொன்மையான இலக்கியமான சங்க இலக்கியத்திலிருந்து சமகால இலக்கியங்கள் வரை காலந்தோறும் வலியுறுத்தப்பட்டு வரும் அறங்களில் ‘ஈகை’யும் ஒன்று. இத்தனை நெடுங்காலமாக ஒரு அறம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறதென்றால் இந்தச் சமுதாயம் நீண்ட நெடுங்காலமாக முன்னேறாமல் முன்னிருந்தபடியே அப்படியே கிடக்கிறது என்பதையே காட்டுகிறது.

மனிதகுல வளர்ச்சியில் ஆதிப் பொதுவுடைமைச் சமூகம் மறைந்து தனியுடைமை என்று தோன்றியதோ அன்றே சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளும் வர்க்க பேதங்களும் கால்கொள்ளத் தொடங்கிவிட்டன. இதன் விளைவு ஒருவனை அண்டி மற்றொருவன் வாழ வேண்டிய நிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டார்கள். இந்நிலையில் இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுத்து உதவ வேண்டிய தேவை ஏற்பட்டது. இத்தகைய உதவிக்கு சமூகம் ஈகை எனப் பெயர்சூட்டி பொருள் கொடுத்தவர்களை வள்ளல்களாக்கியது. போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது.

கொடுக்கப் பொருள் இருந்தும் கொடுக்க மனமில்லாதவனை கொடுக்கச் செய்வதற்காகவும் அவர்களை மனதளவில் அதற்கு இனங்கச் செய்வதற்காகவும் கற்றறிந்த அறிவாளிகள் உலகியல்புகளை எடுத்துக்கூறியும் நிலையாமையை எடுத்துரைத்தும் அறிவுறுத்த வேண்டி அறநூல்கள் பல இயற்றி சமூகத்தை வழிநடத்திச் சென்றனர். இதனடிப்படையில் அறநூல்களில் ஈகை என்னும் அறத்தை வளர்க்க அறநூலார் எவ்வாறெல்லாம் முயன்றனர் என்பதை இக்கட்டுரை விளக்க முயல்கிறது.

ஈகை – விளக்கம்

            முதலில் ஈகை என்றால் என்ன? அதன் இயங்கு பொருள் என்ன? என்பதை நோக்கும்போது ஈகை என்ற சொல்லுக்குக் கொடுத்தல் என்றும், அதுவும் இல்லாதவர்க்குக் கொடுத்தல் என்றும் அகராதிகள்  விளக்கமளிக்கின்றன. ஈகை என்னும் அறம் குறித்துப் பேசவந்த வள்ளுவரும்,

                                     வறியார்க் கொன்றீவதே ஈகை மற்றெல்லாம்
                                    குறியெதிர்ப்பை நீர துடைத்து.                  (குறள். 221)

 

என இல்லாதவர்களுக்குக் கொடுப்பதுதான் ஈகை. மற்ற எல்லாம் பிரதிபலனை எதிர் பார்த்துக் கொடுக்கும் தன்மையுள்ளவை என்று குறிப்பிடுகிறார். இதனை நாலடியாரும்,


ஏற்றகைம் மாற்றாமை என்னானுந் தாம்வரையா

தற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் - ஆற்றின்

மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்

பொலிகடன் என்னும் பெயர்த்து.            (நாலடி – 98)

எனக் குறிப்பிடுகிறது. வறியவர்களின் பசிப்பிணியைத் தீர்க்கவேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தும் மணிமேகலைக் காப்பியமும்,

 

ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்க ளரும்பசி களைவோர்

மேற்றே யுலகின் மெய்நெறி வாழ்க்கை

மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே                                                                                           (மணிமேகலை. 11:92-96)

எனக்கூறி பொறுக்கும் வன்மையுடையோராகிய செல்வர்க்கு அளிக்கின்றவர்கள் அறத்தினை விலை கூறுவோரேயாவர். வறிஞர்களின் தீர்த்தற்கரிய பசியை நீக்குவோரின் கண்ணதே உலகத்தின் உண்மை நெறியாகிய வாழ்க்கை அணுக்கள் செறிந்த நிலவுலகில் வாழ்வோர்களில் எல்லாம் உணவினை அளித்தோரே உயிர்கொடுத்தோராவர்

பதில் உதவியை எதிர்பார்த்து செய்யும் உதவி, புகழை எதிர்பார்த்து செய்யும் அறம் ஆகியன பெருமைப் படத்தக்கதன்று. அது செய்த வேலைக்குக் கூலி பெறுவதைப் போன்றது(பழ. 40) என்கிறது பழமொழி நானூறு. மேலும் மனமகிழ்ச்சியில்லாமற்கொடுப்பதும் ஈயாமையை ஒக்கும் என்கிறது நாலடியார்.(279) மேற்குறித்த சான்றுகளைக் கொண்டு ஈகை என்பது கைம்மாறு எதிர்ப்பார்க்காது இல்லாதவர்க்குக் கொடுப்பது என்பது போதரும்.

ஈகையும் புகழும்

நிலையில்லாத மனித வாழ்க்கையில், ஒருவன் மறைந்த பின்னும் நிலைத்திருப்பது அவனது புகழ்மட்டுமே. அத்தகைய புகழை ஈகை என்னும் பண்பினால் மட்டுமே பெறமுடியும். என்பதை, 


“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்,

தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே” (புறம். 165:1-2)

எனப் புறநானூறு வலியுறுத்துகிறது. வள்ளுவரும் ஏழைகளுக்குக் கொடுப்பதையும் அதனால் புகழப்பட்டு வாழ்வதையும் தவிர இந்தப் பிறவியினால் அடையக்கூடிய பயன் வேறு எதுவும் இல்லை என்பதை,

                                     ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
                                    ஊதியம் இல்லை உயிர்க்கு                         (குறள். 231)

எனக் கூறி மற்றவர்க்கு ஈதலை வலியுறுத்தினார். மேலும், இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழாலும் புலவர்களால் போற்றப்படுவது இரந்து நிற்கும் ஏழைகளுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுத்தவர்களது புகழைப் பற்றித்தான்(குறள். 232) என்றும், இத்தகையோர் தாம் வாழும் காலத்தில் ஏழைகளுக்குக் கொடுத்துப் புகழ் வரக்கூடிய காரியங்களைச் செய்துவந்தால் அவர்கள் தேவலோகத்தைப்பற்றி ஆசைகொள்ள வேண்டியதில்லை(குறள். 234) என்றும் குறிப்பிடுகிறார். இவை ஈதல் என்னும் அறப்பண்புடையவர்களுக்குச் சமூகத்திலிருந்த மதிப்பினைப் புலப்படுத்துகின்றன.

நாலடியார், நான்மணிக்கடிகை, முதுமொழிக் காஞ்சி ஆகிய அறநூல்களும், ஈகைபோல் புகழ்தருவது வேறில்லை(முது. 6:10) ஈகைக் குணமுடையவர்கள் புகழ் மூவுலகத்திலும் கேட்கும்(நாலடி. 100). புகழ் நிலைபெற வேண்டுமானால் அறம் செய்ய வேண்டும் (நான்மணி.  15, 59) எனக் குறிப்பிடுகின்றன. ஔவையின் நல்வழியும் உலகிலுள்ளவர்களில் ஏழைகளுக்குக் கொடுப்பவர்களே உயர்ந்த சாதியினர். கொடுக்காதோர் இழிந்த சாதியினர். (நல்வழி 2) எனக்கூறி கொடையாளர்களைப்  போற்றுகிறது.

ஈகைப் பண்புடையவர் தகுதி

ஈகைப் பண்புடையவரின் தகுதியைக் குறித்தும் அற இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அவை பணத்தை நோக்காது குணத்தை நோக்கியதாகவும் நற்குடிப்பிறப்பை நோக்கியதாகவும் அமைந்துள்ளதை கீழ்காணும் கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன.

 

o   தன்னிடம் யாசகம் கேட்டு வந்தவனுக்கு இல்லை என்று சொல்லித் துன்பம் தராமல், இருப்பதைக் கொடுத்து உதவும் பண்பு நற்குடிப் பிறந்தவரிடம் இருக்கும். (குறள். 223)

 

o   பசியைப் பொறுத்துக்கொள்ளும் தவசிகளைக் காட்டிலும் உயர்வானவர்கள், பிறர் பசியைத் தீர்க்கும் கொடையாளிகளாவர். (குறள். 225)

 

o   ஒருவரின் ஈகையை அவரின் கொடைத்தன்மையால் அறியலாம். (முது. 2:2)

 

o   தன் தந்தை கொடுத்ததால் வறுமை அடைந்தார் என்று புதல்வர்கள் மறுப்புச் சொல்லாமல் கொடுப்பர். அக் கொடைக் குணம் வழிவழி வருவது. (நன். 17)

ஈகையின் பயன் கூறி அறம் செய்யத் தூண்டுதல்

அற இலக்கியங்கள், “செல்வத்துப் பயனே ஈதல்”(புற.189:7), “மேல் உலகம் இல் எனினும், ஈதலே நன்று”(குறள்.222) என அறங்களை வலியுறுத்துவதோடு அதனைச் செய்வதால் பெறக்கூடிய பயன்களையும் பட்டியலிடுகின்றன. ஈதலால் இன்பம் கிடைப்பதால், ஈகையை “ஈத்து உவக்கும் இன்பம்”(குறள். 958) என்றும், பசித்தவர்க்கு உணவளித்தல் தவம் செய்வதைக் காட்டிலும் சிறந்தது(குறள். 225) என்றும் கூறுகிறது திருக்குறள். இத்தகைய ஈகை, பயன் கருதாது கொடுக்கப்படுவதாக இருத்தல் வேண்டும் என்றும், அப்படி இல்லாமல் புகழ் ஒன்றையே நோக்கி செய்யும் அறம் பெருமைக்குரியதன்று. அது செய்த வேலைக்குக் கூலி பெறுவதை ஒத்தது.(பழ. 40) என்றும் அறநூல்கள் குறிப்பிட்டிருப்பினும் அத்தகைய அறநூல்களிலேயே ஈகையால் வரும் பயன் குறித்து நிரம்ப விவரிக்கப்பட்டுள்ளது. இதனைக் கீழ்காணும் சான்றுகள் விளக்கும்.

 

o   மற்றவர்க்கும் பகிர்ந்துகொடுத்து உண்ணும் பழக்கமுடையவனைப் பசி என்னும் நோய் தீண்டாது (குறள். 227).

 

o   இளமையிலேயே அறஞ் செய்தவர் புண்ணிய உலகம் புகுவர். (நாலடி. 5)

 

o   கொடைக் குணம் வாய்ந்த மாந்தர்க்கு சொர்க்க உலகத்துக் கதவுகள் திறந்தே இருக்கும், அவர் புகழ் மூவுலகங்களிலும் கேட்கும் (நாலடி. 91, 100).

 

o   “அறம் செய்க! அஃதன்றோ எய்ப்பினில் வைப்பு”, “நல்லறம் செய்வது செய்யாது, கேள்”, “அறம் செய்ய அல்லவை நீங்கிவிடும்”, “கொடுத்து, ஏழை ஆயினார் இல்” (பழ. 37, 134, 159, 218). அறம் செய்வோர்க்கு இவ்வுலகத்திலும் மறுஉலகத்திலும் இனிமையும் புகழும் கிடைக்கும். அறிவுடையோர் இம்மையில் இயன்ற அறத்தைச் செய்து மறுமையில் மிக்கபேற்றைப் பெறுவர். கொடுப்பதால் செல்வம் மென்மேலும் பெருகும். (பழமொழி  6, 302, 344, 380)

 

o  இவ்வுலகில் புகழ் நிலைபெற வேண்டுமானால் அறம் செய்ய வேண்டும். அவ்வாறு கொடுத்து உண்பவன் புகழப்படுவான். (நான்மணி.  15, 59)

 

o   ஈகைக் குணமுடையோர் நாடாளும் மன்னவர்க்கு இணையான மதிப்பினைப் பெறுவர். மகிழ்ச்சியுடன் வாழ்வர். பஞ்ச காலத்தில் மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து உண்பவன், தான் உண்பதற்கு முன் மற்றவர்க்கு ஈபவன், குழந்தைக்கு உணவளிப்போன் ஆகியோர் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்வர். (சிறு. 71, 76, 77)

 

o   மனைவி முதலான சுற்றத்தோடு இன்பம் பெற்று வாழ்வர்; அரசனைப் போல் வாழ்வர்; மண்ணாளும் வாய்ப்பும் செல்வச் செழிப்பும் பெற்று வாழ்வர்; பெருஞ்செல்வத்தைப் பெற்று தம் குடும்பத்துடன் இனிது வாழ்வர்;  மண்ணையும் விண்ணையும் ஆளுவர்; இல்வாழ்க்கையில் சிறப்புடன் வாழ்வர். (ஏலாதி. 50, 53, 54, 55, 70, 71)

மேற்கண்ட அறக்கருத்துக்கள் முற்கூறிய ‘பயன் கருதாது அறம்செய்ய வேண்டும்’ என்ற கருத்திற்கு முரணாகத் தோன்றினாலும் இவை அறம் செய்வதை ஊக்கப்படுத்துவதற்காகக் கூறப்பட்டதாகக் கருதலாம். பசிக்கொடுமையைப் பார்த்துப் பதைபதைத்து அதைத் தீர்க்க முயன்ற வள்ளலாரும், “சீவகாருணிய மென்கின்ற மோட்ச வீட்டுத் திறவுகோலைக் காலமுள்ள போதே சம்பாதித்துக்கொண்ட சமுசாரிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற சாதன சகாயங்களை வேண்டாமல், எக்காலத்தும் அடையாத இன்ப வீட்டை அடைந்து அவ்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து நித்திய முத்தர்களாய் வாழ்வார்கள்”(இராமலிங்க அடிகள், 1999:32) என்று குறிப்பிடுவதும் இங்கு எண்ணிப்பார்க்கத்தக்கது. 

நிலையாமையைக் கூறி அறம் செய்யத் தூண்டுதல்

            ஈகைக் குணத்தை மக்கள் உள்ளத்தில் வளர்த்திட விரும்பிய அறவோர். செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகிய மனித வாழ்வின் நிலையற்ற தன்மைகளை எடுத்துக்கூறி இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுத்துதவவேண்டி அறிவுறுத்துவதை அனைத்து அறநூல்களிலும் காணமுடிகிறது.

 

o   வாழ்நாளில் நோய், முதுமை, மரணம் ஆகியவந்தே தீரும் ஆதலால் கையில் பொருளுள்ளபோதே அடுத்தவர்க்குக் கொடுத்து உதவுங்கள்.(நாலடி. 92)

 

o   கருமி தான் சேர்த்துவைத்த பொருளைக்கொண்டு தானும் துய்க்காமல், பிறர்க்கும் கொடுக்காமல் அவன் சேர்த்து வைத்த பொருளே அவனைப் பார்த்து நகும்படி அருளை இழந்து அழிந்துபோவான். (நாலடி. 273)

 

o பிறர்க்குத் கொடுக்க மனமில்லாமல் சேர்த்துவைத்த செல்வம் அடையாளம் தெரியாத யாரோ ஒருவனால் அனுபவிக்கப்படும். (நாலடி. 274)

 

பொருளை அபகரிக்கப் பார்க்கின்றவர்கள் பலராதலின், உடனேஅறஞ் செய்துவிடுதல் நல்லது(பழ. 259), தன் பெற்றோர்கள் இறந்தபோது அவர்கள் சேர்த்த பொருள்களை உடன்கொண்டுசெல்லாது அப்படியே விட்டு வெறுங்கையொடு சென்றனர் என்பதை உணர்ந்தாவது இயன்ற அளவு அறம் செய்க. (பழ. 303).

 

o   செல்வம் நிலையில்லாதது ஆதலால் இருக்கும்போதே கொடுத்து உதவுங்கள் (நல்வழி. 32)


எனவரும் அறக்கருத்துக்கள் நிலையாமையை எடுத்துக்கூறி அறம்செய்ய வலியுறுத்துகின்றன.

ஈகையின் அளவு

அறநூல்கள் “ஈதற்குச் செய்க, பொருளை”(திரி. 90) எனக் கூறி அறம் செய்வதற்காக பொருளை ஈட்டச் சொல்லி அறிவுறுத்துகின்றன. அவை மிகுந்த பொருளைக் கொடுத்துச் செய்வதுதான் ஈகை எனக் கூறாது, அவரவரின் பொருள் நிலைமைக்கேற்பவே அறம் செய்யச் சொல்லி வற்புறுத்துகின்றன. தம்மிடம் குறைவான பொருள் இருந்தபோதும் அதற்கேற்ப சிறு அறங்களைச் செய்க என நாலடியாரும்(272), இயன்ற அளவு ஈகை செய்கஎன இனியவை நாற்பதும்(6), “ஆற்றும் துணையும் அறம் செய்க!” எனப் பழமொழி நானூறும்(137), கொடுப்பது சிறிதாக இருந்தாலும் மனம் விரும்பிக் கொடுக்க எனச் சிறுபஞ்சமூலமும்(63)   குறிப்பிடுகின்றன.


“தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்

உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;

ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,

சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,

உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்” (புறம். 204:5-9)

 

என்ற புறப்பாடல் அடிகளில் பெரிய பரப்பளவுள்ள கடல்நீரை தாகமுற்றோர் உண்ணமாட்டார். உண்ணும் தன்மை உடைய நீராயின் ஆவும் மாவும் கலக்கிய சிறிதளவு நீர் எனினும் அதை நாடிச்செல்வோர் பலர். என ஒருவனின் கொடைத்தன்மை மனத்தால் வருவது அப்படிப்பட்ட கொடைக்குணம் கொண்டவன் கொடுக்கும் பொருள் சிறிதெனினும் அவனையே மக்கள் நாடுவர். எனச் சுட்டப்பட்டுள்ளது மனங்கொள்ளத்தக்கது. இக்கருத்தினையே நாலடியாரும்,

 

“எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்

அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்” (நாலடி. 275)

 

எனக் குறிப்பிடுகிறது. எனவே ஈகை என்பது அளவைப் பொருத்ததன்று கொடுக்கும் குணத்தைப் பொருத்ததே என்பதை அறநூல்கள் புலப்படுத்துகின்றன.

ஈகைக் குணமற்றவர்க்கு வரும் தீங்கு

“‘ஈ’என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர், ‘ஈயேன்’ என்றல் அதனினும் இழிந்தன்று”(புறம். 204:1-2) என கொடுக்க மறுப்போரின் இழிநிலையை புறநானூப்பாடல் இயம்புகிறது. பின்வந்த அறநூல்களும், ஈயாரின் இழிநிலை குறித்தும் அவர்களுக்கு வரும் தீங்கினைக் குறித்தும் பின் வருமாறு குறிப்பிடுகின்றன.

 

o   அறவழியிற் பொருளைச் செலவு செய்யாதவர், ஒரு காலத்தில் தேனீயைப்போல அப்பொருளை இழந்துவிடுவர்.(நாலடி. 10)

 

o   முற்பிறப்பில் பிச்சை இடாதவர்களே இப்பிறப்பில் பிச்சை எடுக்கின்றனர். (நாலடி. 94)


o அறம் செய்வதைப் பிறகு பார்த்துக்கொள்வோம் என்று பொருளைச் சேர்த்து வைப்போர் துன்பத்தில் தவிப்பர். (நாலடி. 272)


o   ஈயாதார் செல்வம் மெல்லமெல்ல அழிந்துபோகும்.  (பழ. 343)

 

o தம்மிடமுள்ள பொருள் கொண்டு தாம் மட்டுமே உண்டு வாழ்பவர்களுக்கு சொர்க்கத்தின் கதவுகள் திறப்பதில்லை. (நாலடி .271)

 

o   இயன்ற அளவு அறங்களைச் செய்யாதவர் தாமும் பயன் கொள்ளாது, பிறரையும் பயன்கொள்ள விடாது இறந்துபடுவர். (பழ. 379)

 

o கருமிகள் சேர்த்து வைத்த பொருள்களைத் திருடர்கள் கொள்ளைகொண்டு போவர். (கொன்றை . 4)

 

உலோபிகள் தம்மைத் துன்புறுத்தும் கொடியவர்களுக்கன்றி, அவர்களின் நலத்துக்காகப் பாடுபட்ட பெற்றோர் முதலாயினோருக்குக் கொடுப்பதில்லை.(நல்வழி. 18)

 

மேற்குறித்த அறக்கருத்துக்கள், ஈகை என்னும் பண்பு இல்லாதவர்களுக்குப் புகழ் கிட்டாததோடு அவர்கள் நரகத்தில் இடர்பட்டும், இனிவரும் பிறவிகளில் துன்பத்தில் உழன்றும் இடர்ப்படுவர் என அவர்களுக்கு வரும் தீங்கினை எடுத்துக்கூறி எச்சரிக்கின்றன. வள்ளுவர் இவற்றுக்கெல்லாம் ஒருபடி மேலேபோய், “கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉ மின்றிக் கெடும்”(குறள். 166) என கொடுப்பதைத் தடுப்பவனின் நிலையை எடுத்துரைக்கிறார்.

யாருக்கெல்லாம் ஈதல் வேண்டும் 

அறநூல்கள், யார் யாருக்கெல்லாம் ஈதல் வேண்டும் என்பதைக் குறித்து ஒரு பெரும் பட்டியலிடுகிறது.

 

o   நண்பர், பகைவர் என்ற பாரபட்சம் பாராது எல்லோர்க்கும் பகுத்தளித்து உண்ணுதல் வேண்டும்.(நாலடி. 271)

 

o   தம்மிடம் பொருள் வேண்டி வருபவரின் தகைமையைக் கருதாது கொடுத்தல் வேண்டும். (பழ. 381).

 

o   வலிமை இழந்தவர், வயது முதிர்ந்தோர், நோயினால் நலிவடைந்தவர், வடக்கிருந்து உண்ணாநோன்பு இருப்போர், புலம்பெயர்ந்து துன்புறுவோர் ஆகியோரின் தளர்வு நீங்க வேண்டியன அளித்தல் வேண்டும். (சிறு. 71)

 

o   போர்க்களத்தில் புண்பட்டவர், அனாதைகள், உயிருக்குப் போராடுவோர், பார்வை இழந்தவர், காலில்லா முடவர். (சிறு. 76)

 

o   கால் இல்லாத முடவர், கண் இல்லாத குருடர், ஊமை, அநாதை, கல்லாதார், வீடிழந்தவர், சேர்த்த செல்வத்தை இழந்தவர், நெல்லை இழந்தவர், கால்நடைச் செல்வமான பசுக்களை இழந்தவர், கடன்பட்டவர், வறியோர், பெற்றோர்களை இழந்தவர், பார்ப்பார், பசித்தார், தவசிகள், குழந்தைகள், குடும்பத்தினரால் வெறுத்தொதுக்கப்பட்டோர், குழந்தைப் பெற்றவர், பிரசவ வேதனையில் இருப்போர், கருப்பமுற்ற பெண்கள், பித்தர்கள், வாதநோயால் துன்பப் படுவோர், குற்றத்தின் காரணமாக அரசனால் தண்டிக்கப்பட்டோர், தாக்கப்பட்டவர்கள், நலிந்தோர், பெண்கள், நோயால் வருந்துவோர், பொருள் இல்லாதவர், வழிப்போக்கர், சுமைதாங்கிக் களைத்தோர், உறவினர், தென்புலத்தார், புலம்பெயர்ந்து வந்தோர், தாயிழந்த பிள்ளை, கணவனை இழந்த மனைவி, வணிகத்தில் பொருள் இழந்தோர், புலையர், புண்பட்டார், போக்கற்றவர், மேன்மை இழந்தவர்(ஏலாதி 36, 52, 53, 54, 55, 56, 70, 71, 78, 80). என மேற்குறித்த நிலையிலுள்ளவர்களுக்கு உணவளித்தும், நோய் நீங்க உதவிசெய்தும் மனிதர்கள் வாழவேண்டியதன்  அவசியத்தை அறநூல்கள் எடுத்துக்கூறுகின்றன.

கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல்

ஈகை என்னும் அறம் மிகத் தொன்மையானது இதனைத் தொல்காப்பியம் தொடங்கி தொகைநூல்களான சங்க இலக்கியத்திலும் குறிப்பிடப்படும் ஈகை குறித்த செய்திகள் நமக்குத் தெரிவிக்கின்றன. இத்தகைய ஈகைக் குணம் கொண்டவர்களைப் போற்றுதலும், ஈகைக் குணமற்றவர்களைப் பழித்தலும் பழஞ்சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளதை, “கொடுப்போர் ஏத்திக் கொடா அர்ப் பழித்தலும்” (தொல். பொருள். புற. நூ. 87) என்ற தொல்காப்பிய நூற்பா காட்டுகிறது. இதற்குச் சங்கப் பாடல்களில்(புறம். 140,107, 196, 127)  நிரம்ப சான்றுகள் உள்ளன. அறநூல்களின் வாயிலாகவும் இத்தகைய சமூக நடைமுறை வழக்கத்தில் இருந்துள்ளதை பல்வேறு இடங்களில் அறியமுடிகிறதெனினும், திருக்குறளில் வரும் ‘நன்றியில் செல்வம்’ என்ற அதிகாரமும் நாலடியாரில் ‘ஈயாமை’ என்ற அதிகாரமும் மிகத்தெளிவாகக் காட்டுகின்றன.

பொருளிருந்தும் அதைத் தானோ பிறரோ அனுபவிக்காமல் செத்துப் போகிறவன் இந்த உலகவாழ்க்கையில் சாதித்தது ஒன்றுமில்லை; அப்படிப்பட்டவர்களின் பிறவி மனிதப்பிறவியல்ல; அப்பிறவியும் பூமிக்குப் பாரமானது; பிறர்க்குப் பயன்படாது சேர்த்துவைக்கும் செல்வம் பெரும் துன்பத்தைத் தருவது எனக் குறிப்பிட்டு, இப்படி யாருக்கும் பயன்படாத அச்செல்வம் பெண் ஒருத்தி தனியாகவே வாழ்ந்து முப்பெய்தி விடுவதைப் போன்றது என்றும், ஊர் நடுவே நச்சுமரம் பழுத்திருப்பதைப் போன்றது என்றும், இத்தகையோரின் செல்வத்தை அடையாளந்தெரியாத அந்நியர்கள் அனுபவிப்பார்களேயன்றி உலோபிகளுக்குப் பயன்படாது என்றும், கொடைக் குணமற்றவர்களைக் குறித்தும் அவர்தம் பயனற்ற செல்வத்தைக் குறித்தும் திருக்குறள்(1001-1010) குறிப்பிடுகிறது.

 

மேற்குறித்த திருக்குறள் கருத்துக்கள் பிறர்க்குத் கொடுக்க மனமில்லாமல் சேர்த்துவைத்த செல்வம் அடையாளம் தெரியாத யாரோ ஒருவனால் அனுபவிக்கப்பட்டும், (நாலடி. 274) திருடர்களால் கொள்ளையடிக்கப்பட்டும் (கொன்றை. 4) அழிந்துபோகும். எனப் பிற்கால அற இலக்கியங்களிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஈகைக் குணமற்றவர்களின் தன்மை வள்ளுவர் சுட்டிக்காட்டும் கீழ்மக்களின் தன்மையோடு(கயமை) ஒத்திருப்பது இங்கு நோக்கத் தக்கது. கயவர்கள் பல்லை உடைக்கக்கூடிய கைவலிமை உடையவர்களுக்கன்றி மற்றவர்க்கு உணவுண்ட ஈரக் கையால்கூட உதறித் தெறிக்கமாட்டார்கள், இவர்களிடமிருந்து பொருளை கரும்பை ஆலையில் நசுக்கிப் பிழிவதைப் போல் பிழிந்தால்தான் கொடுப்பார்கள் என்பதை,

 

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்

கூன்கைய ரல்லா தவர்க்கு.          ( குறள். 1077)

 

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற்

கொல்லப் பயன்படுங் கீழ்.         (குறள். 1078)

என்ற குறட்பாக்கள் தெளிவுபடுத்துகின்றன.

நிறைவாக

    மேற்குறித்த ஈகை என்னும் அறம் குறித்தான அறநூல்களின் கருத்துக்களைத் தொகுத்துக் காண்கின்ற போது,  மனிதசமூகம் போற்றி வளர்க்கும் பல்வேறு அறங்களுள் ஈகை என்னும் அறம் தலையாயதாகத் திகழ்கின்றது. இது ஏற்றத்தாழ்வுகள் பெருகிவிட்ட சமூகத்தின் அடிப்படைத் தேவையாகவும் விளங்குகின்றது. இத்தகைய ஈகை என்னும் அறம் போற்றப்பட வேண்டியதன் அவசியத்தைக் காலந்தோறும் தோன்றிய அறநூல்கள் வலியுறுத்தி வந்துள்ளன. அவை,  எது ஈகை?; யார் ஈகையாளர்?; ஈகையினால் வரும் பயன்கள் யாவை?; ஈகைக்கு உரியவர்கள் யாவர்?; ஈவோர் பெறும் பேறு யாது?; ஈயாதார்க்கு வரும் இழிவுகள் யாவை? என்பன போன்ற கோள்விகளுக்கு விடைகூறுவதாக அமைந்துள்ளன. இன்று காலமாற்றத்தால் அறங்கள் பல மதிப்பிழந்துவருகின்றன எனினும், மனிதவாழ்வில் இல்லாமை இல்லாத நிலை வரும்வரை ‘ஈகை’ என்னும் அறம் இயங்கிக்கொண்டே இருக்கும். இது காலத்தின் தேவையும்கூட என்பது சிந்திக்கத்தக்கது.  முதலாளியத்தின் கோரப் பிடியில் சிக்கித்தவிக்கும் மனித உயிர்களுக்கு ‘ஈகை’ இளைப்பாறிக்கொள்ளக் கிடைத்த குளிர்தரு என்பது உலகியல் உணர்ந்தோர்க்குப் போதரும்.

                                                 சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
                                                 ஈதல் இயையாக் கடை. (குறள். 230)

துணை நின்ற நூல்கள்

1. புறநானூறு, மூலமும் உரையும், உரையாசிரியர் குழு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,             சென்னை, 2011

2. திருக்குறள், நாமக்கல் வெ. ராமலிங்கம்பிள்ளை (உ. ஆ.), பாரதி பதிப்பகம்சென்னை, 1990.

3. மணிமேகலை, ந.மு. வேங்கடசாமி நாட்டார்(உ.ஆ.)சாரதா பதிப்பகம்சென்னை, 2009.

4. க. ப. அறவாணன், அற இலக்கியக் களஞ்சியம், தமிழ்க்கோட்டம், சென்னை, 2011.

5. இராமலிங்க அடிகள், வள்ளலார் எழுதிய உரைநடை நூல்கள், மீனா கோபால் பதிப்பகம்,            சென்னை, 1999.


ச. நீலமேகன்

உதவிப் பேராசிரியர்

தமிழ்த்துறை

ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

ஏனாத்தூர் – காஞ்சிபுரம் , 631 561

  (நீதி இலக்கியங்களும் தமிழ்ச் சமுதாயமும் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

1.