அறமும் அறங்கூறும் முறையும்
சமூக இயக்கத்தில் தடை எற்பட்ட போதெல்லாம்
அவ்வப்போது அறவாணர்கள் தோன்றி தம் கருத்துக்களின் வாயிலாக சீரமைக்க முயன்றிருக்கிறார்கள்.
அத்தகையோரின் எண்ணக் கருவூலத்தை அறஇலக்கியங்கள் என நாம் அடையாளப் படுத்துகிறோம். அவ்வாறு
அவர்கள் கூறிச்சென்ற அறக்கருத்துக்களும், அவர்களின் அறம் குறித்தான மதிப்பீடுகளும்
ஒரே மாதிரியானவையாக இல்லாமல் மாறுபட்டும், காலத்தின் தேவைக்கேற்பப் புதிய அறக்கருத்துக்கள்
தோற்றம் பெற்றும் வந்துள்ளதை அறநூல்களினூடாகவே அறிந்துகொள்ள முடிகிறது.
தமிழ் சமூகத்தில் அறம் என்னும் கோட்பாடானது நெடுங்காலத்துக்கு முன்பே தோற்றம் பெற்றுவிட்டது. அது மனித வாழ்வில் கால நேர வர்த்தமானங்களுக்கு ஏற்பவும் சமூக வளர்ச்சிக்கேற்பவும் தானும் வளர்ந்து பல்வேறு பரிமாணங்களைப் பெற்று, மனித நாகரிகத்துக்கும் உலக இயக்கத்துக்கும் பெரும் பங்காற்றி வருகின்றன. அத்தகைய அறங்களை எடுத்துரைக்கும் நூல்களில் பழமையானதும் உலக மக்கள் அனைவராலும் பின்பற்றப்பட்டும் போற்றப்பட்டும் வரும் திருக்குறளில் அறக்கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ள முறைமை குறித்து ஆய்வதை இக்கட்டுரை நோக்கமாகக்கொள்கிறது.
அறங்கள்
குறித்த விமர்சனம்
அறங்கள், எதார்த்தத்தில் குறிப்பிட்டவிதமான
சமூக ஒழுங்கை, உடைமை நாகரிகத்தின் ஆதிக்க ஒழுங்கைப் பேணிப் பராமரிக்க ஏற்பட்டவை என்பது
முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அறங்கள் எல்லாம் ஆதிக்கத்திலிலுள்ள சக்திகளின் பச்சையான
நலன்களை நிலைக்கச் செய்பவை, இவை எப்போதும் ஒடுக்குமுறைக்கான கருத்தியல் கருவிகளாகவே
செயல்பட்டு வந்துள்ளன. (ராஜ்கௌதமன்: ப. 9) என அறம் குறித்து விமர்சனம் செய்வோரும் உண்டு.
இக்கருத்து கால இட சூழலைப் பொருத்து பொருத்தப்பாடுடையதாக இருக்குமேயன்றி எல்லாச் சூழல்களிலும்
பொருந்தி வருமா? என்பது ஆயத்தக்கது.
ஏனெனில், அறநூல்கள் பல இடங்களில்
உடைமையாளர்களை இடித்துக் கூறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதை, ‘சாவைக் காட்டிலும் துக்கமுண்டாக்கக்
கூடிய செய்தி இல்லை எனினும், செத்தவன் ஈகைக் குணமில்லாதவன் என்கிறபோது கேட்பவர்க்கு
அச்செய்தி இன்பத்தைத் தரும்’(230) என்கிறது வள்ளுவம். அவ்வையாரரும்,
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்
காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார்
பாவிகள் அந்தப் பணம்.(நல்வழி:22)
எனப் பணம் இருந்தும் கொடுக்க மனமில்லாதவனைப் பாவிகள் என்று இழித்துப் பேசுகிறார்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’, ‘இன்னா செய்தவர்க்கும் இனியவையே செய்தல் வேண்டும்’ என்றெல்லாம் கூறப்பட்ட பொதுமை அறங்கள் இன்று நடைமுறை முரண்பாடுகளால் போற்றுவாரின்றி அதன் உயிர்ப்புத்தன்மை குன்றி வருவதைக் காணமுடிகிறது. ஆயினும் இவ்வறங்களெல்லாம் உடைமையாளர்களின் நலம் பேணுபவை ஆகவே சாத்தியமற்றவை எனப் புறந்தள்ளிவிட முடியாதவை. ஏனெனில் இவ்வறங்களே பல்வேறு சூழல்களால் துண்டாடப்பட்டுக் கிடக்கும் மானிட இனத்தை மீண்டும் ஒன்றிணைத்துப் புத்துயிர் பெற ஊக்கமளிப்பவையாக இருந்து வருகின்றன.
இலக்கியமும் அறமும்
ஒரு
நூல் அறத்தை எடுத்துரைக்க வேண்டுமானால் அது ஒரு அறநூலாகத்தான் இருக்கவேண்டும் என்ற
கட்டாயமில்லை. பண்டை இலக்கியம் தொடங்கி இன்றுவரை இயற்றப்பட்டுள்ள அனைத்து வகையான இலக்கியங்களிலும்
அதன் ஆசிரியர்களால் ‘அறம்’ என்னும் கூறு, எல்லாக் காலங்களிலும் எடுத்துரைக்கப்பட்டு
வந்துள்ளதை அந்நூல்களை நுண்ணிதின் உணர்ந்தோர் அறிவர்.
ஒரு இலக்கிய நூலின் பாடுபொருளில் அறம் கட்டாயமாகப் பேசப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுவதை, ‘அறம் முதலிய உறுதிப்பொருள்கள் நான்கினையும் பயக்கும் நடையுடைத்தாய் அமைதல் வேண்டும்’ எனக் பெருங்காப்பியத்திற்கான இலக்கணம் குறித்துப் பேசும் தண்டியலங்காரம் குறிப்பிடுகிறது. இது ஒரு நூல் இயற்றப்பட்டுவதின் பயனும் சமூக நோக்கும் அறம் கூறுவதாக இருந்ததைக் காட்டுகிறது. ஒவ்வொரு காலத்திற்கும் அக்காலத்தின் தேவைக்கேற்ப புதிய அறங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். அதற்கு எல்லை என்பது இல்லை.
அறம் – விளக்கம்
‘அறம்’ என்ற சொல்லுக்கு அகராதிகள்,
தருமம்; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு;
இதம்; இன்பம் தீப்பயன் உண்டாக்கும் சொல் என்று பொருள் கூறுகின்றன. பரிமேலழகர் அறம்
என்ற சொல்லுக்கு, “அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம்.
அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்” என விளக்குகிறார்.
பௌத்த காப்பியமான
மணிமேகலை மனிதனின் அடிப்படைத் தேவையாக விளங்கும் உணவு, உடை, தங்குமிடம் ஆகியவற்றை அளிப்பதையே
அறம் எனக் குறிப்பிடுகிறது.
“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டதில்” (மணிமேகலை 25:228-231)
அறம் என்னும் பண்பு மனித நடைத்தைகளால் உருப்பெருகிறது. அதற்கு அடிப்படைக் கலமாக அமைவது மனம். அத்தகைய மனத்தில் மாசில்லாது ஒழுக்க நெறிப்பட்டவர்களால் தான் அறம் செய்ய முடியும் என்பதை உணர்ந்த வள்ளுவர்,
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற 34
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் 35
மனத்தில் மாசினை நீங்கி; பொறாமை, பேராசை, கொடுங்கோபம், பிறரைப் புண்படுத்தும் செயல் ஆகிய நான்கும் இல்லாதிருப்பதே அறம் என வரையறுக்கிறார்.
மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே - முழுநிறை வடிவமே அறம் என்று கூறுவர்.( க. த. திருநாவுக்கரசு, 1971:பக். 23) ஒரு மனிதக்குழு தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் நெறிகள். இறுதியாக வகுத்துக்கொண்ட நடத்தைகள். செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை, செய்தே ஆகவேண்டியவை அடங்கிய ஒரு வழிகாட்டித்தொகை.(ஜெயமோகன்) எனப் பிற்கால அறிஞர்களும், அறம் குறித்தும் அறநூல் குறித்தும் விளக்கமளிக்கின்றனர்.
அறமதிப்பீடுகள்
அறநூல்கள் உயிர்களைக் கொல்வது அறமன்று
என்கிறன. ஆனால் காந்தியடிகள், நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்றுக் குட்டியை அது
கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார். ஆனால், மனுச்சோழன்
கன்றுக் குட்டியைத் தவறுதலாகத் தேரில் ஏற்றிக் கொன்றதற்காகத் தன் மகனைத் தேர்காலில்
ஏற்றிக் கொன்று அதுவே அறமாகும் என நீதிவழங்கி புகழின் உச்சிக்கே சென்றுவிடுகிறான்.
ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வதையே அறம் எனக் குறிப்பிடுகின்றன நீதிநூல்கள். அதற்கு உதாரணமாக
இராம காதையைக் குறிப்பிடுவர். ஆனால், ஆண்பெண் விகிதாச்சாரத்தில் ஆணைவிட பெண் எண்ணிக்கையில்
அதிகமாக இருக்கும் சமூகத்தில் ஒரு ஆண் பல பெண்களை மணப்பது என்பதே அறம் எனக் கருதப்படுகிறது.
இங்கு காலம், இடம், சூழல் என்பவற்றைப் பொறுத்தே அறம் என்பதின் உயிர்ப்புத் தன்மை அமைவது
நோக்கத்தக்கது. எனவே அறம் என்ற சொல்லுக்கு ஒற்றைப் பரிமாணத்தைத் தந்துவிட முடியாது
என்பது விளங்கும்.
அறம் செய்யும் காலம்
உலகம் உடைமைச் சமூகமாக மாறி ஏற்றத்தாழ்வுகள் என்றைக்குத் தோன்றிவிட்டதோ அன்றே அறத்தின் தேவையும் தோன்றிவிட்டது. ஒருவன் உதவினால்தான் மற்றொருவன் வாழமுடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்ட பிறகு அறச்செயல் ஒவ்வொரு காலத்திலும் அது ‘காலத்தின் இன்றியமையாத் தேவையாக’ இருந்துவருகிறது. ஒவ்வொரு நொடிப்பொழுதும் உதவியை எதிர்ப்பார்த்து ஏங்குவோர் பலர் இருக்க அவர்கள் தேவையை நிறைவேற்ற நாளும் கிழமையும் தேவையில்லை இதனை உணர்ந்தே, நீதி நூல்கள் அறம் செய்வதற்கு ஏற்ற காலம்நேரம் என்று எதையும் குறிப்பிடவில்லை. எல்லா நேரங்களிலும் இன்றபோதெல்லாம் அறம்செய்க என்றே வலியுறுத்துகின்றன. “அன்றறிவா மென்னா தறஞ்செய்க”(குறள் 36) என்கிறது திருக்குறள். இக்கருத்தினையே நாலடியாரும், ‘அறத்தைப் பிற்காலத்தில் செய்யலாம் எனத் தள்ளிப்போடாது உடனே செய்யவேண்டும். இறப்பு ஒருவனுக்கு எப்போது வேண்டுமானாலும் நேரலாம் ஆகையால் இளமையிலேயே நினைத்த மாத்திரத்திலேயே அறத்தைச் செய்த்து முடிக்க’ (நாலடி. 9) என்கிறது. கூற்றுவன் வரும்முன் அறம் செய்க(நன்னெறி 30) இறப்பு வந்தே தீரும் ஆதலால் அறம் செய்க.(பழமொழி நானூறு. 137), மூதாதையர்கள் தாம் பாடுபட்டுச் சேர்த்த பொருளை இறந்தபின் கொண்டுபோவதில்லை என்பதை உணர்ந்து காலங்கடத்தாது அறம் செய்க.(பழ. 303) மேலும் மனமானது உடனுக்குடன் மாறும் தன்மை கொண்டது என்பதை உணர்ந்த அறநூல்கள் ‘உடலும் உள்ளமும் ஒன்றி இருக்கும்போதே செய்ய நினைத்த அறங்களைச் செய்து முடிக்க’(பழ. 261)என அறிவுறுத்துகின்றன.
அறத்தின் பயன்
அறம் மகிழ்வைத்
தரும்; அறம் பழிவராது தடுக்கும்; அறமே அழிவிலிருந்து காக்கும்; அறமே ஆக்கம் தரும்;
அறத்தான் வருவதே இன்பம்; அறம் செய்தால் தேவர் உலகம் கிட்டும் ; அறம் செய்தால் புகழ்
பெறலாம் (பழ. 302)
அறம் கூறும் முறைமை
அறநூல்கள் அன்பு, அறம், ஈகை, இரக்கம், விருந்து, நன்றி, அடக்கமுடைமை, புறங்கூறாமை, ஒழுக்கம், அழுக்காறாமை, அருளுடைமை, கொல்லாமை, வாய்மை, இன்னாசெய்யாமை, வெகுளாமை, நிலையாமை, நடுவுநிலைமை, பொறை உடைமை எனப் பல்வேறு அறங்களை வலியுறுத்துவதோடு மட்டும் அமையாமல் மனிதனை அறம் செய்வதற்குப் பக்குவப் படுத்துகின்ற வகையில் மேற்குறித்தவாறு கூறப்படும் அறங்களைப் போற்றுவதால் பெறும் பயன், அதை பின்பற்றாமல் போனால் ஏற்படும் தீங்கு, அதை எவ்வாறெல்லாம் நிறைவேற்ற வேண்டும், தவிர்க்க வேண்டியவை எவை, தவறாமல் செய்யவேண்டியவை எவை, நல்லவை எவை, தீயவை எவை, செய்யவேண்டிய கடமைகள் யாவை, மனிதனின் இயல்புகள் எப்படிப்பட்டவை, சூழலுக்கேற்ப எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பன போன்ற பல்வேறு வழிகாட்டுதல்களையும் அறநூல்கள் எடுத்துரைப்பனவாக கட்டமைக்கப்பட்டுள்ளன.
மேற்குறித்தவாறு அறநூல்கள் அறங்களை எடுத்துரைக்கும் தன்மைக்கு எடுத்துக்காட்டாக திருக்குறளின் அறந்துப்பாலில் அமைந்த குறட்பாக்கள் சிலவற்றை உதாரணமாகக் காணலாம். கட்டுரையின் புரிதல் கருதி வகைமாதிரியாக சிலவற்றை மட்டும் சுட்டிக்காட்டும் தன்மையில் கீழ்வருவன அமைந்துள்ளன. அறநூல்கள் முழுமையையும் இத்தகைய கண்ணோட்டத்தில் அனுகினால் இன்னும் பலவாறாகப் பகுத்து நுண்ணிதின் உணரலாம்.
அறம் கூறுதல்
ஒருவனை ஏமாற்றத் தூண்டுவது ஆசை. எனவே அதற்கு அஞ்சி நடப்பது
அறம்.(366)
மனித வாழ்க்கையின் தலை சிறந்த அறம், பிற உயிரைக் கொல்லாதிருப்பதும், பொய் சொல்லாதிருப்பதுமே ஆகும்.(323)
பண்பும் பயனும் எடுத்துரைத்தல்
மாசற்ற நிலைமை என்பது ஆசையற்ற தன்மையினால் வருவது. அந்த உண்மையை
விரும்பிக் கடைப்பிடித்தா மற்றவை கைகூடும். (364)
சிறிதேனும் எண்ணிப் பார்க்காமல் இன்னொருவனுடைய மனைவியின்மேல் காமங்கொண்டு அவனுடைய வீட்டுக்குள் நுழைகிறவன் வேறு என்ன சிறப்புடையவனானாலும் என்ன பயன்?
வரையறுத்தல்
இல்லாதவர்களுக்குக் கொடுப்பதுதான் ஈகை. மற்ற எல்லாம் பயனை
எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையுள்ளவை.(221)
மனத்தில் ஆசைப்படுவதை ஒழித்தவர்களே பற்றற்ற துறவிகளாவார்கள்;
மற்றவர்கள் அப்படியாகத் துறந்துவிட்டது ஒன்றுமில்லை.(365)
வாய்மை என்பது என்னவென்றால், யாருக்கும் எந்த விதமான தீமையும் உண்டாக்காத வார்த்தைகளைப் பேசுவது. (291)
பெருமை உணர்த்தல்
எதிலும் ஆசை வைக்காதிருப்பதைப் போன்ற குறைவற்ற செல்வம் இந்த
உலகத்தில் இல்லை. வேறு எந்த உலகத்திலும் அதற்கிணையான செல்வம் இருக்க முடியாது.(363)
புலாலுக்காகக் கொல்லாதிருப்பவனும் பிறன் கொன்று விற்கின்ற
புலாலை உண்ணாதிருப்பவனும் எல்லாச் சீவராசிகளாலும் வணங்கத்தக்கவன்.(260)
தன்னிடம் யாசிப்பவனுக்கு இல்லை என்னும் துன்பந் தரக்கூடிய வார்த்தையைச் சொல்லாமலிருப்பதும், தன்னால் கொடுக்கக் கூடியதை உடனே கொடுப்பதும் நல்ல இனத்தைச் சேர்ந்தவனிடத்தில் தான் உண்டு.(223)
அறிவுறுத்துதல்
பிறர் புகழும்படி நடந்து கொள்ளத் தெரியாதவர் தம்மைத் தாமே
நொந்நுகொள்ள வேண்டுமேயன்றித் தம்மை இகழ்வாரை நொந்துகொள்வதில் என்ன பயன்? (237)
ஒருவன் பற்றுக்களை எல்லாம் விட்டொழிக்க விரும்பினால் ஐந்து
இந்திரியங்களோடும் போராட வேண்டும். அவை விரும்புகிற எல்லா இன்பங்களையும் விட்டொழிக்க
வேண்டும்.(343)
உன்னுடைய பொருளாதாரத்தின் அளவை அறிந்து அதற்குத் தக்கபடி கொடு; அதுதான் செல்வத்தைப் பாதுகாத்துப் பயன்படுத்திக்கொள்ளும் வழி.(477)
சிறப்புரைத்தல்
அவிர்ப் பாகங்களைக் கொட்டி ஆயிரம் யாகங்களைச் செய்வதைவிட
உண்பதற்கென்று ஓர் உயிரைக் கொல்லாதிருப்பது மேல். (259)
ஒருவன் அறம் என்பதையே அறியாதவனாக அறம் அல்லாத காரியங்களைச் செய்கிறவனாக இருந்தாலும் அவன் கோள் சொல்ல மாட்டான் என்பது சிறப்புடையது.(131)
விளைவுகளை எடுத்துரைத்தல்
புகழ் பெறவேண்டும் என்ற உணர்ச்சி இல்லாத வெறும் உடல்களான
மக்கள் மிகுந்துள்ள ஒரு நாட்டில் குற்றமற்ற செல்வ வளமும் அதன் பயன்களும் குன்றியதாகத்தான்
இருக்கும். (239)
பிறருக்குச் சொந்தமான பொருளைத் திருடிக்கொள்ளலாமென்று மனத்தில்
நினைப்பதுங் கூடத் தீமை உண்டாக்கும். (282)
தன் மனச்சாட்சி சரியென்று அறிந்ததைப் பொய்யாக்கி விடக்கூடிய எதையும் சொல்லக்கூடாது. மனச்சாட்சியைப் பொய்யாக்கி விட்டால் பிறகு தன் மனச் சாட்சியே இடுத்துத் தன்னை வருத்தப் படுத்தும்.(293)
காரணகாரியத் தொடர்புரைத்தல்
பற்றுக்களை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறவர்களைப் பிறவித்
துன்பங்களும் விடாமல் பற்றிக்கொண்டே இருக்கும். 347
பொறாமை என்ற பாவம் செல்வத்தையும் அழித்து, பல தீமைகளிலும் தள்ளிவிடும்.(168)
விளையும் பயனை எடுத்துரைத்தல்
ஆசைகளை முற்றிலும் விட்டொழித்தால் துன்பமற்ற நிலையான பிறவாமை
வர வேண்டிய முறையில் தானாகவே வந்துசேரும்.(367)
சந்தேகம் இல்லாமல் மெய்ப்பொருளைத் தெளிவாக அறிந்துவிட்டவர்களுக்குப்
பிறவிக்கு இடமாகிய வையகத்தை விடப் பிறவாமைக்கு இடமாகிய வானகமே எளிதிற் கிடைப்பதாகும்.(353)
பொய் சொல்லாதிருப்பதை விடப் பெருமை தரக் கூடியது வேறொன்றுமில்லை.
அது வேறெந்த முயற்சியும் இல்லாமலே மற்றெல்லாத் தர்மங்களையும் செய்யும் பயன் உண்டாக்கும்.(296)
நல்ல எண்ணத்தோடு நல்ல சொற்களையே பேசினால் பாவங்கள் குறைந்து புண்ணியம் அதிகமாகும். (96)
உலகியலை எடுத்துரைத்தல்
அருளில்லாதவன் நடத்துகின்ற துறவறம் புத்தி தெளிவில்லாத பைத்தியக்காரன்
மெய்ஞ்ஞானத்தை விளக்கிச் சொல்லுவதற்கு ஒப்பாகும்.
தம்முடைய சக்தியை அளந்து அறிந்துகொள்ளாமல் வெறும் ஆவேசத்தில் ஒரு காரியத்தை ஆரம்பித்து அதை முடிக்க முடியாமல் இடையில் விட்டுவிட்டுக் கெட்டுப்போனவர்கள் உலகத்தில் பலர் உண்டு.(473)
விளைவுகளைக்கூறி எச்சரித்தல்
எந்த ஒரு பொருளையும் உடைமையாக வைத்துக்கொள்ளாமல் இருப்பதுதான்
துறவறத்தின் முறை; உடைமை என்பது இருந்தால், அது துறவறத்தைக் கெடுத்து, விட்டுவிட்ட
பற்றுக்களில் மீண்டும் ஈடுபடுவதாக நம்மை ஆக்கிவிடும்.(344)
பற்றுக்களை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறவர்களைப் பிறவித்
துன்பங்களும் விடாமல் பற்றிக்கொண்டே இருக்கும்.(347)
ஒரு மரத்தின் நுனிக்கொம்பின் உச்சிக்குப் போய்விட்டவன் அதற்கு
மேலும் ஏற முயன்றால் உயிருக்கே முடிவு வந்துவிடும்.(476)
நன்மை தீமைகளை எடுத்துரைத்தல்
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இருக்காது. ஆசை இருந்தால் துன்பங்கள் அடிக்கடி வந்துகொண்டே இருக்கும்.(368)
இதனினும் இது சிறந்தது
தர்மநெறி தவறாமல் மனைவி மக்களோடு இல்வாழ்க்கை நடத்தினால்
ஒருவன் துறவறத்துக்குப் போய் அடையக்கூடிய நன்மை என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை(46)
நாம் அடைய வேண்டுமென்று விரும்புகிற செல்வங்களுக்குள் நல்லறிவுடைய குழந்தைகளைப் பெறுவதைக்காட்டிலும் சிறந்தது வேறு இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. (61)
ஆற்றுப்படுத்துதல்
நல்வினைப் பயனாக நன்மை வருகிறபோது இன்பமடைகிற மனிதன். தீவினைப்
பயனாகத் தீமை வருகிறபோது ஏன் துன்பப்பட வேண்டும் (379)
பழவினையைவிட வல்லமையுள்ளது என்ன இருக்கிறது? அதை விலக்கிவிட என்ன உபாயங்களைச் செய்தாலும் அதுதான் முன்னால் வந்து நிற்கும்.380
இதைச் செய்தால் இதை அடையலாம்
எவ்வளவு கிடைத்தாலும் அடங்காத தன்மையுள்ளது ஆசை; அதை அடக்கிவிட்டால்
அப்போதே பிறப்பில்லாத பேரின்ப நிலை வந்துவிடும்.(370)
நான், என்னுடையது என்ற மயக்கங்களை விட்டவனே தேவர்களுக்கும் மேலான வீட்டின்பத்தை அடைவான்.(346)
வேண்டப்படுவது வேண்டாதது
ஒருவன் தன் வாழ்நாளில் செய்யவேண்டும் என்பது அறச்செயல்தான்.
செய்யாமல் விலக்கிவிட வேண்டும் என்பது பழி பாவச் செயல்களேயாம்.(40)
பயனுள்ள வார்த்தைகளையே, ஆராய்ந்து பொறுக்கியெடுத்துப் பேசவேண்டும்.
வீண் வார்த்தைகளை ஆராய்ந்து பொறுக்கியெடுத்து விலக்க வேண்டும்.(200)
தீர ஆராய்ந்து அறிந்துகொண்ட பின்புதான் காரியத்தை ஆரம்பிக்கவேண்டும். ஆரம்பித்துவிட்டுப் பிறகு ஆராய்ந்துகொள்ளலாம் என்பது குற்றம்.(467)
முடிவுரை
மனித மனத்தில் அற உணர்வை எவராலும் கட்டாயப்படுத்தி ஏற்படுத்திவிட முடியாது. அது தான் வாழும் சமூகத்தின்பால், அதில் வாழும் சக உயிர்களின்பால் தானாகவே சுரக்கும் கருணை ஊற்று; காலந்தவறாதும் கைம்மாறு கருதாதும் கடமையாற்றும் கார்கால மழை; அதனால் தான் பிற்காலத்தே அறம் கூற வந்த அவ்வையாரும் ‘அறம் செய விரும்பு’ என உரைத்தார் போலும்.
திருவள்ளுவர் அறம் என்பதைப்பற்றி மட்டும் எடுத்துச் சொல்லாமல் அதைக் கடைப்பிடிப்பதால் பெறும் ஏற்றத்தையும், கடைப்பிடிக்காமல் போனால் எற்படும் விளைவுகளையும், எடுத்துக்கூறி உலகியல் உணர்த்தி சான்று காட்டி அதனை எடுத்துரைக்கிறார். அதனால் தான் இந்நூலின் ஒவ்வொரு அறக்கருத்தும் ஒரு பொருள்மேல் பத்தடுக்கியவையாக இயற்றப்பட்டுள்ளது. மனித வாழ்வில் தோன்றும் சிக்கல்களை ஆராய்ந்து அதற்கு தீர்வு கூறுவதாகவும் வழிகாட்டுவதாகவும் திருக்குறள் அமைந்துள்ளதை மேற்குறித்த எடுத்துரைப்பு முறைகளிலிருந்து உணர முடிகிறது.
அறநூல்கள் குற்றங்களுக்குத்
தண்டனை வழுங்கும் சட்ட நூல்கள் அல்ல. அவை மனிதர்கள் பிறர்க்குத் தீங்கு செய்யாமலும்,
பிறர் செய்யும் தீங்கிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் பயன்படும் அரண் நூல்களாகத் திகழ்கின்றன
என்பதும் அறநூல்களை நன்கு உணர்ந்தோர்க்குப் போதரும்.
துணை
நின்ற நூல்கள்
1. திருக்குறள், நாமக்கல் வெ. ராமலிங்கம்பிள்ளை (உ. ஆ.), பாரதி பதிப்பகம், சென்னை, 1990.
2. க. த. திருநாவுக்கரசு, திருக்குறள் நீதி இலக்கியம், சென்னைப் பல்கலைக் கழகம், 1971
3. க. ப. அறவாணன், அற இலக்கியக் களஞ்சியம், தமிழ்க்கோட்டம், சென்னை, 2011.
4. ராஜ் கௌதமன், தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், விடியல் பதிப்பகம், கோவை, 2008.
5. மணிமேகலை, ந.மு. வேங்கடசாமி நாட்டார்(உ.ஆ.), சாரதா பதிப்பகம், சென்னை, 2009.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக