வியாழன், 17 ஜூன், 2021

பிம்பம்

பிம்பம்

-          சிறுகதை


    இந்த சமூகத்தில் யாரிடமும் ஒன்றை எதிர்பார்த்து நிற்காமல் வாழ்கிற வாழ்க்கை ரொம்பப் பெருமிதமானதுதான். அதன் அருமையை யாசித்துக் காத்துக் கிடந்தவர்கள் நன்கு அறிவார்கள். அவர்களிடம் கேட்டால்
ஆமாம் எதிர்பார்த்து கெஞ்சி காத்துக்கிடக்கிற வேதனையைவிட துன்பத்தோடு முடிந்தமட்டும் போராடி முடியாவிட்டால் சாவது எவ்வளவோ மேல்" என்று ஒருராவது நிச்சயம் சொல்வார்கள். அதனால்தான் இந்த ஆதரவற்ற கிழவி தன்னால் ஆன மட்டும் உழைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள். தான் உயிருள்ளவள் என்பதற்கு ஆதாரமாய் உழைத்துக்கொண்டிருக்கிறாள். யாருடைய கையையும் எதிர்பார்த்து அவள் காத்துக்கிடந்ததில்லை.

தினமும் காய்கறிச் சந்தைக்குப் போவது பொன்னாங்கண்ணி, சிறுகீரை, அரைக்கீரை அல்லது மணத்தக்காளிக்கீரை இவற்றுள் ஏதாவது இரண்டுமூன்று கீரை வகைகள் ஒவ்வொன்றிலும் நான்கைந்து கட்டுகள், அப்புறம் வாழைக்காய் இரண்டு அல்லது மூன்று சீப்பு அப்புறம் வாடிக்கையாய் வாங்குபவர்களுக்காக ஒரு நான்கைந்து கிலோ கேரட், தக்காளி  போன்ற காய்கறிகள். அவ்வளவுதான் அந்தக் கிழவியின் கூடையில் வைக்கமுடியும், அதற்குமேல் நிறைய விற்று காசுபார்க்கவேண்டும் என்ற ஆசை ஒருநாளும் அந்தக் கிழவிக்கு வந்ததில்லை. அதற்குமேல் தெருத்தெருவாய் தலையில் சுமந்து சென்று விற்க அந்தக் கிழவியாலும் முடியாது. ஏதோ அன்றாடக் கைச் செலவுக்கு கிடைத்தால் போதும் என்பதுதான் அந்த கிழவியின் மனம் கிழவிக்குச் சொல்லிவைத்திருக்கிற உபதேசம் அந்த சொல்லைமீறி அந்தக் கிழவி ஒருநாளும் நடந்துகொண்டதில்லை. தோற்றத்தில் எழுபதை எட்டிய வயதுடையவளாகத் தென்பட்ட  கிழவிக்கு முதுகில் கூன்விழுந்திருந்தது. பேச்சின் தடுமாற்றம் அவள் மூப்புக்கு முத்திரை காட்டியது.

வாங்கிவந்த காய்கறிகளை வாடிக்கையாக வாங்கும் சில வீடுகளில் மட்டும் வாசலில் நின்று இது வேண்டுமா அது வேண்டுமா எனக் கேட்டுவிட்டுப் போவாள். மற்றபடி தெருவில் கூவிக்கொண்டே போவது அவளது வழக்கம். இது தவிர அரசாங்கம் தரும் ஆயிரம் ரூபாய் முதியோர் உதவித்தொகையும் ரேசன் அரிசியும் அவளுக்குப் போதுமானதாக இருந்தது. விலையில் ஒன்று இரண்டு கூடக்குறையை இருந்தாலும் உலகியலை நன்கு அறிந்தவர்கள் அந்தக் கிழவியிடம் கீரையோ காய்கறியோ வாங்குவதை அவளது முதுமைக்கும் உழைப்புக்கும் தருகிற மரியாதையாகவே கருதினார்கள்.

அந்தக் கிழவியின் இந்த சிறு வியாபாரத்திற்கு அவள் ஒவ்வொருநாளும் விடியற்காலையிலேயே எழுந்து மார்க்கெட்டுக்குப் போகவேண்டும் தெருமுனையில் நின்று ஷேர்ஆட்டோவைப் பிடிக்க வேண்டும்.

ஷேர்ஆட்டோவில் பயணம் செய்வது ஒரு சவாலான காரியம். ஆமாம் ஷேர்ஆட்டோவில் குறைந்தபட்சம்  பத்துபேரையாவது அடைத்துக்கொண்டுபோய் அங்கும் இங்குமாக ஆட்களைக் கொட்டுவதுதான் அதை ஓட்டுபவர்களுக்கு லாபகரமான தொழில்.

ஏதோ சிறு பையை முதுகில் மாட்டிக்கொண்டோ அல்லது கக்கத்தில் இறுக்கிக்கொண்டோ  நிற்கும் பயணிகள்தான் அவர்கள் நினைத்தவாறு பத்துபேரை ஏற்றுவதற்கு வசதி. ஆனால் கூடையோடு இடத்தை அடைத்துக்கொண்டு முன்சீட்டிலோ, பக்கவாட்டிலோ தொத்திக்கொள்ள லாயக்கற்ற கிழவிகளைக் கண்டால் ஷேர்ஆட்டோக்களுக்கு எப்போதும் அலர்ஜிதான். அந்த அலர்ஜி ஆட்டோக்காரனுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற காரணத்திற்காகவே கிழவி, விடியலில் கூட்டம் சேர்வதற்கு முன்பாகவே போய் ரோட்டில் நின்றுகொள்வாள். அதுமட்டுமல்ல அந்த நேரத்திற்குப் போனால்தான் மார்க்கெட்டுக்குப் போகமுடியும் என்பது கிழவிக்கு அனுபவம் தந்த பாடம்.

மார்க்கெட்டில் தேவையான காய்கறிகளை கூடையில் வாங்கிவைத்துக்கொண்டு கீரைக்கட்டுகளை துணியில் முடிந்துகொண்டு பூக்கடை வந்துதான் திரும்புவதற்கு ஷேர்ஆட்டோவைப் பிடிக்கவேண்டும். அங்கிருந்தே தனி ஆட்டோவில் வருவதென்றால் கொடுத்துக் கட்டாது. வாங்கிய காய்கறிகளை விற்கிற லாபம் ஆட்டோவுக்கே போய்விடும் என்பதால் தினமும் மார்க்கெட்டிலிருந்து பூக்கடைவரை நடந்தே வந்து ஷேர்ஆட்டோவைப் பிடிப்பது கிழவிக்குப் பழகிப்போயிருந்தது.

கிழவி ஷேர் ஆட்டோவுக்கு நிற்கிற தெருமுனையில் தினமும் அவள் நிற்கிற நேரத்தில்தான் தெருவில் வாசல் பெருக்கி  கோலம் போடுவாள் அந்த தெருமுனை வீட்டுப் பருவப்பெண் அதற்கு எதிர்ப்புறத்தில் நின்று அவள் கடைக்கண் பார்வை தன்மீது விழாதா எனக் காத்திருப்பது அந்த பைக்கில் நின்றிருப்பவனுக்கு அன்றாடக்கடமை, பொழுதுபோக்கு, காலைக்கடன்.

தூரத்திலேயே நின்றிருந்தால் காதல் எப்படி வளரும்! என்று எண்ணினானோ என்னவோ அன்று அவள் கோலம்போட வந்ததும் காய்கறிக்கூடையோடு நிற்கும் அந்தக் கிழவியிடம் ஏதோ கேட்பதைப்போல பேச்சுக்கொடுத்துக்கொண்டே அவளை நோட்டமிட்டான்.

தினந்தோறும் தூரநின்று பார்க்கிறவன் இன்று அருகாமையில் வந்திருப்பது தன்னைப் பார்க்கத்தான் என்பது அவளுக்கும் தெரியுமோ என்னவோ!, அதனால்தான் இன்று வழக்கமாகப் போடும் கோலத்தைவிட பெரிய கோலமாகப் போடுவதற்கு சற்றுப் புள்ளிகளைக் கூட்டினாள்.

சட்டென்று பறவைகள் தங்கள் கழுத்தைத் திருப்புமே அதைப்போல அவனை ஒருகணம் பார்த்துவிட்டு கோலத்தை மெதுவாகப் போட்டு காலத்தை நீட்டிக்கொண்டிருந்தாள். அவள் தன்னைக் கவனிப்பதை பார்த்துவிட்ட அவன் தன்னைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை அவள் மனதில் விதைத்துவிடவேண்டும் என எண்ணினான்.

அதுமட்டுமல்ல தன்னைப்பற்றி எப்போதும் குறைத்துமதிப்பிடும் இயற்பியல் பேராசிரியர் வீரபாண்டியன் சற்று தூரத்தில் தன்னைக் கவனித்துக்கொண்டிருப்பதை கவனிக்காததுபோல் கவனித்துவிட்டவன், அங்கே நின்றிருந்த கிழவியிடம் சற்று உரத்த குரலில் கோலம்போடும் அவள் காதில் விழவேண்டும் என்பதோடு தான் உதவும் மனப்பான்மையுள்ளவன், இரக்க சுபாவம் கொண்டவன் நல்லவன் என்ற பிம்பத்தை அவள் மனதிலும் அருகில் நின்றிருந்த தன் பேராசிரியர் வீரபாண்டியன் மனதிலும் பதித்துவிட எண்ணியவனாய், “பாட்டி எங்க போகணும் ரொம்ப நேரமா நிக்கிறீங்க” என்று கீரைக் கூடையோடு நின்றிருந்த கிழவியைப் பார்த்துக் கேட்டான்.

கிழவி, ஷேர்ஆட்டோ வருகைக்காகக் காத்திருக்கும் எதிர்பார்ப்பினூடே “இங்கதான் பழம்பேட்டைப் போவணும் ஷேர்ஆட்டோ வருமான்னு பார்த்துங்கீறேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஷேர்ஆட்டோ வரவேண்டிய சாலையில் பார்வையைச் செலுத்தினாள்.

உண்மையில் கிழவிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் இம்மியளவுகூட இல்லை. சும்மா போகிற வண்டியில் ஏற்றிக்கொண்டுபோனால் நமக்கென்ன நஷ்டமா வந்துவிடப்போகிறது என்ற கணக்குவேறு அவன் எண்ணத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டது. எப்படியாவது கோலம்போட்டுக் கொண்டிருப்பவளுக்கும் தன்னைக் கவனித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் தான் நல்லவன் என்ற பிம்பத்தை ஏற்படுத்த வேண்டும்.  அதற்காக கிழவியிடம், “ பாட்டி நான் அந்தப்பக்கமாதான் போறேன், உட்காருங்க நான் கொண்டுபோய் விட்டுடுறேன்” என்று சொன்னதும் அவன் உதவியை எதிர்பார்க்காத கிழவி “பைக் வண்டியில  ஒக்காந்து எனக்கு பயக்கமில்ல கண்ணு” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஷேர்ஆட்டோ வருகிறதா என்று சாலையைப் பார்த்தாள்.

பேச்சினூடே  திரும்பிப் பார்த்ததில் அவனை அவளும் பார்த்தாள் பார்வையில் ஒரு மின்னல் வெட்டு. மீண்டும் கோலம்போடுவதாகக் காட்டிக்கொண்டாள் அந்தப் பருவப்பெண்.

எப்படியாவது தான் இரக்கசுபாவம் உள்ளவன் என்ற பிம்பத்தை அவள் உள்ளத்தில் உண்டாக்கவேண்டும் என நினைத்தவன் இந்த முறை, “பாட்டி பயப்படாத கீரைக் கட்டை இப்படிக்கொடு, பின்னாடி கூடையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துக்க” என்று வற்புறுத்தி கிழவியை ஏற்றிக்கொண்டு திரும்பியபோது அவளும் அவனைத் திரும்பிப்பார்த்தாள். அவன் சிந்தை முழுக்க அவள் உருவம் வேறு எதற்கும் இடம் தராமல் ஆக்கிரமித்துக்கொண்டது.

பைக் கிளம்பியது அவன் சிந்தை அவள் பார்வையின் அர்த்தத்தை ஆராய்வதிலேயே குறியாய் இருந்தது. தான் சாலையில் போய்க்கொண்டிருக்கிறோம். தனக்குப்பின்னால் ஒரு மூதாட்டி அமர்ந்திருக்கிறாள் என்பதை எல்லாம் அவன் மறந்தே போய்விட்டான். கிழவி அசௌகர்யமான நிலையில் பின்னால் உட்கார்ந்திருந்தாள்.

பைக் தீப்பாஞ்சியம்மன் கோயிலை நெருங்கும்போது குறுக்கே நாய் ஒன்று வந்துவிட்டது. அவ்வளவுதான் அவன் பிரேக் போட்டதில் கிழவி காய்கறிக்கூடையோடு கீழே விழுந்தாள். கையில் சிராய்ப்பு, கால்முட்டியில் நல்ல அடி, விழுந்த நொடியில் வலி பொறுக்காமல் அய்யோ அம்மா என்று கத்தினாள். கீரைக்கட்டு சாலையோர சாக்கடைக் கால்வாயில் விழுந்துகிடந்தது. கூடையிலிருந்த காய்கறிகள் ரோட்டில் சிதறிக்கிடந்தன.

அவனுக்கு எந்தக் காயமுமில்லை சாலையில் விழுந்த வண்டியை நிமிர்த்திக்கொண்டு கிழவியைப் பார்த்தான். அவள் முட்டியில் ரத்தம் வழிந்துகொண்டிருந்தது, வலியில் துடித்துக்கொண்டிருந்தாள். அதற்குள் சாலையோரம் நின்றிருந்தவர்கள் கிழவியைச் சூழ்ந்துகொண்டார்கள். எங்கே இன்னும் கொஞ்சநேரம் இங்கே இருந்தால் கிழவியை ஆஸ்பிட்டலுக்கு அழைத்துக்கொண்டுபோகவேண்டி வருமோ? என்றும்,  அதுதன் நேரத்தையும் பணத்தையும் வீணடித்துவிடும் என்றும் நினைத்ததோடு, சும்மாதானே ஏற்றிவந்தோம் அந்தக்கிழவி விழுந்து அடிபட்டதற்கு நாம் எப்படி பொறுப்பாவோம் என்றும் அவன் உள்மனம் கேவலமாக கணக்குப்போட்டது. அந்தக் கிழவியை நான்கைந்துபேர் சாலையோரமாகவிட கைத்தாங்கலாகக் கொண்டுபோய்க்கொண்டிருந்தார்கள்.

அந்த இடைப்பட்ட நேரத்தில் அவன் அங்கிருந்து சொல்லிக்கொள்ளாமல் நழுவிவிட்டான். கிழவி செய்வதறியாது துடித்துக்கொண்டிருப்பதை ரோட்டில் போவோரும் வருவோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டே போனார்கள். அவர்களின் கண்களுக்கு கிழவியை அழைத்துவந்தவனின் பிம்பம் புலப்படவேயில்லை.

இந்த பிம்பங்களை உருவாக்க எத்தனைபேரின் வாழ்க்கை களவாடப்படுகிறது என்பதை வேடிக்கைப் பார்ப்பவர்கள் அறிவார்களா? அல்லது அவர்களே பிம்பங்களால் களவாடப்பட்டவர்கள்தானா?

 

 - நீலமேகன்

17-06-2021.

7 கருத்துகள்:

அருண்குமார். சே சொன்னது…

மிக சிறந்த சிறுகதை பிம்பம் என்ற தலைப்பில் பல பிம்பங்களை காட்சிபடுத்தியது.

Unknown சொன்னது…

அருமையான சிறுகதை இன்றைய சூழலில் உள்ள பலரின் பிம்பங்களை காட்டும் வகையில் அமைந்துள்ளது.

Unknown சொன்னது…

பிம்பங்களை தாண்டி அந்த மூதாட்டியின் நிலையே மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது...அடுத்து அவர் என்ன ஆகியிருப்பார், அந்த மூதாட்டியின் அன்றாட வாழ்வு தேவையில்லாமல் தடைப்பட்டதே....மனதை உருக்கிய நிகழ்கால சிறுகதை, சிறப்பு

ஜெ. செல்வமுத்துமாரி சொன்னது…

எழுபது வயது தளர்வின் தன்னம்பிக்கை... காலம் நிச்சயமற்றது என்பதை பாட்டியின் சேமிப்பு இல்லாத அன்றாட வாழ்க்கை நிரூபணம் செய்கிறது.... மாயமாகி போக வேண்டிய பிம்பங்கள் மெய்பிம்பங்களாகி பலரின் வாழ்க்கையை தின்று செல்கிறது.... சுயநலத்தின் ஒட்டு மொத்த வெளிப்பாடும் பிம்பம் சிறுகதை வாயிலாக வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது... இக்கதையை வாசிக்கும் பொழுது நாம் கடந்து சென்ற சில பிம்பங்கள் நினைவுக்கு வருகிறது... மேலும், நாம் எந்த ஓர் சூழ்நிலையிலும் பிம்பமாக மாறிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையையும் மனத்தில் விதைத்து விட்டு செல்கிறது பிம்பம்....

பாரிவேள் சொன்னது…

அருமையான சிறுகதை ஐயா.

Unknown சொன்னது…

மனதார காரியம் ஆற்றுபவர்கள் குறைவுதான்.... 👏👏👏

முனைவர் ச.இரமேஷ் சொன்னது…

கெட்டவர்களைவிட நல்லவர்கள் போல நடிப்பவர்கள் ஆபத்தானவர்கள்! உலகில் போலிகளே உண்மையைப்போலக் காட்சிதருகின்றன.மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற பொன்மொழியும் நினைவுக்கு வருகின்றது.உழைத்து வாழும் மூதாட்டி போன்ற மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சூரியனுக்கு இருட்டுத் தெரியாது.பாவம் பாட்டி என்ன ஆனாளோ? கண் முன்னே காட்டும் எழுத்து.