வானவில் கே. ரவியின் காற்று வாங்கப்போனேன் - சுயசரிதையினூடே
ஒரு கவிதை தரிசனம்
வல்லமை.காம் என்ற மின்னிதழில் கவிஞர் வானவில் கே. ரவி அவர்கள் தன் அரை நூற்றாண்டுக்கால கவிதைப்
பயண அனுபவத்தினூடே தன் தன்வரலாற்றை எழுதி அதனை
காற்றுவாங்கப்போனேன் என்ற நூலாகவும் வெளியிட்டிருக்கிறார். அவ்வரலாறு வெறும் வாழ்க்கைச்
சம்பவங்களின் தொகுப்பாக இல்லாமல் தன் ஐம்பதாண்டுகால கவிதை அனுபவத்தையும் கவிதையின்
நுட்பங்களையும் பதிவு செய்வதாக அமைந்துள்ளது. 53 பகுதிகளாக வெளிவந்த தொடரினூடே ஒவ்வொரு
வாழ்க்கைச் சம்பவமும் கவிஞரின் கவிதை தரிசன அனுபவத்தைப் பேசுவதாக அமைந்திருப்பதைப்
பார்க்கமுடிகிறது.
இந்த வாழ்க்கை வரலாற்றுத் தொடரின் பெரும்பகுதி
கவிதையின் பிறப்புக்குக் காரணமாக அமைவது அறிவா?(சிகாமணி) மனமா?(மனோன்மணி) என்ற தர்க்கத்தினூடே
அதன் முடிபாக அறிவும்மனமும் இணையும் உறவில்தான் கவிதை மலர வாய்ப்புண்டாகிறது என்ற தன்
கவியுலக வாழ்க்கைப் பயணத்தை எடுத்துக்கூறுவதாக அமைகிறது.
கவிஞனின் சொல்வலிமை
கவிஞர்களைப் பொதுவாகக் காலக்கணிதர்கள்
என்பார்கள். அவர்களுக்கு வருவதுணர்ந்து கூறும் ஆற்றல் உண்டென்றும் சொல்வார்கள். நாமும்
அதனை திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், காளிதாசன், பாரதியார், கண்ணதாசன் எனப் பல
கவிஞர்களின் கவிதைகளில் காண்கிறோம். கவிஞர் வானவில் கே. ரவி அவர்களும் தம் கவிதை தரிசனத்தில்
பெற்ற அனுபவத்தை, “ப்ரதிபா சக்தி என்ற திறன்வாய்க்கப் பெற்றவர்களே மஹாகவிகள். அவர்கள்
தீர்க்கதரிசிகள். வரப்போவதை முன்கூட்டியே ஞான திருஷ்டியில் கண்டு சொல்லக்கூடியவர்கள்
(கா.வா.போ. ப. 206) என்றும் மேலும், கவிஞர்கள் ரிஷிகளைப் போன்றவர்கள் என்றும் குறிப்பிட்டு
இதனை காஞ்சி மகா பெரியவரின் வாக்கின் வழி, “ஏனைய மக்கள் என்ன நடக்கிறதோ அதைச் சொல்வார்கள்.
ரிஷிகளோ என்ன சொல்கிறார்களோ அது நடந்துவிடுகிறது. ஒரு விஷயத்தை மற்றவர்கள் வார்த்தையாகச்
சொல்கிறார்களென்றால், ரிஷிகளைப் பொறுத்தமட்டிலே அவர்கள் சொல்கிற வார்த்தையை விஷயம்
ஓடிப்போய்ப் பிடித்துக்கொண்டு நிஜமாகிவிடுகிறது” (ப. 208) என விளக்குகிறார். தம்கூற்றைப்
பின்வருமாறு கவிதையிலும் வடித்துக்காட்டுகிறார்.
“பெருவியப்பை ஒருசொல்லின் கூர்முனையில் வைத்துப்
பேரொளியை அதற்குள்ளே போட்டடைத்து வைத்து
மறுசொல்லுக் கிடையிலொரு மௌனத்தை வைத்து
மந்திரமாய்ச் சொல்லுகிற மானிடனும் யாரு
கடவுளையே நேர்கண்டவன் – ஒரு
கவிஞனெனப் பேர்கொண்டவன்” (ப. 209)
மேலும், மந்திரங்கள் எத்தகைய சக்திவாய்ந்ததோ அதைப்போலத்தான்
கவிதையின் சொல்லும் என்பதை, “கவிதையும், மந்திரமும் வேறு வேறு இல்லை. வேத மந்திரங்கள்
சிலவற்றைத் தமிழில் பாரதி எழுதி வெளியிட்ட போது, அதற்கு, “வேத ரிஷிகளின் கவிதை” என்றுதான்
பெயர்சூட்டினான்”(ப. 201.) என்பதை மேற்கோள் காட்டி நிறுவுகிறார்.
கவிதையும் ஓசையும்
பாட்டால் பின்னப்பட்டது தமிழர் பண்பாடு, பிறப்பு தொடங்கி இறப்புவரை வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலையிலும் தாம்பட்ட பாட்டை பாட்டாகப் படிவந்துள்ளதை நமக்கு நாட்டார் இலக்கியங்கள் காட்டுகின்றன. இப்படித் தங்கள் மன உணர்வுகளைப் பாட்டாகப் பாடிக்காட்டுவதில் பாமரனும் சிறந்துவிளங்கிறான் என்றால் அதற்குக் காரணம் தமிழர்கள் பாட்டிலும் இசை இன்பத்தில் திளைத்தவர்கள் என்பது புலப்படும்.
தன் கவிதை குறித்தான ரசனை அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் கவிஞர் கே. ரவி அவர்களும் ஒரு கவிதை சிறந்து விளங்குவதற்கு அதன் ஓசைநயமும் காரணமாக அமைவதை, “கவிதையில் சொல்லப்படும் அறிவு சார்ந்த கருத்துகள் படிப்பவன் அறிவு வரை மட்டுமே செல்லும். ஆனால் அதன் த்வனியாகிய ஒலியின்பமே அறிவைக் கடந்து மனத்தளத்தின் ஆழத்தில் போய் அதிர்வுகளை ஏற்படுத்த வல்லது. அதுவே ஆகாயத்தை அளாவி நிரந்தரமான, அட்சரம் என்ற அழிவற்ற நிலையில் பரவியிருக்கக் கூடியது.”(ப. 27) எனக் குறிப்பிட்டு, தன் கவிதைகள் அத்தகைய தன்மையில் ஓசைக்கு முக்கியத்துவம்கொடுத்து அமைந்துள்ளதை, “என் கவிதைகளில் பெரும்பாலானவை மெட்டோடும், தாளக்கட்டோடும் பிறந்தன. பின்னணி இசையும் கூடவே ஒலிக்கும்” எனக் குறிப்பிடுகிறார்.
எப்படிப் பிறக்கிறது கவிதை
கவிதையின் தரிசனம் என்பது கடவுளின் தரிசனத்தைப்போல
இறைவனையும் கவிதையையும் அனுபவத்தால் மட்டுமே பெற முடியும். இங்கு கவிஞரும் தம் கவிதை
ஊற்றுக்குக் காரணம் ஒருவகையில் இறை அருளே என்ற கொள்கையை,
“கவிதைகளைச் செய்பவளும், கவிதைக்காக ஏங்கும் நெஞ்சங்களில் கவிதை வெள்ளம் பெய்பவளும், சில காதல் நெஞ்சங்களைத் தோட்டங்களாக்கி அங்கே கவிதை
மலர்கள் கொய்பவளும், கனவுத்
தறியில் கவிதை இழைகள் நெய்பவளும்…! எல்லாம் அவளே. அவள்தானே இயற்கையன்னை, பராசக்தி. (ப.155)
“என் கவிதை என்பது என் குழந்தை போன்றது.
என் குழந்தையின் படைப்புக்கு நானே முழுப்பொறுப்பா? நான் அதன் படைப்புக்கு ஒரு கருவியானேன்.
ஆனால், அதன் கர்த்தாவோ, கடவுளாகிய இயற்கை அல்லது பிரபஞ்ச சக்தி இல்லையா?” ப. 196.
எனக் குறிப்பிட்டு ஒரு கவிதை எவ்வாறு பிறக்கிறது என்பதை
பின் வருமாறு விளக்குகிறார்.
“இந்த உடற்கூட்டுக்குள் அடங்க மறுத்து, இந்த உலக எல்லைகளையும் ஏற்க மறுத்து, எல்லையற்ற வானமாய்த் தானே விரியத் துடிக்கும் ஆதங்கம், பிடிவாதம், வெறி, நெஞ்சில் உண்டாகி, அது மிகும் போது, அதன் கனம் தாங்காமல், நினைவுக்குமிழ் வெடித்துச் சிதற, அதனால் மிக லேசாகி, ஒரு விடுதலை உணர்வோடு அந்த உயிர்த்துடிப்பு உயர உயரப் பறந்து செல்கிறது. ஏதோ ஓர் உயரத்தில், முன்பு யாரோ ஒரு மஹாகவியின், அல்லது, மஹரிக்ஷியின் சங்கல்பத்தில் உருவாகி, ஏதாவது ஓர் உயிர்த்துடிப்பு வந்து தன்னைப் பற்றிக்கொள்ளாதா என்று காத்துக்கொண்டிருக்கும் சலன அலைகளை அது சந்திக்க நேரிடலாம். அந்த சந்திப்பே ஒரு யுகசந்திப்பு. அந்தச் சந்திப்பே ஒரு சங்கமம் ஆகும்போது, அந்தச் சங்கமத்தில் ஜனிப்பதுதான் உயர்கவிதை. அப்படியோர் யுகசந்திப்பின் சங்கமத்தில் ஜனித்து வரும் ஒரு மகத்தான கவிதையின் பிறப்பை உலகமே, இயற்கையே ஒரு மாபெரும் வைபவமாகக் கொண்டாடுகிறது. இதுதான் கவிதையின் ஜனன ரகசியம். (ப. 156-157)
“இனம்தெரியாத ஏதோ ஓர் ஈர்ப்பினால் உந்தப்பட்டு, மிக உயரத்திற்கு அல்லது ஆழத்திற்கு மனம் சிறகடித்துப் பறக்கும்போது, அது சில அனுபவக் களங்களைச் சந்திக்க நேர்கிறது. அந்தக் களங்கள் வரலாற்று நிகழ்ச்சிகளாக இருக்கலாம்; அல்லது, வெறும் எண்ண எழுச்சிகளாகவோ, சலனங்களாகவோ இருக்கலாம்; அல்லது, நேரில் பார்த்திராத ஒரு காட்சியாக இருக்கலாம். எந்தக் களத்துக்கு ஏற்றவாறு அந்த மனத்தின் அப்போதைய அதிர்வுகள் உள்ளனவோ, அந்தக் களம் அந்த மனத்தைத் தன்வயப் படுத்திக்கொள்கிறது. அது சில கணங்களுக்கு மட்டுமே. அந்தக் களத்தின் அதிர்வுகளும், அந்த மனத்தின் அதிர்வுகளும் கிட்டத்தட்ட ஒரே அலைவரிசையில் சங்கமிக்கும்போது எழும் புதிய சலனங்களை மொழியாக்கம் செய்யும் திறம் அந்த மனம் சார்ந்த அறிவுக்கு இருந்தால் அந்தச் சலனங்கள் ஒரு கவிதையாக வெளிப்படலாம். அல்லது, அச்சலனங்களை வேறு விதமாக வெளிப்படுத்தும் ஆற்றல் அந்த மனத்துக்கு இருந்தால், அச்சலனங்கள் ஓர் ஓவியமாகவோ, சிற்பமாகவோ, சங்கீதமாகவோ, வேறு கலைவடிவிலோ உருவம் பெறலாம். அந்தச் சலனங்கள் ஜனிப்பதில் அறிவின் பங்கு அதிகம் இல்லை. எந்த அனுபவக் களம் அந்த மனத்தை அந்தக் கணத்தில் வரவேற்றுத் தன்வயப்படுத்திக்கொள்கிறது என்பது வேண்டுமானால் ஓரளவு அந்த மனம்சார்ந்த அறிவைப் பொறுத்து அமையலாம். ஆனால், அந்தச் சங்கமத்தில் ஜனிக்கும் சலனங்களுக்கு அதற்குமேல் அறிவு பொறுப்பாக முடியாது. அச்சலனங்கள் உருவம்பெற்று வெளிப்பட நிச்சயம் அறிவின் துணை வேண்டும். அப்படித் துணை செய்யும்போது அறிவு தன் அதிகப் பிரசங்கித்தனத்தை அடக்கிக்கொண்டு அந்தச் சலனங்களை அப்படியே பிரதிபலிக்கும் வடிவம் இழைப்பதில் மட்டும் உதவினால், அந்தப் படைப்பில் அந்த அனுபவக் களம் கச்சிதமாக அமர்ந்துகொள்ளும். அப்படியின்றி, அறிவு தன் மேல்பூச்சுகளை அந்த வடிவத்தில் அதிகம் இழைக்கத் தலைப்பட்டால், அந்தப் படைப்பு, ரசிகர்களின் அறிவு நிலையைக் கடந்து ஆழத்துக்குச் செல்ல முடியாமல் தடுமாற நேரிடும். அப்படிப்பட்ட படைப்பு, காலம் வென்று நிற்கும் படைப்பாக உருவாக முடியாது. ஏனென்றால், ரசிகரின் அறிவு நிலையைக் கடந்து, அவர்களுடைய அந்தரங்கத்தை ஊடுருவிச் சென்று, அவர்களுக்குள் தான் ஜனித்த அனுபவக் களத்தை மீண்டும் உருவாக்கி அவர்களை அந்தக் களத்துக்குக் கடத்திச் செல்லும் ஆற்றல் அத்தகைய படைப்புக்கு இருக்காது.” (ப. 203-204) எனக் குறிப்பிடுகின்றார்.
அதைப்போலவே ஒரு கவிஞன் எதைப்பற்றி எழுதவேண்டும் அல்லது பாடவேண்டும் என்பதைக் காலம்தான் தீர்மானிக்கிறது. உரிய பருவம் வந்ததும் பூக்கின்ற பூ போல், காய்க்கின்ற காய்போல் ஒரு கவிதை, கவிஞன் என்ற ஊடகத்தின்வழி வெளிப்படுகிறது என்பதைப் பின்வரும் கூற்றுகள் தெளிவுபடுத்துகின்றன.
·
எதைப்பற்றி
எழுதுகிறேன் என்ற முன்முடிவோடு நான் கவிதை எழுதுவது கிடையாது. அதுவாக உள்ளிருந்து பொங்கி
வரும். வந்து, வார்த்தைகளாகிச் சிந்திச் சிதறி, வெடித்துச் சில சமயங்களில் கோவென்று
கதறிய பிறகே அதன் பொருள் என்ன என்று புரிந்துகொள்ள முயல்வேன். சில சமயம் புரிந்துகொள்ளும்
முயற்சியில்தோற்றும் போயிருக்கிறேன்.
·
கவிதை
எப்படி அறிவின் பெருமுயற்சியின்றிக் கவிஞனை மீறி வெளிப்படுகிறது என்பதை அனுபவத்தில்
உணர்ந்துகொண்டேன்.
·
அறிவு
நிலையில் நம்ப மறுக்கும் விஷயங்கள், நடக்கவே முடியாது என்று தோன்றும் விஷயங்கள் கவிதை
நிலையில் அனாயசமாகச் சொற்களில் வந்து விழக்கூடும் என்பதைப் புரிந்துகொண்டேன்.
·
கவிதை
உதிக்கும் கணத்தில், ஓர் அதிசயம் நடக்கிறது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அந்த அதிசயம்
நடக்கும்போதுதான் கவிதை உதிக்கிறது.
·
மொழிவடிவம்
பெறுவதற்கு முன்பே கவிதை ஜனித்துவிடுகிறது. அது உயிருள்ளது. மொழி அதற்கு உடல் மட்டுமே
வழங்குகிறது.
·
ஒரு
கவிதை, வடிவம் பெறுவதற்குத்தான் உன்(புத்தி) உதவி தேவை. அதை மறுப்பதற்கில்லை. அது ஜனிப்பதற்கு
உன் உதவி தேவையில்லை.
கவிதையும் யாப்பும்
யாப்பிலக்கணம் செய்யுளின் ஓசைக்கு எத்தகைய அழுத்தம் தருகிறது என்பதை யாப்பிலக்கணம் அறிந்தோர் அறிவர். ஒரு கவிதைக்கு ஓசை எத்துணை இன்றியமையாதது என்பதை கவிஞரும் வலியுறுத்துகிறார். ஆனால் யாப்பு என்ற கட்டுக்கோப்பில் உடன்பாடற்றவராக இருப்பதைக் காணமுடிகிறது. இதனை, “யாப்புக்கு ஒத்துவர வேண்டும் என்ற முயற்சியில் தேவையற்ற சொற்களைப் பெய்வதால்தான் மரபுக் கவிதைகளுக்கு எதிர்ப்பியக்கமாகப் புதுக்கவிதை இயக்கம் மலர்ந்தது. (ப.221) என்றும், “இலக்கணம், கவிதைக்குப் பணிசெய்ய வேண்டுமே அல்லாமல், இலக்கணத்தால் கவிதை முடங்கிவிடக்கூடாது” என்றும், “யாப்பிலக்கணப்படியே கவிதையொன்று எழுத வேண்டும் என்ற தீர்மானத்தோடு ஒருவன் கவிதை எழுத உட்கார்ந்தால் அந்தக் கவிதையில் உயிர் இருக்குமா? (ப.220) என்றும் வினாக்களை எழுப்புவதைக்கொண்டு அறியமுடிகிறது. உண்மையில் புதுக்கவிதையிலும் தொடைநயம் உண்டு ஓசை ஒழுங்கு உண்டு இதற்கு இவர் கவிதைகளே சான்றாக விளங்குவதைக் காணமுடிகிறது.
இலக்கிய ரசனை
கவிதை என்பது எது? என்ற இந்தக் கேள்விக்கு எனக்குத் தற்சமயம் கிடைக்கும் விடை இதுதான். கவிதை என்பது ஒரு பொருளன்று; அது மொழிக்குள் உலகையும், உலகிற்குள் மொழியையும் முழுவதுமாக நுழைத்துவிடுவதற்காக முயலும் தொடர்ந்த ஒரு படைப்புச் செயல்பாடு. எனவே, கவிதை என்பதே மொழிதான். கவிதைக்குள் உலவும் மொழியின் தர்க்கம் கவிதைக்கான உலகத்தைக் கட்டியெழுப்புகிறது என்பார் கலைவிமர்சகர் இந்திரன்.
இங்கு நூலாசிரியரும், “இலக்கிய ரசனை என்பது, தன் வாழ்வில் தன் அனுபவமாக வராத ஒரு நிகழ்வை, இன்னொருவர் அனுபவித்த ஒன்றை, அந்த இன்னொருவருக்குள் எப்படியோ நுழைந்து, ஏறக்குறைய அவர் அனுபவித்தபடியே அனுபவிப்பது”(ப. 223) என இலக்கியத்தின் பயனை இலக்கிய ரசனை தொழிற்படும் விதத்தை எடுத்துக்கூறுகிறார்.
பேரா.
கா. சிவத்தம்பி அவர்கள், “ஒவ்வொரு மொழியிலும் தோன்றும் கவித்துவ வெளிப்பாடுகளை ஒன்றாக
வைத்து நோக்கும்பொழுது கவிதைகள் கேட்போரால்/ வாசகர்களால் உள்வாங்கப்பட்டு ரசிக்கப்பெறும்
முறையில், காலத்துக்குக் காலம் அழுத்த வேறுபாடுகள் ஏற்படுவது வழக்கம்” என்றும், “கவிதை
என்பது யாது; அது எவற்றைப் பற்றிப் பேசுதல் வேண்டும்; எப்பொழுது எந்த நிலையில் ஒரு
கவிதையாக்கம் கவர்ச்சிகரமான கவிதையாக அமையும் என்பன பற்றி, அவற்றின் ஆக்கத்தில் ஈடுபடுவோருடைய
கருத்து நிலைப்பாடுகள் கவிதை, கவிதையெனக் கொள்ளப்படுவதற்கான எடுத்துக்கூறல் முறைமைகள்
ஆகியன யாவும் ஒருங்கு சேர்கின்றபொழுதுதான் மேலே கூறிய கவித்துவ உணர்வுச் செவ்வியலிலே
மாற்றம் தெரியவரும்” (தமிழின் கவிதையியல், கா. சிவத்தம்பி)எனக் குறிப்பிடுவார். இக்கூற்றிற்கு
ஏற்ப தன் கவிதையின் பயனைக் குறித்து
“என்கவிதை எந்நாளும் பயன்படாது
ஏற்றத்துக்(கு) இன்பத்துக்(கு) இடம்தராது
மின்னல் போலத் துள்ளியெழும்
அடுத்த கணமே தடுக்கிவிழும் – ஆனால்
எண்ண அலைகள் எழுப்பிவிடும்
ஏகாந்தத்தில் வளையவரும்
நின்று வரவேற்றால்
நிச்சயம் உங்கள் தளையவிழும் (ப.168)
என எடுத்துக்கூறி ‘நின்று வரவேற்றால் நிச்சயம் உங்கள் தளையவிழும் என்பதை ஒரு பொருட்டாக எண்ணாதவர்க்கு என் கவிதை எந்நாளும் பயன்படாது எனச் சுட்டிக்காட்டி தன் கவிதைகள் தரும் தரிசனம் வேறுவிதமானது எனக் குறிப்பிடுகிறார்.
கவிதை அனுபவம்
கவிதை
என்றால் அது எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைக் குறித்து அ.கி. பரந்தாமனார்,
உள்ளத்தைத் தொடுவது கவிதை; - உள்மன
உணர்வினைக் கவர்வது கவிதை;
பள்ளத்தை இதுவெனக் காட்டி – நல்ல
பாதையில் விடுப்பது கவிதை
கருத்தோடு மிளிர்வது கவிதை; - உயர்
கற்பனை உள்ளது கவிதை;
விருப்புடன் கற்பது கவிதை; பலர்க்கும்
விளங்கிட இருப்பது கவிதை
செஞ்சொலால் அமைவது கவிதை; - ஓசைச்
சிறப்புக்கும் உரியது கவிதை;
எஞ்சலில் இன்பத்தை ஈந்து – செய்யுள்
இலக்கணம் கொண்டது கவிதை
வெற்றுச்சொல் அடுக்குகள் இன்றி – அரிய
விருத்தினை அளிப்பது கவிதை;
கற்பார்தம் நெஞ்சினில் வற்றா – ஊற்றாய்க்
கலைக்கிட மாவதும் கவிதை
- (கவிஞராக, ப.49.)
எனக் குறிப்பிடுவார். இக்கூற்றிற்கு ஏற்ப மொழிநடையில் எளிமையும் இனிமையும் ஓசைநயமும் சிறந்து விளங்கும் கவிதைகளை படைத்த கவிஞர் வானவில் கே. ரவி கவிதையின் ஆன்மா எது என்பதை, “உடல் வாழ்க்கை, உலக வாழ்க்கை மாறிவிடுவதில்லை. அதில் உழல்வதும், அதன் மேடு பள்ளங்களில் விழுந்தெழுந்து சுழல்வதும், சின்ன சின்ன இழப்புகளை எண்ணி உள்ளுக்குள் அழுவதும், அற்ப சந்தோஷங்களில் ஆழ்ந்து மகிழ்வதும், எதுவும் மாறவில்லை. இவற்றை மாற்றுவது கவிதையின் பணி இல்லை. ஆனால், இவற்றிலிருந்து அவ்வப்போது விடுபட வைத்தும், சிறகுதந்து பறக்க வைத்தும், தான் பறந்து திரிவதற்காகவே விரிந்துகிடக்கும் வானமும் தானே என்ற விரிவை உணர வைத்தும் கவிதை ஏதோ ஒரு வழியில் நம் ஆன்மப் பயணத்தின் இலக்கோடு ஒரு தொடர்பை உருவாக்கித் தருகிறது” (ப.147) என்றும், “கவிதை ஒரு வாசல், அனுபவ வாசல். அதைத் திறந்துகொண்டு உள்ளே நுழையத் துணிந்தால், அது உதித்த அதே அனுபவக் களத்துக்கு, அதற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கம் அதே அனுபவக் களத்துக்குச் செல்ல முடியும். (ப. 90) என எடுத்துக்கூறி உணர்ந்த முற்படுவதைக் காணலாம்.
தன்
கவிதைகளில் நேரடியாகச் சமூகச் சிந்தனை வெளிப்படவில்லை எனக் குறிப்பிடும் கவிஞர் தன்
கவிதைகளின் பயனை புறத்தே தேடாதீர்கள் தன் கவிதையின் அகத்தே அதனை ஆழ்ந்து நோக்கினால்
அடையலாம் என்பதை,
சிந்தனைக் கனலில் வெந்துகொண் டிருக்கிறேன்
(என்) சிந்தனைக் கனலில் (நானே)
வெந்துகொண்
டிருக்கிறேன்
முழுதும் எரிந்து முடிந்த பின்னர்
சாம்பலை எடுத்துச் சலித்துப் பாருங்கள்
காதல் கிடைக்கும் கவிதைகள் கிடைக்கலாம்
கருகிப் போன லட்சியங்கள் கண்ணில் படலாம்
(என்) அஸ்தியைக் கரைக்க ஆறுகள் வேண்டாம்
என்னைப் போலவே எங்கோ ஒருவன்
சிந்தனைக் கனலில் வெந்துகொண் டிருப்பான்
அவனுக் காவது அழுது தீருங்கள் – அந்தக்
கண்ணீர்க் கடலில் கரைந்து போகிறேன் (ப.101)
என்ற கவிதை வழி உணர்த்துகிறார்.
சமூகப் பெறுப்புள்ளவர்களைத்தான் கவிஞன் என்ற சிம்மாசனத்தில் அமர்த்தி அறிவுலகம் கொண்டாடும் அந்தவகையில் கவிதையின்
வழி ஆன்மீக தரிசனத்தைக் காட்டும் வானவில் கே. ரவி அவர்களின் படைப்புகளும் கொண்டாடத்தக்கவையே.
- நீலமேகன்
(வானவில் கே. ரவியின் படைப்புலகம் குறித்த கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக