புதன், 9 ஜூன், 2021

தலைவன் சிறைப்புறத்தானாக தோழி கேட்பச் சொல்லியது

திணை      : குறிஞ்சி

கூற்று                  : தலைவி

கூற்றுவிளக்கம் : வரையாது வந்தொழுகும் தலைவன்

     சிறைப்புறத்தானாக தோழி கேட்பச் சொல்லியது

 

தோழி!

காடு கரம்புகளில்

காளையோடு சேர்ந்து

பகலெல்லாம்

புல் மேய்ந்து

உச்சி வேளையில்

அல்லிகுளத்து நீர்மாந்தி

அந்தியில் வீடுதிரும்பிய

நம்வீட்டுப் பசு

இரவெல்லாம்

அசைபோடும்

 

அந்நேரம்

என் படுக்கையில்

நறுக்கென்று தைத்த

நெருஞ்சி முள்ளாய்

என் மெல்லுடலில்

சுறுக்கென்று நுழைந்து

உதிரம் உறுஞ்சும்

இரக்கமற்ற கொசுக்களை

பதம்பார்த்து

பல்லிகள் இரையாக்கும்

உறக்கமாற்ற இரவுப்போதில்

 

உயர்ந்து நிற்கும்

ஊருக்குப் பொதுவான

நீர் தேக்கத் தொட்டியிலிருந்து

யாவரும் அறிய

யாருக்கும் பயனின்றி

வீணே கசிந்தொழுகும்

தண்ணீர் ஓசையைக் கேட்டவாறு

கண்ணீர் வடிய

 

அரசுக்கு மனுகொடுத்து

ஆண்டுபல காத்திருந்தும்

பேருக்கும் பார்க்காத

அதிகாரிகளை

எண்ணி எண்ணி

கூழுக்கு வழியற்று

உறக்கமின்றி வாடும்

கீழத்தெரு

கிழவியைப்போல்

தனிமையில்

துயருறுகிறேன்

 

அடுத்தவீட்டு

பூனைக்கும்

எதிர்வீட்டு

நாய்க்கும்

வானத்தில் வட்டமிடும்

பருந்துக்கும்

பயந்து

கோழிக்குஞ்சுகளை

கூடைக்குள்

அடைத்துவைக்கும் தாய்

என்னை அறிந்தால்

ஊர் சொல்லும்

சொல்லையறிந்தால்

என்ன செய்வாளோ…!

 

-         ச. நீலமேகன்

கருத்துகள் இல்லை: