அற இலக்கியங்களில் ஈகை
தமிழின் மிகத் தொன்மையான இலக்கியமான
சங்க இலக்கியத்திலிருந்து சமகால இலக்கியங்கள் வரை காலந்தோறும் வலியுறுத்தப்பட்டு வரும்
அறங்களில் ‘ஈகை’யும் ஒன்று. இத்தனை நெடுங்காலமாக ஒரு அறம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறதென்றால்
இந்தச் சமுதாயம் நீண்ட நெடுங்காலமாக முன்னேறாமல் முன்னிருந்தபடியே அப்படியே கிடக்கிறது
என்பதையே காட்டுகிறது.
மனிதகுல வளர்ச்சியில் ஆதிப்
பொதுவுடைமைச் சமூகம் மறைந்து தனியுடைமை என்று தோன்றியதோ அன்றே சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளும்
வர்க்க பேதங்களும் கால்கொள்ளத் தொடங்கிவிட்டன. இதன் விளைவு ஒருவனை அண்டி மற்றொருவன்
வாழ வேண்டிய நிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டார்கள். இந்நிலையில் இருப்பவன் இல்லாதவனுக்குக்
கொடுத்து உதவ வேண்டிய தேவை ஏற்பட்டது. இத்தகைய உதவிக்கு சமூகம் ஈகை எனப் பெயர்சூட்டி
பொருள் கொடுத்தவர்களை வள்ளல்களாக்கியது. போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது.
கொடுக்கப் பொருள் இருந்தும்
கொடுக்க மனமில்லாதவனை கொடுக்கச் செய்வதற்காகவும் அவர்களை மனதளவில் அதற்கு இனங்கச் செய்வதற்காகவும்
கற்றறிந்த அறிவாளிகள் உலகியல்புகளை எடுத்துக்கூறியும் நிலையாமையை எடுத்துரைத்தும் அறிவுறுத்த
வேண்டி அறநூல்கள் பல இயற்றி சமூகத்தை வழிநடத்திச் சென்றனர். இதனடிப்படையில் அறநூல்களில்
ஈகை என்னும் அறத்தை வளர்க்க அறநூலார் எவ்வாறெல்லாம் முயன்றனர் என்பதை இக்கட்டுரை விளக்க
முயல்கிறது.
ஈகை – விளக்கம்
முதலில் ஈகை என்றால் என்ன? அதன் இயங்கு
பொருள் என்ன? என்பதை நோக்கும்போது ஈகை என்ற சொல்லுக்குக் கொடுத்தல் என்றும், அதுவும்
இல்லாதவர்க்குக் கொடுத்தல் என்றும் அகராதிகள்
விளக்கமளிக்கின்றன. ஈகை என்னும் அறம் குறித்துப் பேசவந்த வள்ளுவரும்,
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறள். 221)
என இல்லாதவர்களுக்குக் கொடுப்பதுதான் ஈகை. மற்ற எல்லாம் பிரதிபலனை எதிர் பார்த்துக் கொடுக்கும் தன்மையுள்ளவை என்று குறிப்பிடுகிறார். இதனை நாலடியாரும்,
ஏற்றகைம் மாற்றாமை என்னானுந் தாம்வரையா
தற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் - ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து. (நாலடி – 98)
எனக் குறிப்பிடுகிறது. வறியவர்களின்
பசிப்பிணியைத் தீர்க்கவேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தும் மணிமேகலைக் காப்பியமும்,
ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்க ளரும்பசி களைவோர்
மேற்றே யுலகின் மெய்நெறி வாழ்க்கை
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே (மணிமேகலை. 11:92-96)
எனக்கூறி பொறுக்கும் வன்மையுடையோராகிய செல்வர்க்கு அளிக்கின்றவர்கள் அறத்தினை விலை கூறுவோரேயாவர். வறிஞர்களின் தீர்த்தற்கரிய பசியை நீக்குவோரின் கண்ணதே உலகத்தின் உண்மை நெறியாகிய வாழ்க்கை அணுக்கள் செறிந்த நிலவுலகில் வாழ்வோர்களில் எல்லாம் உணவினை அளித்தோரே உயிர்கொடுத்தோராவர்
பதில் உதவியை எதிர்பார்த்து செய்யும் உதவி, புகழை எதிர்பார்த்து செய்யும் அறம் ஆகியன பெருமைப் படத்தக்கதன்று. அது செய்த வேலைக்குக் கூலி பெறுவதைப் போன்றது(பழ. 40) என்கிறது பழமொழி நானூறு. மேலும் மனமகிழ்ச்சியில்லாமற்கொடுப்பதும் ஈயாமையை ஒக்கும் என்கிறது நாலடியார்.(279) மேற்குறித்த சான்றுகளைக் கொண்டு ஈகை என்பது கைம்மாறு எதிர்ப்பார்க்காது இல்லாதவர்க்குக் கொடுப்பது என்பது போதரும்.
ஈகையும் புகழும்
நிலையில்லாத மனித வாழ்க்கையில், ஒருவன் மறைந்த பின்னும் நிலைத்திருப்பது அவனது புகழ்மட்டுமே. அத்தகைய புகழை ஈகை என்னும் பண்பினால் மட்டுமே பெறமுடியும். என்பதை,
“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்,
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே” (புறம். 165:1-2)
எனப் புறநானூறு வலியுறுத்துகிறது. வள்ளுவரும் ஏழைகளுக்குக் கொடுப்பதையும் அதனால் புகழப்பட்டு வாழ்வதையும் தவிர இந்தப் பிறவியினால் அடையக்கூடிய பயன் வேறு எதுவும் இல்லை என்பதை,
ஊதியம் இல்லை உயிர்க்கு (குறள். 231)
எனக் கூறி மற்றவர்க்கு ஈதலை வலியுறுத்தினார். மேலும், இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழாலும் புலவர்களால் போற்றப்படுவது இரந்து நிற்கும் ஏழைகளுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுத்தவர்களது புகழைப் பற்றித்தான்(குறள். 232) என்றும், இத்தகையோர் தாம் வாழும் காலத்தில் ஏழைகளுக்குக் கொடுத்துப் புகழ் வரக்கூடிய காரியங்களைச் செய்துவந்தால் அவர்கள் தேவலோகத்தைப்பற்றி ஆசைகொள்ள வேண்டியதில்லை(குறள். 234) என்றும் குறிப்பிடுகிறார். இவை ஈதல் என்னும் அறப்பண்புடையவர்களுக்குச் சமூகத்திலிருந்த மதிப்பினைப் புலப்படுத்துகின்றன.
நாலடியார், நான்மணிக்கடிகை, முதுமொழிக் காஞ்சி ஆகிய அறநூல்களும், ஈகைபோல் புகழ்தருவது வேறில்லை(முது. 6:10) ஈகைக் குணமுடையவர்கள் புகழ் மூவுலகத்திலும் கேட்கும்(நாலடி. 100). புகழ் நிலைபெற வேண்டுமானால் அறம் செய்ய வேண்டும் (நான்மணி. 15, 59) எனக் குறிப்பிடுகின்றன. ஔவையின் நல்வழியும் உலகிலுள்ளவர்களில் ஏழைகளுக்குக் கொடுப்பவர்களே உயர்ந்த சாதியினர். கொடுக்காதோர் இழிந்த சாதியினர். (நல்வழி 2) எனக்கூறி கொடையாளர்களைப் போற்றுகிறது.
ஈகைப் பண்புடையவர் தகுதி
ஈகைப் பண்புடையவரின்
தகுதியைக் குறித்தும் அற இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அவை பணத்தை நோக்காது குணத்தை நோக்கியதாகவும் நற்குடிப்பிறப்பை நோக்கியதாகவும்
அமைந்துள்ளதை கீழ்காணும் கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன.
o
தன்னிடம்
யாசகம் கேட்டு வந்தவனுக்கு இல்லை என்று சொல்லித் துன்பம் தராமல், இருப்பதைக் கொடுத்து
உதவும் பண்பு நற்குடிப் பிறந்தவரிடம் இருக்கும். (குறள். 223)
o
பசியைப்
பொறுத்துக்கொள்ளும் தவசிகளைக் காட்டிலும் உயர்வானவர்கள், பிறர் பசியைத் தீர்க்கும்
கொடையாளிகளாவர். (குறள். 225)
o
ஒருவரின்
ஈகையை அவரின் கொடைத்தன்மையால் அறியலாம். (முது. 2:2)
o தன் தந்தை கொடுத்ததால் வறுமை அடைந்தார் என்று புதல்வர்கள் மறுப்புச் சொல்லாமல் கொடுப்பர். அக் கொடைக் குணம் வழிவழி வருவது. (நன். 17)
ஈகையின் பயன் கூறி அறம் செய்யத் தூண்டுதல்
அற இலக்கியங்கள்,
“செல்வத்துப் பயனே ஈதல்”(புற.189:7), “மேல் உலகம் இல் எனினும், ஈதலே நன்று”(குறள்.222)
என அறங்களை வலியுறுத்துவதோடு அதனைச் செய்வதால் பெறக்கூடிய பயன்களையும் பட்டியலிடுகின்றன.
ஈதலால் இன்பம் கிடைப்பதால், ஈகையை “ஈத்து உவக்கும் இன்பம்”(குறள். 958) என்றும், பசித்தவர்க்கு
உணவளித்தல் தவம் செய்வதைக் காட்டிலும் சிறந்தது(குறள். 225) என்றும் கூறுகிறது திருக்குறள்.
இத்தகைய ஈகை, பயன் கருதாது கொடுக்கப்படுவதாக இருத்தல் வேண்டும் என்றும், அப்படி இல்லாமல்
புகழ் ஒன்றையே நோக்கி செய்யும் அறம் பெருமைக்குரியதன்று. அது செய்த வேலைக்குக் கூலி
பெறுவதை ஒத்தது.(பழ. 40) என்றும் அறநூல்கள் குறிப்பிட்டிருப்பினும் அத்தகைய அறநூல்களிலேயே
ஈகையால் வரும் பயன் குறித்து நிரம்ப விவரிக்கப்பட்டுள்ளது. இதனைக் கீழ்காணும் சான்றுகள்
விளக்கும்.
o
மற்றவர்க்கும்
பகிர்ந்துகொடுத்து உண்ணும் பழக்கமுடையவனைப் பசி என்னும் நோய் தீண்டாது (குறள். 227).
o
இளமையிலேயே
அறஞ் செய்தவர் புண்ணிய உலகம் புகுவர். (நாலடி. 5)
o
கொடைக்
குணம் வாய்ந்த மாந்தர்க்கு சொர்க்க உலகத்துக் கதவுகள் திறந்தே இருக்கும், அவர் புகழ்
மூவுலகங்களிலும் கேட்கும் (நாலடி. 91, 100).
o
“அறம் செய்க!
அஃதன்றோ எய்ப்பினில் வைப்பு”, “நல்லறம் செய்வது செய்யாது, கேள்”, “அறம் செய்ய அல்லவை
நீங்கிவிடும்”, “கொடுத்து, ஏழை ஆயினார் இல்” (பழ. 37, 134, 159, 218). அறம் செய்வோர்க்கு
இவ்வுலகத்திலும் மறுஉலகத்திலும் இனிமையும் புகழும் கிடைக்கும். அறிவுடையோர் இம்மையில்
இயன்ற அறத்தைச் செய்து மறுமையில் மிக்கபேற்றைப் பெறுவர். கொடுப்பதால் செல்வம் மென்மேலும்
பெருகும். (பழமொழி 6, 302, 344, 380)
o இவ்வுலகில்
புகழ் நிலைபெற வேண்டுமானால் அறம் செய்ய வேண்டும். அவ்வாறு கொடுத்து உண்பவன் புகழப்படுவான்.
(நான்மணி. 15, 59)
o
ஈகைக் குணமுடையோர் நாடாளும் மன்னவர்க்கு இணையான மதிப்பினைப் பெறுவர்.
மகிழ்ச்சியுடன் வாழ்வர். பஞ்ச காலத்தில் மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து உண்பவன், தான்
உண்பதற்கு முன் மற்றவர்க்கு ஈபவன், குழந்தைக்கு உணவளிப்போன் ஆகியோர் எண்பது ஆண்டுகளுக்கும்
மேலாக வாழ்வர். (சிறு. 71, 76, 77)
o மனைவி முதலான சுற்றத்தோடு இன்பம் பெற்று வாழ்வர்; அரசனைப் போல் வாழ்வர்; மண்ணாளும் வாய்ப்பும் செல்வச் செழிப்பும் பெற்று வாழ்வர்; பெருஞ்செல்வத்தைப் பெற்று தம் குடும்பத்துடன் இனிது வாழ்வர்; மண்ணையும் விண்ணையும் ஆளுவர்; இல்வாழ்க்கையில் சிறப்புடன் வாழ்வர். (ஏலாதி. 50, 53, 54, 55, 70, 71)
மேற்கண்ட அறக்கருத்துக்கள் முற்கூறிய ‘பயன் கருதாது அறம்செய்ய வேண்டும்’ என்ற கருத்திற்கு முரணாகத் தோன்றினாலும் இவை அறம் செய்வதை ஊக்கப்படுத்துவதற்காகக் கூறப்பட்டதாகக் கருதலாம். பசிக்கொடுமையைப் பார்த்துப் பதைபதைத்து அதைத் தீர்க்க முயன்ற வள்ளலாரும், “சீவகாருணிய மென்கின்ற மோட்ச வீட்டுத் திறவுகோலைக் காலமுள்ள போதே சம்பாதித்துக்கொண்ட சமுசாரிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற சாதன சகாயங்களை வேண்டாமல், எக்காலத்தும் அடையாத இன்ப வீட்டை அடைந்து அவ்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து நித்திய முத்தர்களாய் வாழ்வார்கள்”(இராமலிங்க அடிகள், 1999:32) என்று குறிப்பிடுவதும் இங்கு எண்ணிப்பார்க்கத்தக்கது.
நிலையாமையைக் கூறி அறம் செய்யத் தூண்டுதல்
ஈகைக் குணத்தை மக்கள் உள்ளத்தில் வளர்த்திட விரும்பிய
அறவோர். செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகிய மனித வாழ்வின் நிலையற்ற
தன்மைகளை எடுத்துக்கூறி இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுத்துதவவேண்டி அறிவுறுத்துவதை
அனைத்து அறநூல்களிலும் காணமுடிகிறது.
o
வாழ்நாளில்
நோய், முதுமை, மரணம் ஆகியனவந்தே தீரும்
ஆதலால் கையில் பொருளுள்ளபோதே அடுத்தவர்க்குக் கொடுத்து உதவுங்கள்.(நாலடி. 92)
o
கருமி தான்
சேர்த்துவைத்த பொருளைக்கொண்டு தானும் துய்க்காமல், பிறர்க்கும் கொடுக்காமல் அவன் சேர்த்து
வைத்த பொருளே அவனைப் பார்த்து நகும்படி அருளை இழந்து அழிந்துபோவான். (நாலடி. 273)
o பிறர்க்குத்
கொடுக்க மனமில்லாமல் சேர்த்துவைத்த செல்வம் அடையாளம் தெரியாத யாரோ ஒருவனால் அனுபவிக்கப்படும்.
(நாலடி. 274)
o பொருளை
அபகரிக்கப் பார்க்கின்றவர்கள் பலராதலின், உடனேஅறஞ் செய்துவிடுதல் நல்லது(பழ. 259),
தன் பெற்றோர்கள் இறந்தபோது அவர்கள் சேர்த்த பொருள்களை உடன்கொண்டுசெல்லாது அப்படியே விட்டு வெறுங்கையொடு சென்றனர் என்பதை
உணர்ந்தாவது இயன்ற அளவு அறம் செய்க. (பழ.
303).
o செல்வம் நிலையில்லாதது ஆதலால் இருக்கும்போதே கொடுத்து உதவுங்கள் (நல்வழி. 32)
எனவரும் அறக்கருத்துக்கள் நிலையாமையை எடுத்துக்கூறி அறம்செய்ய வலியுறுத்துகின்றன.
ஈகையின் அளவு
அறநூல்கள்
“ஈதற்குச் செய்க, பொருளை”(திரி. 90) எனக் கூறி அறம் செய்வதற்காக பொருளை ஈட்டச் சொல்லி
அறிவுறுத்துகின்றன. அவை மிகுந்த பொருளைக் கொடுத்துச் செய்வதுதான் ஈகை எனக் கூறாது,
அவரவரின் பொருள் நிலைமைக்கேற்பவே அறம் செய்யச் சொல்லி வற்புறுத்துகின்றன. தம்மிடம்
குறைவான பொருள் இருந்தபோதும் அதற்கேற்ப சிறு அறங்களைச் செய்க என நாலடியாரும்(272), இயன்ற அளவு ஈகை செய்கஎன
இனியவை நாற்பதும்(6), “ஆற்றும் துணையும் அறம் செய்க!” எனப் பழமொழி நானூறும்(137), கொடுப்பது சிறிதாக
இருந்தாலும் மனம் விரும்பிக் கொடுக்க எனச்
சிறுபஞ்சமூலமும்(63) குறிப்பிடுகின்றன.
“தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்” (புறம். 204:5-9)
என்ற புறப்பாடல் அடிகளில் பெரிய
பரப்பளவுள்ள கடல்நீரை தாகமுற்றோர் உண்ணமாட்டார். உண்ணும் தன்மை உடைய நீராயின் ஆவும்
மாவும் கலக்கிய சிறிதளவு நீர் எனினும் அதை நாடிச்செல்வோர் பலர். என ஒருவனின் கொடைத்தன்மை
மனத்தால் வருவது அப்படிப்பட்ட கொடைக்குணம் கொண்டவன் கொடுக்கும் பொருள் சிறிதெனினும் அவனையே
மக்கள் நாடுவர். எனச் சுட்டப்பட்டுள்ளது மனங்கொள்ளத்தக்கது. இக்கருத்தினையே
நாலடியாரும்,
“எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்” (நாலடி.
275)
எனக் குறிப்பிடுகிறது. எனவே ஈகை என்பது அளவைப் பொருத்ததன்று கொடுக்கும் குணத்தைப் பொருத்ததே என்பதை அறநூல்கள் புலப்படுத்துகின்றன.
ஈகைக் குணமற்றவர்க்கு வரும் தீங்கு
“‘ஈ’என இரத்தல்
இழிந்தன்று; அதன் எதிர், ‘ஈயேன்’ என்றல் அதனினும் இழிந்தன்று”(புறம். 204:1-2) என கொடுக்க
மறுப்போரின் இழிநிலையை புறநானூப்பாடல் இயம்புகிறது. பின்வந்த அறநூல்களும், ஈயாரின்
இழிநிலை குறித்தும் அவர்களுக்கு வரும் தீங்கினைக் குறித்தும் பின் வருமாறு
குறிப்பிடுகின்றன.
o
அறவழியிற் பொருளைச் செலவு செய்யாதவர், ஒரு காலத்தில் தேனீயைப்போல அப்பொருளை இழந்துவிடுவர்.(நாலடி.
10)
o முற்பிறப்பில் பிச்சை இடாதவர்களே இப்பிறப்பில் பிச்சை எடுக்கின்றனர். (நாலடி. 94)
o அறம் செய்வதைப்
பிறகு பார்த்துக்கொள்வோம் என்று பொருளைச் சேர்த்து வைப்போர் துன்பத்தில் தவிப்பர்.
(நாலடி. 272)
o
ஈயாதார்
செல்வம் மெல்லமெல்ல அழிந்துபோகும். (பழ.
343)
o தம்மிடமுள்ள
பொருள் கொண்டு தாம் மட்டுமே உண்டு வாழ்பவர்களுக்கு சொர்க்கத்தின் கதவுகள் திறப்பதில்லை.
(நாலடி .271)
o
இயன்ற அளவு
அறங்களைச் செய்யாதவர் தாமும் பயன் கொள்ளாது, பிறரையும் பயன்கொள்ள விடாது இறந்துபடுவர்.
(பழ. 379)
o கருமிகள்
சேர்த்து வைத்த பொருள்களைத் திருடர்கள் கொள்ளைகொண்டு போவர். (கொன்றை . 4)
o உலோபிகள்
தம்மைத் துன்புறுத்தும் கொடியவர்களுக்கன்றி, அவர்களின் நலத்துக்காகப் பாடுபட்ட பெற்றோர்
முதலாயினோருக்குக் கொடுப்பதில்லை.(நல்வழி.
18)
மேற்குறித்த அறக்கருத்துக்கள், ஈகை என்னும் பண்பு இல்லாதவர்களுக்குப் புகழ் கிட்டாததோடு அவர்கள் நரகத்தில் இடர்பட்டும், இனிவரும் பிறவிகளில் துன்பத்தில் உழன்றும் இடர்ப்படுவர் என அவர்களுக்கு வரும் தீங்கினை எடுத்துக்கூறி எச்சரிக்கின்றன. வள்ளுவர் இவற்றுக்கெல்லாம் ஒருபடி மேலேபோய், “கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉ மின்றிக் கெடும்”(குறள். 166) என கொடுப்பதைத் தடுப்பவனின் நிலையை எடுத்துரைக்கிறார்.
யாருக்கெல்லாம் ஈதல் வேண்டும்
அறநூல்கள், யார் யாருக்கெல்லாம் ஈதல் வேண்டும் என்பதைக் குறித்து ஒரு பெரும் பட்டியலிடுகிறது.
o
நண்பர்,
பகைவர் என்ற பாரபட்சம் பாராது எல்லோர்க்கும் பகுத்தளித்து உண்ணுதல் வேண்டும்.(நாலடி.
271)
o
தம்மிடம்
பொருள் வேண்டி வருபவரின் தகைமையைக் கருதாது கொடுத்தல் வேண்டும். (பழ. 381).
o
வலிமை இழந்தவர்,
வயது முதிர்ந்தோர், நோயினால் நலிவடைந்தவர், வடக்கிருந்து உண்ணாநோன்பு இருப்போர், புலம்பெயர்ந்து
துன்புறுவோர் ஆகியோரின் தளர்வு நீங்க வேண்டியன அளித்தல் வேண்டும். (சிறு. 71)
o
போர்க்களத்தில்
புண்பட்டவர், அனாதைகள், உயிருக்குப் போராடுவோர், பார்வை இழந்தவர், காலில்லா முடவர்.
(சிறு. 76)
o கால் இல்லாத முடவர், கண் இல்லாத குருடர், ஊமை, அநாதை, கல்லாதார், வீடிழந்தவர், சேர்த்த செல்வத்தை இழந்தவர், நெல்லை இழந்தவர், கால்நடைச் செல்வமான பசுக்களை இழந்தவர், கடன்பட்டவர், வறியோர், பெற்றோர்களை இழந்தவர், பார்ப்பார், பசித்தார், தவசிகள், குழந்தைகள், குடும்பத்தினரால் வெறுத்தொதுக்கப்பட்டோர், குழந்தைப் பெற்றவர், பிரசவ வேதனையில் இருப்போர், கருப்பமுற்ற பெண்கள், பித்தர்கள், வாதநோயால் துன்பப் படுவோர், குற்றத்தின் காரணமாக அரசனால் தண்டிக்கப்பட்டோர், தாக்கப்பட்டவர்கள், நலிந்தோர், பெண்கள், நோயால் வருந்துவோர், பொருள் இல்லாதவர், வழிப்போக்கர், சுமைதாங்கிக் களைத்தோர், உறவினர், தென்புலத்தார், புலம்பெயர்ந்து வந்தோர், தாயிழந்த பிள்ளை, கணவனை இழந்த மனைவி, வணிகத்தில் பொருள் இழந்தோர், புலையர், புண்பட்டார், போக்கற்றவர், மேன்மை இழந்தவர்(ஏலாதி 36, 52, 53, 54, 55, 56, 70, 71, 78, 80). என மேற்குறித்த நிலையிலுள்ளவர்களுக்கு உணவளித்தும், நோய் நீங்க உதவிசெய்தும் மனிதர்கள் வாழவேண்டியதன் அவசியத்தை அறநூல்கள் எடுத்துக்கூறுகின்றன.
கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல்
ஈகை என்னும் அறம் மிகத் தொன்மையானது இதனைத் தொல்காப்பியம் தொடங்கி தொகைநூல்களான சங்க இலக்கியத்திலும் குறிப்பிடப்படும் ஈகை குறித்த செய்திகள் நமக்குத் தெரிவிக்கின்றன. இத்தகைய ஈகைக் குணம் கொண்டவர்களைப் போற்றுதலும், ஈகைக் குணமற்றவர்களைப் பழித்தலும் பழஞ்சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளதை, “கொடுப்போர் ஏத்திக் கொடா அர்ப் பழித்தலும்” (தொல். பொருள். புற. நூ. 87) என்ற தொல்காப்பிய நூற்பா காட்டுகிறது. இதற்குச் சங்கப் பாடல்களில்(புறம். 140,107, 196, 127) நிரம்ப சான்றுகள் உள்ளன. அறநூல்களின் வாயிலாகவும் இத்தகைய சமூக நடைமுறை வழக்கத்தில் இருந்துள்ளதை பல்வேறு இடங்களில் அறியமுடிகிறதெனினும், திருக்குறளில் வரும் ‘நன்றியில் செல்வம்’ என்ற அதிகாரமும் நாலடியாரில் ‘ஈயாமை’ என்ற அதிகாரமும் மிகத்தெளிவாகக் காட்டுகின்றன.
பொருளிருந்தும்
அதைத் தானோ பிறரோ அனுபவிக்காமல் செத்துப் போகிறவன் இந்த உலகவாழ்க்கையில் சாதித்தது
ஒன்றுமில்லை; அப்படிப்பட்டவர்களின் பிறவி மனிதப்பிறவியல்ல; அப்பிறவியும் பூமிக்குப்
பாரமானது; பிறர்க்குப் பயன்படாது சேர்த்துவைக்கும் செல்வம் பெரும் துன்பத்தைத் தருவது
எனக் குறிப்பிட்டு, இப்படி யாருக்கும் பயன்படாத அச்செல்வம் பெண் ஒருத்தி தனியாகவே வாழ்ந்து
முப்பெய்தி விடுவதைப் போன்றது என்றும், ஊர் நடுவே நச்சுமரம் பழுத்திருப்பதைப் போன்றது
என்றும், இத்தகையோரின் செல்வத்தை அடையாளந்தெரியாத அந்நியர்கள் அனுபவிப்பார்களேயன்றி
உலோபிகளுக்குப் பயன்படாது என்றும், கொடைக் குணமற்றவர்களைக் குறித்தும் அவர்தம் பயனற்ற
செல்வத்தைக் குறித்தும் திருக்குறள்(1001-1010) குறிப்பிடுகிறது.
மேற்குறித்த
திருக்குறள் கருத்துக்கள் பிறர்க்குத் கொடுக்க மனமில்லாமல் சேர்த்துவைத்த செல்வம் அடையாளம்
தெரியாத யாரோ ஒருவனால் அனுபவிக்கப்பட்டும், (நாலடி. 274) திருடர்களால் கொள்ளையடிக்கப்பட்டும்
(கொன்றை. 4) அழிந்துபோகும். எனப் பிற்கால அற இலக்கியங்களிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய ஈகைக் குணமற்றவர்களின் தன்மை வள்ளுவர் சுட்டிக்காட்டும் கீழ்மக்களின் தன்மையோடு(கயமை)
ஒத்திருப்பது இங்கு நோக்கத் தக்கது. கயவர்கள் பல்லை உடைக்கக்கூடிய கைவலிமை உடையவர்களுக்கன்றி
மற்றவர்க்கு உணவுண்ட ஈரக் கையால்கூட உதறித் தெறிக்கமாட்டார்கள், இவர்களிடமிருந்து பொருளை
கரும்பை ஆலையில் நசுக்கிப் பிழிவதைப் போல் பிழிந்தால்தான் கொடுப்பார்கள் என்பதை,
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கைய ரல்லா தவர்க்கு. ( குறள். 1077)
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற்
கொல்லப் பயன்படுங் கீழ். (குறள். 1078)
என்ற குறட்பாக்கள் தெளிவுபடுத்துகின்றன.
நிறைவாக
மேற்குறித்த ஈகை என்னும் அறம் குறித்தான அறநூல்களின் கருத்துக்களைத் தொகுத்துக் காண்கின்ற போது, மனிதசமூகம் போற்றி வளர்க்கும் பல்வேறு அறங்களுள் ஈகை என்னும் அறம் தலையாயதாகத் திகழ்கின்றது. இது ஏற்றத்தாழ்வுகள் பெருகிவிட்ட சமூகத்தின் அடிப்படைத் தேவையாகவும் விளங்குகின்றது. இத்தகைய ஈகை என்னும் அறம் போற்றப்பட வேண்டியதன் அவசியத்தைக் காலந்தோறும் தோன்றிய அறநூல்கள் வலியுறுத்தி வந்துள்ளன. அவை, எது ஈகை?; யார் ஈகையாளர்?; ஈகையினால் வரும் பயன்கள் யாவை?; ஈகைக்கு உரியவர்கள் யாவர்?; ஈவோர் பெறும் பேறு யாது?; ஈயாதார்க்கு வரும் இழிவுகள் யாவை? என்பன போன்ற கோள்விகளுக்கு விடைகூறுவதாக அமைந்துள்ளன. இன்று காலமாற்றத்தால் அறங்கள் பல மதிப்பிழந்துவருகின்றன எனினும், மனிதவாழ்வில் இல்லாமை இல்லாத நிலை வரும்வரை ‘ஈகை’ என்னும் அறம் இயங்கிக்கொண்டே இருக்கும். இது காலத்தின் தேவையும்கூட என்பது சிந்திக்கத்தக்கது. முதலாளியத்தின் கோரப் பிடியில் சிக்கித்தவிக்கும் மனித உயிர்களுக்கு ‘ஈகை’ இளைப்பாறிக்கொள்ளக் கிடைத்த குளிர்தரு என்பது உலகியல் உணர்ந்தோர்க்குப் போதரும்.
ஈதல் இயையாக் கடை. (குறள். 230)
துணை நின்ற நூல்கள்
1. புறநானூறு, மூலமும் உரையும், உரையாசிரியர் குழு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2011
2. திருக்குறள், நாமக்கல் வெ.
ராமலிங்கம்பிள்ளை (உ. ஆ.), பாரதி பதிப்பகம், சென்னை, 1990.
3. மணிமேகலை, ந.மு. வேங்கடசாமி
நாட்டார்(உ.ஆ.), சாரதா பதிப்பகம், சென்னை, 2009.
4. க. ப. அறவாணன், அற இலக்கியக் களஞ்சியம், தமிழ்க்கோட்டம், சென்னை, 2011.
5. இராமலிங்க அடிகள், வள்ளலார் எழுதிய உரைநடை
நூல்கள், மீனா கோபால் பதிப்பகம், சென்னை, 1999.
ச. நீலமேகன்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
ஸ்ரீ சங்கரா கலை மற்றும்
அறிவியல் கல்லூரி
ஏனாத்தூர் – காஞ்சிபுரம்
, 631 561
(நீதி இலக்கியங்களும் தமிழ்ச் சமுதாயமும் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
1.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக