ஞாயிறு, 5 ஜனவரி, 2020

சங்க இலக்கிய வரலாறு

சங்க இலக்கிய வரலாறு
உலகில் மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்றாகத் திகழும் தமிழ் மொழி மிகப் பழமையான இலக்கண இலக்கியங்களைக் கொண்டு விளங்குகிறது. இத்தமிழ் மொழியில் பன்நெடுங்காலமாக வழக்கில் இருந்து கால ஓட்டத்தில் மறைந்துபோன தமிழ் நூல்கள் ஏராளமானவை அவ்வாறு அழிந்தவைபோக கிடைத்தவற்றுள் மிகத் தொன்மையானதாக விளங்குவது இலக்கணத்தில் தொல்காப்பியமும் இலக்கியத்தில் பாட்டும் தொகையும் எனக் குறிப்பிடப்படும் சங்க இலக்கியங்களுமாகும். இவ்விலக்கியங்களே தமிழ் இலக்கியத்தில் கொடுமுடியாக நின்று உலக அரங்கில் தமிழ்மொழியின் பெருமையையும், பண்பாட்டையும் பறைசாற்றுகின்றன.
பாண்டிய மன்னர்கள் தாங்கள் ஆண்ட தலைநகரங்களில் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அவற்றின் வழி திறம் வாய்ந்த தமிழ் அறிஞர்களைக் கொண்டு செய்யுள் இயற்றுதலும், இயற்றப்பட்ட செய்யுட்களின் தரத்தை ஆராய்தலும் என்ற நிலைகளில் தமிழ் வளர்க்கும் பணியை மேற்கொண்டுவந்தனர். அந்த வகையில் தென்மதுரையைத் தலைமை இடமாகக்கொண்டு முதற்சங்கமும், கபாடபுரத்தைத் தலைமை இடமாகக்கொண்டு இடைச் சங்கமும் தற்போதைய மதுரையைத் தலைமை இடமாகக்கொண்டு கடைச் சங்கமும் நடைபெற்று வந்தன. இச்சங்கங்களுள் முதல் மற்றும் இடைச் சங்கங்கள் கடல்கோளின் காரணமாக அழிந்துபோயின. கடைச்சங்கம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுவரை நடைபெற்றுவந்தது. இவ்வாறு சங்கமிருந்த காலத்து தோன்றிய இலக்கியமாதலின் இவை  சங்க இலக்கியங்கள் என அழைக்கப்பட்டன.
இத்தகைய சங்க இலக்கியங்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இப்பாடல்களைப் பாடிய புலவர்களும் அரசர் வணிகர் எனப் பல நிலைப் பட்டவர்களாக இருந்தனர். இவர்களுள் பெண்பாற் புலவர்களும் அடங்குவர்.
நாட்டுப்புற மரபில் உதித்து பாணர்களால் வளர்க்கப்பட்டு கற்றறிந்த புலவர்களால் செய்யுளாக இயற்றப்பட்டு வளர்க்கப்பட்ட இச்சங்கப் பாடல்கள் அரசர்களின் முயற்சியிலும் ஆதரவிலும் தேடித் திரட்டி பாடுபொருள் அடிப்படையில் அகம் புறம் எனப் பகுக்கப்பட்டு  அடிவரையறையின் அடிப்படையில் தனித்தனித் தொகுதிகளாக  தொகுக்கப்பெற்றன. இவற்றை பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும் குறிப்பிடுவர்.
எட்டுத்தொகை
            புலவர் பலரால் பல்வேறு காலகட்டத்தில் பாடப்பட்டு தனித்தனியே உதிரிகளாகக் கிடந்தவற்றைத் தேடித் திரட்டி பாடலின் பொருண்மை அடிப்படையிலும், அடியளவு நோக்கியும் எட்டு தொகைநூல்களாக தொகுக்கப்பட்டன அவற்றை,
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை.

எனப் பழம்பாடலொன்று குறிப்பிடுகின்றது. இவற்றுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை என்ற ஐந்து தொகைநூல்களும் அகப்பாடல்களின் தொகுப்பாகவும், பதிற்றுப்பத்து, பரிபாடல் ஆகிய இரண்டும் புறப்பாடல்களின் தொகுப்பாகவும் பரிபாடல் அகமும் புறமும் கலந்த தொகுப்பாகவும் விளங்குகின்றது.
நற்றிணை
எட்டுத்தொகையில் அகத்திணையில் அமைந்த நூல்களுள் ஒன்று நற்றிணை. ‘நல்’ என்ற அடைமொழி பெற்ற இந்நூலை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டது. இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை. தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" ஆவான். இந்நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயங்கார் ஆவார்.
குறுந்தொகை
4அடி முதல் 8அடி வரை என்ற குறைந்த அடிகள் கொண்ட 400 பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இந்நூல் குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. பூரிக்கோ என்பவரால் தொகுக்கப்பட்ட இக் குறுந்தொகைப் பாடல்களை உரையாசிரியர்கள் பலரும் அதிகமாக மேற்கோள் காட்டியுள்ளனர். இந்நூலில் ஆசிரியர் பெயர் தெரியாத புலவர்களுக்கு அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அத்தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து 'அனிலாடு முன்றிலார்', 'செம்புலப்பெயல் நீரார்', 'குப்பைக் கோழியார்', 'காக்கைப்பாடினியார்' என உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற ஆசிரியர்கள் 18 பேர் குறிப்பிடப்படுகின்றனர். திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கன் முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டார்.
ஐங்குறுநூறு
3 அடி முதல் 6 அடி வரை என்ற  அடியளவைக் கொண்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் வீதம் 500 பாடல்களைக்கொண்டு விளங்குகிறது. இப்பாடல்கள் அனைத்தும் ஆசிரியப்பாவால் ஆனவை.
ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன. இதனை,
மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருதும் குறிஞ்சி கபிலர் - கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு

என்ற வெண்பா காட்டும். இதனை டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1903ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.

அகநானூறு
எட்டுத்தொகை நூல்களுள் தொகுப்பு முறையில் தனித்து விளங்குவது அகநானூறு. இத்தொகைநூல் அகப்பொருளில் அமைந்த 400 பாடல்களைக்கொண்டு விளங்குவதால் அகநானூறு என்ற பெயர் பெற்றது. மேலும் எட்டுத்தொகையுள் 13-31 என்ற அடியளவுடைய நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை 'நெடுந்தொகை' என்றும் குறிப்பிடுவர்
இத்தொகை நூலிலுள்ள 1 முதல் 120 வரையுள்ள  பாடல்கள் களிற்றியானை நிரை என்றும், 121 முதல் 300 வரையுள்ள பாடல்கள் மணி மிடை பவளம் என்றும், 301 முதல் 400 வரையுள்ள பாடல்கள் நித்திலக் கோவை என்றும் மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாமல் இந்நூல் தொகுப்பில் 1,3,5,7 … என ஒற்றைப்படை எண்ணாலான பாடல்கள் பாலைத் திணையைச் சேர்ந்தவையாகவும், 2,8 எனும் எண்களைக்கொண்டு வருவன குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், 4, 14 என  4 எனும் எண்ணைப் பெற்று வருவன முல்லைத் திணைப் பாடல்களாகவும்,6,16,26 என 6 னும் எண்ணைப் பெற்று வருவன மருதத்திணைப் பாடல்களாகவும், 10, 20, 30 என வரும் பாடல்கள் நெய்தல் திணைப் பாடல்களாகவும்  தொகுக்கப்பட்டுள்ள முறைமை கவனிக்கத்தக்கது. இந்நூலினைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.
கலித்தொகை
அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. அதன்படி கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்களைக் கொண்ட நூலாதலின் கலித்தொகை என பாவகையால் பெயர்பெற்ற நூலாகத் திகழ்கின்றது. கலித்தொகைப் பாடல்களில் நல்லந்துவனார் பாடிய கடவுள் வாழ்த்துப்பாடல் தவிர்த்து 149 பாடல்களுள், பாலைக்கலியில் 35 பாடல்களும், குறிஞ்சிக்கலியில் 29 பாடல்களும், மருதக்கலியில் 35 பாடல்களும், முல்லைக்கலியில் 17 பாடல்களும், நெய்தற்கலியில் 33 பாடல்களும், இடம்பெற்றுள்ளன. இதனை முறையே பாலைபாடிய பெருங்கடுங்கோ, கபிலர், மருதன் இளநாகன், சோழன் நல்லுருத்திரன், நல்லந்துவனார் எனக் குறிப்பிடப்படும் ஐந்து புலவர்களும் பாடியுள்ளனர்.
பதிற்றுப்பத்து
எட்டுத்தொகை நூல்களுள் புற நூலாக விளங்கும் இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் தற்போது கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள் உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களைப் பற்றியும், அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்களான மூவரைப் பற்றியும் என இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.
புறநானூறு
புறத்திணை சார்ந்த 400 பாடல்களைக் கொண்ட தொகை நூலாதலின்  இது புறநானூறு எனப் பெயர்பெற்றது. இத்தொகை நூல் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும், மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் அறிந்துகொள்ள பெரிதும் துணை நிற்கின்றது.
பரிபாடல்
பல்வகைப் பாக்களும், பலவாய அடிகளும் பரிந்துவரும் பாட்டாதலால் பரிபாடல் என்ற பெயரைப் பெற்றது. இது அகமும் புறமும் இணைந்த நூல். தொடக்கத்தில் 70 பாடல்களின் தொகுப்பாக விளங்கிய இந்நூலில் தற்போது திருமால், முருகன், வையை ஆகியன பற்றி முறையே 6,8,8 என்ற அளவில் 22 பாடல்கள் மட்டுமே கிடைந்துள்ளன. இவற்றைப் பாடிய புலவர்கள் மொத்தம் 13 பேர். இதனைத் தொகுத்தவர் குறித்து அறிய இயலவில்லை.

எட்டுத்தொகை
வ.எண்
தொகை நூல்
அடி வரையறை
பாடல் எண்ணிக்கை
திணை
தொகுத்தவர்
தொகுப்பித்தவர்
1
நற்றிணை
9-12
400
அகம்
தெரியவில்லை
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
2
குறுந்தொகை
4-8
400
அகம்

பூரிக்கோ
3
ஐங்குறுநூறு
3-6
500
அகம்
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
4
அகநானூறு
13-31
400
அகம்
மதுரை உப்புரி குடிகிழான் மகன் உருத்திர சன்மன்
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
5
கலித்தொகை

150
அகம்
நல்லந்துவனார்
தெரியவில்லை
6
பரிபாடல்

22
அகம் புறம்
தெரியவில்லை
தெரியவில்லை
7
பதிற்றுப்பத்து

100
புறம்
தெரியவில்லை
தெரியவில்லை
8
புறநானூறு
4-40
400
புறம்
தெரியவில்லை
தெரியவில்லை

பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை தொடங்கி மலைபடுகடாம் முடிய உள்ள பத்து நீண்ட பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு எனக் குறிப்பிடப்படுகின்றது.  இதனைப் பின்வரும் பழைய வெண்பா ஒன்று தெளிவுபடுத்துகின்றது.
முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருஇனிய
கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்தும் ஆற்றுப்படை என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தவை. இதனுடன் மதுரைக் காஞ்சி என்ற நூலைச் சேர்த்து ஆறு புறநூல்கள் பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ளன.

இவைதவிர முல்லைப் பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை என்ற மூன்றும் அக நூல்களாகும். எஞ்சிய நெடுநல்வாடை அகமா? புறமா? என்ற ஆய்வுக்குரிய நூலாக விளங்குகிறது

திருமுருகாற்றுப் படை
முருகன் அருள் பெற்ற ஒருவன், அதைப் பெற விரும்பும் இன்னொருவனை முருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த இந்நூலை இயற்றியவர் நக்கீரர். இவரும் நெடுநல்வாடையைப் பாடியவரும் ஒருவரே என்றும் வெவ்வேறானவர் என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. ஆற்றுப்படுத்தப் படுவோன் பெயர் நூலுக்கு அமைவது ஏனைய ஆற்றுப்படைகளின் பண்பு. ஆனால்  அதற்கு மாறாக, பாட்டுடைத் தலைவன் பெயரால் அமைந்தது திருமுருகாற்றுப்படை. 317 அடிகளில் அகவற்பாவால் பாடப்பட்ட இந்நூலுக்குப் புலவராற்றுப் படை என்ற பெயரும் உண்டு.
இதில் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆறுபடை வீடுகள் பற்றியும், ஆங்காங்கு நடக்கும் வழிபாடுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. இந்நூல் சைவத் திருமுறைகளுள் பதினோராம் திருமுறையிலும் இடம்பெற்றுள்ளது.

பொருநராற்றுப் படை
போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் (கூத்தன்) தனக்குப் பரிசளித்த கரிகாலனிடம் இன்னொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்டது இது. சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு முடத்தாமக் கண்ணியார் இயற்றிய இப்பாட்டு 248 அடிகள் கொண்டது.
சிறுபாணாற்றுப் படை
 ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடனைப் புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது இப்பாட்டு. இது 269 அடிகளில் அகவற்பாவால் பாடப்பட்டது. சிறிய யாழை வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்துவதாகப் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது.
பெரும்பாணாற்றுப் படை
இது கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர், காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையனைப் புகழ்ந்து பாடிய 500 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும். பேரியாழை வாசிக்கும் பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத் தனக்குப் பரிசளித்த வள்ளலான இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டதாதலால் பெரும்பாணாற்றுப் படையாயிற்று.
மலைபடுகடாம்
வேளிர்குடியைச் சேர்ந்த நன்னன் சேய் நன்னன் என்பானை இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார் பாடிய 583 அடிகள் கொண்ட அகவற்பாட்டு இது. பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது. மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.
முல்லைப்பாட்டு
பத்துப்பாட்டுள் அடியளவில்  மிகச் சிறியது முல்லைப்பாட்டு. இந்நூலைப் பாடியவர் நப்பூதனார். கார்ப்பருவம் வருவதற்குமுன் திரும்புவதாக வாக்குறுதி தந்து போர்க்கடமை ஆற்றச் சென்ற தலைவன் திரும்பிவரும் வரையில், பிரிவுத் துயரைத் தாங்கி, இல்லறம் காக்கும் மனைவியின் ஒழுக்கம் பற்றிப் பேசுவதே முல்லைத்திணை. முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்தது.
பட்டினப்பாலை
காவிரிப் பூம்பட்டினத்தின்  வளத்தைப் பாராட்டிப் பாடிய பாலைத் திணைப் பாட்டாதலின் இதற்கு பட்டினப்பாலை என்ற பெயராயிற்று. 301 அடிகள் கொண்ட இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்றும் குறிப்பிடுவர். இதன் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான். இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியரும் இவரே.
பொருள்தேடச் செல்ல விரும்பிய தலைவன் தன் மனைவியைப் பிரிய மனமின்றித் தன் செலவினைக் கைவிட்ட நிலையில் பாடப்பட்டது இது. அகப்பொருள் இலக்கணம் இதனைச்  ‘செலவழுங்குதல் என்று கூறும்.
குறிஞ்சிப் பாட்டு
261 அடிகள் கொண்ட இவ்வப்பாட்டு களவொழுக்கத்தைச் சிறப்பித்துக் கூறுவது. குறிஞ்சிக்குரிய இயற்கைப் புணர்ச்சியும் அதற்குரிய நிமித்தங்களும் இதில் காணப்பட்டமையால் குறிஞ்சிப்பாட்டாயிற்று. பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண்டு. இது அறத்தொடுநிற்றல் என்ற அகத்துறைக்கு அழகான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. 99 மலர்களைப் பறித்து பெண்கள் பாறையில் குவித்து அருவியில் நீராடி மகிழ்ந்தமை பற்றிய செய்தி குறிப்பிடத்தக்கது. ஆரிய அரசன் பிரகத்தன் என்பானுக்குத் தமிழ் அகத்திணைச் சிறப்பைக் கூறும் நோக்கத்தில் கபிலரால் இயற்றப்பட்டது இச்செய்யுள்.
மதுரைக் காஞ்சி
பத்துப்பாட்டுள் மிகவும் நீண்ட பாட்டான இது 782 அடிகளைக் கொண்டது. இது, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு, நிலையாமையை எடுத்துக்கூறி, வாழ்நாளை நன்முறையில் வாழுமாறு அறிவுறுத்தும் வகையில் மாங்குடி மருதனார் இயற்றப்பட்டது மதுரைக்காஞ்சியாகும்.
இந்நூல் கூறும் நிலையாமை உலக வாழ்க்கையை இகழ்ந்து ஒதுக்குவதை நோக்கமாகக் கொள்ளாமல், உலகம் நிலையானது. இதில் நிலைத்த புகழை நிலைநிறுத்த வேண்டும் என அறிவுறுத்துகிறது.
நெடுநல்வாடை
188 அடிகளில் இந்நூலை இயற்றியவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார். இவரும் திருமுருகாற்றுப்படை ஆசிரியரும் வெவ்வேறு புலவர்கள் என்றும், இருவரும் ஒருவரே என்றும் இருவேறு கருத்துக்கள் கூறப்படுகிறது.
காதலன் பகைவர்மேல் படையெடுத்துச் சென்று பாசறையில் இருக்கிறான். காதலி பிரிவுத் துயரால் வாடிக்கிடக்கிறாள். காதலியின் துயரைப் போக்க முடியா அரண்மனைப் பெண்டிர், தலைவன் விரைவில் திரும்பி வருமாறு கொற்றவையை வழிபாடு செய்கின்றனர். இதுவே இதன் மையக் கருத்து.
எல்லோருக்கும் பொதுவான வாடைக்காற்று பிரிவுத் துயரால் வருந்தும் காதலிக்கு நெடியதாகத் தோன்றுகிறது. அதாவது, ஒரு பொழுது ஓர் ஊழி போல் தோன்றுகிறது. ஆனால் பாசறையில் தங்கி போர்ச் செயலில் சிந்தையைச் செலுத்தும் தலைவனுக்கு இவ்வாடை நல்வாடையாக விளங்குகிறது. என்பதே இப்பாட்டின் பெயர்ப் பொருத்தம்.
இவ்வகப்பாட்டின் எந்த இடத்திலும் யாருடைய பெயரும் சுட்டிக் கூறப்படவில்லை எனினும், ‘வேம்பு தலை யாத்த நோன்காழ் எஃகம்’ என்ற பாடலடி பாண்டியனுக்குரிய வேப்பம் பூவைச் சுட்டுவதால் இதனைப் புறப்பாட்டு என்றும் குறிப்பிடுவர்.
பத்துப்பாட்டு

வ.எண்
நூல்
அடியளவு
திணை
பாடிய புலவர்
பாடப்பட்டவர்
1
திருமுருகாற்றுப்படை
(புலவராற்றுப்படை)
317
புறம்
நக்கீரர்
முருகன்
2
பொருநராற்றுப்படை
248
புறம்
முடத்தாமக் கண்ணியார்
கரிகால் சோழன்
3
சிறுபாணாற்றுப்படை
269
புறம்
நல்லூர் நத்தத்தனார்
ஓய்மாநாட்டு நல்லியக்கோடன்
4
பெரும்பாணாற்றுப்படை
500
புறம்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
தொண்டைமான் இளந்திரையன்
5
மலைபடுகடாம்
(கூத்தராற்றுப்படை)
583
புறம்
பெருங்கௌசிகனார்
நன்னன் சேய் நன்னன்
6
முல்லைப்பாட்டு
103
அகம்
நப்பூதனார்
-
7
பட்டினப்பாலை
301
அகம்
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
கரிகால் சோழன்
8
குறிஞ்சிப்பாட்டு
261
அகம்
கபிலர்
-
9
மதுரைக்காஞ்சி
782
புறம்
மாங்குடி மருதனார்
பாண்டியன் நெடுஞ்செழியன்
10
நெடுநல்வாடை
188
அகம் புறம்
நக்கீரர்
-

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

தளை தட்டாது வள்ளுவ!

வள்ளுவ!

உன் குறளின்

தொடை நயத்தைவிடச்  சிறப்பு

மனித வாழ்வின் சிக்கலுக்கு

நீ சொல்லும்

விடைநயத்தில் இருக்கிறது.

ஆனால்

உன் குறளின் ஆழத்தை

அறியாதவர்கள்

உன் குறளுக்கு அழகு

எதுகையிலா?

மோனையிலா?

எனப் பட்டிமன்றம்

நடத்திக்கொண்டிருக்கிறார்கள்

 

ஆம் வள்ளுவ!

உன்னை

ஒழுங்காய்ப் படித்திருந்தால்

மனம் பண்பட்டிருக்கும்

மானுடம் மேம்பட்டிருக்கும்

ஆனால் இவர்கள்

உன்னைப் படிப்பதைப் போல்

நடிப்பவர்கள்.

 

இந்த செவிடர்களுக்காக

மானுட விடுதலையை

நீ பாடிக்களைத்தது

போதும் வள்ளுவ!

 

உன் எழுத்தாணியை

அணுவணுவாய்

ஒடித்து

புது எழுத்தாணிகளுக்கு

கூர் முனையாக்கி

பூவுலகப் பெண்களின்

கைகளில் கொடுத்துவிடு

அவர்கள்

அந்த எழுத்தாணியால்

தன் விடுதலையைத் தாங்களே

எழுதிக்கொள்ளட்டும்

அப்படியும் ஒடுக்கவந்தால்

குத்திக் கொல்லட்டும்

 

அவள்

நெருப்பில் வெந்தபின்பு

வேந்து வந்து என்ப பயன்

உன் குறட்பாவைக் கொஞ்சம்

திருத்திக்கொள்வோம் வள்ளுவ!

 

கொலையிற் கொடியாரை பெண்ணொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்.

 

தளை தட்டாது வள்ளுவ!

யாப்புக்கு மட்டுமல்ல

யாதுமாகி நின்ற

பெண்ணுக்கும்

அடிமைத் தளை தட்டாது

மார்தட்டிக்கொள் வள்ளுவ!

மார்தட்டிக்கொள்….

 

-. ச. நீலமேகன்

சனி, 30 நவம்பர், 2019

குறள் பூட்டு

எந்தச் சாவிபோட்டாலும்

உன் குறள் பூட்டு

திறந்துவிடுகிறது

உன் குறளைத் திறந்த

சாவிகளுக்குள்

எது சிறந்ததென்று போட்டி

 

எல்லா சாவிக்கும்

மனம் கோணாமல்

திறந்துவிடுகிற

உன் குறளைவிடவா

அவை பெரியது

 

பூட்டைத் திறந்துவிட்டதாலேயே

உன் பொக்கிஷத்தை மொத்தமாய்

அள்ளிச்செல்ல ஆசைப்படுகிறார்கள்

ஆனால் அனுபவ வாதிகளுக்கல்லவா

அந்த அற்புதப் புதையல்

அள்ளஅள்ளக் கிடைக்கும்

 

கோயிலுக்குள் வந்தவர்க்கெல்லாம்

கடவுள் காட்சிதந்துவிடுவதில்லை

சிலையைப் பார்த்தவர்களெல்லாம்

கடவுளைக் கண்டதாய்

தம்பட்டம் அடிக்கிறார்கள்

உன் குறளை தரிசிக்க

வந்தவர்களும் அப்படித்தான்.

 

சீராக இருந்ததைத்

திருத்திவிட்டு

இந்தச் சமூகத்தைச்

சீர்திருத்த வேண்டும்

என்கிறார்கள்

உன் குறட்பாக்களின்

எழுசீர் சொல்லாததை

எந்தச் சீர்திருத்தவாதி

புதிதாய்ச்

சொல்லிவிடப் போகிறான்

 

என் கவலை எல்லாம்

எல்லா சாவிகளையும் போட்டு

பூட்டைப் பழுதாக்கிவிடுவார்களோ

என்பதுதான்.

ச. நீலமேகன்.

வியாழன், 7 நவம்பர், 2019

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி?

குறைகளைச்
சொல்லி
முறையிட்டேன்

பூசாரியின்
ஒத்துழைப்புக்காக
காத்துக்கிடக்கிறது
கடவுள்.

தட்சணை
தந்துவிட்டால்
கடவுளுக்காக
காத்திருக்காமல்
காரியம்
முடிப்பான்
பூசாரி

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி
ஆண்டவனா?
பூசாரியா?

என்னிலிருந்து
புறப்பட்ட
கேள்விக்கணை
என்னையே கொல்லும்
மெல்ல மெல்ல...

_ ச.நீலமேகன்

திங்கள், 30 செப்டம்பர், 2019

ஆயுதம்

என்னைப் பொறுத்தவரையில் எழுதுவது என்பது பொழுதுபோக்கல்ல மனதை ஒருநிலைப் படுத்தும் ஒரு வித தியானம் என்றே கருதுகிறேன்.

இக்கதை என் கல்லூரி காலங்களில் 15 ஆண்டுகளுக்கு முன் படைப்பிலக்கியப் பாடவேளைக்காக எழுதி நண்பர்களோடு பகிர்ந்துகொண்டது.

வீசி எறிய மனமில்லாமல் நான் சேர்த்துவைத்த காகிதங்களைப் புரட்டும்போது அகப்பட்டது இந்த ஒருபக்கக் கதை….

 

ஒருபக்கக் கதை

ஆயுதம்

-         ச. நீலமேகன்

 

இந்த சமுதாயம் இருக்கிறதே அது வாழ வழியற்றவர்களை; வலுவற்றவர்களைக் காயப்படுத்திப் பார்ப்பதில்தான் எவ்வளவு சந்தோஷம் காண்கிறது. ஆனால் அக்கிரமம் செய்பவன் வலுத்தவனாக இருந்தால் தட்டிக்கேட்கத் துப்பில்லாமல் நமக்கேன் வம்பென்று ஒளிந்துகொள்கிறது.

இந்தச் சமூகத்தில் தன்னோட வாழ்க்கையை ரசிக்கத் தெரியாதவர்கள் தான் அடுத்தவர் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுப் பார்க்கத் துடியாய்த் துடிக்கின்றனர். இவர்களுக்குத் தன் வாழ்க்கையை வாழ நேரமிருந்திருந்தால் அடுத்தவர் வாழ்க்கையை விமர்சிக்க நேரமேது.

புருஷன் மணல் லாரியில அடிபட்டு செத்துட்டா அதுக்கு இந்த பார்வதி என்ன செய்வாள் பாவம். 

ஆனா அவ மாமியார் “இவள கட்டியாந்த நேரந்தான் எம் புள்ளைய எமங்கொண்டுபோயிட்டான்” என எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பாள்.

பார்வதியோட புருஷன் செத்தவுடனேயே ஊரு உறவு எல்லாமா சேந்து அவளுக்கு ஏதோ பெரிய உபகாரம் செய்யறதா நெனச்சிக்கிட்டு தாலிய அறுத்து, பூவு பொட்டெல்லாம் அழிச்சி கேவலப்படுத்தி ஒன்னுகூடி சோறுதின்னுட்டு போச்சே தவிர, யாராவது அவ ரெண்டு பொண் குழந்தைகள வெச்சுகிட்டு எப்படி கஷ்டப்படப் போறாளோன்னு நெனச்சி வாழ வழிசொல்லிட்டா போச்சி.

கணவனை இழந்த இந்த ஓராண்டு கால வாழ்வில் பார்வதி, தான் வீதியில் நடந்துபோவதை எதிர்ல வரவங்க சகுனத்தடையா நெனக்கிறதையும், சிலபேர் தன்னைப் பார்க்கிற பார்வையே சரியில்லங்கிறதையும், புருஷனை இழந்த பொண்ணுக்கு இந்த சமூகம் தர மதிப்பு என்னங்கிறதையும் ரொம்ப நல்லாவே உணர்ந்திருந்தாள்.

நீண்ட யோசனைக்குப்பிறகு ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தாள். அவளுக்கு இதுதான்… இது ஒன்றுதான் சரி என்று பட்டது.

“தன்னை ஒரு பொருட்டாக நினைக்காத சமூகத்தை நாம் ஏன் எண்ணி பயப்பட வேண்டும். இந்த சமுகம் என்ன சந்தனக் காடா? எல்லா இடங்களிலும் மணம் வீச. எத்தனை சாக்கடைகள் சந்தன வாசத்தில் ஓடித்திரிகின்றன.

நம்மை நாமே ஏன் காட்டிக் கொடுத்துக்கணும். நானொரு விதவை எனக்குப் பாதுகாப்புக்கு யாருமே இல்லைன்னு!, அதனாலத்தானே மனித உருவெடுத்த மிருகங்கள் இவ தனக்கு எப்ப இரையாவான்னு காத்துக்கிடக்கு.

இந்த சமுதாயத்துக்கிட்ட இருந்து நம்மைப் பாதுகாத்துக்க சில அடையாளங்கள் ஆயுதமா பயன்படும்னா அத ஏன் இந்த ஊருக்காக பயத்துக்கிட்டு அத பூட்டி வைக்கணும்.

ஆமா ஒரு பொண்ணுக்கு இவ யாருமில்லாதவன்னு காட்டிக்கொடுக்கிறது இந்த பொட்டு, பூ, தாலி, மெட்டி இதெல்லாந்தான்னா இத ஏன் நாம உதரித்தள்ளணும், ஒளிச்சு வைக்கணும்?...” என ஆழ்ந்த யோசனையில் இருந்தாள்.

சீதையைச் சிதையில் இறக்கிப் பார்த்த சமூகம். சிந்தையில் திருந்த இன்னும் பல யுகங்கள் ஆகாதா என்ன?. அதற்காக இவள் தினந்தினம் தீக்குளிக்கத் தயாராயில்லை, ஊர் ஆயிரம் சொல்லட்டுமே… பார்வதி வெளியூருக்கு வேலைக்குப் போய் வருகிறாள் தாலி, பொட்டு, மெட்டி, வளையல், பூ என்ற ஆயுதங்களைத் தரித்துக்கொண்டுதான்.

வீதியில் நடந்துபோகிறாள்.

“கட்டுக்கழுத்தி எதிரில் வருகிறாள் நல்ல சகுனம்” எனக் கூறியபடி புது மணத் தம்பதிகளைக் காரில் ஏற்றி வழியனுப்புகிறாள், நதி மூலம் ரிஷி மூலம் தெரியாத ஒரு பழைய பஞ்சாங்கம்.  

இப்போதெல்லாம் இரைதேடி அலையும் கண்களுக்கு அவள் இறையாகத் தோன்றுகிறாள்.

இன்று அவள் கம்பெனியில் ஏதோ விஷேஷம் போல இருக்கு குத்துவிளக்கு ஏற்றுகிறாள் பார்வதி, அந்த விளக்குதான் எவ்வளவு பிரகாசமாய் எரிகிறது.

பக்கத்தில் நின்ற பெண்ணொருத்தி அவளைப் பார்த்து உலகம் கேட்கும் வழக்கமான கேள்வியை கேட்கிறாள்… “உங்க வீட்டுக்காரர் எங்க வேலை செய்யறார்”.

சற்றும் யோசிக்காமல் பதில் சொல்கிறாள் பார்வதி “ராணுவத்தில்”.

 

 

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

பாரதி பாட்டு

ஒரு பக்கக் கதை

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் மார்க்ஸிய, பெரியாரியக் கருத்துக்களை நண்பர்களோடு சேர்ந்து ஆர்வத்தோடு வாசிப்போம் அதன் தாக்கத்தால், எங்களுக்குப் பாடமாக இருந்த படைப்பிலக்கியப் பாடத்திற்காக எழுதிய ஒரு குட்டிக்கதை….

பாரதி பாட்டு

“எனக்கு பொழுதுபோற நேரத்துல இந்த ராமுவ தேடுறதே வேலையா போச்சு… பொழுதோட அவன புடிச்சு சங்கிலில கட்டிப்போடுங்கன்னு சொன்னா அத யாராவது கேட்டாத்தானே….. இப்ப நாந்தான் தெருத்தெருவாக அலையவேண்டி இருக்கு…

எப்பவும் இந்தத் தெருக்கோடியிலதான் சுத்திக்கிட்டு இருப்பான் இன்னைக்கு இவ்வளவு நேரம் தேடியும் அவன காணலயே!.

யாராவது புதுசா கேர்ள் ஃப்ரெண்ட் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கானா!?

ஏன் அவன் சுத்தக்கூடாதா!? சுத்தனாத்தான் என்ன தப்பு?! நாங்கபோட்ட சோத்த தின்னுட்டு எங்க வீட்டு வாசலையே சுத்திசுத்தி வந்தாலும் அவனுக்குன்னு உணர்ச்சிகளே இருக்காதா என்ன?!....... இவன் என்ன ஊர் ஒலகத்துக்காக வேஷம் போட்டு திரியற மனிஷ ஜென்மமா என்ன?

அட இந்த ராமுவ பாத்தியா!…. தனியா இருக்கற அந்த  ஒத்த வீட்டுக் கந்தசாமி வாத்தியார் வீட்டுத் திண்ணையில காலதூக்கி ஒன்னுக்கு அடிச்சிட்டு, அங்க என்ன சுத்திசுத்தி வந்து மோந்து பாத்துக்கிட்டு இருக்கான்.

டேய் ராமு இங்க என்ன பண்ணிகிட்டு…. தெனமும் உன்னைத் தேடுறதே வேலையா போச்சு” என மனசுக்குள் புலம்பிக்கொண்டே, சுற்றி அலைந்ததில் கால் வலியெடுக்கவே கந்தசாமி நாயுடு வீட்டுத் திண்ணையில்  போய் உட்கார்ந்தேன். ராமு வாலை பலமாக ஆட்டிக்கொண்டு முன்னங்காலை தூக்கிக்கொண்டு மேலே உரசிக்கொண்டு வந்தது.

வீட்டுக்குள் பெண்ணின் அலரல் சத்தம்….

“என்ன தைரியம் இருந்தா எங்கிட்டயே பயமில்லாமல் சொல்லுவ….”.

“அவளை விட்டுடுங்க அடிக்காதீங்க……”

“எல்லாம் நீ கொடுத்த செல்லந்தான்டி… எவ்வளவு திமிர் இருந்தா அந்த முதலியார் பையனைக் காதலிக்கிறேன்னு எங்கிட்டயே சொல்லுவா! மொளச்சு மூனு எல விடல, இதுக்கெல்லாம் காதல் கேக்குது!...”

“முடிய விடுங்க அவள அடிக்காதீங்க..”

“இவ சொல்ற மாதிரி இவ இஷ்டத்துக்குக் கல்யாணம் பண்ணி வெச்சா என்னால ஊர்ல தலைகாட்ட முடியாது. ஜாதி விட்டு ஜாதி இவளுக்குக் காதல் கேக்குது…. அந்த முதலியார் வீட்டுப் பையன் ரொம்ப நல்லவனாம் அன்பா பாத்துக்குவானாம். வெக்கங்கெட்ட கழுத… படிச்ச பையனா வேலைக்கு போறவனா மட்டும் இருந்துட்டா போதுமா?! குலம் கோத்திரம் ஒன்னும் பாக்க வேணாம்?!. இந்த ஊர் என்ன சொல்லும்?! என்ன எவனாவது மதிப்பானா? இங்க பாரு இன்னொருதடவ அவனைப் பத்தி பேசினையோ உன்ன வெட்டி பொதச்சிடுவேன் ஞாபகம் இருக்கட்டும்”

இந்த கந்தசாமிநாயுடு வாத்தியார் பொண்ணு முருகேச முதலியார் பையன லவ் பண்றா போல இருக்கு!

சரி நாம வீட்டுக்கு கிளம்புவோம் அப்புறம் என்னத் தேடி யாராவது சுத்த ஆரம்பிச்சிடப் போறாங்க….

“ஏய் ராமு…. வா!”

காலையில பத்து மணி இருக்கும் அந்தப் பள்ளிக்கூடம் பக்கமா போறேன்……

“சாதிகள் இல்லையடி பாப்பா

குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” எங்க எல்லாரும் திருப்பி சொல்லுங்க..

 

மரத்தடியில் பாடங்கேட்டுக்கொண்டிருந்த பிள்ளைகள் திருப்பிச் சொல்லின..

“சாதிகள் இல்லையடி பாப்பா

குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்று.

 

பாடம் நடத்திக்கொண்டிருப்பது யார் என்று கவனித்தேன்….அட  கந்தசாமி நாயுடு!

பாரதியார் பாட்டு பாடம்நடத்துறதுக்கு மட்டும்தான் போல இருக்கு. இந்த பாரதியார் பாட்டு இந்த வாத்தியாருக்கே விளங்கல…அந்த குழந்தைகளுக்கு எங்க விளங்கிட போவுது என மனசுக்குள் நினைத்துக்கொண்டே திரும்பிப் பார்க்கிறேன்..

இந்த ராமு… மேரி விட்டு ரோஸி நாயோடு விளையாடிக்கொண்டிருந்தது.

 

-          ச. நீலமேகன்.


ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

தண்ணீர் தண்ணீர் - நான் ரசித்த திரைப்படம்

https://youtu.be/-UH5dSM_v2w

மாதிரி வினாத்தாள் - முதலாம் ஆண்டு முதற்பருவம்

மாதிரி வினாத்தாள் : முதலாம் ஆண்டு, முதல் பருவம்

மாதிரி வினாத்தாள் - முதலாம் ஆண்டு முதல் பருவம்.

மாதிரி வினாத்தாள் - முதலாம் ஆண்டு முதல் பருவம்