சிக்னல்
-
சிறுகதை
இரவு 8 மணி இருக்கும். எவ்வளவு நேரம்தான்
சிக்னல் இல்லாத செல்போனை கையில் வைத்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருப்பது. செல்போனை எடுத்து சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டு
சுடுகாட்டுப் பக்கமாய் போனால் நேற்றைப் போலவே
சிக்னல் கிடைத்தாலும் கிடைக்கும் என்ற தீர்மானத்துக்கு வந்தார் நீலகண்டர். காலம் போவதைப்
பற்றிக் கவலைப்படாமல் எதையும் ஒழுங்காகச் செய்யவேண்டும் என்ற பித்துப்பிடித்த பிரம்மச்சாரி
அவர்.
வயது நாற்பதை நெருங்கிவிட்டபிறகும் தனக்கு நல்ல எதிர்காலம்
இருப்பதாக தன் உழைப்பின்மேல் நம்பிக்கை வைத்து தானுண்டு தன் வேலையுண்டு எனக் கல்லூரிக்குப்போவதும்
வருவதும், புத்தகமும் கையுமாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் ஒரு எந்திரமாகவே மாறிப்போயிருந்தார்
தமிழ்ப்பேராசிரியர் நீலகண்டர். தனக்கு முனைவர்பட்டம் கிடைத்துவிட்டால் எப்படியும் விடியல்
வந்துவிடும் என்பது அவரது இருண்டவாழ்வின் ஒரே நம்பிக்கை.
ஆனால் அதுவோ பஞ்சபாண்டவர்கள் வனவாசம் போன
கதைபோல 12ஆண்டுகள் வனவாசமும் ஓராண்டு அஞ்ஞாத வாசமும் சேர்த்து 13 வருடங்கள் ஆகிவிட்டது
எத்தனையோ பேரிடம் தன் நிலையைச் சொல்லிவிட்டார் இன்னும் யாருடைய மனமும் கனியாததால்,
தன்னைக் கல்லாக்கிக்கொண்டு என்றாவது தீர்வு
கிடைக்கும் என மனதைச் சமாதானப் படுத்திக்கொண்டு தனக்கென்று இருக்கிற தகப்பனாருக்கு
உபத்திரவமாய் காலந்தள்ளிக்கொண்டிருக்கிறவர். தனக்கு நியாயம் கேட்க ஒரு கிருஷ்ணபரமாத்மா
வரமாட்டாரா என ஏங்கிக்கிடப்பவர்.
நாற்பது வயதாகியும் தனக்குப் பாரமாய் இருக்கும்
நீலகண்டரை அவரது தகப்பனார் சாகச்சொல்லிக்கூடப் பார்த்துவிட்டார். ஆனால் இவருக்கோ படிப்பே
வாழ்வின் ஆதாரம் என நம்பி தன் வாழ்நாளின் உன்னதமான இளமைக்காலத்தை இரையாக்கிவிட்டு முனைவர்பட்டத்தை
வாங்காமல் செத்துப்போவதா? என்ற எண்ணத்தில் உயிரைக் கெட்டியாய் பிடித்துக்கொண்டு நடமாடிக்கொண்டிருக்கிறார்.
வயிற்றுப்பாட்டுக்கும் பார்க்கிறவர் கண்ணுக்கு சற்று
மதிப்பாய்த் தெரியவும் தனியார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
இந்த அளவுக்கு இப்போதைக்கு அவரைப்பற்றி உங்களுக்குத் தெரிந்தால் போதும். வேதனைகளைப்
பங்குபோட்டுக்கொள்ள யார்தான் விரும்புவார்கள் அதனால்தான் அவரைப்பற்றி அதிகம் பேசாமல்
இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.
மின்னஞ்சல் ஒன்றை அனுப்பவேண்டும் அதற்காக
சிக்னல் வரக்கூடிய இடத்தைத்தேடித்தேடி அலுத்துவிட்டதால் சுடுகாட்டுக்கே போய்விடுவதென்று
தீர்மானம் செய்துகொண்டார்.
முந்தாநாள் காலை 11 மணிக்கு அவர் வேலைசெய்யும் கல்லூரியின் துறைக்குழுக்கூட்டம்
கூகுள்மீட் வழியாக நடந்தபோதுகூட சுடுகாட்டுப்பக்கமாய் போனபோதுதான் சிக்னல் கிடைத்தது.
அங்கிருந்த நடுகல் மீது உட்கார்ந்தவாரே மீட்டிங்கை முடித்த நம்பிக்கையில்தான் இப்போதும்
சுடுகாட்டுப்பக்கமாய் போவதென சைக்கிளில் கிளம்பினார் நீலகண்டர்.
ரொம்பவும் இருட்டு வேளையாக இருந்ததால்
சுடுகாட்டுக்குப்போகும் வழியில் பெரியகுளத்தருகே நின்று டவர்கிடைக்கிறதா என்று பார்த்தபோது
அவர் செல்போனில் ஒரு பாயின்ட்கூட சிக்னல் இல்லை.
வாட்சப்பைத் திறந்து பார்த்ததில் லச்சுவுக்கு(லட்சுமிகாந்தன்
என்பதை சுருக்கமாகவும் செல்லமாகவும் எல்லோரும் அப்படித்தான் சொல்லுவார்கள்) மாலை நான்கு மணிக்கு“இங்கு சிக்னல் கிடைக்கவில்லை”
என்று டைப்செய்த வாட்சப் தகவலும், சிக்கல் கிடைக்கவில்லை என்ற உண்மையை நிரூபிப்பதற்காக
எடுத்து இணைத்திருந்த ஸ்கிரீன் ஷாட்டும் அப்லோடாகாமல் பச்சைவட்டம் சுற்றிக்கொண்டே இருந்ததில்
நீலகண்டத்திற்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது.
எத்தனை முறை புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும்
எடுக்கப்போவதில்லை என்றாலும் ஆற்றாமையை கொட்டித்தீர்க்க வேறு வழியில்லாததால் குளக்கரை
படிக்கட்டுப்பக்கமாய் சைக்கிளை நிறுத்திவிட்டு வாடிக்கையார் சேவை மையத்துக்குப் போன்
போட்டு காதில் வைத்ததில் அது சொல்லுவதற்கு ஏற்ப எண்களை ஒவ்வொன்றாக அழுத்திக்கொண்டே
போனதில் ஒருவழியாய் கஸ்டமர்கேர் இணைப்பு கிடைத்து எதிர்முனையில் “வணக்கம் தங்களுக்கு
எவ்வாறு உதவலாம்” என்ற ஒரு பெண்குரல் கேட்டது.
சுயவிவரங்கள் எல்லாவற்றையும் சொல்லிமுடித்தபின்
வழக்கமாக சொல்லும் புளித்துப்போன பழைய பதிலையே சொன்னதில் நீலகண்டர் பொறுக்கமுடியாமல்
ஆத்திரம்கலந்த தொனியில் “நிலைமை புரியாமல் சொன்னதையே ஒப்புக்குச் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்
உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்” என்று சொல்லி எல்லாவற்றையும் கொட்டித்தீர்த்த பிறகும்
ரொம்ப சாதாரணமாக கஸ்டமர்கேர் இணைப்பில் பேசிக்கொண்டிருந்த பெண் “இவ்வளவெல்லாம் நீங்கள்
பேசவேண்டியதில்லை சார். எங்க சைடுல என்ன ப்ராப்ளம்ன்னு பார்க்கிறோம். இதைத்தவிர வேறு
தகவல் ஏதும் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கா” என்ற அலுவல் முறை கேள்விக்கு நீலகண்டர்
“வேற ஒன்னுமில்லை” என்ற விரக்தி கலந்த தொனியில் பதில் சொல்லி முடித்ததும்.
“இந்தநாள் இனியநாளாக அமைய வாழ்த்துக்கள்
KSNL ஐ அழைத்தமைக்கு நன்றி” எனக்கூறி உரையாடலை
முடித்துவிட்டாள்.
பெருமூச்சுவிட்டுக்கொண்டே சுடுகாட்டுப்பக்கமாய்
போனால்தான் சிக்னல் கிடைக்கும்போலிருக்கிறது என்ற தீர்மானத்திற்கு வந்த நீலகண்டர் குளத்தின்
படிக்கட்டருகே நிறுத்தியிருந்த சைக்கிளைத் தள்ளிக்கொண்டே தார்ச்சாலையில் சுடுகாட்டுப்பக்கம்
நடந்தார்.
சாலையெங்கும் மாலையாக இருந்தது. ரோட்டில்
பஸ் போவதும் வருவதுமான வழக்கமான சூழலாக இருந்திருந்தால் அந்த மாலைகளெல்லாம் நசுங்கி
சாலையோடு சாலையாக இருந்தஇடம் தெரியாமல் போயிருக்கும். கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ்கள்
ஓடாததால் அந்த மாலைகளெல்லாம் ரோட்டின் குறுக்கே வேகத்தடைபோலக் கிடந்தன.
இருட்டில் அதன்மீது கால்பட்டதும் பாம்பை
மிதிப்பதைப் போன்று சற்று கூச்சமாக இருந்தது. அதோடு அந்த மாலைகளின்மீது சைக்கிள் சக்கரம்
ஏறி இறங்கும்போதெல்லாம் “தடக் தடக்…கென்று சத்தம்போட்டுக்கொண்டே மெல்ல மெல்ல சுடுகாடுபோய்
சேர்ந்தது.
கடந்த ஒருமாத காலமாகவே ஊரில் கொரோனா தொற்றாலும்
வயோதிகத்தாலும் தொடர்ந்து சாவுகள் விழுந்துகொண்டே இருந்ததால் சுடுகாட்டுக்கு பிணங்களின்
வரத்து சற்று அதிகமாகவே இருந்தது.
அரிச்சந்திரன் கோயில் அருகே சைக்கிளை நிறுத்திவிட்டு
கிழக்கே திரும்பிப் பார்த்ததில் இருட்டில் எரிமேடையில் பிணம் எரிந்துகொண்டிருப்பதை
நீலகண்டர் கொஞ்சநேரம் வந்த வேலையை விட்டுவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
பிறகு
செல்போனை எடுத்துப் பார்த்ததில் அவருக்கு இந்தமுறையும் ஏமாற்றமே மிஞ்சியது சுடுகாடு
வந்தும் சிக்னல் இல்லை.
“நேற்று
இருப்பார் இன்றில்லை” என்பது செல்போன் சிக்னலுக்கும் பொருந்துமோ என்னவோ.. நேற்று கிடைத்த
சிக்னல் இன்று இல்லை. சுடுகாட்டில் நின்றுகொண்டிருக்கும்போது இப்படியொரு நினைப்பு நீலகண்டத்திற்கு
வந்ததில் வியப்பொன்றுமில்லை எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழப் பழகியவர்தான் அவர்.
சைக்கிளை மிதித்துக்கொண்டு வீடுவந்து சேர்ந்தபோது
மணி 9.30 ஆகியிருந்தது. வெய்யிலில் வீட்டுக்கூரையை பழுதுபார்த்த அசதியில் நீலகண்டரின்
அப்பா பரமசிவம் உறங்கிப்போயிருந்தார்.
8 மணிக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு சுடுகாட்டுக்குப்
புறப்படும்போதே “சோறாக்க என்னால் முடியாது வேணும்னா ஆக்கி சாப்டுக்க” என்று தன் அப்பா
பரமசிவம் சொன்னது வீடு திரும்பிய பிறகுதான் நீலகண்டருக்கு நினைவுக்கு வந்தது.
இனிமேல் எங்கே சமைப்பது எனத் தயங்கியவர்
வழக்கம்போலவே சாப்பாடு வாய்க்காததால் அப்படியே படுத்துவிட்டார். செல்போனைப் பார்த்தார்
சிக்னல் இல்லை. அந்நேரம்பார்த்து கரண்ட்வேறு போய்விட்டது. காதருகே கொசுக்கள் கூடி கூச்சல்போட்டது.
அங்கங்கே ஊசிபோட்டுக்கொண்டிருந்தது. வலியில் வெறுத்துப்போய் அடித்ததில் கையில் ரத்தம்
பிசுபிசுத்தது.
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் போன கரண்ட் வந்தாலும்
நீலகண்டருக்கு தூக்கம்வரவில்லை. என்னசெய்வதென்று புரியாமல் பக்கத்தில் அடுக்கிவைத்திருந்த
புத்தகத்தில் ஒன்றை எடுத்து தோராயமாக விரித்ததில், பெரியபுராணத்தில் பக்திச்சுவை என்ற
தலைப்பில் யாரோ எழுதிய கட்டுரை கண்ணில்பட்டது.
ஐந்தாறு பக்கங்கள் வாசித்ததில் பசியோடுவந்த
சிவனடியாருக்கு இளையான் குடிமாற நாயனார் வயலில் விதைத்திருந்த நெல்லைக் கொண்டுவந்து
சமைத்துப்போட்ட வரலாற்றையும், கண்ணப்ப நாயனார் வரலாற்றையும் படித்து முடித்தபோது மணி
12 ஆகிவிட்டிருந்ததை மாதாகோயில் மணியோசை சொல்லியது.
ஆனாலும் அவருக்குத் தூக்கம் வந்தபாடில்லை,
காலில் கடிக்கும் கொசுக்களைப் பிடிக்க பல்லிகள் காலின்மீது பாய்வது குளத்தில் குளிக்கும்போது
மீன்கள் கொத்துவது போல கூச்சமாக இருந்தது.
இந்த இரவின் அமைதி காலையிலிருந்து எங்கே
போனதோ தெரியவில்லை, அரைமணி நேரம் செல்போனில் ஒலிப்பதிவு செய்யவேண்டும். அது கல்லூரியில் அவருக்குத் தரப்பட்ட பணி ஆனால் எங்கும்
அமைதியில்லை, அமைதிக்கு எங்கே போவது. வெட்டவெளியில் பேசினால் காற்றின் ஓசை ஒலிப்பதிவில்
கலந்துவிடும். தெருப்பக்கமாய் வந்தால் ஆட்களின் நடமாட்டம் அதிகம். வெடிச்சத்தம், வாகனச்சத்தம்,
கொரோனாவால் செத்துப்போனவர் வீட்டிலிருந்து கேட்கும் பறையொலி என எத்தனையோ இரைச்சல் கேட்டுக்கொண்டே
இருந்தது.
வீட்டுக்குள் வந்தால் தங்கையின் குழந்தை
டோராபுஜ்ஜி பார்த்துக்கொண்டிருந்தது. குழந்தை தூங்கினால் டி.வியை நிறுத்திவிட்டு ஒலிப்பதிவு
செய்துவிடலாம். ஆனால் தூங்கினால்தானே.
வீட்டின் பின்புறம் போனால் குழாயில் நீர்
வருவதற்கு அறிகுறியாய் கொடகொடவென சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. கதவுகள் திறக்கும்
சத்தம், மூடும் சத்தம், பக்கத்துவீட்டு மாட்டுக்கொட்டகையிலிருந்து மாடுகள் கத்தும்
சத்தம் எங்கும் இரைச்சல்மயமாகவே இருந்தது.
எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு தோட்டத்து
வாசற்படிக்காய் உட்கார்ந்து சிறுகதை ஒன்றை வாசித்து ஒலிப்பதிவு செய்து கொண்டிருந்த
போது ஏதோ காலருகே வருவதாய் ஒரு உணர்வு எச்சரித்தது. அதைக் கவனித்தால் வாசிப்பு தடைபடும்
என மனம் அதட்டியது. அந்த அதட்டலை மீறி ஏதோ ஒரு உணர்வு அதைப் பார்க்கவேண்டிய காட்டாயத்தை
உணர்த்தியபோது, காலடிக்கு மிக அருகில் பாம்பு, அதிர்ந்துபோய் காலை இழுத்துக்கொண்டு
நகர்ந்தபோது அது புதருக்குள் ஓடி மறைந்துவிட்டது. இன்னும் வாசித்து ஒலிப்பதிவை முடிக்க ஒருபக்கம் மீதமிருந்தது.
அசௌகர்யமாக இருந்தாலும் “வாசித்து ஒலிப்பதிவு
செய்” என்று மூளை கட்டளையிட்ட பிறகு மனதால் மறுப்புச்சொல்ல முடியவில்லை எப்படியோ ஒலிப்பதிவு
செய்தாகி விட்டது. அந்த ஒலிக்கோப்பை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பத்தான் இந்த சுடுகாடு
வரையிலான சிக்னல் போராட்டம்.
அப்பூதியடிகள் புராணத்தில் மூத்த திருநாவுக்கரசை
பாம்பு தீண்டியது குறித்து படித்துக்கொண்டிருந்தபோது மதியவேளையில் ஒலிப்பதிவின்போது
பாம்பு காலடிக்கு அருகே வந்துசென்றது நீலகண்டருக்கு நினைவுக்கு வந்தது.
மலையில் இருக்கும் குடுமித்தேவரை(சிவன்)
கண்டதும் திண்ணப்பர் “தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்” என்ற நிலையில் இறைவனைப் பிரிய
மனமின்றி கண்ணீர் மல்கி நின்றாராம். இதைப் படிக்கும்போது பாம்பு வருவதுகூடத் தெரியாது
தன்னை மறந்து சிறுகதை படித்துக்கொண்டிருந்தால் பிணமாகி நாமம் கெட்டுத்தான் போயிருப்போம்
என்று கூட நினைக்கத் தோன்றியது அவருக்கு. அப்புறம் போன உயிரை மீட்க திருநாவுக்கரசரை
எங்கே தேடுவது, அப்படி அன்புகாட்டுகிற திருநாவுக்கரசர்கள் இந்த பூமியில் மீண்டும் பிறந்திருக்கிறார்களா
என்ன?என்றெல்லாம் எண்ண அலைகள் சுற்றித்திரிந்துகொண்டிருந்தன நீலகண்டருக்கு
புரண்டுபுரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை,
பெரிய புராணம் படிக்கிறார் என்பதற்காகவோ அவருடைய பெயர் நீலகண்டன் என்பதற்காகவோ வயிற்றுக்குள்
பட்டினிப் போராட்டம் ஓந்துவிடவில்லை. வயிற்றுகுள்ளிருந்து பசி என்ற சிக்னல் மிகத் தீவிரமாகவே
வந்துகொண்டிருந்தது. அதைக் கண்டுகொள்ளாமல் பெரியபுராணத்தில் மெய்மறந்தாலும் அது நீலகண்டரைத்
தூங்கவிடவில்லை. வயிறு நிரம்ப தண்ணீரைக் குடித்துவிட்டுவந்து படுத்ததில் எப்படியோ தூங்கிப்போயிருந்தார்.
கவலைகளை மறந்திருக்க மனிதனுக்குக் கிடைக்கிற
ஒரே வழி தன்னை மறந்த உறக்கம்தான் அந்த தூக்கத்தை வரவழைக்கத்தான் மனிதன் எத்துணை போராடவேண்டியிருக்கிறது.
அந்த உறக்கத்திலும் நீலகண்டரின் கனவில் எந்த துக்கம்வந்து துரத்திக்கொண்டிருக்கிறதோ
யாருக்குத் தெரியப்போகிறது.
1 கருத்து:
வதைபடும் வாழ்வின் எரிச்சல்!,தனிமையின் துயரம்!,பசியும் புலமையும் பிரிக்கமுடியாத ஒன்றுதானோ? தனிவாழ்வும் உலகியலும் துயர்தருகின்றன.மனிதர்கள் வாழும் இடத்தில் செல்போன் சிக்னல் இல்லை,ஆனால் சுடுகாட்டில் சிலசமயம் வருகிறது. இதுதான் டிஜிட்டல் இந்தியாவின் லட்சணம்!எலாத்துன்பங்களையும் தாங்கும் இயேசுவைப்போல நீலகண்டர்!
எள்ளலும் துயரமும் இழையோடும் எழுத்து!
கருத்துரையிடுக