திங்கள், 28 ஜூன், 2021

செருப்பு

செருப்பு

-          சிறுகதை

 

அன்று பள்ளிக்கூடம் விட்டு திரும்பிவந்து பார்த்தபோது முருங்கை மரத்தின் அடியில் கிடந்த அப்பாவின் அறுந்துபோன  செருப்பை எடுத்து முருங்கை மரத்தின் கிளையில் மாட்டிவைத்திருந்தாள் ரமணனின்  அம்மா. வீட்டைவிட்டு வெளியே போகும்போதெல்லாம் அந்த அறுந்த செருப்பு ரமணனின் பார்வையில் விழத்தவறியதில்லை. 

அது அறுந்துபோவதற்கு முன்பு, தெருவில் திண்ணைக்கு அருகேதான் எப்போதும் விடப்பட்டுக் கிடக்கும். திண்ணையில் உட்காரும்போதெல்லாம் ரமணன் அதைக் கவனிக்கத்தவறியதில்லை. 

அந்த ரப்பர் செருப்பின் அடிப்பகுதி எந்த அளவுக்குத் தேய்ந்துபோயிருக்கிறதோ அந்த அளவுக்கு செருப்பின் மேல்பகுதியும் மூன்றில் ஒரு பகுதியளவு தேய்ந்து மேலுள்ள வெண்மைநிறமான பகுதியில் அடிப்பகுதியின் நீலநிறம் தெரியும். அதைப் பார்க்கும்போது அவனுக்கு உலக வரைபடம்தான் நினைவுக்கு வரும். மேற்பகுதி தேய்ந்த நிலையில் தெரியும் நீலநிற அடிப்பகுதிகாட்டும் ரப்பரின் உருவம் நாளுக்குநாள் தேயத்தேய வெவ்வேறு வடிவங்களில் அவன் கண்களுக்குத் தெரிந்தது. அது பார்ப்பதற்கு வட அமெரிக்கா மாதிரி இருக்கிறதா அல்லது தென் அமெரிக்கா மாதிரி இருக்கிறதா அல்லது ஆஸ்திரேலியா மாதிரி இருக்கிறதா என்று ரமணன் சிந்தித்துப் பார்ப்பதுண்டு.

செருப்பின் தேய்மானத்தில் தேசங்களைத் தேடுவது விசித்திரமாக இருந்தது, அவனுக்கு. சிலநேரங்களில் தேசத்தில் வாழ்கின்ற சாமான்யமக்களின் வறுமைநிலை இதுதான் என்பதற்கு சாட்சியாக ந்த தேய்ந்த செருப்பு அவனுக்குத் தோன்றும்.

அந்தச் செருப்பு அறுந்துபோனபிறகு நெடுநாளாய் காலில் செருப்பு இல்லாமல்தான் நடந்துகொண்டிருந்தார் ரமணனின் அப்பா. அவருக்கு நெசவுத்தொழில்தான் வாழ்வாதாரம். அதற்கு அவர்மட்டுமல்ல அவர் குடும்பமே சேர்ந்து உழைக்க வேண்டும். அதில் வரும் வருமானத்தைக்கொண்டுதான் அந்த குடும்பத்திலுள்ளவர்கள் உயிரைப் பிடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

செருப்பு போட்டுக்கொள்ள ஆசைப்படுவது அந்த குடும்பத்தைப் பொறுத்தவரை ஆடம்பரம். அந்த ஆடம்பரத்தை குடும்பத்தலைவர் என்ற தகுதியின் அடிப்படையில் அவர்மட்டுமே அனுபவித்துவந்தார்.  சமீபத்தில் அது அறுந்துபோனதால் பிறக்கும்போதே செருப்போடு பிறந்தோமா என்ற சமாதானத்தை மனதுக்குச் சொல்லிவிட்டு கால்களை செருப்பில்லாமல் நடக்கப்பழக்கிக்கொண்டிருந்தார் ரமணனின் அப்பா மாணிக்கம்.

இதையெல்லாம் உணர்ந்துதான் ரமணன் தன் அப்பாவுக்கு எந்த சிரமமும் தரக்கூடாது என்ற உறுதியோடு செருப்புகேட்டு அடம்பிடிப்பதில்லை என்ற கொள்கைமுடிவை எடுத்து வெறும்காலோடு நடக்கப்பழகிவிட்டான். அவன் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கெல்லாம் அது ஒரு குறையாகவே தெரிவதில்லை.

அன்று மாலை பள்ளிக்கூடம்விட்டு வீட்டுக்கு வந்தபோது வீட்டுவாசலில் வெள்ளைநிறப் புதுச்செருப்பு அவன் கண்ணில்பட்டது. செருப்பின் அளவையும் அது விடப்பட்டிருக்கும் இடத்தையும் பார்த்தவுடனேயே அது அப்பாவின் செருப்பாகத்தான் இருக்கும் என்று அவனால் ஊகிக்கமுடிந்தது. அந்தச் செருப்பு அன்றுதான் வாங்கிவரப்பட்டது என்பதால் பார்க்க பளிச்சென்று இருந்தது. கையில் எடுத்துப்பார்த்தபோது புதுச்செருப்பின் ரப்பர்வாடை மூக்கில் நுழைந்தது.

மாலை ஏழுமணிக்கு ரமணனின் அப்பா தன் சிநேகிதர் மேலண்டைத் தெரு பரந்தாமன் மகள் திருமண விழாவுக்குப் போகும்போது அந்த புதுச்செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பியபோது ரமணனும் அவர்கூட ஒட்டிக்கொண்டான். போகிறவழியில் தன் அப்பாவிடம் செருப்பு என்ன விலை? என்று ரமணன் கேட்டான்.  முப்பத்தைந்து ரூபாய்”  என்று பதில் சொன்னார் மாணிக்கம் மேலெதுவும் பேசவில்லை ரமணனும் அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை.

கிராமப்புறங்களில் திருமண மண்டபத்துக்குள் செருப்புப்போட்டுக்கொண்டு செல்லும் நகரத்து வழக்கம் இன்னும் நுழையவில்லையென்பதால் மண்டபத்து வாசலில் செருப்பை கழற்றிவிட்டுவிட்டு உள்ளே செல்ல முயன்றபோது, ரமணன் தன் அப்பாவிடம்..அப்பா இந்த புதுச்செருப்பை இங்கே விட்டுவிட்டுப்போனால் யாராவது போட்டுக்கொண்டு போய்விடமாட்டார்களா? என்று கேட்டான்.

அதற்கு ரமணனின் அப்பா, “அதெல்லாம் ஒன்றும் ஆகாதுஎன்று சொல்லியும் ரமணன், “இல்லை அப்பா, இங்கே விட்டால் புதுச்செருப்பை யாராவது போட்டுக்கொண்டுபோய்விடுவார்கள், இதைக்கொண்டுபோய் எதிர் வாடையில் இருக்கும் பெரியாயா வீட்டு வாசலில் விட்டுவிட்டு வருகிறேன்என்று சொல்லி செருப்பைக் காலில் மாட்டிக்கொண்டு அவன் பெரியாயாவின் வீட்டில் விட்டுவிட்டுவரப் போனான். அப்போது அங்கே யாரோ இரண்டுமூன்றுபேர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். தெருவாசல் விளக்கு எரியாததால் அவர்கள் முகத்தை ரமணனால் கண்டுகொள்ள முடியவில்லை.

தெருவாசல் வராண்டாவில் இருந்த ராட்டிணத்திற்கு பக்கத்தில் புதுச்செருப்பை விட்டுவிட்டு, யார் கண்ணிலாவது பட்டால் திருடிக்கொண்டு போய்விடுவார்களோ என்ற அச்சத்தில் அங்கிருந்த கிழிந்த கோணியை அதன்மீது போட்டுவிட்டு, மண்டபத்திற்குச் சென்று பார்த்தபோது பெண்ணழைப்பு ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தது. 

அங்கே யாருடனோ பேசிக்கொண்டிருந்த ரமணனின் அப்பா, அவரோடு பேசிக்கொண்டே நடந்து பந்திநடக்கும் பகுதிக்குச் சென்று அமர்ந்ததை ரமணனும் பார்த்துவிட்டதால் அவனும்  தன் அப்பாவின் பக்கத்தில் சென்று உட்கார்ந்தபோது, "இந்தப்பொடியன் உன் பையனா" என்று ரமணனின் அப்பாவோடு பேசிக்கொண்டிருந்தவர் கேட்டவுடன், “ஆமாம் என் பையன்தான் எட்டாவது படிக்கிறான்” என்று அடுத்தகேள்விக்கு இடம்வைக்காமல் முன்கூட்டியே பதில் சொல்லி முடித்தபோது பந்தியில்  இலைபோட்டு சாப்பாடு போட ஆரம்பித்திருந்தார்கள். உண்டுமுடித்து வெளியே வந்ததும் எதிர்ப்பட்ட யாருடனோ ரமணனின் அப்பா மாணிக்கம் பேசிக்கெண்டிருந்த சமயத்தில் ரமணன் தன் அப்பாவின் செருப்பை வைத்த இடத்திலிருந்து எடுத்துவர ஓடினான். அங்கே முன்பு செருப்பை விடும்போது உட்கார்ந்துகொண்டிருந்தவர்கள் யாரையும் பார்க்கமுடியவில்லை.

செருப்பை எடுக்கலாம் என்று கோணிப்பையை விலக்கியபோது அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வைத்த இடத்தில் செருப்பு இல்லை. மறுகணம் இதயம் படபடக்க ஆரம்பித்துவிட்டது. வேறு எங்காவது யாராவது எடுத்துவைத்துவிட்டார்களா? என்றெல்லாம் யோசித்தான். தேடிப்பார்க்கலாமென்று பார்த்தால் வாசலில் போதிய வெளிச்சமில்லை.

கதவைத்தட்டி தன் ஆயாவை அழைத்து  “இந்த மண்டபத்தில் நடக்கிற கல்யாணத்திற்கு நானும் அப்பாவும் வந்தோம் ஆயா, அப்பாவின் செருப்பை இங்கே ஜாக்கிரதையாக இருக்கட்டுமென்று விட்டுவிட்டுப்போனேன் விட்ட இடத்தில் காணோம். யாராவது எங்காவது எடுத்து வைத்துவிட்டார்களா என்று தெரியவில்லை தெருவாசல் விளக்கைப் போடேன்” என்று  தன் ஆயாவிடம் சொன்னான்.

அவன் ஆயா உட்பக்கமாக இருந்த சுவிட்சை அழுத்தித் தெருவிளக்கைப் போட்டுவிட்டுஇங்க ஏன்டா விட்ட, உள்ள வைத்துவிட்டுப் போகக்கூடாதா! என் தூக்கிக்கொண்டு போனானோ என்று சொல்லி முடிப்பதற்குள் கண் நாளாபக்கமும் பசிகொண்ட விலங்கு இரை தேடுவதைப்போல் செருப்பைத் தேடியது. செருப்பு கண்ணுக்கு அகப்படவில்லை. செருப்பை விடும்போது பார்த்துக்கொண்டிருந்த அங்கிருந்த எவனோ ஒருவன்தான் எடுத்துக்கொண்டுபோயிருக்க வேண்டும் என்று அவன் மனம் சந்தேகித்தது.

அங்கிருந்து நடந்து வந்துகொண்டிருந்த அப்பாவிடம்  ஓடிப்போய் செருப்பை காணோம்ப்பாஎன்று சொன்னபோது, அவர் எதுவும் பேசாமல் நின்ற இடத்திலிருந்து அமைதியாக நடந்துபோய்க் கொண்டிருந்தார். செருப்பு காணாமல் போனதில் அவருக்கும் உள்ளூர வருத்தம்தான் என்றாலும் அதற்காக ரமணனைப்போல் அழவாமுடியும். அவர் ரொம்பதூரம் நடந்துபோய்விட்டார்.

அழுதுகொண்டிருந்த ரமணனின் பார்வை போவோர் வருவோர் கால்களையே கவனித்துக்கொண்டிருந்தது. அதில் வெள்ளைநிறப் புதுச்செருப்பு எந்த காலிலாவது தெம்படுகிறதா என்று வெகுநேரமாய்ப் பார்த்துப்பார்த்து கண்கள் பூத்துப்போனது. எவ்வளவு நேரம் அவன் இப்படித் தேடிக்கொண்டிருக்கமுடியும் நேரம் கடந்து தெருக்களில் கூட்டம் அடங்கிவிட்டிருந்தது. இனி அவன் தேட கால்கள் இல்லாததால் வீடுநோக்கி நடக்கலானான் நடக்கிறபோது கால்களில் தெம்பில்லை.

நடந்தவாறே இந்த செருப்பை வாங்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதை நினைக்கும்போதெல்லாம் அவன் செவிகளில்  தறியில் இழைகளுக்கு இடையில் ஓடும் நாடாவின் சத்தமும் இழைக்கொரு வெட்டுவெட்டும் தறியின் சத்தமும் விழுந்துகொண்டே இருந்தது. 

அப்பாவின் உழைப்பைத் தொலைத்துவிட்ட குற்ற உணர்ச்சியில் இரண்டுமூன்றுநாட்களாய் சரியாய் சாப்பிடாமல்கூடக் கிடந்தான். அது தன் தவறுக்கு தானே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்று நினைத்தானோ என்னவோ, அதற்கப்புறமும் எத்தனையோ நாட்கள் கடந்தும் பள்ளிக்கூடம் போகும்போதெல்லாம்  வழியெங்கும் எதிர்ப்படும் கால்களில் அவன் கண்கள் அனிச்சையாகவே அதைத் தேடிக்கொண்டுதான் இருந்தன.

 

 -. ச. நீலமேகன்

28-06-2021

4 கருத்துகள்:

jeykumar சொன்னது…

அருமையான கதை நீங்கள் மேன்மேலும் இது போன்ற கதைகளை மீண்டும் மீண்டும் எழுதிய வலையேற்ற வேண்டும் ஐயா 🙏 மற்றொரு கதைக்காக காத்திருக்கிறோம் நன்றியுடன் உங்கள் அருமை மாணவன்
ஜெய்குமார்எல்லப்பன்....

Shivani சொன்னது…

அருமையான கணிப்பு

Shivani சொன்னது…

உன்னதமான கதை சார்

ச. நீலமேகன் சொன்னது…

படித்துப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி.