என்ன வந்ததாம்
இந்த நடுநிசி நாய்களுக்கும்
காதலர்களுக்கும்
அதுகள் குரைத்துத் தொலைத்தன
இதுகள் நினைத்துத் தொலைத்தன
இரவெல்லாம்
தூக்கத்தை...
வியாழன், 3 நவம்பர், 2022
நடுநிசியில்
ஞாயிறு, 23 அக்டோபர், 2022
பழமொன்ரியு
கூரையேறி கோழிபிடிக்கத் தெரியாதவன்
வானமேறி வைகுண்டம் போனானாம்
செத்த பிறகு.
_ நீலமேகன் 23.10.2022
புதன், 19 அக்டோபர், 2022
இறையனார் பாட்டு
சென்றமுறை
ஜனநாயகக் கிருமிகளால்
தாக்கப்பட்ட தருமி
இந்த முறை
பழைய சோற்றுக்குப்
பாடிக்கொடுத்த
கூந்தல் நாற்றம் பற்றிய
குறும்பாவை
இறையனார் காட்ட
அந்தப்புர ஞாபத்தில்
அரசன் அகமகிழ்ந்து
அவைநடுவே
அள்ளித் தருகிறான்
ஆயிரம் பொற்காசுகளை...
சொற்குற்றம்
பொருட்குற்றம்
என
எக்குற்றமும்
காணது
கவிதை எழுதியது
நீதானா?
எனக் கேட்க மறந்து
வியந்து நிற்கிறார்
நெற்றிக்கண்ணுக்கு
பயந்து நிற்கிறார்
நடுவுநிலை தவறாத
நக்கீரர்...
வறுமைக்கு
இரையான பாட்டுக்கள்
இறையனார் பாட்டாவது
இப்படித்தான்.
ச.நீலமேகன்
20.10.2022
வெள்ளி, 14 அக்டோபர், 2022
பழமொன்ரியு
முருங்கைக் கீரைக்கு வந்தவள்
பெருமை பேசினாள்
பிடித்தாலும் புளியங்கொம்பாய்ப் பிடித்தாளாம்.
- நீலமேகன்
14-10-2022
திங்கள், 26 செப்டம்பர், 2022
இன்னிசை வெண்பா
இனம்நாடித் தள்ளவேண்டா தீந்தேனை வண்டு
எருக்கிலும் தேரும் மலைநாட! கூறுவாய்
நாறுமோ மீன்விற்ற காசு
ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022
தேடல்
அர்த்தம்
புதன், 27 ஜூலை, 2022
தோழி வரைவுகடாயது
சனி, 18 ஜூன், 2022
வியாழன், 26 மே, 2022
புதன், 25 மே, 2022
செவ்வாய், 24 மே, 2022
திங்கள், 28 மார்ச், 2022
வண்டுருட்டலாம் பழம்
வண்டுருட்டலாம் பழம்
-
சிறுகதை
1.
குழந்தைகள் அர்த்தங்களைப்பற்றி ஆராய்வதில்லை அது கிளிப்பிள்ளையைப்போல
சொன்னதைச் சொல்லும். போகப்போக மனிதர்களிடமிருந்தே பொய், சூது, வஞ்சம் என மனிதர்களுக்கே
உரித்தான தீயபண்புகள் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும். அதனால்தான் குழந்தைகளின் முகங்கள்
பூத்தமலர்போல பிரகாசிக்கின்றன. ஆனால் காலம் வளர்த்துவிட்ட மனிதர்களைப் பார்க்க வேண்டுமே…
அவர்களின் முகங்களில்தான் எத்தனைஎத்தனை முகமூடிகள்! ஆளுக்கு ஏற்றார்போல நொடிக்குநொடி
மாற்றிக்கொள்ளும் அரிதாரங்கள்! மாயத்தோற்றங்கள்.
ஆனால் சிறுபிள்ளைப் பருவம் என்பது அப்படியா? எவ்வளவு இன்பகரமான
உலகமது ஒவ்வொரு நொடி வாழ்க்கையையும் எத்துணை அடர்த்தியானதாக வைத்திருந்தது. என்ற எண்ணம்
பேருந்தில் அமர்ந்திருந்த குழந்தையைப் பார்த்தபோது ராமலிங்கத்திற்குத் தோன்றியது.
பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த அந்த குழந்தையின் கையில் ஒரு
பிளாஸ்டிக் காற்றாடி.. அந்த காற்றாடி சுற்றும்
அழகை அது ரசிப்பதாகத் தெரியவில்லை. அது ஓடும் பேருந்தின் ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது.
ராமலிங்கம் அந்தக் குழந்தையின் கையில் சுற்றிக்கொண்டிருந்த
காற்றாடி தீடிரெனச் சுற்றாமல் நின்றுவிட்டதைப் பேருந்து ஒரு குலுக்கு குலுக்கி தூக்கிப்போட்ட
நிலையிலும் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான். குழந்தை காற்றுவீசும் நேர்எதிர்
திசையில் காட்டினால்தானே காற்றாடி சுற்றும்.
குழந்தையின் கையிலிருக்கும் கற்றாடியில் போய் ராமலிங்கத்தின் மனம் சிக்கிக்கொண்டது.
அந்தக் குழந்தை அந்த பிளாஸ்டிக் காற்றாடியைக் காற்றுவீசும் திசைக்கு நேர் எதிரில் எப்போது
பிடிக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தான். ஆனால் அது நடந்தபாடில்லை. ஒருவன்
நினைப்பதை மற்றொருவன் சரியாகப் புரிந்துகொண்டுவிட்டால் மனித வாழ்வில் சிக்கல் ஏது!.
ராமலிங்கம் நினைப்பது குழந்தைக்கு எப்படித்தெரியும்?.
கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தை தன் அம்மாவின் மடியில் உறங்கிவிட்டது.
குழந்தையின் அம்மா தன் மடியிலிருந்து சரிந்துவிழுந்த குழந்தையை தூக்கி அணைத்துப் பிடித்தபோது
காற்றாடி விழித்துக்கொண்டு சுற்றத்தொடங்கியது. ராமலிங்கத்தின் நினைவுகளும்தான்.
ராமலிங்கத்தின் மனம் அவனது இருபத்தைந்து வருஷத்துக்கு முந்தைய வாழ்க்கையைப் பேருந்தில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டு பயணத்தினூடே அமைதியாக
அசைபோட்டது.
2.
கடைசிவீட்டு சிலோன்காரப்பாட்டியின் வீட்டுக் கூரையிலிருந்து
காற்றாடி செய்வதற்காக ஊட்டாங்குச்சிகளை பையன்கள் ஆளுக்கொன்றாக உருவிக்கொண்டு ஓடினார்கள்.
கிழவி பார்த்துவிட்டால் சத்தம் போடுவாள் அதற்குத்தான்
அந்த ஓட்டம்.
அவள் சத்தம் போடுவதிலும் நியாயம் இருந்தது. ஆனாலும் அந்த
நியாயம் விளையாட்டுக் குழந்தைகளிடம் செல்லுபடியாவதில்லை.
கூரையிலிருந்து பனையோலைக் காற்றாடி செய்வதற்கு ஒருவரோ இருவரோ
ஊட்டாங்குச்சியை உருவிக்கொண்டுபோனால் பரவாயில்லை, வீட்டுக்கொரு ஆண்மகன் போருக்குப்போக
கிளம்புவதைப்போல தெருவிலுள்ள அத்தனை வீட்டுப்பிள்ளைகளும் சிலோன்காரக் கிழவியின் வீட்டுக்
கூரையின் மீது படையெடுத்தால் பிறகு கிழவி கூச்சல் போடாமல் என்னசெய்வாள்.
தெருவில் இன்னும் நான்கைந்து மஞ்சம்புல் வேய்ந்த கூரைவீடுகள்
இருந்தும் சிலோன்காரக் கிழவியின் வீட்டுக்கூரையிலிருந்து ஊட்டாங்குச்சிகளைத் தெருப்பிள்ளைகள்
உருவிக்கொண்டு ஓடுவதற்கு ஒரே காரணம் மற்ற வீட்டின் கூரைகள் நாள்பட்டதால் மட்கிப்போயிருந்தன
சிலோன்காரக் கிழவியின் கூரை சமீபத்தில் புதிதாய் வேயப்பட்டிருந்ததால் ஊட்டாங்குச்சி
வலிமையாகவும் புதிதாகவும் ரொம்ப நீளமாகவும் வழுவழுப்பாகவும் இருந்ததுதான்.
மற்ற வீட்டின் பழைய கூரைகளில் மரவட்டைகள் கொத்துக்கொத்தாக மேய்ந்துகொண்டிருக்கும். கூரையிலிருந்து கீழே விழும் மரவட்டைகள் தெருத் திண்ணையில் விழுந்து அங்கும் இங்குமாக ஊர்ந்துகொண்டிருக்கும்.
கருப்பும்சிவப்பும் கலந்த நிறத்தில் இருக்கும் அவை ஊர்ந்து செல்லும்போது
அவற்றின் கால்கள் அலையலையாய் நகர்ந்து ரயில்வண்டி செல்வதைப் போலத் தோன்றும். கலை ரசனையுள்ள கழகத் தொண்டர்கள் யாராவது பார்த்தால் அதைத் தன் கட்சிக்கார மரவட்டை என்று நினைத்தாலும் நினைக்கக்கூடும்.
அவை ஊர்ந்துபோகின்ற பாதைகளில் சிறுவர்கள் குச்சியை வைத்து வழிமறித்துத் தூக்கி வித்தைகாட்டியும் சிலர் அந்த மரவட்டைகளைக் கைகளால் பிடித்துத் தூக்கி எறிந்தும் விளையாடுவார்கள். அதைத் தொட்டவுடன் தீபாவளிக்கு விடும் சங்குசக்கரத்தைப்போல சுருட்டிக்கொள்ளும். கையில் நாற்றம் வீசும். அந்த நாற்றம் சிலருக்கு குமட்டலையும் ஏற்படுத்தும். ஒரு முறை ஊர்ந்துபோன மரவட்டையை எடுத்து சரசக்காவின் குழந்தை வாயில்போட்டு குதப்பிக்கொண்டிருந்தது. சிலோன்காரப் பாட்டிதான் அதைக் கவனித்து விரல்களால் வெளியே தள்ளி எடுத்துப்போட்டாள். அதிலிருந்து சரசக்காவுக்கு மழைக்காலத்தில் குழந்தையைத் தரையில் விடுவதென்றால் ரொம்பவே தயக்கம்.
3.
சரசு, கோழித் தாத்தாவின் மூத்த தாரத்து மகள். கோழித்தாத்தாவின் மூத்ததாரம்
சரசுவை நான்குவயதுக் குழந்தையாக இருக்கும்போது தவிக்கவிட்டு மஞ்சள் காமாலை வந்து இறந்துவிட்டாள்.
கோழித்தாத்தா தன் குழந்தையை வளர்க்கவும் பொங்கிப்போடவும் கீழ்ப்பத்துறை மாமாவின் கடைசிப்பெண்ணை
இரண்டாவதாக கல்யாணம் பண்ணிக்கொண்டார். ஏற்கனவே குழந்தை ஒன்று இருக்கின்ற காரணத்தினால்
இறைவன் சிலோன்காரப்பாட்டியின் வயிற்றில் குழந்தை உருவாக்குவது வீண் வேலை என்று விட்டுவிட்டானோ
என்னவோ?. சிலோன்காரப்பாட்டிக்கு சரசுதான் வாரிசு நான்கு வயதிலிருந்து வளர்த்து ஆளாக்கி
பருவத்துக்கு வந்து ரெண்டு வருஷத்தில் வசதி குறைவுதான் என்றாலும் மேஸ்திரி வேலை செய்யும் உறவுக்காரப் பையன் ரங்கனுக்குப் பெண்கேட்டு வந்தபோது கட்டிக்கொடுத்துவிட்டாள். ஏறாத படிப்பு எதற்கென்று எட்டாவதோடு
நின்றுவிட்டவளுக்கு மேஸ்திரி மாப்பிள்ளை பெரிய இடந்தானே!.
ஆண்டுதவறாமல் கூரைவேய எல்லோருக்கும் பொருளாதாரம் கைகொடுத்து
உதவுகிறதா என்ன? அடுத்தவனிடம் கடன்கேட்டு கைகட்டியல்லவா நிற்க வைக்கிறது. நிலையற்ற மனிதவாழ்க்கையின்
தத்துவத்தை உணர்ந்ததால்தானோ என்னவோ தலைமுறை தாண்டியும் அவர்களால் நிலையான கூரையை அமைத்துக்கொள்ள
முடிவதில்லை. “இது என் பாட்டன் கட்டிய வீடு” என்று பின்வந்த எந்தப் பேரனும் வரலாற்றைச் சிலாகித்துப் பேச இடந்தராத சாதாரண குடும்பங்களும் எல்லாத் தெருக்களிலும் இருக்கத்தான்
செய்தன.
பெய்துமுடித்த மழைக்குக் கூரைக்குக் குடைபிடிக்கும் காளான்கள்
கூரையின் ஆயுள் முடிந்துவிட்டதை எடுத்துச் சொன்னபிறகு கூரைபற்றிய சிந்தனை அதன் கீழே
படுத்திருப்பவனை உறங்கவிடுமா என்ன?
அப்படி உறங்கவிடாமல் நச்சரித்த காரணத்தால்தான் நான்கைந்து
வருடங்களுக்குப் பிறகு அரும்பாடுபட்டு புது மஞ்சம்பில்லை வாங்கி புதுக்கூரை போட்டிருக்கிறாள்
சிலோன்காரப் பாட்டி..
சிலோன் பாட்டியின் கணவர் கோழி, அம்மன் கோயில் எதிரில் டீக்கடை
வைத்திருக்கிறார். அவரை வீட்டில் பார்ப்பது மிக அரிது எந்நேரமும் டீக்கடையே கதி என்று
கிடப்பார். டீக்கடையில் மிச்சமாகும் பாலை உறையூற்றித் தயிராக்கி விற்பதும், அதைக்கடைந்து
வெண்ணெய் எடுத்து விற்பதும். கடைந்தெடுத்த மோரை விற்பதும்தான் சிலோன் பாட்டிக்கு வாடிக்கையான
வேலை.
அந்தப் பாட்டிக்குச் சிலோன் என்ற பெயரும், அந்தப் பாட்டியின் கணவரான கோழித் தாத்தாவுக்குக் கோழி என்ற பெயரும் எப்படி வந்தது என்று ஆராய்ச்சி செய்து இதுவரை யாரும் டாக்டர் பட்டம் வாங்கவில்லை.
ஒரு வேளை யாராவது ஆராய்ச்சிசெய்து சொல்லியிருந்தால் யாருக்காவது தெரிந்திருக்கும்.
தவிர அவர்கள் வெளியூரிலிருந்து பிழைக்கவந்தவர்கள்.
இப்படிப் பிழைக்கவருபவர்கள் எல்லோருடைய வாழ்க்கையும் முதலில் குடிசையில்தான் ஆரம்பிக்கும் பிறகு மாடிகட்டி கோடிகளுக்கு அதிபதியாக வாழ்வதாகத் திரைப்படத்தில் காட்டுவார்கள். ஆனால் நடைமுறைக்கு அது சாத்தியமாவதில்லை. அவர் அந்த ஊருக்கு வந்து நாற்பத்தைந்து வருடங்களாகின்றன. கறுத்தமுடி வெளுத்துப்போனதைத்தவிர வேறு மாற்றங்கள் ஏதும் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்துவிடவில்லை.
அந்தக் கூரையில் இப்படி எப்பவாவது ஊட்டாங்குச்சி பிடுங்கும்
தெருப்பிள்ளைகளைவிட வியாழக் கிழமைகளில் சுற்றிபோடுவதற்காக மஞ்சம்பில்லைப் பிடுங்குவது
தெருப்பெண்களுக்கு வாடிக்கையாய்ப் போய்விட்டது. பிடுங்காதே என்று அக்கம்பக்கத்து பெண்களிடம்
கராராகச் சொல்லமுடியுமா என்ன? அதுவும் பிடுங்குபவள் பணக்காரியாக இருந்துவிட்டால் மவுனம்தான்.
சிலோன்காரப்பாட்டியின் கூரைக்கு இப்படியெல்லாம் தாக்குதல்கள்
இருக்கத்தான் செய்தன. அப்புறம் சிலோன்பாட்டி சத்தம்போடாமல் வேறென்ன செய்வாள். அடிபட்டு
வலியில் துடிப்பவளைப்போய்க் கத்தக்கூடாதென்றால் எப்படி? ஆனால் ஆதிக்கக்காரன் அப்படிக் கூச்சல் போடுகிறவர்களைப்பார்த்து தன்னை அவமதித்துவிட்டதாக அல்லவா சொல்லிக்கொள்கிறான்!.
அதனால்தான் தெருப்பிள்ளைகள், சிலோன்காரப்பாட்டி அசந்த நேரம் பார்த்து கூரையிலிருந்து
ஊட்டாங்குச்சியை உருவுவார்கள். தவிர இந்த படையெடுப்பெல்லாம் ஆண்டுமுழுக்க நடப்பதில்லை
இது சீசனுக்கு வரும் நோய்போல. காற்றாடி செய்வதை விட்டு எவனாவது பட்டம்விட ஆரம்பித்துவிட்டால்
பிறகு எல்லோரும் பட்டம்செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் ஆனால் தெருப்பெண்கள் வியாழனுக்கு
வியாழன் சுற்றிப்போட கூரையிலிருந்து மஞ்சம்பில்லைப் பிடுங்குவது அப்படியா? அது வாடிக்கை
பெண்கள் செய்யும் வேடிக்கை.
பனையோலையை நறுக்கி ஓலையின் ஓரங்களில் கிழித்து அதன் குறுக்கே மற்றொரு ஓலையைச் செருகி அதன் நடுவில் வேலிக்காத்தான் முள்ளையோ சப்பாத்திக்கள்ளி முள்ளையோ குத்தி மறுநுனியில் ஊட்டாங்குச்சியைச் செருக வேண்டும். ஆனால் உடனே காற்றாடி ஓடும் என்று சொல்லிவிடமுடியாது. அதன் பக்கங்களைப் பிடித்து திருகி எச்சில்துப்பி மந்திரம்போட்டால் காற்றாடி ஓடும் அதுதான் காற்றாடி செய்வதற்கான தொழில்நுட்பமும் அதற்கான மந்திரமும்.
காற்று நன்றாக வீசினால் காற்றாடியை எடுத்துக்கொண்டு ஓடவேண்டியதில்லை
நின்ற இடத்தில் நின்றாலே காற்றாடி சுற்றும். காற்று வீசாத நேரங்களில் கற்றாடியை வேகமாக
சுற்றவைக்க வேண்டுமென்றால் சிறுவர்கள் வாயில் கௌவிக்கொண்டோ அல்லது கையில் பிடித்துக்கொண்டோ
ஓடவேண்டும். இப்படியான விளையாட்டுக்களில் ராமலிங்கம் ஒவ்வொரு விடுமுறையையும் சிறு
வயதில் தன் பாட்டியின் வீட்டில் மகிழ்ச்சியாகக் கழித்திருக்கிறான்.
அன்றைக்குக் காய்ச்சலில் படுத்திருந்த அம்மாவைப் பார்க்க ராமலிங்கத்தைக்
கூட்டிக்கொண்டு சரசு தன் பிறந்தவீட்டுக்குக் கிளம்பும்போது குடிபோதையிலிருந்த ரங்கனிடம்
வழிச்செலவுக்குப் பணம் கேட்டபோது அவள் மாமியாள், “உங்காத்தாவீட்டில இருந்து வருவாதூரம் வண்டிவண்டியா
கொண்டாந்தையா? உங்காத்தாளுக்கு ஆத்தோரம் வண்டுருட்டலாம் பழம் கொட்டிகெடக்கும் பொறுக்கினுபோய்
குடு” என்று ஏளனமாகப் பேசி அனுப்பினாள். அதற்குமேல் அவளால் ஒரு நொடிப்பொழுதும் அங்கு நிற்க முடியவில்லை.
சரசுவை அவள் மாமியாள் திட்டுவது வாடிக்கைதான் என்றாலும் அன்று
வீட்டுக்கு வந்திருந்த நாத்தனார் முன்பு திட்டியதில் அவள் மனமொடிந்து போய்விட்டாள்.மாற்றுத்துணிகூட
எடுத்துக்கொள்ளவில்லை ராமலிங்கத்தை அழைத்துக்கொண்டு பிறந்தவீட்டுக்கு வந்துவிட்டாள்.
வரும் வழியில் ராமலிங்கம் “வண்டுருட்டலாம்
பழம் என்றால் என்ன?” என்று தம் அம்மாவிடம் கேட்க நினைத்தாலும் புடவை முந்தானையால் கண்ணீரைத்
துடைத்துக்கொண்டு கலைந்த கோலமாய் இருந்த அவளிடம்
அதைக் கேட்க மனம் வரவில்லை.
வீட்டினுள் நுழைந்த சரசு மூலையில் கோரைப்பாயில் சோர்ந்து படுத்துக்கிடந்த அம்மாவின் தலையில் கைவைத்துப் பார்த்தபோது அனல் வீசியது. மகள் வந்திருக்கிறாள் தன்னைத் தொட்டுப்பார்ப்பது அவள்தான் என்ற உணர்வற்றுக்கிடந்தாள் சிலோன்காரப்பாட்டி.
கஞ்சிவைத்துக்கொடுக்கலாம் என்று அடுப்பங்கரைப்பக்கம் சரசு சென்றபோது
போட்டது போட்டபடி கிடந்தது. கஞ்சி காய்ச்ச பானையிலிருந்து நொய்யை அள்ளி முறத்தில் கொட்டியதும்
அதில் புழுக்கள் நெளிந்தன. புடைத்து சுத்தம் செய்து தண்ணீரில் கொட்டி ஊறவைத்துவிட்டு
பாத்திரம் துலக்கி எல்லாவற்றையும் ஏறக்கட்டி வைத்துவிட்டு அடுப்பைப் பற்றவைத்து கஞ்சிக்குப் பானையில் நீர் ஊற்றி உலைவைத்தபோது. அம்மாவின் முனகல் சத்தம் கேட்டு சரசு ஓடிவந்து பார்த்தபோது
பாயிலேயே வாந்திஎடுத்துவிட்டிருந்தாள்.
எல்லாவற்றையும் துடைத்துவிட்டு துண்டை குளிர்ந்த நீரில் நனைத்து
உடம்பெல்லாம் துடைத்துவிட்டபோது. சிலோன்காரப்பாட்டி லேசாகக் கண்விழித்துப் பார்த்தாள்.
மகளின் அரவணைப்பில் தாய்மையின் சுகத்தை அனுபவித்தாள். ஒரு கணம் மகளின் கைகளில் குழந்தையாகிப்
போயிருந்தாள். உணர்வுவந்து கண்விழித்த அம்மாவுக்கு அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைத்த
நொய்க் கஞ்சியைக் கொண்டுவந்து கொடுத்தாள். ரெண்டு மடக்கு உள்ளே இறங்கியதும் சிலோன்காரப்பாட்டிக்கு
தெம்பு வந்துவிட்டது. அது குடித்த கஞ்சியினால் வந்த தெம்பல்ல நானிருக்கிறேன் உனக்கு
என்ற மகளின் நம்பிக்கை தந்த தெம்பு.
ஆமாம் வாழவேண்டும் என்ற ஆசையையும் அதற்கான ஆற்றலையும் அன்புதான்
அள்ளித்தருகிறது. அது கிடைக்காமல் போகிறபோது இந்த உயிரை சுமந்துகொண்டு திரிவதுதான்
எத்துணை வேதனை. சிலோன்காரப் பாட்டிகூட ‘பணபலம் இல்லாட்டாலும் ஜனபலம் வேண்டும்’ என்று
அடிக்கடி பேச்சுவாக்கில் தன்னிடம் மோர்வாங்க வருபவர்களிடம் சொல்லி அங்கலாய்த்துக்கொள்வதுண்டு.
பாட்டியின் ஊருக்கு வரும்போதெல்லாம் ராமலிங்கம் தெருப் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுவதும் சுற்றித் திரிவதும் அவனுக்குப் பழக்கமாகிப்போய்விடவே ஊரின் மூலை முடுக்குகள் எல்லாம் அவனுக்கு அத்துப்படி.
அன்றைக்கு அவன் செய்த
பனையோலைக் காற்றாடிக்கு சப்பாத்திக்கள்ளி முள் எடுத்துவர உள்ளூர்பிள்ளைகளோடு சேர்ந்துகொண்டு
ஆற்றின் மறுகரைக்குச் சென்றுவிட்டான். ஆறு என்றால் ஏதோ வற்றாத ஜீவநதி என்று நினைத்துக்கொள்ளக்கூடாது.
அது கனமழை பெய்தால் கொஞ்சகாலத்துக்குத் தண்ணீர் ஓடும் காட்டாறு. ராமலிங்கம் சப்பாத்திக்கள்ளியில்
முள் எடுக்கச் சென்ற இடத்தில் கிடந்த மலத்தை இரண்டிரண்டு வண்டுகள் உருட்டிக்கொண்டு
போய்க்கொண்டிருந்தன. அதைப் பார்த்துக்கொண்டே கள்ளிச்செடியில் கைவைத்தபோது முள் குத்திவிட்டது. வெடுக்கென கையை இழுத்துக்கொண்டு, ‘அம்மா’ வெனக் கத்திவிட்டான். முள்குத்திய இடத்தில் ரத்தம் வெளிவந்தது.
அன்று மாலை விளையாடிவிட்டு ராமலிங்கம் வீடு திரும்பியபோது
வீட்டின் முற்றத்தில் ஜனக்கூட்டம் தூரத்தில் வரும்போதே சிலோன்காரப்பாட்டியின் ஓலக்குரல்.
சரசு கூரையின் உத்தரத்தில் தூக்கில் தொங்கிவிட்டாள். வந்து பார்த்தவர்கள் அவள் சாவுக்கு என்ன
காரணமாக இருக்கும் என ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். அருகே வந்த ராமலிங்கத்தைக் கட்டியணைத்து சிலோன்காரப்பாட்டி
அழுதாள். அவள் இதயத்துடிப்பையும் அதன் தவிப்பையும் ராமலிங்கம் தன் காதுகளில் கேட்டான். அவள் அழுத கண்ணீர் சிலோன்காரப்பாட்டியின் மார்பைச் சுட்டது.
4.
திடீரென விசில்சத்தம் கேட்டு நினைவு வந்து திரும்பிப்பார்த்தபோது
பக்கத்து சீட்டிலிருந்த குழந்தை வைத்திருந்த பிளாஸ்டிக் காற்றாடி கீழே கிடந்தது. குழந்தையும்
குழந்தையோடு வந்தவர்களும் முன்பே இறங்கிவிட்டதை ராமலிங்கம் கவனிக்கவில்லை, காலருகே
கிடந்த பிளாஸ்டிக் காற்றாடியை எடுத்துப் பார்த்தபோது காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும்
பேருந்தின் வேகத்திற்கு ஏற்ப வேகமாக சுற்றியது. அதன் லேசான அதிர்வு மீண்டும் பழைய ஞாபகங்களைத்
தூண்டிவிட்டது. இன்னும் பயணம்போக ராமலிங்கத்திற்கு தூரமிருந்தது. கொல்லவும் வெல்லவும்
சொல்லுக்குத்தான் எத்துணை ஆற்றல்.
- 28.03.2022
ஞாயிறு, 27 மார்ச், 2022
வேடிக்கை பார்த்தவன்
வேடிக்கை பார்த்தவன்
-
சிறுகதை
கோட்டை
மூலையிலேயே இறங்கிவிட்டால் அடுத்து ஏறவேண்டிய பேருந்தில் உட்கார சீட் பிடித்துவிடலாம்
என்ற கணக்கு பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது போட்ட கணக்கைப்போலவே தப்பாகத்தான் போய்விட்டது.
ரொம்பநேரமாய்
காத்திருந்தும் வந்த இரண்டு பேருந்துகளுமே ஏறமுடியாதபடிக்குக் கூட்டமாக இருந்ததால்
நிறுத்தத்தில் நிற்காமல் கடந்துபோனது. உட்காருவதற்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை நிற்பதற்கே
இடமில்லை என்ற நிலையில் பள்ளிமாணவர்களும் கல்லூரி மாணவர்களும் பேருந்தின் படிக்கட்டில்
தொங்கியவாறு இரண்டு பேருந்துகளுமே வலப்பக்கமாய் சாய்ந்தபடி வந்ததால்
‘இனியும் இங்கே நின்றுகொண்டிருப்பது மடத்தனம்’ என்ற மூளையின் ஆலோசனையை ஏற்று கிருஷ்ணனின்
கால்கள் பழைய பேருந்துநிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கின.
பேருந்து
நிலையத்தை அடைந்தபோது பொன்னூருக்குப் போக ஒரு பேருந்துகூட இல்லை. கிருஷ்ணனுக்கு ஏமாற்றமே
மிஞ்சியது. திரும்பவும் கோட்டை மூலைக்குப் போவதைவிட ஐந்துகண் பாலத்துக்குப்போய்விட்டால் புதிய பேருந்து
நிலையத்திலிருந்து வரும் பேருந்தைப் பிடித்துவிடலாம் என்று மனம் சொன்ன ஆலோசனைக்கு மதிப்பளித்து
நீண்டதூரம் நடந்து கிருஷ்ணன் பாலத்தருகே வந்து நின்றபோது மக்கள் கூட்டம் மந்தையாய்
நின்றுகொண்டிருந்தது.
நின்ற
இடத்திற்கு நேர் எதிரே காஞ்சிபுரத்திலிருந்தும், சென்னையிலிருந்தும் வந்து நின்ற பேருந்துகள்
மக்களைக் கொட்டிவிட்டுப் போய்க்கொண்டிருந்ததே ஒழிய நின்றிருந்த பயணிகள் யாரும் அந்த
பேருந்துகளில் ஏறிச்சென்றதாகத் தெரியவில்லை.
பேருந்துக்காகக்
காத்துக்கிடத்தவர்கள் தூரத்தில் வரும் பேருந்தைப் பார்த்ததும், அது தங்கள் ஊருக்குப்போகும்
பேருந்துதானோ என நினைத்து, காளை மாட்டை அடக்க நினைக்கும் மாடுபிடி வீரனின் கவனத்தோடு
வைத்திருக்கும் கைப்பைகளை எல்லாம் தூக்கிப் பிடித்துக்கொண்டு தயாராக நின்றுகொண்டார்கள்.
சிலர் உயரதிகாரி ஜீப் வருவதைப் பார்த்து சாலையோரமாய் பாதுகாப்புப்பணிக்கு நிற்கும்
கான்ஸ்டபில் அட்டேங்ஷனில் நின்று சல்யூட் அடிக்கத் தயாராவதைப்போல இருந்தது.
சில வேளைகளில்
எதிர்பார்த்த உயரதிகாரி காரில் இல்லாமல் இருப்பதை கவனித்து அடித்த சல்யூட் வீணாகப்போய்விட்டதை
எண்ணி வெட்கப்படும் அந்த போலீஸ்காரரைப்போல வருகிற பேருந்து தனக்கானதாக இல்லாமல் ஏமாற்றத்தைத்
தந்தபோது பயணிகள் விரக்தியானார்கள்.
புதிய
பேருந்து நிலையத்திலிருந்து வரும் பேருந்து அத்தனையும் சென்னைக்குப் போகிற பேருந்தாகவே
வந்ததால் நிற்பவர்கள் நிலையைச் சொல்ல வேண்டுமா என்ன? எல்லோரும் உச்சுக்கொட்டினார்கள்.
சிலர் அவசரப்பட்டு ஓடிப்போய் ஏறிக்கொண்டு பேருந்து வேறுபக்கம் திரும்பியவுடன் தைரியமுள்ள
ஆட்கள் படியிலிருந்து குதித்து இறங்கிக்கொண்டார்கள். குதிக்கமுடியாத புடவைகட்டிய பெண்கள்
நிறுத்தச்சொல்லி கூச்சல் போட்டார்கள். பேருந்து நடத்துனர் கடுப்பாகி திட்டினார். படிக்கத்தெரியாத
வயதான மூதாட்டிகள் சிலர் சாலையோரமாய்த் தவித்து நின்றார்கள்.
கல்லூரிப்
பேருந்துகளிலிருந்தும் கம்பெனி பேருந்துகளிலிருந்தும் வந்திறங்கியவர்களால் நிமிடத்திற்கு
நிமிடம் கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருந்தது.
அந்த நேரத்தில்
கிருஷ்ணனுக்கு கல்யாணத்திற்கு எதிர்பார்த்தவர்களைவிட அதிகமான கூட்டம் வந்துவிட்டால்
கல்யாணவீட்டுக்காரனுக்கு ஒரு பதற்றத்தை ஏற்படுத்துமே அதைப்போல இருந்தது.
நின்றுகொண்டிருந்த
மக்கள் கூட்டத்திற்கு இடையே ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகள் புகுந்து பள்ளிக்கூட
மாணவிகளை மிரட்டிக்கொண்டிருந்தது. அவர்கள் அச்சப்பட்டு விலகி நின்றார்கள்.
இவ்வளவு
மக்கள் கூட்டமிருந்தும் கடையில் எதுவுமே வாங்காத விரக்தியோ என்னமோ கடைக்காரன் கடைக்கு
எதிரே பிளாட்பாரத்தில் நின்றிருந்த மக்களை ஒதுங்கி நிற்கும்படி விரட்டினான்.
அந்த சொல்லுக்கு
மதிப்பளித்து அங்கே ரொம்பநேரமாய் பேருந்தை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்த கிழவி நகர்வதைப்போல
பாவனை செய்துவிட்டு மீண்டும் பழையபடி உட்கார்ந்துகொண்டது. அந்தக்கிழவி நொடிக்கொருதரம்
“ஆராசூருக்குப்போகும் பஸ் எப்போது வரும்” என்று நின்றுகொண்டிருந்தவர்களைக் கேட்டு நச்சரிக்க
ஆரம்பித்துவிட்டது.
பொறுமை
இழந்துவிட்ட கிழவி திடீர் என கூட்டமாய் வந்துகொண்டிருந்த பேருந்தை மடக்கிப்பிடித்து
ஏறும் தோரணையோடு பேருந்தை மடக்கப்போனது. ஆனால் ஏறமுடியாமல் திரும்பிய கிழவியை, “என்ன
அவசரம் குமரிப்பொண்ணாட்டம் ஓடிப்போய் பஸ்ஸைப் பிடிக்க ஓடுற, கீழ விழுந்தா மூலையில முடங்கிக்
கெடக்க வேண்டியதுதான்” என ஏறமுடியாது என்ற உறுதியோடு விலகி நின்றவர்கள் அக்கறையோடு
அதட்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் கிழவியின் செயலைப்பார்த்து பரிகாசமாகச் சிரித்தார்கள்.
பேருந்துக்காக
நின்றிருந்தவர்கள் கூட்டம் குறைவதாய் இல்லை. கூட்டத்திற்கு நடுவில் பருவப்பெண்ணுக்கான
லட்சணங்கள் பொருந்த ஒரு பெண்மட்டும் தனியே தெரிந்தாள். அதற்குக் காரணம் அவள் முகத்தில்
இருந்த புன்னகைதான். மாநிறம் அதற்கு ஏற்றாற்போல அவள் அணிந்திருந்த சுடிதார் நிறம் ரொம்ப
எடுப்பாய் இருந்தது. காதிலும் கழுத்திலும் கவரிங்நகை, ஆனாலும் அவள் தோற்றப்பொலிவு அதன்
மதிப்பைக்கூட்டியது. அவளின் அடர்ந்த கூந்தலுக்கு நடுவே ஆங்காங்கே நரைத்த முடிகள். ஆனாலும்,
அவளுக்கு அது குறையில்லை என்று கிருஷ்ணன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.
ரொம்ப
நேரமாய் நின்றிருந்தும் அவள் முகத்தில் சோர்வு இல்லை. அவள் யாரையோ மனதில் நினைத்து
புன்னகைத்துக்கொண்டிருக்கிறாள் என்பதை மட்டும் அவனால் ஊகிக்க முடிந்தது.
அவள் தன்
அருகில் நின்றிருந்த அம்மாவை அழைத்தபோது அந்தக் குரல் அவள் தோற்றத்துக்கு அவ்வளவு பொருத்தமாக
இல்லை என்று கிருஷ்ணனுக்குத் தோன்றியது. அது பிரபல திரைப்பட நடிகை பண்டிகை காலத்தில்
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொந்தக் குரலில் பேட்டி கொடுப்பதை நினைவுபடுத்தியது. ஆனாலும்
அவள் முகத்தோற்றத்தை அது பாதித்துவிடவில்லை.
எதிர்ப்புறத்தில்
வந்த பேருந்தில் ஏற முயன்று அவள் தூரமாய்ப் போய் நின்றுவிட்டாலும். சுமாரான அழகுள்ள
துணை நடிகைகளோடு எடுப்பாகத் தோன்றும் கதாநாயகியைப்போலத் தெரிந்தாள்.
தலையில்
சூடியிருந்த பூக்களைப்போலவே பள்ளிச் சிறுமிகளின்
முகங்களும் வாடியிருந்தன. புத்தக மூட்டைகளை சுமந்துகொண்டு பேருந்துக்காக நிற்கும் மாணவிகளில்
ஒருத்தி “இந்த நோட்டுப்புத்தகங்களை அன்றாடம் சுமந்துவரச்சொல்லும் வாத்தியார் விபத்தில்
சாகவேண்டும்” என்று சபித்த வார்த்தைகளும் கிருஷ்ணனின்
காதில் விழாமல் இல்லை.
பேச்சின்
ஊடே லாலிபாப் தின்றுகொண்டே பதில்சொல்லிக்கொண்டிருந்த மாணவியின் வாயிலிருந்து சொல்லுக்குப்
பதிலாய் லாலிபாப் கிழே விழுந்துவிட்டது. அவள் அதற்காக வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
மண்ணில் விழுந்த லாலிபாப்பின் மீது ஈக்கள் வந்து மொய்த்துக்கொண்டன. மொய்க்கின்ற ஈக்கள்
எத்தனை என்பதை எண்ணி முடிக்கும் முன் ஒட்டுமொத்த ஈக்களும் ஏககாலத்தில் பறந்து மீண்டும்
ஒவ்வொன்றாய் வந்து அமரத்தொடங்கின. மீண்டும் ஈக்களை எண்ணுவதில் மனம் லயிக்காததால் திரும்பவும்
பேருந்து வருகிறதா என்று எதிர்பார்க்கும் கண்களோடு சேர்ந்துகொண்டது, பேருந்து ஏதும்
வரவில்லை. பொறுமை இழந்த பள்ளி மாணவர்கள் மெதுமெதுவாய் நகர்ந்து நடு ரோட்டில் நின்றுகொண்டிருந்தார்கள்.
பைக் வைத்திருக்கும்
பள்ளி மாணவன் ஒருவன் வேகமாய் வந்து வீலிங்செய்து பருவப்பெண்கள் கவனத்தை ஈர்க்க வித்தை
காட்டிவிட்டுப் பறந்துபோனான்.
நின்றுகொண்டிருந்த
இடத்திற்கு அருகிலிருந்த பூக்கடையில் கட்டப்பட்ட மாலைகள் பாலித்தீன் கவர்களால் போர்த்தப்பட்டு
தொங்கிக் கிடந்தன. பூக்கள் வாடாமல் இருக்க ஒரு பையன் அதன்மீது தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தான்.
மண மாலையும் பிண மாலையும் அருகருகே தொங்கிக்கொண்டிருந்தன. வாழ்வை எதிர்பார்க்கலாம்,
ஆனால் சாவை எதிர்பார்த்தும் மனிதப் பிழைப்பு இருப்பதை எண்ணிப் பார்த்தபோது விந்தையாக
இருந்தது கிருஷ்ணனுக்கு.
கைக்குழந்தையை
வைத்துக்கொண்டு வருகிற கூட்டமாக வரும் பேருந்தில் எப்படி ஏறப்போகிறோமோ என்று உடன்வந்த
பெண்ணுடன் கைப்பிள்ளைக்காரி புலம்பிக்கொண்டிருந்தாள்.
திரும்பி
நின்றபோது ரோட்டோரமாய் சைக்கிளில் டீ விற்றுக்கொண்டிருந்தவனிடம் எதிர்ப்புறத்திலுள்ள
அரசு மருத்துவமனையிலிருந்து பிளாஸ்கோடு டீ வாங்கவந்த பெண்மணி டீ விற்பவனிடம் “ இரண்டுகப்
பால் வேணும் பிளாஸ்கை அலச கொஞ்சம் சுடுதண்ணி இருக்குமா?” எனக் கேட்டவுடன் அவன் கொஞ்சமும்
தாமதிக்காமல் டீக்கேனிலிருந்து கொஞ்சம் டீயை பிளாஸ்கில் பிடித்து அதை மூடி ரெண்டு குலுக்கு
குலுக்கி மூடியைத் திறந்து டீயை கீழை ஊற்றிவிட்டு அந்தப்பெண் கேட்ட இரண்டுகப் டீயை
அதே பிளாஸ்கில் பிடித்துக்கொடுத்துவிட்டு, “இந்தாம்மா இருபதுரூபா கொடு” என்று அதிகம்
பேசாமல் காசை வாங்கி சட்டைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.
அவள் மனதில்
நினைப்பது முகத்தில் வெளிப்பட்டதே ஒழிய வார்த்தையில் வெளிப்படவில்லை. அவள் போய்விட்டாள்.
அதை அவள் யாருக்காக வாங்கிக்கொண்டுபோனாளோ அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்திருப்பாளா?
கீழே ஊற்றியிருப்பாளா? என்று மனதிற்குள் கேள்வி எழுந்தது.
அதற்குள்
திருநங்கை ஒருத்தி நின்றுகொண்டிருந்தவர்களின் தலையில் கைவைத்து காசுகேட்டாள். சிலர்
தந்தார்கள் தராதவர்களை அவள் கோபித்துக்கொள்ளவில்லை. கிடைத்தவரை வாங்கிக்கொண்டு எதிர்ப்புறப்
உள்ள ரோட்டைக்கடந்து கடைகளில் கைதட்டி காசுகேட்டுக்கொண்டே போனாள்.
அன்றாடப்
பயணம் என்பதால் அவனைப்போலவே அன்றாடம் பேருந்துகளில் வந்துசெல்லும் அல்லது பேருந்துக்காகக்
காத்திருக்கும் இடங்களில் பரிட்சையமான முகங்கள் அடிக்கடி கண்ணில் படும். அன்றாடம் வேலைக்குப்
போகிறவர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என எப்படியோ கண்ணில்பட்ட உருவங்கள்
அத்தனையையும் படம்பிடித்து மூளையில் சேமித்து வைத்துக்கொள்ளும். இப்படி காத்திருக்கும்
காலங்களில் மூளை சும்மா இருக்குமா என்ன? அது பார்த்த உருவங்களை புலனாய்வு செய்ய ஆரம்பித்துவிடும்.
இந்த மாணவர்கள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள், இந்த சீறுடை அணியும் பெண்கள் எந்த கல்லூரியில்
படிக்கிறார்கள், பஞ்சத்தில் அடிபட்டவர்களைப்போலக் கிடக்கும் அந்தத் தனியார் பாலிடெக்னிக்
கல்லூரி ஆசிரியைகளுக்கு என்ன சம்பளம் கிடைக்கும். அவர்கள் எதிர்காலக் கனவு என்னவாக
இருக்கவும். இப்படி எல்லாம் கிருஷ்ணன் உலக உயிர்களின் ஆசாபாசங்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தான்.
அன்றைக்கு
அவன் கண்ணில் பட்ட உருவங்களில் ஒன்று முன்பே பார்த்த முகமாக இருந்தது. ஆனால் ஒரு வித்தியாசம்
அன்றைக்கு அந்த முகம் அழுத கோலத்தில் இருந்தது. இன்றைக்கு அப்படி இல்லை. அன்றைக்கு
அவள் தான் பேருந்தில் இருக்கிறோம் என்பதையே மறந்துபோயிருந்தாள். பக்கத்தில் அமர்ந்திருந்த
பையனின் தழுவலுக்கு அவள் எந்த எதிர்ப்புமின்றி
தன்னை மறந்து கிடந்தாள். பார்த்தவர்கள் கூச்சப்பட்டார்கள். கண்டும் காணாமல் ரொம்பவும்
நாகரிகமாகத் திரும்பிக்கொண்டார்கள். அவள் வயதொத்த சக மாணவிகள் அவர்களை திருட்டுத்தனமாக
கண்காணித்துக்கொண்டிருந்தார்கள். அவள் கையில்
அடுத்தநாள் வீட்டிலேயே எழுதி கல்லூரியில் சமர்ப்பிக்கும் அறிவுப்பூர்வமான தேர்வுக்கான விடைத்தாள் கையிலிருந்தது.
ஊன்றுகோலை வைத்துக்கொண்டு கூன் வளைந்த கிழவியொருத்தி தட்டுத்தடுமாறி ஏற முயன்றதைப்பார்த்து
டிக்கட் போட்டுக்கொண்டிருந்த கண்டக்டர் “எறங்குறையா? இல்லையா?” எனக்கேட்டு படிக்கட்டில்
வைத்த துணிப்பையை கீழே வீசியெறிந்தான். அந்த சத்தம் இவர்களுக்கு இடைஞ்சலாகப் போய்விட்டதோ
என்னவோ? பேருந்து அவன் இறங்கிப் போய்விட்டான். அன்றைக்குப் பார்த்த அந்தப்பெண்தான்
அவள். கிருஷ்ணன் இதையெல்லாம் அசைபோட்டு முடிப்பதற்குள் பேருந்தின் ஹாரன் சப்தம் அவன்
கவனத்தைத் திசை திருப்பியது.
வந்து
நின்று ஒன்றரை மணிநேரமாகிவிட்டது. கூட்டம் குறைந்த பேருந்து ஒன்றும் வருவதாய் இல்லை.
பாலத்தின் அடியில் சாக்கடைத் தண்ணீர் ஓடும் கால்வாயில் யாரோ ஒருவன் வலையைக் கட்டி மீன்பிடித்துக்கொண்டிருந்தான்.
அவன் மீன் பிடிக்க சேற்று நீரில் இறங்கி கலக்கியதில் காற்றில் சாக்கடை நாற்றம் மணக்க
ஆரம்பித்துவிட்டது.
பாலத்தின்
ஓரத்திலிருந்த மதகின் திட்டுக்கரையில் இருபத்தைந்து வயது மதிக்கத்த ஒருவன் பார்க்க
வித்தியாசமாக ஒன்றன்மேல் ஒன்றாக சுமார் பதினைந்து சட்டைகளைப் போட்டிருந்தான் கலர்கலராய்க்
கண்ணில்பட்ட காலரின் தோராயக் கணக்குதான் அது. லுங்கியும் ஒன்றன்மீது ஒன்றாக இரண்டு
லுங்கிகளை அணிந்திருந்தான். துணிப் பையை முதுகுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு கால்மீது
கால் போட்டுக்கொண்டு வெள்ளை நோட்டில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தான். எழுதுவது எதுவும்
புரியவில்லை. ஆனால் கையெழுத்து ரொம்ப அழகாய் இருந்தது. பார்ப்பதற்கு ஜாவா புரோகிராம்
எழுதுவதைப்போல ஓப்பன் பிராக்கெட்டும் குளோசிங் பிராக்கெட்டும், அம்புக்குறிகளும் போட்டு
எதையோ எழுதிக்கொண்டிருந்தான். அவனுக்கு வலப்பக்கமாக கம்பியால் கட்டப்பட்ட வலப்பக்கக் கண்ணாடி
உடைந்து இடப்பக்கக் கண்ணாடி மட்டுமே உள்ள மூக்குக்கண்ணாடி மதகுத்திட்டில்
அவன் உட்கார்ந்த இடத்துக்குப் பக்கத்தில் இருந்தது. அதை எடுத்து மாட்டிக்கொண்டு தூரத்தில்
எதையோ பார்ப்பதும் சிரிப்பதும் எழுதுவதுமாக மாறிமாறி எதையாவது செய்துகொண்டிருந்தான்
கைவிரல்களை மடக்கிமடக்கி ஏதோ செய்துகொண்டிருந்தான். முகத்தில் சோர்வு இல்லை புன்னகை
பூத்த முகம் ஆனால் அவன் சராசரி மனிதனில்லை. எதனால் இவன் இப்படியாகிவிட்டான் என்பதைப்பற்றியெல்லாம் ஆராய்ந்து பார்க்க அவசர உலகம்
விடுகிறதா என்ன? அப்படி ஆராய்ந்து பார்க்கிறவனை பைத்தியம் என்றல்லவா நினைக்கிறது.
நல்ல வேளையாய்
கிருஷ்ணனைப் பைத்தியமாக்கும் அந்த ஆராய்ச்சிக்கு இடம்கொடுக்காமல் தூரத்தில் பேருந்திலிருந்து
ஹாரன் சத்தம் கேட்டது. பேருந்து காலியாகத்தான் வந்தது. எல்லோரும் தாவிப்பிடித்து ஏறி
சீட்டைப் பிடிக்க தயாரானார்கள். சிலர் ஜன்னல் வழியாக கைக்குட்டையையும், பையையும் போட்டு
இடம் பிடித்தார்கள். படிக்கட்டு வழியாக ஏறிவந்தவனுக்கு உட்கார இடம் இல்லை. சிலர் ஏறிவந்து
தன் குடும்பத்துக்கே சீட்டுப்பிடித்து வைத்துக்கொண்டிருந்தான். உட்கார இடம் கிடைக்காதவன்
அவனுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தான். அதற்குள் சூளையில் செங்கல் அடுக்குவதைப்போல
அனைவரையும் நெறுக்கி மக்கள் மூச்சுவிடாதபடிக்கு பஸ்காரன் எல்லோரையும் ஏற்றிக்கொண்டிருந்தான்.
இந்த கூட்டத்தில் ஏறலாமா வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்துத் திரும்பும்போது ஜன்னலோர
சீட்டில் பேருந்துக்காக அலைந்து ஓய்ந்துபோன அந்தக் கிழவி உட்கார்ந்துகொண்டிருந்தாள்.
அடித்துப்பிடித்து நின்றுகொண்டிருந்த பலரும் ஏறிவிட்டார்கள் படிக்கட்டில் கால் வைத்துத்
தொங்கக்கூட இடமில்லை. கிருஷ்ணன் ஏறமுயற்சிக்கவில்லை.
பேருந்து
நகர்ந்து போய்க்கொண்டிருந்தது. மீண்டும் பேருந்துக்காக
நின்ற காத்திருப்பினூடே சாலையைக் கடக்கும் கரும்பை ஏற்றிச்செல்லும் டிராக்டரிலிருந்து
“காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி, பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி”
என்ற பாடல் காற்றில் மிதந்துவந்து கிருஷ்ணனின் காதில் கரைந்தது. ஏதோ நினைவுவந்து ஒரு
கணம் காலத்தின் அருமை அறியாது நாள் கடத்திக்கொண்டிருக்கும் அந்த அதிகாரியை நினைத்தபோது
கிருஷ்ணன் தன் பல்லை இறுகக் கடித்தான் தாடை வலித்தது. அப்போது அந்த மனநோயாளி மதகுத்
திட்டின் மேல் அமர்ந்தவாறு எதையோ பார்த்து
சிரித்துக்கொண்டிருந்தான்.
ஓய்வுதான் ஒரு மனிதனை என்னவெல்லாம்
சிந்திக்க வைக்கிறது. அதனால்தான் இருப்பவன் இல்லாதவனுக்கு ஓய்வுகொடுக்காமல் பார்த்துக்கொள்ளுகிறானோ
என்னமோ!.
- 27.03.2022
ஞாயிறு, 6 மார்ச், 2022
எறும்புகள் தேடும்….
எறும்புகள் தேடும்….
உன் நாராச ரீங்காரத்தை
ரசிக்கமுடியாவிட்டாலும்
சகித்தபடி பொறுத்திருந்தேன்
என் தூண்களைத்
துருவித் துளைத்தபோதும்
அப்படியே…
ஆனாலும்
முகத்துக்குமுன் வந்து
மூர்கமாய்
முரலும்போதும்
முத்தமிடவா முடியும்?
விரட்டிவிட எத்தனித்து
எதையோ வீசினேன்
இனி
ஆணவம் எங்கே?
என்று
உன் உடலின் உட்புகுந்து
எறும்புகள் தேடும்.
- நீலமேகன்
திங்கள், 21 பிப்ரவரி, 2022
இன்று வாழ்ந்தால் என்ன?
நாளை என்கிறாய்
நாளைக்கு
இன்று நேற்றாகிவிடாதா?
அப்புறம்
நேற்றைக்குப்போய்
எப்படி இன்றைத் தேடுவது?
இன்றைக்கு
நாளை கிடைக்குமா?
அப்புறம்
நாளைக்குமட்டும்
எப்படி இன்று கிடைக்கும்
சொல்வதற்கென்ன...
இன்று கிடைக்கவில்லை
இன்று இன்றாகவே இருக்கட்டும்
நேற்றைப்பற்றி
இன்றுக்குத் தெரியும்
இன்றைப்பற்றி
நாளைக்குத் தெரியும்
நாளையைப்பற்றி
யாருக்குத் தெரியும்?
நேற்றும் நாளையும்
இப்படி இருக்கையில்
இன்றுவாழ்ந்தால் என்ன?
- நீலமேகன்
சனி, 12 பிப்ரவரி, 2022
வியாழன், 10 பிப்ரவரி, 2022
படையல்
செவ்வாய், 25 ஜனவரி, 2022
சாகும் காலம்
அந்திம வாழ்க்கைக்கு
சூடான சுண்டல்விற்று
உயிர்ச்சுடர் ஏற்றுகிறாள்
யாருமற்ற கிழவி ….
“சாகிற காலத்தில
இதெல்லாம் வாழ்ந்து
என்ன செய்யப்போகிறது…"
எனும் சாகாதவர்களின்
சொல் கேட்டு
ஒவ்வொரு நாளும்
சுடர் அணைக்கக்
காத்திருந்த காலத்தின்
குழவி நாணும்
பின்பு
நொடிநொடியாய்ச்
சாகும்.
- நீலமேகன்.