வெள்ளி, 15 செப்டம்பர், 2023

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் - பாரதியார்


சரசுவதி தேவியின் புகழ்

                                                                                               -  மகாகவி பாரதியார்

 

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்

   வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்

கொள்ளை யின்பம் குலவு கவிதை

   கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்

உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே

   ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்

கள்ள மற்ற முனிவர்கள் கூறும்

   கருணை வாசகத் துட்பொரு ளாவாள்.             (வெள்ளைத்)

 

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்

   மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்

கீதம் பாடும் குயிலின் குரலைக்

   கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்

கோத கன்ற தொழிலுடைத் தாகிக்

   குலவு சித்திரம் கோபுரம் கோயில்

ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்

   இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.                 (வெள்ளைத்)

 

 

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு

   வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்

வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்

   வித்தை யோர்ந்திடு சிற்பியர் தச்சர்

மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்

   வீர மன்னர்பின் வேதியர் யாரும்

தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்

   தரணி மீதறி வாகிய தெய்வம்.                           (வெள்ளைத்)

 

தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்

   தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம்

உய்வ மென்ற கருத்துடை யோர்கள்

   உயிரி னுக்குயி ராகிய தெய்வம்

செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்

   செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்

கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்

   கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம்.             (வெள்ளைத்)

 

வீடு தோறும் கலையின் விளக்கம்

   வீதி தோறும் இரண்டொரு பள்ளி

நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்

   நகர்க ளெங்கும் பலபல பள்ளி

தேடு கல்வியி லாததொ ரூரைத்

   தீயி னுக்கிரை யாக மடுத்தல்

கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை

   கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.          (வெள்ளைத்)

கருத்துகள் இல்லை: