ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

இயேசு காவியம் - ஊதாரிப் பிள்ளை - கண்ணதாசன்

இயேசு காவியம்

ஊதாரிப் பிள்ளை


ஒரு தந்தை இருமக்கள் ஊர்முழுதும் சொத்து

ஒருபிள்ளை அவர்களிலே மணியான முத்து!

சிறுபையன் ஊதாரி தேறாத நெத்து

தீராத மழையினிலே கரையேறும் வித்து!                            

 

தன்பாகம் வேண்டுமெனத் தந்தையிடம் கேட்டான்

தந்தை அவன் மொழிகேட்டுச் சரிபாதி தந்தான்!

தந்தானே யல்லாது தாளாது துடித்தான்

தன்பிள்ளை வாழட்டும என்றேதான் கொடுத்தான்!

 

குருட்டுமகன் தன்சொத்தைக் குறைந்தவிலை விற்றுக்

கொண்டோடி வெளிநாட்டில் கும்மாள மிட்டான்!

பொருட்பெண்டிர் மதுவென்று போனவழி சென்று

பொருள்தேய்ந்து புகழ்தேய்ந்து தெருவினிலே நின்றான்!

 

அந்நாட்டில் பெரும்பஞ்சம் அவ்வேளை சூழ

அறியாத இளமைந்தன் அலைந்தானே வாழ!

தன்னாட்டு மனிதனிடம் ஒருவேலை தேட

தந்தானே ஒருவேலை பன்றிகளோ டாட!

 

பன்றிக்குத் தருகின்ற உணவேதான் உணவு

பாவிக்கு நாளெல்லாம் தந்தையவன் கனவு!

அந்நேரம் தெளிந்ததுகாண் அவனுடைய அறிவு

அப்பாவின் கால்களிலே விழுகின்ற நினைவு!

 

என்தந்தாய் வானுக்கும் உமக்குமெதி ரானேன்

எத்தனையோ ஊழியர்கள் இங்கிருக்கப் போனேன்!

உன்வீட்டுக் கூலிகளில் ஒருவனென ஏற்பாய்

உன்பிள்ளை என்றுசொலத் தகுதில்லை காப்பாய்!’

 

இப்படிப்போய் விழவேண்டும் என்றெண்ணிச் சென்றான்

எதிர்பார்த்துக் காத்திருந்த தந்தையின்முன் நின்றன்!

அப்பா என் மகனே என் றணைத்தானே தந்தை

அன்பான தந்தையின்முன் அழுததவன் சிந்தை!

 

எப்போது வருவாயென் றெண்ணியிருந் தேனே!

இளைத்தாயே என்மகனே கண்மணியே தேனே!

தப்பான பிள்ளையல்ல எதுவும்வொல் லாதே!

சந்தர்ப்பம் செய்தசதி வருவாய்இப் போதே!

 

யாரங்கே பணியாள்வா, பட்டாடை நகைகள்

அத்தனையும் அணியுங்கள் அலங்கார வகைகள்!

பேர்சொல்லும் மகனுக்குப் பெருங்கன்றின் கறிகள்

பிழையாமல் செய்யுங்கள் விரைவில் எனச் சொன்னான்!

 

மாலையிலே மூத்தமகன் மனைக்குவரும் போது

மனையினிலே சங்கிதம் நடனவகை நூறு!

சாலையிலே நின்றபடி ஏன்சத்தம்? என்றன்

தம்பிஇன்று வந்துள்ளார் என்றெருவன் சொன்னான்!

 

ஆத்திரத்தில் வெளிப்புறமே மூத்தமகன் நின்றான்

அப்போது தந்தையவன் அந்த இடம் வந்தான்!

சாத்திரத்தை மறந்தவனைத் தடபுடலாய் ஏற்றீர்

சாப்பாடு நடனமென ஏற்றுகிறீர் போற்றி!

 

உங்களுடன் இருந்தவரை நானென்ன கண்டேன்

ஒருநாளும் எனக்கென்று விருந்துவகை உண்டா?

கண்கலங்கி மூத்தமகன் இவ்வாறு சொல்ல

கனிவோடு தந்தையவன் மறுவார்த்தை சொன்னான்:

 

என்னோடு என்றும்நீ இருப்பவனே யன்றோ

என்செல்வம் எந்நாளும் உன்னுடைய தன்றோ!

உன்தம்பி இறந்ததன்பின் உயிர்பெற்று வந்தான்

உண்மையிலே மறுபிறவி அதற்காகச் செய்தேன்!

கருத்துகள் இல்லை: