சமூக வலைத்தளங்கள்
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சியின்
சிகரம் தகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சி. இத்தகவல் தொடர்புச் சாதனங்கள் மனித சமூகத்தில்
மாபெரும் மாற்றத்தையும் ஏற்றத்தையும் உண்டாக்கி வருகின்றன. செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி,
கணிப்பொறி வழி இணையம் என்ற தகவல் தொடர்புக் கருவிகளின் பரிணாம வளர்ச்சியின் உச்சமாக
Smart phone எனப்படும் கையடக்கக் கருவி வாயிலான இணைய சேவை விளங்குகிறது.
நவீன உலகில் வாழும் மக்கள் அனைவரது வாழ்விலும்
இணையம் தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்டது. அன்றாட வாழ்வின் அனைத்துப் பணிகளும் இணையத்தோடு
இணைந்ததாகவே மாறி இருக்கிறது. இணையம் நின்றுபோனால் உலக இயக்கமே நின்றுபோனதாய் உணர்கிறோம்.
காரணம் அன்றாட மனித வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு சேவைகள் கணினிமயப் படுத்தப்பட்டிருக்கின்றன.
இன்றைக்கு அரசும் e-governance எனப்படும் மின்னாளுகை முறையைப் பின்பற்றி மக்கள்
சேவையை வழங்கி வருகிறது. இப்படி மக்களின் அன்றாடவாழ்வில் அனைத்து நிலைகளிலும் இணையம்
இன்றியமையாத அங்கமாகிவிட்ட நிலையில் சமூக வலைத்தளங்கள்(Social networks)
சாமான்ய மக்களின் வாழ்வில் எத்தகைய ஊடாட்டங்களை ஏற்படுத்துகின்றது என்பதை இக்கட்டுரை
விவரிக்கிறது.
இன்றைய நிலையில் செய்திகளைத் தெரிவிப்பதற்கும்
மக்களோடு தொடர்புகொண்டு பொதுக்கருத்தை ஏற்படுத்துவதற்கும் செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி,
இணையம் ஆகியன முக்கிய பங்காற்றி வருகின்றன. இவற்றிலிருந்து ஒரு மாறுபட்ட மக்கள் ஊடகமாக
இணைய வழி செயல்படும் சமூக வலைத்தளங்கள் விளங்குகின்றன.
மேற்குறித்த செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி
ஆகிய தகவல் தொடர்பு ஊடகங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும், பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டிலும்
இயங்கவேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் அவை அரசாங்கத்திற்கும்(அரசியல்வாதி) உடைமை வர்க்கத்திற்கும்
ஆதரவாகவே இயங்கிவருகின்றன. அவற்றுக்கு ஆதரவான கருத்துக்களையே மக்களிடம் பரப்ப முயல்கின்றன.
எதிர்க்கருத்தைப் புறந்தள்ளி உண்மையை இருட்டடிப்பு செய்கின்றன. மேலும் மேற்குறித்த
ஊடகங்களின் வாயிலாக வெளிவரும் கருத்துக்களும் ஊதியத்தின் பொருட்டு உழைக்கும் ஒருசில
அறிவாளிகளால் நிபந்தனைக்கும் நெருக்கடிகளுக்கும் உட்படுத்தப்பட்டே வெளியிடப்படுகின்றன.
இந்நிலையில் கடைகோடியில் இருக்கும் சாதாரண மனிதனின் குரல் ஒலிக்கும் ஒரே ஊடகமாக சமூக
வலைத்தளங்கள் விளங்குகின்றன. இது ஒன்றே சாதாரண மனிதனின் கருத்தையும் சகமக்கள் நடுவே
எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி உள்ளதை உள்ளவாறே வெளிப்படுத்த உதவுகிறது.
எதிர்க் கருத்தைப்பற்றி அக்கறை கொள்ளாத மற்ற ஊடகங்களுக்கு
நடுவே தனிமனிதக் கருத்தின் ஏற்பையும் எதிர்ப்பையும் உடனுக்குடன் பெற்று மிகப்பெரிய
தாக்கத்தை ஏற்படுத்துகின்றன சமூக வலைத்தளங்கள். தனிமனிதனால் சமூக வலைத்தளங்களில் பதிவு
செய்யப்படும் கருத்துக்களை செய்தித் தொலைக்காட்சிகள் குழுவிவாத நிகழ்ச்சிகளுக்கு இடையே
வெளியிடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கின்றன.
அச்சு ஊடகங்களில் வெளிவராத தகவல்களையெல்லாம்கூட
உடனுக்குடன் எழுத்துவடிவிலோ, புகைப்படங்களாகவோ அல்லது காணொளிகளாகவோ சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. இதனை நோக்கும்போது
ஒவ்வொரு சமூக வலைத்தளப் பயனாளரும் ஒரு இதழாளராகச் செயல்படும் வாய்ப்பு கிடைக்கிறது.
இன்றைக்கு அனைத்துக் கட்சிகளும் தங்களுக்கென்று
தனியாக வலைத்தளங்களை வைத்தும் முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களைக் கொண்டும்
தங்கள் சாதனைகள், திட்டங்கள் போன்றவற்றைப் பரப்புகின்றன. அதற்கு நிகராக எதிர்கட்சிகளும்
ஆட்சியாளர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும் சமூகப் போராட்டங்களின் போது மக்களை ஒன்று
திரட்டவும் சமூக வலைத்தளங்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.
படைப்பாளிகளின் களம்
ஊடகங்கள் சிலநூறு எழுத்தாளர்களை மட்டுமே முன்னிருத்தும்
நிலையில், புதிய சிந்தனைகளையும், படைப்பாற்றலையும் கொண்டு விளங்கும் இலட்சக்கணக்கான
மக்களுக்கு தங்கள் கருத்துக்களையும் இலக்கியப் படைப்புகளையும் வெளிப்படுத்துவதற்கு
சமூக வலைத்தளங்களே களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றன. இந்தவகையில் இணையத்தில் மட்டுமே
படிக்கக் கூடிய கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், விமரிசனம் எனப் பல வடிவங்களில் வெளியிடப்படும்
இலக்கிய ஆக்கங்களுக்கு நல்ல வாசகர் வட்டமும் ஏற்பட்டு சாதாரண எழுத்தாளன் பாராட்டையும்
தூண்டுதலையும் பெறுகிறான்.
தமிழ் மொழியைப் பொறுத்தமட்டில் ஏராளமான தமிழ் ஆய்வாளர்களும்,
தமிழ் ஆர்வலர்களும் இலக்கியம் குறித்தான தங்கள் கட்டுரைகளையும், விமர்சனங்களையும் வலைப்பூக்களின்
மூலமாக வெளியிட்டு வருகின்றனர். இது தமிழியல் ஆய்வுக்குப் பெரிதும் வளம்சேர்ப்பதாக
அமைகிறது.
http://interestingtamilpoems.blogspot.in
http://muelangovan.blogspot.in
http://jpremalatha.blogspot.in
http://ilanangaiwritings.blogspot.in
தொழில் நுட்பப் பயிலகம்
அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம்
தொடர்பான செய்திகளை அறிந்துகொள்வதற்குரிய பயிலகமாக இணைய தளங்களும், வலைப்பூக்களும்
செயலாற்றி வருகின்றன. எடுத்துக்காட்டுக்கு கணிப்பொறித் துறையை எடுத்துக்கொண்டால், கீழ்க்காணும்
இணைய தளங்கள், வலைப்பூக்கள் போன்றவற்றின் வாயிலாக யார் வேண்டுமானாலும் கணினித் தொழில்
நுட்பம் தொடர்பான கல்வியினை இலவசமாக தாங்களாகவே அறிந்துகொள்ள முடியும். இத்தகைய கணிப்பொறி
அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப அறிவை நம் தாய்மொழியான தமிழ் மொழியின் வழியாக அறிந்துகொள்ளலாம்.
இவ்வலைப்பூக்களின் மூலம் தொழில்நுட்ப உலகில் புதிதாக வரும் மென்பொருட்கள், அவற்றின்
பயன்பாடுகள், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக்குறித்த விளக்கங்கள் போன்றவற்றை
அறிந்துகொள்ள முடிகிறது. மேலும், பதிப்புத்துறையில் முக்கிய பங்குவகிக்கும் போட்டோஷாப்,
கோரல்டிரா, பேஜ்மேக்கர் போன்ற இன்னபிற மென்பொருட்களை பயன்படுத்துவதற்குரிய வழிகாட்டுதல்களை
தமிழில் அறிந்துகொள்ளும் வகையில் ஏராளமான வலைப்பூக்கள் இயங்கி வருகின்றன. கணிப்பொறித்துறையில்
வல்லமை மிக்க தன்னார்வலர்கள் இத்தகைய பணியினைச் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://nadeivasundaram.blogspot.in
http://thamilkaniniyagam.blogspot.in
http://tamilcomputerinfo.blogspot.in
http://vadakaraithariq.blogspot.in
http://www.tamiltechnologies.com
http://tamilcomtips.blogspot.in
http://thamizhdigital.blogspot.in
http://gsr-gentle.blogspot.com
இணையவழி கற்றல்
மாணவர்கள் தங்கள் கல்வி அறிவை மேம்படுத்திக் கொள்ளும்
வகையில் பாடம் தொடர்பான கருத்துக்களை ஆசிரியர் மாணவருடன் பகிர்ந்துகொள்வதற்கு வலைப்பூக்கள்
பெரிதும் உதவுகின்றன. இத்தகைய வலைப்பூக்களின் வாயிலாக பாடக்குறிப்புகள், ஒளிப்படக்
காட்சிகள், மாதிரிப்படங்கள், மாதிரி வினாத்தாள்கள், பாடம் தொடர்பான கலந்துரையாடல்கள்,
கல்லூரி நிகழ்வுகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு வலைப்பூக்கள் இடமளிக்கின்றன. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பள்ளி மாணவர்களுக்கான
கற்றல் கற்பித்தல் முறைகளில் இணையவழிக் கற்றலும் முக்கிய இடம் வகிக்கின்றது. அங்கு
இத்தகைய இணைவழிக் கற்றலுக்கு வலைப்பூக்களும் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
http://srisankaracollege.blogspot.in
http://tctamildepartment.blogspot.in
https://kalloorithamizh.blogspot.in
http://senthamilcollegemadurai.blogspot.in
அடித்தள மக்களின் விளம்பர ஊடகம்
சிறுதொழில் செய்வோர், கைவினைப் பொருட்களைச் செய்து
விற்பனை செய்வோர் செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் தங்கள் உற்பத்திப்
பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு பெரும் தொகையைச் செலவழித்து விளம்பரப்படுத்த இயலாத
சூழலில் சமூக வலைத்தளங்களின் வழியே அவற்றை எளிதில் சந்தைப்படுத்த வாய்ப்பளிக்கிறது.
போட்டித் தேர்வுகளின் பயிற்சி மையம்
தமிழகத்தைப் பொருத்தவரை அரசுப் பணியாளர்
தேர்வாணையம் (TNPSC) நடத்தும் வேலைவாய்ப்பிற்கான போட்டித் தேர்வுகளின்
கலந்துகொள்ளும் இளைஞர் களுக்கு அத்தேர்வுக்குத் தயாராவது குறித்த பல்வேறு கலந்துரையாடல்களுக்குச்
சமூக வலைத்தளங்கள் (facebook, twitter) வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்றன. இக்கலந்துரையாடலின்
போது ஒருவர் படித்த செய்திகள் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. தங்களுக்கு
ஏற்படும் ஐயங்களை குழுவிலுள்ள பிற நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடிகிறது.
அத்தேர்வு தொடர்பான வினாவிடைகள் அக்குழுக்களுக்குள்
பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. பொது அறிவு, அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகள்(current affirs) போன்றன இக்குழுக்களில் செயல்படும் இளைஞர்களால்
பகிர்ந்துகொள்ளும்போது போட்டித் தேர்வுகளுக்குத் தயாரவது மிக எளிதாகிறது. பயிற்சி மையங்களுக்குச்(Coaching
Centers) சென்று பல ஆயிரம் ரூபாய்களைச் செலவழித்தும் பெறமுடியாத அறிவை பணத்தையும், அலைச்சலையும், நேரத்தையும் மிச்சப்படுத்தி சொந்த
முயற்சியில் படித்து தேர்வில் வெற்றிபெற கீழ்காணும் வலைப்பூக்களைப் போன்ற எண்ணற்ற வலைப்பூக்கள்
உதவி வருகின்றன.
http://tettnpscstudy.blogspot.in
http://thamaraithamil.blogspot.in
http://trbexammaterials.blogspot.in
http://sathyasenthil77.blogspot.in
http://mathiacademy.blogspot.in
http://tnpscmaster.blogspot.in
இணைய மருத்துவம்
சாதாரண மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில்
ஏற்படும் உடல் நலம் சார்ந்த சிக்கல்களுக்கு
இணையம் பெரும் ஆலோசனை மையமாகத் திகழ்கின்றது. நாட்டு மருத்துவம், உடல்நலம் காக்கும்
வழிகள், நோயினைக் குணப்படுத்தும் இயற்கை மருந்துகள், இயற்கை உணவுகள் போன்ற ஏராளமான
அரிய தகவல்களை, மக்கள் பிறரை நாடித்தான் பெற முடியும் என்ற நெருக்கடி இல்லாமல் மருத்துவச்
செய்திகளை மட்டுமே பதிவிடுவதை நோக்கமாகக் கொண்ட பின்வரும் வலைப்பூக்களைப் போன்ற வலைப்பூக்களின்
வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.
http://thamilmaruththuvam.blogspot.in
http://paattivaiththiyam.blogspot.in
http://ayurvedamaruthuvam.blogspot.com
http://siddhamaruthuvakuripugal.blogspot.in
http://tamilnadumaruthuvam.blogspot.in
http://naatumarunthu.blogspot.in
நன்மைகள்
பொருளாதாரம், சாதி, மதம், மொழி, பாலினவேறுபாடுகள்,
வயது போன்ற வேறுபாடுகளைக்கடந்து எல்லோருக்குமான கருத்துச்சுதந்திரத்தை சமூக வலைத்தளங்களே
ஏற்படுத்தித் தருகின்றன.
ஆதிக்கச் சக்திகள், சுரண்டல், வன்கொடுமைகள், ஒடுக்குமுறைகள்,
ஊழல், சர்வாதிகாரம், கலப்படம், விலைவாசி ஏற்றம், அரசியல் மாற்றம் போன்ற பல்வேறு நிலைகளில்
மக்கள் சக்தியை ஒன்றிணைத்து சமூகப் புரட்சியை ஏற்படுத்தத் துணை நிற்கின்றது.
தனிமனித சிந்தனைகளை பல்லாயிரக் கணக்கானோரிடம் கொண்டு
சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இன்றைய வாழ்க்கை முறையில் தனித்துவிடப்பட்டவர்களுக்கு
தங்கள் சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் ஆறுதல் தேடிக்கொள்வதற்கும் முகநூல்,
டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் துணைநிற்கின்றன.
பொருளாதாரம், பணியிடம், கல்வி, போர், புலப்பெயர்வு
போன்ற பல்வேறு சூழல்களால் சிதரிக்கிடக்கும் மனித உறவுகளை இணைக்கும் பாலமாகத் திகழ்கிறது.
தீமைகள்
அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கல்விக் கூடங்கள்,
மருத்துவமனைகள் போன்ற பல்வேறு பணியிடங்களில் பணியாற்றுவோர் வலைத் தளங்களைப் பார்ப்பதில்
கவனம் செலுத்துவதால் வேலைத்திறன் பாதிப்புக் குள்ளாகிறது.
அந்தரங்க வாழ்விலும், குடும்ப உறுப்பினர்களோடு
உரையாடுவதில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தி மனித உறவுகளில் பிளவினை ஏற்படுத்தி சமூகச்
சிக்கலுக்கு வழிவகுக்கின்றது.
சாதி, மத உணர்வுகளைத் தூண்டுதல், பால் உணர்வுகளைத்
தூண்டுதல் போன்ற ஒழுக்கக் கேட்டிற்கு பாதை வகுக்கிறது.
அரசியல் கட்சிகள், சாதிய மற்றும் மதவாதக் குழுக்கள்,
எதிர்க்கருத்துடையவர்கள் போன்றவர் களால் பொய்யான தகவல்களும் பரப்பப்படுவதால் கருத்துச்
சுதந்திரத்தின் ஆபத்தான வடிவமாகவும் பார்க்கப்படுகிறது.
தனிமனிதர்களைத் தாக்குவது, அவர்களது தனிப்பட்ட
தகவல்களைத் தெரிந்து தவறான முறையில் பயன்படுத்தி அவர்களின் சுதந்திரத்தை சிக்கலுக்குள்ளாக்குகிறது.
தகவல்
தொடர்பு வளர்ச்சியின் சிகரமாக விளங்கும் சமூக வலைத்தளங்கள் பிற தகவல் தொடர்பு ஊடகங்களைக்
காட்டிலும் கருத்துச் சுதந்திரம் கொண்டவையாகவும் முதலாளித்துவ ஊடகங்களால் மறைக்கப்படுகிற
அல்லது வெளியிடத்தயங்குகிற செய்திகளையும் மக்கள் பகிர்ந்துகொள்வதற்கு ஏற்றதாகவும் விளங்குகிறது.
சமூகப் பிரச்சினைகளுக்காக மக்களை ஒன்று திரட்டவும், கற்றல் கற்பித்தல் பயன்பாடுகளுக்கும்,
எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர்களுக்கு தம் கருத்துக்களை வெளியிடுவதற்கு களம் அமைத்துத்
தருவதாகவும், வேலைவாய்பு சார்ந்த போட்டித் தேர்வுகளுக்கு ஒரு சிறந்த பயிற்சி மையமாகவும்
விளங்குகின்றன. இத்தகைய சமூக வலைத்தளங்களால் சமூகத்தில் கேடுகளும் விளைகின்றன. எனினும்,
அவற்றை நன்முறையில் பயன்படுத்தும்போது சமூகத்திற்கு நன்மைகளே மிகுதி என்பது திண்ணம்.
பயன்பாட்டு அடிப்படையில் பார்க்கும்போது எல்லா
வகையிலும் சமான்ய மக்களுக்கான ஊடகமாக சமூக வலைத்தளங்களே விளங்குகின்றன என்றால் அது
மிகையாகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக